13 அக்டோபர், 2025

நிர்மலின் “இறுதியே இயைவது ஆனால்” சிறுகதை குறித்து

  




அன்புள்ள குடாகேசனுக்கு, 

இறுதியே இயைவது ஆனால் சிறுகதையை ஒரு கருத்தியல் சிறுகதை என்று நான் வகைமை செய்கிறேன். அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் குடாகேசனுக்கு அங்கேயே பிறந்து வாழும் தன் குழந்தைக்கு பழந்தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு உண்டாகாதது ஏன் என்ற இருத்தலியல் சிக்கல் கேள்வி வருகிறது. இத்தனைக்கும் அவர் மகள் நவீன ஆங்கில இலக்கியத்தில் ஆழ்கிறவள். இதைத் தன் இல்லத்திற்க்கு வரும் தமிழ் எழுத்தாளர் சுபகையிடம் கேள்வியாக வைக்கிறான். இப்போது ஒரு தமிழ்ப்புலவர் உங்கள் இல்லம் வந்தால் நீங்கள் உங்கள் மகளிடம் உரையாட அனுமதிப்பீர்களா? என்று சுபகை கேட்கிறாள். சுபகையையே அவர் மகளிடம் பேச அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “குட்” தன் மகளின் அன்றாட அட்டவணையைக் காரணம் காட்டி அது நடவாத காரியம் என்கிறான்.

ஒரு நாகரீகத்தின் அக மதிப்பீடுகள், அதன் புற வெளிப்பாடுகள் பற்றி விரிவான புரிதல் இருந்தால் இளையவர்களுக்குத் தங்களை இணைத்துக் கொள்ள உதவும், நேரடியாக அனுபவம் கிடைக்காத அடையாளங்கள் வழியே கற்பனையைத் தொட்டு விரித்துக் கொள்வது கடினமல்லவா? என்பது சுபகையின் கேள்வி.

இதற்குப்பிறகு கதை வேறோரு முக்கியமான திசையில் திரும்புகிறது. பள்ளிக்கூடங்களை விடுங்கள், இதை சரிசெய்வதற்கு எழுத்தாளர்களின் பங்கு என்ன? என்பது “குட்”டின் கேள்வியாக இருக்கிறது. இது சுபகையைச் சீண்டுகிறது. 

“அழியும் காலம் வந்துவிட்டால், இடையிலே எது வந்தாலும் அந்த அழிவுக்குத் தடை உண்டாகுமோ? உண்டாகாது” என்று சூசகமாகக் குறிப்பிடுகிறாள் சுபகை. குடாகேசனுக்கு அவன் மன ஆடியில் தெரியும் பிம்பம் மாயமாகத் தெரிவது போன்றே எனக்கும் சுபகையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அந்த வரிசையின் ஆசிரியர் என்று அவள் குறிப்பிடுகிறாள். ஓரம்போகியார் போலவே உன் வீட்டுக்கு வருகை தந்த என்னை உன் பெண்ணிடம் பேச விடாமல் தடை செய்வது நீதானே என்றவள் கேட்பதாகவும் கொள்ளலாம்.

அவன் அலுவலகத்திலும் சமூக வட்டத்திலும் பயன்படுத்தப்படும் ‘குட்’ என்ற சுருக்கப் பெயர், அவனது பாரம்பரியமான ‘குடாகேசன்’ என்ற பெயரை விழுங்கியது போல, இலக்கியத்தின் மீதான அவனது ஈடுபாட்டையும் அமெரிக்க வாழ்வின் அன்றாட யதார்த்தம் விழுங்குகிறது.

சாதாரண உரையாடல்கள் வழியாகவும், கம்பராமாயண விவாதத்தின் மூலமாகவும் இந்தச் சிதைவு மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கலைக்கும், வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தத்திற்கும் இடையேயான போராட்டத்தை, சுவாரஸ்யமான நடை மற்றும் கூரிய அவதானிப்புடன் இக்கதை படைத்திருக்கிறது. குறிப்பாக, ‘குடாகேசன்’ என்ற பெயருக்கும், ‘குட்’ என்ற அழைப்பிற்கும் இடையேயான இடைவெளி, பண்பாட்டு விலகலின் குறியீடாக அமைந்தது சிறப்பு. ஒரு நல்ல கதைக்கான அனைத்து அம்சங்களையும் இச்சிறுகதை கொண்டுள்ளது.

கதை சட்டென்று கொள்ளும் திருப்பம் பிடித்திருந்தது. கதையின் நாயகன் பழந்தமிழ் வாசகன் என்பதாலேயே அதற்குரிய மொழியையும், உவமைகளையும் பயின்றிருக்கிறது. “குட்”டின் பதற்றம், குழப்பம், எதிர்ப்பார்ப்புகள், அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. டயலாக் டேக் இல்லாமல் உரையாடல்களைக் கையாண்டிருக்கிறீர்கள். அது ஒரு நல்ல உத்தி. நன்றாக வந்திருக்கிறது.

கதைக்குள் கட்டுரைத்தன்மை வருவதை தவிர்க்க முடியவில்லை. நிறையத் தகவல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சில சொற்றொடர்க் குழப்பங்களை கவனித்தேன். ஏனோ கதையில் முதல் பாதி, இரண்டாவது பாதி என்று தனித்தனிக் கதைகளைப் போல் தோற்றமளிக்கின்றன.

தொடர்ந்து புனைவிலேயே இருக்கின்றீர்கள், நிர்மல். இது மிக நன்று. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள்.

ஜெகதீஷ் குமார். உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெகதீஷ். என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள உதவும். இது பெட்னாவில் கலந்துக் கொண்டு ஸ்டாலின் ராஜாங்கமும், சு.வேணுகோபாலும் வெர்ஜினியா வந்திருந்த பொழுது நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் மேலானது. அன்றைக்கு மனம் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது. நிர்மல்.


மேலும் வாசிக்க