25 மார்ச், 2010

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.



சாதன சதுஷ்டயம்
1
ஓம் ஸஹனா அவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினா வதீதமஸ்து மாவித் விஷாவஹைஹி
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
சதுஷ்டயம் என்றால் நான்கினுடைய சேர்க்கை என்று பொருள். சாதன சதுஷ்டயம் என்றால் நான்கு சாதனைகளின் தொகுப்பு என்பது பொருள்.
வேதாந்தத்தின் முதல் மற்றும் முக்கியமான படி இது.
இந்த நான்கு சாதனைகளும் ஒரு மனிதன் தன் இறுதி இலக்கான மோக்ஷத்தை அடைவதற்கான அடிப்படைத் தகுதிகளாகும்.
சங்கரர் இந்த உலகிற்கான லக்ஷணம் கொடுக்கையில், சாதன சாத்ய சொரூபம் ஜகத் என்றார். எனவே இவ்வுலகில் அனைத்து விஷயங்களுமே வெவ்வேறு சாதனைகளின் மூலம் அடையப் பெறும் சாத்யங்களின் தொகுப்பாகவே உள்ளன.


சாத்யம் என்றால் என்ன?
சாதனேன ஆப்யம் சாத்யம்.
ஒரு சாதனையினால் அடையப்படுவது சாத்யம்.
வாழ்வில் நாம் எதை அடைய வேண்டுமென்றாலும் சாதனையின் மூலமாகத்தான் அடைய முடியும். சாதனையின்றி சாதிப்பார் இல்லை என்பது முதுமொழி.

சாத்யத்தின் மற்றுமொரு விளக்கம் – எது நம்மால் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ அது சாத்யம் எனப்படுகிறது. இதற்குப் புருஷார்த்தம் என்று பெயர்.
சாத்யத்தை தேர்ந்தெடுப்பதில் நமக்கு CHOICE உண்டு. ஆனால் சாதனையில் நமக்கு CHOICE கிடையாது.

சாதனை என்றால் என்ன?
எது நம்மை சாத்யத்தில் சேர்க்குமோ அது சாதனை எனப்படும்.
சாத்யம் ஒன்றாக இருப்பினும் சாதனை பலவாக இருந்து அவற்றின் தொகுப்பே அந்த சாத்யத்தைக் கொடுக்கும்.
சாதனைகள் நேரடி சாதனை (சாக்ஷாத்) மற்றும் அமுக்கிய சாதனை என்று
இரு வகைப்படும்.
ஹோமகுண்டத்திற்க்கு செங்கல் நேரடி சாதனை என்றால்,அதைச் சுமந்துவரும் கழுதை அமுக்கிய சாதனை.



எந்த சாத்யத்தை அடைவதற்காக இந்த நான்கு சாதனைகளும்?
மோக்ஷம் என்ற சாத்யத்தை அடைவதற்காக. இந்நான்கு சாதனைகளும் அதை
அடைய நம்மைத் தகுதிப்படுத்தும்.
எது சாதனையின்றி சாத்யமாகவே உள்ளதோ அது பரமசாத்யம்(ULTIMATE GOAL) எனப்படும். அதற்கு மேல்அடைவதற்கு வேறு சாத்யமே இல்லை.



மோக்ஷம் அல்லது முக்தி
மோக்ஷம் என்பது மனதின் முழுநிறைவு. ஆழ் மனதில் உள்ள நிறைவு.
வயிற்றுக்கு வரும் பசி போல மனதுக்கு வரும் பசியே ஆசை. மனதின் ஒரு ஆசையைத் தீர்த்தால் மற்றோர் ஆசை பிறக்கிறது. நிறைக்க முடியாத இப்படிப்பட்ட மனதை நிறைத்தலே மோக்ஷம் எனப்படுகிறது.
மோக்ஷம் என்பதற்குப் பிறிதொரு பொருள் பந்தநிவிர்த்திஹி அதாவது பந்தத்தில் (கட்டுகளில்) இருந்து விடுபடுதல்.
பந்தம் என்பது நம் மனதில் இருக்கிற ஒரு பாவனை (Self Judgement)
நம்மைக் குறித்து நாம் கொண்டிருக்கும் முடிவே பந்தம் எனப்படும்.
அஹம்தா மமதா பந்தஹ நான் எனது என்னும் எண்ணமே பந்தம்.
நமக்குத் தொடர்பில்லாத ஒன்றைத் தொடர்பு படுத்திக் கொள்வதே பந்தம்.
நான் அல்லாத ஒன்றை நான் என்று நினைப்பதே பந்தம்.

பந்தம் எப்படி வந்தது?
எதை நீ, நீ என்று நினைக்க வேண்டுமோ, எதை நீ, உனக்கு அல்லாதது என்று நினைக்க வேண்டுமோ அது உனக்குத் தெரியவில்லை.
எனவே நீ அல்லாததை நீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
இதற்குக் காரணம் அறியாமை. அஞ்ஞானம்.


எதைப் பற்றிய அறியாமை?
நான் யார் என்பதைப் பற்றிய அறியாமை.
எனவே நான் யார் என்கிற அறிவை அடைய வேண்டும்.
அந்த அறிவை, அறிவைக் கொடுக்கும் கருவியின் மூலமே அடைய வேண்டும்.
அறிவைக் கொடுக்கும் கருவிக்கு ப்ரமாணம் என்று பெயர்.
ப்ரமா – ஞானம், கரணம் – கருவி.
ப்ரமாணங்களில் பல வகை உண்டு. அறிவை நேரடியாகக் கொடுக்கும் கருவிக்கு ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் என்று பெயர். யூகத்தின் மூலம் அறிவைக் கொடுக்கும் கருவி அனுமாணப் ப்ரமாணம் எனப்படும்.
சொற்கள் மூலம் அறிவைக் கொடுக்கும் கருவிக்கு ஷப்தப் ப்ரமாணம் என்று பெயர்.
உபநிஷத் அல்லது வேதாந்தம் ஒரு ஷப்தப் ப்ரமாணம் ஆகும்.
வேதாந்தோ நாம உபநிஷத் ப்ரமாணம்
வேதாந்தம் என்பது உபநிஷத் ரூபமாக இருக்கும் ப்ரமாணம்.

வேதாந்தம் எதைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறது?
அழியாத, நித்யமான பொருளைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறது.
கண்ணால் காணும் அனைத்தும் அழிவுக்குறியது என்று சாஸ்திரம் கூறுகிறது.
அழியாத ஒரே ஒரு பொருள்தான் உண்டு. அதை அறியவே உபநிஷத் துணை புரிகிறது.

அழியாத பொருளை அறிவதால் என்ன பலன்?
அழியாத பொருள் பற்றிய அறிவை அடைந்தால், அந்த அழியாத பொருளையே அடையலாம்.
அறிவைக் கொடுக்கும் கருவியைப் பயன் படுத்தும் போது அது அறிவைக் கொடுக்க
வேண்டுமெனில் அதற்கு சாதன சதுஷ்டய சம்பத்தி எனப்படும் நான்கு பண்புகளும் அவசியம்.

சாதன சதுஷ்டய சம்பத்தி எனப்படும் நான்கு பண்புகளும் யாவை?
1. விவேகம்
2. வைராக்யம்
3. ஷமாதி ஷட்க சம்பத்திஹி (இது ஆறு பண்புகளின் தொகுப்பு ஆகும்)
அவை, ஷமம் – மனக்கட்டுப்பாடு
தமம் – இந்த்ரியக் கட்டுப்பாடு
உபரமம் – விலகியிருத்தல், கடமையைச் செய்தல்
திதிக்ஷா – பொறுமை, சகித்துக் கொள்ளுதல்
ஸ்ரத்தா – நம்பிக்கை
ஸமாதானம் – மன ஒருமுகப்பாடு
4. முமுக்ஷுத்வம்
இந்த நான்கு சாதனைகளும் சம்பத்தி (செல்வம்) எனப்படும்.
இந்த நான்கு சாதனைகளின் இருப்பிடம் நமது மனம். எனவே இது ஒரு அகச்செல்வம் ஆகும்.
இந்நான்கு பண்புகளும் நம்மிடம் குறைவாக இருப்பதால், இவையே நமக்கு முதலில்சாத்யமாகி விடுகின்றது. அதாவது, சாதன சதுஷ்டயம் சாத்ய சதுஷ்டயமாகி விடுகிறது.இந்நான்கு சாதனைகளைப் பற்றி விரிவாகவும், இந்த சாதனைகள் ஒவ்வொன்றின் லக்ஷணம், அவற்றை அடையும் உபாயம் மற்றும் அவற்றை அடைவதால் உண்டாகும் பலன் ஆகியவை பற்றி பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காணலாம்.

மேலும் வாசிக்க