2 மார்ச், 2021

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி மூன்று: புயலின் தொட்டில்

 பகுதி மூன்று: புயலின் தொட்டில்

  1. பீஷ்மரும், பலபத்ரரும் தனியாகவே காந்தாரம் நோக்கி சென்றனர். நிலங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. வழியில் ஓரிடத்தில் இளைப்பாறும் போது, வித்யுதத்தன் என்ற பிராமணனை வழிகாட்டியாகக் கூட்டிக்கொள்கிறான். வழியில் கைவிடப்பட்ட ஒரு நகரத்தைப் பார்க்கிறார். அது இறந்தவர்களின் நகரம், சென்றவர் திரும்பமாட்டார்கள் என்றான் வித்யு. அங்கே செல்கிறார்கள். செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இடிந்த் வீடுகளையும் கோட்டையையும் கொண்ட நகரம். குழிகளில் மண் குடுவைகளில் எலும்புகள் கிடைக்கிறது. இது சத்யயுகத்தில் மக்கள் வாழ்ந்த நகரம். மக்களுக்கு அப்போது இறப்பே இல்லை. வயதாகிச் சுருங்கியபின், அவர்களை மண்தாழிக்குள் வைத்து புதைத்துவிடுவார்கள். இவர்கள் கங்கையிலும், சிந்துவிலும் உள்ள மக்களின் மூதாதையராகத்தான் இருப்பர் என்றார் பீஷ்மர். இந்த நிலத்தின் வரலாற்றை ஒருவர் முழுமையாக எழுதி விட முடியுமா? பின் காந்தாரத்தின் எல்லையில் வித்யுவை விட்டுத் தனியாகப் பயணமாகிறார்கள்

  2. யயாதிக்குத் தன் இளமையைத் தரமறுத்த துர்வசுவை அவர் துரத்தி விடுகிறார். தன் தோழன் ரனசிம்மனுடனும், தன்னுடன் சேர்ந்த ஆயிரம் வீரர்களுடனும் துர்வசு மேற்கு நோக்கிப் பயணமாகிறான். பல நாடுகளைக் கடந்த பின் பாலை நிலமொன்றை அடைகின்றார். நிமித்திகர் அதன் வரலாற்றைச் சொல்கிறார். அத்ரி யாகத்தை விளையாடிக் குலைத்த அக்னியின் மூன்று மைந்தர்கள் பாவகன், பவமானன், சூசி மற்றும் வாயுவின் மைந்தர்களான பலன், அதிபலன், சண்டன் ஆகியோரை அத்ரி ஆயிரம் கல்பம் ஆடியே திரியுங்கள் என்று தீச்சொல்லிட்டார். அவர்கள் விளையாடத் தேர்ந்த இடம் இது. துர்வசு இந்நிலத்தில் குடியேறுவேன் என்று உள்நுழைந்தான். அறுவரும் இருவர் இருவராகப் புயலென வீசி அவன் உறுதியைச் சோதித்தனர். அவர்கள் அசையவில்லை. அவர்கள் அங்கேயே வாழப்பணித்தனர். அவன் வழி வந்ததுதான் காந்தாரம் என்று பாடிய சூதர்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர் பீஷ்மரும், பலபத்ரரும். சூதர் இல்லையேல் இந்தப் பாலைவனத்தில் என் செய்வது என்று சிந்தித்தார். அவர்கள் காந்தாரத்து நுழைவாயிலிலேயே பீதவணிகருடன் சேர்ந்து கொண்டனர். சூதர்கள் அவர்களுடன் இருந்தனர். அவர்கள்தான் பாலையில் வழிகாட்டினர். பாலை நிலம் பற்றி அனைத்தும் அறிந்திருந்தனர். பாலையில் புயல் வருகிறது. தணிகிறது. தாரநாகம் என்ற நதியைப் பார்க்கிறார்கள். பின் புதிதாகக் கட்டப்படும் காந்தாரக்கோட்டையைப் பார்க்கிறார்கள். பாலையில் பெரிய கோட்டை தேவையே இல்லை. இது இளவரசன் சகுனியின் பேராசையால்தான் என்றார்கள்.

  3. சகுனி பீதாசலம் என்னும் மலையில் நாகசூதனைச் சந்தித்துத் தன் எதிர்காலம் பற்றிக் கேட்கிறான். அவன் ஒரு கதை ரக்தாக்ஷம் என்ற குழிக்குள் விழுந்த மன்னன் மற்றும் பத்து பேரின் கதை. இதற்கு என்ன அர்த்தம் என்றால், நாகசூதர் கதைக்கு அர்த்தம் இல்லை என்றான். பதினெட்டு நாட்களுக்கு முன்னால் தன் ஆட்சிக்குட்ட கிராமத்தில் தனக்கெதிராகச் சதிசெய்த பிரமோதனை பொருத அழைத்துக் கொன்றிருந்தான். ஒற்று சொன்ன அமைச்சனுக்கு பொருள் கொடுத்து, ஆனால் அவனையும் ஆளனுப்பிக் கொன்றான். தான் மன்னனாக முயல்வது க்ஷத்ரிய தர்மம், எனவே அவனைத் தண்டிக்காது சமரில் கொன்றேன். அமைச்சன் போல் ஒற்று சொல்ல ஆள் தேவை அதனால் பொன்னளித்தேன். ஆனால் அவன் நமக்கும் துரோகம் இழைக்கக் கூடும். எனவே அவனையும் கொன்றேன் என்றான். பின் சோதரரிடம் கதையைச் சொல்லி நீ அந்த மன்னனாக இருந்தால் வெளிவந்ததும் என்ன செய்திருப்பாய் என்றான். மூத்த அசலன் குலதெய்வத்தைப் படையலிட்டுக் கும்பிடுவோம் என்றான். இளைய விருஷகன் அனைவரையும் கொன்றுவிடுவேன். அரசுகள் நிகழும் ரகசியம் அறிந்தவர் உயிர் தரிக்கலாகாது என்றான். இருவரும் இனைந்து இந்நாட்டை வழி நடத்துவீர் என்றான் சகுனி. பின் காந்தாரி வசுமதியும், சகுனியும் குதிரையில் செல்கிறார்கள். நீ என்ன செய்திருப்பாய் என்றாள். மனித ஊனைச் சுவைத்த மனத்தை ஆராய அவர்களைச் சிறிது நாள் உயிரோடு வைத்திருப்பேன். பின் கொல்வேன் என்றான். அவன் கனவுகளால் வாழ்பவன். அவன் எண்ணம் சிலகாலமாகவே மகதத்தை வெல்வதிலிருந்தது. அங்கு செழித்த வணிகம் காரணமாக. வசுமதிக்கு மகத இளவரசனைத் திருமணம் பேச பொன்னும் பொருளும் கொடுத்து தூதனுப்பினான். மகத அரசர் அதை விரும்பவில்லை. அவனுக்குக் குதிரைச் சவுக்கைப் பரிசாகக் கொடுத்தனுப்பினார்.

  4. புருஷபுரத்தில் இருந்த சகுனிக்கு காந்தார நகரியிலிருந்து தூதுப்புறா வருகிறது. பீஷ்மர் பெண்கேட்டு வந்த செய்தி அதில். உடனே புறப்படுகிறான். மகதத்திலிருந்து குதிரைச் சவுக்கு வந்த செய்தி அவனுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் எரித்து விட்டனர். ஆனால் குதிரைச்சவுக்கு பற்றி சகுனி தெரிந்து கொண்டான். அவனுடன் தொடர்ந்த சுஜலன் அவன் நிலையழிந்திருப்பதைக் கண்டான். பாலைப்பொழிலில் ஓய்வெடுக்கையில் மரத்தில் கண்ட கழுகை அம்பெய்தி வீழ்த்தினான். பின் முகம் புன்னகைத்தது. காந்தாரநகரி சென்றதும் பீஷ்மர் வரவு குறித்த செய்தியைப் புறக்கணித்து அந்த சவுக்கு எங்கே என்றான். அது எரிக்கப்பட்ட இடம் சென்று அதை எடுக்கிறான். அது எரியவில்லை. அப்படியே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு, பின் மன்னரையும் சோதரரையும் சந்திக்கிறான். மன்னரும், அசலனும் அஸ்தினாபுரிக்குப் பெண் கொடுக்க எதிர்க்கிறார்கள். விருஷகன் ஆதரிக்கிறான். சகுனி பீஷ்மரைப் பார்த்தபின் தான் சொல்ல முடியும் என்றான். வழியில் விருஷகன் பீஷ்மர் அனைவரையும் தன்னைத் தந்தையாகவே உணர வைக்கிறார் என்றான். அதனால்தான் தன்னையும் அறியாமல் அவரை ஆதரித்தேன் என்றான். பின் பீஷ்மரை அனைவரும் சந்திக்கின்றனர். அவர் கங்கர்களின் எளிமையுடன் ஆனால்  அழகான சொற்சேர்க்கைகளில் அவர்களின் மனதைக் கவர்கிறார். விருஷகன் காந்தாரியை ஓவியம் வரைகையில் சந்தித்ததாகவும், அவளுக்கும் இதில் விருப்பமே என்றான். அவள் என்ன வரைந்தாள் என்றான் சகுனி. மலைகளை. முடித்தாளா? இல்லை. சகுனி எழுந்து பீஷ்மரை வணங்கி தன் தங்கைக்கு விருப்பமில்லாத திருமணம் நடக்காது என்று தெரிவித்து உடனே வெளியேறினான்.

  5. பீஷ்மரை சந்தித்து வந்த பிறகு சகுனி துயிலின்றி உப்பரிகையில் நின்றான். தூரத்தில் ஓர் ஓநாயைப் பார்த்தான். எண்ணம் காந்தார ஓநாய்க்கும், மகத ஓநாய்க்கும் ஓடியது. பின் வேட்டை நாயையும், துணைவனையும் அழைத்துக் கொண்டு ஓநாயை நள்ளிரவில் பின்தொடர்ந்தான். ஓநாயைப் பின்தொடரும் படலம். விடிகாலையில் சுஜலன் வந்து பீஷ்மர் அன்று மாலை செல்லவிருப்பதாகச் சொன்னான். சகுனி துணைவனிடம் ஓநாயைப் பின்தொடருமாறு சொல்லிவிட்டுப் புறப்பட்டான். விருஷதன் வரவேற்று, பீஷ்மர் என்ன பேசினார் என்று சொன்னான். பின் அனைவரும் ஆலயம் சென்றனர். பீஷ்மர் வந்தார். பட்டத்தரசியர் வந்தனர். கழுதை, குதிரை, ஒட்டக உடல் கொண்ட தெய்வங்களும், அவர்தம் மனைவியர் பற்றிய கதை. குருதிபூசனை செய்யப்படுகிறது. அரசி சுகர்ணை பீஷ்மரிடம் வசுமதிக்கு ஆசிதரச் சொல்கிறாள். உன் மனதுக்குகந்த கணவன் கிடைப்பான். நீ பாரதவர்ஷத்தை ஆள்வாய் என்று வாழ்த்தினார்.


  1. அரண்மனை மந்திரச்சாலைக்குள் சகுனி அமைச்சர் சுகதர் அவரை வரவேற்றார். மன்னர் சகுனியை பீஷ்மரை வழியனுப்பாமல் ஏன் வேட்டைக்குப் போனாய் என்றனர். பின் ஏன் நேரடியாக மணம் முடிக்க இயலாது என்று தெரிவித்தாய் என்றனர். சுகதர் சகுனி பீஷ்மரை அஞ்சுவதாகவும், அதன் பாதிப்பாலேயே மணம் மறுத்தான் எனவும் சொன்னார். பின் அவனது மனம் பற்றிய ஆய்வு. விருஷகன் வந்து பீஷ்மர் ஆசியளித்தபின் என்ன சொன்னார் என்று சொன்னான். ஒரு பேரழகியைத் தன் குலம் இழக்கிறது என்று முதுதந்தையைப் போல் துயரில் வருந்தினார் என்றான். பின் வசுமதிக்குப் பெண்கேட்டு வந்த எட்டு ஓலைகள் பிரிக்கப்படுகின்றன. யாரும் தகுதியற்ற அரசர்கள். அது பற்றி பேச்சு ஓடுகிறது. மகத இளவரசர் பிருகத்ரதனுக்கு, காசி மன்னர் பீமதேவர் வங்கப்பெண்ணை மணந்து பெற்ற அணிகை, அன்னதை ஆகிய இளவரசியரைத் திருமணம் பேசியிருக்கிறது. மணஓலையோடு மகதத்திலிருந்து ஒரு சூதன் வருவதை அறிந்ததும் அனைவரும் கொதிக்கின்றனர். படையெடுப்போம் என்றனர். சகுனி அப்போது பிறந்த குதிரைக்குட்டி ஒன்றை அனுப்புவோம். அது வளர்ந்து பெரிதாவற்குள் படையெடுத்து மகதத்தை வெல்வோம் என்று அவனுக்குச் செய்தி சொல்வோம் என்றான். வெளியிருந்த வசுமதி, என்னை நிராகரித்த காரணத்துக்காக அவன் மீது படையெடுப்பது என்னைச் சிறுமை செய்ததாகும். அவனுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்புங்கள் என்றாள். சகுனி எழுந்து, நீ என் தமக்கை மட்டுமல்ல, பேரரசி. அஸ்தினாபுரியை ஆளவேண்டியவள். நான் உன்னோடு வாளேந்தித் துணையிருப்பேன். பாரதவர்ஷத்தை வென்று உன் காலடியில் போடுவேன் என்றான். விருஷகன் ஆர்வத்துடன் பெண்கொடுக்க சம்மதம் என்று பீஷ்மரிடம் தெரிவித்து விடவா என்றான் ஆர்வத்துடன். ஆம் என்றாள் வசுமதி.

  2. பிருஹத்ரதன் இளமையில் கண்டறிந்த கழுகுக்குஞ்சுகள் சுகோணனும், சுபட்சனும் மகதத்தின் ஒற்றுப் பறவைகளாக விளங்கின. முன்பு அஸ்தினபுரியில் சத்யவதியும், பீஷ்மரும் பேசியதும், பீஷ்மர் வியாசரைச் சந்தித்ததும், அவர் இளவரசியரைக் கவர்ந்து வந்ததும், அம்பை நகர் நீங்கியதும் எல்லாம் ஒற்றுச் செய்திகளாக இரு கழுகுகள் மூலம் மகதம் அறிந்தது. ஒரு முறைசுகோணன் அஸ்தினபுரியில் இருந்து திரும்புகையில் கங்கைப் படித்துறையில் இறந்த வெண்பசுவின் சடலத்தைக் கண்டது. அதை மெல்ல உண்ட சிங்கம் அங்கேயே இருந்தது. சுகோணன் மாட்டின் குடலைக் கவ்வி எடுக்கையில் சிங்கம் அதை அறைய வந்தது. சுகோணன் சிங்கத்தின் கண்ணைக் கிழித்துப் பறந்து சென்றது. மகதத்திலிருந்து அப்போதுதான் குதிரைச் சவுக்கு சென்றிருந்தது. இது பிருஹத்ரதனுக்குத் தெரியாது. அவன் கங்கை வழியே வங்கம் சென்று அங்கிருந்து கடல் வழியே கலிங்கம் செல்லவும் அங்கிருந்து சோழநாடு செல்லவும் கலம் காத்துக் கிடந்தான். அவனுக்கு வந்த தூதுப்புறா மூலம் செய்தி அறிந்தான். அவன் வந்து சேர்ந்த தாம்ரலிப்தி துறைமுகம் அவனது ராஜகிருகத்தை விட இரு மடங்கு பெரிது. கடல்தான் இனி பொன் விளையும் பூமி என்றான் அவன் தோழன். இந்தத் துறைமுகம் எனக்கு வேண்டும் என்றான் பிருஹத்ரதன். நாம் சகுனியுடன் இணைந்தால் பாரதவர்ஷத்தை வெல்ல முடியும்.அவர்கள் செல்வத்தில் நூறு நாவாய்கள் வாங்க முடியும் என்றான் தோழன். அவர்களுக்கு சுகோணன் மூலம் செய்தி அனுப்பினார்கள். அதைத்தான் சகுனி அம்பெய்தி வீழ்த்தினான். அதைத்தான் சகுனி தேடி வந்த ஓநாய் தின்றது. அதனுடன் அது கொண்டு வந்த செய்தியையும். சகுனியின் மனம் நிலையழிந்திருந்தது.

மேலும் வாசிக்க