அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூலை, 2013

தோனி வழி


நேற்றிரவு (அல்லது இன்று அதிகாலை) உறங்கச் செல்லும்போது மணி இரண்டரைக்கும் மேல். இந்திய – மேற்கிந்திய – இலங்கை முத்தரப்பு ஒருநாள் போட்டிகளின் இறுதியாட்டம், இந்தியா, இலங்கைக்கு இடையே. இலங்கை 202 ரன்களில் ஆட்டமிழ்ந்திருந்தாலும், அந்த இலக்கை அடைவது இந்தியாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்று தோன்றியது. ஆடுகளம் ஸ்விங்க் பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்ததும், அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் பந்து நன்றாகச் சுழன்றதும் இந்த ஆட்டம் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிற ஒன்றாக இருக்கப் போகிறதென்று ஊகித்திருந்தேன். மிகுந்த சிரமப்பட்டே இந்தியா இவ்விலக்கை தொட இயலும் என்றும் கணித்திருந்தேன். ஆட்டம் மிகுந்த ஸ்வாரஸ்யமாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் முழு ஆட்டத்தையும் பார்த்துவிடத் துணிந்தேன்.
பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தப்போகிற ஆட்டம் இது என்ற என் ஊகத்தை வழக்கம் போலவே பொய்யாக்கி விட்டார் தோனி. நூற்றி நாற்பது ரன்களுக்கு மேல் விக்கெட்டுகள் சடசடவென சரிய, புவனேஷ் குமார், ப்ரவீன் குமார் மற்றும் இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்டத்தின் கடைசி ஓவரில் தன் அற்புதமான அடிகளால் இலக்கைத் தாண்டினார். நான் முப்பத்தி ஏழாவது ஓவரிலிருந்தே இந்தியா தோற்று விடும் என்ற கணிப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசி ஓவரில் கூட அவர் பதினைந்து ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தைத் தவறவிட்ட அவர் இரண்டாவதில் ஒரு சிக்சர், மூன்றாவதில் ஒரு பவுண்டரி, நான்காவதில் இன்னும் ஒரு சிக்சர் என்று அநாயாசமாக விளாசித் தள்ளி இலங்கையின் கனவைத் தகர்த்தார். அதற்கு முந்தைய பத்து ஓவர்களின் சிங்கிள் கூட எடுப்பது சிரமமாக இருந்தது என்பதை கவனத்தில் கொண்டால் தோனி கடைசி ஓவரில் செய்தது கனவிலும் நடக்க இயலாத ஒரு விஷயம் என்பது புரியும். ஹெரத் பட் பட்டென்று ஒரே ஓவரில் ஜடேஜாவையும், அஸ்வினையும் பெவிலியனுக்குத் திருப்பி விட்டார். அதற்குச் சற்று முன்புதான் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அற்புதமாகச் செலுத்திக் கொண்டிருந்த ராய்னாவும் அவுட்டாகியிருந்தார். ஏழு விக்கெட்டுகள் இழந்த நிலையில் மலிங்காவின் நான்கு ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இந்தியாவுக்கு இருந்தது.
முன்னதாக ரோஹித் சர்மா ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தார். இந்த்த் தொடர் முழுவதுமே அவரது ஆட்டத்தை மிகுந்த உவப்புடன் ரசித்து வந்தேன். அதுவும் இறுதியாட்டத்தில் அவரது ஆட்டம் ஒரு தேர்ந்த கலைஞன் நிதானமாகத் தன் படைப்பை உருவாக்குவதை ஒத்திருந்தது. ஸ்விங்க பந்துக்கு ஏற்றபடி தன் ஆட்டமுறையை அழகாக மாற்றிக் கொண்டு ஆடிய அவரது ஒவ்வொரு ஷாட்களையும் நான் அனுபவித்துப் பார்த்தபடி இருந்தேன். சாம்பியன்ஸ் ட்ராஃபியிலும், இந்தத் தொடரிலும் அவரது ஆட்டம் அவருக்கு அணியில் நிரந்தர இட்த்தைப் பெற்றுத் தரும் என்று நம்பலாம். நான் எதிர்பார்த்து ஒழுங்காக ஆடாமல் போன வீரர் தினேஷ் கார்த்திக். அவர் நன்றாக ஆட வேண்டுமென்று ரகசியமாக என்னுள் ஓர் ஆசை இருந்தது.
தோனி எல்லாவற்றையும் சாதித்து விட்டார். வாங்க வேண்டிய எல்லாக் கோப்பைகளையும் வாங்கிக் குவித்து விட்டார். ஆனாலும் அவர் மீது பல விமர்சனங்கள் உண்டு. நல்ல வீரர்கள் உள்ள அணியில் நல்ல நேரத்தில் கேப்டனாக இருப்பது; தனக்குப் பிடித்தமான வீரர்களுக்கே அணியில் இடம் தருவது; தேவையற்ற பிடிவாதத்துடன் அதிர்ச்சி தரும் முடிவுகளை எடுப்பது போன்றவை. அந்த விமர்சனக் கூட்டத்தில் நானும் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சொல்கிற கூட்ட்த்தில் இருந்தவன் நான். தோனியின் ஆட்டத்தையும், அவர் அணியை உச்சிக்கு அழைத்துச் சென்ற விதத்தையும் நான் ரசித்திருந்தாலும் அவருக்கு நான் பரம ரசிகனாக இதுவரை இருந்ததில்லை. நேற்றுகூட அடிபட்ட நிலையில் எதற்காக அணிக்குள் வந்தார் என்ற சந்தேகக் கேள்வியோடே ஆட்ட்த்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
தோனியின் நேற்றைய ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அதை ச் சொல்லி விளக்கி விட முடியாது. வர்ணனையாளர்கள் கூட தோனி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த போது Unbelievable! என்றார்கள். அந்த ஒரு வார்த்தைதான் அவர் நேற்று ஆடிய ஆட்டத்துக்கு பொருந்தும். நடக்க முடியாத ஒரு காரியத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தோனி. நேற்றிலிருந்து அவரது தீவிர ரசிகனாகி விட்டேன் நான்.
இந்த ஆண்டில் நான் பார்த்த ஒரு நாள் போட்டிகளிலேயே மிகச் சிறந்த போட்டி இது.


27 ஜனவரி, 2013

டாடி எனக்கு ஒரு டவுட்டு!



ஆரம்பத்தில் சுவாரசியமின்றி பார்க்க ஆரம்பித்து இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி ஆதித்யா சானலில் எப்போது ஒளி பரப்பினாலும் வாயைத் திறந்து கொண்டு ஒரு மெல்லிய இளிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
     அப்பா பள்ளி செல்லும் தன் மகனுக்கு உலக விஷயங்களில் ஏதாவதொன்றை விளக்க முயற்சிக்கிறார். பையன் அவரது விளக்கத்திலிருந்து குதர்க்கமாக,சமயங்களில் புத்திசாலித்தனமாகவும் ஏதாவது குறையைக் கண்டுபிடித்து ‘டாடி,எனக்கு ஒரு டவுட் என்று கிறீச்சிட்டபடி அதை விளக்குமாறு கேட்கிறான். அப்பா அவனுக்குப் பதில் சொல்வதறியாது விழிக்கிறார். பையன் அவரைப் பிடித்துக் கொண்டு ‘ சொல்லுங்கள் டாடி,சொல்லுங்கள்,சொல்லுங்கள் டாடி,சொல்லுங்கள், என்று அவரைப் பிடித்துக் கொண்டு நச்சரிக்கிறான்.
     அப்பாவாக நடிப்பவரை விட என்னைக் கவர்ந்தவர் பையனாக நடிப்பவர்தான். அவரது கீச்சுக்குரல் முதலில் செயற்கையானதாகத் தெரிந்தாலும், பழகப் பழக ஒரு சிறுவனின் குரலாகவே அதை அடையாளம் காண முடிந்தது. அவரது உடல் மொழியும் அமர்க்களம். சிறுவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு காட்சித் துண்டாக இது திகழும் என்றே நான் நினைக்கிறேன். அடுத்த முறை என் தங்கை மகன்களைச் சந்திக்கும் போது இந்த நிகழ்ச்சி பற்றி அவர்களிடம் கேட்க வேண்டும்.
     இந்த நிகழ்ச்சி ஏன் எனக்குப் பிடித்துப் போயிற்று என்று யோசித்தேன். பிரதானமாக அந்தப் பையன் அடிக்கும் லூட்டிதான் காரணம் என்றாலும், பெரிய நகைச்சுவை உணர்வற்ற இந்த நிகழ்வை ஒருவித மதிப்புடன் நான் கண்டு வருவதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.
     இது போன்று தந்தையுடன் (அல்லது தாயுடன்) தனியே அமர்ந்து, நடந்தபடி சாவதானமாக நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இப்போதெல்லாம் எத்தனை குழந்தைகளுக்கு வாய்க்கும்? அர்த்தமற்ற உரையாடல்களின் மூலம் தனக்குள் தோன்றும் சின்னச்சின்னக் கேள்விகளுக்கு உடனடி பதில் தரும் ஒருவர் இருக்கிறார் என்ற பெருமிதம் கொண்ட சிறுவர்கள் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்? என் பாலபருவத்தில் பெரும்பனமையான காலம் என் தாத்தா, பாட்டியுடன்தான் கழிந்தது. என் பெற்றோர்களுடன் நான் பதினைந்து வயதிற்கு மேல்தான் வாழ ஆரம்பித்தேன். சிறுவயதில் என் தாத்தாவுடன் காய்கறிச் சந்தைக்கும், கடைவீதிகளும் அவர் கையைப் பிடித்துக் கொண்டு அலைந்தது நினைவுக்கு வருகிறது. என் தாத்தாவின் அனுபவத்திற்கு அவர் பல்வேறு துறைகளிலிருந்தும் நிகழ்வுகளை எடுத்து அலசியபடி நடப்பார். எம்.ஜி.ஆரையும், இந்திரா காந்தியையும் விதந்து ஓதுவார். கருணாநிதியை அவருக்கு பிடிக்காது. வைவார். (என் அப்பா பரம தி.மு.க). அந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களையும்,வீட்டு உறுப்பினர்களின் ஜாதக சாதகங்களையும் எடுத்துரைப்பார். மீன் வறுக்கும் விதம், வெண்டைக்காய் பொறியல் செய்யும் முறை, பல்வகை உணவுகளை மென்று தின்னும் விதம் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைப்பார். நான் எல்லாவற்றையும் வியந்து கேட்டபடி நடந்து வருவேன். என் மண்டைக்குள் ஊறிய ஆயிரமாயிரம் கேள்விகளில் ஒன்றிரண்டைத்தான் அவரிடம் கேட்டிருப்பேன். அக்கேள்விகள் பலமுறை முட்டாள்தனமாகவே இருந்ததுண்டு. ஒருமுறை மகாத்மா காந்தி நாலாவது வரைதானே படித்திருக்கிறார் என்று வினவி அவரது கோபப்பார்வையைப் பெற்றுக் கொண்டேன். தமிழ்நாட்டில் எல்லாரும் தமிழ்தானே பேசுகிறார்கள். பின் எதற்காக எல்லாரையும் ஆங்கிலம் படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று ஒரு முறை கேட்டேன். அந்த ஆண்டு அரையாண்டு தேர்வில் ஆங்கிலத்தில் நான் பெற்ற பதினைந்து மதிப்பெண்களும் அந்தக் கேள்விக்கு ஒரு காரணம்.
தொலைக்காட்சிச் சானல்களோ,இணையமோ இல்லாத காலத்தில் வானொலி, பத்திரிகைகளை அடுத்து தாத்தா உலக ஞானம் தரும் கருவியாக இருந்தார். என் தந்தையிடம் நான் உரையாட ஆரம்பித்த்து என் பதினைந்து வயதிற்குப் பிறகுதான். எனவே சிறுவனுக்குரிய கள்ளமற்ற தன்மை மறைந்து, எனக்கு அவரை விட அதிகமாகவும், வேகமாகவும் அறிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தால் அவரையும், அவரது கருத்துக்களையும் பெரும்பாலும் புறக்கணித்தே வந்திருக்கிறேன். சிறுவயதில் தந்தையின் இடத்தில் தாத்தாதான் இருந்திக்கிறார்.
இப்போது சிறுவர்களின் நேரத்தைப் பெரும்பாலும் தொலைக்காட்சியே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவ்வாண்டு விடுமுறைக்குச் சென்றிருந்தபோது என் தம்பியின் நான்கு வயது மகன் நாள் முழுதும் சோட்டா பீம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். பெற்றோர்களுக்கும் குழந்தைகள் இவ்வாறு அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது வசதிதான். கால்களின் சக்கரம் கட்டிக் கொண்டு, தங்கள் செல்லக் குழந்தைக்காக செல்வம் சேர்க்க ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு அவர்களுடன் நிதானமாக அமர்ந்து வெற்று உரையாடலில் ஈடுபடுவதற்கு நேரமில்லை. மூளையிலிருந்து பரபரப்புணர்வைக் களைந்துவிட்டு அவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் உரையாடவும்,தொடர்பு கொள்ளவும் முயற்சி செய்வதே அவர்களது உலகத்தில் பிரவேசிப்பதற்கான முதல் முயற்சியாகும். குழந்தைகளைப் போலாகாமல் என்னுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க இயலாது என்று சொன்ன தேவகுமாரனின் வார்த்தைகளை இங்கு நாம் நினைவுகூர வேண்டும்

மேலும் வாசிக்க