ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூலை, 2021

ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் நித்தியம் சிறுகதையை முன்வைத்து.



 

பொதுவாக வரலாறு என்பது ஆண்டவர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்களின் போர் வெற்றிகள், தோல்விகள், அவர்கள் செய்த சீர்திருத்தங்கள் இவைகளின் தொகுப்புகளாகத்தான் நம்மை வந்தடைகின்றது. வரலாற்றுக்காலங்களில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாடப் போராட்டம் குறித்தோ, அரசர்களைச் சுற்றி வாழ்ந்து அவருக்குப் பணியாற்றி, அவர் பொருட்டு வாழ்ந்து, சுவடின்றி மறையும் எளிய ஆத்மாக்களைப் பற்றி அறியவோ கலையே நமக்கு உதவுகிறது. வரலாற்றைக் களமாகக் கொண்ட நாவல்களும், சிறுகதைகளும் எனக்கு எப்போதுமே உவப்பானவை. கல்கி, சாண்டில்யன் போல, வீர சாகசங்களை, கேளிக்கை அம்சங்களையும் விவரித்து நம் புலன்களைச் சாமரம் வீசுகிற படைப்புகளன்று. குர் அதுல் ஹைதரின் அக்னி நதி போன்று வரலாற்றினூடாகத் தத்துவ விசாரம் மேற்கொள்ளும் படைப்புகள், சிக்கவீர ராஜேந்திரன் போன்று அலகிலா அதிகாரம் கொண்ட அரசபதவியின் அபத்தங்களை விவரித்து அகங்காரத்தின் அர்த்தமற்ற தன்மையை நிறுவும் படைப்புகள் போன்றவையே என் வாசிப்பு மனதுக்கு அணுக்கமானவை. அண்மையில் ஜெயமோகன் தந்த படைப்புகளான யட்சன், கந்தர்வன் மற்றும் குமரித்துறைவி போன்ற படைப்புகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து ஒரு சிறு நிகழ்வை உருவி அதைக் கலையாக உருமாற்றம் செய்து காட்டின. அவ்வரிசையிலேயே ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் நித்தியம் கதையை வைக்கத் தோன்றுகிறது.நான் வாசிக்கும் நவீனின் இரண்டாவது கதை இது. அவரது மோட்சம் கதையை வாசித்து மிகவும் வியந்தேன். ஒரு திரைப்படைப்பாளியின் நுணுக்கத்தோடும், லாவகத்தோடும் அக்கதையைப் படைத்திருந்தார். அதனால் அவரது நித்தியம் கதையை, தகவல் தெரிந்த உடனேயே மிகுந்த ஆவலோடு வாசிக்க ஆரம்பித்தேன். மீண்டும் ஓர் அழகான, நேர்த்தியான, கலையமைதி குலையாத படைப்பு நவீனிடமிருந்து.

“காதல் எத்தனை அபத்தமான சொல்!” என்ற ஃபாதர் மார்ட்டின் ஆற்றாமையே கதையின் அடிநாதம். (உடனே எனக்கு, “மனிதன் எத்தனை மகத்தான சல்லிப்பயல்” நினைவுக்கு வந்தது. யார் சொன்னது இது? ஜி. நாகராஜனா?) அவரது பார்வையில் கதை விரிகிறது. ராம்நாட்டின் விஜயரகுநாதரின் காலம். அவருக்குப் பதவியளித்த கிழவர் சேதுபதி மரணமுற, அவரது நாற்பத்தியேழு மனைவியரும் (உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை.) அவரோடு உடன்கட்டை ஏறவேண்டும். எண் நாற்பத்து ஏழு சுப்புலட்சுமி சிறுபிராயத்தவள். அவளுக்குச் சாக விருப்பமில்லை. ஃபாதர் மார்ட்டினின் மெய்க்காவலன் இயான் பிரிட்டோவைக் கூட்டிக் கொண்டு ஓடிவிடுகிறாள். இறுதியில் அதிகாரமே வெல்கிறது. 

எவ்வளவு எளிய கதை! ஒரு திரைப்படத்தின் துணுக்குக் காட்சி என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் நவீன் நுண்தகவல்களால் கதையை நம்பகத்தன்மையுடையதாகவும், சுவாரசியமாகவும் மாற்றி விடுகிறார். தன் எழுத்தின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை அளப்பறியது என்பது இரண்டாம் முறையாக எனக்கு நிரூபணமாகிறது. தகவல்களின் குவியலாகக் கதையை மாற்றி விடாமல், கதைக்குத் தேவையான தகவல்களை மட்டுமே அளிக்கிறார். சிதையை நோக்கி சுப்பு லட்சுமி பதைப்புடன் பார்த்தபடி நிற்கும் காட்சி அற்புதம். விழிநீரும் உமிழ்நீரும் கலந்து வடிகின்றன. எந்த எழுத்தாளனும் அச்சிறு பெண்ணின் அழகைக் குறிப்பிடுவதற்குச் சபலப்பட்டிருப்பான். நவீன் அவளது பதைப்பை மட்டுமே பதிவு செய்கிறார். பிரிட்டோவின் பதற்றம் நிறைந்த, கண் மூடிய பிரார்த்தனைகள், விஜய ரகுநாதரின் இரக்கமற்ற நெஞ்சு, ஃபாதர் மார்ட்டினின் துடிப்பு அத்தனையும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நவீனின் பாதையை ஒருவாறு அணுமானிக்க முடிகிறது. அவர் தமிழ் வரலாற்றின் பக்கங்களைக் கலையாக்கும் ஆர்வம் கொண்டுள்ளார் என்று எண்ணுகிறேன். அதைச் செய்து காட்டும் திறனும், வல்லமையும் கொண்ட எழுத்தாளர்தான் அவர். அவர் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்க ஆர்வம் கொண்டுள்ளேன்.

நவீன் கதைகளின் தலைப்புகள் (மோட்சம், நித்தியம், - பிற கதைகளை நான் இன்னும் வாசிக்கவில்லை.) ஆர்வமூட்டுவன. சமஸ்கிருதத் தலைப்புகள், ஆனால் தமிழ்ப்படுத்தப்பட்டவை. அதனாலேயே அவற்றுக்கு ஒரு கிராமத்து எளிமை வாய்த்து விடுகிறது. தலைப்பு தேர்ந்தெடுப்பதிலும் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்று தெரிகிறது.

இது ஒரு வாசகக்குறிப்பு மட்டுமே. நான் விமர்சகன் அல்லன். நீளமாக எழுதியிருப்பதால் எந்த விதத்திலும், எழுத்தாளனுக்கு மேல் நின்றுகொண்டு, எதிர்பார்ப்புகளை அவன் மேல் சுமத்தும் இடத்தில் என்னை வைக்க விரும்பவில்லை. ஆனாலும் என் வாசிப்பு அனுபவத்தை எழுதும்போது, எனக்குத் தோன்றும் அனைத்தையும் பதிவு செய்து விடுவது (எனக்கு) உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

குறைகள்? உண்டு. என் பார்வையில் பட்ட குறைகளைச் சொல்கிறேன். முதலாவது சாதாரணமானது. எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள். ஒரு நாலைந்து இடத்திலாவது என் கண்ணில் பட்டன. ஆங்கிலத்தில் இப்படி நாம் எழுதி விட முடியாது. இது ஒரு சிறு குறைதான். இருந்தாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. அடுத்து நடை. எனக்குச் சற்றே, ரொம்பவும் சற்றே ஜெ நடை தெரிந்தது. இது என் பிரமையாகக் கூட இருக்கலாம். துவக்க எழுத்தாளர்கள் இன்னொரு எழுத்தாளர் நடையில் எழுதுவது பிழையில்லை. ஆனால் நவீனை நான் துவக்க எழுத்தாளராக நினைக்கவில்லை. அடுத்து நான் சொல்ல நினைப்பது, நிறைய எழுத்தாளரிடம் நான் காண்பது. நான் கதை எழுதும் போது எனக்கும் வருவது. தவிர்க்க நினைத்தும் இயலாதது. Didactic என்பார்கள். கதை நிகழ்வுகளினூடாக, அந்நிகழ்வை முன்னிறுத்தி ஏதேனும் ஒரு தத்துவத்தை முன்வைப்பது. இதை ஆசிரியர் நேரடியாகவோ, அல்லது ஒரு கதை மாந்தரின் வாயிலாகவோ செய்து விடுவது. வி.சி.காண்டேகரின் நாவல்களை நினைவு கொள்ளுங்கள். அடிக்கோடிட்ட வரிகளால் நிரம்பியவை அவரது நாவல்கள். ஹெமிங்க்வே, கார்வர் போன்றவர்கள் நிகழ்வுகள் குறித்து எந்த விமர்சனமும் செய்வதில்லை. வெறுமனே நிகழ்வுகளை விவரித்தபடியே செல்கின்றனர். தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி போன்றோரிடத்து இந்த தத்துவமாக்கல் அம்சத்தைக் காணமுடியுமெனினும், அவர்களது நாவல்களே பெரும் தத்துவ விசாரணைக் களங்கள். அப்படிப்பட்ட படைப்புகள் தத்துவமாக்குதலை நிகழ்த்தும் போது எந்த விலகலும் வருவதில்லை. காட்சிபூர்வமாகக் கடத்தப்படும் தேவை கொண்ட கதைகளில் தத்துவமாக்கல் சற்று உறுத்தலாகத் தெரிகின்றது. நவீன் ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் அதைச் செய்திருக்கிறார். அது உறுத்தலாகக் கூட இல்லை. ஆனால், நான் முன்னரே குறிப்பிட்ட என் சித்தாந்தத்தின் படி, இதையும் குறிப்பிட விரும்பினேன்.

இக்கதையை வாசித்ததும்,  நவீனுக்கு இந்தப் பின்புலத்தில் ஒரு நாவல் எழுதும் திட்டம் உண்டா என்று நினைக்கத் தோன்றியது. எழுதினால் நன்றாக இருக்கும். நவீனின் அடுத்தடுத்த படைப்புகளை வாசிக்க மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

நித்தியம் சிறுகதையை வாசிக்க

 


16 மே, 2021

ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் மோட்சம் சிறுகதை குறித்து

மோட்சம் - கடிதம் ஜெ தளத்தில் 

அன்புள்ள ஜெ,

தாங்கள் பகிர்ந்த ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் மோட்சம் சிறுகதையை வல்லினத்தில் வாசித்தேன். மிகவும் காத்திரமான, வாசிப்பில் வலியின்பம் தரும் கதை. பொதிகைமலை விளிம்புகளில் குடிகள் அமைந்த நிலமென்பதே நானறியாத வெளி. அதன் சேரிகள், மனிதர்கள், தெய்வங்கள் (சொற்கேளா வீரன், குருந்துடையார் அய்யனார், சூட்சமுடையார் சாஸ்தா) அனைத்துமே ஒரு கனவுத்தன்மையைக் கூட்டின. உயிர் காக்கும் மருத்துவரையும் காறி உமிழ்ந்து கடந்து செல்லும் மனிதர்கள் நம் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பன போன்ற சாதிய அடக்குமுறை சார்ந்த கொடுமைகளின் ஆலாபனையுடன் கதைக்குள் நுழைந்தேன். இது கழுவேற்றம் பற்றிய கதை என்று ஆசிரியர் இரண்டாவது வரியிலேயே உறுதி அளித்து விடுகிறார்கழுவேற்றத்துக்கான அத்தனைத் தயாரிப்புகளையும் , கழுவேற்ற நிகழ்வையும் கூடத் துல்லியமாகவும், பீபத்ஸ சுவையுடனும் விவரித்து கிலி ஏற்படுத்துகிறார். கதைகளின் வழியே மட்டும் கேட்டிருந்த கழு நிஜத்தில் நிகழ்கையில் அது அங்கிருந்தவர்களிடம் ஒரு கொண்டாட்ட மனநிலையையே உருவாக்குகிறதென்பதைக் காண்கிறோம். ஒவ்வொருவரும் அதன் தயாரிப்பு குறித்து எழுச்சியுற்ற மனநிலையில் விவரிக்கிறார்கள்

கதைசொல்லியின் நண்பனான கழுவேற்றப்படும் மாரனுக்கு ஏன் அந்தப் பெயர் என்று ஒருவர் பின்னூட்டத்தில் விளக்கியதை வாசித்து வியந்தேன். பின்னர் வருகிறது கணியான் கூத்து கர்ணமோட்சம். இதுவும் நானறியாத கதையே. என் கருத்தில், ஒரு நல்ல படைப்பில், அதில் வரும் நிகழ்வுகள், எந்தப் புற விளக்கமுமின்றியே வாசகனிடத்துத் தம்மை நிறுவிக்கொள்ளும் ஆற்றல் மிக்கவை. இக்கதையிலும் அவ்வண்ணமே நிகழ்ந்திருக்கிறது. கர்ணமோட்சத்து துரியன்பொன்னுருவிகர்ணன் கதையை எந்தப் பின்புல உதவியுமின்றியே அனுபவித்து மகிழ்ந்தேன். பொன்னுருவி என்ற பெயரே உணர்வுகளைக் கிளறுகிறது. கணியாங்குளம் முத்தம்பெருமாளின் பாடல்கள் மட்டுமின்றி, கர்ணன், பொன்னுருவி, துரியன் உரையாடலையும் ஆசிரியர் எழுதியிருந்த விதம் அவர் எழுத்துத் திறனின் தேர்ச்சிக்கான சான்று. அந்நிகழ்வுகளை வாசிக்கையில் ஒரு கணம் அவை உரைநடை என்ற அடையாளத்தை இழந்து ஒரு கிராமத்துக் கிழவியின் சொற்களின் இசை இழைந்து கேட்கும் கதை போல மாறி விடுகிறது.   

நீ தொட்டால் நான் தீட்டாவேன். உன் கைபட்டால் நான் தீயிற்கே இரையாவேன். உன்னோடு ஒரு சொல்லும் இனி எனக்கில்லை. என் பெயரைச் சொல்லும் அருகதைக்கூட குலமிலியே உனக்கில்லை.”

மாரனின் மாறாப்புன்னகை நம்மையும், கதைசொல்லியையும் என்னவோ செய்கிறதுஇரு இணைகோடுகளாகப் பயனித்த கர்ணமோட்சத்துக் கதையும், மாரனின் கதையும் பின் மெல்ல மெல்ல இடைவெளி குறைந்து உச்சம் அடைந்து இணைகின்றன.

கதையை நான் மிகவும் வியந்தேன். இதுவே நான் வாசிக்கும் நவீனின் முதல் கதை. தனித்த நடை. அணிகளற்ற, அதே நேரம் நம்பிக்கை மிகுந்த கதை சொல்லல். சிறுகதையின் நுட்பங்களை லாவகமாகக் கையாளும் திறன். உரையாடல் எங்கு அமைக்க வேண்டும் என்ற தெளிவு. முடிவின் திருப்பத்தை திடீரென்று இல்லாமல், மெல்ல, மெல்ல அவிழ்த்து கண்முன் உருள விடும் வல்லமை. எல்லாம் இணைந்து இவரை கவனிக்கத்தகுந்த எழுத்தாளராக்குகிறது. நிறைய எழுதியிருக்கிறார். இவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வல்லினத்தில் இவர் படைப்புகளைத் தேடியபோது, அவர் உங்கள் நூறு சிறுகதைகளைப் பற்றி எழுதிய நீண்ட கட்டுரையையும் வாசித்தேன். உங்கள் நூறுகதைகளுக்குள் நுழையும் வாயிலாக அவை இருக்கும்.

ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்

எதற்கு இவ்வளவு நீளமான இனிஷியல் என்பதைத் தவிர நவீனிடம் குறைபட்டுக்கொள்ள ஒன்றுமில்லை

 

அன்புடன்

ஜெகதீஷ் குமார்.


மேலும் வாசிக்க