Posts

Showing posts from 2021

மெல்லிய நூல் சிறுகதை - ஆங்கில மொழியாக்கம்

  எழுத்தாளர் ஜெயமோகனின் மெல்லிய நூல் சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தேன். அது இந்தியன் பீரியாடிகல் இதழில் வெளியானது. அக்கதை குறித்து திரு.ஆஸ்டின் சௌந்தர் ஜெயமோகனுக்கு எழுதியுள்ள கடிதம் கீழே. அன்புள்ள   ஜெயமோகன்   அவர்களுக்கு ,   நலம் .   பள்ளிப் பாடப்புத்தகங்களில் கட்டுரைவடிவில் இருக்கும் விபரங்கள்தான் காந்தியைப்பற்றிய பொதுவான அறிவு. அவர்களுக்கு, காலப்போக்கில், காந்தி என்றால், சுதந்திரம், அஹிம்சை, உப்புச்சத்யாகிரஹம் என்று வெறும் வார்த்தைகளாக மட்டும் நின்றுவிடுகிறது. வரலாற்றை புனைவு போல சொல்லக்கேட்டு, காந்தியைப் பற்றி ஆறாம்/ஏழாம் வகுப்பிலேயே ஆழமான விஷயங்களை கற்றுக்கொண்ட அதிர்ஷடசாலி நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்.     என்னதான், தட்டினால்,தேடியது கிடைக்கிறது கூகுளில் என்றாலும், ஆள்மனதில் நின்று சிந்தனையைத் தூண்டி விடுவது புனைவுகளும், அதைச் சுவைபடச் சொல்லும் புனைவு ஆசிரியர்களும்தான். A Fine Thread

அவள்இவள் - கவிதை பதாகை இதழில்

 என் கவிதை நிழலாட்டம் அல்லது அவள்இவள் பதாகை இலக்கிய இதழில் வெளியாகி உள்ளது.   அவள்இவள் ஜெகதீஷ் குமார் எட்டு விரல்களையும் படுக்கையாகக் கிடத்தி இரு கட்டை விரல்களாலும் ஒத்திக் கொண்டிருக்கிறாள் தொடுதிரையை மேலும் வாசிக்க

அசைவும், பெருக்கும் - புதிய சிறுகதை: வல்லினம் இதழில்

Image
  எனது சிறுகதை அசைவும், பெருக்கும் வல்லினம் நவம்பர் இதழில் வெளியாகியுள்ளது. இக்கதையை வெளியிட்ட வல்லினம் குழுவினருக்கு நன்றி. தவறான இடத்தை வந்தடைத்திருக்கிறோமோ என்ற ஐயம் மனத்தை நெருட, வெளிப்படும் சொற்கள் அதைக்காட்டிவிடுமோ என்ற தயக்கத்தில் அமைதியாக நின்றிருந்தான் கௌதம். “எத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய்?” என்றார் எதிரிலிருந்தவர். “இரண்டு ஆண்டுகளாக… ஆனால் பயிற்சியை விட்டுவிட்டுத்தான் செய்ய முடிந்தது. சில சமயம் மூன்று மாதங்கள்கூட இடைவெளி எடுத்ததுண்டு. ஆனால் எவ்வளவு தொடர்ந்து செய்தும் பலன் என்று எதையும் அனுபவிக்கவில்லை.” “பலன் என்று எதை எதிர்பார்க்கிறாய்?” மேலும் வாசிக்க அசைவும், பெருக்கும் - சிறுகதை

ஜெ எழுதிய பேசாதவர்கள் சிறுகதை குறித்து

Image
 புகைப்படம்: அனுஷா ஜெகதீஷ்குமார். அன்புள்ள ஜெ, பேசாதவர்கள் வாசித்தேன். சுயராஜ்யம் கிடைத்தபின், இருட்டறைகளுக்குள் சென்றுவிட்ட திருவிதாங்கூரின் ஆயிரமாண்டுகால வரலாற்றை அவற்றில் புதைந்து கிடக்கும் புராதனப் பொருட்களிலிருந்து கோத்து எடுத்துக் கொண்டு, அவற்றைக் கலையாக்குவதன் மூலம் மெல்ல மெல்ல ஒரு இணை வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல விழைகிறேன். உப பாண்டவத்தின் முன்னுரையில் எஸ்.ரா குறிப்பிட்டிருப்பார். அஸ்தினாபுரத்துக் குழிகளில் கிடைத்த குதிரைகளின் எலும்புகளிலிருந்து, அதன் வரலாற்றை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று. இந்த வல்லமை கலைஞனுக்கு மட்டுமே சாத்தியம். உங்களது இன்னொரு சிறுகதையான கணக்கு -ல் வரும் மரப்பலாக்காயையும், பணப்பலகையையும் நினைத்துக் கொள்கிறேன். இக்கதையில் தூக்குப் பூட்டு. ஒரு சின்ன பொருள். அது தூண்டும் நினைவுகள். அவற்றிலிருந்து விரியும் கலை. காணும் ஒவ்வொரு பொருளும் இப்படித்தான் எழுத்தாளனைக் கலைக்குத் தூண்டிக் கொண்டே இருக்குமா? ஜெயிலின் ஸ்டோர் அறைக்குள் சென்று மீளும்போது கனவுக்குள் சென்று திரும்பி வந்ததைப் போலிருக்கும் என்கிறார் தாத்தா. நீங்களும் அந்த ஸ்டோர் அறைக்க

ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் நித்தியம் சிறுகதையை முன்வைத்து.

Image
  பொதுவாக வரலாறு என்பது ஆண்டவர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்களின் போர் வெற்றிகள், தோல்விகள், அவர்கள் செய்த சீர்திருத்தங்கள் இவைகளின் தொகுப்புகளாகத்தான் நம்மை வந்தடைகின்றது. வரலாற்றுக்காலங்களில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாடப் போராட்டம் குறித்தோ, அரசர்களைச் சுற்றி வாழ்ந்து அவருக்குப் பணியாற்றி, அவர் பொருட்டு வாழ்ந்து, சுவடின்றி மறையும் எளிய ஆத்மாக்களைப் பற்றி அறியவோ கலையே நமக்கு உதவுகிறது. வரலாற்றைக் களமாகக் கொண்ட நாவல்களும், சிறுகதைகளும் எனக்கு எப்போதுமே உவப்பானவை. கல்கி, சாண்டில்யன் போல, வீர சாகசங்களை, கேளிக்கை அம்சங்களையும் விவரித்து நம் புலன்களைச் சாமரம் வீசுகிற படைப்புகளன்று. குர் அதுல் ஹைதரின் அக்னி நதி போன்று வரலாற்றினூடாகத் தத்துவ விசாரம் மேற்கொள்ளும் படைப்புகள், சிக்கவீர ராஜேந்திரன் போன்று அலகிலா அதிகாரம் கொண்ட அரசபதவியின் அபத்தங்களை விவரித்து அகங்காரத்தின் அர்த்தமற்ற தன்மையை நிறுவும் படைப்புகள் போன்றவையே என் வாசிப்பு மனதுக்கு அணுக்கமானவை. அண்மையில் ஜெயமோகன் தந்த படைப்புகளான யட்சன், கந்தர்வன் மற்றும் குமரித்துறைவி போன்ற படைப்புகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து ஒரு சிறு நிகழ்வை

முதற்கனல் - வாசிப்பு

முதற்கனல் - வாசிப்பு ஜெ தளத்தில் அன்புள்ள ஜெ, நீண்ட ஆண்டுகளுக்குப் பின் கடிதம். பீமனின் குறுக்காக விழுந்த வாலைப்போல் வெண்முரசு விழுந்து கிடந்தது. தினமும் உங்கள் தளத்தில் மேய்ந்தாலும் கட்டுரைகளை மட்டுமே (இலக்கிய, ஆன்மிக) வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.வெண்முரசை வாசிக்காமல் உங்களுக்கு கடிதம் எழுத எனக்குத் தகுதியில்லை என்று எண்ணியிருந்தேன். அதை வாசிக்காததனாலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா பற்றி தங்கள் தளத்தில் கடிதம் கண்டும் சேரலாமா என்ற தயக்கம் இருந்தது. தயக்கத்தை மீறி சௌந்தர் அண்ணாவுக்கு மின்னஞ்சல் அனுப்பி வட்டத்தில் இணைந்தவுடன் புரிந்தது. இதில் சேர்வதன் மூலமே வெண்முரசை என்னால் வாசித்து முடிக்கக் கூடிய ஊக்கத்தைப் பெற இயலும் என்று.வசந்த காலத்தைத் தாண்டும் துடிப்பே அதை வசந்தமாக்கி விடும் என்று நீங்கள் சொல்வதைப் போல. சேர்ந்து விட்டேன். இம்மாதம் 20ம் தேதி முதற்கனல் கலந்துரையாடல் இருந்தது. ஐந்து நாட்களில் முதற்கனலை இரண்டாம் முறையாக வாசித்து (ஏற்கனவே நீலம் வரை வாசித்து விட்டிருந்தேன்.) அதற்கு அத்தியாயக் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன். இக்குறிப்புகள் வாசித்தபின் என் மனைவி அனு

ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் மோட்சம் சிறுகதை குறித்து

மோட்சம் - கடிதம் ஜெ தளத்தில்   அன்புள்ள   ஜெ , தாங்கள் பகிர்ந்த ஜி . எஸ் . எஸ் . வி . நவீனின் மோட்சம் சிறுகதையை வல்லினத்தில் வாசித்தேன் . மிகவும் காத்திரமான , வாசிப்பில் வலியின்பம் தரும் கதை . பொதிகைமலை விளிம்புகளில் குடிகள் அமைந்த நிலமென்பதே நானறியாத வெளி . அதன் சேரிகள் , மனிதர்கள் , தெய்வங்கள் ( சொற்கேளா வீரன் , குருந்துடையார் அய்யனார் , சூட்சமுடையார் சாஸ்தா ) அனைத்துமே ஒரு கனவுத்தன்மையைக் கூட்டின . உயிர் காக்கும் மருத்துவரையும் காறி உமிழ்ந்து கடந்து செல்லும் மனிதர்கள் நம் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பன போன்ற சாதிய அடக்குமுறை சார்ந்த கொடுமைகளின் ஆலாபனையுடன் கதைக்குள் நுழைந்தேன் . இது கழுவேற்றம் பற்றிய கதை என்று ஆசிரியர் இரண்டாவது வரியிலேயே உறுதி அளித்து விடுகிறார் .  கழுவேற்றத்துக்கான அத்தனைத் தயாரிப்புகளையும் , கழுவேற்ற நிகழ்வையும் கூடத் துல்லியமாகவும் , பீபத்ஸ சுவையுடனும் விவரித்து கிலி ஏற்படுத்துகிறார் . கதைகளின் வழியே மட்டும் கேட்டிருந்த கழு நிஜத்தில் நிகழ்கையில் அது அங்கிருந்தவர்களிடம் ஒரு க