10 அக்டோபர், 2025

பாலாஜி ராஜூ கவிதைகள்

 


பாலாஜி ராஜூ கவிதைகள்

அன்புள்ள பாலாஜி,

நீண்ட நாளைக்குப் பின் இன்றைக்குத்தான் உங்கள் வலைத்தளத்தைக் கண்டடைந்தேன். ஏற்கனவே நீங்கள் பகிர்ந்திருந்த சுட்டியில் உள்ள முகவரியை மாற்றி விட்டீர்கள் போலிருக்கிறது. அப்புறம் என் கதைக்கு நீங்கள் எழுதிய விமர்சனத்தின் சுட்டி என் தளத்தில் இருந்தது. அதிலிருந்து மீண்டும் உங்கள் தளத்தை அடைந்தேன்.

மீண்டும் கவிதைகளுக்குள் நீங்கள் இறங்கியிருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. கவிதை இருப்பதிலேயே சவாலான வடிவம் என்று நான் அவையடக்கத்துக்காகவெல்லாம் சொல்லவில்லை. அது உண்மையிலேயே அப்படித்தான் என்று உங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் கவிதைகளிலேயே உழல்கிற மனிதன் என்று எனக்குத் தெரியும். அதனால் கவிதையின் சிடுக்குகளும், நுணுக்கங்களும் உங்களுக்கு எளிதில் புலப்படும். நீங்கள் இப்போது எழுதியிருக்கிற சில கவிதைகளை வாசித்தேன். எல்லாக் கவிதைகளுமே எனக்குப் பிடித்திருந்தது. சமயத்தில் கவிதை உங்களை வைத்து தன்னை எழுதிக் கொள்கிறது என்று பட்டது. கலைக்கு ஒப்புக்கொடுத்தவனை அது ஒருபோதும் கைவிடுவதில்லை. ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் முழுமையானதாக இருந்தது. நிற்க. நான் விமர்சனம் எழுதுவதற்கு தற்போதெல்லாம் விரும்புவதில்லை. அதற்கான கலைச்சொற்களை உபயோகித்து புனைவு மொழியைச் சிக்கலாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதனால்தான். அதனால் கீழ்க்காணுவது விமர்சனமன்று. உங்களிடம் பேசினால் என்ன சொல்வேனோ அதை எழுத்தில் கொடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

காத்திருப்பின் கவிதை முதலில். முற்று என்ற தலைப்பு காத்திருப்பு முற்றுப்பெறுவதைக் குறிக்கிறது. நாங்கள் காத்திருந்தோம் என்று துவங்கி அது பிரபஞ்சத்தின் காத்திருப்பாக மாறுகிறது. பின் அது ‘அவனின்’ காத்திருப்பு முற்றுப்பெறுவதில் முடிவடைகிறது. 

கவிதையில் இருக்கும் ஒரு வசதி தத்துவத்தை நேரடியாகவே பேசலாம். நமக்கான தத்துவத்தைக் கூட உருவாக்கிக் கொள்ளலாம். இக்கவிதை ‘நாங்கள்’லிலிருந்து பிரபஞ்சம் நோக்கி விரிவடைகிறது. பிண்டத்திலுள்ளது அண்டத்திலும் என்பார்கள். அதைத்தான் இக்கவிதை பேசுகிறது என்று நினைக்கிறேன். அத்வைதம் இருப்பதெல்லாம் நான் மட்டுமே என்கிறது. இங்கு அந்த இருப்பு “காத்திருப்பாகக்’ கூறப்படுகிறது. (என் மனதில் இந்தக் கணம் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.)

பிரார்த்தனை அழகான கவிதை. இரந்து நிற்பவனுக்குக் கையளிக்கும் நிலையிலிருப்பதை எண்ணிக் குற்றவுணர்வு கொள்பவனின் பிரகடனம். வீடிலியின் பதாகை, கீழிறங்கி வரும் புனிதக்கை என்ற கூர்மையான பதப்பிரயோகங்கள். ரஜினி சொல்வது போல இறைவன் காசை தூக்கிப்போட்டு விளையாடுகிறான். அது விழுவதைப் பொறுத்து நாம் காருக்குள் இருக்கிறோமா, அல்லது வெளியிருந்து இரக்கிறோமா என்பது.

பத்திரம் எல்லாருடைய அனுபமும்தானே! மொழியைக் கனவாகக் கொண்ட கலைஞனுக்கு பத்திரத்தின் மொழி, நுணுங்கிய அர்த்தமற்ற வார்த்தைகளாகத்தான் தெரியும். சென்ற பருவத்தில் என் முதுகலைக்காக ஓர் ஆய்வறிக்கை நாற்பது பக்கங்களில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. முழுக்க முழுக்க செயப்பாட்டு வினை வாக்கியங்களினால் எழுதப்பட வேண்டிய கட்டுரை. ஆங்கிலத்தின் புனைவுமொழியில் கனவு காணும் எனக்கு இந்தக் கட்டுரை எழுதியது சித்திரவதையாக இருந்தது. மொழி வெளிப்பாட்டில் நிறையத் தவறுகள் செய்தேன். செத்துப்போன மொழியில் அது எழுதப்பட வேண்டும். அப்போதுதான் அது ஆய்வறிக்கை போலத் தோற்றமளிக்கும். என் பேராசிரியர் எனக்கு ஏகப்பட்ட திருத்தங்களைச் சொன்னார். ஒருவழியாக முடித்து விட்டேன். கடைசியாகத் திருப்தியுடன் கைநாட்டுப் போட்டது எனக்குள் இருந்த அந்த ஹிப்பி கலைஞன்தான்.

மறக்கப்படுபவை எளிமையான கவிதைதான். ஆனால் பாதங்களும், காலணிகளும் ஏற்றிவைக்கப்படும் குறியீடுகளாகச் செயல்படும்போது அவை வேறு அர்த்தங்களைக் காட்டி நிற்கக் கூடும்.

அடுக்குகள் - கடைசி ஏழுவரிகளில் அபாரமான கவித்துவம் மிளிர்கிறது. அதற்காகவே மேற்கண்ட வரிகளை மன்னித்து விடலாம்.

நானும் அவனும் கவிதை என்னை என்னவோ செய்தது. உங்கள் தளத்தில் ஜெ-யின் ‘அருகே கடல்’ வாக்கியத்தை வைத்திருக்கிறீர்கள். அதில் ஒருவன் தன்னை இரண்டாகக் கிழித்து தன் இணையுருவத்துடன் பொருதுவான் (இக்கதை என் மனத்துக்கும் அணுக்கமானது. நீங்கள் சொல்லி நான் மொழிபெயர்த்தது என்று நினைக்கிறேன்.) இதிலும் கவிஞனும், பந்தயவீரனும் இணையாக ஓடுகிறார்கள். இறுதியில் வீரன் வீட்டின் நிசப்தத்தை அனுபவிக்கிறான், கவிஞன் மைதான இரைச்சலைக் கேட்கிறான். ஒவ்வொரு நல்ல கலையிலும் இந்த உருமாற்றம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

புதிய நகரம் அற்புதமான கவிதை. கடைசி இரண்டு வரிகளுக்கும் முன்பே கவிதை முடிந்து விட்டது. அந்த மூன்று புள்ளிகள் கூடத் தேவையில்லை என்று தோன்றுகின்றது. கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்து அனுபவித்தேன். பெரிய பாவனைகளின்றி, பாசாங்குகளின்றி, எளிய சொற்களால் உங்களால் ஒரு கவிதையை உருவாக்கி விடமுடிகிறது. கவிதாதேவி உங்களுக்கு ஆசி வழங்கி விட்டாள்!

நான் மேற்சொன்ன கருத்துக்கள் பரிணாமம், சட்டகம், குவளை ஆகிய கவிதைகளுக்கும் பொருந்தும். கவிதையின் வாசகனாக எனக்குச் சொல்வதற்கொன்றுண்டு. இலக்கியத்தின் பிற வடிவங்கள் போன்றே கவிதைக்கும் அது தரும் அனுபவமே முதன்மையானது. அதன் பின்னரே அக்கவிதையை அணுகி ஆராய்ந்து அதன் மறைபொருட்களைக் கண்டறிந்து ருசிக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு கவிதையும் ஒரு தனித்த அனுபவத்தைத் தருகிறது. அதன் தேர்ந்தெடுத்த சொற்களை மெல்ல கண்களால் சுவைக்க முடிகிறது. (மெல்ல மெல்ல என்று ஒரு கவிதை துவங்குகிறது, சட்டென்று என் வாசிப்பின் வேகம் குறைந்தது). இதற்கு முன் நீங்கள் எழுதிய கவிதைகளில் எனக்கு ஒரு விமர்சனம் இருந்தது. நீங்கள் கவிதைகளை வலிந்து முடித்து வைக்கிறீர்கள் என. ஆனால் இன்று நான் வாசித்த கவிதைகள் அனைத்தும் அவையே அழகாக அமைந்து முடிகின்றன. ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் முழுமையானதாக மிளிர்கிறது. அவ்வப்போது புக்காவ்ஸ்கியாக மாறி முலை மறந்த குழந்தையின் நினைவாக மதுக்கோப்பையையும் கவ்விக் கொள்கிறீர்கள். நீங்கள் இக்கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டு வரவேண்டும் என்பதே என் ஆவல்.

அண்மையில் ஒரு கதை எழுதுவதற்காக (அது பற்றி அடுத்த பாராவில் சொல்கிறேன்) தலைப்பு தேடி திருமூலரை வாசித்தேன். சேய விளக்கு என்ற சொல், ஆன்மாவின் ஒளி என்ற பொருள் தரும், அதை வாசித்ததும் மனம் அதிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. திருமூலரின் மேலும் சில பாடல்களை அன்று வாசித்துக் கொண்டிருந்தேன். மனம் பூரிப்பில் மிதந்தது. அத்வைதத்தின் கலைச்சொற்களின் அறிமுகம் தவிர வேறெந்த முன்னறிவும் அவர் பாடல்களை ரசிக்கத் தேவையில்லாமல் இருந்தது. ஒவ்வொரு வரியும், சொல்லும், ஓர் இனிய அனுபவம். அந்த சுகத்தை உங்கள் கவிதைகளிலும் அனுபவித்தேன் (உ.வெ.பு.இ - உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை).

கதை பற்றி. தினமணி ஆசிரியர் பாவை சந்திரன் என் எண்ணைக் கண்டுபிடித்து தீபாவளி மலருக்கு ஒரு சிறுகதை கேட்டார். எனக்கு பூரிப்பு தாங்கவில்லை. மூன்று நாட்களில் வேண்டுமென்று. என்னால் முடிக்க முடியுமா என்று தெரியவில்லை என்றேன். முயற்சி செய்யுங்கள் என்றார். இரண்டு நாட்களில் முடித்து விட்டேன். தலைப்பு சேயவிளக்கு என்று வைக்கவில்லை (இன்னொரு கதைக்கு வைப்பதற்காக முன்பதிவு செய்திருக்கிறேன். உங்கள் கவிதைக்கு உபயோகிப்பதானால் என்னிடம் முன் அனுமதி பெறவும் 😀).ஒரு நாள் முழுக்க எடிட் செய்து அனுப்பி வைத்தேன். வழக்கம் போல அனுதான் ஆசிட் டெஸ்ட். (எழுதுவதை மனைவியிடம் காட்டக்கூடாது என்ற கொள்கையுடைய ஆணாதிக்கக் கும்பலைச் சேர்ந்தவன் அல்லன் நான்!). தலைப்பும் அனுவிடமே வாங்கினேன்: வானப்ரஸ்தம். கதை வெளியானதும் பகிர்கிறேன்.

நிறைய எழுதிவிட்டேன். ஆனால் பேசுவதை விட எழுதுவது எளிதாக இருக்கிறது. நீண்ட நேரம் பேசுகிறோம். ஆனால் நிறைய சொல்லாமல் விட்ட மாதிரியே இருக்கிறது. எழுதும்போது நம் மேதாவித்தனத்தைக் காண்பித்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு.

புதுவீடு எப்படியிருக்கிறது? அது பற்றிக்கூட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். பழைய வீட்டு ஓனர் என்ற முறையில் ஏதாவது ஆலோசனை வேண்டுமெனில் அணுகவும். வீட்டில் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் அன்பு.

ஜெகதீஷ் குமார்


வணக்கம் ஜெகதீஷ்,

முழுநேர எழுத்தாளனாகிவிட்டீர்கள் என்று தெரிகிறது. பாவை சந்திரன் உங்களைத் தேடி அழைத்திருப்பது உங்கள் எழுத்து பலரையும் கவர்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது (அதிலொன்றும் எனக்கு ஆச்சரியம் இல்லை). தீபாவளி மலரில் கதை என்பது உங்கள் எழுத்துக்கு இன்னொரு அழகிய பரிசுதான். இரண்டு நாட்களில் உங்களால் கதை எழுத முடிகிறது என்பது எனக்கு சற்று மலைப்பாக இருக்கிறது. ஆனால் மனம் குவிந்தால் அது சாத்தியம்தான் என்றும் காட்டுகிறது. 

‘வானப்ரஸ்தம்’ தலைப்பு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஊராக இருந்தால் தீபாவளி மலரை கடையில் வாங்கி உங்கள் பெயரை அட்டவணையில் தேடி வாசித்திருப்பேன். விகடன் தீபாவளி மலரை இதுபோல பலமுறை வாங்கி நாஞ்சில் நாடன் எஸ்.ரா. என்ற பெயர்களையெல்லாம் இன்னமும் பரிச்சயம் செய்துகொண்ட நாட்கள் நினைவிலாடுகின்றன. இதில் இன்னொரு முக்கியமான அம்சம் எந்தப் பெரிய தலைகளுடன் உங்கள் கதைகள் வரப்போகிறது என்பதில் இருக்கிறது. உங்கள் கதை தமிழகத்தில் இலக்கியக் குறுங்குழு தாண்டிப் பொது வாசகர்கள் பலரையும் சென்றடையப்போகிறது என்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

‘சேய விளக்கு’ தலைப்பு இன்னமும் அருமை. இந்தத் தலைப்பு உங்களில் கதையாக வளரட்டும், வளர்ந்துவிடும்.

என்னுடைய கவிதைகள் கவிதை அனுபவமாக உங்களை இப்படித் தொட்டிருப்பது எனக்கு மிகவும் நிறைவை அளிக்கிறது. கவிதைகள் நமக்குள் ஏதேனும் சலனத்தை ஏற்படுத்துகிறதா என்பதுதான் சரியான கவிதை வாசிப்பு எனும் நம்பிக்கை எனக்குள் இன்னமும் ஆழமாக வளர்ந்துள்ளது. உங்கள் வாசிப்பு எனக்கு இந்தப் புரிதலை இன்னும் உறுதி செய்கிறது (என்னுடைய கவிதைகளை முன்வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை). 

மீண்டும் நீங்கள் குறிப்பிட்ட கவிதைகளை வாசித்துப் பார்த்தேன், இந்தக் கவிதைகள் மேல் சற்று நம்பிக்கை வைத்தது சரியான தேர்வுதான் என்று தோன்றியது. ஏனோ உங்கள் வார்த்தைகள் இன்னமும் சற்று மலைக்க வைக்கிறது, சிறு சங்கடமும்தான். இன்னும் பொறுப்பாக கவிதை எழுது என்று மனம் சொல்கிறது.

‘புதிய நகரம்’ கவிதை ஆத்மாநாமின் ‘புறநகர்’ என்ற கவிதையால் தூண்டப்பட்டு எழுதியது. கொஞ்சம் எதிர்மறைத் தன்மை இருந்தாலும் கவிதை அளித்த கற்பனைக் களம் பிடித்திருந்ததால் எழுதினேன். நீங்கள் மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள், கவிதை அதற்கு முந்தைய வரியிலேயே முடிந்துவிட்டது,

கடைசி மூன்று வரிகளை நீக்கிவிட்டேன்.

தனிப்பட்ட ரீதியாக எனக்கு ‘பிரார்த்தனை’ கவிதை நம்பிக்கை அளித்தது, பல வருடங்களாக மனதுக்குள் வேறுவேறு விதமாக எழுதிப் பார்த்த கவிதை. வீட்டில் ஏதோ வேலை செய்துகொண்டிருக்கையில் திடீரென்று தோன்றி பரபரப்பாக உடனே எழுதிப் பார்த்தேன். இன்னும் சில கவிதைகளை எழுதிவிட்டு தொகுப்பு குறித்து அவசியம் சிந்திக்கிறேன் ஜெகதீஷ்.

ஜெ உங்கள் கதை குறித்த செய்தி அறிந்தால் மகிழ்வார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது இதுபோன்ற சில மைல்கல்களைத்தான். நீங்கள் அவரிடம் இதை நேரடியாகப் பகிரவும், தயங்கவேண்டாம். அவர் எழுத்து குறித்து எதைப் பேசினாலும் குறித்துவைத்துக்கொள்ளவும், நேர் உரையாடலில் அவரிடமிருந்து வரும் சில விசயங்கள் அவர் எழுத்தில் இதுவரை எழுதியிராதது என்பதைக் கடந்த சிலவருடங்களாகவே கவனித்து வருகிறேன்.

அனைவரும் நலம் ஜெகதீஷ், புதிய வீட்டை என்னுடைய பாஸ் நன்றாக அனுபவிக்கிறார், வீட்டை மெருகேற்ற மிகவும் மெனக்கெடுகிறார் :). 

கதையை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன், தொடர்பில் இருப்போம்.

பாலாஜி ராஜூ

—-------------------------

அன்புள்ள பாலாஜி,

ஆத்மா நாம் எனக்கும் பிடித்த கவிஞர்தான். நீங்கள் பகிர்ந்த கவிதையில் ஒரு காலகட்டத்தின் வெறுமையுணர்வும், மந்தகதியில் நகரம் இயங்குவதும் காட்டப்படுகின்றது. உங்கள் கவிதை இங்கிருந்து பல மடங்கு மேலே வந்து விட்டது என்று சொன்னால் நாமின் ஆத்மா என்னை மன்னித்து விடும் என்றே கருதுகிறேன். கண்டிப்பாக உங்கள் கவிதையில் காட்சிப்படிமங்கள் வலிமையாக அமைந்திருக்கின்றன (நெருப்பை அணியும் மரங்கள், குருதி ஓடும் குளங்கள், கத்தியால் கீறும் அணுக்கமானவர்கள்). அவரது தலைமுறையிலிருந்து நகர்ந்து வந்து புதிய நகரம் உங்கள் கரங்களில் புதுப்பரிணாமத்தை அடைந்திருக்கிறது. சொற்தேர்விலும், வெளிப்பாட்டிலும் உங்கள் கவிதை காத்திரமாக இருக்கிறது.

கவிதைகளில் என் கருத்துக்களைப் பரிசீலித்ததற்கு நன்றி. அதே நேரம் ஓர் எச்சரிக்கை. நான் வாசித்தவுடன் உடனே தோன்றும் கருத்தையே குறிப்பிடுகிறேன். எனவே நீங்கள் அலசி ஆராய்ந்த பின் என் கருத்தை ஏற்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள். 

கதை தினமணியில் வருவது உண்மையிலேயே மகிழ்ச்சிதான். ஆனால் அதே நேரம் இலக்கியப் பத்திரிகையில் எழுதும் திருப்தி வருமா என்று ஐயமாக இருக்கிறது. பாவைசந்திரன் புதிய பார்வை இதழின் ஆசிரியராக இருந்தவர். ஒரு காலத்தில் (அவர் காலத்தில்) அதை பாடபுத்தகம் மாதிரி வாசித்திருக்கிறேன். எனக்குப் பிரியமான சுபமங்களா, புதியபார்வை இரண்டிலும் பணி புரிந்திருக்கிறார். இலக்கியம் அறிந்தவர். தினமணி வாசகர்களும் கொஞ்சம் சீரியஸாக இருந்தாலும் வாசிப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. சொற்கட்டுப்பாட்டாலும், வேகமாக எழுதியதாலும் கொஞ்சம் அடர்த்தி குறைத்து எழுதியிருக்கிறேனோ என்ற மெல்லிய ஐயம் எனக்கு. கதை வந்தபின் மீண்டும் பரிசீலித்து திருத்தங்கள் செய்வேன்.

பிரார்த்தனை எனக்கும் பிடித்திருந்தது. எல்லாக் கவிதைகளுமே. நிறையக் கவிதைகள் எழுதுங்கள். கதைகளும்.

ஜெகதீஷ் குமார்.



 




மேலும் வாசிக்க