மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி இரண்டு: கானல் வெள்ளி

பகுதி இரண்டு: கானல் வெள்ளி

  1. விதுரன் அரசு அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறான். எந்தத் திறமையும் தேவைப்படாத இதில் தான் ஏன் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறான். திருதராஷ்டிரன் அழைப்பதாக விப்ரன் வந்து சொல்கிறான். பீஷ்மர் தன்னை வந்து காணாததால் சினந்திருக்கிறான் என்றார். திருத மேகராகம் சூதர்கள் இசைக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறான். முன்னமர்ந்த விதுரனுக்கு இசை குறித்து எண்ணங்கள் ஓடுகிறது. குழல் வாசித்த விழியிழந்த சூதருக்கு பொன்னும், பெண்ணும் பரிசளிக்கிறான் த்ருத. பின் விதுரனிட பீஷ்மர் குறித்து சினக்கிறான். அது குறித்து ஆளனுப்பியிருக்கிறேன் என்றான் விதுரன். திருத உண்ண அமர்கிறான். மலைபோல் உண்கிறான். அம்பிகை வருகிறாள். தன் மகன் முடிசூட்டுவது பற்றி பேரரசி என்ன முடிவெடுத்தாள் என்றாள். காந்தாரத்து இளவரசியை மணம் முடிப்பது பற்றிப் பேசினர் என்றான் விதுரன். குலம் தாழ்ந்தவர்களை மணக்க மாட்டேன் என்றான் திருத. அவர்களிடம் சம்பந்தம் பேசுவதில் உள்ள திட்டத்தை எடுத்துரைத்தான் விதுரன். அப்போது விப்ரன் வந்து பீஷ்மர் வந்து அரசனை ஆயுதசாலைக்கு வந்து சந்திக்கச் சொல்கிறான். திருத சினங்கொண்டு எழுகிறான். அவரை கைது செய்யச் சொல்கிறான். விதுரன் பிதாமகரைக் கைது செய்தால் பழி வரும். அதற்கு பதில் அவரை துவந்த யுத்தத்துக்கு அழையுங்கள். மல்யுத்தத்தைத் தேர்வு செய்யுங்கள். மர்க்கடஹஸ்தி மார்க்கத்தின் படி அவரை வென்றால் அனைவரும் உங்களை மன்னனாக ஏற்பர் என்றான் விதுரன்.

  2. யானைக்கொட்டிலில் மற்போருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யானைகள் அணிவகுத்து ஊசலாடி நின்றன. பீஷ்மர் வந்தது வரவேற்று ஒலி எழுப்பின. பீஷ்மர் ஒரு யானையின் தந்தத்தில் ஊசலாடினான். பின் விதுரன் திருதராஷ்டிரனை அழைத்து வந்தான். பலாஹஸ்வ முனிவர் வந்தார். அவர்தான் நடுவர். பாரதவர்ஷத்தின் மிகச்சிறந்த மற்போர் வீரர். பெருத்த உடல் கொண்டவர். பால்ஹிகரிடம் விளயாட்டுச் சண்டை போட்டதை நினைவு கூறுகிறார். மற்போர் துவங்க எளிதில் வெல்கிறார் பீஷ்மர். திருதராஷ்டிரனைக் கொல்லாமல் விடுகிறார். அவன் கற்பாளத்தால் தன்னை அறைந்து சாக முயல்கிறான். முனிவர் தடுத்து உடல் அறிவின் ஆயுதம். இன்று நீ சிலவற்றைக் கற்றிருப்பாய் என்றார்.

  3. திருதராஷ்டிரனை அழைத்துக் கொண்டு விதுரன் அம்பிகையிடம் செல்கிறான். அவள் விதுரனைச் சினக்கிறாள். பின் விதுரன் அம்பாலிகை அழைக்க, சென்று சந்திக்கிறான். அவள் திருதராஷ்டிரனுக்கு காயம் பலமா என்று ஆர்வத்துடன் கேட்கிறாள். அவளுக்கு பாண்டு மன்னனாக வேண்டும். அதற்கான வழிகளை தன் அறியாமையை வெளிப்படுத்திக் கேட்கிறாள். அம்பிகையிடம் விரோத பாவம் கொண்டிருக்கிறாள். வெலிவரும் விதுரன் லிகிதரையும், சோமரையும் சந்திக்கிறான். நிதி குறைவது பற்றிப் பேச்சு போகிறது. க்ஷத்ரிய அரசுகள் வலுபெற்று வருகின்றன. ஜனபதங்களை அதிகரித்தாலொழிய செல்வத்தைக் குவிக்க முடியாது. அதற்கு போர் தான் ஒரே வழி என்றனர் இருவரும். வணிகத்தின் மூலம் பொருள் குவிக்க முடியாதா என்றான் விதுரன். இப்போதுள்ள வணிகமே முன்னோர் நிகழ்த்திய போர்களால் வந்ததுதான் என்றனர். போர் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் உரையாடல் செல்கிறது. நாடுகளை வென்று கையகப்படுத்தினால் ஒழிய பொருள் குவிக்க வேறு வழியில்லை. அதற்கு காந்தாரத்தின் உதவியை நாடுவதில் தவறில்லை என்றனர் சோமரும், லிகிதரும்.

  4. விதுரன் காலையில் எழுந்ததும் கவிதை படிப்பான். அதன் ஒரு சொல்லை ஆப்தமந்திரமாகக் கொண்டு இயற்கையைப் பார்ப்பான். அன்று வியாசனின் சுகவிலாசம் அவனுக்கு அணுக்கமாக இருந்தது. தந்தையின் உணர்வுகளை அதில் காட்டியிருந்தார். அதில் ரதிவிஹாரி என்ற சொல்லோடு இருந்தான். காமத்தோடு விளையாடுபவன். காமம் குறித்து அவன் நினைவுகள் ஓடுகின்றன. பின் தேரேறி கோட்டைக் காவலைப் பார்வையிடச் செல்கிறான். நேற்று போர் பற்றி பேசியது. கோட்டையின் மேலேறிப்பார்க்கிறான். அஸ்தினாபுர நகரின் அமைப்பும், மக்கள் குடியிருப்பும் வர்ணிக்கப்படுகின்றன. வீரர்கள் மூத்தவர்களாக இருக்கிறார்கள். ஆய்தங்கள் துருப்பிடித்திருக்கின்றன. கைவிடுபடைகள் குறித்துக் கேட்கிறான். பின் இறங்குகையில் அம்பிகை அழைப்பதாகச் செய்தி வருகிறது. அவள் மிகுந்த சினத்துடன் பீஷ்மர் காந்தாரம் சென்று பெண் கேட்கப் போகாமல் பலபத்ரரை அனுப்புகிறார். அவருக்கு இதில் விருப்பமில்லை. என் மகன் நாடாள நான் சகுனியுடன் உடன்படிக்கை செய்து அஸ்தியை சமந்த நாடாக்கிக் கப்பம் கட்டவும் தயார். அதற்காக பீஷ்மர், சத்யவதி இருவரையும் சிறையில் தள்ளவும் தயார் என்றாள். 

  5. விதுரன் தார்த்தனை ஆதுர சாலையில் சந்திக்கிறான். பீஷ்மர் என்னை எளிதில் வெல்வார் என்று உனக்குத் தெரியும்தானே என்று அவன் சினக்கிறான். விதுரன் ஆம், ஆனால் பீஷ்மர் 18 வருடங்களாக இங்கில்லாததால் யாரும் அவரை அறியவில்லை. இம்மற்போரின் மூலம் அவரை மக்கள் இப்போது அறிவர். மேலும் உங்களை வென்றதால் அவரே அரசர். ஆனால் விரதம் பூண்டவர். அவரே உங்களுக்கு அரசாட்சியைத் தர முடியும் என்றான். தார்த்தன் எழுந்து கைகளை அறைந்து அவரிடம் தோற்றேன். என் பெரும் உடலால் என்ன பயன்? இப்போதே என்னைக் கொல்லச்சொல் என்றான். அங்கு வந்த அம்பிகையை, பேயே உன்னால்தான் இப்படி ஆனேன். கிட்டே வராதே உன்னையும் கொல்லுவேன் என்றான். கொல் பார்க்கலாம், உன்னை பெற்றதால்தான் நான் இப்படி ஆனேன் என்று அவள் முன் வந்து நின்றாள். அவன் நிலையறியாது தடுமாரி அமர்ந்தான். அவள் அவனை அணைத்து அழுதாள். அவனும் தன் கரங்களால் அவளைத் தீண்டி அழுதான். விதுரன் இதைப் பார்த்து மெய்மறந்து நின்றான். பின் வெளிவருகையில் அம்பிகை சொன்னாள். நேற்று நான் உன்னைச் சினந்த போது தார்த்தன் சொன்னான், என் தம்பி சொன்னால் நான் சாகவும் தயார் என்று. அவன் உன்னைச் சினந்து நீ பார்த்திருக்கிறாயா? என்று. இல்லை என்றான் விதுரன் வியப்போடு. பின் விதுரன் வெளிவருகையில் சூதர்கள் போரின் வருகையை எண்ணிப் பாடிக்கொண்டிருந்தனர்.

  6. விதுரன் பீஷ்மரை ஆயுதசாலையில் சென்று சந்திக்கிறான். பீஷ்மருக்குக் காந்தாரத்தில் பெண்ணெடுப்பது பிடிக்கவில்லை. சூத்திரகுலத்தில் பெண்ணெடுத்தால் சூத்திர தேசங்களுடைய ஆதரவு கிடைக்குமென்று நம்புகிறார். விதுரன் சூத்திர தேசங்களுடன் கூட்டு வைத்தால் க்ஷத்ரிய அரசுகளை எதிர்க்க நேரிடும் என்றான். பீஷ்மர் தேவபாலபுரத்தோடு தொழிற்கூட்டு வைக்கலாம் என்றார். இருவரும் விவாதத்தை நீட்டிக் கொண்டே செல்கின்றனர். திருதராஷ்டிரன் வருகிறான். நேரே வந்து பீஷ்மர் காலில் விழுந்து தன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான். விதுரன் வெளியேறுகையில் காந்தாரத்துக்கு பீஷ்மரே செல்வதாக செய்தி அனுப்பி விடலாமா என்றான். அவரும் சரி என்றபடி திருதராஷ்டிரனுக்கு அப்போதே தன் பாடங்களைத் துவக்கினார்.

 

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை