அயல் சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அயல் சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 அக்டோபர், 2010

கிம் கி டுக் தரும் ஜென் அனுபவம்

தென் கொரிய இயக்குனரான கிம் கி டுக்கின் spring, summer,fall,winter ….and spring படம் முற்றிலும் புதிய காண்பனுபவத்தை வழங்கிய ஒரு திரைப்படம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அவற்றின் நடுவே உள்ள ஏரி ஒன்றில் மிதந்தபடி நிற்கிற ஓர் பௌத்த ஆசிரமத்தில் பிறந்து வளரும் ஓர் இளம் துறவியும் அவனை வளர்க்கும் குருவும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். குழந்தைப் பருவத்திலேயே அந்த இளம் துறவிக்குள் முகிழ்த்து வளரும் அகங்காரம், தன்னையே முன்னிலைப் படுத்தி, தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அவன் செய்யும் செயல்கள் மூலம் அறியப்படுகிறது.
ஏரியில் உலவும் தவளை, பாம்பு, மீன் போன்ற சின்ன உயிர்களின் உடலில் கயிற்றைக் கட்டி அவற்றை நீரில் விடுகிறான். அவை துடிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து மகிழ்கிறான்.(சிறுவனாயிருக்கும் போதுதான்). குரு இவன் செய்கைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இரவில் உறங்கும் போது அவன் முதுகில் பெரிய கல் ஒன்றைக் கட்டி விடுகிறார். காலையில் கல்லை அவிழ்க்கச் சொல்லிக் கேட்கும் அவனிடம், நீ போய் அந்த உயிரினங்களை விடுவித்து விட்டு வா. அதுவரை நீ கல்லைச் சுமந்து கொண்டுதானிருக்க வேண்டும். அவற்றில் ஏதாவதொன்று இறந்தாலோ, அந்தச் சுமை நீ இறக்கும் வரை உன் மனதில் தங்கி விடும் என்கிறார். (பால் மணம் மாறாத பச்சிளம்) சிறுவன் கல்லைச் சிரமத்தோடு சுமந்தபடி ஏரிக்குச் சென்று தவளையை விடுவிக்கிறான். மீனும் பாம்பும் இறந்து விடுகின்றன. குழந்தை குமுறிக் குமுறி அழுகிறான்.
இந்த முழு நிகழ்வுமே ஒரு அழகான ஸென் கதை சொல்லப்படுவதைப் போல கவித்துவத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. சொல்முறையில் இவ்வளவு எளிமையைக் கைக்கொண்டு ஓர் அடர்ந்த விஷயத்தை நிகழ்த்திக் காட்டமுடியும் என்று படத்தின் ஒவ்வொரு காட்சியுமே நிரூபிக்கிறது.  
கிம் காட்சிகளை மிகவும் நிதானமாகக் காட்டுகிறார். ஆஸ்ரமத்திலிருந்து ஏரிக்கரைக்கு யாரோ ஒருவரைச் சுமந்து கொண்டு போவதும், வருவதுமாக  இருக்கிறது படகு. ஏரி நடுவில் மிதக்கும் ஆஸ்ரமம் பல கோணங்களில் காட்டப்படுவதும், மாறும் காலநிலைகளில் ஏரியும், மலைகளும், ஆஸ்ரமமும் பல்வேறு ரூபங்கள் எடுத்து அழகு காட்டுவதும் மனதை வருடிக் கொண்டே இருக்கின்றன. பல காட்சிகளில் அருவியில் நீர் விழும் சப்தமும், துடுப்பு வலிக்கப்படும் ஓசையும், காற்றில் சருகுகள் புரளும் ஓசையுமே நிறைந்து படம் முழுக்க நிலவும் அமைதியை அடர்த்தியாக்குகின்றன. துறவிகளுக்கோ, அவர்களைச் சந்திக்க வரும் மனிதர்களுக்கோ உரையாடல் ஒரு அவசியமற்ற ஆடம்பரமாகவே படுகிறது போலும். பெரும்பாலும் எல்லாமே மவுனமாகவே நிகழ்கின்றன.
வசந்தம், இலையுதிர் காலம், குளிர்காலம் மூன்றும் தொடர்ந்து வருகின்றன. இளம் துறவியின் வாழ்விலும் எதிர்பாராத மாற்றங்கள். காமத்தின் வேட்கை அவனை வீழ்த்தி விடுகிறது. ஆசிரமத்துக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் ஒரு இளம்பெண்ணால் ஈர்க்கப்பட்டு அவள் மீது மோகம் கொள்கிறான். இருவரும் குரு அறியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இயற்கை தன் வேலையைக் காட்டி விடுகிறது. இருவரும் ரகசியத் தொடர்பும் குருவுக்குத் தெரிய வருகிறது. அவர் முன் விழுந்து மன்னிப்புக் கேட்கிறான் இளந்துறவி. பொருட்கள் மீது கொள்ளும் காமம் அவற்றைக் கைப்பற்றத் தூண்டும்; பிறகு அதுவே கொலையும் செய்யத் தூண்டும் என்று அவனை எச்சரிக்கிறார் குரு. அந்தப் பெண்ணைப் பார்த்து உடல் குணமாகி விட்டதா என்று கேட்கிறார். அவள் ஆமாம் என்று சொல்ல, அப்போ இதுதான் உனக்குத் தேவையான மருந்து என்று கூறி அவளைத் திருப்பி அனுப்பி விடுகிறார் குரு. இளந்துறவியால் அவள் பிரிவைத் தாங்க முடியவில்லை. குரு உறங்கும் நேரம் ஆசிரமத்தை விட்டுக் கிளம்பி விடுகிறான். (அங்குள்ள புத்தர் சிலையையும் எடுத்துக்கொண்டு).
அவன் உயிர்களைத் துன்புறுத்தியபோதோ, அவனது கள்ள உறவு பற்றி அறிந்தபோதோ எந்தச் சலனமுமின்றி நிகழ்வுகளை ஒரு சாட்சியாகவே பார்த்துக் கொண்டிருக்கும் குரு, தான் வளர்த்த துறவி தன்னை விட்டுப் பிரிந்த போதும் அப்படியே இருக்கிறார். புத்தர் சிலை இருந்த இடத்துக்குப் பின்னாலுள்ள புத்தரின் ஓவியத்துக்குத் தன் தினசரி வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு, ஆசிரமத்தைப் பெருக்கித் தூய்மை செய்து கொண்டும், படகில் ஏரிக்கரை சென்று மூலிகைளைச் சேகரித்துக் கொண்டுமிருக்கிறார். பருவம் மாறி இலையுதிர்காலம் வருகிறது. செய்தித்தாள் துண்டொன்றில் தன்னை விட்டுச் சென்றவன் மனைவியைக் கொலை செய்து விட்டுத் தலைமறைவாகி விட்ட செய்தியைப் படிக்கிறார். உடனே அவன் வருகையை எதிர்பார்த்து ஆயத்தங்களைச் செய்கிறான். அவனும் வந்து சேருகிறான். கோபமும், வெறியும் கொண்ட இளைஞனாக. புத்தர் சிலையும் திரும்பி வந்து விடுகிறது. நீ தேடிச் சென்ற வாழ்வு உனக்கு விருப்பப்பட்ட மாதிரி இருந்ததா என்று கேட்கிறார் குரு. இளைஞன் கொதிக்கிறான். ஆசிரமத்துக்குள் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான். குரு அவனை கட்டையால் மரண அடி அடித்து கட்டித் தொங்க விட்டு விடுகிறார். தொங்க விட்ட கயிற்றை தீபம் சுட்டு கீழே விழும் வரை தொங்குகிறான். குரு ஆசிரமத்துக்கு வெளியில் மரத்தரை முழுக்க புத்தரின் சூத்திரம் ஒன்றை தீட்டிக் கொண்டிருக்கிறார். இளைஞனின் வெறி இன்னமும் தீராததால் அவனைப் பார்த்து இந்தச் சூத்திரத்தின் எழுத்துக்கள் அனைத்தையும் கத்தியால் கீறி எடு என்கிறார். இளைஞன் அடிபணிகிறான். அதற்குள் காவல் துறை தேடி வருகிறது. இளைஞன் அவன் மீது பாயப்போக, என்ன செய்கிறாய்? பேசாமல் எழுத்துக்களைக் கீறு என்கிறார் குரு. அவனும் தன் வேலையைத் தொடர, காவலர்கள் விடியும் வரை காத்திருந்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் சென்றவுடன் குரு தன்னை மாய்த்துக் கொள்கிறார். அவனை வளர்த்த விதத்தில் தோல்வியடைந்து விட்டோம் என்பதால் தற்கொலை செய்து கொள்கிறாரா அல்லது இனியும் தன் வாழ்வை நீட்டிப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதால் அப்படிச் செய்தாரா என்று தெரியவில்லை.
குளிர்காலம் துவங்குகிறது. இளைஞன் இப்போது மத்திம வயதினனாகத் திரும்பி வருகிறான். மனமும் கனிந்திருக்கிறது. குரு வாழ்ந்த வாழ்க்கை முறையைத் தானும் தொடர்கிறான். முகத்தை மூடியபடி ஒரு பெண் குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு அங்கு வருகிறாள். அவள் யாரென்று முகத்திரை விலக்கி அறிய முற்படும்போது, அவள் தடுத்து விடுகிறாள். அவன் கையை மென்மையாகப் பற்றும்போது அவள் அவனிடம் ஏதோ சொல்ல நினைப்பதைப் போலவே இருக்கிறது. குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் செல்கிறாள். செல்லும் வழியில் இறக்கிறாள். துறவி அவள் திரையை விலக்கி முகம் பார்க்கிறான். யார் அது? மன்னிக்கவும், எனக்குத் தெரியவில்லை. குழந்தை அவனிடமே வளர்கிறது.
குளிர்காலம் முடிந்து வசந்தம் மீண்டும் வருகிறது. குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பிஞ்சு மனசுக்குள்ளும்  வன்மம் தலையெடுக்க ஆரம்பிக்கிறது. சிக்கல் நிறைந்த நிகழ்வுகள் கொண்ட ஒரு கதையை கிம் கி டுக் எளிமையாகவும், அழகாகவும், ஒரே நேர்கோட்டிலும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். வழக்கமான முறையில் எடுக்கப்படும் படம் பார்த்துப் பழகியவர்களுக்கு இப்படம் முதல் பார்வையில் ஒரு இனிமையான அதிர்ச்சி தரும். மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும். மீண்டும் பார்க்கையில் பல நுட்பமான அம்சங்கள் புரியவரும்.

30 செப்டம்பர், 2010

அகிராவின் ராஷோமோன்

லேகா அவர்கள் யாழிசை ஓர் இலக்கியப்பயணத்தில் பரிந்துரை செய்த அகிரா குரோசாவாவின் ராஷோமோன் திரைப்படம் பார்த்தேன். நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்திருப்பதே இந்தச் சிலமாதங்களில் வலைத்தளங்களின் தொடர்பு ஏற்பட்ட பின்புதான். ஐம்பதுகளில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு கொலையை மையமாக வைத்துக் கொண்டு, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது மனித மனம் கொள்ளும் திரிபுகளை விவரிக்கிறது.
படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு புத்தபிட்சுவும், இன்னொருவனும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறைந்துபோன முகங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். வெளியே அடை மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையின் தீவிரம் அவர்கள் இருவர் மனதிலும் தாக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் தாக்கத்தைக் குறிப்பதாகப் படுகிறது. அங்கு அவர்களைச் சந்திக்கும் ஒரு வழிப்போக்கனிடம் இருவரும் தாங்கள் சாட்சியமளித்த ஓர் விசித்திரக் கொலை வழக்கைப் பற்றிச் சொல்கிறார்கள்.
கதை முழுவதும் சொல்ல ஆயாசமாக இருக்கிறது. ஒரு கொள்ளைக்காரன் காட்டுக்குள் வரும் ஒரு தம்பதியரை வழிமறித்து, மனைவியைக் கற்பழித்து விடுகிறான். கணவன் இறக்கிறான். அவன் யாரால் கொல்லப்பட்டான் என்று, பிடிபட்ட கொள்ளைக்காரன், தப்பிய மனைவி ஒவ்வொருவர் தரப்பு சாட்சியமும் காட்சிகளாக விரிகின்றது. இறந்த கணவனின் ஆவி கூட ஒரு மீடியத்தின் உதவியுடன் சாட்சி சொல்கிறது. இந்தக் கதைகளை வழிப்போக்கனிடம் பகிர்ந்து கொள்ளும், கொலையுண்ட உடலை முதலில் பார்த்தவன் அவை அனைத்தும் பொய் என்று சொல்லி தன் தரப்புக் கதையே உண்மை என்று இறுதியில் சொல்கிறான்.
அகிரா கதையில் பலவிஷயங்களை ஆராய்ந்திருக்கிறார். பெண் என்ற ஒரு பலவீனமான உயிரினம் ஆண்களின் பார்வைக்கு ஒரு போகப் பொருளாகவும், மோகம் தீர்ந்ததும் வீசி எரியப்படுகிற குப்பை இலையாகவுமே பார்க்கப்படுவதை நன்கு பதிவு செய்துள்ளார். இரண்டு ஆண்கள் உன்னை அனுபவித்திருக்கிறோமே, நீ ஏன் உன்னைக் கொன்று கொள்ளக் கூடாது என்கிறான் கணவன். கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகள் இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடுகின்றன. நான்கு கோணங்களில் சொல்லப்பட்ட கதைகளிலும் பெண் சுகிக்கப்படுக்கிறாள்; வீசி எறியப்படுகிறாள்; புறக்கணிக்கப்படுகிறாள். தன் குதிரையை இழப்பதை விட அவளை இழப்பதே மேல் என்கிறான் கணவன். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவளை இழக்கத் தயாராகிறான்.
பெண்ணின் நிலையற்ற மனதும் கோடி காட்டப்பட்டுள்ளது. கொள்ளைக்காரனோடு செல்லத் தயாராகி விடுகிறாள் அவள். அதற்கு அவன் தன் கணவனைக் கொல்ல வேண்டும் என்கிறாள். இருவரும் பொருதிக்கொள்ளும் காட்சியில், மகாவீரன் என்று மார்தட்டிக்கொள்ளும் கொள்ளைக்காரனின் கரங்கள் உயிர்ப்பயத்தால் நடுங்குகின்றன. இருவருமே தங்கள் உயிர் போய்விடுமோ என்ற நடுக்கத்துடனேயே சண்டையிடுவது வித்தியாசமான காட்சி.
முதல் மூன்று கதைகளிலுமேயே பொய்கள் இருக்கின்றன. தங்களை உத்தமராகக் காட்டிக் கொள்ளத் தங்களைக் கொலைகாரர் என்று சொல்லிக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். பொய்மை மனிதர்களின் இயல்பான குணமாகி விட்டது. மனிதன் தனக்குத்தானே பொய் சொல்லவும் பழகி விட்டான். சமயங்களில் அவன் சொல்வது உண்மையா, பொய்யா என்று அவனாலேயே பிரித்துச் சொல்ல முடியவில்லை என்பன போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. நாமும் இப்படித்தானே எங்கோ நடந்த துர்ச்சம்பவங்களைப் பற்றி உரையாடும் போது தத்துவ விவாதத்தில் இறங்கி விடுகிறோம். எந்த ஒரு மோசமான நிகழ்வும் மனிதனின் அடிப்படையான தன்மைகளின், ஒழுக்க நெறிகளின் அலசலுக்கு வழி வகுத்து விடுகிறது. நேர்மையையும், ஒழுக்கத்தையும் நம்மைத் தவிர்த்து எல்லாரிடமும் எதிர்பார்க்கிறோம். மனிதனின் மேலுள்ள நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. உலகம் நரகம் போலவே மாறி வருகிறது. கதையின் நான்காவது கோணத்தைச் சொல்லுபவன் தான் சொல்லும் கோணமே உண்மை என்கிறான். தான் காவல் துறையிடம் சிக்கிக் கொள்ளக் கூடாதென்பதற்காகவே அதை நீதிமன்றத்தில் சொல்லவில்லை என்கிறான். அவன் சொல்வது உண்மைக்கதையா, இல்லையா என்று நாம்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டபின் மண்டபத்தின் உள்ளிருந்து கைவிடப்பட்ட குழந்தையொன்றின் அழுகுரல் கேட்கிறது. அந்தக் குழந்தையோடு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கிமோனோவை வழிப்போக்கன் எடுத்துக்கொள்கிறான். மற்றவன் அவனைத் தடுக்க மனிதாபிமானத்தோடு நடந்து கொள், இது அந்தக் குழந்தையைக் கண்டெடுப்பவர்களுக்கு உதவும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது எனும்போது, குழந்தையைக் கைவிட்ட அந்தப் பெற்றோர் மனிதாபிமானத்தொடு நடந்து கொண்டார்களா? கொலை நடந்த இடத்திலிருந்து அந்தப் பெண்ணின் விலையுயர்ந்த குறுவாளைத் திருடினாயே நீ மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டாயா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான் வழிப்போக்கன். இவன் மௌனமாக நிற்கிறான். மனிதத்தில் நம்பிக்கை இழக்க மறுக்கும் புத்த பிட்சு குழந்தையை எடுத்துக்கொண்டு நடக்க இவன் கை நீட்டுகிறான். போய்விடு, பிடுங்குவதற்கு இன்னும் ஏதாவது இருக்குமா என்று பார்க்கிறாயா? என்கிறான் புத்தபிட்சு வெறுப்போடு. இவன் கண்ணீருடன் எனக்கு ஆறு குழந்தைகள், இது சேர்வதால் எனக்கு ஒரு பெரிய வேறுபாடும் ஏற்படப்போவதில்லை என்று குழந்தையைக் கேட்கிறான். மனிதம் இன்னும் சாகவில்லை என்று மகிழும் பிட்சு கண்ணீரோடு அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு குழந்தையைத் தருகிறான். எத்தனையோ புதிர்கள் நிறைந்த மனித உள்ளத்தில் தவறுகள் புரிவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சிகள் உறுத்தி அவர்களை நல்வழிப்படுத்துகிறது என்றெண்ணலாம் போலத் தோன்றுகிறது.

23 மே, 2010

ஹர்ட் லாக்கர் - கொடிய கரங்கள் நெறிக்கும் குரல்வளைகள்



விபத்துகளும்,தீவிரவாதமும், வன்முறையும் அத்துமீறலும் தொலைக்காட்சியின் அன்றாடச் செய்திகளாகி நம்முடனேயே பயணித்துக் கொண்டிருப்பதால் அவற்றின் உண்மையான தாக்கம் பெரும்பாலான நேரங்களில் நம்முள் நிகழ்வதில்லை. சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், புகைமண்டலத்துக்கிடையில் ஒலிக்கும் அலறல்களையும் பாராமல், கேளாமல் எந்தச் சலனமுமின்றி சானல் மாற்றி கிரிக்கெட்டுக்கோ, நெடுந்தொடருக்கோ தாவி விடுகிறோம். மங்களூரு விமான நிலையத்தில் விமானம் பள்ளத்தாக்கில் விழுந்து எரிந்துபோன செய்தியைக் கேட்டவுடன் திடுக்கென்றிருந்தது. வருடாவருடம் நானும், என் மனைவியும் பங்களூரு புதிய விமானநிலையம் சென்று இறங்கி அங்கிருந்து ஈரோடு பயணிப்போம். விமான நிலையத்தில் சாப்பிட்ட வடையும், பொங்கலும், சாண்ட்விச்சும் இன்னும் ஞாபகம் இருக்கிறது. துபாயிலிருந்து பணி முடித்துத் திரும்பியவர்களும், அவர்கள் குழந்தைகளும், மனைவியரும், அவர்களை ஏந்திவந்த விமானிகளும், பணியாளர்களும் கணநேரத்தில் பொசுங்கிப் போய்விட்டதை நினைத்து நெஞ்சு கனக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் கனத்த நெஞ்சுடன் கண்ணீர் அஞ்சலி. உயிர் பிழைத்த சிலர் உடலளவிலும், மனதளவிலும் பெரும் காயங்கள் ஏதுமின்றி விரைவில் குணமடைந்து சகஜ வாழ்விற்குத் திரும்ப இறையைப் பிரார்த்திக்கிறேன்.

மேற்கத்திய நாடுகளில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவது தடைசெய்யப்படுவதைக் காண்கிறோம். சமீபத்தில் இந்தியாவில் இருந்து கிளம்பவேண்டிய விமானங்கள் கூட ரத்து செய்யப்பட்டன. லைலாப் புயலின் தீவிரத்தில் மழை ஆவேசமாய் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் தரையிறங்குவதற்குத் தகுதியான சூழ்நிலையில் விமான நிலயம் உள்ளதா என்று நிர்ணயம் செய்வதில் கவனக் குறைவு ஏற்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. ஊரே வெள்ளத்தில் மிதந்தாலும் சமாளித்துவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கையோடு வெளியே கிளம்பும் சராசரி இந்தியனைப் போலவே இந்திய விமானத்துறையும் இருந்து விட்டதா என்று தோன்றுகிறது.

கனமழை பெய்யவில்லை; விமானத்தில் பழுது இல்லை.; விமானி பல ஆயிரம் மணிகள் பறந்தவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். விமானதளத்தின் ரன்வே தரைமட்டத்திலிருந்து உயரத்தில் அமைந்துள்ளது. ரன்வே முடியும் இடத்தில் சட்டென்று ஒரு பள்ளத்தாக்கு அரம்பிப்பதாகவும், approaching speed சரியாக இல்லாததால் பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இப்போதுதான் கருப்புப்பெட்டி சிக்கியிருக்கிறது. விபத்துக்கான காரணங்கள் இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் தவிர்க்க ஆவண செய்தால் நன்று.

உயிரின் மதிப்பு இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவின் பல நாடுகளில் சட்டை செய்யப்படுவதில்லை. பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் பயங்கரவாதமும், வன்கொடுமைகளும் நம் முகத்தில் மாறிமாறி அறைந்துகொண்டேதான் இருக்கின்றன. எவ்வளவு வாங்கினாலும் நமக்குச் சொரணை வர வாய்ப்பில்லை. அந்த ரத்தபூமிகளில் போய், இடைவிடாது வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கும் உடல்களுக்கு நடுவே நின்று பார்த்தால்தான் அந்த வலி புரியும்.
2009ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் பெற்ற ஹர்ட் லாக்கர் நமக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது. வெறிச்சோடிக்கிடக்கும் ஈராக் தெருக்கள்; அமைதியில் உறைந்து, மெல்ல,மெல்ல சிதைந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள், அவற்றுக்குள்ளிருந்து வெளியே அமெரிக்க வீரர்கள் நடத்திக்கொண்டிருக்கும் விளையாட்டை வேடிக்கை பார்க்கும் குழந்தைகளின் கண்கள்; எங்கு வேண்டுமானாலும் புதைக்கப்பட்டிருக்கும் சாத்தியம் கொண்ட குண்டுகள்; நெருப்பு, ரத்தம் என்று படம் முழுக்க தீவிரவாதத்தின் கரங்கள் வரைந்த கோலங்கள்.

ஒரு புதைகுண்டைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியில் தோற்று உயிர்விடும் வெடிகுண்டு நிபுணரோடு படம் ஆரம்பிக்கிறது. அவருக்குப் பதிலாக ஈராக்கில் அமெரிக்க ராணுவக் குழுவில் வெடிகுண்டு நிபுணராக ஜேம்ஸ் வந்து சேருகிறான். உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சல் நிறைந்தவன். அந்த பூமியில் எல்லாருமே அப்படித்தான் என்றாலும் இவனுக்குச் சாவோடு விளையாடுவது ரொம்பப் பிடித்திருக்கிறது. அபாயகரமான விஷயங்களை அநாயசமகச் செய்து முடிக்கிறான். கண்ணுக்குத் தெரியாத இடங்களில் புதைத்து வைக்கப் பட்டிருக்கும் குண்டுகளைக் கண்டறிவதும், அவற்றைச் செயலிழக்கச் செய்வதுமே அவனது வேலை.

படம் நெடுக வெயில் அனலாக வீசிக்கொண்டே இருக்கிறது. புழுதி பறந்து கொண்டே இருக்கிறது. எங்கு நோக்கினும் மணல். ஜேம்ஸ் குண்டுகளைச் செயலிகச் செய்கையில் நிகழும் மௌனம் நம்மைப் பதைக்க வைக்கிறது. ஆனால் அந்நகர மக்கள் மட்டும் வீடுகளுக்குள்ளிருந்து வெகு இயல்பாக எட்டிப் பார்க்கிறார்கள். துப்பாக்கிகளுக்கோ, டாங்கர்களுக்கோ அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.. ஜேம்ஸ் போர்ன் டிவிடி விற்கும் சிறுவனுடன் நட்பாகி விளையாடும்போதே பின்னால் இந்தப் பையன் கோரமாகச் சாகப்போகிறான். என்று தெரிந்து விடுகிறது. ஆனால் அப்படிப் பார்த்தால் படத்தில் வரும் எல்லாருக்குமே அது பொருந்தும். ஒரு இடிந்த கட்டிடத்துக்குள் அந்தப் பையன் வயிற்றைப் பிளந்து உள்ளே குண்டு வைத்திருக்கிறார்கள். ஜேம்ஸ் அவனை எடுத்துவந்து உரிய முறையில் அடக்கம் செய்கிறான்.

படத்தின் இசையை மார்கொ பெல்ட்ராமியும், பக் சாண்டர்ஸும் இணைந்து அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் மௌனமும், குண்டுச் சத்தமும், டாங்கர் வண்டிகளின் ஓசையுமே இசையாக இருக்கின்றது. நீண்ட தூரம் தாக்கும் துப்பாக்கிகளைக் கொண்டு பாலைவனம் ஒன்றில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் காட்சி அமைப்பும், இசையும் நேர்த்தி. பல ஆயிரம் அடிகளுக்கு அப்பாலுள்ள ஒரு சிறிய கட்டிடத்திலிருந்து சுடும் மூன்று பேரை இங்கிருந்து தாக்குகிறார்கள். சண்டை பலமணிநேரம் நடக்கிறது. வெயில் சுட்டெரிக்கிறது. உடலின் நீர் அளவு குறைந்து ஜேம்ஸின் குழுத்தலைவன் மயங்குகிறான். இருப்பினும் கை துப்பாக்கியிலிருந்து விலகுவதில்லை. மீண்டும், மீண்டும் சுதாரித்துக் கொண்டு குறிபார்க்கிறான். மேலும் தோட்டா தேவை என்ற நிலையில் ஒரு வீரன் இறந்த கூட்டாளியின் சட்டைப்பையிலிருந்து தோட்டாக்களை எடுத்து அதில் படிந்திருக்கும் ரத்தத்தை நக்கி சுத்தம் செய்து கொடுக்கிறான்.

இன்னொரு காட்சியில் ஒரு அப்பாவி மனிதன் உடலெங்கும் ஜெலட்டின் குச்சிகள் கட்டப்பட்டு நடுத்தெருவில் விடப்படுகிறான். உடலைச் சுற்றி வளையங்கள் மாட்டி பெரிய பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. டைம்பாம் வெடிப்பதற்குள் ஜேம்ஸ் பூட்டுகளை அறுத்து அவனைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். முடியவில்லை. சில செகண்டுகளே இருக்கும் நிலையில் என்னை மன்னித்துவிடு என்று அவனிடம் கெஞ்சுகிறான். அங்கிருந்து அனைவரும் ஓடிவிட, அந்த மனிதன் வான் நோக்கித் தலையுயர்த்தி இறைவனை வணங்குகிறான். ஒரு மைக்ரோ விநாடி அமைதிக்குப் பின்………………………… வெடித்துச் சிதறுகிறான்.


மார்க் போல் எழுதி ஜேம்ஸ் காமரூனின் மனைவி கேத்ரின் பிகெலோ இயக்கியுள்ள இந்தப் படம் தீவிரவாதத்தின் கொடிய கரங்கள் யுத்தபூமிகளின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருப்பதை அப்படியே பதிவு செய்திருக்கிறது. டெல்டா கம்பெனியின் சுழற்சி முடிந்து ஜேம்ஸ் நாடு திரும்புகிறான். தன் குழந்தையைக் கொஞ்சுகிறான்; வீட்டைச் சுத்தம் செய்கிறான். சில நாட்களிலேயே அடுத்த சுழற்சி ஆரம்பிக்கிறது. இன்னொரு யுத்தபூமியில் வெடிகுண்டு கவச உடையை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். பயங்கரவாதமும், அதற்கெதிரான போராட்டமும் முடிவற்ற தொடர்கதையாகவே இருக்கின்றது.

மேலும் வாசிக்க