மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள்
பகுதி ஒன்று வேழாம்பல் தவம்
அலகிலா நடனம் மட்டுமே இருந்தது. அந்நடனமாகவே அந்நடமிடுபவன் இருந்தான். பின் இடக்கரமும் வலக்கரம் ஒருமாத்திரை அளவு வேறுபட, மெல்ல உருமாறி, இடப்பக்கம் முலை முளைத்து கருணைமிக்க அன்னையாகவும் இருந்தான். அன்னை தன் உள்ளங்கையில் புடவியை தோற்றுவித்து அதை தாயக்கட்டமாக்கினாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் தாயக்கட்டைகளை உருவாக்கினாள். ஆணும் பெண்ணும் ஆடும் வெல்லா வீழாப் பெருவிளையாடல் துவங்கிற்று. என்று பாடினான் ஒரு சூதன். சமந்த பஞ்சகம் எனும் குருக்ஷத்திரத்தின் கொற்றவை ஆலயத்தில் இரண்டாவது சூதன் பாடினான். ஆடலின் வேகத்தில் தெறித்தோடிய கிருதம் என்னும் பகடை பாற்கடலில் விழுந்து, ஆதிசேடனை அறைந்து, விஷ்ணு கண்விழித்தார். அவர் சினங்கொண்ட கணம் மண்ணில் பரசுராமனாய்ப் பிறந்தார். ஒரு நாள் கையில் மழுவுடன் தந்தை ஜமதக்னியின் வேள்விக்கு விறகு வெட்ட வனம் புகுந்தவனை நாரதர் குயிலாய்க் கூவி வழிதவற வைத்தார். அவன் சென்ற அஸ்ருபிந்து நிலத்தில் பளிங்குத் துளிகள் மணலென மின்னின. க்ஷத்ரியர்களின் அநீதியில் வதைக்கப்பட்டவர்களின் கண்ணீர்த்துளிகளே அவை. அவற்றுக்கு நீதி கேட்க வஞ்சினம் உரைத்த பரசுராமன் பாரதவர்ஷமெங்கும் 21 முறை சுற்றி வந்து க்ஷத்ரியரை அழித்தார். பின் அன்னையரால் காக்கப்பட்ட ஒரு க்ஷத்ரியன் மூலகனால் குலம் பிழைத்தது. தன் பணி முடித்து பஞ்சசரஸ் என்ற ஐந்து குளங்களில் நீர்க்கடன் செய்ய அவன் இறங்குகையில், குளங்கள் ரத்தமும் கண்ணீருமாயின. நீ கொன்றவர்களின் ரத்தமும், அவர் மனைவி பிள்ளையரின் கண்ணீருமே இவை என்றனர் மூதாதையர். பரசுராமன் ஊழ்கத்தில் அமர்ந்து தன்னை அறிய குளங்கள் அவர் கண்ணீரால் நிரம்பின. மாமனிதர் கண்ணீரிலேயே மனித குலம் நீராடுகிறதென்பதை உணர்க என்றான் சூதன். மூன்றாவது சூதன் வெறியெழுந்து பாடினான். சிவனின் சுட்டுவிரலில் இருந்து தெறித்த துவாபரன் என்ற பகடை சூரியனின் தேர்க்காலில் புகுந்தது. ரதம் திசை மாறி இந்திரனின் தேர்ப்பாதையில் குறுக்கிட்டது. சினம் கொண்டு இருவரும் போர்புரிய தேவர் இருபுறமும் அணிவகுத்தனர். சூரியன் மேருவில் மோதிச் சரிந்து மண்ணில் வீழ்ந்தான். இனி மண்ணில் நிகழும் அப்போர் என்றான்.ஐந்து குளங்களின் கரையில் அவன் சன்னதம் கொண்டு வீழ்ந்ததைப் பார்த்தபடியிருந்தனர் பிற ஆறு சூதர்களும்.
சிந்துவிலிருந்து கூர்ஜரத்தின் கடற்கரைக்கு வருகிறார் பீஷ்மர். அங்கிருந்து மானசூராத்தீவிலிருக்கும் தேவபாலபுரம் என்ற பாரதவர்ஷத்தின் மிகப்பெரும் துறமுகத்துக்குச் செல்கிறார். கோடையின் வர்ணனை, கடல், கடல் காற்று, மழைக்காலத்தின் எதிர்ப்பார்ப்பு வர்ணனை. பல நாடுகளிலிருந்தும் பன்மொழி பேசும் வணிகர். தீவைக்காக்கும் வேம்புகளும், அவற்றிலிருந்து கிளிகளை ஈர்க்கும் பழங்களும். மழை இரவில் துவங்கி பெய்து தீர்க்கிறது. காலையிலும் மேகங்கள் உருண்டபடி இருக்கின்றன. ஒற்றன் வந்து திருதராஷ்டிரன் பதவியேற்பு விஷயமாக சத்யவதி அழைப்பதாகச் சொல்கிறான். அவனுக்கு முடிசூட்ட க்ஷத்ரியர் நடுவில் எதிர்ப்பு இருக்கிறது. நான் உடனே கிளம்புகிறேன் என்றார் பீஷ்மர்.
பீஷ்மர் கங்கைக்கரை மேட்டில் நின்று அஸ்தினபுரிக்கோட்டையைப் பார்க்கிறார். இந்நகரம் ஏன் தன்னை ஈர்க்கிறது என்று கேட்டுக் கொள்கிறார். நகரங்கள் அழகே அவற்றின் கீழ்மையிலதானே என்று எண்ணிக்கொள்கிறார். அவர் வந்தது தெரிந்ததும், கோட்டை வாசலில் மீன் கொடி ஏறுகிறது. ஹரிசேனன் அவரை வரவேற்று ஆய்தசாலைக்கு இட்டுச் செல்லுகிறான். ஆயுதங்கள் துடைத்து தூய்மை செய்யப்பட்டு, ஆயுத சாலை அவர் விட்டுச்சென்றபடியே இருந்தது. ஹரிசேனனுடன் முகமண்டபம் செல்லுகையில் அவன் இரு இளவரசர் பற்றியும் சொல்லுகிறான். மூத்தவர் மூர்க்கமானவர். எல்லாரையும் அடிக்கிறார். வெறித்தனமாக உண்கிறார். மூத்த அரசியிடமே கல்வி கற்கிறார். இசையில் திறன் கொண்டவர். யாழில். இளையவர் வெளிவருவதில்லை. இரவில்தான் வருகிறார். கல்வியும் அரசியிடம்தான். வண்ணங்களில் ஆர்வம். ஓவியம் வரைவதில். நோயும், வெளுத்த உடலுமாக இளவரசியின் பளிங்குப்பாவையாக இருக்கிறார். விதுரன் சூதஞானமும், அரச ஞானமும் ஒருங்கே பெற்றவன் என்கிறான். பேரரசியைக் காண பீஷ்மர் காத்திருக்கையில் விதுரன் வருகிறான். வியாசனையே கண்டது போலிருந்தது பீஷ்மருக்கு. அவர் ஆசிவேண்டுகிறார். என்ன நடக்கிறது என்று விவரிக்குமாறு கேட்கிறார் பீஷ்மர். அவன் பாரதவர்ஷத்தின் வரலாற்றையே சொல்கிறான். 141000 குலங்களில் இருந்து ஏழாயிரம் க்ஷத்ரிய குலங்களும், பின் 1008 க்ஷத்ரிய குலங்களும் உருவாயின. அறத்தைக் காக்க ரிஷிகளால் உருவாக்கப்பட்ட குலங்கள் அவை. பின் பரசுராமர் அக்குலங்களை அழித்தபின் எஞ்சிய மூலகன் மூலம் 56 குலங்கள் உருவாகி வந்தன. காட்டுத்தீ பழைய மரங்களை அழித்ததும் புதிய மரங்கள் உருவாவதைப் போல் புதிய குலங்களும் உருவாகும். பெரும்போர் ஒன்று மூளவிருப்பதைப்பற்றி விதுரன் சொன்னான். செல்வத்தையும், வணிகத்தையும், போகத்தையும் நோக்காகக் கொண்ட புதிய் யுகம் பிறக்கவிருக்கும் குறிகள் தோன்றி இருப்பதாக பீஷ்மரும் சொன்னார். அழிவிலிருந்து தன் குலத்தை எப்படிக் காப்பது என்பதே என் சிந்தனை என்றான் விதுரன். அதுதான் எனதும். அதற்காக அறம் மீறவும் தவறமாட்டேன் என்றார் பீஷ்மர். பேரரசி வந்துவிட்டதாகச் செய்தி வந்தது.
சத்யவதிக்கு மிகுந்த வயதாகிவிட்டதாகத் தோன்றியது பீஷ்மருக்கு. அவள் இளவரசியர் மனம் மாறவே உன்னை வெளியே அனுப்பினேன். ஆனால் அது தவறு. இளவர்சர்கள் உன்னிடம்தான் பயின்றிருக்க வேண்டும் என்றாள். நான் இப்போது கற்றுத் தருகிறேன் என்றார். பயணத்தில் தான் கண்ட உலகைச் சொல்லி, பொன் உலகின் மையமாகி வருவதைச் சொன்னார். நாம் கடலை ஆள வேண்டுமெனில் இச்சிறுமுட்டையை விட்டு வெளி வர வேண்டுமென்றார். சத்யவதி குருடும், நோயுற்றவனுமாக இரு இளவரசர்களும் இருப்பதால் பட்டம் சூட்டுவதில் க்ஷத்ரிய மன்னர் பிரச்னை செய்வதாகச் சொன்னார். காந்தாரத்திலிருந்து திருதராஷ்டிரனுக்குப் பெண் பார்க்கலாம் என்றாள். காந்தாரம் பாலை நிலம். 12 மடங்கு பெரியது. அதன் அரசன் க்ஷத்ரிய வழித்தோன்றலெனினும், இப்போது செல்வம் நிறைந்திருப்பினும் இப்போது அவர்கள் குலம் தாழ்ந்த குலமெனவே கருதப்படுகிறது என்றார். ஆனால் அவர்களைக் கொண்டு க்ஷத்ரியர்களை அடக்க முடியும். அவர்களுக்கும் நம்மூலம் க்ஷத்ரியர் என்ற தகுதி கிடைக்கும். காந்தார இளவரசன் ஆசை மிக்கவன். அவனிடம் இது பற்றிப்பேசு என்றாள் சத்யவதி.