sramakrishnan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sramakrishnan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஜூன், 2011

எஸ்.ராமகிருஷ்ணன் கடிதம்


நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நாவலான யாமம் பற்றி நான் எழுதிய பரிந்துரையை சில நாட்கள் முன்பு அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை அவர் படித்து விட்டு எனக்கு இன்று பதில் எழுதியிருந்தார்.
அந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அன்பு ஜெகதீஷ்

யாமம் பற்றிய உங்கள் விமர்சனம் மிக நன்றாக உள்ளது,  நுட்பமாக வாசித்து எழுதியிருக்கிறீர்கள்

உங்கள் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி

மிக்க அன்புடன்
எஸ்ரா

நீண்ட நாட்களுக்குப் பின் எனக்கு வாசிப்பிலும் எழுதுதலிலும் ஆர்வம் மீண்டதற்கும், நல்ல திரைப்படம் பற்றி நான் அறிந்து கொண்டதற்கும் அவரது எழுத்துக்கள் ஒரு காரணம்.
நான் எழுதிய யாமம் பரிந்துரை

5 அக்டோபர், 2010

எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம்

நாவல் :          உப பாண்டவம்
ஆசிரியர் :  எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : விஜயா பதிப்பகம்
பக்கங்கள் :  384
விலை :     200
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்
        உப பாண்டவம் மகாபாரதம் என்கிற இதிகாசத்தின் எண்ணற்ற கதாபாத்திரங்களின் நாம் பார்த்திராத பக்கங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. திரேதாயுகத்தில் விளங்கின அஸ்தினாபுரத்துக்குள்ளும், இந்திரப் பிரஸ்தத்துக்குள்ளும் யுத்தபூமியான குருக்ஷேத்திரத்துக்குள்ளும் சமகால மனிதனொருவன் பயணப்பட்டுத் தான் அடைந்த அனுபவங்களை விவரிப்பதைப் போலவே முழுக்கதையும் அமைந்துள்ளது. நாவல் என்றால் என்ன என்பதற்கான இலக்கண விதிகள் யாவை என்று எனக்கு முழுமையாகத் தெரியாததால், உப பாண்டவத்தில் அவை எத்தனை தூரம் மீறப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும் நாம் வாசித்து வருகின்ற வழக்கமான நாவல் வரிசையில் உபபாண்டவத்தைச் சேர்த்து விட முடியாதென்றே தோன்றுகிறது. (இது போன்று நீட்டி முழக்குவதற்கு நான் ஒன்றும் அப்படி நிறைய நாவல்கள் படித்தவனல்லன். என் அனுபவத்தின் அடிப்படையிலேயே நான் மேற்கண்ட கருத்தைக் குறிப்பிட்டேன்.)
        இந்தியப் பெருங்கடல் போன்று விரிந்ததும், ஆழமானதுமான இதிகாசமாகிய மகாபாரதத்தில் சாதாரண ஜனங்களான நமக்கும் சில பாத்திரங்களைப் பற்றிய அறிமுகம் உண்டு. அவர்களில் பாண்டவர்கள், த்ரௌபதி, ஸ்ரீ கிருஷ்ணன், பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியார், கர்ணன் போன்றவர்களை காவிய புருஷர்களாகவும், தெய்வீகப் பண்புகள் கொண்டவர்களாகவுமே நாம் இதுவரையிலும் அறிந்து வந்திருக்கிறோம். குணக்குறைகள் நிறைந்த துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் கூட பரமாத்மாவின் சதுரங்க ஆட்டத்தின் பகடைக்காய்களாகத்தான் ஆட்டுவிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர அவர்களை அறவே வெறுக்குமளவிற்கு அவர்களின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டதாக என் அறிவுக்கு எட்டிய வரை இல்லை. ஆனால் என்னுடையது மிகவும் சிற்றறிவு என்பது இதற்குள் நுழைந்தவுடனேயே தெரிந்து விடுகிறது.
        எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்து வயதில் ஒரு மழைநாளில் ஒரு சொல்லாகத்தான் பாரதம் அறிமுகமாகியிருக்கிறது.(அர்ச்சுனா, அர்ச்சுனா). பாரதம் வீட்டில் வைத்துப் படிக்கக்கூடாது என்கிற கிராமத்து நியதிப்படி ஊர்ச்சாவடியில் துணி சுற்றி வைக்கப்பட்டிருந்த நானூறு பக்க பாரதத்தை மூன்று நாட்களில் வாசித்து முடித்திருக்கிறார். ஆனால் அது முழு பாரதமல்ல, முழு பாரதம் ஒரு லட்சம் பக்கம் உள்ள புத்தகம் என்று தெரிய வந்திருக்கிறது.(அது ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்டது என்பது என் அறிவு)
பிறகு பல வருடங்கள் கழித்து பாரதக்கூத்து நடக்கும் ஆற்காடு பிரதேச கிராமங்களில் சுற்றித்திரிந்து பாரதம் ஒரு வாழ்வியல் என்றும், அஸ்தினாபுரம், இந்திரப் பிரஸ்தம், குருக்ஷேத்திரம், துவாரகை முதலிய இடங்களில் சுற்றித் திரிந்து அது ஒரு பெரிய நிலவியலின் முடிவற்ற சொல்வடிவமெனவும் உணர்ந்திருக்கிறார். உப பாண்டவம் மதமேறிய யானை மரங்களை ஒடித்து வெறி தீரத் தின்பது போல, அவர் இதிகாசச் சாற்றைக் குடித்துப் பித்தேறிய நிலையில் உருவான கற்பனை என்கிறார். அலைந்து கொண்டேயிருந்த தன் இயல்பின் வடிவமே இந்த நாவலும் உருக்கொண்டிருப்பதாக அவர் ஒப்புக்கொள்வதால், நாவலின் வினோதமான ஒழுங்கற்ற வடிவத்துக்கு நாம் அவரைக் குற்றம் சாட்ட முடியாது.
        மகாபாரதம் என்ற கதையை சுருக்கமாகவேனும் தெரிந்து கொண்டு உபபாண்டவத்தைப் படிக்கிறவர்களுக்கு ஓரளவு சுலபமாக இருக்கும். நான் சமீபத்தில் பகவத் கீதையை என் சொந்த முயற்சியில் படித்ததில் முன் கதைச் சுருக்கமாக பாரதக்கதை சொல்லப்பட்டிருந்தது. மேலும் முதல் அத்தியாயத்தின் சில ஸ்லோகங்களில் அதன் பாத்திரங்களின் பெயர்களும், விளக்கமாகச் சில உப கதைகளும் சொல்லப்பட்டிருந்ததால் எனக்கு உப பாண்டவத்துக்குள் நுழைவதற்கு உதவியாக இருந்தது.
இருப்பினும் நாவலை மேற்கொண்டு தொடர மிகவும் சிரமப்பட்டேன். அது என் வாசிப்புப் பழக்கத்தில் உள்ள குறையாகக் கூட இருக்கலாம். கதை ஒரே கோட்டில் நகராமல், முன் பின்னாவும், பின் முன்னாகவும் நகர்கிறது. திடீரென்று எதோடு எதைத் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்வதென்று புரியவில்லை. ஒரு வேளை சொல்லப்படுகின்ற எதற்கும் தொடர்பே இல்லையோ என்றும் தோன்றுகிறது. இப்படியும் சொல்லலாம். இந்த நாவலை எடுத்து எந்தப் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாலும் புரியும்.
பாதி நாவலில் இருக்கும் போதே, நாவலைத் தொடர்வதில் எனக்குள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு எஸ்.ரா அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு அவர் பதில் தரவில்லை. ஆனால் அதே வாரத்தில் அவர் தளத்தில் வாசிப்பது எப்படி என்ற தலைப்பில் வர்ஜீனியா வுல்ஃபின் ஒரு கட்டுரை பற்றி எழுதியிருந்தார். அதை அவர் எனக்குத் தந்த பதிலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
        நாவல் கொடுக்கும் அனுபவம் என்ன என்று சொல்லவேண்டுமென்றால் முதல் நூறு பக்கங்கள் படித்து விட்டு என்ன படித்தோம் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. சலிப்பே ஏற்பட்டது. ஒரு புத்தகம் புரியவில்லை எனில் திரும்பப் படிக்க முயற்சிக்க வேண்டும் அல்லது கொஞ்ச காலம் ஆறப்போட்டு விட்டு மீண்டும் எடுத்துப் படிக்க வேண்டும் என்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எஸ்.ரா குறிப்பிட்டிருந்தார். அதனால் உப பாண்டவத்தை மீண்டும் ஒரு முறை வாசிக்க இருக்கிறேன். அப்போது இன்னுமொருமுறை அதன் நலம் பாராட்டலை இன்னும் அதிகப் புரிதலோடு எழுத முடியும் என்று நம்புகிறேன். இந்தப் பரிந்துரை ஒரு கோர்வையாக இல்லாதிருப்பினும் இதை எழுதுவதன் அவசியம், இதன் மூலம் உபபாண்டவம் பற்றின என் புரிதலைப் பரிசோதித்துக் கொள்வதற்காகவும், இந்த பரிந்துரையை வாசிக்கும், ஏற்கனவே உபபாண்டவத்தை வாசித்துள்ள யாரேனும் என் புரிதலை மேம்படுத்த உதவக்கூடும் என்ற எண்ணத்தாலும்தான்.
        நாவலின் துவக்கத்தில் ஆசிரியர் கிராமமொன்றில் நடக்கும் துரியோதனன் படுகளம் என்ற நிகழ்வுக்குச் செல்கிறார். துரியோதனனை பீமன் வதம் செய்த நிகழ்வை ஒரு கலைக்கூத்தாகவும், தெய்வீகச் சடங்கு போலவும் நிகழ்த்தி வழிபடுகின்றனர். துரியோதனனை ஒரு நாயகனைப் போலக் கொண்டாடுகிறார்கள் கிராம மக்கள். நாவலில் கூட ஆசிரியர் துரியோதனன் மீது கரிசனத்தோடும், அனுசரணையோடும் நடந்து கொள்வதை போலவே இருக்கிறது. இந்த நிகழ்வை விவரித்த பின் கதை நேரடியாக மகாபாரத காலத்துக்குச் சென்று விடுகிறது. ஒரு நதியின் கரையில் அதைக் கடக்க வேண்டி ஒரு பயணி நிற்கிறான். அவனை அழைத்துச் செல்ல படகோட்டியாக வியாசரே வருகிறார்.
        ஆற்றின் மறுகரையின் அந்தப் பயணி சூதர்கள் என்ற இனத்தவரைச் சந்திக்கிறான். அவர்கள் சூதர்களின் ஆசைகளே நகரமாகவும் நதியாகவும் உருவெடுத்திருக்கிறதென்று கூறி பாரதத்தின் பல்வேறு பாத்திரங்கள் எவ்வாறு சூல் கொண்டனர் என்று விவரிக்கின்றனர். குந்தி, மாத்ரி என்ற இரு பெண்களுக்கு துர்வாசர் கொடுத்த சூல்வாக்கின் மூலம் பிறந்தவர்களே பஞ்ச பாண்டவர்கள் என்றும், பாண்டு அவர்களின் தகப்பன் அல்லன் என்றும் கூறப்படுகிறது.(இந்த மாதிரி அதிர்ச்சித் தகவல்கள் நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன.) பாண்டுவிற்கு குழந்தை கொடுக்குளவுக்கு வீர்யமோ, ஊக்கமோ இல்லை என்று கூறப்படுகிறது. அதே போல் காந்தாரிக்கு ஒரே கர்ப்பபிண்டமாகப் பிறந்து அது நூறு கலயங்களில் இடப்பட்டு கௌரவர்களாக வளர்ந்தது(னர்) என்கிறார். இரு உடலாளர்கள் மேல் ராமகிருஷ்ணனுக்கு மிகுந்த கவர்ச்சி இருக்கும் போலிருக்கிறது. சிகண்டி ஆண் கண்களுக்கு பெண்ணாகவும் பெண் கண்களுக்கு ஆணாகவும் தெரிவதை விளக்குகிறார். அர்ஜீனன் சகோதரர்களோடு மறைந்து வாழ்ந்த ஓராண்டில் பிருக்கன்னளை என்ற பெண்ணாக (நபும்சகனாக!) இருந்ததைக் குறிப்பிடுகிறார். துரியோதனன் கூட இடுப்புக்குக் கீழே மலர் போன்றும், இடுப்புக்கு மேலே வஜ்ரம் போன்றும் உடலமைப்பு கொண்டவன் என்கிறார். இது போன்று மகாபாரதத்தின் அறியாது மறைந்திருக்கின்ற ரகசியத் தகவல்கள் ஆங்காங்கே வருகின்றன.
        குறிப்பாக அர்ஜூனன் மிகுந்த குழப்பம் மிகுந்தவனாகவும், கொடுமைக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறான். கீதோபதேசம் பெற்றும் கூட அவன் மனதில் துக்கமும், குழப்பமும் நீங்காததைப் போல் காட்டப்பட்டிருக்கிறது. குந்தியைப் போன்றே தோற்றம் கொண்ட ஒரு வேடுவப் பெண்ணையும், அவளது ஐந்து குழந்தைகளையும் அரக்கு மாளிகையில் விட்டு விட்டுத் தப்பிச் செல்கிறார்கள் பாண்டவர்கள். வேடுவப் பெண்ணும், குழந்தைகளும் பாண்டவர்களுக்குப் பதிலாகத் தீயில் வெந்து சாகிறார்கள். அதே போல் ஏன் த்ரௌபதி ஐவரின் மனைவியானாள் என்பது விளக்கப்படுகிறது. தாயார் குந்தியிடம் தங்கள் பாஞ்சாலதேசத்திலிருந்து ஒரு பொருளைக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்ல, அவள் ஐவரையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறாள். அது ஓர் பெண்ணென்று அறிந்தும் அவள் தன் முடிவை மாற்றிக் கொள்வதில்லை. த்ரௌபதியும் விரும்பி அவர்களை மணக்காமல் தகப்பனின் விருப்பத்தின் பேரில்தான் திருமணம் செய்கிறாள். மாமியாரை அவளுக்குப் பிடிப்பதில்லை. ஐந்து பேரிலும் அர்ச்சுனன் மட்டுமே பிடித்தவனாக இருக்கிறான்.
        நாவலில் ஆங்காங்கே அறியாத நகரின் குறிப்பு, தட்ச சூத்திரம், கவனகன் குறிப்பு, சமங்கை நதிக் குறிப்பு, உருபேதம், பஞ்சபட்சிகள், பிம்பவனம், சொர்ண உமிழ்கை என்று வினோதமான தலைப்புகளின் கீழ் சுவாரசியமான பல தகவல்கள் கொடுக்கப்படுகின்றன.
        நகரங்களின் உரையாடல் என்ற அத்தியாயத்தில் பாரத காலத்தில் இருந்த ஒவ்வொரு நகரத்தின் பிரத்யேகத் தன்மையும் விவரிக்கப்படுகிறது. கோவில்களன்றி பலிபீடங்கள் மட்டுமே கொண்டுள்ள அஸ்தினாபுரமும், அதன் பிரதிபிம்பமாகவும், வன்மையான இரவையும் கொண்ட இந்திரப் பிரஸ்தமும், ஒளிந்து வாழ்பவர்க்கான நகரமான விராட தேசமும், அவமானத்தால் வீழ்த்தப்பட்டு சதா வெம்மை கொண்ட பாஞ்சால தேசமும் நம் கண் முன் விரிகின்றன. 
        நாவலின் இறுதிப் பகுதியில் ஒவ்வொருவரும் எவ்வாறு இறக்கிறார்கள் என்று காட்டப்படுகிறது. த்ரௌபதி பனிமலையில் இறக்கிறாள். கண்ணன் வேடுவனால் பாதத்தில் அம்பு தாக்கி இறக்கிறான். அம்புப் படுக்கையில் மரண நேரத்துக்காகக் காத்திருக்கிறார் பிதாமகர் பீஷ்மர்.
        முன்பே சொன்னது போல நாவலுக்கென்று முழுமையான வடிவம் ஏதும் இல்லை என்பதால் பொறுமையாகவே படிக்கலாம். நிஜ பாரதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துப் படிப்பது சுவாரசியமாக இருக்கும். எஸ். ராமகிருஷ்ணனின் கவிதை மொழியில் படிப்பது சுகமாக இருக்கும். சில நேரங்களில் சற்றே தலை சுற்றினாலும். தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள முக்கியமான நாவல்களில் ஒன்று என்ற அடிப்படையிலும், மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள் மிகச்சில புனைவுகளில் ஒன்று இது என்பதாலும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். மேலும் மறு வாசிப்புக்கும், பரிசீலனைக்கும் உள்ளாக வேண்டிய நாவல் உப பாண்டவம்.
நன்றி : வாசகர் அனுபவம்

19 ஜூலை, 2010

யாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்


பதிப்பகம்: உயிர்மை
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்.






உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் நாவலான யாமம் சமீபத்தில் வாங்கி வந்து வாசித்தேன்.  ஏற்கனவே கதாவிலாசம், அயல் சினிமா போன்ற நூல்களை வாசித்திருப்பினும் அவரது புனைகதை ஒன்றைப் படிப்பது, (சில சிறுகதைகள் தவிர்த்து ) இதுவே முதல். அறிமுகமே தேவையில்லாத எழுத்தாளர் எஸ்.ரா. கீழைத்தேய மரபையும், மேற்கத்திய கலாசாரம் அதில் ஊடுருவுவதையும் வைத்து அவர் எழுதியுள்ள நாவலான யாமம் ஒரு புதுமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் உறங்கச் சென்றபின் அவ்வீட்டின் விளக்குகளின் சுடர்கள் அனைத்தும் ஒன்று கூடி அம்மனிதர்களின் குண இயல்புகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் பற்றி உரையாடி விட்டுத் திரும்புகின்றன என்று  நாவலின் முன்னுரையில் எஸ். ரா குறிப்பிடுகின்றார்அந்தச் சுடர்களைப் போலவே சற்று நேரம் பரிமளத்தோடு இருந்து மறைந்து போன மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகத்தான் யாமம் இருக்கிறதுயாமம் என்பது ஒருவகை அத்தரின் பெயர். எந்நேரத்திலும் இருளைக் கவிய வைக்கும்,   காமத்தை தூண்டும் வல்லமை   கொண்டது யாமம். நாவலின் பெயர்தான் யாமமே தவிர இது யாமம் என்கிற அத்தர் பற்றின கதை அல்ல

நாவல் நான்கு பெருங்கதைகளின் தொகுப்பாக இருப்பினும் அவற்றின் கதைமாந்தர்களில் பெரும்பாலானவர்களை  இணைக்கும் மெல்லிய சரடாக யாமம் என்கிற அத்தர்  இருக்கிறதுவெளிப்படையாகப் பார்க்கும் போது நான்கு தனிக் கதைகளைப் படிப்பது போலவே இருப்பினும் ஆழ்ந்த வாசிப்பில் கதை மாந்தர்களுக்கிடையே ஊடாடும் ரகசியங்களின், குணஇயல்புகளின்மனத்திரிபுகளின் ஒற்றுமைகளை  ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கிறது.

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்குள் வணிகம் செய்வதற்காக நுழைந்ததும், அதன் பின்னர் அவர்கள் சிறிது சிறிதாக நில ஆக்கிரமிப்புகளைச் செய்து குடியேற ஆரம்பித்ததும் நாவலின் துவக்கத்தில் சொல்லப்படுகின்றன. இந்தியாவிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதற்காய் மகாராணியிடம் அனுமதி கேட்டு இந்தியா வருகின்றனர் வெள்ளையர்கள். அனுமதி கேட்பவர்களிடம் மகாராணி இந்தியாவில் உள்ள நீலக்கிளிகள் அனைத்தும் தனக்கு வேண்டுமென்றும் அவற்றின் இறகுகளைத் துண்டித்து மேலாடை செய்துகொள்ளவேண்டுமென்றும் சொல்கிறாள். அப்படியே இறக்கை முளைத்த வெள்ளை நிற யானைகளையும் கொண்டுவரச் சொல்கிறாள்.

வெள்ளையர்கள் வரும் இடத்தில் ஷாஜஹானின் மகளுக்குத் தீ விபத்தில் முகத்தில் ஏற்பட்ட காயத்தை ஒரு ஆங்கிலேயன் குணப்படுத்த, மகிழ்ந்து போன ஷாஜஹான், அவர்களுக்கு இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையை அளிக்கிறான். ஆங்கிலேயர்கள் கடலோரம் குடியிருந்த மீனவ இன மக்களை வன்முறையாக வெளியற்றி அங்கு குடியேறுகிறார்கள். ஒரு பரத்தையைப் போல் எல்லாரையும் மகிழ்வித்துக் கொண்டும் ஆனால் தன் துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் மெல்ல மெல்ல மதராப் பட்டினம் உருவாகிறது.

யாமம் ஒரு புனைகதையை வாசிப்பது போன்ற அனுபவத்தைத் தரவேயில்லைபட்டணத்து வாசிகளின் சரிதம் என்கிற தலைப்பில் மதராப் பட்டணத்தைச்  சுற்றி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வும், வீழ்ச்சியும், ஏக்கங்களும், ஆசைகளும், உறவுப் பிறழ்வுகளும்,  நம்பகமான வரலாற்றுக் குறிப்புகளைப் போல அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்குறிப்புகளின் வாயிலாகவும், தனது எளிமையானதும்நேரடியானதும், குறியீட்டுத் தன்மை கொண்டதுமான மொழிநடையின் உதவியோடும் எஸ்.ரா தன் பார்த்த உலகத்தை நமக்கு அறிமுகப் படுத்துகிறார்.  நம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்ற நிலையைத் தாண்டி நமக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இருந்த உறவு விவரிக்கப் படுகிறது

அப்துல் கரீம் என்ற வணிகர்தான் நகரத்துப் பிரமுகர்கள் பலரும் உபயோகிக்கும் யாமம் என்ற அத்தரைத் தயாரிக்கிறார்.  அதைத் தயாரிக்கும் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவரது குடும்பத்துக்குப்  பதினாலு தலைமுறைகளாக அல் அசர் முசாபர்  என்ற பக்கீர்தான் வழிகாட்டி வருகிறார். அவர்  யார் முன்பும் தோன்றியதில்லை. அக்குடும்பத்தின் மூத்த ஆண்மகனின் கனவில் தோன்றி வழி நடத்துவார். பல தலைமுறைகளுக்கு முன்பாக கரீமின் முன்னோரான மீர்காசிமின் கனவில் முதன்முறையாகத் தோன்றி மர்மமானதும் புதிரானதுமான பல கேள்விகளைக் கேட்கிறார் பக்கீர். அக்கேள்விகள் பல்வேறு தத்துவ அடுக்குகளைக் கொண்டதாக இருக்கின்றன. பதில்களுக்கான தேடல் மீர்காசிமுக்குப் பல்வேறு புரிதல்களை உண்டாக்குகிறது. வாசனையை அதன் ஊற்றுக் கண்ணிலேயே கண்டுபிடித்து விடும் திறமை படைத்த காசிமுக்கு யாமம் தயாரிக்கும் ரகசியத்தைச் சொல்கிறார் பக்கீர். அதன்பின் தலைமுறை தலைமுறையாக யாமம் தயாரிக்கும் ரகசியம் அந்தக் குடும்பத்து ஆண்களிடம் மட்டுமே இருந்து வருகிறது.

ஆண் வாரிசு இல்லாத கரீம் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தும் பயனில்லை. யாமம் தயாரித்தல் தன்னோடே முடிந்து விடுமோ என்று அஞ்சுகிறார். விரக்தியடைந்த அவர் மனம் அவரை சூதாட்டத்தில் ஈடுபட வைக்கிறது. சொத்தெல்லாம் இழக்கிறார். மூன்று மனைவியரையும் பிரிந்து எங்கோ சென்றுவிடுகிறார். மனைவியர் மூவரும் அவர் இல்லாது பட்டணத்தில் அல்லாடுகிறார்கள்.

மற்றொரு கதை ஆங்கிலேயரின் நிலவரைபட ஆய்வுப் பணியிலிருக்கும் பத்ரகிரியினுடையது. சிறுவயதில் தாயை இழந்த அவன் தன் தம்பியைப் பாசமாய் வளர்க்கிறான். மேற்படிப்புக்காக லண்டன் அனுப்புகிறான். அவன் தம்பியின் மனைவி அவன் வீட்டில் இருக்கிறாள். பத்ரகிரியின் மனைவிக்குத் தெரியாமல் அவனுக்கும் தம்பி மனைவிக்கும் உறவு ஏற்படுகிறது. அவள் பத்ரகிரிக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பத்ரகிரியின் மனைவி அவனைப் பிரிகிறாள். இது எதுவுமே அறியாமல் லண்டனில் படிக்கும்போதே கணிதத்துறையில் புகழ் பெற்று நாடு திரும்பும் அவன் தம்பி திருச்சிற்றம்பலத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

திருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாசம் மூலமாக நமக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இங்கிலாந்து ஒரு அழகான ஓவியத்தைப் போலக் காணக் கிடைக்கிறது. லண்டன் மாநகரின் விஸ்தாரமான பழமை கொஞ்சும் பிரம்மாண்டமான தெருக்கள் மட்டுமல்லாது, அவற்றின் அழுக்கு படிந்த வீதிகள், அந்நகரின் உழைக்கும் கருப்பின மக்களின் வலிகள், ஒடுக்கப்படுதலுக்கெதிராய் அவர்களது போராட்டங்கள் ஆகியன நம்முன் விரிகின்றன. திருச்சிற்றம்பலத்துடன் உடன் பயணம் செய்த சற்குணம் உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறான். அவனுக்கு மரண தண்டனை கூடக் கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். திருச்சிற்றம்பலம் தன் கணிதத் திறமையை லண்டனில் நிலைநாட்டி மிகுந்த புகழ் பெறுகிறான். அவனது பாத்திரப் படைப்பு எனக்கு கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தை நினைவூட்டியது.

இன்னொரு கதை சதாசிவப் பண்டாரத்தினுடையது. வாழ்வின்மீது பற்றற்ற பண்டாரம் வீட்டைத் துறந்து கோயில் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறது. அம்மா வந்து அரற்றியும் மனம் இரங்குவதில்லை. நாய் ஒன்று பண்டாரத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறது. நீ சோறு தின்று சோம்பிக் கிடக்கத்தான் சன்யாசியானாயோ? என்று அந்த நாய் கேட்பதைப் போலிருக்கவே, எழுந்து உறுதியுடன் நாயையே பின் தொடர்கிறது பண்டாரம். நாய் பண்டாரத்தை கிராமம் கிராமமாகக் கூட்டிச் செல்கிறது. ஒரு கிராமத்தில் பெண்ணொருத்தியுடன் அவருக்குத் தொடர்பு ஏற்படுகிறது. அவள் கர்ப்பமுறுகிறாள். நாய் அங்கிருந்து நகராததால், பண்டாரமும் அங்கேயே வீட்டு வேலைகளை செய்து கொண்டு தங்கிவிடுகிறது. அவள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாய் அங்கிருந்து ஓடுகிறது. பண்டாரமும் அதன்பின்னேயே புறப்பட்டு விடுகிறது. நாய் அவரைப் பட்டினத்தார் சமாதியான இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. ஒருநாள் பண்டாரம் களிப்போடு, குதித்துக் கொண்டாடியபடியே அருகிலிருக்கும் மடம் ஒன்றில் புகுந்து தாழிட்டுக் கொள்கிறது. அதற்கப்புறம் அடைத்த கதவு திறப்பதே இல்லை.

அடுத்த கதை குடும்பச் சொத்தைக் காப்பாற்றுவதற்காய் பங்காளியிடம் போராடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணப்பக் கரையாளருடையது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான எலிசபெத்தை அழைத்துக் கொண்டு போய் மேல்மலையில் தங்கி இருக்கிறார். மலைவாசம் அவர் மனதை மெல்ல கனியச் செய்கிறது. வழக்கு முடிந்தால் சொத்து முழுவதையும் இழந்து விடுவோம் என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. இந்த மேல் மலையையாவது காப்பாற்றி விட வேண்டுமென்று உறுதியோடிருக்கிறார். பங்காளியிடம் சமாதானம் பேசி மேல்மலை தவிர அனைத்தையும் அவனுக்கே கொடுத்து விடுகிறார். மேல்மலையை எலிசபெத்துக்கு எழுதி வைத்து விடுகிறார். ஆங்கிலேயர் தேயிலை பயிரிடுவதற்கு அது ஒரு துவக்கமாக அமைந்து விடுகிறது.

மலையின் வசீகரங்களும்,காட்டின் ரகசியங்களும் எஸ். ராவின் வருணனையில் உயிர் பெறுகின்றன. இரவை மட்டுமல்ல, வெயிலையும் பல்வேறு கோணங்களிலிருந்து உற்றுநோக்கித் தன் வருணனைகளால் அடர்ந்த குறியீடுகளாக மாற்றி விடுகிறார் எஸ். ரா. ஆனாலும் திரும்பத் திரும்ப படிமங்களை உள்ளடக்கிய வருணனைகள் வருவது ஒரு சாதாரண வாசகனான எனக்குச் சலிப்பையூட்டியது. நாவலில் ஆங்காங்கே நிறைய எழுத்துப் பிழைகள் தென்படுகின்றன. பாத்திரங்களின் பெயர்களில் கூட வரும் எழுத்துப் பிழைகள் பாத்திரத்தின்  உண்மையான பெயர் எது என்பதை நாமேதான் ஊகித்துக் கொள்ளவேண்டும் என்ற அளவிற்கு இருந்தது சற்று எரிச்சல்தான். அடுத்த பதிப்பில் தவிர்த்து விட வேண்டும்
நாவலின் தொடர்ந்த வாசிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய மதராப் பட்டிணம் கண்முன் உருக்கொள்கிறது. பட்டிணத்தை ஒயிட் டவுன், பிளாக் டவுன் என்று இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். இந்தியர்கள் பிளாக் டவுனில் உள்ள ஏழுகிணற்றிலிருந்து வெள்ளையர்களுக்கு நீர் எடுக்கப் போவதை எதிர்த்துப் போராடும் இந்தியர்கள் மீது நடக்கும் தாக்குதல் ஜாலியன் வாலாபாக்கை நினைவூட்டியது. போதையூட்டும் நீலாவரணச் செடிகளும், ஒளிரும் ஸ்வேதாமிணிச் செடிகளும், கிளர்ச்சியூட்டும் தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் போன்ற ஸ்வாரசியமான விஷயங்களும் நாவல் நெடுக சிதறிக் கிடக்கின்றன. சதாசிவப் பண்டாரத்தின் கதை தவிர எல்லாக் கதைகளிலும் வரும் யாரோ ஒருவருக்கு யாமம் பிடித்தமான அத்தராக இருக்கிறது. பண்டாரத்துக்கும் இந்த நாவலுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன். மனைவி துரோகம் செய்த உண்மை அறிந்து விரக்தியில் அமர்ந்திருக்கும் திருச்சிற்றம்பலம் ஒரு நாய்க்கூட்டத்தைப் பார்த்து அதன் பின்னேயே போய்விடலாமா என்று நினைக்கிறான். இது பண்டாரத்தை நினைவுபடுத்தியது. வேறு ஏதேனும் தத்துவ ரீதியிலான கயிறு எல்லாக் கதாபாத்திரங்களையும் இணைக்கிறதா என்று தெரியவில்லை.

மேலும் வாசிக்க