அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை. சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் அவரது கரைந்த நிழல்களையும், ஒற்றனையும், பதினெட்டாவது அட்சச்கோட்டையும் எங்கிருந்தோ கிடைத்து படித்தேன். அப்போது எனக்கு அவற்றின் இலக்கிய மதிப்பு பற்றி பெரிய அபிப்ராயம் இல்லையென்றாலும் கூட அவை கொடுத்த வாசிப்பனுபவம் அலாதியானது.
அப்போது நான் சாண்டில்யன், கல்கி, ராஜேஷ் குமார், லக்ஷ்மி, ரமணி சந்திரன் (இருவருமே அம்மாவுக்கு
பிரியமான எழுத்தாளர்கள்) போன்ற எழுத்தாளர்களை மட்டுமே அறிந்திருந்தேன். சுஜாதா கூட அப்போது எனக்கு அறிமுகமாகவில்லை. கேளிக்கை இலக்கியம், தீவிர இலக்கியம் இது பற்றியெல்லாம் பேதம் பிரித்துப் பார்க்கத் தெரியாத வயது. தொலைக்காட்சியின் ஆதிக்கம் இல்லாத காலம். எனவே வாசிப்பு ஒன்றே உகந்த பொழுதுபோக்காக இருந்தது. வாசிக்கும்போது நாம் ஒரு பிரத்யேக உலகிற்குள் சஞ்சரிக்கும் அனுபவத்தை அது தர வேண்டும் என்பதே வாசிப்புக்கு என் அளவுகோலாக வைத்திருந்தேன். கதையும் கதை தரும் அனுபவமும்தான் முக்கியமாகப் பட்டதே தவிர எழுத்தாளர் பெயரோ அவர் ஆளுமை தருகிற மயக்கமோ அப்போது என்னை ஆட்கொண்டிருக்கவில்லை.
அப்போது நான் சாண்டில்யன், கல்கி, ராஜேஷ் குமார், லக்ஷ்மி, ரமணி சந்திரன் (இருவருமே அம்மாவுக்கு
பிரியமான எழுத்தாளர்கள்) போன்ற எழுத்தாளர்களை மட்டுமே அறிந்திருந்தேன். சுஜாதா கூட அப்போது எனக்கு அறிமுகமாகவில்லை. கேளிக்கை இலக்கியம், தீவிர இலக்கியம் இது பற்றியெல்லாம் பேதம் பிரித்துப் பார்க்கத் தெரியாத வயது. தொலைக்காட்சியின் ஆதிக்கம் இல்லாத காலம். எனவே வாசிப்பு ஒன்றே உகந்த பொழுதுபோக்காக இருந்தது. வாசிக்கும்போது நாம் ஒரு பிரத்யேக உலகிற்குள் சஞ்சரிக்கும் அனுபவத்தை அது தர வேண்டும் என்பதே வாசிப்புக்கு என் அளவுகோலாக வைத்திருந்தேன். கதையும் கதை தரும் அனுபவமும்தான் முக்கியமாகப் பட்டதே தவிர எழுத்தாளர் பெயரோ அவர் ஆளுமை தருகிற மயக்கமோ அப்போது என்னை ஆட்கொண்டிருக்கவில்லை.
அந்த நாவல்கள் வாசித்துப் பல வருடங்கள் ஓடிவிட்டாலும் அவற்றின் பக்கங்களில் விவரிக்கப்பட்டிருந்த சிற்சில சம்பவங்கள் ஓவியத்தின் தீற்றலைப் போல என்னுள் அப்படியே உறைந்து போய்விட்டன. இரண்டு நாவல்களின் கதைகளும் நீராவி படர்ந்த கண்ணாடியினூடே பார்ப்பதைப் போல மங்கலாக ஞாபகமிருக்கின்றன. பதினெட்டாவது அட்சக் கோட்டில் என்னை மாதிரியே ஒரு சிறுவன் தன் வயதொத்த ஹைதராபாத் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடுவது மட்டும் நினைவிருக்கிறது. அந்தச் சிறுவன் நிச்சயமாக அசோகமித்திரனாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றன் அவரது அயோவா எழுத்துப் பட்டறை அனுபவங்களைப் பற்றியது என்று நினைக்கிறேன். எல்லாம் நினைக்கிறேன்தான். படிப்பது எல்லாமே மறந்து விடுகிறது. அப்புறம் என்னத்துக்கு இப்படி மாஞ்சு, மாஞ்சு படிக்கிறீங்க? என்று என் மனைவி கேட்கும் கேள்விக்கு நான் கொடுக்கும் அறிவுபூர்வமான பதில்கள் அவளுக்கு எப்பொழுதுமே ஏற்புடையதாக இருந்ததில்லை. இருப்பினும் ஏதோ ஒன்று இலக்கியத்தின் பக்கம் இழுத்துக் கொண்டுதானிருக்கிறது.
அசோகமித்திரனுக்கு வருவோம். ஒற்றனில் அவர் தனது எளிமையான, பூடகமும், குறியீடுகளுமற்ற மொழிநடையால் உருவாக்கிக் கொடுத்திருந்த ஒரு புது உலகத்தைப் போன்று வேறொருவர் படைப்புகளில் அதற்கப்புறம் என்னால் அரிதாகவேதான் நுழைய முடிந்திருக்கிறது. வாசகனைக் கவர வேண்டுமென்றோ, அவனை சுவாரசியப்படுத்தும்படியாகச் சம்பவங்களைப் பின்னிக் கொடுக்கவேண்டுமென்ற பிரக்ஞையிலோ அவர் எழுதுவதில்லையெனினும் அவரது வார்த்தைகள் சங்கிலிக் கண்ணிகள் போன்று ஒன்றோடொன்று பிணைந்து நமக்கு புதிய அனுபவத்தை உருவாக்கித் தந்துவிடுகின்றன. அந்தச் சூழ்நிலையில் நாமே நின்று கொண்டிருப்பதைப் போன்று; நாம் பாத்திரமாகி நடமாடும் கதையையே எழுத்தாளன் நமக்குச் சொல்வது போன்று. இயல்பாகத் தன் அனுபவங்களையே அவர் பதிவு செய்வது போலத் தோன்றினாலும் அவரது சொல்முறையில் பொதிந்திருக்கும் மாயம் கதைக்கு ஒரு தனி நிறத்தைக் கொடுத்துவிடுகிறது. அது அசோகமித்திரனின் நிறம்.
தற்போது மீண்டும் தமிழ் படிக்கும் ஆர்வம் துளிர்த்திருக்கும் போது கையில் அசோகமித்திரன் இல்லை. சமீபத்தில் தாய்நாடு சென்று திரும்பியபோது வாங்கி வந்த புத்தகங்களில் மானசரோவர் இருக்கிறது. தற்போதைக்கு எஸ்.ராவின் உப பாண்டவமும் (படிக்க வேண்டுமென்றால் பக்கத்தில் அவரே வேண்டும் போலிருக்கிறது), ஜில்லி கூப்பரின் போலோவும் நேரத்தை எடுத்துக் கொண்டிருப்பதால் மானசரோவர் காத்துக் கொண்டிருக்கிறது. அவரது சிறுகதைகளை அழியாச் சுடர்களில் படித்தேன். ( தமிழின் மிகச்சிறந்த படைப்பாளர்களின் எழுத்துக்களை அயராது பதிப்பித்து வரும் அழியாச் சுடர்களுக்கும், ராமுக்கும் நன்றி.) சிறுகதைகளில் அசோகமித்திரனின் பிரத்யேக உலகம் காணக் கிடைக்கவில்லை. பெரும்பாலான சிறுகதைகள் அவர் சாட்சியாக இருந்து பார்த்த பிறர் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருப்பதாய்ப் பட்டது. கதைகளைச் சட்டென்று முடித்து விடுகிறார். அவர் சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் சற்று இலக்கியப் பயிற்சி வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் திடீரென்று ரத்தினம் மாதிரி ஒரு கதை கண்ணில் பட்டது. (மற்றதெல்லாம் ஒன்று குறைவில்லை. மாணிக்கங்கள்தாம்) கதையின் பெயர் பிரயாணம். அவர் தன் குருவோடு கழித்த ஓர் இரவைப் பற்றியது.
தனக்கு ஒரு வருடம் யோகம் சொல்லிக் கொடுத்த குருவுக்கு வயோதிகத்தின் காரணத்தால் உடல் தளர்ந்திருப்பதால் எங்கு சென்றாலும் அவரை ஒரு கட்டையில் வைத்து இழுத்துச் செல்கிறார். இளமையில் பிராணாயாமம், யோகம் எல்லாம் செய்து ஸ்வாசம் நிகழ்வதே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருந்த குருவுக்கு இப்போது சாதாரணமாக சுவாசிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இருவரும் எங்கெல்லாமோ பயணித்து இறுதியில் ஒரு மலை உச்சியை அடைவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. யாருமற்ற அம்மலையில் இருவரும் ஒரு பாழ் குடிசையில் தங்குகிறார்கள். மிகுந்த களைப்புடனும், உயிர் போகும் நிலையிலுமிருக்கும் தன் குருவுக்கு, தன் தோள்பையிலிருந்து கிழங்கு மாவு எடுத்து கஞ்சி வைத்துக் கொடுக்கிறார். இரண்டு வாய் குடித்து விட்டுக் கண் மூடிக் கொள்கிறார் குரு. சிறிது நேரம் கழித்து அவரது இதயத் துடிப்பைச் சோதித்து அவர் இறந்துவிட்டதை அறிய வருகிறார் அசோகமித்திரன். குரு கடைசியாக அவரிடம் கேட்டிருந்த காரியங்கள் இரண்டு. சாகும் தருவாயில் அவர் வாயில் பசும் பால் விட வேண்டும்; அவரைச் சமவெளியில்தான் புதைக்க வேண்டும். இரண்டாவதையாவது நிறைவேற்ற நினைக்கிறார் அ.மி. ஆனால் அவரைக் கீழே கொண்டு செல்வதற்கு முன் இருள் சூழ்ந்து விடும். விடியும் வரைக் காத்திருக்க வேண்டும். பிணத்தை உள்ளே வைத்து விட்டுக் குடிசைக்கு வெளியில் சிந்தித்தபடி அமர்ந்திருக்கிறார். இரண்டு மின்மினிப் பூச்சிகள் அருகில் ரீங்கரிக்கின்றன. அவற்றை விரட்டப் போக அவை மின்மினிப் பூச்சிகள் அல்ல, ஓர் ஓநாயின் இரு கண்கள் என்று தெரிய வருகிறது. இனி தன் குருவை இங்கு வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல என்று உணர்ந்து அவரைக் கட்டையில் படுக்க வைத்து கீழே இழுத்துச் செல்கிறார். வழியில் அவரை ஓர் ஓநாய்க் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. எல்லாம் குருவின் மேல் பாய ஆயத்தமாயிருக்கின்றன. இவர் ஒரு உடைந்த மரக்கிளையை எடுத்துக் கொண்டு சுழற்றிச் சுழற்றி அவைகளை விரட்டுகிறார். இருந்தும் இரண்டு ஓநாய்கள் அவரது குருவை இழுத்துக் கொண்டு ஒரு புதர்ப்பக்கம் போய் விடுகின்றன. பதற்றத்தோடு அவைகளைத் தடுக்கப்போன அ.மி. கட்டை தடுக்கித் தரையில் வீழ்ந்து மயங்குகிறார். அவர் மயக்கம் தெளிந்து எழுந்து என்ன கண்டார் என்பதை நீங்கள் கதையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கதையில் வரும் பாத்திரங்கள் அசோகமித்திரனும், சில ஓநாய்களும்தான். அவரது குருவுக்கு இறந்துபோவதைத் தவிர வேறு பங்களிப்பு எதுவும் கதையில் இல்லை (என்று சொல்லி விட முடியாது). அட்ரீனலின் அதிக அழுத்தத்தில் பரவும் ஒரு உச்சக்கட்ட விநாடியில் ஒரு மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் வாழ வேண்டும் என்ற உந்துதல் அவனை ஓநாய்களில் ஒருவனாக்கி விடும் அபூர்வக்கணம் இக்கதையில் நிகழ்வது கதையை வேறு தளத்தில் நகர்த்தி விடுகிறது. கதை முழுவதுமே முற்றிலும் வேறு ஒரு தளத்தில் தான் நிகழ்கிறது. கதை படித்ததும் ஏற்படும் அனுபவத்தை ஒருவேளை ஒரு தேர்ந்த எழுத்தாளர் அழகாக விளக்கலாம். என்னால் முடியவில்லை. அசோகமித்திரன் மீதான பிரமிப்பு மட்டும் மாறாது அப்படியே நிலைத்து விட்டது.