புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 டிசம்பர், 2024

இதாலோ கால்வினோ - தேன் கூடுகளின் வீடு.


இதாலோ கால்வினோ - தேன் கூடுகளின் வீடு.
மொழியாக்கம்: ஜெகதீஷ் குமார்

தொலைதூரத்தில் இருந்து பார்ப்பது சிரமமாக இருந்தது. ஏற்கனவே ஒருவர் இங்கு வந்திருந்தாலும் கூட திரும்பிச் செல்லும் வழியை நினைவுபடுத்திக் கொள்ள முடியாது. ஒருகாலத்தில் இங்கு ஒரு பாதை இருந்தது. ஆனால் நான் மல்பெர்ரி புதர்களை வளர்த்து அதன் தடயங்களை அழித்து விட்டேன். இங்கு என் வீடு திறமையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. புதர்களின் கரையில் மறைந்து, பள்ளத்தாக்கிலிருந்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு அடுக்குக் கட்டிடமாக, செந்நிறச் சாளரங்களும், வெண்ணிறச் சுண்ணம் பூசப்பட்டும் இருந்தது.
       சுற்றியிருந்த கொஞ்ச நிலத்தில் நான் வேலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நத்தைகள் மெல்லும் லெட்யூசுகள் கொண்ட துண்டு காய்கறித் தோட்டம் எனக்குப் போதுமானதாயிருந்தது. முள் கரண்டி கொண்டு கிளறி உருளைக் கிழங்கு பயிரிட மேற்கூரை கொண்ட ஒரு துண்டு நிலமும். எல்லாம் கருநீல நிறத்தில் மொட்டு விட்டுக் கொண்டிருந்தன. எனக்கான உணவுக்காக நான் வேலை செய்தால் போதுமானது. யாருடனும் பங்கிட்டுக் கொள்ள என்னிடம் எதுவும் இல்லை.
       கூரையின் மேல் ஊர்ந்து கொண்டிருக்கிற, பயிரிட்ட நிலத்தின் மேல் மெல்லப் பரவிக் கொண்டிருக்கிற மல்பெர்ரிப் புதர்களை நான் வெட்டி விடவில்லை. நான் உள்பட எல்லாவற்றையும் அவை சூழ்ந்து மூழ்கடித்து விட வேண்டும் என்று விரும்பினேன். சுவர்களின் பிளவுகளுக்கிடையில் பல்லிகள் கூடு கட்டியிருந்தன. எறும்புகள் தரையின் செங்கற்களின் கீழே தங்கள் புற்றுகளைக் குவித்து வைத்திருந்தன. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிளவு உருவாவதைப் பார்ப்பதற்காக எதிர்பார்த்திருந்தேன். மனித இனத்தின் நகரங்கள் களைகளால் அமுக்கப்பட்டு, விழுங்கப்படுவதைச் சிந்தித்தபடியிருந்தேன்.
       என் வீட்டின் மேற்புறம் துண்டுகளாய் இருந்த முரட்டுப் புல்வெளிகளில் என் ஆடுகளை மேய விட்டிருந்தேன். அதிகாலையில் முயல்களை வாசனை பிடித்தபடி சில நாய்கள் கடந்து போகும். நான் அவற்றைக் கல்லெறிந்து துரத்துவேன். நான் நாய்களை வெறுத்தேன், மனிதனிடம் அவை காட்டும் சுயமரியாதையற்ற நன்றியுணர்வையும் சேர்த்து. எல்லா வீட்டு மிருகங்களையுமே நான் வெறுத்தேன். வழவழத்த தட்டுகளில் மீந்து போனவற்றை நக்குவதற்காக அவை மனிதனிடம் காட்டும் போலித்தனமான கருணையையும் வெறுத்தேன். ஆடுகள் மட்டுமே என்னால் சகித்துக் கொள்ளக் கூடிய விலங்குகள். அவை நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.
       என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்கு சங்கிலி பூட்டிய நாய்கள் தேவையில்லை. மனிதர்களின் அசிங்கமான பாதுகாப்புக் கருவிகளான புதர்களோ, தாழ்ப்பாளோ கூடத் தேவையில்லை. என் நிலம் தேன்கூடுகளால் சூழப்பட்டது. தேனீக்களின் பறத்தலென்பது முட்களாலான புதரைப் போல; என்னால் மட்டுமே அதைக் கடக்க இயலும். இரவில் தேனீக்கள் உறங்கினாலும் ஒரு மனிதனும் என் வீட்டருகில் வருவதில்லை. மக்கள் என்னைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் அஞ்சுவது சரிதான். அவர்கள் என்னைப் பற்றிக் கூறுகிற கதைகள் உண்மை என்பதனால் அல்ல. அவை பொய்களே. அவை அவர்கள் வழக்கமாகக் கூறும் விஷயங்களே. ஆனால் அவர்கள் என்னைக் கண்டு அஞ்சுவதும் சரியே. நானும் அதையே விரும்பினேன்.
       மலைமுகட்டின் மேலாகக் காலையில் நான் செல்லும் போது, வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தாக்கையும், உயர்ந்த கடலையும், என்னைச் சுற்றிலுமுள்ள உலகையும் பார்க்கமுடியும். போலித்தனமான அண்டை வீட்டுத்தனத்தினால் சிதலமாகிக் கிடக்கிற மனித இனத்தின் வீடுகளைப் பார்க்கிறேன். அழுக்கு மஞ்சளும் வெண்ணிறமுமான நகரத்தைப் பார்க்கிறேன். அதன் ஜன்னல்கள் மின்னுவதைப் பார்க்கிறேன். அதன் நெருப்புகளின் புகையைப் பார்க்கிறேன். ஒருநாள் புற்களும், புதர்களும் அதன் பரப்புகளை மூடிவிடும்; கடல் மேலெழுந்து அதன் சிதலங்களைப் பாறைகளாக்கி விடும்.
       இப்பொழுது என்னுடன் தேனீக்கள் மட்டுமே உள்ளன. நான் கூடுகளிலிருந்து தேன் எடுக்கும் போது அவை என்னைக் கொட்டாமல் சுற்றி ரீங்கரித்தபடி இருக்கும். உயிருள்ள தாடியைப் போல சூழ்ந்திருக்கும். தேனீக்கள், நட்பான, வரலாறற்ற பழங்கால இனம். வருடக்கணக்கில் தேனீக்களுடனும், ஆடுகளுடனும் இந்தப் புதர்களின் கரையில் வாழ்ந்து வருகிறேன். முன்பெல்லாம் ஒவ்வொரு வருடம் கழிவதையும் சுவற்றில் குறித்து வைக்கிற பழக்கம் இருந்தது. இப்போது மல்பெர்ரிப் புதர்கள் எல்லாவற்றையும் சூழ்ந்து விட்டன. நான் எதற்காக மனிதர்களோடு வாழ்ந்து, அவர்களுக்காக வேலை செய்ய வேண்டும்? அவர்களது வியர்வை படிந்த கரங்களையும், குரூரமான சடங்குகளையும், அவர்களது நடனங்களையும், சர்ச்சுகளையும், அவர்களது பெண்களின் அமிலம் கொண்ட எச்சிலையும் வெறுக்கிறேன். அவர்கள் என்னைப் பற்றிச் சொல்லுகிற கதைகளெல்லாம் உண்மையல்ல. நம்புங்கள். அவர்கள் எப்போதுமே என்னைப் பற்றிய கதைகளைச் சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்கள். பொய்ப் பன்றிகள்!
       நான் யாரிடமும் கடன் பட்டதுமில்லை; யாருக்கும் கொடுப்பதுமில்லை. இரவில் மழை பெய்தால் காலையில் கரையோரம் நெளிகிற நத்தைகளை சமைத்து உண்பேன். காட்டுக்குள் நிலம் மென்மையான, ஈரம் படர்ந்த நாய்க்குடைகளால் விரவிக் கிடக்கும். காடு எனக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து விடுகிறது. எரிப்பதற்கான குச்சிகள், பைன் கூம்புகள், மற்றும் கொட்டைகள். முயல்களையும், பறவைகளையும் வலை விரித்துப் பிடிப்பேன். அதற்காக எனக்குக் காட்டு விலங்குகளின் மீது பிரியம் உண்டென்றோ, மனிதனின் அபத்தமான பாசாங்குகளில் ஒன்றான ‘இயற்கை மீது அபிமானம்’ கொண்டவனென்றோ எண்ணி விட வேண்டாம். இவ்வுலகில் வலிமையுள்ளது மட்டுமே வெல்லும் என்பதும், நாம் ஒருவரையொருவர் விழுங்குவதே நியாயம் என்பதும் எனக்குத் தெரியும். நான் உண்ண விரும்பும் விலங்குகளை மட்டுமே கொல்கிறேன். அதுவும் வலை விரித்தே, துப்பாக்கியால் அல்ல. எனவே என் இரையைத் தேடி எடுக்க நாயின் உதவியோ, மனிதர்களின் உதவியோ தேவையில்லை.
       காட்டில் கோடரிகள் மரம் வெட்டும் மந்தமான ஒலி என்னை எச்சரிக்காத பொழுதுகளில் நான் சில மனிதர்களை சந்திக்க நேர்வதுண்டு. நான் அவர்களை பார்க்காதது போல் பாவிப்பேன். ஞாயிற்றுக் கிழமைகளில் காட்டுக்குள் எரிபொருள் சேகரிக்க குடியானவர்கள் வருவார்கள். அவற்றைச் சேகரித்து கற்றாழைக் கட்டைப் போல் தலையில் சுமப்பார்கள். வெட்டப்பட்ட மரங்கள் கயிறுகளால் இழுத்துச் செல்லப்பட்டு சொரசொரப்பான பாதைகளை உருவாக்கியிருந்தன. புயலின் போது மழை நீர் அவற்றில் சேகரமாகி நிலச்சரிவைத் தூண்டி விடும். மனித இனத்தின் நகரங்களில் உள்ள ஒவ்வொன்றும் இதே போன்றே அழிவைச் சந்திக்கட்டும். ஒரு நாள் நான் இவ்வழியே நடந்து செல்லும் போது நிலத்தின் மீதாக எழுகிற சிம்னிகள், அரித்துக் கிடக்கிற தெருக்களைச் சந்திப்பதைப் பார்ப்பேன். காட்டின் மத்தியில் ஓடுகிற இருப்புபாதைத் தடங்களில் இடறுவேன்.
       ஆனால் என்னை அழுத்திக் கொண்டிருக்கிற என் தனிமையின் காரணமாக நட்சத்திர ஒளி நீண்ட ஒரு மாலைப் பொழுதில் எந்த ஒரு குறிப்பிட்ட எண்ணமுமின்றி மனித இனத்தின் வீடுகளை நோக்கி நான் சென்றிருக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் வியப்புறலாம். தோட்டங்கள் சூழ்ந்த சுவர்கள் கொண்ட வீடுகளை நோக்கி ஓர் இதமான மாலைப்பொழுதில் நான் சென்றேன். கீழே இருந்த் குறு ஆப்பிள் மரங்களைத் தாண்டிச் சென்றேன். ஆனால் பெண்கள் சிரிப்பும், தூரத்திலொரு குழந்தையின் கூக்குரலும் கேட்டவுடன் திரும்பி விட்டேன். அதுதான் கடைசி முறை. நான் இப்போது தனியனாகத்தான் இருக்கிறேன். அத்தவறை நான் மீண்டும் இழைத்து விடுவேனோ என்று உங்களைப் போலவே நானும் அவ்வப்பொழுது அஞ்சுவதுண்டு. எனவே உங்களைப் போலவே நானும் முன் போல வாழ்ந்து வருகிறேன்.
       என்னைக் கண்டு உங்களுக்கு அச்சம் ஏற்படுது சரிதான். ஆனால் அன்று நிகழ்ந்த அந்த நிகழ்வினால் அல்ல. அது நிகழ்ந்ததோ, இல்லையோ. அது பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. இப்போது அது பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை.
       அந்தப் பெண், அன்று அறுவடைக்கு வந்த அந்தப் பெண் – நான் இங்கு வந்து அப்பொழுது சிறிது காலமே ஆகியிருந்தது. நான் முழுவதுமாக மனித உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன் – அவள் ஒரு மலைச் சரிவின் மீது வேலை செய்து கொண்டிருக்கையில் கண்டேன். அவள் என்னை வாழ்த்தினாள். நான் பதிலிறுக்காது நகர்ந்தேன். நான் அப்பொழுது மனித உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன். அது போல ஒரு பழைய வெறுப்பினாலும். அந்த வெறுப்பின் காரணமாக – அது அவள் மீது அல்ல – அவள் அறியாது அவளைப் பின் தொடர்ந்து சென்றேன்.
       மக்கள் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிற கதை நிச்சயம் தவறுதான். ஏனெனில் அன்று அந்தப் பள்ளத்தாக்கில் யாரும் இல்லை.எனவே என் கரங்கள் அவள் குரல்வளையைச் சுற்றியபோது யாரும் அவளைக் கேட்டிருக்க முடியாது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் கதையை முதலில் இருந்து சொல்லியாக வேண்டும்.
சரி, அந்த மாலையைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இப்போது நான் இலைகளைத் துளையிடுகிற நத்தைகளோடு லெட்யூசுகளைப் பங்கிட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். நாய்க்குடைகள் எங்கு வளரும் என்றும் அவற்றில் நல்லது எது, விஷம் கொண்டது எது என்றும் என்னால் சொல்ல இயலும். பெண்கள் பற்றியும், அவர்களது விஷம் பற்றியும் இப்போது சிந்திப்பதில்லை. கற்புடனிருப்பது என்பது பழக்கம் தவிர வேறென்ன?
       புல்லரிவாளோடு வந்த அந்த கறுத்த பெண்தான் கடைசி. வானம் மேகங்கள் நிறைந்து கிடந்தது. கருத்த மேகங்கள் மிதந்து சென்றது நினைவுக்கு வருகிறது. இது போன்று மேகங்கள் விரைகிற, மலைச்சரிவில் ஆடுகள் மேய்கிற ஒரு பொழுதில்தான் முதல் மனித இணைப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். மனிதத் தொடர்பில் பரஸ்பர திகிலும், வெட்கக்கேடுமே நிகழ வாய்ப்புண்டு. அவற்றைத்தான் அவள் கண்களில் காண விரும்பினேன். அந்தத் திகிலையும், வெட்கக்கேட்டுணர்வையும். அதற்காகவே அந்தக் காரியத்தைச் செய்தேன். நம்புங்கள்.
       யாரும் என்னைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. சொல்லவும் முடியாது. ஏனெனில் அந்த மாலையில் பள்ளத்தாக்கில் யாரும் இல்லை. ஆனால் லாந்தர் விளக்கில் ஒரு பழைய புத்தகத்தின் அர்த்தத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடியாத இரவுகளில், இருளில் மலைகள் தொலைந்து போய்விடுகிற இரவுகளில் கீழே தங்கள் இசையோடும், ஒளியோடும் இருக்கிற மனித ஜீவன்களை என்னால் உணர முடிகிறது. உங்கள் எல்லாரது குரல்களும் என்னைக் குற்றஞ்சாட்டுவதை என்னால் உணர முடிகிறது.
       ஆனால் அந்தப் பள்ளத்தாக்கில் யாருமே என்னைப் பார்த்திருக்கவில்லை. அவர்கள் அந்த மாதிரிப் பேசுவதற்குக் காரணம் இங்கு வரும் பெண்கள் வீடு திரும்பாதுதான்.
       மேலும் எப்பொழுதும் இவ்வழிச் செல்லுகிற நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று, உறுமியபடி மோப்பம் பிடித்து, தங்கள் பாதத்தால் தரையைக் கிளறினால், அதற்குக் காரணம் அங்கு ஏதேனும் ஒரு எலி வளை இருப்பதுதான். சத்தியமாக, அங்கிருப்பது ஏதேனும் ஒரு எலி வளைதான்

26 நவம்பர், 2024

நிமித்தம் - சிறுகதை

 

நிமித்தம்

சிறுகதை 

ஜெகதீஷ் குமார்



நன்றி: அகழ்




“இங்க இறங்கிக்கிங்க,” என்றான் ஆட்டோக்காரன்.

“இங்க இல்லிங்க, நான் போவேண்டியது டிஎன்டிஈயுவுக்கு.”

“சார், முன்னாடி நாலு பஸ் நிக்கிது. அதெல்லாம் எடுத்து நாம கெளம்பறதுக்குள்ள நேரமாயிரும். நீங்கதான சீக்கிரம் போன்னு சொன்னீங்க?”

ஆட்டோக்காரன் விவேகானந்தர் இல்லத்துக்கு முன்பாகவே இறக்கி விட்டு விட்டான். அங்கிருந்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு இன்னமும் இருநூறு அடிகளாவது நடக்க வேண்டியிருக்கும். நாலு நாள் முன்பு விமானமேறுவதற்கு முன் துபாய் சர்வதேச விமானநிலையத்தில் வாங்கிய லெதர் ஷூ பாதங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தது. வலியைப் பொறுத்துக் கொண்டு தேய்த்துத் தேய்த்து வாகனங்களுடேயும், ஜன நெரிசலினூடேயும் நடந்து பூசனம் பூத்த சுவர்கள் கொண்ட அந்த பல்கலைக் கழக வளாகத்தை அடைந்தான். அலுவலகத்தின் வாயிலை அடையும் முன் தோள்பையைத் திறந்து, கொண்டு வந்த ஆவணங்கள் உள்ளே இருக்கின்றனவா என்று சரி பார்த்துக் கொண்டான்.

வெளியே மரபெஞ்சில் ஐந்துபேர் அமர்ந்திருந்தார்கள். எல்லாரும் மத்திய வயது தாண்டிய ஆண்கள். முகங்களில் ஏதோ சுமக்க முடியாத பாரத்தைச் சுமக்கும் வலி தெரிந்தது. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான். இன்னும் முன்னாலேயே வந்திருக்க வேண்டுமோ? 

அவன் தயங்கி நின்றதைப் பார்த்து எல்லாரும் நெருக்கிக் கொண்டு இடம் கொடுத்தார்கள். பெஞ்சின் நுனியில் அமர்ந்து தோள்பையை மடியில் வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான். உள்ளே பெரிய மின்விசிறிகள் சோம்பலாகச் சுழன்றபடி கொஞ்சம் வாயிலுக்கும் காற்றைக் கொண்டு வந்தன. ஏதோ ஓர் மூலையில் யாரோ தட்டச்சியந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தாகத் தட்டிக் கொண்டிருந்த ஒலி இவன் மண்டையில் இடித்தது. வடையோ, பஜ்ஜியோ, வாசனை பசியைக் கிளப்பியது. காலை எதுவும் சாப்பிடாமல்தான் கிளம்பியிருந்தான். அத்தை கொடுத்த காபியைக் குடித்திருந்ததோடு சரி.

“அப்ளிகேஷன் கொடுத்திட்டீங்களா?” என்றார் பக்கத்திலிருந்தவர். அவர் கண்ணில் புரை விழுந்திருந்ததைக் கவனித்தான். இவர்கள் எல்லாமா ஆசிரியராகப் போகிறார்கள்?

“ஈமெயில் அனுப்பியிருந்தேன். இங்கயும் கொடுக்கணுமா?”

“அவங்களே கேப்பாங்க,” என்றார்.

இவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சுக்குப் பக்கவாட்டில் இருந்து ஒரு கதவு திறந்தது. கழிப்பறையாக இருக்க வேண்டும். உள்ளிருந்து காக்கிச் சட்டை அணிந்த ஒருவர் வெளியே வந்தார். வந்ததும் ஏறிட்டு இவர்கள் திசையில் பார்த்தார். இவனுக்கு அவர் தன்னைத்தான் பார்ப்பது மாதிரி இருந்தது. வாயிலில் நின்றபடி உள்ளே பார்த்து, “சிவராமன் சார், இன்னொரு ஆள் வந்திருக்கு,” என்றார்.

சிவராமன் என்று அழைக்கப்பட்டவர் உள்ளேயிருந்து மெலிந்த உடலோடு, பழுப்படைந்த வெள்ளைச் சட்டை அணிந்தபடி வந்து வாயிலில் நின்றார். கையிலிருந்த தாளைப் பார்த்து, “ரகு நாதன்?” என்றார்.

இவன் எழுந்து அவர் முன்னால் சென்று நின்றான். 

“நீங்கதானா?”

“ஆமாம், சார். என் பேரு ரகு நந்தன்.”

“ஏங்க, இப்ப அதுதான் பிரச்னையா? வந்தவுடனே உங்க ஃபார்ம்ஸை சப்மிட் பண்ண மாட்டிங்களா? நாங்க வந்து கேட்கணுமா?”

“சார், வந்து, அதுதான் பிரச்னையே. என் சர்டிஃபிகேட்ல பேரு ரகு நாதன்னு தப்பா போட்டிருக்கு. அத மாத்தணும்.”

“அப்ளிகேஷன் கொடுங்க. ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, டிகிரி சர்டிஃபிகேட் எல்லாத்துக்கும் ஜெராக்ஸ் வேணும். ஒரிஜினல்ஸை காட்டிட்டு திரும்ப வாங்கிக்கலாம்.”

“சார், புது சர்டிஃபிகேட் எப்பக் கிடைக்கும்?”

அலுவலர் புன்னகைத்தார். “உட்காருங்க. உங்க முறை வரும்போது கூப்பிடுறேன்”, என்றார். “சேகர், ரெஜிஸ்டிரார் நாளையிலிருந்து ஒரு மாசம் லீவு. இந்த அப்ளிகேஷன்லாம் வெரிஃபை பண்ணி கொடுத்தர்றேன். அவர் டேபிள்ல வைச்சிடுங்க. அவர் எத்தனை அப்ரூவ் பண்றாருங்கறத வச்சித்தான் இன்னிக்கு வொர்க்லோடு,” என்றார் காக்கிச் சட்டையைப் பார்த்து. பின் இவனை ஏறிட்டும் பாராமல் திரும்பி உள்ளே சென்று விட்டார். 

இவன் மீண்டும் சென்று பெஞ்சில் அமர்ந்தான். ஏறிட்டுப் பார்த்தபோது தெரு நாய் ஒன்று மைதானத்துக்குள் மந்தமாக நடந்து கொண்டிருந்தது. மைதானத்துக்கு அந்தப்புறம் புதுக்கட்டிடம் ஒன்று வெளிர் மஞ்சள் நிற டிஸ்டம்பரில் பதிவாளர் அலுவலகம் என்ற பெரிய எழுத்துப் பலகையுடன் நின்றிருந்தது. வாயிலில் ஒரு டவாலி உட்கார்ந்திருந்தான். வெளியில்அம்பாஸிடர் கார் உறைபோட்டு மூடப்பட்டு நின்றிருந்தது. இவனது ஒளிமிக்க எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்கு, இவனுடைய கோப்பு இங்கிருந்து அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து தாமதமின்றி வெளிவர வேண்டும்.

முதல் நாளிரவுதான் ஈரோட்டில் கோவை எக்ஸ்பிரஸ் பிடித்து காலை ஐந்து மணிக்கு சென்னை வந்து சேர்ந்தான். இவனது பெர்த்தில் ஜன்னல் சரியாக மூட முடியவில்லை. கடும் குளிர்காற்று விடாது உள்ளே வந்து, உலுக்கி, உலுக்கி உறங்கவிடாமல் செய்து விட்டது. அத்தை வீட்டுக்குப் போய் உடனே படுத்து எட்டரை மணிக்குத்தான் எழுந்தான். குளித்துத் தயாராகி இங்கு வர பத்தரை மணியாகி விட்டது. வந்திருந்தவர்கள் ஏழு மணியிலிருந்தே காத்திருப்பார்கள் போல. தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள்.

அசைந்து அமர்ந்ததில் கண்புரைக்காரரின் தோளில் உரசினான். அவர் வெடுக்கென்று திரும்பி இவனைப் பார்த்தார். “எப்ப முடிச்சீங்க?” என்றார்.

“போன வருஷம். போன மாசம்தான் டிகிரீ சர்டிஃபிகேட், கன்சாலிடேடட் மார்க்லிஸ்ட் எல்லாம் வந்தது. எல்லாத்திலயும் தப்பாப் பேர் போட்டிருக்கு.”

“குடுத்துட்டுப் போங்க. எப்படியும் மாசத்துக்கு ஒருக்கா நாமதான் அவங்களுக்கு கூப்பிட்டு ஞாபகப்படுத்தனும். என்னுது ரிக்வெஸ்ட் போட்டு ஆறுமாசமாச்சு. ஃபோன் போட்டா எடுக்க மாட்டேன்றாங்க. அதான் நேர்லயே வந்துட்டேன்.”

மாதக்கணக்கில் ஆகுமா? காலி வயிற்றில் சட்டென்று ஒரு சுழல் கிளம்பியது. சற்று தயங்கியபடி, “எனக்குப் பதினைந்து நாளுக்குள்ள வேணும். விசா இண்டர்வியூக்கு போறதுக்கு முன்னாடி,” என்றான்.

“ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாமா?” என்றார் கண்புரைக்காரர். “எப்படியும் இது அவங்களுக்கு டீ டைம். நம்மளக் கூப்பிடறதுக்கு இன்னும் ஒரு மணி நேரமாவுது ஆவும்.”


* * *

“எங்க போறீங்க?” என்றார் டீயை ஊதி நுரையை விலக்கியபடி. இருவரும் பல்கலைக் கழகத்துக்கு வெளியிலிருந்த ஒரு டீக்கடையின் வாயிலில் நின்றிருந்தார்கள்.

“கனடா,” என்றான்.

“கனடாவா? அங்க டீச்சர்ஸ்லாம் எடுக்கறாங்களா?”

“நான் இப்ப நட் அல் ஷெபா ஐபி ஸ்கூல்ல சைன்ஸ் டீச்சரா இருக்கேன். அது மூலமா இந்த வாய்ப்பு வந்தது.”

“சார், உங்களுக்கு சர்டிஃபிகேட் திருத்தி வேணும்னா, அப்ளை பண்ணா மட்டும் பத்தாது,” என்றார். குரலை சற்று தாழ்த்தி,  “கவனிக்க வேண்டியவங்களை கவனிக்க வேண்டிய இடத்தில் கவனிக்கனும். அப்ப சீக்கிரமா கிடைக்க வாய்ப்பிருக்கு.”

“அதெப்படிங்க? தப்பு அவங்க பண்ணினது. அத சரி பண்றதுக்கு நாம எப்படி பணம் கொடுக்கறது. லஞ்சம் கொடுக்கறது தப்பில்லையா?”

“எந்த ஊர்ல இருக்கீங்க நீங்க? நம்ம ஊர்ல எல்லாமே இப்படித்தான்.”

“துபாயில. அங்கெல்லாம் இப்படிக் கிடையாது சார். எந்த வேலைன்னாலும் நேர்மையா நடக்கும். சீக்கிரமாவும் நடக்கும். இந்த வேலைக்காக கிரிமினல் சர்டிஃபிகேட் அப்ளை பண்ணினேன். ரெண்டே நாள். ஈ மெயில் அனுப்பி வந்து வாங்கிட்டுப் போன்னு சொல்லீட்டாங்க. பத்து பைசா செலவில்ல. பத்து வருஷமா அங்கதான் இருக்கேன். இங்க எதாவது மாறியிருக்கும்னு நெனச்சேன். நீங்க என்னடான்னா பணம் குடுத்தாத்தான் ஆகும்கறீங்க.”

“இங்க எப்பவுமே அப்படித்தான். நாம எங்க இருக்கமோ அதுக்கு ஏத்தமாதிரிதான் நடந்துக்கனும். பேசாம எதையாவது குடுத்து வேலையை முடிச்சிக்கோங்க. நமக்கு வேலதானே முக்கியம்?”

“அப்படியில்லிங்க. நான் இங்க இருந்தப்பவே இந்த மாதிரி குறுக்கு வழியில எதுவும் சாதிச்சதில்ல. இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்.”

“உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு,” என்றார் கண்புரைக்காரர். “இந்த நேர்மையோடவே உங்களது காரியத்தை சாதித்துக் கொள்ள என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.”

* * *

திரும்பிச் சென்று பெஞ்சில் அமர்ந்து காத்திருப்பைத் தொடர்ந்தார்கள். தேனீர் நேரம் முடிந்து மதிய உணவின் நேரம் வந்து விட்டது. வெளியில் அமர்ந்திருந்த யாருமே அழைக்கப்படவில்லை. கண்புரைக்காரருடன் கிளம்பி மீண்டும் வெளியே வந்தான். சாலையைத் தாண்டி இருந்த சரவணபவனுக்குள் நுழைந்தார்கள். உள்ளே ஒரு பத்துப் பதினைந்து பேர் இருந்தார்கள். அலுவலகத்தில் இவன் பார்த்த காக்கிச் சட்டைக்கார சேகரும் இருந்தார். ஒரு மேஜையில் அவர் மட்டும் தக்காளி சாதத்தைக் கிளறியபடி இருந்தார். கண்புரைக்காரர் இவனிடம் கண்காட்டி அங்கே போகலாம் என்றார். இருவரும் அந்த மேஜையைச் சுற்றி அமர்ந்தார்கள். காக்கிச் சட்டை நிமிர்ந்து பார்த்தது. இருவரும் பொத்தான் அழுத்தியதைப் போலப் புன்னகைத்தார்கள்.

இருவருக்கும் தக்காளி சாதமே சொன்னார்கள்.

“என்னங்க, சேகர், எங்க வேலை இன்னிக்கு முடிஞ்சிருமா?” என்றது கண்புரை.

காக்கிச் சட்டை மையமாகத் தலையாட்டியது. உணவு நிறைந்திருந்த வாய் புன்னகைத்தது. 

“சாருக்கு சர்டிஃபிகேட் திருத்தி அவசரமா வேணுமாம். கனடா போறார். எதாம் வழி இருக்கா?”

“ஏங்க, கவர்மெண்டுக்குன்னு ஒரு வேகம் இருக்கில்ல. அத மீறி எதும் நடந்துற முடியுமா?”

“பாஸ்போர்ட் அப்ளை பண்ண ரெண்டு நாள்ல வீடு தேடி வருது,” என்றான்.

“அது மத்திய அரசுங்க. இது மாநிலம்.”

கண்புரை முன்னோக்கிக் குனிந்து காக்கிச்சட்டையிடம், “யார்கிட்ட குடுத்தா நடக்கும்? ஒருவேளை நீங்கதான் அந்த ஆளா?” என்றது.

“அட நீங்க வேற. இப்படி வெளியில வந்து பேசிக்கிட்டிருக்கிறது தெரிஞ்சா நான் முடிஞ்சேன். அது பத்தில்லாம் எனக்குத் தெரியாது. ரிஜிஸ்டரார் அறைக்குள்ள கொண்டுபோறவரைக்கும்தான் எங்க பொறுப்பு. அவர் எத்தனை ஃபைல்ல கையெழுத்து போடறாரோ அது அவருக்குத்தான் வெளிச்சம். மீதி ஃபைல்ல அவர் லீவு முடிஞ்சு வந்துதான் போடுவார்.”

தக்காளி சாதம் வந்து விட்டது. கண்புரை எழுந்து சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றது. காக்கிச்சட்டை இவனை நிமிர்ந்து பார்த்தது. “இவர் பேச்சக் கேட்டுக்கிட்டு பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் பணம் குடுத்தா வேல நடக்குமான்னு கேட்டுகிட்டு இருக்காதிங்க. முன்ன மாதிரி இல்ல இப்பல்லாம். எல்லாம் கமுக்கமா நடக்குது. இப்ப இருக்கற ரிஜிஸ்டரார் புதுசு. இது வரைக்கும் பார்த்ததுல கண்டிப்பானவர் மாதிரிதான் தெரியிறார். நாம பாட்டுக்கு எதோ கேக்கப்போயி, எதாவது எடக்கு மடக்கா நடந்துறப்போவுது.” அவர் ஏதோ தன்னிடமே பேசிக் கொண்டமாதிரிதான் பட்டது.

“வேற வழியே இல்லிங்களா?” என்றான். விமான நிலையத்தில் டாலர் கொடுத்து மாற்றிய பணம் எட்டாயிரம் அவனது பைக்குள்  இருந்தது. காக்கிச் சட்டை போடும் பீடிகையைப் பார்த்தால் இவனிடம் பணம் கொடுத்தால் நடக்கும் போலத்தான் தெரிகிறது. தன் கைவிரல்கள் மெலிதாக நடுங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். கணநேரத்தில் தன் மனம் தடுமாறியதற்காகத் தன்னையே கடிந்து கொண்டான். அவனறிந்து இதுவரைக்கும் எதையும் யாருக்கும் கொடுத்து சாதித்ததில்லை. இனிமேலும் அப்படித்தான் இருக்க வேண்டும்.

“நீங்க ஒண்ணு பண்ணுங்க. நான் சாப்பிட்டுட்டுப் போய் இன்னிக்கு வந்திருக்கற ஃபைல் எல்லாம் சார் ரூம்ல கொண்டு வைச்சிடுவேன். நீங்க நேர அவரையே பார்த்து உங்க நிலைமையைச் சொல்லிப் பாருங்க. ஒருவேளை அவர் எதுனா எங்களுக்கு சிக்னல் குடுத்தா உங்களுக்கு சர்டிஃபிகேட் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு.”

“சிக்னல்னா?”

“உங்க ஃபைல்ல குறிப்பு எழுதுவார். டாப் பிரையாரிட்டின்னு.”

“அப்படிப் பண்ணுவாரா?”

“ரெண்டு மூணு கேசுக்குப் பண்ணிருக்கார். கஷ்டப்பட்ட குடும்பம். உடனே சர்டிஃபிகேட் இருந்தாத்தான் வேலைக்கே அப்ளை பண்ண முடியும்கற மாதிரி நெலமை.”

பத்து வருடங்களுக்கு முன்னால் இவனும் கஷ்டப்பட்ட குடும்பத்தில்தான் இருந்தான். இப்போது வெளிநாட்டு வேலையில் கடனெல்லாம் கழிந்து, சொந்த வீடு கட்டி, உடல் பூரித்து வளமாகத்தான் இருக்கிறான். பொய் சொல்லமுடியாது.

“போய்ச் சொல்லுங்க. என்ன நடக்குதுன்னு பாப்போம். அப்புறம் நீங்க யாரைப் பாக்கணும்னு நான் சொல்றேன்.”

“எதுக்கு?”

“என்ன சார், புரியாமப் பேசறீங்க! சீக்கிரம் அனுப்புன்னு அவர் சொன்னாப் போதுமா? கீழ இருக்கறவங்க வேலை செய்ய வேண்டாமா?”

*

பதிவாளர் அலுவலகத்துக்கு வெளியே இருந்த மகிழமரம் தன் நிழல் மீது பூக்களை உதிர்த்திருந்தது. முன்னர் பார்த்த கார் நின்றிருக்கவில்லை. வாயிலை ஒட்டி சுவரோரம் மூன்று கையில்லாத நாற்காலிகள். அவற்றிலொன்றில் பதிவாளருடைய உதவியாளர் அமர்ந்து விரோதப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இங்க யார் உன்னை அனுப்பியது என்பது போல. தயங்கியபடி சென்று ஓர் இருக்கை தள்ளி அமர்ந்தான். 

பதினைந்து நிமிடம் கழித்து வெளியே பதிவாளரின் கார் வந்து நின்றது. இவன் இருப்பதைப் பொருட்படுத்திய மாதிரியே தெரியவில்லை. கட்டம் போட்ட சட்டையை இறுக்கமாக அணிந்து தொந்தியருகில் பட்டன்கள் பிதுங்கித் தெரிந்தது. காரிலிருந்து வெளியே வந்தவுடன் படியேறி சரக்கென்று உள்ளே சென்று விட்டார். அவர் விட்டுச் சென்ற ஜவ்வாது வாசனை மட்டும் சற்று நேரம் அங்கு மிதந்தபடி இருந்தது. அவரைப் பார்க்க வேண்டும் என்று உதவியாளரிடம் கேட்டான். இப்பதான் வந்திருக்கார், இப்போதைக்கு முடியாது. சாப்பாட்டுக்கு அப்புறம் அவர் யாரையும் பார்ப்பதில்லை என்று தாழ்ந்த குரலில் சொன்னான். இவன் தன் அவசரத்தையும், காக்கிச்சட்டைதான் அவரைச் சந்திப்பதற்கான ஆலோசனையை அளித்ததாகவும் சொன்னான். இவர்கள் பேச்சுக்குரல் கேட்டு பதிவாளர் என்ன என்று உள்ளிருந்து விசாரித்தார். உதவியாளன் உள்ளே சென்று விளக்கியவுடன் இவனுக்கு அழைப்பு வந்தது. 

பதிவாளர் மேஜைக்குப் பின்னால் அமர்ந்து கோப்புகளை நோக்கிக் குனிந்திருந்தார்.  அழுந்த வாரப்பட்டிருந்த உப்பு-மிளகு தலைமுடிக்குப் பின்னால் வழுக்கை மண்டை தெரிந்தது. மதிய உணவின் தாக்கமோ என்னவோ மூச்சு பெரிதாக வந்து கொண்டிருந்தது. இவன் சென்று முன்னால் நின்றதும் சில கணங்கள் கழித்துதான் தலை நிமிர்ந்தார்.

“சொல்லுங்க.”

சொன்னான். சரியாகச் சொன்னானா தெரியவில்லை. ஆனால் தகவல் எதுவும் விடுபடவில்லை: அவனுக்குக் கனடாவில் வேலை கிடைத்தது; இன்னும் பதினைந்து நாட்களில் நடக்கவிருக்கும் விசாவுக்கான நேர்முகத்தேர்வு; ஆகஸ்டு முதல் வாரத்துக்குள் வேலையில் சேரவில்லையென்றால் பணி பறிபோகும் அபாயம்.

பதிவாளரின் முகம் மாறவில்லை. ஆனால் கனடா என்றதும் கண்களில் சிறு வெளிச்சம். எழுந்து நின்று பேண்டை மேலேற்றிச் சரி செய்தார்.

“ஃபைல் பாத்துட்டு முடிவு பண்றேன். நீங்க கெளம்பலாம்,” என்றார்.

ரகுநந்தன் தயங்கினான். வெறுமையாகப் புன்னகைத்தான். பதிவாளர் கண்ணாடியைக் கழற்றி மேஜை மீது வைத்தார். 

“சார், நார்மலா கனடாவுக்கு சாஃப்ட்வேர், மெடிசின்னுதான் மக்கள் போவாங்க. டீச்சர் வேலைக்குப் போறதுங்கறது ரொம்ப ரேர். எனக்கு அந்த வாய்ப்பு வந்திருக்கு. எல்லாம் நல்லா அமையறதுக்கு உங்க ப்லெஸ்ஸிங் வேணும் சார்,” என்றான். சட்டென்று குனிந்து அவர் பாதங்களைத் தொட்டான்.

“அட, இருக்கட்டும், இருக்கட்டும். எல்லாம் நல்லா நடக்கும் உங்களுக்கு,” என்றார். 

“தேங்க்யூ சார்,” என்று சொல்லி புன்னகைத்தபடி திரும்பி நடந்தான். அவர் இவனை அழைத்தார். ஒரு நிமிஷம் நில்லுங்க என்றார். அவர் பார்வை இவன் மீதே சில கணங்கள் இருந்தன. ஆனால் அவரது சிந்தனை எங்கோ இருந்ததாகப் பட்டது. தலையைக் குனிந்து மேஜையைப் பார்த்தார். ஏதோ செய்வதற்குத் தயங்குவதைப் போல ஒரு கணம் நின்றார். பின் நிமிர்ந்து இவனைப் பார்த்தார். பேரை மீண்டும் சொல்லும்படிச் சொன்னார். கோப்புகளைப் புரட்டி அவனுடையதைத் தேடினார். அவன் பெயர் பொறித்த கோப்பை உருவி எடுத்து, பிரித்து, சிறிது நேரம் படித்தார். பச்சை மசி பேனாவில் அதன் மேல் எழுதினார். 

“உங்களுடையதை டாப் பிரையாரிட்டில போட்டிருக்கேன்,” என்றார். மேஜையிலிருந்த தொலைபேசியில் எண்களை அழுத்தி, “சிவராமன், அந்த நேம்சேஞ்ச் பெடிஷனை இன்னிக்கே ஃபார்வர்ட் பண்ணிருங்க. டிலே பண்ண வேண்டாம். நான் கையெழுத்துப் போட்டுட்டேன். அவர் சொன்னமாதிரி நம்ம ப்ரொஃபஷன்ல அப்ராட் போறதுங்கறது ரேர். நாமதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்,” என்றார். இவனிடம் திரும்பி, “நீங்க கெளம்பலாம். இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு சர்டிஃபிகேட் வந்துரும்,” என்றார்.


* * *


15 பிப்ரவரி, 2021

பொற்குகை ரகசியம்


            வெளிப்புறத்தில் சுண்ணாம்பு பூசப்படாமல் சொரசொரப்பான சுவர்கள் கொண்ட கட்டிடமாயிருந்தது அது. பக்கவாட்டுச் சுவற்றுக்கு அருகில் ஒரு பெரிய வண்டியில்
 உடைந்த ரம்பங்களும், துருப்பிடித்த குதிரை லாடங்களும், பழுதாகிப் போன தொலைபேசிப் பெட்டிகளும் குவித்து வைக்கப் பட்டிருந்தன. அந்த வண்டியின் மீது ஏறினால் முதல் ஜன்னலில் கால் வைத்து, இரண்டாவது ஜன்னலைப் பற்றி விட முடியும். கட்டிடத்தின் முன்னும், பின்னும்தான் ஆட்கள் நின்றிருந்தனர். இந்தச் சுவர்ப்பக்கம் தரையில் குடித்து வீசப்பட்ட மது பாட்டில்களும், எச்சில் இலைகளும், வாழைமட்டைகளும் சிதறிக்கிடந்தன. அவை கலவையாகச் சேர்ந்து எழுப்பிய நாற்றம் பாலுவுக்குப் பிடித்திருந்தது. இரும்புச்சாமான் வண்டி மீது ஏறி ஒரே தாவில் முதல் ஜன்னலைப் பிடித்து விட்டான். அங்கிருந்து இரண்டாவது ஜன்னலை எம்பிப் பிடிப்பதுதான் சிரமமாயிருந்தது. கொஞ்சம் தவறினால் உடைந்த ரம்பங்கள் மீதுதான் விழ வேண்டும். பத்து நிமிட முயற்சிக்குப் பின் இரண்டாவது ஜன்னலுக்குப் போய்விட்டான். ஜன்னல் வழியே மாலை வெளிச்சத்தில் காயத்ரி குட்டைக்கை வைத்த பூப்போட்ட சட்டையும், பாவாடையும் அணிந்து, குத்த வைத்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான். வென்டிலேட்டர் வழியே பாய்ந்த ஒளிப்பட்டையில், அறைக்குள் தூசு நிரம்பிக் கிடந்தது தெரிந்தது. செல்லரித்த மர மேஜைகளும், மரச்சட்டகங்களும் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன. தன்னைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்த காயத்ரிக்கு இவனைப் பார்த்ததும் கண்கள் விரிந்தன. பாலுவுக்கு இது கனவா அல்லது மனம் மட்டும் விழிப்புற்று உடல் விழிப்புறாத நிலையில் தானே வரவழைத்துக் கொண்ட கற்பனையா என்று புரியவில்லை. வேறு யாரும் வருவதற்கு முன் தானே வந்து அவளை மீட்க முடிந்ததை நினைத்து ஆனந்தப்பட்டான். ஜன்னல் வழியே உள்ளே குதித்து, அவளருகே சென்று அமர்ந்தான். அவள் அவன் பக்கம் பார்வையைச் செலுத்தாது அமர்ந்திருந்தாள். உடல் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவளைத் தோளோடு சேர்த்து அணைத்து இறுக்கிக் கொண்டான். காயத்ரி அவன் மீது பட்ட இடங்களிலெல்லாம் மிருதுவாக இருந்தாள். அவளுக்கென்றே இருந்த அந்தத் தனிப்பட்ட வாசனையை நுகர்ந்தான். திருடன் போலீஸ் விளையாடும் போதெல்லாம் ரகசியத் திட்டம் போடுவதற்காக அவள் இவன் தோள் மீது கை போட்டுத் தனியே அழைத்துச் செல்லுகையில் நுகர்ந்தது இதே வாசனையைத்தான்.
       அணைப்பு இறுக்கமாகவும், கதகதப்பாகவும் இருந்திருக்க வேண்டும். அவளது நடுக்கம் நின்று விட்டது. இருந்தாலும் அவனுக்கு அணைப்பின் பிடியை விட விருப்பமில்லை. இது மாதிரிப் பலமுறை நிகழ்த்திப் பார்த்திருக்கிறான். ஆனால் அதற்கும் மேல் கற்பனை ஓட்டுவதற்கு தைரியம் இருந்ததில்லை. இதற்கு மேல் எல்லை மீறினால் அவளிடம் தான் உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் உடைந்து போய்விடுமோ என்று அஞ்சினான். மேலும், கற்பனையை வளர்த்திக் கொள்ள அவனுக்கு நேரம் இடம் கொடுப்பதேயில்லை. இரவு உறங்கப் போகையில் துவக்கினால் கற்பனையைத் தொடர முடியாதபடித் தூங்கிப்போய் விடுகிறான். அதிகாலையில் விழிப்பு வந்தவுடன் படுக்கையில் கிடந்தபடி யோசித்தால் பாட்டி எழுப்பி விட்டு விடுகிறாள்.
       இப்போதும் பாட்டி எழுப்பி விட்டு விட்டதால் காயத்ரியை அணைத்தபடி அமர்ந்திருக்கும் சித்திரம் அப்படியே உறைந்து விட்டது. எழுந்தவுடன் பாட்டி கொடுத்த தூக்கையும், பணத்தையும் கையில் பிடித்தபடி டீக்கடைக்குக் கிளம்பினான். சாலையில் இன்னமும் இருட்டு போர்த்தியிருந்தது. கீரைக்கூடைகளோடும், மார்கெட்காரிகளோடும் இருபத்திநாலாம் நம்பர் கடந்து போனது. ஒன்றிரெண்டு வீடுகளில் வாசல் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்து விட்டனர். அதிகாலக் காற்று சிலுசிலுவென்று உடைகளுக்குள் புகுந்த நேரத்தில் டெக்ஸ்டூலில் இருந்து இரவு ஷிஃப்ட் தொழிலாளர்களுக்குக் காலைத் தேநீர் நேரத்துக்கான சங்கு ஊதியதால் பாலுவுக்கு மயிர் கூச்செறிந்தது.
சோகையாய் எரிந்த மெர்க்குரி விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தின் நனைந்து கொண்டிருந்த டீக்கடை ஒன்றிற்குள் நுழைந்தான். உள்ளே சென்று டீ மாஸ்டர் கவுண்டரில் தூக்கைக் கொடுத்து நாலு ரூபாய்க்கு டீ சொன்னான். பிறகு கல்லாவுக்கு வந்து பாட்டிலிலிருந்து ஒரு நெய் பிஸ்கட் எடுத்துக் கொண்டான். இந்தக் கடையில் டீ வாங்கினால் தாத்தாவுக்குப் பிடிப்பதில்லை. அளவு கொஞ்சமாய்ப் போட்டு விடுகிறான் என்று புலம்புவார். மதீனா ஸ்டோருக்கு எதிரிலுள்ள கடையில் தூக்கின் கழுத்து வரை போட்டுத் தருவான். ஏழுபேர் குடிக்க தாராளமாக இருக்கும். பாலுவுக்கு அந்தக் கடை வரை நடந்து செல்ல சலிப்பாக இருந்தது. தூக்கம் கண்களிலேயே தேங்கியிருக்க இந்தக் கடை வரை நடந்து வருவதற்கே பெரும்பாடாயிருக்கிறது. தவிரவும் அந்தக்கடையில் தேங்காய் பன்தான் வைத்திருப்பான். அதிகாலையில் எழுந்து டீ வாங்கிக் கொண்டு வருவதற்கு உபகாரமாக வீட்டில் கொடுக்கும் ஒரு ரூபாய் முதலீட்டைத் தேங்காய் பன்னில் இழக்க அவன் தயாராயில்லை.
பாலு நெய் பிஸ்கட்டை டீயில் தொட்டுத் தின்று முடிப்பதற்குள் ஆறுமுகம் சித்தப்பா குளித்துத் தயாராகி விட்டார். அவனிடம் தன் கைப்பையைக் கொடுத்து விட்டு, அவன் தோளைப் பிடித்துக் கொண்டார். இருவரும் வெளியில் வந்து நடக்க, சித்தப்பாவின் தள்ளாட்டத்துக்கும், தடுமாற்றத்துக்கும் ஈடு கொடுத்து மெதுவாக நடப்பது பாலுவுக்குக் கடினமான காரியமாக இருந்தது. பத்து நிமிடம் இப்படியே நடந்து பேருந்து நிலையத்தில் நிழற்குடையினருகில் வந்ததும், பெட்டிக்கு மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரனை வசைச்சொற்களால் ஏசியபடி அடித்து எழுப்பினார் சித்தப்பா. சிக்குப்பிடித்த தலையோடு இருந்த அவன் அழுக்கு மண்டி நார்நாராஇ கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த ஆடைகளைச் சுருட்டி கொண்டு எழுந்து தூணோரம் சென்று தரையில் படுத்துக் கொண்டான். பாலு பெட்டியின் பக்கவாட்டுக் கதவைத் திறந்து உள்ளிருந்து ஸ்டூல், ஸ்டாண்டு, கிளிப்புப்பை எல்லாம் வெளியே எடுத்தான். பெட்டியைத் தூணோடு இணைத்துக் கட்டியிருந்த சங்கிலியின் பூட்டைத் திறந்து, சங்கிலியைக் கழற்றி உள்ளே போட்டான்.
பலபலவென்று விடிந்து கொண்டு வந்தது. சாலையின் மறுபுறம் சந்தைக்காரிகள் காய்கறிக்கூடைகளை விரித்து வைத்துக் கொண்டுக் கூவ ஆரம்பித்து விட்டார்கள். டெம்போவில் குவிக்கப்பட்டு வந்திறங்கிய மீன்களின் நாற்றம் காலைக்காற்றில் தவழ்ந்து பாலுவை வந்தடைந்தது. பேருந்து நிலையச் சாலையை இரண்டாகப் பிரிக்குமிடத்தில் அமைந்த பிள்ளையார் கோயிலின் ஒலிபெருக்கியில், ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’ ஆரம்பித்து விட்டது. பாலு ஸ்டாண்டை எடுத்துப் பெட்டிமேல் வைக்க, இவனும், சித்தப்பாவும் சேர்ந்து கிளிப்பு மாட்ட ஆரம்பித்தார்கள். இறுக்கமாக இருந்த சில கிளிப்புகளை மாட்டுவதற்கு பாலி மிகவும் சிரமப்பட்டான். இரண்டுகைகளாலும் சேர்ந்து கிளிப்பை அழுத்த, அது கைகளிலிருந்து பிதுக்கிக்கொண்டு தரையில் விழுந்தது. மீண்டும் எடுத்து மிகுந்த முயற்சிக்கிடையில் கிளிப்பை மாட்டி விட்டுக் கைகளைப் பார்த்தான். இரண்டு கைகளிலும் கட்டை விரலும், ஆள்காட்டி விரலும் ரோஜா நிறத்தில் சிவந்திருந்தன. இனி திரும்ப இந்தக் கிளிப்புகளில் பரிசுச் சீட்டுகளை மாட்டுகையிலும் இதே பிரச்னைதான்.
சித்தப்பா கைப்பையைத் திறந்து லாட்டரிச் சீட்டுக்கட்டை இவனிடம் கொடுத்தார். இன்றைய குலுக்கல் நாகாலாந்தைக் கீழ்வரிசையில் பத்துப் பத்தாக மாட்ட வேண்டும். ஒரு செட் பத்து ரூபாய். தனியாக வாங்கினால் ஒன்று ஒரு ரூபாய் இருபது காசுகள். நடு வரிசையில் நாளைய குலுக்கல் பூட்டான் ஐந்து ஐந்தாக மாட்ட வேண்டும். பூட்டான் டிக்கட்டுகள் எந்தத் தேதி குலுக்கலாயிருந்தாலும் நிறையப் போகும். அம்மாநில பரிசுச்சீட்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் அவற்றுக்கு விழும் பரிசுக்கு சித்தப்பா கமிஷன் எடுத்துக்கொள்ள மாட்டார். மேல்வரிசையில் குபேரும், தமிழ்நாடு அரசும், கேரளா பம்பர் குலுக்கலும் கட்டுக்கட்டாகவே வைத்து விடலாம்.
முதல் வரிசையை மாட்டி முடிப்பதற்குள்ளாகவே நேற்றைய குலுக்கல் முடிவுகள் பார்க்கக் கூட்டம் வந்து விட்டது. சித்தப்பா பாலுவிடம் மூன்று ரூபாயைக் கொடுத்து அதிர்ஷ்டமும், தினமலரும் வாங்கிவரச் சொன்னார். இவன் நிழற்குடை தாண்டி தாஜ்மஹால் ஓட்டல் அருகில் இருந்த பெட்டிக்கடைக்குப் போனான். செய்தித்தாளும், பான்பராகும், வார இதழ்களும் வாங்குவதற்காக ஒரு சிறு கூட்டம் கடை முன் நின்று கொண்டிருந்ததனால் இவன் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வாழைப்பழக் குலைகளுக்குப் பின்னால் முத்து காமிக்ஸ் புத்தங்கள் நீளவாக்கில் தொங்கவிடப்பட்டிருந்தன. இவன் படிக்காத கதையாகத் தெரிந்தது. அன்றைக்குத்தான் வந்திருக்கும் போலிருந்தது. மீனா அக்கா வீட்டில்தான் இரும்புக்கை மாயாவி கதைகளும், குற்றச் சக்ரவர்த்தி ஸ்பைடர் (ஸ்பைடர் முதலில் வில்லனாக இருந்தபோது செய்த சாகசங்கள் அவனுக்கு மிகவும் பிடிக்கும்) கதைகளும், கருமலைத்தீவு, கோமாளியின் கொலைகள், மற்றும் இன்னபிற இந்திரஜாலக் கதைகளும் தவறாமல் வாங்குவார்கள். அவற்றைப் படிப்பதற்காகப் பள்ளி விட்டதும் மீனா அக்கா வீட்டிற்கு நேராகச் சென்று விடுவான். அவன் வந்தவுடனேயே அக்கா அவனுக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்து விடும். தின்பதற்கும் ஏதாவது கொடுக்கும். அவர்கள் வீட்டிலேயே உட்கார்ந்து முழுவதையும் படித்துவிட்டு வீடு திரும்ப மணி ஆறாகி விடும். வீட்டுக்கு எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் போக மீனா அக்கா அனுமதிக்காது. ஆறுமணிக்கு வீடு திரும்பினால் ‘எங்கடா ஊரை சுத்திட்டு வர்றே?’ என்று கேட்பார் தாத்தா. இந்த மாதம் முழுக்கவே அப்படி எதையும் படிக்க முடியாமலாகி விட்டது. மீனா அக்கா கல்யாணமாகி நெய்வேலிக்குப் போய் விட்டது. ஊருக்குப் போகும்போது ஒருமுறை அவனையும் நெய்வேலிக்குக் கூட்டிச் செல்வதாகச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறது.
‘அது எவ்ளங்கண்ணா?’ என்றார் கைகாட்டி. கடைக்காரர் படக்கென்று கிளிப்பிலிருந்து ஒரு புத்தகத்தை உருவி, ‘ இந்தா, மூன்று ரூபாய்’ என்றார். ‘இல்ல. காசு இல்ல. அப்புறம் கொண்டு வந்து வாங்கிக்கிறேன்.’ என்றான். கடைக்காரர் அவனை வைதபடி அவன் கேட்ட செய்தித்தாள்களைக் கொடுத்தார். அவற்றை வாங்கிக் கொண்டு சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தான். அட்டைப்படத்தில் ஷெரீஃப் பழுப்பு நிற முழுக்கை சட்டையும், பாண்டும் அணிந்திருந்தார். சட்டை, பாண்ட் இரண்டிலும் எண்ணற்ற பாக்கெட்டுகள். கௌபாய் தொப்பி அணிந்தபடி இரண்டு தொடைகளிலும் செருகி நிற்கிற துப்பாக்கி ஸ்டாண்டுகளில் ஒன்றிலிருந்து ஒரு துப்பாக்கியை உருவி உயர்த்தியிருந்தார். அவர் அமர்ந்திருந்த குதிரை பிடரி சிலிர்த்தபடி இரண்டு கால்களையும் உயரத்தூக்கி நின்றிருந்தது. பின்னால் ஓர் இளம்பெண்ணும், தலையில் கோழி இறகுகள் செருகின, பரந்த முகம் கொண்ட செவ்விந்தியர் ஒருவரும் வரையப்பட்டிருந்தனர். பின்புலத்தில் பாலைவனமும், வறண்ட மலைகளும் தெரிந்தன. சூரியன் கொளுத்திக் கொண்டிருந்தது. ‘பொற்குகை ரகசியம்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. நின்றபடியே மனக்கண்ணில் கதையை யூகிக்க முயற்சி செய்தான்.  யூகிக்க யூகிக்க கதையை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டு மூன்று ரூபாய்க்கு என்ன செய்வது என்ற திட்டம் வலுப்பெற ஆரம்பித்தது. ‘அங்க என்னடா பண்ணிட்டிருக்கே? சீக்கிரம் வாடா?’ என்று சித்தப்பாவின் குரல் கேட்டது.
குலுக்கல் முடிவு பார்த்து விட்டுப் பரிசு விழுந்திருந்தால், பாதிபணத்துக்குப் பரிசுச் சீட்டு வாங்கவேண்டும் என்று சித்தப்பா வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவர் கடையில் வாங்கிய சீட்டாக இருந்தால் முழுப்பணமும் கொடுப்பார். சித்தப்பா பரிசுச்சீட்டுகளை மொத்தவிலைக்கடையிலிருந்து டி.சி போட்டுத்தான் வாங்குவதால் அவர்களிடமிருந்து கமிஷன் கிடைத்து விடும். வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எஸ்.எஸ்.மணியன் லாட்டரி சென்டரிலிருந்தோ, சேகர் கடைக்கோ பாலுதான் கடைக்குப் போய் பரிசுச்சீட்டுகளை மொத்த விலைக்கு வாங்கி வருவான். வாங்கிய சீட்டுகளை அன்றிரவே கட்டுகளின் பின்களை உருவி, ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் தேவமைந்தன் லாட்டரி சென்டர் என்கிற சித்தப்பா பெயர் கொண்ட சீல் குத்த வேண்டும். வாரத்தில் இரண்டாயிரம் சீட்டுக்காவது பாலு சீல் குத்துவான். தேவமைந்தனும், அவனது தாயும் சித்தப்பாவுக்கு இரு கண்கள். கால் சரியாக வேண்டும் என்று வருடாவருடம் வேளாங்கண்ணிக்குப் போய் வருவார். வரும்போது ஏசு, மேரி படம் போட்ட மோதிரங்கள், செயின், வேளாங்கண்ணி மாதாவின் உருவச்சிலை போன்றவற்றை வாங்கி வருவார். ஒருமுறை அவர் வாங்கி வந்த மாதா சிலை இருளில் கூட ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சித்தப்பாவின் இந்த ஏசு பக்தியால் பாலுவின் வாழ்க்கையில் விருப்பமற்றதாக ஒன்றும், விருப்பமானதாக ஒன்றுமாக இரு மாற்றங்கள் விளைந்தன. சகல வல்லமைகளும் கொண்ட, சங்கு சக்ரதாரியான மஹாவிஷ்ணுவுக்கும், மாதஜோதிடம் இதழின் பின் அட்டையில் வருகிற புராணப்படக்கதைகளின் மூலம் அவனது சமீபத்திய கதாநாயகனாகி விட்ட வினாயகருக்கும் நடுவில் முள்முடி அணிந்து, நெஞ்சில் கைவைத்து, பரிதாபப் பார்வை பார்க்கிற ஏசுவும் இடம் பிடித்து விட்டார். முதலில் பாலுவால் இதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் வீட்டில் யாரும் இந்த வரவேற்கத்தகாத மாற்றத்தைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அமாவாசையன்று தேங்காய் உடைத்து, கடவுளர்களுக்குக் காட்டுகிற தீபத்தை இப்போது ஏசுவுக்கும் சேர்த்துக் காட்டி விடுகிறார்கள். இரண்டு வருடமாக சுவரெல்லாம் வண்ணக்காகிதம் ஒட்டி, பலூன் ஊதி கிறிஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனாலும் சித்தப்பாவின் புதிய ஏற்பாடும், அவருக்கு எங்கிருந்தெல்லாமோ வந்து சேர்கிற குட்டிக் குட்டி நல்வழிக்கதைகள் புத்தகங்களும், பாலுவின் இந்த ஏமாற்றத்துக்கு ஆறுதல் அளிப்பதைப்போல் அமைந்திருந்தன. ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே. எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று ஏசு சொல்வது இவனுக்காகவே என்று பட்டது. புதிய ஏற்பாடு அறுபது பக்கங்களுக்கொருமுறை ஒரே மாதிரி திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. புதிய ஏற்பாட்டின் சம்பவங்களே குட்டிப் புத்தகங்களில் படம் போட்டு கதையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் பாலுவுக்கு ஸ்வாரசியமாகத்தான் இருந்தது.
இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்கும் கடை முன்பாக ரமேஷ் திடீரென்று பிரசன்னமாயிருந்தான். இவனைப் பார்த்து ‘ஊய்’ என்றான். பாலு உடனே முகம் மலர்ந்து, ‘சித்தப்பா, இன்றைய குலுக்கல் டிக்கெட் குடுங்க. நான் போய் வித்துட்டு வர்றேன்.’ என்றான்.
‘முதல்ல போய் டீ வாங்கிட்டு வாடா’ என்றார் சித்தப்பா. விடுவிடுவென்று கடைக்குப் போய் டீ வாங்கி வந்த பிறகு, அவனது பங்கு ஒரு ரூபாயைக் கையகப்படுத்திக் கொண்டான். சித்தப்பா இவனிடம் ஒரு முப்பது டிக்கெட்டுகளைக் கொடுத்து அனுப்பினார். வாங்கிக் கொண்டு ரமேஷைப் பார்த்து சைகை செய்தான். இருவரும் விடுவிடுவென்று ஓடி, சாலையைக் கடந்தார்கள். மூணாம் நம்பரில் ஏறி, ஜிப்பா அணிந்து, கைத்தடி வைத்திருந்த பெரியரிடம் பரிசுச்சீட்டுகளை நீட்டினான். ‘ போடா, அங்கிட்டு, வந்திட்டானுங்க காலங்கார்த்தால’ என்றார். வேகமாக அங்கிருந்து நகர்ந்து ஜோடியாக அமர்ந்திருந்த ஓர் இளம்பெண்ணையும், இளைஞனையும் பொருட்படுத்தாது நகர்ந்தான். டிரைவரிடம் கேட்கலாமா என்று முன்பக்கம் சென்றபோது பானட் பக்கம் உட்கார்ந்திருந்த குண்டுப் பெண்மணி வாயோரம் வழிந்த வெற்றிலைச் சாற்றை வழித்து வெளியே துப்பிவிட்டு, ‘இன்றைய குலுக்கலா?’ என்று கேட்டாள்.
இருபது டிக்கெட்டுகளையும் அவளே வாங்கிக்கொண்டதால் பாலுவுக்கு இரண்டு ரூபாய் லாபம். மீதி டிக்கெட்டுகளை சித்தப்பாவிடம் கொடுத்துக் கணக்குக் கட்டியதும், பெட்டிக்கடையில் பொற்குகை ரகசியத்தை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும் பாலுவைப் பொறுத்தவரை மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து விட்டன.
ஷெரீஃப் எதற்கும் கவலைப்பட்டவர் மாதிரித் தெரியவில்லை. பொற்குகையின் இருப்பிடம் தெரிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கடத்தப்பட்டிருப்பதாக அவரது பெண் வந்து முறையிட்டிருக்கிறாள். அவருக்கு உதவுவதாக செவ்விந்தியத் தலைவர் சொல்லியிருக்கிறார். மேலும் தொடர்வதற்குள் அடுப்படியிலிருந்து ‘கெளம்பலயாடா?’ என்றாள் பாட்டி.
பாலு பொற்குகை ரகசியத்தை மூடி விட்டு, தமிழ்ப் பாடநூலைக் கையிலெடுத்தான். இம்முறை காயத்ரி குதிரை மேல் முன்பக்கமாகப் பக்கவாட்டில் அமர்ந்திருக்கிறாள். பாலு குதிரையின் லகானைப் பிடித்துக் கொண்டு ஆறுதலாக அவள் தோள் மீது கை வைத்துக் கொண்டிருக்கிறான். அவள் கண்ணில் படலமிட்ட கண்ணீரைக் கண்டு நெஞ்சு கரைந்து விடுகிறது அவனுக்கு. ‘ வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி . . . ‘ படிக்கப் படிக்க செய்யுள் ஏற்கனவே நன்றாகவே நினைவில் இருப்பது புரிந்தது. பக்கங்களைப் புரட்டப் புரட்ட எதையும் படிக்கத் தோணவில்லை. அதற்குள் குளிக்கப் போகச் சொல்லி பாட்டி கூப்பிட ஆரம்பித்து விட்டாள்.
குளித்து உடை மாற்றியபின் அட்டையை எடுத்துக் கொண்டான். ‘ வர்றேன், பாட்டி ‘ என்றான் வாசல் தாண்டியவுடன். அவள் வெளியே வந்து, சாப்பிடலாயாடா? பழைய சோறும், தேங்காய்த் துண்டும் இருக்கு…’ என்றாள். வேண்டாம் என்று தலையை ஆட்டியபடி முன்னேறினான்.
‘ எங்க பாலுவுக்கு ஊசித்தொண்டை. சாப்பாடே இறங்கறதில்லை. ஆனா படிக்காமலேயே ஃபர்ஸ்ட் ரேங்க் வந்துடுவான். படிப்பில படு சுட்டி’ என்று எதிர் வீட்டு மைதிலி அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பாட்டி.

23 ஜூன், 2013

நாணயம்

சிறுகதை
காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தபடி இருந்தது. பெண்கள் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் நடந்தனர். டம்ளர் நிறைய சூடான காஃபியுடன் பொறுமையின்றி அமர்ந்திருந்தேன். ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளில் ஒன்றின் பாதையில் காஃபியை வைத்து விடலாமா என்று யோசித்தேன். தண்ணீர் போன்ற இந்தக் காஃபியைக் குடித்து முடிக்கிற வலி அகலும். விருந்தினர் வீட்டில் தரப்படுகிற காஃபியை முடிக்காமல் வைத்து விடக்கூடாது; குறிப்பாக அந்த விருந்தினர் உங்கள் மாமனாராக இருக்கும்போது. அது மரியாதையில்லை. விருந்தினர் தரும் எதையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவே மரபு வலியுறுத்துகிறது. குப்பைத் தொட்டிக்குள் குப்பையை வீசுகிற மாதிரி உங்கள் திசையில் வருகிற எல்லாவற்றையும் தொண்டைக்குள் வீசி விட வேண்டியதுதான்.
        இந்த ஒரு மணி நேரத்தில் நான்காவது முறையாக பாண்ட் பாக்கெட்டில் என் அலைபேசி அதிர்ந்தது. ஒரே விழுங்கில் காஃபி குடிப்பதற்குண்டான சூடு உள்ளதென்பதை உறுதி செய்துகொண்டு தொண்டையில் சரித்துக் கொண்டு அவசரமாக அலைபேசியை எடுத்தேன். என் முன்னாள் மேலாளர் ராமகிருஷ்ணன் அழைத்துக் கொண்டிருந்தார்.
        அலைபேசியின் அதிர்வைக் கொன்றுவிட்டு, நான் இப்போது வேலையாக இருப்பதாகவும், இன்னும் இருபது நிமிடங்களில் அவரைச் சந்திப்பதாகவும் குறுஞ்செய்தி அனுப்பினேன். அலைபேசியை உள்ளே வைத்துவிட்டு காயத்ரி எங்கிருக்கிறாள் என்று தேடினேன். ஒரு குண்டுப் பெண்மணியுடன் தீவிரமான உரையாடலில் ஈடுபட்டிருந்தாள். திடீரென்று உள்ளுணர்வால் தூண்டப்பட்டதைப் போல என் பக்கம்  திரும்பி அவளது முத்திரைப் புன்னகையொன்றை வீசினாள். அவள் எனக்கு வேண்டும் என்பதைக் கண்களின் வாயிலாகத் தெரிவித்தேன். செய்தி சென்று சேர்ந்திருக்க வேண்டும். குண்டுபெண்மணியுடனான உரையாடலை உடனே முடித்துக் கொண்டு என் பக்கம் நொக்கி நடந்தாள். பட்டுபுடவையில், சில ஆண்டுகளுக்கு முன் நான் காதலில் விழுந்த போதிருந்த அதே பள்ளிச் சிறுமியைப் போலிருந்தாள்.
        ‘காஃபி குடிச்சிட்டீங்களா, இல்லை நான் கொண்டு வரவா? என்றாள் இடுப்பில் கைகளை வைத்து என் முன் நின்றபடி.
        ‘ இப்பதான் குடிச்சேன். காயூ, நான் மேனேஜர் ராமகிருஷ்ணனை இப்பவே பாக்கப் போகணும் என்றேன்.
        ‘மஹேஷ், இது கொஞ்சம் கூட நல்லால்ல. சடங்கு இன்னும் முடியல. விருந்தாளிங்க எல்லாம் இங்கதான் இருக்காங்க. நீங்க இப்படி திடீர்னு வெளிய போனா மரியாதையா இருக்காது. உங்க கூட யாராவது பேசணும்னு நினைச்சா என்ன பண்றது?
        ‘ புரிஞ்சுக்கோ காயூ, அவர் இன்னிக்கி மட்டும்தான் ஊர்ல இருப்பாரு. ராத்திரி அவங்க ஊருக்கு போறாரு. நான் அவரைப் பார்த்துப் பல வருஷமாச்சு. என்னோட வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அவர்னு உனக்குத் தெரியும். என்ன சொல்லி அவரை நான் தவிர்க்கறது?
        ‘உண்மையச் சொல்லுங்க. வீட்டில முக்கியமான ஃபங்க்ஷன் நடந்துட்டிருக்கு, விருந்தாளிங்கல்லாம் இருக்காங்க; இப்ப வீட்டை விட்டு வந்தா அவங்களுக்கு மரியாதையா இருக்காதுன்னு சொல்லுங்க. அவரும் ஒரு குடும்பஸ்தர்தானே. புரிஞ்சுக்குவார்.வருத்தப்பட மாட்டார்.
        ‘ வருத்தம் இருந்தாலும் அவர் காமிச்சுக்க மாட்டார். பாயிண்ட் என்னன்னா நான்தான் அவரைப் பாக்கணும்னு நெனைக்கறேன். அவர் எனக்குச் செஞ்சதுக்கு நன்றிக்கடனாவாவது
        காயத்ரி என்னைக் கோபபார்வை பார்த்தாள். உடனே அந்தப் பார்வை மாறி இவன் ஒரு திருத்தமுடியாத முட்டாள் என்று சொல்வதைப் போலிருந்தது. ‘ சரி, போயிட்டு வாங்க. என்றாள் வேறு திசையில் பார்த்துக் கொண்டு.
        ‘வண்டி எடுத்துட்டுப் போகட்டுமா? பஸ்ல போனா ரொம்ப நேரமாகும்.
        ‘உங்களைத் திருத்த முடியாது. பெரியவங்க பஸ் ஸ்டாண்ட் போகணும்னா கொண்டு போய் விடறதுக்கு வண்டி வேண்டாமா? வண்டியெல்லாம் ஒண்ணும் கெடையாது. கெளம்புங்க
        அதுவே இறுதித் தீர்ப்பு என்பதை அறிந்தேன். வீட்டை விட்டு மெதுவாக நழுவி வெளியே வந்தேன். வாயிலில் சில முகங்கள் என்னைப் பார்த்துச் சில முகங்கள் நட்பாகப் புன்முறுவல் புரிந்தன. அவர்கள் யாரென்று எனக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. இருப்பினும் நானும் புன்னகை புரிந்து வைத்தேன். யாராவது முன் வந்து நான் வெளியே போவதைத் தடுத்திருந்தால் கூட ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். அது போன்ற எதுவும் நிகழ்ந்து விட வாய்ப்பளித்து விடா வண்ணம் அங்கிருந்து உடனே நடக்க ஆரம்பித்தேன்.
#       #       #       #
பேருந்து பிடித்துச் செல்லலாமா என்று தோன்றிய யோசனையை உடனே கைவிட்டேன். பேருந்து நிறுத்தத்தை அடைய பத்து நிமிடங்களாக நடக்க வேண்டும்; பேருந்துக்காகக் காத்திருப்பது வேறு கணிசமான நேரத்தை எடுத்துக் கொள்ளும்; பவானி பேருந்து நிலையத்திலிருந்து ராமகிருஷ்ணன் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்லுதலும் அவ்வளவு எளிய விஷயம் அல்ல. வேகமாக நடந்தால் முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்களுக்குள் அவரை அடைந்து விட முடியும் என்று தீர்மானித்தேன்.
        பவானிக்கும், கொமாரபாளையத்துக்கும் இடையில் காவேரி ஆறு ஓடியது. இந்த இடத்தில் அதற்குக் குறிப்பாக பவானி ஆறு என்றே பெயர். மூன்று பெரிய பாலங்கள் வெவ்வேறு இடங்களில் இரண்டு குறு நகரங்களையும் இணைத்தன. பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த மூன்றாவது பாலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. இன்னும் முறைப்படி திறப்பு விழா நடைபெறாததால், நான்கு சக்கர கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இரு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. கொமாரபாளையத்தின் ஜவுளி நெசவாலை மற்றும் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பவானிக்காரர்கள் இந்தப் பாலத்தைப் போக வர உபயோகிப்பதன் மூலம், தங்கள் பயணச் செலவைக் குறைத்துக் கொண்டார்கள். மேலும் ஈரோட்டில் இருந்து வரும் பேருந்துகள் கொமாரபாளையத்தை அடைவதை விட வேகமாக பவானியை அடைந்தன. எனவே பெரும்பாலான கொமாரபாளையம் மக்கள் ஈரோட்டில் இருந்து பவானி பேருந்து பிடித்து, பவானி வந்து புதுப்பாலம் வழியாக தங்கள் ஊருக்குச் சென்று விடுவார்கள்.
        மாலை ஆறுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரிய ஒளி இன்னும் இருக்கும் போதே தெரு விளக்குகளும் எரிய ஆரம்பித்து விட்டதால் பாலத்தைச் சுற்றிலும் ஒரு கிறக்கமான சூழ்நிலை நிலவியது. நான் பாலத்தின் நடைபாதையில் நடந்தபடி, போகப்போக என் வேகத்தை அதிகரித்தபடியிருந்தேன். மாலை நேரத்துக் குளிர் காற்று என் முகத்தைச் செல்லமாக வருடியது. ஆற்றின் பரப்பில் பயணம் செய்தபடி இருப்பதால் காற்றுக்கு ஒரு விநோதமான மிருதுத்தன்மை இருந்தது. தூய காற்றை ஆழமாகச் சுவாசிக்க விரும்பினேன். என் நுரையீரல்களுக்குள் ஒரு டன் காற்றைச் செலுத்தினேன்; புத்துணர்ச்சியுடையவனாகவும், ஓய்வான மனநிலை கொண்டவனாகவும் ஆனேன். மெல்ல என் சுற்றுப்புறத்தை நோட்டம் விடலாமென்ற எண்ணத்தில் வேகத்தைக் குறைத்தேன்.  ஆற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். ஆற்றுக்குள் நீர் பார்க்கமுடிகிற அதிர்ஷ்டகரமான மாதங்களில் ஒன்று அது. நிறைய பாறைகளை நீர் விழுங்கியிருந்தது. அவற்றின் சிகரங்கள் மட்டும் நீரின் பரப்பில் தெரிந்தன. மறுகரையில் சில பெண்கள் பாறைகளில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள்; கொஞ்ச தூரத்திலேயே சில ஆண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். என் பார்வையை விலக்கி பாலத்தைக் கடக்க இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறதென்று கணிக்க முற்பட்டேன். இன்னும் சில நிமிடங்கள் எடுக்கும். மக்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த சந்தையிலிருந்து பெண்கள் தலையில் பெரிய கூடைகளைச் சுமந்தபடி ஒரு தீவிர தாள லயத்தோடு நடந்து கொண்டிருந்தார்கள். தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்களும், மாணவிகளும் (அரசு பள்ளிகள் முன்னதாக முடிந்து விடும்) தங்கள் மிதிவண்டிகளை உல்லாசமாக மிதித்துக் கொண்டிருந்தார்கள். பையன்கள் கிரிக்கெட்டையும், திரைப்படத்தையும் உரையாடினார்கள்; பெண்கள் படிப்பையும், திரைப்பட்த்தையும் பற்றி உரையாடினார்கள். பையன்கள் கேட்கும் தொலைவிற்கு அப்பால சென்று விடும் போது, பெண்கள் பையன்களைப் பற்றிப் பேசினார்கள்; பெண்கள் கேட்கும் தொலைவிற்குள் வரும் போது பையன்கள் பெண்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்களிடத்தில் இளமையின் ததும்பலைக் கண்டு என் உதடுகள் புன்முறுவல் பூத்தன. பாலம் முழுவதும் ஒரே இரைச்சலாக இருந்தது. இரு சக்கர வாகனங்கள் தேவையே இல்லாமல் ஹாரன் ஒலி எழுப்பின; மக்கள் அவசியமின்றிப் பேசிக் கொண்டும், கத்திக் கொண்டும், சபித்துக் கொண்டும், துப்பிக் கொண்டுமிருந்தார்கள். தெருவோர உணவகங்கள் தமிழ்த் திரைப்படப் பாடல்களை சத்தமாக ஒலிபரப்பி, தங்கள் தொழில் துவங்கி விட்டதை அறிவித்தன. பாலத்தின் மறுமுனையை அடைந்த போது, இரண்டு காவலர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி அவற்றின் ஓட்டுனர்களிடம் முறையான உரிமம் இருக்கிறதா என்று பரிசோதித்தபடியிருந்தனர். மாதக்கடைசியாகையால் இது எதிர்பார்த்த ஒரு நிகழ்வுதான். ஒரு மாதத்திற்குக் குறைந்தது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
        பேருந்து நிலையம் பாலத்தின் முடிவிலேயே இருந்தது. நிலையத்தை அடைந்த உடனேயே அங்கு ஈரோடு செல்லும் பேருந்து ஒன்று நிற்பதைக் கண்டு மகிழ்ந்தேன். இப்போது நான் பேருந்தைப் பிடித்தால், கூடுதுறைக்கு அருகிலிருக்கிற ராமகிருஷ்ணனின் வீட்டை விரைவில் அடைய இயலும். ஓடிச்சென்று பேருந்தில் ஏறினேன். கூடுதுறையை இன்னும் பத்து நிமிடங்களுக்குள் அடைந்து விடலாம். நான் உற்சாகமானேன்.
#       #       #       #
        கூடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, நாங்கள் சந்தித்துக் கொள்வதாக முடிவு செய்திருந்த தேநீர் கடையில் ராமகிருஷ்ணனைக் காணவில்லை. கடையின் உள்ளேயும் அவர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. கடைக்கு வெளியே நின்றபடி அலைபேசியில் அவரை அழைத்தேன்.
        போக்குவரத்து ஏற்படுத்திய இரைச்சல் காரணமாக அவரது குரலைப் புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது. ஒரு சாயப் பட்டறையில் மாட்டிக் கொண்டதாகவும், இன்னும் இருபது நிமிடங்களில் என்னைச் சந்திப்பதாகவும், அதுவரை தேநீர் கடையிலேயே காத்திருக்கும்படியும் சொன்னார். சொன்னார். கிளம்புவதற்கு முன்னமே அவரைத் தொடர்பு கொள்ளாததற்கு என்னயே சபித்துக் கொண்டேன்.
        என் அதிர்ஷ்டத்தை நொந்தபடி கடையின் வெளியில் காத்துக் கொண்டிருக்கையில் (கடையின் உள்ளே ஓர் இருக்கை கூடக் காலியாக இல்லை.) என்னிடத்தில் ஒரு விருந்தினர் வந்தார். அந்த மனிதன் முதலில் தேநீர் கடையின் முதலாளியிடமும், உள்ளே இருந்தவர்களிடமும் தன் அதிர்ஷ்ட்த்தைப் பரிசோதித்திருக்க வேண்டும்; அவன் நின்ற கோலமே, நான் அவனுக்கு என் பாக்கெட்டிலிருந்து ஏதேனும் எடுத்துத் தரவேண்டும் என்று சொல்வதைப் போலிருந்தது. சில நிமிடங்கள் அங்கு அமைதியாக நின்றபடி என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். என் உள்ளார்ந்த பண்புகளை எடை போடுவதைப் போலிருந்தது அவன் பார்வை. அவனது இடது உள்ளங்கை என்னை நோக்கி நீட்டப்பட்டிருந்தது.
        ஒரு பிச்சைக்காரனாகத் தோன்றினாலும், அவனது தோற்றம் எனக்குள் ஒரு விரும்பத்தகாத தந்தியை மீட்டி விட்டிருந்த்து. தந்தியின் அதிர்வுகள் அவன் என்னை விட்டுச் சென்றபின்னும் சில நிமிடங்கள் தங்கியிருந்தன. கிழிந்து, அழுக்குப் படிந்த உடையை அணிந்திருந்தான். அவனது தலை தேனிக் கூட்டைப் போலிருந்தது. ஏதோ கருந்திரவம் அவன் உடல் முழுவதும் பூசப்பட்டதைப் போலிருந்தது. வலது காலில் உறையின்றி ஒரு ஷூவை அணிந்திருந்தான். ஷூவின் முன்புறம் ஒரு பெரிய ஓட்டை இருந்தது. எலும்பாக இருந்தாலும் உறுதியான சட்டகம் கொண்டவனாக இருந்தான். அவன் என் முன் என்னிடம் ஒரு ரூபாய் நாணயத்தை எதிர்பார்த்து நிற்பதாகத் தோன்றினாலும், அவனது பார்வை வேறு ஏதோ கதை சொல்வதாகத் தோன்றியது. அவனது கண்கள் நெருப்புப் பந்துகளைப் போல் ஒளி வீசிக் கொண்டிருந்தன; எந்நேரமும் அக்கண்கள் நெருப்பை உமிழ்ந்து விடுவன போலிருந்தன. அவனை அளக்க, அளக்க நான் பதற்றமடைந்தேன். சக மனிதனின் மேலுள்ள கருணையினால் அல்ல, அவனை அவ்விடத்திலிருந்து நீக்கி விட வேண்டுமென்ற குறையாத ஆவலினால் அவனுக்கு எதையாவது கொடுத்து விடுவது என்று முடிவு செய்தேன். சட்டைப்பைக்குள் உலோகம் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று துழாவிய போது ஒன்று கிடைத்தது. ஆனால் வெளியில் எடுத்து ஓர் ஐந்து ரூபாய் நாணயத்தைக் கண்டபோது மனம் தளர்ந்தேன். இலக்கற்றுத் தெருவில் திரிகிற ஒரு பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாயைத் தானமளிக்கும் எண்ணம் ஏது எனக்கில்லை. அந்தப் பணத்துக்கு ஒரு டீ குடிக்கலாம்; திரும்பி வீட்டுக்குப் பேருந்தில் செல்ல்லாம். ஐந்து ரூபாய் என்பது மிக்க மதிப்புடையது.  ஆனால் என் சூழலில் இருந்து இவனைத் துடைத்தெறிந்தாக வேண்டும். மன்னிக்கவியலாத குற்றம் செய்தவனைப் போல இவன் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னால் அமைதியாக நிற்கக்கூட முடியாத அளவுக்குக் கொடுமையாக இருக்கிறது. அரை மனதோடு அவனது உள்ளங்கையில் நாணயத்தைப் போட்டேன். அவன் எனக்கு நன்றி சொல்லவில்லை; நான் அதை எதிர்பார்க்கவுமில்லை. அதே துளைக்கும் பார்வையோடு அங்கேயே நின்றிருந்தான். அந்த வெளிப்பாடு மாற வேண்டும் என்று நான் எதிர்பார்க்காமல் இருந்ததற்கு என்ன காரணமென்றும் என்னால் விளக்க முடியவில்லை. எதனாலோ அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய நிலையிலேயே இருந்தேன். என்னை விட்டு விலகவே மாட்டானோ என்று அஞ்சினேன். ஒருவேளை என்னை அவனுடன் அழைத்துச் செல்ல அவன் பிரியப்படலாம். எனக்கு ரஜினிகாந்த் நடித்த ஒரு தமிழ்த் திரைப்படம் நினைவுக்கு வந்தது. நாயகனை ஒரு பிச்சைக்காரன் ரகசிய வழிகளினூடாக இமாலயத்துக்கு அழைத்துச் செல்வான். அங்கு நாயகன் ஞானிகளையும், ரிஷிகளையும் சந்திப்பான். அவனுக்குப் பல வரங்கள் அளிக்கப்படும். இதை நினைக்கையில் எழுந்த புன்னகையை என்னால் அடக்க முடியவில்லை. என் புன்னகையைக் கண்டதும் அவனது பார்வை தீவிரமடைந்தது. நானே அவனைக் கூவி விரட்டிவிடலாமா என்று எழுந்த எண்ணத்தைக் கைவிட்டு, அவனுக்கு எதிர்த்திசையில் நோக்கினேன். கூடுதுறைக் கோயில் கோபுரம் பார்வையில் பட்டது. கோபுரத்தின் ‘சிவ சிவ எழுத்துக்கள் பிரதானமாகத் தெரிந்தன. இன்னமும் அவன் என்னைத்தான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த இடத்தை விட்டு விலகி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
#       #       #       #
                ‘என்னப்பா, எப்படி இருக்குற? ராமகிருஷ்ணனின் தவிர்க்கமுடியாத குரல் பின்னாலிருந்து எதிரொலித்தது. சட்டென்று திரும்பிப் பார்த்தபோது ராமகிருஷ்ணன் என்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார். அவர் என் அருகில் வந்ததும், பிச்சைக்காரன் என்னை விட்டு உடனே விலகினான். நான் என் அலைபேசியை வெளியே எடுத்து அணைத்தேன். எங்கள் உரையாடலுக்குக் குறுக்கே யாரும் வருவதை நான் விரும்பவில்லை.
        ‘சார், வணக்கம். நல்லா இருக்கீங்களா? ஒரு புன்னகையுடன் அவரை வரவேற்றேன்.
        ‘ம்ம். . . நல்லா இருக்கேன். நீதான் எங்கள எல்லாம் மறந்துட்ட போல இருக்கு. எங்களையும் கொஞ்சம் நெனச்சுப் பாருப்பா. பழச மறந்துறாத.
        நான் தயக்கமாய்ப் புன்னகைத்தேன். ‘அப்படியில்ல சார். எங்க மாமனார் வீட்டில ஒரு விஷேசம். கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்.
‘எதாவது சாப்பிட்டியா? வா, டீ சாப்பிடலாம். என்றார். என் இடது தோளில் கை போட்டபடி, டீக்கடையின் உள்ளே இழுத்துச் சென்றார். டீ மாஸ்டரிடம் உரத்த குரலில் தன் தேவையச் சொன்னார்; இரண்டு கோப்பை பால் கலந்த தேநீர், அதில் ஒன்று சர்க்கரை குறைவாக, மற்றும் இரண்டு பருப்பு வடைகள். உள்ளே இருந்த கொஞ்ச இட்த்தில் நெருக்கி நின்றபடி தேநீருக்காகக் காத்திருந்தோம்.
        தேநீரின் மேற்பரப்பில் குறைந்தது கால் இன்ச் அளவுக்கு நுரை நின்றது. ஊதி ஊதித்தான் தேநீரைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ராமகிருஷ்ணனும் அதையேதான் செய்து கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் அதைத்தான் செய்ய வேண்டும். நுரையில்லாத தேநீர் வேண்டுமென்றால் முன்னமே சொல்லியிருக்க வேண்டும். சில புத்திசாலிகள் அப்படிச் செய்வதுண்டு. வடை காலையில் சுட்டதாக இருக்க வேண்டும். சில்லென்றும், தோல் போல முரடாகவும் இருந்தது.
        தேநீர் கடையில் இடம் இல்லாததாலும், அறையில் நண்பர் ஒருவர் இருப்பார் என்பதாலும், கூடுதுறை கோயிலுக்குள் சென்று விட்டால் உரையாடலுக்கு வசதியாக இருக்கும் என்று ராமகிருஷ்ணன் கருதினார். எட்டு மணி கடைசிப் பூஜைக்குப் பிறகு கோயிலை மூடி விடுவார்கள். இருந்தாலும் கோயில் வராந்தாவில் உட்கார்ந்து உரையாட முடியும் என்றார்.
        கூடுதுறைக் கோயிலுக்குள் சென்ற உடனேயே ஞாபகங்கள் அலையலையாக என்னை வந்தடைந்தன. இதே கோயிலில்தான் காயத்ரியிடம் என் காதலைச் சொல்லி, மதுரை மீனாட்சி அம்மனால் மட்டுமே ஈடு செய்ய முடிகிற ஒரு புன்னகையைப் பதிலாகப் பெற்றேன். சுமார் ஒண்ணரை ஆண்டுகளுக்கு இந்தக் கோயில்தான் நாங்கள் வருகை புரியும் இடமாக இருந்தது. என் வருகைக்குக் காரணம் அவளைச் சந்திப்பதும், அவளோடு மகிழ்வாக உரையாடுவதுமேயாகும். அவளுக்கோ அழிவின் இறைவன் சிவனின் சன்னதியே முதல் விருப்பம். கோயிலுக்குள் ஸ்தாபிக்கப்பட்டிருந்த எண்ணற்ற லிங்கங்களுக்குள், வில்வ மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய லிங்கமே அவளது முழு கவனத்துக்கும், திருநீறும், வில்வ இலைகளின் அர்ச்சனையுடனும் கூடிய கால்மணி நேர அமைதியான வழிபாட்டிற்கும் உரித்தானதாக இருந்தது; அதற்கும் முன் பிரதான தெய்வமான சங்கமேஸ்வரரை தரிசிப்பது கட்டாயம். இந்தத் தருணங்களிலெல்லாம் நான் அவளைப் பின் தொடர்ந்தபடியே, அவளது விருப்பமான சடங்குகளுக்குப் பின் என்னுடன் நிகழ்த்தப் போகிற இனிமையான உரையாடல்களுக்காகக் காத்திருப்பேன்.
#       #       #       #
அன்று மாலையும் ராமகிருஷ்ணன் பேசத் துவங்குவதற்காக குறுகுறுப்புடன் காத்திருந்தேன்; சரியாகச் சொல்வதானால் அவர் என்னை விட்டு எப்போது விலகுவார் என்று காத்திருந்தேன். என்னவோ எனக்கு இந்தச் சந்திப்பு குறித்து ஒரு விருப்பற்ற உணர்வு ஏற்பட்டது. மேலும் என்னால் அந்தப் பிச்சைக்காரனை மனதிலிருந்து விலக்க முடியவில்லை.
கோயில் கடையிலிருந்து பிரசாதம் வாங்கி வருவதற்காக ராமகிருஷ்ணன் சென்றிருந்தார். திரும்பி வந்தபோது அவர் முகம் பிரகாசமாக இருந்தது. ‘ இங்க விக்கற புளிசாதம்தான் ஊர்லயே பெஸ்டு என்றபடி என்னருகில் அமர்ந்து ஒரு புளிசாதப் பொட்டலத்தை என்னிடத்தில் நீட்டினார்.
புளிசாதப் பொட்டலத்தைத் திறந்தபடியே அவர் முகத்தில் நிலவிய குழந்தைமையைக் கண்டு வியந்தேன். எனக்க்குள் குற்றவுணர்வின் இழை ஒன்று நெளிவதை உணர்ந்தேன்.
‘ சார், அந்த டினோபால் மேட்டரை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா? என்றேன் தயக்கத்தோடு.
‘ஓ, யெஸ். கிட்டத்தட்ட லைஃபையே மாத்தின அந்த விஷயத்தை எப்படி மறக்க முடியும்?
‘ ரொம்ப சாரி சார். என்றேன் குற்றவுணர்வு பொங்கியபடி இருந்தது. ‘ எல்லாம் என் தப்புதான்.
‘ சே, சே. அப்படியெல்லாம் சொல்லாத. உன்னால முடிஞ்சத நீ செஞ்ச. அந்த லாட்ல தப்பா டினோபாலைச் சேர்த்தவுடனேயே நீ என்னக் கூப்பிட்டுச் சொல்லிட்ட. நீ பண்ண தப்ப மறைக்கவோ, இன்னொருத்தர் மேல சுமத்தவோ நீ நெனக்கல. அது ரொம்ப உயர்ந்த குணம்பா. நீ பண்ண ஒரே தப்பு என்னோட இன்ஸ்ட்ரக்ஷனை மறந்ததுதான். அது வொயிட் லாட் இல்ல, அதுல டினொபால் சேர்க்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லிருப்பேன். சரி, உனக்கு அப்ப அனுபவம் பத்தல. ஒரு வாரம் முன்னாடிதான் லேப்ல இருந்து ப்ளீச்சிங்க் டிபார்ட்மெண்டுக்கு மாத்திருந்தாங்க. கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துருக்கலாம். சரி அத விடு. எல்லாம் நடந்து முடிஞ்ச கதை. என்றார். அவரது கவனம் பேச்சை விட புளிசாதத்தின் மேல்தான் இருந்தது மாதிரி பட்டது.
#       #       #
நான் என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினேன், அது முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட. ‘சார், அன்னிக்கு நைட் ஷிஃப்ட். வொர்க்கர்கிட்ட கெமிக்கல் இண்டென்ட் கொடுத்தவுடனேயே நான் தூங்கிட்டேன். மறதியா இண்டென்ட்ல இரண்டு கிலோ டினோபாலை எழுதிட்டேன். வொர்க்கரும் நான் எழுதிக் கொடுத்ததையே செஞ்சுட்டான். நான் பாட்டுக்கு சுகமா தூங்கிட்டிருந்தேன். நான் மட்டும் தூங்காம முழிச்சிகிட்டு இருந்திருந்தா, அந்த அசம்பாவிதத்தை தடுத்திருக்க முடியும். பர்கண்டி கலர் போட வைச்சிருந்த லாட்டுக்கு வைட்டனிங்க் ஏஜன்டை சேர்த்து அதை மேலும் டை பண்ண முடியாதபடி பண்ணிட்டேன். பத்தாயிரம் மீட்டர் துணி சார். பையருக்கும், கம்பெனிக்கும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திட்டேன். ஆனா குத்தத்தை நீங்க உங்கமேல ஏத்துகிட்டீங்க. என்னை வார்ன் பண்ணதோட விட்டுட்டாங்க. ஆனா நிறைய பட்டது நீங்கதான். உங்க வேலை போச்சு; பிராவிடண்ட் ஃபண்ட் இல்லன்னுட்டாங்க. நீங்க சொன்ன மாதிரி அந்த சம்பவம் உங்க வாழ்க்கையையே மாத்திருச்சு. எல்லாம் என்னால. உங்களையும், கம்பெனியையும் பத்தி நினைக்கும் போது எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு. இதுக்கு முன்னாடி நீங்க என்ன பார்க்கணும்னு விரும்பிய போதெல்லாம் உங்கள நான் அவாய்ட் பண்ணினதுக்குக் காரணம் இதுதான்.
‘மஹேஷ். நீ அப்ப ரெசிக்னேஷன் கொடுத்துருந்த. நீ குத்தத்த ஒப்புத்துக்கிட்டிருந்தீன்னா, எம்.டி உன்ன சும்மா விட்டுருக்க மாட்டார். உனக்கு அந்த மாச சம்பளமும் கெடைச்சிருக்காது. அந்த வருஷ போனசும் கெடைச்சிருக்காது. பொங்கல் நெருங்கிட்டிருந்தது, நினைவிருக்கா? அந்த நேரத்துல் உன் குடும்பம் இருந்த நெலைமைக்கு, போனஸ் பணம் வரலைன்னா நீ திண்டாடிப் போயிருப்ப. நீ புதுசா சேர இருந்த கம்பெனி நம்ம எம்.டிக்கு ரொம்ப பழக்கமானது. நீ வாழ்க்கையில மேல வர்றதுக்கான எல்லா வாய்ப்புகளையும் அவர் பாழாக்கிருப்பார்.
‘ஆனா, இதுல கடுமையா பாதிக்கப்பட்டது நீங்கதான்.
‘அப்படியா நினைக்கற? சே, சே. சொல்லப்போனா அது எனக்கு ப்லெஸ்ஸிங்க் இன் டிஸ்கைஸ். இந்த கெரகம் புடிச்ச வேலையை விடணும்னு நானும் ரொமப நாளா முயற்சி பண்ணிட்டிருந்தேன். ஆனா அதுக்கு தைரியம் இல்லாம இருந்தது. அது இயற்கையாவே நடந்தப்ப, ,முதல்ல அதிர்ச்சியா இருந்தாலும் அப்புறம் விடுதலையா இருந்தது. என் வாழ்க்கையை நிதானமா திரும்பிப் பார்க்கறதுக்கான ஒரு வாய்ப்பு. வாழ்க்கையில சில முக்கியமான முடிவுகளை எடுக்கறது அந்த நிலைமையில எளிதா இருந்தது. ஒரு வகையில இந்த மாதிரி நடந்தது எனக்கு மகிழ்ச்சிதான்.
‘நீங்க இப்ப உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கீங்களா சார்.’
‘அப்படிச் சொல்லலாம். வாழ்க்கையில எந்தத் தருணத்திலயும் ஒருத்தர் தன் வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியா இருக்கறான்னு சொல்லிட முடியாது. ஆனா நிறைய பாரங்கள் என்னை விட்டு நீங்கிட்டதுன்னு மட்டும் சொல்ல முடியும். என் பாக்கெட் காலியா இருக்கு; என் பாதை தெளிவா இருக்கு; அல்லக்கைகள் யாரும் இல்லை; எஜமானர்களும் யாரும் இல்லை என்றார் சத்தமாகச் சிரித்தபடி.
#       #       #
‘நான் ஒரு நிமிடம் அவரையே ஆழ்ந்து நோக்கியபடி இருந்தேன். அவர் என்னிடம் அப்போது சொன்னவற்றைப் பற்றிச் சிந்தித்தபடியிருந்தேன். அவர் குரல் நாடோடியைப் போல் ஒலித்தாலும், அதிலிருந்த மெல்லிய நடுக்கம் அவரது பணி வாழ்க்கையின் மாலைப் பொழுதின் எதிர்பாராது நிகழ்ந்து விட்ட திருப்பங்களால் அவர் பட்டிருந்த காயங்களைப் பறை சாற்றுவதாக இருந்தது. அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்த கொழுத்த சம்பளத்தோடு மட்டுமின்றி, நல்ல தரத்தோடு குறித்த நேரத்தில் துணியை உற்பத்தி செய்து தருவதற்காக வாடிக்கையாளர்களிடம் பெற்றுக் கொண்டிருந்த கமிஷனையும் நிர்வாக இயக்குனரிடம் நிகழ்த்திய சில நிமிட உரையாடலிலேயே இழந்து விட்டார். இப்போது தன் அவலத்தை நியாயப்படுத்திக் கொண்டிருப்பதாகத்தான் பட்டது. வாழ்க்கையில் அவருக்கென்று தேர்வுகள் இல்லையென்பது எனக்குத் தெரியும். அரிசி மண்டியில் மொத்த வியாபாரம் செய்யும் விற்பனையாளர் ஒருவரிடம் வாங்கிய 86 ஆம் வருடத்திய பஜாஜ் ஸ்கூட்டரைத்தான் இன்னும் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் அணிகிற ஆடைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கியவை. ஒரு எளிய உணவில் அவரால் திருப்தி அடைந்து விட முடியும். ஆனால் அவர் குடும்பத்துக்குச் செய்கிற எல்லாவற்றையும் குறை செய்கிற ஒரு கல்வியறிவற்ற மனைவியும், அவர் பணத்தை அழகு சாதனங்களில் ஊதாரித்தனமாகச் செலவழிக்கிற இரு பதின்பருவ மகள்களும் இருந்தனர். ஆடை பதனிடும் தொழிற்சாலையில் உள்ள என் நண்பர்கள் மூலமாக அவர் கையில் ஒன்றும் அவ்வளவு பெரிய இருப்பு இல்லை என்றும் தெரிந்து கொண்டேன். சிறிய ஆலைகளிலிருந்து சில ஆர்டர்களை எடுத்திருந்தார். அவற்றைப் பல்வேறு பதனிடும் நிலைகளினூடாகத் தொடர்வதன் மூலம் வரும் வருமானம் அவரது அன்றாடச் சொந்தச் செலவுகளுக்கே போதாது. இதில் குடும்பச் செலவுகளுக்கு எங்கே காணும்?
நான் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்து, ‘ எனக்குப் பொருளாதார ரீதியா கொஞ்சம் சிரமம்தான். நான் உன்னைத் தொடர்பு கொள்ளனும்னு நினைச்சேன்; உனக்கு மெயில் அனுப்பினேன்; உன் நம்பருக்குப் ப்ல தடவை கூப்பிட்டுப் பார்த்தேன். நீ அசையல. உன் காரீயர்ல நீ கவனம் செலுத்திட்டு இருந்திருப்பேன்னு நினைக்கிறேன்.
நான் வேலை மும்முரத்தில்தான் இருந்தேன். ஒரு தரக்கட்டுப்பாட்டு அலுவனாக இருந்ததில் இருந்து பங்களூருவில் உள்ள புகழ் பெற்ற ஒரு கல்வி நிலையத்தின் விரிவுரையாளனாக என் தொழிலை மாற்றிக் கொண்டேன். அந்த வேலை போதுமானது என்று சொல்வதற்கும் மேலான பணம் கொடுத்தது. ஐந்து வருடத்தில் நான் முற்றிலும் மாறிய மனிதனாகி விட்டேன். என் சொந்த ஊரில் வீடு கட்டிவிட்டேன். என்னிடம் செவர்லே காரும், வங்கியின் நிரந்தர சேமிப்புத் திட்டத்தில் கொழுத்த பணமும் இருந்தன. ராமகிருஷ்ணன் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றது என்னிடம் பொருளாதார உதவி எதிர்பார்த்துதான் என்று எனக்குத் தெரியும்; அந்தக் காரணம் பற்றியே நான் அவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க முயற்சித்தேன். துணி ஆலையிலிருந்து ஒரு நண்பர் என்னைத் தொடர்பு கொண்டு, ராமகிருஷ்ணன் தனியாக ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனம் துவங்க எண்ணம் கொண்டுள்ளதாகவும், அதற்கென தேவைப்படும் பெரிய தொகையை என்னிடம் கேட்க வாய்ப்புண்டு என்றும் தகவல் கொடுத்தார். வீடு கட்டும் சுமை மட்டும் இல்லாதிருந்திருந்தால் நான் அவருக்கு உதவியிருக்க முடியும். ஆனால் நம் நிலையை நாம் எப்போதுமே நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது, குறிப்பாக ராமகிருஷ்ணனிடம்.
‘உங்க கை கொஞ்சம் நடுங்கற மாதிரி இருக்கு! என்றேன், அவர் உடல் முழுக்க அவஸ்தையான பலவீனத்தில் இருப்பதை உணர்ந்தபடி.
‘ஓ, யெஸ். என்றார் தன் உள்ளங்கைகளைப் பார்த்தபடி. ‘ என் கனவுக் கடலில் குதிக்கறதுக்கான நேரம் வந்துடுச்சு.
‘எனக்குப் புரியல
‘இப்பல்லாம் நான் அடைக்கலம் தேடிக்கறது மதுவிடம்தான். அது எனக்கு நல்லா உதவி பண்ணுது. இந்த வீணாப் போன உலகத்தை மறக்கடிச்சு இன்னொரு பரிமாணத்துக்கு என்னை அழைச்சுட்டுப் போயிடுது. நீ குடிப்பியா மஹேஷ்?
‘ எப்பயாவது. யாருக்காவது ஃபேர்வெல் பார்ட்டி வந்ததுன்னா ஒண்ணோ, ரெண்டோ பெக் அடிப்பேன்.
‘நான் குடிக்க ஆரம்பிச்சி நாலு வருஷமாச்சு மஹேஷ். ஒண்ணு தெரியுமா? குடிக்கறதுல நான் ரொம்ப ஒழுக்கமானவன். ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர். அவ்வளவுதான்.
நான் குலுங்கி விட்டேன். ராமகிருஷ்ணன் அவரது சுத்தமான நடத்தைக்குப் பெயர் போனவர். அவர் எந்த வேண்டாத பழக்கங்களும் இருந்ததில்லை. வெற்றிலை, பாக்கு போடுதல் கூட. மிகவும் மரியாதையானவர் என்று எல்லோராலும் மதிக்கப்பட்டவர் அவர்.
‘இத்தனை வருஷமா என்ன பண்ணிட்டிருந்தீங்க சார். என்றேன்.
‘முதல்ல என் ஆஃபிஸ் திறக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். இன்னும் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கேன். இப்ப அதுல வித்தியாசம் என்னன்னா நான் என் கஷ்டங்களைக் கண்டுக்கறதில்லை. ஒரு ஏழு லட்ச ரூபய் இந்தத் தொழில்ல தொலைச்சிருப்பேன். இத்தன வருஷத்தில சம்பாதிச்சத கணக்கு பண்ணினா பன்னிரண்டு லட்ச ரூபாய் வரும். அத விடு! இடம் பார்த்து அடிச்சேன்னா இந்த வருஷம் பத்து லட்சத்துக்குக் குறையாம பார்த்துடுவேன். ஒரு ஆஃப்ரிக்கன் பையரோடு தொடர்பு வச்சிட்டுருக்கேன். பேரம் ஆரம்பமாயிடுச்சு. ஒரு கண்டெய்னர் பிரிண்டிங்க் ஆர்டர் தரேன்னு சொல்லியிருக்கான். ரெண்டு பர்செண்ட் கமிஷன் கிடைக்கலாம். எனக்கு நம்பிக்கையிருக்கு.
அவரது நம்பிக்கை முரட்டுத்தனமானதென்று நான் அறிந்திருந்தேன். ஆனால் இம்முறை அவரது நிறைவேற்ற முடியாதது மட்டுமல்ல, கற்பனையானது என்பதையும் அறிந்தே இருந்தேன். தென் ஆஃப்ரிக்காவின் கண்டெய்னர் ஆர்டர்கள் சீனாவுக்குச் சென்று விட்டன என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். சீனத்தொழிலாளர்களின் குறைந்த ஊதியம் காரணமாக சீனர்கள் அந்த ஆர்டர்களைக் குறைந்த மதிப்புக்கு எடுக்க முடிந்தது. இந்தியப் பதனீட்டாளர்களுடன் இந்தப் பரிமாற்றம் எப்போதும் பிரச்சனையாகவே இருந்து வந்திருக்கிறது. உச்சபட்ச தரமும் நேரத்துக்கு ஆர்டரை முடித்துக் கொடுத்தலும் ஒரு வாடிக்கையாளரை திருப்திப் படுத்த இன்றியமையாதவை. இந்தப் பரப்புகளில் இந்தியர்கள் சொதப்புவது வாடிக்கையாளர் மத்தியில் பிரசித்தம். குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கமர்த்துதல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தர நிர்ணயங்களை நிறைவேற்றத் தவறுதல், மத்திய சுங்க இலாகாவை ஏமாற்ற முயற்சித்தல் ஆகியன வாடிக்கையாளரை சீற்றம் கொள்ளச் செய்யும் இதர காரணிகள். இவ்வெல்லாக் காரணிகளும் நீண்ட காலமாகக் குவிந்து இந்திய மண்ணிலிருந்து கண்டெய்னர் பிரிண்டிங்க் ஆர்டர்களை நிரந்தரமாக அழித்து விட்டன.
‘நீ அமைதியாக இருக்கறதப் பார்த்தா என்னைப் பார்த்துப் பரிதாபப்படற மாதிரி இருக்கு. என்றார் ராமகிருஷ்ணன், என்னைப் பார்க்காமலேயே. ‘ அதுக்கு அவசியமில்லை. . . திடீரென்று அவரது பேச்சு நின்றது. லட்சுமி நரசிம்மன் பிரகாரத்துக்கு எதிரில் இருந்த சாப்பாட்டு மண்டபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதைப்பார்க்கிறார் என்று நானும் திரும்பிப் பார்த்தேன். கருப்பு வேட்டி அணிந்த சபரிமலை பக்தர்கள் குழு ஒன்று எங்களைக் கடந்து போயிற்று. சரணம் ஐயப்பா என்ற கோஷம் எழுந்து காதைப் பிளந்தது. அந்த நாளின் இறுதிப் பூஜை துவங்குவதன்  காரணமாக காட்சிகள் பரபரப்பாக இருந்தன. எனக்குக் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டதெனத் தோன்றியது. அலைபேசியை வெளியில் எடுத்து உயிர் கொடுத்தேன் ராமகிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்தேன். அவர் கூட்டத்தின் பரபரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சாப்பாட்டுக் கூடத்தின் ஓரத்தில் இருந்த குடிநீர்க்குழாயின் மீதுதான் அவரது பார்வை விழுந்திருந்தது. அங்கே நின்றிருந்தது என் சித்திரவதைக்காரன். குழாயிலிருந்து தண்ணீர் குடித்தபடி, சுற்றி நிகழ்வனவற்றோடு தொடர்பற்று நின்றிருந்தான். இதற்கு முன்பு உணர்ந்த அதே சங்கடத்தை மீண்டும் உணர்ந்தேன்.
என் அலைபேசி அதிர்ந்தது. காயத்ரி; அலட்சியம் செய்தேன். இன்னொரு பதினைந்து நிமிடங்கள் அவள் காத்திருப்பதில் தவறில்லை.
‘அந்தப் பிச்சைக்காரனைப் பர்ர்த்தியா? என்றார் ராமகிருஷ்ணன். நான் ஆமென்று பதிலிறுத்தேன். அவன் ஆந்திராவிலிருந்து வந்திருப்பதாக ராமகிருஷ்ணன் சொன்னார். மூன்று வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறான். அவனது மாநிலத்தில் நகைத்தொழில் செய்து வந்திருக்கிறான். சந்தேகமின்றி ஒரு கோடீஸ்வரன்தான் அவன். ‘தொழில்ல கொஞ்சம் அகலக்கால் வைச்சுட்டான். வர்த்தகச் சிக்கல்களினால எல்லாச் சொத்தையும் இழந்தான்; அவன் பொண்டாட்டி தற்கொலை பண்ணிக்கிட்டா; அவனுக்குப் பித்து பிடிச்சுட்டுது. இங்க வந்து சேர்ந்த நாள்ல இருந்து தான் இழந்த சொத்தை அடுத்தவங்க பாக்கெட்டில தேடிட்டு இருக்கான். ராமகிருஷ்ணன் சிரித்தார்.
கோயில் வாயிற்காவலன் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு பிச்சைக்காரனை வெளியே தள்ள முயன்று கொண்டிருந்தான். அது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. அவர் பிச்சைக்காரனை மறந்து விட்ட மாதிரித் தோன்றியது. அவரது திட்டங்கள் குறித்து விறுவிறுப்பாகப் பேசிக்கொண்டு போனார். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பணிபுரியும் ஒரு மென்பொருள் பொறியியலாளருக்கு அவரது முதல் மகளைத் திருமணம் செய்து தருவாராம். அடுத்த ஆண்டு இந்நேரம் அவரது சொந்த ஊரான திருச்சியில் சொந்த வீடு கட்டி முடிக்கப்பட்டிருக்கும். அவரது தற்போதைய தேவையைச் சமாளிக்க ஒரு முப்பதாயிரம் தேவைப்படுகிறது. அவர் அந்தப் பணத்தை என்னிடம் கேட்கவில்லை. எப்படியோ அவரே அதை ஏற்பாடு பண்ணி விடுவார். என் வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறியதற்கு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, அவர் இந்த நிலைக்கு வந்ததில் என் பங்கு எவ்வளவு இருக்கிறது என்பதை வியப்போடு யோசித்துக் கொண்டிருந்தேன். பேச்சின்போது காயத்ரியை இருமுறை அலட்சியம் செய்தேன்.
ஆனால் காயத்ரி நான்காவது முறையாக அழைத்தபோது, அவரது அனுமதி கேட்டு பேச்சை நிறுத்த வேண்டியதாயிற்று.
‘ஏன் செல்ஃபோனை ஆஃப் பண்ணி வச்சிருந்தீங்க? என்றாள் எடுத்தவுடன். அவள் குரலில் எரிச்சலை இனங்கண்டு கொள்ள முடிந்தது.
‘அவரோட நிம்மதியா பேசனும்னு நினைச்சேன், அதனாலதான். என்ன ஆச்சு? இதுக்கு முன்னாலயும் என்னைக் கூப்பிட்டயா?
‘விடாமக் கூப்பிட்டுகிட்டு இருக்கேன். வண்டி சாவி எங்க? உங்ககிட்டயா இருக்கு? நான் இங்க சல்லடை போட்டுத் தேடிட்டேன்.
நான் கால்சராய் பாக்கெட்டுகளில் துழாவி வலது பாக்கெட்டில் மோட்டார் சைக்கிள் சாவியைக் கண்டுபிடித்தேன்.





மேலும் வாசிக்க