அன்புள்ள ஜெகதீஷ்,
மகன், ஸ்பைடர் - இருவரும் தந்தைக்கு ஒன்றே. முதல் முறை குடியினால் இசையை, தன் மகனுக்கு இசை அறிமுகமும், அதன் வழியாக கிடைக்கவிருந்த நற்கல்வி வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், அந்த விளைவின் வீரியம் அவரை தொடவில்லை. குடியின் ஈர்ப்பு விசையில் இருந்து அவர் விழவில்லை. அதிகபட்சம், வயலினை அந்த சமயத்தில் தொடாமல் தவிர்த்தார். (சமயங்களில் சில மறுப்புகள், பெரும் இழப்புகளை தவிர்க்கக்கூடும்).
தந்தை செய்யும் ஒவ்வொன்றையும் தனியாக இருக்கும் போது செய்து பார்க்க முயலும் மகனை, தந்தையான பின் பெரும்பாலான ஆண் அறிவதில்லை. ஆனால் நிழல் என மகன்கள் தந்தையை நகல் எடுப்பார்கள் - வளர்ந்த பின் தன்னை கொஞ்சம் அதில் சேர்த்து அடுத்தவர்களுக்கு கையளித்து செல்வார்கள். ஸ்பைடர், பட்டறை வேலை என தொடர்ந்து அடுத்தது பாட்டில் அல்லது வயலின் - ஒன்றை நோக்கியே இயல்பாக சென்றிருக்க கூடும்.
பிரிந்து இருக்கையில் குடிப்பதை தவிர்த்தவன் (இசையை, பெரியவரை விடும் போதெல்லாம் தோன்றாத ஒன்று), மகனின் வலியில் மீண்டும் குடித்து நினைவிழக்க, மற்றொரு மகனை மொத்தமாய் இழந்ததும் என்றைக்கும் ஆன உறக்கத்தில் (போதையில்) இருந்து எழுந்து விட்டார். விலகி இருத்தல் மிக பெரிய உயரங்களை எட்ட உதவியாக இருக்கும். தீய பழக்க வழக்கங்கள் மட்டும் அல்ல, அதிகமான அன்பு, எதிர்பார்ப்பு, இவை கொடுக்கும் அச்சங்கள், நடக்காத பலவற்றை மனதில் நிகழ்த்தி நிகழ்த்தி அலைக்கழிதல் என இன்னும் பல பல
தான் நெய்த வலையில் இருந்து தானே விலகி நிற்கும் சிலந்தி எப்போதும் உணர்த்துவது - எல்லாம் உன்னுடையதே, எட்டி நீ நிற்கும் போது.
வெங்கட பிரசாத்
அன்புள்ள விபி,
விரிவான விமர்சனத்துக்கு நன்றி. நான் உங்கள் குறிப்பை இரண்டாவது முறை வாசித்தபோது ஒரு புதுக்கவிதையைப் போலவே ஒலித்தது. நண்பர்கள் நேரம் கொடுத்து வாசிப்பதற்கே நான் நன்றியுடனிருக்கிறேன். அதுவும் இதுபோன்ற ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இன்னும் ஊக்கம் தருகின்றன.
ஒரு சிறுகதை அது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போதே தரும் இன்பமும், வேதனையும் அலாதியானது. இப்போதெல்லாம் இந்த அனுபவங்கள் அதிகமாயிருக்கின்றன. எழுதிக்கொண்டிருக்கையில் நான் எழுதுவது எனக்கே சுத்தமாகப் பிடிக்காமலிருக்கிறது. எழுதி முடித்து எடிட் செய்வதற்காக வாசிக்கையில் இதை நானா எழுதினேன் என்னும் அளவுக்கு நன்றாக இருக்கிறது. எழுதுவது ஒரு மாதிரி இனிய அவஸ்தை. எனக்கு இருக்கும் நல்லூழ் என் கதைக்கு ஆசிட் டெஸ்ட் வைக்கும் அனுதான். அதனால் குற்றங்குறைகள் முளையிலேயே களையப்படுகின்றன. நானும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்கிறேன்.
வீட்டில் அனைவருக்கும் அன்பு, விபி
ஜெகதீஷ் குமார்
வெங்கட பிரசாத்
அன்புள்ள ஜெகதீஷ்
எழுதும் போது ஏற்படும் உணர்வு நிலைக்காகவே எழுதலாம் என்றே எப்போதும் நான் நினைப்பது உண்டு.
எழுதுபவர்கள் ஏதோ ஒரு இடத்தில் தன்னுடைய படைப்போடு ஒரு invisible relationship
இருப்பதால் சிற்சில விஷயங்கள் கண்ணுக்கு படாது. அப்போது வெளியே இருந்து வரும் ஒரு பார்வை தான் நமக்கு உதவி செய்யும்.
அந்த வெளியே இருந்து வரும் பார்வை, வீட்டுக்குள் இருந்து அதுவும் மனதின் உருவமாய் மனையாள் ஆக இருப்பது பெரும் பேறு. மனசாட்சி எல்லாவற்றையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் அணு அளவு பயம் இன்றி சொல்லிவிடும்
வாழ்த்துகள் ஜெகதீஷ்.
வெங்கட பிரசாத்
Prasad Venkat
Dear Jegadeesh
The story of a father undone by alcohol, trying to piece his life back together, may sound familiar. But in ஸ்பைடர், Jagadeesh turns this ground into a memorable one because he sprinkles tenderness without sentimentality and evokes atmosphere instead of exposition. The arc from collapse to the possibility of recovery is rendered with such intimacy that it is earned.
We watch the father falter, belittled by his wife, ashamed before his son. Yet his every exchange with the boy is touched by gentleness. When the son visits after their separation, the father remarks, “நீ இல்லைன்னுதான் பொக்குனு போய்ட்டான்னு நெனக்கிறேன்” about the family dog. The line carries more than it says: the dog’s drooping spirit mirrors his own longing for his child. Jagadeesh never lingers on this yearning directly; instead, he lets it surface through quiet, moody images. A sentence like “வெளியே வந்து பின்புறம் ஓடினான். ஸ்பைடர் கரும்பு வயலைப் பார்த்தபடி தியானத்தில் அமர்ந்திருந்தது” is plain on the surface, but within the story it trembles with feeling.
The dog’s accidental death - standing in for both innocence and the father’s fragile hope of being better - is drawn without embellishment. His outburst, “ஸ்பைடர்ன்னா எம்பையனுக்கு உசிரு தெரியுமா?”, hurled at someone likely blameless, reveals more than grief: a man conscious that his neglect could cost him his son next. That recognition gives way to resolve. He chooses sobriety, but also distance, leaving town so the boy can grow in steadier hands.
The father is on the mend, but this healing requires his absence. The father's love endures, not despite, but because he steps away. Many congratulations on another fine story, Jegadeesh Kumar.
Prasad Venkat
Dear Prasad Venkat,
Thank you for this insightful review Prasad Venkat. Coming from you it means a lot. Especially thanks for pointing out the subtler aspects of the story.
Jegadeesh Kumar
Prasad Venkat
And thank you for this beautiful story. Focusing on seemingly ordinary moments to paint intense and complex feelings, all the while being highly readable is no mean feat. I also liked the fact you didn’t dwell on the wife/mom. From her perspective, she’s probably been through hell. I wish more people would read this story and share their thoughts. Congrats again.
Prasad Venkat
JK
Somehow you hit the proverbial nail on the head every time you review a story! not only mine, but everyone's!
Jegadeesh
ஆஸ்டின் சௌந்தர்
வெண்ணையில் உருட்டிய சோற்றுக் கவளை உருண்டை நழுவுவது தெரியாமல் தொண்டையில் இறங்குவதுபோல, கதையை விருவிருவென வாசிக்க முடிந்தது. கதைக்கே உரித்தான சின்னப் பதட்டதைக் கொடுத்தாலும், வயலின் வாசிப்பதற்கு அது சரிதான் என்று ஆசுவாசப்படுத்திவிட்டீர்கள்.
விவரணைகள், வலம் இடம் மாறுவது எல்லாம் கன கச்சிதம். உங்களுக்கு கை கூடிவிட்டது, கதைசொல்லி! ஸ்பைடர்!
மாஸ்டர் பெயரை காப்பாற்றிவிடுவீர்கள் !
ஆஸ்டின் சௌந்தர்
மிக்க நன்றி அண்ணா,
உங்களைப் போல் நுண்ணுணர்வு மிக்க வாசிப்புள்ளவர்களால்தான் நானும் எழுதும்போது மிகுந்த பொறுப்போடு எழுத முடிகிறது. நாம் பேசும்போது குறிப்பிட்ட மாதிரி முதலில் கதை ஓர் அனுபவத்தைத் தர வேண்டும். அந்த அனுபவம் தீர்ந்தபின் கதையின் அடுக்குகள் ஒவ்வொன்றாக வெளித்தெரிய வேண்டும். இக்கதையை வாசித்த நண்பர்கள் சிலர் ஸ்பைடர் என்ற அந்த நாய் தனஞ்சயன் இன்னொசென்ஸூக்கு ஒரு குறியீடாகவும், வயலின் அப்பாவின் எதிர்காலக் கனவுகளுக்கு ஒரு குறியீடாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது. இவை நான் விழிப்புணர்வோடு உருவாக்கியவையல்ல. ஆனால் கதை தரும் அனுபவமே பிரதானம். குறியீடுகள் இயல்பாக எழுந்து வர அனுமதித்தாலேயே போதும் என்று நினைக்கிறேன்.
கதையை வாசித்ததற்கே நன்றி அண்ணா. உங்களைப் போன்ற நல்ல வாசிப்பாளர்களுக்கு கதை பிடித்திருந்தது என்று சொன்னாலே அதை என் வெற்றியாகக் கொள்வேன்.
ஜெகதீஷ் குமார்
நான் குறியீடு அப்படி இப்படியெல்லாம் போகவில்லை.
நீங்கள் வாழ்வியலை அழகாக எழுதியுள்ளீர்கள். தண்ணியடிக்கும் கணவனை பிடிக்காத மனைவி, தண்ணியடிப்பதன் பின்னணி, பையன் மேல் பாசம், அவரது தொழில் நேர்த்தி ஸ்பைடரின் உடல்மொழியை நீங்கள் சொல்லும் விதம் என உங்களுக்கு விவரனைகள் கைகூடிவிட்டது.
வாசகன் பிரயத்தனப்படக்கூடாது என்பது போன்ற கதை எழுதினால் போதும். குறியீடெல்லாம் அப்புறம்.
// அப்பா குடித்திருக்கும்போது வயலினைத் தொடுவதில்லை.//
கதாபாத்திரத்தின் அகச் சித்தரிப்பை சொல்கிறீர்கள் அல்லவா? இதுவே இல்லாமல் எழுதுகிறார்கள்.
விரல் கிழிந்தது வயலின் வாசிப்பிற்கு சரி என்ற முடிவை கொண்டுவருவது என வாதிடலாம். But the idea behind it makes the point. கதையின்பத்திற்கு அது வேண்டும்.
உங்கள் கதையை படித்துக்கொண்டிருக்கும்பொழுது, போன் வந்தது. அதை எடுத்தாக வேண்டும். எரிச்சலாக இருந்தது. அதுதான் நல்ல கதையை வாசிக்கிறேன் என்பதற்கு சிறந்த சோதனை.
உங்களுக்கு மனிதர்களையும் வாழ்க்கையையும் தெரிகிறது. அதுதான் முக்கியம். எழுத்தாளனுக்கு சக மனிதனை தெரிந்திருக்க வேண்டும். அது அவன் எழுத்தில் பிரதிபலிக்கவேண்டும். இப்பொழுது அதையெல்லாம் சொல்ல உங்களுக்கு மொழியும் கூடிவிட்டது.
ஆஸ்டின் சௌந்தர்
பாலாஜி ராஜூ
ஜெகதீஷ் நலமா?
கதைகளில் எளிமை என்பதை வலிந்து உருவாக்கமுடியாது என்றே கருதுகிறேன். அது படைப்பாளுமையின் ஆழத்திலிருந்து வெளிவருவது. அதை மொழியாளுமை என்று கருதலாம். மொழி எழுத்தாளனுள் என்னவாகத் திகழ்கிறது என்பதன் வெளிப்பாடு அது. உங்கள் கதையை வாசித்தவுடன் இந்த அடிப்படைகளை எனக்குள் ஓட்டிப் பார்த்தேன். (வேறொன்றுமில்லை சில மோசமான கதைகளை வாசித்துவிட்டு சொல்ல முடியாமல் முழித்துக்கொண்டிருந்தேன், அதை எழுதுபவர்கள் தாங்கி வாதிடுவது மனதிற்கு சோர்வை அளிக்கிறது).
இந்தக் கதை ஏன் வாசித்தவுடன் மனதில் ஒட்டிக்கொண்டது என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன். கதையின் மொழிநடையும் எளிமையும்தான். (உங்கள் எல்லாக் கதைகளிலும் இந்த அம்சம் உண்டு). எல்லாவற்றுக்கும் மேலாக இதில் அழகிய ஒரு கதை இருக்கிறது, இலக்கியம் வாசிப்பது கதைகளில் கொஞ்சம் வாழ்வதற்காகத்தான். இந்தக் கதையில் நான் தனஞ்சயனாக அவனுடைய தந்தையாக வாழ முடிந்தது.
கதையில் தந்தை தனஞ்சயன், தந்தை ஸ்பைடர், தந்தை வயலின், தனஞ்சயன் ஸ்பைடர் என பல இழைகள் இருக்கிறது. அதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் ஜெகதீஷ். விஜய் எழுதிய குறிப்பை வாசித்தேன், கதையை மிக ஆழமாக உள்வாங்கி எழுதியிருந்தார்.
தந்தையின் உடைவுத் தருணம் ஸ்பைடர் இறப்பிலும், தனஞ்செயனுக்கு கையில் ஏற்படும் காயத்திலும் நிகழ்கிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால் ஸ்பைடரின் இறப்பில்தான் கதையில் அந்த நகர்வு நடக்கிறது என்று எண்ணுகிறேன். வாழ்வில் உடைவு என்பது ஆழமான ஒரு நிகழ்வால்தான் அமைகிறது, அந்த உண்மை இந்தக் கதையைத் தாங்குகிறது. கதையில் ராஜாவை நீங்கள் குறைவாகக் கூறி ஆழமாக வாசகனுக்குள் எழுப்புகிறீர்கள், அது நன்றாக இருந்தது.
வேறு வேறு களங்கள் அழகிய கதைகளாக உங்களிடமிருந்து வருகின்றன. ஜெகதீஷ் எனும் எழுத்தாளன் மிளிர்வது இந்த அம்சத்தால்தான். மனம் முழுக்க நிறைவு எனும் எண்ணம் எழுகிறது ஜெகதீஷ், வாழ்த்துக்கள்.
பாலாஜி ராஜூ
நன்றி பாலாஜி,
கதையின் உணர்வு இழைகளைச் சரியாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். எனக்கும் கதைகளை இப்படி அணுகுவதுதான் பிடித்திருக்கிறது. சுவாரசியமான கதை சொல்லல், அதே நேரம் மனித உறவுகளின் ஆழங்களுக்குள் செல்ல முயற்சித்தல் இவற்றைத்தான் முயற்சிக்கிறேன். இந்தப் பண்புகளை உங்கள் கதைகளிலும் காண்கிறேன். மொழியைக் கையாளுதல், குறியீடு உருவகம் இவற்றின் பயன்பாடுகள் என்பன போன்ற தொழில் நுட்பங்கள் அனைத்தும் கதை சொல்வதற்கும், பாத்திரங்களின் ஆழமான வடிவமைப்புக்கும் சேவை செய்வன என்ற போதம் நம்மிருவருக்குமே உள்ளதென்று நினைக்கிறேன். உங்கள் கதைகளில் எனக்கு நினைவிலிருப்பது அவற்றின் பாத்திரங்களும், அவற்றின் அலைக்கழிதல்களுமே. அதுவே நல்ல கலைப்படைப்பின் அடையாளம் என்பது என் நம்பிக்கை.
அசோகமித்திரன் கதைகள் குறித்து ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் நவீனத்துவம் காலாவதியாகி விட்டது என்பது மாதிரியான ஒரு தொனி ஒலிப்பதைக் காண்கிறேன். ஒரு நல்ல படைப்பை அது ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகைமையைச் சேர்ந்தது என்பதற்காக குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது என் எண்ணம். அசோகமித்திரன், ஹெமிங்கே என்ற இரு நவீனத்துவ ஆசிரியர்களின் படைப்புகளையும் இன்றைக்கும் சிலிர்ப்போடே வாசிக்கிறேன். மார்க்வெஸ்ஸின், லோசாவின், ருஷ்டியின் (நள்ளிரவின் குழந்தைகள் மட்டும்) பின் நவீனத்துவமும் பிடித்திருக்கிறது. இப்போது எழுதுகிற பிரிட்டிஷ், அமெரிக்க எழுத்தாளர்களையும் விரும்புகிறேன். வகைமைப்படுத்தி விமர்சனங்களை அடுக்குவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை. எல்லா வகைமைகளிலும் அரைகுறைப் படைப்புகளையும் உருவாக்கி விடமுடியும். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மொழியைக் கையாளுவதையும், பாத்திரப் படைப்பின் ஆழத்தையும், புனைவுலகை உருவாக்குவதையும் படைப்பாளிகளான நாம் பார்த்துக் கொள்ளலாம். அவற்றை விமர்சன வகைமைகளுக்குள் அடக்குவதை விமர்சகர்கள் பார்த்துக் கொள்ளட்டும். ஓர் ஆழ்ந்த வாசகனுக்கு படைப்பு தரமானதா இல்லையா என்பது வாசித்தவுடனே தெரிந்து விடும்.
வேண்டுமென்றே நீளமாகத்தான் எழுதுகிறேன். வெங்கட்டின் கருத்துக்கும் ஒரு நீளமான எதிர் வினையாற்றினேன். படைப்பாளிகளுடன் உரையாடுவது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் செயல். உங்களுக்கும் அப்படியே என்று நம்புகிறேன். உங்களிடமும், வெங்கட்டிடம் மாதம் ஒரு முறையாவது பேசி விட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
எளிமையான மொழி குறித்துச் சொல்லியிருந்தீர்கள். அதை மிகுந்த விழிப்புணர்வோடே அமைத்தேன். கதை தனஞ்சயனின் பார்வையில் சொல்லப்படுகிறது. எனவே அதற்குரிய மொழியைக் கதை தேர்ந்தெடுத்துக் கொண்டது. அவனுடைய உலகம் ஒலிகளாலானது. எனவே கதையில் நிறைய ஒலிக்குறிப்புகள். மொழி கைமீறிச் செல்லும் போது கவனத்துடன் நான் அதை திசை திருப்பும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். வேறொரு கதைக்கு அதற்கான மொழி அதுவாகவே அமைந்து விடும் என்று நம்புகிறேன்.
ராஜா கதைக்குள் இயல்பாகவே வந்து விட்டார். எழுதும் போது அவ்வாறு திட்டமிட்டிருக்கவில்லை. புனைவு தானாகவே உருவாக்கிக் கொள்கின்ற உலகங்களுடன், மனிதர்களுடன் புழங்குவது இனிமையான விளையாட்டாக இருக்கின்றது.
ஜெகதீஷ் குமார்
எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். மாதம் ஒருமுறை என்பது நல்ல இடைவெளி. ஆம் கதைகளின் ஓட்டத்திற்கு ஏற்ப அதன் ஆழங்கள் வெளிப்பட்டுக்கொள்ளும், அதன் பின் போவதுதான் எழுத்தாளன் செய்வது, நீங்கள் செய்வது போல கொஞ்சம் நெறியாளுகை மட்டும் செய்யலாம். இந்தக் கதையை நீங்கள் அநிச்சையாக ஒரே அமர்வில் எழுதியிருக்க வாய்ப்பு இருக்கிறது, கதையின் ஓட்டம் அத்தனை அழகு. இந்தக் கதையை வாசித்தவுடன் எனக்கு ஏற்பட்ட நிம்மதி இருக்கிறதே அதை நிச்சயம் சொல்லவேண்டும். இலக்கியம் மொழியாலும் கதைகளாலும் ஆனது என்று ஆழமாக எனக்கு சொன்னது உங்கள் கதை.
யதார்த்தவாதம், இருண்மை என்பதை எல்லாம் எனோ தீட்டு போலப் பார்க்கிறார்களோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. எத்தனை பெரிய ஆளுமை, அவர் காட்டும் உலகில் இலக்கியத்திற்கே உரிய நெகிழ்வும் மயக்கும் இருக்கிறதா என்று பார்த்தால் மட்டும் போதும் என்பதே என்னுடைய எண்ணமும். அது இருண்மையா யதார்த்தவாதமா என்பதெல்லாம் வாசகனுக்கு அவசியமே இல்லாதது.
நீளமாக எழுதத் தயங்கவேண்டாம், எனக்கும் அது பிடித்திருக்கிறது. நான் அதிகம் எழுதவில்லை, இந்த மாதம் சில கவிதைகள் மட்டும் எழுதியிருந்தேன். தொடர்பில் இருப்போம்.
பாலாஜிராஜூ
வெங்கட். சு
வணக்கம் ஜெகதீஷ், நலமா? உங்களின் ஸ்பைடர் கதையைப் படித்தேன். முழுதாக அதன் ஆழத்தை உள்வாங்கிக்கொண்டேனா என்று தெரியவில்லை. இது அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே நிகழும் இடைவெளியைக் காட்டுவது போல உணர்ந்தேன்.
ஆள்காட்டி விரல் குனிந்து கட்டை விரலை முத்தமிடுவது போல, தனஞ்செயன் மீது அவர் அப்பா எப்போதும் அன்பாக இருக்கிறார். தனஞ்செயனுக்கு அவன் அப்பாவின் மீது இருக்கும் ஒரு ஈர்ப்பினால், அவனுடைய அப்பாவை போலவே அந்த ஸ்பைடரை பழக்கப்படுத்த முயல்கிறான். ஒரு விதத்தில் அவனுடைய அப்பாவை போலவே அவனும் ஆக முயல்கிறான். எத்துணை முறை ஆள்காட்டி விரலை நீட்டினாலும் ஏனோ ஸ்பைடர் மட்டும் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. ஆள்காட்டி விரல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டை விரலை விட்டு விலகிச் செல்கிறது. அவனுக்கு நடக்கும் அந்த விபத்திற்குப் பிறகு ஸ்பைடரும் இறந்துபோக அவன் அப்பாவிடமிருந்து இயற்கையான இடைவெளியையும் தாண்டி விலகி விடுவதை இறுதியில் உணர்கிறான். ஆனால் அவன் அப்பா அப்படி விலகி இருப்பது அவனுக்கு நல்லது என்றே நினைக்கிறார்.
எதனையும் நீக்க முடியாத அளவில் மிகச் சரியான அளவில் கதை இருக்கிறது. இசை போன்ற நுண்ணிய ஒன்றைப் பயின்று வயலின் வசிக்கும் ஒருவன் சட்டெனப் பட்டறையில், உளியையும், சுத்தியையும் பிடித்து வேலை செய்வது அந்த அப்பாவின் நிலை அழகாக வந்துள்ளது. தனஞ்செயனுக்கு அப்பாவைப் பிடித்திருக்கிறது. ஆனால், அந்த வயலின் வசிக்கும் அப்பாவைப் பிடித்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஸ்பைடர் இறந்தபிறகு "ஸ்பைடர்ன்னா எம்பையனுக்கு உசிரு தெரியுமா?" என்று இன்னும் அவ்வளவாக விடியாத, ஜல்லிக்கற்கள் நிறைந்த அந்த சாலையில், தளும்பி நிற்கும் அப்பாவின் நிலையை எந்த உருவகமும், படிமமும் இல்லாமல் உணரமுடிந்தது. வாழ்த்துக்கள்.
வெங்கட். சு
வணக்கம் வெங்கட்,
முதலில் சிறுகதை குறித்த ஆழமான, விரிவான பார்வைக்கு நன்றி. ஒரு படைப்பாளியிடம் இருந்து மட்டும்தான் இது மாதிரியான குறிப்புகள் வரக்கூடும். “ஸ்பைடர்ன்னா எம்பையனுக்கு உசிரு தெரியுமா?" என்ற இடத்தில் நீங்கள் அடைந்த உணர்வெழுச்சியை கதையை எழுதுகையில் நானும் அடைந்தேன் என்றால் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு வேறு எதையும் சேர்க்கவும் தெரியவில்லை. அந்தத் தந்தையின் உணர்வுகள் அந்த இடத்தில் அலைகளைப் போல் பொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கதை அந்தச் சிறுபையனின் பார்வையில் சொல்லப்படுவதால், அவன் உள்ளத்தில் என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே பதிவு செய்வதுதான் நியாயமானது என்று எனக்குப் பட்டது. கதை முழுக்க அதைத்தான் கையாள முயன்றிருக்கிறேன்.
தந்தையிடமிருந்து மகன் விலகுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தக் கதையைத் தீர்மானித்து எழுதுமுன் இது என்னை எங்கு கொண்டு செல்லப்போகிறது என்பதைத் தோராயமாகத்தான் அறிந்திருந்தேன். ஆனால் எழுதி முடித்தபின் பல்வேறு வியாக்கியானங்களுக்கு அதில் இடமிருப்பதையும் கண்டு கொண்டேன். அதில் ஒன்று நீங்கள் சொன்னது. தனஞ்சயனுக்கு ஸ்பைடர் எப்படியோ, தந்தைக்கு அவரது மகன். ஸ்பைடரின் இழப்பின் மூலம், மகனையும் தான் நிரந்தரமாக இழந்து விடக் கூடாது என்று உறுதியையும், அவர் உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தையும் காட்டியிருந்ததாக நினைத்திருந்தேன். ஆனால் இந்த மாற்றம் ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்படுவதால் அவன் வயதுக்கே உள்ள குழப்பங்களையும் பதிவு செய்ய வேண்டுமென்று முயன்றேன்.
உங்கள் கருத்துக்கள் ஊக்கமளிக்கின்றன, வெங்கட். உங்களிடமும், பாலாஜியிடமும் மாதம் ஒரு அரைமணி நேரமாவது உரையாடி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருக்கிறேன். நமக்குள் நான் பார்த்த ஒற்றுமை, படைப்பு என்ற கலைச்செயல்பாட்டை மூவரும் (என்னையும் தன்னடக்கத்தோடு சேர்த்துக் கொள்கிறேன்) நேர்மையோடு அணுகுவதுதான். அதனாலேயே எழுதுகையில் பரவசத்தோடு ஒரு பதற்றமும் தொற்றிக் கொள்கிறது. அந்த உணர்வுகளை நாம் பகிர்ந்து கொள்கையில் ஏற்படும் பரஸ்பர நன்மைகள் அதிகம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும்போது பேசலாம். பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள்.
நன்றி மீண்டும்.
ஜெகதீஷ் குமார்