அ. முத்துலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ. முத்துலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஆகஸ்ட், 2026

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையிலிருந்து ஒரு நூல்



எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் வழியாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அ.முத்துலிங்கம் அவர்களின் ஐந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. எகேலுவின் கதை, தீர்வு, புதுப்பெண்டாட்டி, இலையுதிர்காலம், ஆதிப்பண்பு ஆகிய கதைகள் அவை. இந்த ஐந்து கதைகளும் சென்ற 2023-2024 காலகட்டத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்க இலக்கிய இதழ்களான ஸ்பில்வோர்டு பிரஸ், டிஃபங்க்ட், கான்சிக்வென்ஸ் ஆகியவற்றிலும் மற்றும் பிரிட்டிஷ் இலக்கிய இதழான இம்ப்ஸ்பையர்டு இதழிலும் வெளிவந்தன. இவற்றில் கான்சிக்வென்ஸ் இதழ் போரின் கொடுங்கரங்களால் நசுக்கப்படும் மக்களின் கதைகளைப் பதிப்பிக்கும் இதழாக வெளிவந்தது. அதில் அ. முத்துலிங்கம் அவர்களின் “புதுப்பெண்டாட்டி” கதை வந்தது.

பொதுவாக அமெரிக்க, ஆங்கில இலக்கிய இதழ்களுக்குக் கதையோ, மொழிபெயர்ப்பையோ அனுப்பினால் அது பிரசுரத்துக்குத் தகுதியாக உள்ளதா, இல்லையா என்பதை அறிவிக்கவே நாலிலிருந்து ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள். என்னுடைய கதைகளுக்கும், நான் மொழிபெயர்த்த பல கதைகளுக்கும் அவை வெளிவருவதற்கு நான் மாதக்கணக்கில் காத்துக்கொண்டிருந்திருக்கிறேன். ஒரே நேரத்தில் பல்வேறு இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பியிருக்கிறேன். ஒரு இதழ் நிராகரித்தால் இன்னொன்று அதை வெளியிட்டுவிடாதா என்ற எதிர்பார்ப்புதான். “சப்மிட்டபிள்” என்ற இணையப்பக்கத்தின் வழியாக எண்ணற்ற இதழ்களுக்கு நம் படைப்புகளை அனுப்ப முடியும். என்னுடைய பக்கத்தில் பார்க்கும்போது படைப்புகள் நிராகரிக்கப்பட்டதன் எண்ணிக்கை குறைந்தது ஐம்பது முறையாவது வரும். ஒவ்வொருமுறை நிராகரிக்கப்படும்போதும் படைப்புகளை மெருகேற்றுவது குறித்து எதையாவது கற்றுக்கொண்டேயிருப்பேன். புனைவெழுத்திலும் சரி, மொழியாக்கத்திலும் சரி. 



அ. முத்துலிங்கம் அவர்களின் கதைகளை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பிய எந்த இதழும் இதுவரை ஒருமுறைகூட நிராகரித்ததில்லை என்பதை இப்போது உணரும்போது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவருடைய சிறுகதைகள் வெவ்வேறு களங்களையும், ஆவலூட்டும் கதைமாந்தர்களையும், ஒரு நல்ல சிறுகதைக்குரிய இலக்கணத்தையும் கொண்டவை. அவருடைய எந்தக்கதையை வாசித்தாலும் அது நினைவில் நெடுங்காலம் நிற்கும். இன்னொருவருக்கு அந்தக்கதையை அழகாகச் சொல்லிவிட முடியும். மெல்லிய பகடி எல்லாக் கதைகளிலும் இழைந்தோடும். பலகதைகளை அவர் எழுதியே சில பத்தாண்டுகள் இருக்கும். ஆனால் அவற்றை ஆங்கிலத்தில் வெளியிடும் இதழ்கள் அக்கதைகளின் புதுமையாலும், அவற்றின் தனித்துவமான இலக்கிய அழகியலாலும் கவரப்பட்டும்தான் அவற்றை உடனடியாகப் பதிப்பித்திருக்கின்றன என்றே எண்ணத்தோன்றுகிறது.

2023 ல் நான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதைகளை தொடர்ந்து மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். அவற்றில் சில அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாயின. அவற்றை வாசித்துவிட்டு அ.மு அய்யா அவரே என்னை அலைபேசியில் அழைத்தார். ஜெ கதைகளின் இலக்கியச்சுவையை குன்றாமல் குறையாமல் நான் ஆங்கிலத்திலும் கொண்டு வந்திருப்பதாகப் பாராட்டினார். சொற்றொடர்களை இணைத்தும், பிரித்தும் ஆங்கிலத்தில் உருவாக்க நான் எடுத்துக்கொண்டிருந்த சுதந்திரத்தை அவர் பாராட்டியதும்தான் எனக்கே என்னுடைய மொழிபெயர்ப்பு முறை மீது மிகுந்த நம்பிக்கை வந்தது. புனைவெழுத்துக்குச் செல்வதற்கு முன்னால் ஒரு பாலமாகத்தான் நான் மொழியாக்கப் பணியைக் கைக்கொண்டிருந்தேன். ஆனால் “என் சில கதைகளை உன்னால் மொழிபெயர்க்க இயலுமா?” என்று அவர் கேட்டுக்கொண்டபோது மறுக்க இயலவில்லை. 

அ.மு அய்யா தன் கதைகளின் மொழிபெயர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்துபவர். நான் ஒவ்வொரு கதையையும் மொழிபெயர்த்து அவருக்கு அனுப்புவேன். அவர் அதை வரிக்கு வரி வாசித்து விட்டு எந்தெந்த இடங்கள் நன்றாக வந்துள்ளன, எங்கெல்லாம் திருத்தங்கள் தேவை என்று அறிவுறுத்துவார். அது மட்டுமல்ல, கனடிய இலக்கிய இதழ் ஒன்றில் பிரதிமேம்படுத்துனராகப் பணிபுரிந்த ஒருவரிடம் நான் மொழிபெயர்த்த கதைகளைக் கொடுத்து அவரிடம் கருத்துக் கேட்பார். முதலிரண்டு கதைகளை அவர் திருத்திக் கொடுத்தார். ஆனால் அவர் திருத்திய இடங்கள் மொத்தம் ஐந்துக்கும் மேலில்லை. மூன்றாவது கதையிலிருந்து, “இந்த மொழிபெயர்ப்பாளர் கதைகளில் திருத்துவதற்கென்று எதுவுமேயில்லை. நீங்கள் எனக்கு வீணாகப் பணம் கொடுக்கிறீர்கள்,” என்று சிரித்துக்கொண்டே கூறினாராம்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரசுரத்துக்கு இந்தக்கதைகளை அனுப்பி ஓர் ஆண்டாக்கும் மேலாகிறது. ஒரு வாரம் முன்பு அ.மு அவர்களிடம் பேசியபோது இந்த நூல் வெளியாகி விட்டது என்று சொன்னார். “எனக்கு ஒரு பிரதி அனுப்பியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் உங்களுக்கும் பிரதி அனுப்ப வேண்டும். அவர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்,” என்றார். அவர் குரலில் குழந்தையின் குதூகலம்! “இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். சொல்வனம் இதழில் அத்வைத வேதாந்தம் குறித்த ஒரு தொடரை பதினேழு பகுதிகள் எழுதி முடித்துவிட்டேன் என்றும், விரைவில் என்னுடைய முதல் ஆங்கில நாவலுக்கான பணிகளில் இறங்குவேன் என்றும் அவரிடம் சொன்னேன். “அய்யா, இப்போதும்கூட உங்களுக்குள் இருக்கும் அந்தக் குழந்தையை நீங்கள் தொலைத்து விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் என்னுள் உறையும் அந்தக் குழந்தையைக் காத்துக்கொள்ள வேண்டும். அதற்கான உந்துதலையும், உத்வேகத்தையும் நான் உங்களிடமிருந்துதான் பெற்றுக்கொள்கிறேன்,” என்று அவரிடம் சொன்னேன். 


A Primal Quality in impspired

The Fall in Defunct Magazine

The Story of Ekolu in Spillwords Press

Dilemma in Spillwords Press


 

23 செப்டம்பர், 2024

மொழிபெயர்ப்புக்கான கனடிய இலக்கியத் தோட்டத்தின் விருது



கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023-க்கான மொழிபெயர்ப்பு விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பவா செல்லத்துரையின் புகழ்பெற்ற நூலான “சொல்வழிப்பயணம்” நூலை A Journey Through Words என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயெர்த்திருந்தேன். அதற்கு முன் ஜெயமோகனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவை அமெரிக்க, ஆங்கில இதழ்களில் வெளியாகி கவனம் பெற்றன. புது தில்லியின் ரத்னா பதிப்பகம் அவற்றை நூலாக A Fine Thread and Other Stories என்ற பெயரில் வெளியிட்டது. இப்பணிகளைக் கருத்தில் கொண்டு எனக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 

கனடிய இலக்கியத்தோட்டத்தின் நிறுவனர்களில் ஒருவரான எழுத்தாளர் திரு. முத்துலிங்கம் சென்ற மாதம் அலைபேசியில் அழைத்து என்னிடம் இதை அறிவித்தார். எனக்கு விருது அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியைவிட அவர் மூலம் தெரிவிக்கப்பட்டதுதான் பெரும் உவகை கொள்ள வைத்தது.  முத்துலிங்கம் அய்யா தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளி. அவர் கையால் இந்த விருது வழங்கப்படுவது எனக்குப் பேறு. 

இதற்கான விருது விழா கனடாவின் ஓண்டாரியாவில் வரும் அக்டோபர் 20 தேதி நடக்கிறது. என் மனைவி அனுஷாவும், நானும் அங்கு பதினெட்டாம் தேதி வாக்கில் செல்வோம். கனடா செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பித்து, இன்னும் இரண்டொரு நாட்களில் கனடிய எம்பஸியிலிருந்து  கடவுச்சீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.



என்னுடன் சேர்ந்து புனைவுக்கான விருதை ஏ.எம். றஷ்மியும், அல்புனைவு விருது பி. விக்னேஸ்வரனுக்கும், கவிதை விருது இளவாலை விஜயேந்திரனுக்கும், இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது பார்வதி கந்தசாமிக்கும் வழங்கப்படுகிறது. 

இவ்வாண்டுக்கான இயல் விருது பெறுபவர் சிந்து வெளி ஆய்வாளர் திரு. ஆர். பாலகிருஷ்ணன். இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருபவர். சிந்துவெளி நாகரிகத்துக்கும் பண்டைய தமிழகத்திற்கும் உள்ள உறவு குறித்த பாலகிருஷ்ணன் எழுதிய ‘Journey of a Civilization: Indus to Vaigai’ என்கிற நூல் வெளியானபோது, அது சிந்துவெளி ஆய்வுலகில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. பின்னர் வெளியான அதன் தமிழ்ப் பதிப்பான ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது முப்பது ஆண்டிற்கும் மேலான ஆராய்ச்சியில் உருவான இந்த நூலை மக்கள் பதிப்பாகக் கொண்டுவர தமிழ்நாடு அரசிற்கு அர்ப்பணித்துள்ளார். அது விரைவில் வெளிவர உள்ளது. திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய இரண்டையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார் பாலகிருஷ்ணன். 

கனடிய இலக்கியத்தோட்டத்தின் விருதுகள் மீது எனக்கு மிகுந்த மதிப்புண்டு. சென்ற ஆண்டுகளில் பெரும் மேதைகளுக்கு இயல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்புகள் இதற்கு முன்பு  கல்யாண் ராமன்,  ரா. கார்த்திகேசு, வைதேகி ஹெர்பெர்ட், மார்த்தா ஆன் செல்பி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் நிரையில் இணைவது எனக்குப் பெருமை. அதே நேரம், தொடர்ந்து செயலில் ஈடுபட்டிருக்கச் செய்யும் வினையூக்கியாகவும் இவ்விருதினைக் கொள்வேன்.




4 ஆகஸ்ட், 2024

பொற்குகை ரகசியம் - அ. முத்துலிங்கம் முன்னுரை

 


வம்சி பதிப்பகம் வெளியீடாக வந்துள்ள என் முதல் நூல் பொற்குகை ரகசியம் சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அளித்துள்ள முன்னுரை.


 சில வருடங்களுக்கு  முன்னர் நியூ யோர்க்கர் பத்திரிகையில் ஒரு சிறுகதை வெளியானது. அதன் பெயர் Cat Person. அது வெளியாகி சில நாட்களில்  உலகப் பிரபலமாகிவிட்டது. இரண்டு வாரங்களில் பத்து லட்சம் வாசகர்கள் அந்தக் கதையை படித்தார்கள். அதிசிறந்த உலகப் பத்திரிகைகள்  கதையை விவாதித்தன. சமூக ஊடகங்கள்  மதிப்புரைகள் எழுதின. சிறுகதை வரலாற்றில்இத்தனை சிறிய காலத்தில் ஒரு சிறுகதை இத்தனை புகழ் அடைந்ததில்லை. சிறுகதை மன்னர்களான செக்கோவ், ஜேம்ஸ் ஜோய்ஸ் போன்றவர்களின் படைப்புகளைத் தாண்டி இந்தச் சிறுகதை உயர்ந்து நிற்குமா?  

ஜெகதீஷ்குமாரின் 18 சிறுகதைகளையும் தொகுப்பில் படித்த இந்த நேரத்தில் என் மனதில் திரும்பத் திரும்ப எழுந்த கேள்வி ஒன்றுதான். இவை உடனே புகழ் தேடும் கதைகளா அல்லது நீண்ட காலம் நிற்கும் தகுதி கொண்டவைகளா? ரோல்ஸ்ரோய் சொல்லுவார், உலகத்திலே இரண்டு விதமான புனைவுகள்தான் உள்ளன என்று. ஒரு மனிதன் பயணம் போவான்; மற்றது ஒரு நகரத்துக்கு புது மனிதன் வருவான். இந்த தொகுப்பில் உள்ள அத்தனை விதமான கதைகளிலும் இது நடக்கும். அமெரிக்காவில், தமிழ்நாட்டில், மாலத்தீவில் நடப்பதாக கதைக் களங்கள் மாறும். ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒரு புதுமை நடக்கும். மனித வாழ்வியலின் ஒரு கூறு வெளிப்படும். சுவாரஸ்யம் மட்டும் குறைவதேயில்லை

எனக்கு ஜெகதீஷ்குமாரைத் தெரியாது. நேரில் கண்டதில்லை. இவர் ஈரோடு வாசவி கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றவர். தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் பி.எட் பட்டம் பெற்ற பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்கா தென் கரோலினா மாகாணத்திலுள்ள கோலிட்டன் கெளண்டி (Colleton County) உயர்நிலைப்பள்ளியில் கணிதவியல் துறைத்தலைவராகப் பணியாற்றுகிறார்.


இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இவருடன் முதல் பரிச்சயம் தொலைபேசி மூலம் ஏற்பட்டது. இவருடைய அருமையான ஆங்கில  மொழிபெயர்ப்புகளைத்தான் முதலில் படித்தேன். பின்னர் ஆங்கிலத்திலும் தமிழிலும் இவர் எழுதிய புனைவுகள் படிக்கக் கிடைத்தன. இப்படி ஒருவர் எழுதுகிறாரே, என் கண்களுக்கு இது நாள்வரை படவில்லையே என்ற நினைப்பு வந்தது. பிரமிப்பாக இருந்தது. 


இவருடைய கதைகளில் என்னை முதலில் கவர்ந்தது காட்சி வர்ணனைகள். சில சமயம் அவற்றை இன்னொருமுறை படிக்கத் தூண்டும். ’கனவுகளின் உபாசகன்’ கதையில் வரும் வர்ணனை இப்படிப் போகிறது.




ஆழ்ந்த உறக்கத்தில் சட்டென்று பிரசன்னமாகி மிதக்கும் சிறு கனவென கடல் நடுவில் அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. இருட்டுதான் அடர்ந்து திரவமாகி கப்பலை சுமந்துகொண்டிருக்கிறதோ என்று தோன்றியது சிவராமனுக்கு. கடல் இரவில் ஒரு வினோதத் தோற்றம் கொண்டுவிடுகிறது. அதன் பிரம்மாண்டத்தையும், அடியாழங்களில் புதைந்து கிடக்கும் ரகஸ்யங்களையும் ஒடுக்கிக் கொள்கிறது. ஏதோ கருவறைக்குள் மீண்டும் புகுந்து சுருண்டுகொண்ட மாதிரி ஆகிவிடுகிறது இரவில். மேல் தளத்தில் நின்றபடி வானம் பார்த்தால் யாரோ கழட்டி வீசின மோதிரங்கள்போல நட்சத்திரங்கள் தெரிகின்றன.’ 

இது தவிர, அவ்வப்போது இவர் கொடுக்கும் தகவல்களும் எனக்கு முக்கியமானவை. ‘அப்படியா?’ என்று சிந்திக்க வைப்பவை. அபூர்வமான  உயிர்கள் கடலில் உண்டாக்கும் ஒளிபற்றி ஒரு கதையில் வருகிறது. ஸ்கார்லட் மக்கோவ் என்னும் ஒரு வகை கிளிபற்றி இன்னொரு கதையில் சொல்கிறார். உலகத்திலேயே மிக அழகான இந்தக் கிளி தென் அமெரிக்க காடுகளில் வசிக்கிறது. சிலர் அதிக விலை கொடுத்து வாங்கி வீடுகளில் வளர்க்கிறார்கள். இந்தக் கிளி பேசவும் செய்யும். ஆனால் மனிதர்களின் கண்கள் இதன் பக்கம் திரும்பினால் இந்த இனம்  அழிந்துபோகும் வாய்ப்பு உண்டு.

வீடுகளில் வளர்க்கும் அலங்காரச் செடியான கிரேன்பெர்ரி பற்றியும் அறியலாம். அலங்காரம் மட்டுமல்ல, இது சுவையான பழங்களையும் தரும். இன்னொரு கதையில் இந்தியாவில் விற்பனையாகும் விதம்விதமான பரிசுச் சீட்டுகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.  நாகலாந்து, பூட்டான், தமிழ்நாடு, கேரளா பம்பர் குலுக்கல் பரிசுகள் பற்றியும், அந்த முடிவுகளை பார்க்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் பற்றியுமான விவரங்கள் மலைக்க வைக்கின்றன.    

‘நீலத்தழல்’ என்ற கதை மாலத்தீவுகள் ஒன்றில் நடப்பதாக புனையப்பட்டிருக்கிறது. அங்கே படிப்பிக்கும் ஆசிரியர் ஒருவரும், நண்பரும், மீன்பிடித் தோழரும், மகனுமாக நால்வர் கடலில் மீன் பிடிக்கப் புறப்படுகிறார்கள். வலைபோட்டு மீன் பிடிப்பதல்ல, தூண்டில் வீசி ஒவ்வொரு மீனாகப் பிடிக்கிறார்கள். சிறிய மீன் கிடைத்தால் அதை கடலில் வீசிவிட்டு பெரிய மீன்களை மட்டும் படகில் சேகரிக்கிறார்கள். சில மணி நேரங்களில் படகு நிறைந்துவிடுகிறது. அப்போது ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது.

உயிர் ஒளிர்வு (bioluminescence) என்னும் அற்புதமான வேதியியல் மாற்றம் கடலை ஒளிப்பிழம்பாகச் செய்கிறது. சில உயிரினங்களால் உற்பத்தியான அந்த ஒளி கடல் பரப்பை நீலத்தழலாக மாற்றி விடுகிறது. அந்த மயக்கத்தில் இருக்கும்போதே ராட்சச மீன் ஒன்று படகை கவிழ்த்து தள்ளுகிறது. படகில் பயணித்த நால்வரும் மிதவை ஆடைகள் அணிந்திருந்ததால் தண்ணீரில் மிதக்கிறார்கள், ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் அவர்களுக்குள்ளே இடைவெளி அதிகமாகிறது. அப்போது அந்த இரவின் இரண்டாவது அற்புதம் நிகழ்கிறது. 



’கர்மா’ என்று ஒரு கதை. ஒரு வரியில் சொல்வதானால் நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை கிடைக்கும். கதை அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆனால் இந்தக் கதையின் வடிவமைப்பு, சொல்முறை, ஆரம்பம், முடிவு என எல்லாமே தலை சிறந்த ஒரு சிறுகதையை வாசித்த நிறைவைத் தருகிறது. 

Karl Iagnemma ஓர் இயந்திர பொறியாளர், பேராசிரியர். இவரை நான் இருபது வருடங்களுக்கு முன்னர் MIT ல் சந்தித்திருக்கிறேன். இவருடைய அறிவியல் சிறுகதைகள் தொகுப்பாக வந்திருந்த சமயம் அது. முதன்முதலாக பல்கலைக்கழகம் பற்றியும் அங்கு கற்பிக்கும் பேராசிரியர்கள், அவர்களிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் பற்றியெல்லாம் சிறுகதைகள் எழுதியவர். ஒரு கதையில் கணிதப் பேராசிரியர் ஒருவர் காதல் உணர்வுக்கு தேற்றம் எழுத முயற்சிப்பார். இவருடைய கதைகள் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவை.

இந்த தொகுப்பில் ’பேராசிரியரின் கிளி’ என்ற சிறுகதையை படித்தபோது கார்ல் நினைவுக்கு வந்தார். ஒரு பேராசிரியருக்கும், அவரிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவருக்கும் இடையில் ஏற்படும் உறவையும், உணர்வையும் இத்தனை தத்ரூபமாக வர்ணித்த ஒரு சிறுகதை தமிழில் இல்லை என்றே சொல்லலாம். இந்தக் கதைதான் தொகுப்பில் ஆகச் சிறந்தது. இதுவே தொகுப்புக்கு தலைப்பாக இருப்பதும் மிகப் பொருத்தமானது. உலகத்துக் கதைகளுடன் பக்கத்துப் பக்கத்தில் நிற்கும் தகுதி கொண்டது இந்தக் கதை.

ஆரம்பத்தில் சொன்ன ’திடீர்ப் புகழ்’ கதை நீண்டகாலம் வாழுமா என்பது தெரியாது. ஆனால் புதுமைப்பித்தன் எழுதிய ’பொய்க்குதிரை’ சிறுகதை திடீர்ப்புகழ் அடையவில்லை; லட்சம் பேர் படிக்கவில்லை. ஆயிரம் பேர்கூட படித்திருக்க வாய்ப்பில்லை. நூறு பேர் படித்திருப்பார்களோ தெரியாது. ஆனால் இன்று, ஏறக்குறைய 100 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில், அது இன்னும் வாழ்கிறது. இனிமேலும் வாழும். காலம்தான் தரத்தை தீர்மானிக்கிறது, வாசகர்களின் எண்ணிக்கையல்ல. 


அப்படிப் பார்க்கும்போது ஜெகதீஷ்குமார் எழுதியதுதிடீர்ப் புகழ்கதைகள்  அல்ல. அவை நீண்ட காலம் வாழும் தன்மை கொண்டவை. ந்த தொகுப்பை அவருடைய முதல் தொகுப்பு என்று சொல்லவே முடியாது. கதைகளின் முதிர்ச்சியும், நேர்த்தியும், கலைம்சமும் வாகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகம் கிடையாது. சிறுகதையை தொடங்கினால் முடிவு வரை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்க வைக்கிறது. முக்கியமாக சிந்திக்க வைக்கிறது. வேறு என்ன வேண்டும்? 



சமீபத்தில் ஒரு டேனிஷ் எழுத்தாளருடைய, ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்ற சிறுகதையை படிக்க நேர்ந்தது. அந்த எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு அதை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கோரினேன். அவர் எந்தப் பத்திரிகையில் வெளியாகும், எத்தனை பிரதிகள் விற்கும், சன்மானம் எவ்வளவு என்றெல்லாம் கேட்டார். அவருக்கு தமிழ் மொழி பற்றி அறிவு கிடையாது. 90 மில்லியன் மக்கள் பேசும் மொழி என்று சொன்னபோதும் தெரியவில்லை. நாங்கள் நினைப்பது போல தமிழ் மொழி இன்றைக்கும் உலகத்தினரால் பரவலாக அறியப்படவில்லை. 

இந்தச் சந்தர்ப்பத்தில், ஜெகதீஷ்குமார் போன்ற ஒருவர் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர் ஆகிறார். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவு எழுதுகிறார். அவருடைய ஆங்கிலச் சிறுகதை தொகுப்பு அநேகமாக அடுத்த வருடத்துக்குள் வெளிவரும். அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிநாட்டு பத்திரிகைகளில் ஏற்கனவே பிரசுரமாகியிருக்கின்றன. மொழிபெயர்ப்பு விருதுகள் பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவர் ஜெயமோகனுடைய சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அது A Fine Thread and other stories என்ற தலைப்பில் வெளிவந்து அமெரிக்காவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. நல்ல மதிப்புரைகளும் வெளியாகியுள்ளன. 

ஆறு மில்லியன் மக்கள் பேசும் டேனிஷ் மொழியில் வெளியான ஒரு சிறுகதை மிகப் பிரபலமான ஆங்கில இதழ் ஒன்றில் மொழிபெயர்ப்பாக வெளிவருகிறது. ஒன்பது கோடி மக்கள் பேசும் தமிழில் எழுதிய சிறுகதை ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மிகவும் மதிக்கப்படும் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் இதுவரை வெளிவரவில்லை. சிறந்த சிறுகதை தமிழில் இல்லை என்று அர்த்தம் அல்ல. நல்ல தரமான மொழிபெயர்ப்பாளர்கள் இன்னும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

ஜெகதீஷ்குமாரிடம் நான் கேட்பது ஒன்றுதான். இவர் தமிழில் தொடர்ந்து எழுதட்டும்; ஆங்கிலத்திலும் எழுதட்டும். ஆனால் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதை நிறுத்தக்கூடாது. தமிழ் வெளியுலகிலே அறிமுகமாவதற்கு தேவை இவரைப்போல பல திறமைகள் கைவந்த எழுத்தாளர்கள்தான். அத்துடன் இவர் ராபர்ட் நாய்ஸ் 'Learn to Lead scholarship' மூலம் தென் கரோலைனாவின் சிடாடெல் ராணுவக் கல்லூரியில் இலவசமாக முதுகலை பயில்வதற்காக வாய்ப்பும், ஐம்பதாயிரம் டாலர் பரிசுத்தொகையும் வென்றவர். அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள 'Writer Who Write of Palmetto State Authors'-ன் உறுப்பினர். அமெரிக்காவின் 'The National Society of Leadership and Success'-ன் தலைமை உறுப்பினர். அத்துடன் முக்கியமாக, அமெரிக்காவின் 'American Literary Translators Association' (ALTA) இலக்கிய மொழிபெயர்ப்பாளர் அமைப்பின் அங்கத்தவர்.  தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு இவரிலும் தகுதியான ஒருவர் எங்கே கிடைப்பார்? 

இவரைப் போன்றவர்களால் தமிழ் இலக்கியத்தை உலகத்துக்கு மேலும் எடுத்துச் செல்லமுடியும். அந்த வகையில் இவர் முக்கியம் வாய்ந்தவர். பாதுகாக்கப்பட வேண்டியவர். 


அ.முத்துலிங்கம்

கனடா, 26 மார்ச் 2024

மேலும் வாசிக்க