வாசிப்பனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஏப்ரல், 2026

துருவேறிய சிறகு

 

சு. வெங்கட்டின் நீல வியாபகம் சிறுகதை குறித்து

அன்புள்ள வெங்கட்,

நீலவியாபகம் கதை அகிலாண்டம் பிளாட்பாரத்தில் உருண்டு நிற்கும் ஒரு கொய்யாப்பழத்த்தை எடுத்து உண்ணலாமா என்று யோசிப்பதில் துவங்குகிறது. உணவு கதை நெடுக அவரைத் தொடர்ந்தபடியே இருக்கிறது. பாரதியும், நாஞ்சில் நாடனும், ஜெயமோகனும் தங்கள் கலையில் நிகழ்த்திக்காட்டிய ஒரு அறச்சீற்றம்: உணவுண்ணல் என்பது ஒவ்வொரு உயிரின் அடிப்படை உரிமை. அதை எவரும் மறுக்கலாகாது. அதை நீங்களும் உங்கள் கதையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள். மற்ற படைப்பாளிகளைப் போலன்று, மிக மவுனமான சொல்லல் மூலம், மிக நேர்த்தியான சித்திரங்களைத் தீட்டுவதன் மூலம் வாசகனிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். உணவு நிமித்தம் ஓர் உயிரை இழிவு செய்தல் தகுமா? இதைத்தான் நான் இந்தக் கதையிலிருந்து புரிந்து கொண்டேன். இந்தப் புரிதல் தவறாகக் கூட இருக்கலாம்.

மிகச் சிறந்த கதைகளை மட்டுமே எழுதுவேன் என்று கங்கணம் கட்டியிருக்கிறீர்கள் போல. உங்கள் வசீகரமான மொழி கதையின் ஓட்டத்தின் மீது ஒரு கனத்த போர்வையை போல வியாபித்து அதன் நடையை மென்மையாக்கி விடுகிறது. பெரும்பாலும் விவரணைகளாலும், சொல்லிச் செல்லுதலாலும் நகரும் கதை. பாத்திரங்கள் ஒன்றிரண்டு வரிகளே உரையாடிக் கொள்கின்றன. அதிலும் சில இந்திச் சொற்கள். கதை சொல்ல வரும் விஷயத்துக்கு இந்த மாதிரியான கூறுமுறை மிகப்பொருத்தம்.

அகிலாண்டத்தோடு அவனது வாழ்க்கையின் முன்னும், நிகழ்காலத்துக்கும் மாறிமாறிப் பயணிக்கிறோம். சராசரி வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வராதவர் அவர். அதே நேரம் இந்த உலகம் போஷித்துக் காக்க வேண்டிய மேதையும் அல்லர். சுருக்கமாகச் சொன்னால் சோம்பித் திரியும் சோம்பேறி. சோறு உண்டு விட்டு மனம் போனபோக்கில் திரிபவர். குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். அதனாலேயே மனைவி, மகனிடம் ஏச்சும் பேச்சும் வாங்குபவர். இவர் மாதிரியான மனிதரை உங்களது இலக்கியம் மையக் கதாபாத்திரமாக்கியிருக்கிறது. சொல்லப்போனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்களின் கடைசிப்புகலிடம்தானே இலக்கியம்?

சில சொற்றொடர்கள் சட்டென்று வாசிப்பை நிறுத்தி யோசிக்க வைத்தன; மெல்லிய புன்னகையை வரவழைத்தன.

புதர்களுக்குப் பின்னால் முக்காடிட்டு வாய்மூடி நின்ற பெண்கள் வெறுப்பாய் ரயிலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

என்பது ஒரு உதாரணம். இந்த வாக்கியத்தின் வலி கொஞ்சம் நிறுத்தி யோசித்தால்தான் உறைக்கும். ஒரு கலைஞனால் மட்டுமே எழுதக்கூடிய வரி.

எங்கிருந்தோ வந்து ரயிலுடன் சேர்ந்துகொண்ட சாலையில் பேருந்து ஒன்று சிறு துள்ளலுடன் சென்றுகொண்டிருந்தது. இரண்டிலும் பயணிப்பவர்களில் சிலர் இனி எப்பொழுதும் நிகழாத சந்திப்பை ஒருவருக்கொருவர் நிகழ்த்திக்கொண்டனர்.

என்று இன்னொரு கவித்துவமான இடம். திருச்செந்தாழையை நினைவுபடுத்தும் எழுத்து. அவரை வாழும் தமிழ் விழாவில் சந்தித்தேன். ஒரு அரைநாள் அவரோடு நியூயார்க் தெருக்களில் உரையாடிபடியே சுற்றினோம். எழுத்தாளனாக அறிந்திருந்த அவர் நண்பராகப் பரிச்சயமாகி பிரிகையில் ஒரு சகோதரனைப் போலாகி விட்டார். இத்தனைக்கும் நாங்கள் அவர் எழுதிய கதையைப் பற்றிக்கூடப் பேசவில்லை.

இவர்களை இனி தன்னால் கரை சேர்க்க முடியாதென்றெண்ணி அங்கம்மா பகடைகளைத் தூரப்போட்டாள்.

என்று இன்னொரு இடத்தில் எழுதுகிறீர்கள்

எழுத்தாளன் என்பவன் ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக எழுதுபவனல்ல. அவன் ஒரு குறிப்பிட்ட பிரச்னையைச் சரியான சூழ்நிலையில் வைத்து சித்தரித்து அதன் மகத்துவத்தை உணரச் செய்வதுதான் அவன் வேலை என்று பொருள்படும்படி இந்த வாழும் தமிழ் விழாவில் பேசிக்கொண்டிருக்கும்போது விவேக் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தைக் கூறினார். இந்தக் கதையின் பெரும்பாலான பகுதிகளில் நீங்கள் அந்தச் சித்திரத்தை துல்லியமாக வரைந்து காட்டியபடியே செல்கிறீர்கள். என் சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரைக்கு “புனைவெனும் அறாக்கனவு” என்று தலைப்பிட்டிருந்தேன். புனைவு என்பது ஒரு துல்லியமான, அறாத கனவுதான். அது துல்லியமாகவும், அறாத்தன்மையோடும் இருப்பதற்காக மெனக்கெட வேண்டியதுதான் கதைசொல்லியின் வேலை. அந்த வேலையை மிகத்திறம்படச் செய்திருக்கிறீர்கள். 

தான் கட்டியிருந்த வேட்டியின் நுனியில் அவர் பதித்துச் சென்ற செருப்பின் அடையாளத்தைத் தட்டிக் கொண்டே எழுந்து வெளியே எட்டிப் பார்த்தார்.

நிலவில் ஒளிரும் தார்ச் சாலையெனத் தூரத்திலிருந்த தொழுவத்தில் மினுக்கும் கரிய உடலுடன் எருமைகள் வரிசையாக அமர்ந்திருந்தன. எருமைகளின்  எண்ணிக்கையை அகிலாண்டம் அவ்விருட்டில் மனதுக்குள் கணிக்க முயன்றார். ஓரிடத்தில் திரள்வதும் சட்டெனக் கலைவதுமாய் இருள் அவரை குழப்பியதில் எண்ணிக்கை ஒன்றுபோல இல்லை.

குடிசைக்குள் மண் சுவர்கள் சிவந்து அனலில் நகர்வது போல இருந்தது.

எளிமையாகச் சொன்னால் உங்கள் கேமரா மிக ஷார்ப்பாக வேலை செய்திருக்கிறது.

இந்த அகிலாண்டத்தை எப்படிப் புரிந்து கொள்வது? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? 

“அங்க தான் அந்தோ கிழக்கு பக்கம் ரெண்டு நட்சத்திரம் பக்கத்து பக்கத்துல இருக்கு பாருங்க அது எங்கிருந்தோ வந்திருந்தது. அப்புறம் எங்க போனாலும் ஜோடியா தான் வருதுங்க”

“அப்படி இருக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு டா. எதுக்கும் கவலைப்படாம, யோசிக்காம அப்படியே போய்கிட்டே இருக்கிறது. எனக்கும் அப்படியெல்லாம் எல்லாரையும் ஒருநாள் பார்க்கணும்னு ஆசை இருக்குடா”, என்று சொல்லிப் பெரு மூச்சு விட்டுக்கொண்டே கீழே அமர்ந்திருந்த அந்தக் கைதியைப் பார்த்தார்.

அவர் ஓர் எளிய உயிர். ஒரு சிறுமியுடன் இணைந்து சட்டென்று குழந்தையாக மாறி, மரத்தின் கிளைகளில் பறவைகள் கட்டிய கூடுகளை ஆராய முடியும். அவர் வெறுமனே “இரு”க்கிறார். இது ஒரு ஞானியின் நிலை. ஆனால் அகிலாண்டத்துக்கு உதவாக்கரை பட்டம் மட்டும்தான். 

அப்புறம் கதையில் கொஞ்சம் டிடாக்டிக் தன்மை எட்டிப்பார்க்கிறது. இது குறையென்று இல்லை. இது இதுதான் என்ற போதம் இருந்தால் அதையும் கையாளலாம்; நான் அப்பகுதியையும் ரசித்தேன். 

ஒவ்வொரு வீட்டிலும் சிறிதும் பெரிதுமாகத் துருப்பிடித்த ஏதோ ஒன்று இருக்கிறது. ஒரு காரணத்திற்காகச் செய்யப்பட்டு உலகத்திற்கு வரும் அது, ஒளி இழந்து வேறொன்றாக மாறிவிடுகிறது. புதியதாக இருக்கும்போது அதற்குத் தான் எத்தனை மதிப்பு. மிகக் கவனமாக எடுப்பதும், கையாள்வதும் என அதன் மீது எத்தனை அக்கறை. ஏதோ ஒரு கட்டத்தில் உதாசீனப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் ஒரு மூலையில் நிறுத்திவிட, மெல்ல அதற்குள் வேறு ஒன்று குடிகொண்டு அரித்துவிடுகிறது. ஒரு சிலவற்றைத் துரு நீக்கிச் சரி செய்துவிடலாம். சிலவற்றை தீயிலிட்டே வேறொன்றாக்க முடியும். அது ஒரு சுழற்சி போல. அழிவே இல்லாமல் ஒன்று மற்றொன்றாக மாறிக்கொண்டேயிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

திருப்புறம்பியம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் என்று ஊர்பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு மெல்லிய காலமயக்கத்தை அளிக்கின்றன. ஏதோ காலத்தின் பின்சென்று புராதன கிராமங்களின் பெயர்களைக் கேட்பதைப் போல. ஆனால் இவை இன்றும் இருக்கும், இயங்கும் ஊர்கள். அகிலாண்டத்தைப் போலவே அவையும் ஒரு எழுத்தாளன் கைபட்டுத்தான் தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டியுள்ளது.

கதையின் இறுதிப்பகுதியை சற்றே வேகமாகச் சொல்லிச் சென்றதுபோலிருந்தது. துருப்பிடித்த சிறகு துருவேறிய இரும்பில் விழுந்து பறவையின் சிறகொடிந்த ஒலியை எழுப்புவது அபாரமான கற்பனை, படிமம்.

வாழ்த்துக்கள் வெங்கட்.








26 டிசம்பர், 2025

“வானப்ரஸ்தம்” சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில்

 



என்னுடைய சிறுகதை “வானப்ரஸ்தம்” குறித்து நண்பர்கள் பாலாஜி ராஜூவும், விவேக்கும் சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில் கருத்துரையாடினார்கள். நானும் கலந்து கொண்டு என் கருத்துக்களையும், அவர்களது கேள்விகளுக்கான பதில்களையும் அளித்தேன். பாலாஜி ராஜூ நிறைய கவிதைகளையும், அண்மைக்காலமாக சிறுகதைகளையும் எழுதி வருகிறார். விவேக் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறுகதைகள் எழுதி வருகிறார். அமெரிக்க இதழ்களில் அவரது கதைகள் வெளியாகி இருக்கின்றன. மேலைத்தத்துவத்திலும், மேலை இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு கற்று வருபவர். அது குறித்து அவர் எழுதும் கட்டுரைகள் ஆழமானவை. இருவரும் கலந்து கொண்டு என் கதை குறித்து அலசியது எனக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி. நிகழ்வை ஏற்பாடு செய்த பாஸ்டன் பாலா, நிர்மல் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.


20 டிசம்பர், 2025

பாலாஜிராஜூவின் “எழுகை”

 பாலாஜிராஜூவின் “எழுகை”





அன்புள்ள பாலாஜி,

எழுகை கதை கொடுத்த அனுபவம் அலாதியானது. கிறிஸ்துமஸ் காலமும், பனியும் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. சாண்டாவை விற்கும் அந்த மர்ம மனிதரும், கதை சொல்லியும் சந்திக்கும் புள்ளி கவித்துவமானது மட்டுமல்ல, குறியீட்டுத் தன்மை கொண்டதும் கூட. முதலில் ஒரு சிறுகதையாக இது மிகுந்த அழகுணர்ச்சியுடனும், கவித்துவத்துடன், மாசு மருவின்றி எழுதப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லி விடுகிறேன். கதை சொல்லியின் மனதில் இருக்கும் அந்தச் சிறிய பிரச்னை “எட்டு வயது லிவோனா இன்னமும் சாண்டாவை நம்புகிறாள்” என்பது. ஆனால் அவனது உண்மையான பிரச்னையாக நான் பார்ப்பது “சிறு வயதில் கிறிஸ்துமஸ் தினத்தையும் எனக்கு வரும் பரிசுகளையும் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த நாட்கள், கடந்த கால நினைவுகளாகக் கூட என்னில் எழுவதில்லை” என்பதுதான். இதுதான் இந்தக் கதையின் அடி நாதம். பிரச்னை லிவோனாவுடையது அல்ல, கதை சொல்லியுடையது. வளர்ந்து முதிர்ந்தபின்னர் சிறு குழந்தையின் உற்சாகமான, சிலிர்ப்பூட்டும் இதயத்தை மீட்டெடுப்பது எவ்வாறு என்பதுதான் கதையின் கேள்வி. அந்தக் கேள்விக்கான விடையாக, சற்றே அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு கதை சொல்லிக்குக் கிடைத்திருக்கிறது.

“இது நம்பிக்கை சார்ந்த சம்பிரதாயம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாய். நாம் இருவரும் நம்முடைய பால்ய காலத்துக்கு திரும்புவதற்கான அழகிய வாய்ப்பு இது. இந்த மாபெரும் நாடகத்தில் நாம் பங்கெடுத்து நடிப்பதில் பெரும் உவகையிருக்கிறது, நம்மை மறந்து ஒன்றில் ஈடுபடுவதன் மாயம் இருக்கிறது. அது ஏன் உனக்குப் புரிவதில்லை?” என்ற எமிலியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை 

இதற்கான வாய்ப்புகள் நம்முன்னே எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் அதைக் கண்டுகொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருக்கிறோமா என்பதுதான் கேள்வி. இக்கதை எமிலி மூலமாக கேட்கும் கேள்விகள் மிக அழுத்தமானவை. நடுவயது தாண்டிய அனைவரும், குறிப்பாக தீவிர இலக்கியம் வாசித்து மண்டை சூடேறிப்போன அறிவுஜீவிகள் (என்று நினைத்துக் கொள்கிற) நாமெல்லாரும் நம்மையே கேட்டுக் கொள்கிற கேள்விகள். இதோ, சாளரத்துக்கு வெளியே அந்த மாயம் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எட்டிப்பார்க்கும் அளவுக்கு நமக்கு இதயமும் நேரமும் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

சிறுகதையின் வடிவம் என்பது எப்போதுமே கவிதைக்கும், புனைவுக்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருப்பது. நான் எழுத முயற்சிக்கும் கதைகளில் புனைவு அதிகமாகவும், கவித்துவம் கிட்டத்தட்ட இல்லாமலும்தான் இருக்கிறது. உங்கள் கதைகளில் கவிதைகளே சிறுகதைகளாக மாறிவிடுகின்றன. இதைப் பாராட்டாகத்தான் சொல்கிறேன். குறிப்பாக இந்தக் கதை, கிட்டத்தட்ட ஒரு நீள்கவிதை என்றே சொல்லி விடலாம். இதை நீங்கள் முதலில் கவிதையாக எழுதிப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. கதை வடிவில் இது மிளிர்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மிகுந்த கவனத்துடன் சொற்களைப் பொறுக்கியெடுத்து கதையை எழுதியிருக்கிறீர்கள். உங்களது தமிழ்ச் சொற்கள் வாசிக்க சுகமான அனுபவமாக இருந்தது. வரைமான்கள், உப்புப்பரல்கள், (அந்த பொதியுந்து) என்று அழகான சொற்கள் கதை நெடுக விரவி கதை மீது ஒரு விதமான அடர்ந்த அமைதியைப் போர்த்துகின்றன. துருவேறிய தகரத்தைக் கீறியது போன்ற குரல் என்ற உவமை நன்றாக இருந்தது.  பனியில் உறங்கும் நகரின் வர்ணனை, நிதானமாக நிகழ்வுகளை விவரித்துக் கொண்டே செல்லுதல் என்று புனைவெழுத்தில் உங்களுடைய வீச்சைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் எழுத்தில் உள்ள நிதானத்துக்குக் காரணம் “எனக்குச் சொல்ல ஒரு கதையிருக்கிறது” என்ற உங்கள் உறுதியும், உங்கள் கதை சொல்லும் திறன் மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும்தான் என்று தோன்றுகிறது. மிக அழகான ஒரு கதையைக் கொடுத்ததற்கு நன்றியும், வாழ்த்துக்களும், பாலாஜி.

இக்கதை வாசித்ததும் எனக்கு இரு கதைகள் நினைவுக்கு வந்தன. ஒன்று நான் மொழிபெயர்த்த கதை. “குழந்தைப் பருவத்தில் பனிப்பொழிவு” என்று. இன்னொன்று செல்மா லாகர் லெவ் எழுதி க.நா.சு மொழிபெயர்த்த தேவமலர் என்ற நீண்ட கதை. இரண்டையும் பகிர்கிறேன். நேரமிருக்கும்போது வாசிக்கவும். கட்டாயமில்லை.

வணக்கம் ஜெகதீஷ்,

கதையை இத்தனை தீவிரமாக நீங்கள் வாசித்தது எனக்கு மிகவும் நிறைவையும், கொஞ்சம் மலைப்பையும் அளிக்கிறது. பெரிய மனதோடு பாராட்டுகிறீர்கள், கொஞ்சம் சங்கடத்தோடு அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

என்னிடம் இந்த கதைக் கரு சில மாதங்களாகவே இருந்தது. கிறிஸ்துமஸ் தினம் குறித்து ஒரு கதை எழுதவேண்டும் என்ற உந்துதலும் நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்தது. முதலில் எனக்கு தோன்றியது, ‘எல்லோரும் கொண்டாடும் பனி, அதை வேலையாகச் செய்பவனுக்கு எப்படிப் பொருள்படுகிறது?’ என்பதுதான். லிவோனா அவளுடைய அப்பாவிடம், “உலகிலேயே மிகச் சிறந்த வேலை உன்னுடையது அப்பா” என்று சொல்வதாக மனதில் வைத்திருந்தேன். ஆனால், ஆந்தப் புள்ளியிலிருந்து கதை வளரவில்லை.

பிறகு அதே கேள்வியை அவனுக்கான இன்னொரு கோணமாக மாற்றிக்கொண்டேன். ஒரு நாள் அதிக உறக்கமில்லாத இரவைக் கழித்துவிட்டு, காலையில் எப்படியவது இந்தக் கதையுடன் மோதிப் பார்க்கவேண்டும் என்று எழுதத் தொடங்கினேன். அந்த மர்ம மனிதர் எனக்குள் வந்தவுடன் கதை தானாக வளர்ந்தது. ஒன்றரை மணிநேரத்தில் மொத்தக் கதையையும் முடித்துவிட்டுதான் கீழே இறங்கினேன். நான் இதுவரை எழுதிய கதைகளில் விரைவாக எழுதி முடித்த ஒன்று.

கதை கவித்துவமாக இருப்பது ஒன்று, அதற்கு நீங்கள் அளித்த வாசகக் கோணமும் மிகவும் கவித்துவமானதுதான். மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள், நாம் பல அற்புதங்களைத் தவற விடுகிறோம். கதை எழுப்பிய கேள்வி எமிலி அவனிடம் கேட்பதுதான், நீங்கள் சரியாக இதைத் தொட்டிருக்கிறீர்கள். இந்தக் கதை எழுதி முடித்த பிறகும் எனக்குள் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற ஒரு பேசுபொருளை நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கவிதையாகவும் எழுதியிருக்கிறேன். 

கதை வெளியில் வாசிக்கப்படுவது ஒன்று, எழுதும் நமக்குள்ளும் ஏதோ ஒன்றை நிகழ்த்துகிறது. இந்தக் கதை தத்துவார்த்தமாக என்னைத் தொந்தரவு செய்கிறது, கடைசிப் பத்தி எனக்கு நானே சொல்லிக்கொண்டதுதான். நான் இப்படி ஒன்று நிகழும் என்பதை இதுவரை உணர்ந்ததில்லை, நீங்கள் கடந்திருக்கலாம். அதனால்தான் சொல்கிறேன், ‘பொற்குகை இரகசியம்’ கதையை எழுதிய எழுத்தாளன் மீது எனக்கு ஒரு பிரேமையும், அபார மதிப்பும் இருக்கிறது. எல்லோருக்கும் அப்படி ஒரு கதை நிச்சயம் நிகழும் என்றே தோன்றுகிறது. ஜெ சொல்வது எத்தனை உண்மை. ஆம், ‘இலக்கியம் அருளும் தெய்வம்தான்’.

நான் கதைக்கு ‘லிவோனாவின் பரிசு’ என்று பெயர் வைக்கலாமா என்றும் யோசித்தேன். ஆனால், கதை எழுதிய பிறகு அவனுக்கானது என்று நன்றாகப் புரிந்தது. அதனால் ‘எழுகை’ என்று தலைப்பு வைத்தேன்.

இன்னொன்று, அமெரிக்காவில் இது எனக்கு பன்னிரண்டாவது குளிர்காலம். பித்துப் பிடிக்க வைக்கும் அளவுக்கு அழகும், வெண்மையும், கருணையே அற்ற தூய்மையும் கொண்டது பனிப்பொழிவு, இத்தனை ஆண்டுகளாக எனக்குள் அது என்ன நிகழ்த்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தேன் (Angst). மிகையாக இதைச் சொல்லவில்லை, ஒவ்வொரு முறை பனிபொழிகையிலும் மனதுக்குள் ஒரு பதைப்பு என்னிடம் இருக்கிறது. இது மிகச் சிறிய கதை, இதில் சில பத்திகளில் அதை புனைவாக விவரித்ததும் எனக்குள் ஒரு ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. எதையோ ஓரளவுக்கு கடந்த அமைதி. நீங்கள் இயற்கை குறித்து குழுவில் பகிர்ந்திருந்தது எத்தனை உண்மை.

நீங்கள் தத்துவம் அறிந்தவர், இந்த உணர்வை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள் என்று ஆழமாக நம்புகிறேன். மேலும், உங்களிடம் இதையெல்லாம் பகிர்வதற்கு இந்தக் கதை ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது, அதற்கு இலக்கியத்துக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். 

நீங்கள் அனுப்பிய இரண்டு கதைகளையும் கண்டிப்பாக வாசிக்கிறேன். மிக்க நன்றி ஜெகதீஷ். 


அன்புள்ள பாலாஜி,

மாலத்தீவுகளிலிருந்து அமெரிக்கா வந்த சில நாட்களில் வேலையின் காரணமாக வாசிப்பை விட்டு விட்டேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வாசிக்க முயல்கையில் என்னால் உள்ளே செல்லவே முடியவில்லை. இதை இன்னும் பின்னோக்கி நீட்டித்துப் பார்த்தால் மாலத்தீவுகளில் இருக்கையில் கூட தீவிர இலக்கியம்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். அதனால் அந்த வாசிப்பே கொஞ்சம் திருகலாகக் கூட இருந்தது. வாசிக்கையிலேயே இதற்கு எப்படி வாசிப்பனுபவம் எழுதலாம், இதிலிருந்து புத்திசாலித்தனமாக எதைக் கண்டுபிடிக்கலாம் என்று. சிந்தித்துப் பார்த்தால், நான் உண்மையிலேயே ஆழ்ந்து வாசித்தது என் பதின்ம வயதுகளில்தான் என்று தோன்றியது. உள்ளே இருந்த அந்தக் குழந்தை வாசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சாண்டாக்களில் நம்பிக்கை இருந்தது. அந்த மாதிரியான வாசிப்பை மீண்டும் கொண்டு வர நான் மிகவும் சிரமப்பட்டேன். பல விஷயங்களைத் துறக்க வேண்டியிருந்தது. விமர்சனம், அறிவுஜீவித்தனம், போன்றவை. முழுமையாகத் துறக்க முடியவில்லைதான். ஆனால் துறக்கத் துறக்க வாசிப்பதும், எழுதுவதும் எளிதாகிக் கொண்டே வருவதைக் காணமுடிகிறது.

உங்கள் கதையை இப்படி என்னுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது. மீண்டும் எழுத்தில் இறங்க நான் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் நான் தவற விட்ட குழந்தைமையை மீட்டெடுத்துக் கொள்வதை மட்டும்தான். அதைத்தான் இந்தக் கதை சுட்டுகிறது என்று நினைக்கிறேன்.

 பாலாஜிராஜூவின் “எழுகை”


26 நவம்பர், 2025

நிர்மலின் “இறுதியே இயைவது ஆனால்”



“இறுதியே இயைவது ஆனால்”

அன்புள்ள குடாகேசனுக்கு, 

இறுதியே இயைவது ஆனால் சிறுகதையை ஒரு கருத்தியல் சிறுகதை என்று நான் வகைமை செய்கிறேன். அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் குடாகேசனுக்கு அங்கேயே பிறந்து வாழும் தன் குழந்தைக்கு பழந்தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு உண்டாகாதது ஏன் என்ற இருத்தலியல் சிக்கல் கேள்வி வருகிறது. இத்தனைக்கும் அவர் மகள் நவீன ஆங்கில இலக்கியத்தில் ஆழ்கிறவள். இதைத் தன் இல்லத்திற்க்கு வரும் தமிழ் எழுத்தாளர் சுபகையிடம் கேள்வியாக வைக்கிறான். இப்போது ஒரு தமிழ்ப்புலவர் உங்கள் இல்லம் வந்தால் நீங்கள் உங்கள் மகளிடம் உரையாட அனுமதிப்பீர்களா? என்று சுபகை கேட்கிறாள். சுபகையையே அவர் மகளிடம் பேச அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “குட்” தன் மகளின் அன்றாட அட்டவணையைக் காரணம் காட்டி அது நடவாத காரியம் என்கிறான்.

> ஒரு நாகரீகத்தின் அக மதிப்பீடுகள், அதன் புற வெளிப்பாடுகள் பற்றி விரிவான புரிதல் இருந்தால் இளையவர்களுக்குத் தங்களை இணைத்துக் கொள்ள உதவும், நேரடியாக அனுபவம் கிடைக்காத அடையாளங்கள் வழியே கற்பனையைத் தொட்டு விரித்துக் கொள்வது கடினமல்லவா? என்பது சுபகையின் கேள்வி.

இதற்குப்பிறகு கதை வேறோரு முக்கியமான திசையில் திரும்புகிறது. பள்ளிக்கூடங்களை விடுங்கள், இதை சரிசெய்வதற்கு எழுத்தாளர்களின் பங்கு என்ன? என்பது “குட்”டின் கேள்வியாக இருக்கிறது. இது சுபகையைச் சீண்டுகிறது. 

“அழியும் காலம் வந்துவிட்டால், இடையிலே எது வந்தாலும் அந்த அழிவுக்குத் தடை உண்டாகுமோ? உண்டாகாது” என்று சூசகமாகக் குறிப்பிடுகிறாள் சுபகை. குடாகேசனுக்கு அவன் மன ஆடியில் தெரியும் பிம்பம் மாயமாகத் தெரிவது போன்றே எனக்கும் சுபகையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அந்த வரிசையின் ஆசிரியர் என்று அவள் குறிப்பிடுகிறாள். ஓரம்போகியார் போலவே உன் வீட்டுக்கு வருகை தந்த என்னை உன் பெண்ணிடம் பேச விடாமல் தடை செய்வது நீதானே என்றவள் கேட்பதாகவும் கொள்ளலாம்.

அவன் அலுவலகத்திலும் சமூக வட்டத்திலும் பயன்படுத்தப்படும் ‘குட்’ என்ற சுருக்கப் பெயர், அவனது பாரம்பரியமான ‘குடாகேசன்’ என்ற பெயரை விழுங்கியது போல, இலக்கியத்தின் மீதான அவனது ஈடுபாட்டையும் அமெரிக்க வாழ்வின் அன்றாட யதார்த்தம் விழுங்குகிறது.

சாதாரண உரையாடல்கள் வழியாகவும், கம்பராமாயண விவாதத்தின் மூலமாகவும் இந்தச் சிதைவு மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கலைக்கும், வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தத்திற்கும் இடையேயான போராட்டத்தை, சுவாரஸ்யமான நடை மற்றும் கூரிய அவதானிப்புடன் இக்கதை படைத்திருக்கிறது. குறிப்பாக, ‘குடாகேசன்’ என்ற பெயருக்கும், ‘குட்’ என்ற அழைப்பிற்கும் இடையேயான இடைவெளி, பண்பாட்டு விலகலின் குறியீடாக அமைந்தது சிறப்பு. ஒரு நல்ல கதைக்கான அனைத்து அம்சங்களையும் இச்சிறுகதை கொண்டுள்ளது.

கதை சட்டென்று கொள்ளும் திருப்பம் பிடித்திருந்தது. கதையின் நாயகன் பழந்தமிழ் வாசகன் என்பதாலேயே அதற்குரிய மொழியையும், உவமைகளையும் பயின்றிருக்கிறது. “குட்”டின் பதற்றம், குழப்பம், எதிர்ப்பார்ப்புகள், அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. டயலாக் டேக் இல்லாமல் உரையாடல்களைக் கையாண்டிருக்கிறீர்கள். அது ஒரு நல்ல உத்தி. நன்றாக வந்திருக்கிறது.

கதைக்குள் கட்டுரைத்தன்மை வருவதை தவிர்க்க முடியவில்லை. நிறையத் தகவல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சில சொற்றொடர்க் குழப்பங்களை கவனித்தேன். ஏனோ கதையில் முதல் பாதி, இரண்டாவது பாதி என்று தனித்தனிக் கதைகளைப் போல் தோற்றமளிக்கின்றன.

தொடர்ந்து புனைவிலேயே இருக்கின்றீர்கள், நிர்மல். இது மிக நன்று. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள்.வாழ்த்துக்கள்.

அன்புடன் 

ஜெகதீஷ் குமார்

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெகதீஷ். என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள உதவும். இது பெட்னாவில் கலந்துக் கொண்டு  ஸ்டாலின் ராஜாங்கமும், சு.வேணுகோபாலும்  வெர்ஜினியா வந்திருந்த பொழுது நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் மேலானது. அன்றைக்கு மனம் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது.

அன்புடன்

நிர்மல்


வெங்கட்டின் “தழலின் தீண்டல்”



“தழலின் தீண்டல்”

அன்புள்ள வெங்கட்,

இந்த ஆண்டு நான் வாசித்த கதைகளிலேயே மிகச்சிறந்த கதையாக “தழலின் தீண்டலை”த்தான் சொல்வேன். இப்படி ஒரு அற்புதமான கதையை நான் வாசிக்கக் கொடுத்ததற்காகவே நன்றி. எனக்கு உடனே என்ன சொல்வதென்று தெரியவில்லை. மாமா, கிரி, கதைசொல்லி, தாத்தா, பரஞ்சோதி, ஜப்பான் என்ற பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம், தேடல். அவை கதை முழுக்கப் பின்னிப்பிணைந்து அந்தக் “கருப்பனை”ப் போலவே கதையெங்கும் நெளிந்து கொண்டிருக்கின்றன. கதையை நிறுத்தி நிதானமாக, ஆழமாகக் கொண்டு சென்றிருக்கிறீர்கள். உங்கள் மொழி கதை நிகழ்வுகளை அப்படியே காட்சிப் படம் போலக் காட்டிக் கொண்டே செல்கிறது. உங்கள் மொழி வாசிக்க வாசிக்கச் சுகமாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும், நிகழ்விலும், அவை குறித்த உங்களது விஸ்தாரமான விவரணை கதையின் அடர்த்தியைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. இப்படித்தான் கதை எழுதப்பட வேண்டும் என் விருப்பமும். நான் சற்றே வேகமாக எழுதிக்கொண்டிருக்கிறேனோ என்று என்னை எண்ண வைத்து விட்டது உங்கள் கதை. கதையின் ஒவ்வொரு தருணமும் புனைவுப்பரப்பில் உயிர் கொண்டு எழுகிறது. கிட்டத்தட்ட உங்கள் புனைவுலகத்தில் உள்ள பொருட்களையெல்லாம் தொட்டு விட முடியும் என்பது போல, அந்த மனிதர்கள் வாசனையைக் கூட அறிந்து விட முடியும் என்பது போல.

உங்களது பல கதைகளில் கதை சொல்லல் என்ற தன்மை மிக நேர்த்தியாகவும், லாவகமாகப் பின்னப்பட்டும் அமைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அவை இப்போது நினைவில்லாத காரணத்தால், தழலில் தீண்டல்தான் உங்கள் கதை சொல்லும் திறனின் உச்சம் என்று சொல்லத் தோன்றுகிறது. உரையாடல்கள் மூலமாக கதையை நகர்த்திச் செல்வதையும், பாத்திரங்கள் குணாம்சங்களை வெளிக்கொணர்வதையும் நீங்கள் மிகத் திறமையாகச் செய்திருப்பதைக் கண்டபோது எனக்குள் உவகை பொங்கியது. அப்படி உரையாடல்களைக் கையாளுவதாலேயே, விவரணைகளை விரிவாகக் கையாளுவதற்குக் கதையில் நிறைய இடம் இருந்திருக்கிறது. அவ்விடங்களை நீங்கள் மிக அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

இந்தக் கதை எனக்கு ஏன் இவ்வளவு பிடித்திருக்கிறது என்பதைத்தான் எதையெதையோ சொல்லி விளக்கிக் கொண்டிருக்கிறேன். மொத்தத்தில் கதை ஒரு உயிருள்ள ஜீவனாகத் துடித்துக் கொண்டிருக்கிறது. நுண்ணுணர்வுள்ள யாரும், நேரத்தையும், இதயத்தையும் கொடுத்து வாசித்தால் இந்தக் கதையின் அருமையை உணர்ந்து கொள்வார்கள்.

முதுமையின், பழமையின் புறக்கணிப்பு, அல்லது அது அகற்றப்பட வேண்டியது என்ற பொதுவான கண்ணோட்டம் கதைக்குள் வெளிப்படுகிறது. நூறு வருடம் பழைய மரத்தை மறுமுறை எண்ணாமல் அகற்றி விடுகிறார்கள். எண்பது வயதான கிழவியும், தாத்தாவும் ஓர் மூலையில் இருப்பு தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். கேசவனுக்குள் எல்லாரையும்போல நீடித்து உயிர்வாழும் ஆசை இருக்கிறது. மரணத்தைக் கண்டு அச்சம். தோப்புத் தேங்காய்கள் தலை மீது விழும் அச்சம், கோயில் நாகம் தீண்டும் அச்சம். மரணபயம், அதே நேரம் உடல் மூப்பு கொண்டு நெடுநாள் வாழ நேரிட்டால் அந்த உளுத்துப்போன உடலுடன் எங்கனம் வாழ்வது என்ற அவனது குழப்பம் கலந்த அச்சம் எல்லாமே அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. கருப்பன் என்ற பாம்பை அவனது அச்சங்களின் குறியீடாகவே காண்கிறேன். 

கதையை வாசித்து விட்டு, அது தந்த அனுபவம் அழுத்த அமர்ந்திருந்தேன். நான் இன்னும் அடைய வேண்டிய தூரத்தை இக்கதை எனக்குக் காட்டியிருக்கிறது. மிகையாகச் சொல்லவில்லை - தமிழிலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று இது. என் பொறுப்பை எனக்கு உணர்த்திய கதை. கதை பல்வேறு வியாக்கியானங்களுக்கு இடமளிக்கிறது. அதே நேரம் ஓர் அனுபவமாக வாசகனுக்குள் ஊடுருவிச் செல்கிறது. இதற்காகத்தானே இலக்கியம் படைக்கப்படுகிறது? 

உங்கள் கதையளவுக்கே அதை விதந்தோத நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கு கதை விமர்சனம் அவ்வளவாக வருவதில்லை. ‘அனுபவிக்கனும், ஆராயக்கூடாது’ வகையைச் சேர்ந்தவன் நான்.

வாழ்த்துக்கள் வெங்கட். மேலும், நன்றி!


நிர்மலின் “மத்த யானையின் ஈருரி”


 

அன்புள்ள நிர்மல்,

மத்த யானையின் ஈருரி வாசித்தேன். ஒரு அனுபவமாக கதை மிக நன்றாக வந்திருக்கிறது. சம்பவங்கள் ஒன்றையொன்று தொடர்ந்து கதையின் உச்சத்துக்கு இயல்பாகக் கொண்டு செல்கின்றன. கதையின் மொழி எளிமையாக இருந்தது. லலிதா மற்றும் பரந்தபன் என்ற தம்பதியர் இடையே நடைபெறும் விவாகரத்து உரையாடல், ஒரு சாதாரண குடும்பக் கலகமாக அல்ல; அது இருவரின் வாழ்க்கைத் தத்துவங்களின் மோதலாகவும், காதலின் சிதைவு மற்றும் தனிமையின் வெளிப்பாடாகவும் உருவெடுக்கிறது. சின்னச் சின்ன உடல் மொழிகள், பார்வை மாற்றங்கள், உணவின் சுவை குறித்த உளவியல் விளக்கங்கள்—இவை அனைத்தும் கதையின் உணர்வுப் பரப்பை விரிவாக்குகின்றன. பரந்தபனின் குழப்பம், கோபம், தன்னிலை உணர்வு எல்லாம் மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றது. பாத்திரங்கள் - லலிதா, பரந்தபன், சேமி, மார்க், அனிமேஷ், படேல் என்று அனைவருமே மனதில் நிற்கின்றன. 

எனக்கு முடிவு சற்று குழப்பமாக இருந்தது. பரந்தபன் தனக்குத்தான் யானையின் மதம் பிடித்திருக்கிறது என்று உணர்ந்து கொள்கிறானா? சேமியின் டிரக்கை அடமானத்தில் இருந்து எடுத்ததனால் அந்த மாற்றம் அவனுள் வந்ததா? இதை நான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் கதை வாசிக்க நன்றாக இருந்தது.

சில அவதானிப்புகள்: 

அலைபேசியா, தொலைபேசியா? அலைபேசி செல்ஃபோனுக்கும், தொலைபேசி டெலிஃபோனுக்கும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. நான் செல்பேசி என்றே எழுதுவேன். செல்லுலரைத் தமிழ்ப்படுத்த வேண்டியதில்லை என்பது என் தரப்பு. 

மூவாயிரம் ரூபாய் கூலி. அமெரிக்காவில் ரூபாயில் பணம் வாங்குகிறானா?

எல்லாரையும் அழைக்கும் பரந்தபன், அனிமஷை மட்டும் அழைக்காமல் அவன் வீட்டுக்கே செல்கிறான்? அப்புறம் வெளியில் இருந்தபடியே ஏன் அழைக்கிறான்?

யானை குறித்த விபரங்கள் கதை நெடுக்க வருகிறது. இந்தக் கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது? பரந்தபன் பார்வையில் என்று யூகிக்கிறேன். அப்படி எனில் அவனுக்கு தமிழிலக்கிய ஆர்வம் உண்டா? தன் மனத்தின் கொந்தளிப்புகளை யானை குறித்த உவமைகள் மூலம் அவனாலேயே பார்க்க முடிந்தால் அவன் மனதில் மாற்றம் ஏன் முன்னமே நிகழ்ந்திருக்கக் கூடாது?

இதெல்லாம் ஒரு வாசகனாக எனக்குள் எழுந்த ஐயங்கள். இவற்றை இப்படி அமைத்ததற்கு உங்களுக்கேயான காரணங்கள் இருக்குமென்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் வெறும் புகழ்மொழிகளை மட்டும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்றறிந்ததால் என் கண்ணில் பட்டதையும் சொன்னேன்.

வாழ்த்துக்கள் நிர்மல்.

திருஞானசம்பந்தர் தேவாரத்திலிருந்து தலைப்பு கதைக்கு அழகூட்டுகிறது.

1. மூவாயிரம் ரூபாய் கூலி. அமெரிக்காவில் ரூபாயில் பணம் வாங்குகிறானா?

> இன்றைக்கு வேலை முடிக்க வேண்டும். மூவாயிரம் ரூபாய் வரும். 

இந்த வரி பரந்தபன் சொல்வதாக வருகின்றது. இந்தியர்கள் டாலரை ரூபாய் என சொல்வார்கள். இந்தப் பழக்கத்தினை என்னிடத்திலும், என் நண்பர்களிடத்திலும், அலுவலகத்திலும் கண்டுள்ளேன்,.

2.அலைபேசியா, தொலைபேசியா? அலைபேசி செல்ஃபோனுக்கும், தொலைபேசி டெலிஃபோனுக்கும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. நான் செல்பேசி என்றே எழுதுவேன். செல்லுலரைத் தமிழ்ப்படுத்த வேண்டியதில்லை என்பது என் தரப்பு. 

 மாற்றிக் கொள்கின்றேன். இனி அலைபேசி பயன்படுத்துகின்றேன். 

3.எல்லாரையும் அழைக்கும் பரந்தபன், அனிமஷை மட்டும் அழைக்காமல் அவன் வீட்டுக்கே செல்கிறான்? 

இதற்கான காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ளது.

> *“எங்கே போவது? யாராவது என்னைத் தேடுவார்களா?அம்மா இருந்தால் தேடுவாள். அவளும் இல்லை. லலிதா ஒரு காலத்தில் தேடுவாள். இப்போது….” வாகனம் நகர, அவன் எண்ணங்களும் நகர்ந்தன. கண்கள் கலங்கின.அழ விரும்பவில்லை; கட்டுப்படுத்தினான்.

> “லலிதாவை முதலில் எங்கே பார்த்தேன்? அனிமேஷ் வீட்டில்… அனிமேஷ்  என் நண்பன். அவன் என்னை ஏற்றான். எத்தனை வருடப் பழக்கம்! அவன் பழக்கத்தால்தான் லலிதாவை சென்னையில் அவன் வீட்டில்தான் பார்த்தேன். உஷா, லலிதாவின் தூரத்து சொந்தம். ஏதாவது சொல்லுவாளோ?”

> சாலையில் அத்தனை வாகனங்களுக்கு மத்தியில் தனிமையை உணர்ந்தான்.

> “அவள் ஏதாவது சொன்னாலும், அனிமேஷ் என்னுடன் வருவான். வந்தே தீர வேண்டும்; வராமல் இருக்கக் கூடாது. கடவுளே,அவனை வரச் சொல்… வராமல் இருக்கக் கூடாது.”

> மனதில் ஒரு கனம் எழுந்தது. அந்தக் கனம் உடலுக்கேறி, உடல் சோர்ந்தது. வாகனத்தை அனிமேஷ் வீடு நோக்கித் திருப்பினான்*

4.அப்புறம் வெளியில் இருந்தபடியே ஏன் அழைக்கிறான்?

இதற்கான காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ளது.

> “அனிமேஷ் வீட்டில்தான் இருக்கிறான். தொலைபேசியில் அழைத்து விட்டு வந்திருக்க வேண்டும். என்ன நம்பிக்கையில் அழைக்காமல் வந்தேன்? வெளியில் எங்குப் போகலாம்? அவனுக்கு வேலை இல்லாமல் இருக்குமா? பிளம்பிங் வேலைக்கு போகவேண்டுமெனச் சொல்வானோ?”

> முடிவு செய்ததும் அவனை அழைத்தான். அழைத்தவுடன் முதல் ரிங்கிலேயே அனிமேஷ் எடுத்தான்.

5. யானை குறித்த விபரங்கள் கதை நெடுக்க வருகிறது. இந்தக் கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது? பரந்தபன் பார்வையில் என்று யூகிக்கிறேன். அப்படி எனில் அவனுக்கு தமிழிலக்கிய ஆர்வம் உண்டா? தன் மனத்தின் கொந்தளிப்புகளை யானை குறித்த உவமைகள் மூலம் அவனாலேயே பார்க்க முடிந்தால் அவன் மனதில் மாற்றம் ஏன் முன்னமே நிகழ்ந்திருக்கக் கூடாது?

யானை வர்ணனை கதை எழுதுபவரின் குரலாக பரந்தபனின் உளநிலையை விளக்க சொல்லப்படுகின்றது. பரந்தபனின் அகக்குரல் இல்லை.

5.இருப்பினும் வெறும் புகழ்மொழிகளை மட்டும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்றறிந்ததால் என் கண்ணில் பட்டதையும் சொன்னேன்.

அவசியம் சொல்லுங்கள். அது எனக்கு பேரூதவியாக இருக்கின்றது.

6.இந்தக் கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது?

கதை பரந்தபனின் தன்னிலையில் செல்லவில்லை. கதை சொல்லியின் பார்வையில் உள்ளது. பரந்தபனுக்கு அருகே இருந்து சொல்லப்படுகின்றது.

7.பரந்தபன் தனக்குத்தான் யானையின் மதம் பிடித்திருக்கிறது என்று உணர்ந்து கொள்கிறானா?

பரந்தபன் கீழ் கண்டவாறு உணர்கின்றான். அதை கதை ஆசிரியரின் குரலில்  “மதம் கொண்ட யானையின் கனத்த தோலென இருந்த இருள் அவனுள் இருந்து உரிந்துகொண்டிருந்தது.”  எனக் காட்சிப் படுத்துகின்றது.

> “இப்படி இருப்பது எனக்குப் பிடித்துள்ளது…ஏன் இப்படி இருக்கிறேன்?”


13 மார்ச், 2025

பொற்குகை ரகசியம் - விமர்சனம்



 

என்னுடைய பொற்குகை ரகசியம் தொகுப்பு குறித்து ஆஸ்டின் சௌந்தர் எழுதியுள்ள விமர்சனம்.

ஆஸ்டின் சௌந்தர்

நேற்றைய (12/30/2024) மாலை , எனக்கு இனிதான மாலை. இரு மலைகளுக்கு நடுவே ஆதவன் சென்று மறையும் அந்தியைக் காணும்பொழுது வரும் அதே உவகை , ஜெகதீஸின் , “நிமித்தம்” சிறுகதையை அகழ் இதழில் வாசித்தபொழுது அடைந்தேன். அசோகமித்திரன் ஒரு முன்னுரையில் சொல்லியிருப்பார், “நான் இந்தக் கதைகளை எழுதும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தேன், வாசிக்கும் நீங்களும் அதே மகிழ்வை அடைவீர்கள் “ என. அந்த மகிழ்வை “நிமித்தம்” எள்ளளவும் குறையாமல் கொடுத்தது. கதையின்  வெற்றி reading pleasure கொடுப்பதில் எல்லோரையும் சென்றடையும் என்பதில் உள்ளது. கதைநாயகனின் செயல், வாழ்க்கையின் துண்டு ஒன்று பறந்துவந்து இரத்தத்துளிகள் படர வாசகனின் அகத்தை தொட, இது இலக்கியம் என்றும் சொல்கிறது. 

ஜெகதீஸின் “பேராசிரியர் கிளி” கதையை சொல்வனத்தில் வாசித்துவிட்டு, “இலக்கியத்தில் கொட்டுப் பட்டாலும் அவர் கையால் கொட்டுப்படவேண்டும்” என்று நான் நினைக்கும் நண்பருக்கு அனுப்பி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டேன். அவரும் நான் நினைத்ததையே சொன்னார். ஜா. தீபா-வின், “குரு பீடம்” கதையில் தொட்ட பேசுபொருள் எனினும், இவரது உத்தி வேறுபடும் இடமும், வாழ்வியல் சூழலும், “பேராசிரியர் கிளியை” ஜெகதீஸ் பயன்படுத்திய விதமும் இலக்கியம் என ஆகிறது என்றார். ஒவ்வொரு எழுத்தாளரும் , அவர்களைத் தொடர்ந்து வாசிக்கலாம் என்று நான் குறித்து வைத்திருப்பேன். ஜெகதீஸ் அந்த இடத்தை இந்தக் கதையின் மூலம் அடைந்துவிட்டார். ஆனால், தொடர்வாரா என்ற test மிச்சமிருந்தது. 

ராலே ராஜன் வீட்டிற்கு, நாங்கள் செப்டம்பரில் சென்றபொழுது ஜெகதீஸும் அனுவும் தம்பதி சகிதமாக வந்து பார்த்து, “பொற்குகை ரகசியம்” நூலை “எங்கள் அண்ணா” என்று ஜெகதீஸ் கையெழுத்துப் போட அன்பளிப்பாகக் கொடுத்தனர். மரியாதையின் நிமித்தம் தொகுப்பில் உள்ள, “சொல்லப்படாத கதை” -யை ராஜனும் சசியும் எங்களுக்கென ஒதுக்கியிருந்த அறையில் தூங்கி எழுந்த ஒரு காலையில் வாசித்தேன். எதுவுமே இல்லாத ஒன்றை எடுத்துக்கொண்டு எதோ பெரிதாக இருப்பதுபோல் தனது எழுத்துச் சித்திரத்தால் மட்டும் சாதிப்பது என்பது முற்றிலும் ஒரு கலைஞனாலேயே முடியும். அவனை நான் அந்தக் கதையில் கண்டுகொண்டேன். அந்தக் காலை, ஜெயமோகன், அருண்மொழி போன்ற தளபதிகள் சூழ ஒரு பட்டாளமாக, Jaipur Literature Festival -போக தயாராகிக்கொண்டிருந்தோம்! அனுவின் காதலன் கோட்டெல்லாம் போட்டு அழகனாக தயாராக  வாசலில் வந்து நின்றிருந்தார். “தம்பி , நீ கலைஞன் “ என்று கட்டிப்பிடித்துக்கொண்டேன். அருகில் நின்ற அனு கண்கள் மின்னப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் கட்டிப்பிடித்ததைப் பார்த்துப் பொறாமையெல்லாம் கொள்ளவில்லை. 

இதற்கு முன்னர் மழையும் இல்லாத வெய்யிலும் இல்லாத ஒரு நாளில்,  “பேராசிரியர் கிளி” “கர்மா” “ஊனுடல்”, “நீலத்தழல் “ எல்லாம் வாசித்த ஒரு வாசகனாக  , நான் அவரை அழைத்திருந்தேன். “கர்மா” நல்ல கதைதான் தம்பி, ஆனா இவ்வளவு Straight Forward-ஆக எல்லாம் தலைப்பு வைக்கக்கூடாது என்றேன். அன்றுதான், “அண்ணா எப்படிண்ணா இப்படி வலிக்காம அடிக்கிறீங்க” என்றார். அனு கண்கள் மின்னப் பார்த்திருக்க , ஜெகதீஸின் கண்களில் அந்த அண்ணனா இந்த அண்ணன் என்ற சந்தேகம்! 

“நிமித்தம்” வாசித்துவிட்டு அந்த அகமகிழ்வு நிலை குலையாமல் நிற்கிறதா எனப் பார்க்க, Virginia Woolf-ந் Unwritten Novel மற்றும் Kew Gardens வாசித்தேன். கந்தர்வனின், “தலைவர்” சிறுகதையை வேறு ஓர் காரணமாக மீள்வாசிப்பு செய்ய நினைத்திருந்தேன். எனது ஆசிட் டெஸ்டிற்கு அதை வாசிதத்து மேலும் உதவியது. ஜெகதீஸ் , எனும் கதைசொல்லி, கந்தர்வன் எனும் கதைசொல்லி பத்தி பத்தியாக பாத்திரங்களை படைப்பதிலும், காட்சியமைப்பிலும் இணையாக சென்றார்கள். கந்தவர்னின் கதையில் வரும் ஒரு அம்மா , அப்பா, மருத்தவப் படிப்புக்கு தங்கள் மகனை தயாராக்கும் சித்திரம். “நிமித்தம்” கதையில் மாநில அரசு அலுவலக சித்திரம். அந்த அம்மாவும் அப்பாவும் கோடான கோடி மக்களின் பிரதி நிதிகள். ஜெகதீஸின் கதை நாயகனும், தாசில்தாரும், காக்கிச்சட்டை போட்டவரும் , புரைகண்ணுடையானும், தமிழக மக்களின் அச்சு அசல் வார்ப்புகள். இரண்டு கதைகளிலும்  வாழ்வு வைக்கும் சூடு, நிதர்சனம். என் மனதில் படித்த , இதுவரை வாசித்த அனைத்து நல்ல கதைகளின் நிரையில் “நிமித்தமும்” நிற்கிறது.

“பொற்குகை ரகசியம்” நூலை எடுத்து, குறுங்கதைகள் என வகைப்படுத்துப்பட்டுள்ள, “பேசும் மலர்”, “தேங்காய்ச் சில்லு”   கதைகளை வாசித்தேன். “பேசும் மலர்” வாழ்வை ரசிப்பவனின் காதுகளும் கண்களும் எந்த அளவுக் கூர்மையடையும் என அழகிய மொழியில் சொல்கிறது. அழகியல் கூறுகளில் மனம்கவர் கதைகளில் இதை வைத்துக்கொள்வேன். “தேங்காய்ச் சில்லு” கதைகளை வாசித்தேன். “பேசும் மலர்” வாழ்வை ரசிப்பவனின் காதுகளும் கண்களும் எந்த அளவுக் கூர்மையடையும் என அழகிய மொழியில் சொல்கிறது. அழகியல் கூறுகளில் மனம்கவர் கதைகளில் இதை வைத்துக்கொள்வேன். “தேங்காய்ச் சில்லு” , யோசனையில் இருப்பவனை, தொட்டுக்கூப்பிட்டால் ஒரு சிலிர்ப்பு வருமே, இந்தக் கதையை வாசித்ததும் அப்படி ஒரு சிலிர்ப்பு. ஆனால், இந்த சிலிர்ப்பு அடங்காதது. ஜெகதீஸின் பெயரை ஒரு பத்திரிகையில் பார்த்ததும், அந்த படைப்பை வாசிக்க வைக்கும். புத்தகக் கடையில் ஜெகதீஸ் என்ற பெயர் கொண்ட நூல் எங்கே எனத்தேட வைக்கும். ஜெகதீஸ் கதை சொல்ல எடுத்துக்கொள்ளும் மெனக்கெடல் பிடித்துள்ளது. “ஒப்பனை” கதையில் உரையாடல்கள் செறிவாக வந்துள்ளன. மாணவி விஜயலட்சுமி-யை, ஆசிரியர் லாவண்யா, “விஜயலட்சுமி” என்று முழுமையான பெயர் சொல்லி அழைக்க, இந்தக்காலத்தில் யார் பெயரை முழுசாக சொல்கிறார்கள் என்று யோசித்தேன். சக மாணவர்களோ, “விஜே” என்று அழைக்கிறார்கள். அப்படியே நவீனமாக உரையாடலை நகர்த்திவிடுகிறார். “பொற்குகை ரகசியம்” , சைக்கிளில் சிட்டாகப் பறக்கும் பாலுவிற்கு அந்தப் படக்கதை வாசிக்கவேண்டும் என்பதைத்தாண்டி வேறு ஒரு ரகசியம் இருக்கிறது. “பிறப்பொக்கும்” கதை சங்கிலியை யார் எடுத்தார்கள் என்பது வாசகனுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு. எல்லாம் இணைந்து வாசகனுக்கு சுவாரஸ்யத்தை அள்ளி வழங்குகிறது. இன்றைய சூழ்நிலையில் ஒருவன் பல நாடுகளில், பலவிதமான பண்பாட்டுச் சூழலில் வாழும் நிமித்தமாகிவிடுகிறது. ஜெகதீஸ் குமார் அவர்களின் பிரதிநிதி. “பொற்குகை ரகசியம்” நூலில், அவர் வாழ்ந்த வசித்த நாடுகளில், கண்களையும் காதுகளையும் திறந்து வைத்து சுற்றிலும் நடப்பதை கவனித்திருக்கிறார் எனத் தெரிகிறது. விருந்தாளியாக வந்து பார்ப்பவர்களுக்கு அமெரிக்க வீட்டின் முன்னுள்ள சீராக வெட்டப்பட்ட பசும்புற்கள் தோட்டங்கள் மகிழ்வளிக்கும். புல்லைவெட்டத் திணறும் புல்வெட்டியின் சக்கரத்தீன் கீழ் மாட்டிக்கொள்ளும் க்ரேன்பெர்ரி கிளையோ, இருந்து வாழும் கதைசொல்லியின் கண்களில் மட்டுமே படும். வருடக்கணக்காக தனது ஹோண்டா அக்கார்டை மாற்றாத பேராசிரியரும் அவனது கண்ணில் படுவார். எந்த நாடாக இருந்தால் என்ன கணக்கு வாத்தியார் போர்டில் எழுதுவதை கவனிக்காத மாணவர்கள் இருக்கிறார்கள். கடலில் மீன் பிடிக்கப்போலாமா என்று கேட்டால், திமிங்கலத்தின் விட்டையைப் பார்க்கவா என கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். நிலம் மாறினாலும் குதர்க்கம் மாறாத மானிடர்களையும், லாட்டரிச் சீட்டு விற்கும் தமிழ் நாட்டுச் சிறுவன் , நீல ஒளியை உமிழும் ஜெல்லி மீன்கள் என “பொற்குகை ரகசியம்” பன்னாட்டுக்காரனின் கதைகள் அடங்கிய தொகுப்பு.


ஆஸ்டின் சௌந்தர்


17 ஏப்ரல், 2024

சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை - என் பார்வை





சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை

மிக நுட்பமாகவும், விரிவாகவும் எழுதப்பட்ட கட்டுரை ஜமீலா. இலக்கிய நயம் பாராட்டல் கட்டுரைகளுக்குண்டான எல்லா இலக்கணங்களோடும் பொருந்தி வரும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். இஸ்கான் ஊர்வலத்தில் சிறுவர்களுக்குள் பார்த்த வில் சுமந்த ராமன் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய ஓர் எளிய கேள்விக்கு விடை தேடிச் செல்லும் பயணமாகவே இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. அன்பே உருவான ராமன், தாடகையை வதம் செய்யத் தயங்கிய ராமன், ராமகாதையின் பிற்பகுதியில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவிக்கும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டான் என்பதுதான் அந்தக் கேள்வி. கட்டுரை ஆசிரியர் சிந்தித்து, ஆராய்ந்து அதன் காரணம் ராமன் சீதை மேல் கொண்டிருந்த காதலே என்ற முடிவுக்கு வருகிறார். அவன் தசரத ராமனோ, கோசலா ராமனோ அல்ல, சீதா ராமனே என்று உறுதியாகக் கூறுகிறார். அதற்குக் கம்பனைத் துணைக்கழைத்துக் கொள்கிறார். அவனது பாடல்களிலிருந்து, வால்மீகியில் நாம் காண இயலாத காதல் ததும்பும் பகுதிகளை நமக்கு எடுத்து விளக்குகிறார். 


கம்பன் மிதிலைக்குள் நுழைகையில் இருவரும் பார்த்துக் கொள்வதிலிருந்து துவங்கி (That அண்ணலும் நோக்கினான் moment!), மறு நாள் தோழியரோடு கோயில் பூஜைக்கு வரும் சீதையைக் கண்டு ராமன் மயங்கி நிற்றல், சீதையின் கண் வழி புகுந்த காதல் (பால் உறு பிரை), ராமன் வில்லை முறித்ததும் (எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்), முறித்தது அவன் இல்லையெனில் உயிர் துறப்பேன் என்று அவள் சொல்லுதல், ராமன் தேர் உலா வருகையில் பெண்கள் அவனழகு கண்டு மயங்குதல் (தோள் கண்டார்- தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார்-தடக்கை கண்டார்), திருமணத்துக்கு முந்தைய இரவு, திருமண நிகழ்வு, கானகம் புகுதல், அதிகம் பேசாத ராமன் காட்டில் இருக்கும் போது, பதினாறு பாடல்களில் இயற்கையழகை விவரிக்கிற சாக்கில் அன்பு மனைவியின் அழகை விவரித்தல் (காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை), பஞ்சவடியில் இலக்குவன் பர்ணசாலை அமைக்கையில் ராமனும் சீதையும் கண்களாலேயே பேசுதல் (தோளின் கண் நயனம் வைத்தாள்), சீதையைப் பிரிந்து ராமன் இரவெல்லாம் துடித்தல் (காய்த்து இரும்பை, கருமகக் கம்மியன்), சுக்ரீவன் சீதையின் அணிகலன்களை காட்டுகையில் ராமன் துடித்தல் (இரும்பு கண்டனைய நெஞ்சம் எனக்கில்லை) என்று சீதை மேல் ராமனுக்கிருந்த காதல் குறித்து கம்பன் எங்கெல்லாம் பாடியிருக்கிறான் என்ற விரிவானதொரு வரைபடத்தையே அளித்திருக்கிறார் ஜமீலா.

கட்டுரை முழுவதும் சீதை குறித்தும், ராமன் குறித்தும் தனக்குள் தோன்றும் வியப்புக்களை, கேள்விகளை, ஒரு குழந்தைக்குரிய ஆர்வத்தோடு முன்வைத்து, அதற்குக் கம்பனில் விடை கிடைக்குமா என்று பார்த்திருக்கிறார். கம்பனுக்கும் முன்பே தமிழில் ராமகாதை பரிச்சயம் இருந்திருக்கிறது என்பதை நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் ஐம்பத்து நாலாவது பாடலுக்கு எழுதிய உரையை மேற்கோள் காட்டி நிறுவுகிறார். கம்பன் மேல் அவருக்குள்ள காதலும், ஒரு மேதையின் முன் பணிந்து நின்று, வியந்து மகிழும் குழந்தையுள்ளமுமே இக்கட்டுரையைச் சிறப்பு மிக்கதாக்குகின்றன.  நான் வாசிக்கும் சில இலக்கியக் கட்டுரைகள் முழுவதும், “எனக்கு எவ்ளோ தெரீது பாத்தியா?” என்று ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். அதுவே வாசிப்பிலிருந்து நம்மை வெளியே தள்ளி விடும். பணிவில் ஓர் அழகு இருக்கிறது. கற்றோர்க்கு நன்றாம் பணிதல். மேதைமையின் முன் பணிதலே இக்கட்டுரையை சிறப்பு மிக்கதாக்குகிறது. வாசிக்க, வாசிக்க இன்பமூட்டுகிறது.

கம்பன் பாடல்களை மேற்கோள் காட்டியிருந்த விதத்திலேயே ஆசிரியர் கம்பனில் எவ்வளவு தோய்ந்திருக்கிறார் என்பதற்குச் சான்றாக இருந்தது. நம்மையும் கம்பனைக் கற்கத் தூண்டுகிறது இந்தக் கட்டுரை. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து எழுதினால் கம்பனில் நுழைவதற்கு பலருக்கு உதவியாயிருக்கும்.


எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ - என் பார்வை

 


எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ

அன்புள்ள பாலாஜி,

கதை எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் மொழி தீவிரமாகவும், தத்துவார்த்தமாகவும் ஒழுகிச் செல்கிறது. அழகாகக் கதையைக் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள். உரையாடல்கள் தேர்ந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை வருணனை மிகத் துல்லியமாக வந்திருக்கிறது. நீங்கள் கதையில் சாதிக்க நினைத்ததைச் சாதித்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

மலைகளின் மீது அவருக்கிருக்கும் பிரேமை நன்றாக வெளிப்பட்டிருந்தது. இயற்கை இக்கதையில் ஒரு பாத்திரமாகவே வெளிப்பட்டது. அந்தத் தம்பதிகளின் பயணம் குறித்த குறிப்புகளும் அழகானவை.

கதையின் முடிவும் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு சிறுகதைக்குத் தேவையான சின்ன வெளிப்பாடு. “ஆம்” என்று மட்டும் சொன்னேன் - என்ற வரி மிகக் கனமானது.

இவ்வளவு சிறிய கதையில் உங்களால் கனமான விஷயத்தைக் கூற முடிகிறது. எனக்குச் சற்றுப் பொறாமை.

எரி நட்சத்திரத்தில் துவங்கி அதிலேயே முடிவது கதையை அழகாக்குகிறது. அவர் எரி நட்சத்திரம் பார்த்த அதே வீட்டில், அதே சாளரம் வழியே, கதை சொல்லியும் பார்ப்பது கவித்துவமான தருணம்.

ஒரு புனைவெழுத்தாளனுக்குரிய மொழி உங்களுக்குக் கைவந்து விட்டது. எந்த எழுத்தாளரையும் நினைவூட்டவில்லை. நீங்கள் நிறைய புனைவு எழுதுங்கள். பல ஆங்கிலப் பதங்களை மிக அழகாகத் தமிழ்ப்படுத்தியிருந்தீர்கள். 

அமெரிக்க வாழ்க்கையை எழுதும் தமிழர்கள் மிகச்சிலரே. அவ்வகையில் நீங்கள் தனித்துவம் மிக்கக் கதைகளை எழுதக்கூடும்.

தயவு செய்து விமர்சனங்களுக்காகவோ, உயர் பீடத்திலிருப்பவர்களின் அங்கீகாரம் இன்னும் வரவில்லை என்பதற்காகவோ, உங்கள் எழுத்து இன்னும் தகுதி பெறவில்லை என்ற முடிவுக்கு வரவேண்டாம். எழுத்தில் இயங்கும் போது எழுத்தாளனுக்கென்றே ஒரு சிறு ஆணவம்தான் அவனை படைப்பில் ஈடுபடுத்துகிறது. தனி வாழ்க்கையில் அந்த ஆணவத்தோடு இருக்கத் தேவையில்லை. ஆனால் எழுதும்போது அது தேவை. (எனக்குச் சொல்லிக் கொள்பவை). தொடர்ந்து எழுதுங்கள்.

என் கண்ணில் பட்ட சிறு, சிறு விஷயங்களைச் சொல்கிறேன். வாகனம் என்று முதலில் சொல்கிறீர்கள். என்ன வாகனம் என்று சொல்லவில்லை. பின்னர் அவரே ஆர்.வி என்று சொல்கிறார். எனவே என்ன வாகனம் என்று சொல்லத் தேவையில்லை. சிறு குருவிகள் என்ன வகை என்று எழுதினால் நன்றாக இருக்கும். “பொருட்களால் நிறைந்திருந்த வாகனம்” என்னென்ன பொருட்கள் என்று பட்டியலிட்டால் வாசகன் கற்பனையிலேயே அவை பயணத்துக்கான பொருட்கள் என்பதைக் கண்டுவிட முடியும். கதையில் பொதுவான தகவல்களைத் தருவதற்கு பதில் குறிப்பான தகவல்களைத் தரலாம்.

“நான் இதே வீட்டை வாங்கியிருப்பதையும் இங்கு குடிபெயரப்போவதையும் அவரிடம் சொல்லவில்லை.” - இந்த வரி தேவையா என்று யோசிக்கவும். நீங்கள் அந்த மனிதர் சொன்ன அதே எண்ணுள்ள வீட்டுக்குள்தான் நுழைகிறீர்கள். அவ்வீடு எவ்வகையாயினும் உங்களுக்குத் தொடர்புள்ளதாக இருக்குமென்பதை வாசகன் ஊகித்து விடுவான்.

கதையின் உள்ளடகத்தில் எனக்கிருக்கும் ஐயங்கள் சில:

கதை சொல்லி ஒரு விதமான குற்ற உணர்வுடன் அக்கதையைக் கேட்பதாகப் படுகிறது. அது ஏன்? அப்படி ஏதேனும் காரணம் இருந்தால் அதைக் கதையில் கோடி காட்டலாம்.

எரி நட்சத்திரம் கணத்தில் தோன்றி மறையும் ஒன்று, அது போல்தான் மனித வாழ்க்கையும் உறவுகளும் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன். அது அபூர்வமாகத் தோன்றக் கூடியது. மனித வாழ்வும் அங்கனமே. இதை இன்னும் எக்ஸ்ப்ளோர் செய்யக் கதையில் இடம் இருக்கிறதா?

கதை சொல்லி இக்கதையில் அவருடைய கதையைக் கேட்பதன் மூலம் அடையும் மாற்றம் என்ன?

இது மாதிரி பலவிஷயங்களை வாசகன் ஊகத்துக்கு விட்டிருப்பதைப் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் இன்னும் சில முறை வாசித்து, நிரப்ப வேண்டிய இடைவெளிகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.

அவர் காலி செய்து விட்டுச் சென்ற அதே வீட்டை கதை சொல்லி வாங்கியிருக்கிறான். அவ்வீட்டில் அவரது நினைவுகள் உள்ளன. இதற்கும் மேலதிகமாக இக்கதை சொல்ல வருவதென்ன? (இக்கதைசொல்லி போலவே, எனக்கும், வீட்டை வாங்குகையில் என் வீட்டு முன்னாள் சொந்தக்காரர் குறித்து எதுவும் தெரியாது. அமெரிக்க வாழ்வின் இந்த குரூர யதார்த்தத்தை இக்கதை நன்றாகப் பதிவு செய்திருக்கிறது) சிறுகதை வாழ்வின் ஒரு துணுக்கை விவரிப்பதோடு நின்று விடாமல், ஆதாரமான ஒரு கேள்வியை எழுப்பக்கூடியதாகவும் அமைந்தால் சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு, கதைசொல்லி உள்ளத்தில் அந்த வேளையில் உழன்று கொண்டிருக்கும் சொந்தப் பிரச்னையை எதிரொலிப்பதாக அந்தக் கதை அமைந்திருந்தால்?

எழுத்துப் பிழை, நிறுத்தற்குறிப்பிழைகள் சில உள்ளன. நூறாண்டுகள் கழித்தும் ஏதோ ஒரு வாசகன் இக்கதையை வாசிக்க வாய்ப்புள்ளதால், இப்போதே திருத்தி விடுவது நல்லது. (எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்).

இந்தக் கதை ஓர் இலக்கிய இதழில் வெளியாவதற்கான முழுத்தகுதியும் கொண்டது. நீங்கள் இதை சொல்வனத்துக்கு அனுப்பலாம். தொடர்ந்து நீங்கள் படைப்புகளை இதழ்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதே என் கோரிக்கை. சொல்வனம், பதாகை போன்ற இதழ்கள் பாதுகாப்பானவை என்றே நினைக்கிறேன். அவற்றுக்கு நீங்கள் அனுப்பலாம்.


மேலும் வாசிக்க