4 அக்டோபர், 2025

விஜய் ரங்கராஜனின் “உள்ளச்சம்”

 




அன்புள்ள விஜய்,

உங்கள் உள்ளச்சம் வாசித்தேன். இதற்கு முன் நீங்கள் எழுதிய சில கதைகளை வாசிக்க வாய்க்கவில்லை. உங்கள் மொழி திருத்தமாகவும், அழகாகவும், தெள்ளிய ஓடை போன்றும் இருந்தது. அது உங்கள் பலம். நிறைய உவமைகள், ஒப்பீடுகள்.  கதையில் அர்ஜூன், அஷ்வத் இருவருக்குமான மோதல்களில் கதையின் தீவிரம் கூடிக் கொண்டே செல்கிறது. சிறுபெண் நந்திதாவும், தாய் ரம்யாவும் அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு கதையாக மிக நேர்த்தியாக, எந்தப் புரிதல் குறைகளும் இன்றி சொல்லப்பட்ட கதை. 

எனக்கு ஏனோ அஷ்வத்தும் ஒரு கே-வாக இருக்கக் கூடும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதற்கான குறிப்புகளை கதைக்குள் முதலிலேயே கொடுத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஒரு பால் சேர்க்கையாளர்கள் சமூகத்தால் விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்பதை இக்கதை காட்டுகிறது. ஆனால் ஒழுக்கவாதம் பேசுபவர்கள் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதையும் கதை காட்டுகிறது. இதற்கு முன் பெற்றோரால் நிராகரிக்கப்பட்ட ஒருபால் சேர்க்கையாளன் ஒருவனின் கதையை நீங்கள் எழுதி வாசித்திருக்கிறேன். என் கேள்வி அவர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் புறக்கணிப்பு தாண்டி வேறு பிரச்னைகளை இலக்கியத்தில் அலச முடியுமா என்பதுதான். அமெரிக்காவில் கே-லிட் நிறைய எழுதப்படுகிறது. நான் எதையும் வாசித்ததில்லை. எனக்கு அவர்கள் உறவில் நிகழும் சிக்கல்கள், அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து கொண்டே தங்கள் உலகில் எவ்வாறு தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் இலக்கியத்தில் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படிச் சொல்கிறேன் - ஒருவேளை ஒருபால் சேர்க்கை முழுக்க அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தில் அவர்கள் எப்படி நிகழ்வார்கள்? அப்போது புதிதாக எழுந்து வரும் பிரச்னைகள் என்னவாக இருக்கும்? 

கதையை, உரையாடல்களை தூய தமிழில் அமைத்திருந்தது நன்றாக இருந்தது. ஆனால் சில இடங்களில் உவமைகள் தேய்வழக்குகள் போன்று தோன்றின. இன்னும் கொஞ்சம் தீவிரமான விமர்சனமாக வைக்க வேண்டுமென்றால் கதை பல இடங்களில் சொல்லப்படுகிறது. காட்டப்பட்டிருக்கலாம். உங்கள் மொழியின் மீதிருக்கும் பிரியத்தில், உரிமையில் சொல்கிறேன்.

ஜெகதீஷ் குமார்

விரிவான வாசிப்புக்கு நன்றி ஜெகதீஷ். தன்பால் உறவாளர்கள் ஒதுக்கப்படுவதும், ஒழுக்கவாதத்தின் இரட்டை நிலைப்பாட்டையும் இக்கதை பேசுகிறது தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அதையும் தாண்டி, internalized homophobia தான் இக்கதையின் முக்கியப் புள்ளி. அஷ்வத் தான் கே என்பதை மனதளவில் கூட ஒத்துக்கொள்ளாமல், வெளியே நடித்துக் கொண்டிருக்கிறான். மற்றவர்களை விட தீவிரமாக homophobia வை வெளிப்படுத்துகிறான். 

நீங்கள் சொல்வது சரிதான். சமமாக அங்கீகரிக்கப்பட்ட உலகில் வேறு நுட்பமானத் தளங்களுக்குச் செல்லலாம். ஆனால் ஆண்பெண் உறவு இரண்டாயிரம் ஆண்டுகளாக sublime செய்யப்பட்டு பக்தியாக்கப்பட்டு தான் வேறு நுட்பங்களுக்குச் செல்கிறது. மற்ற உறவுகளுக்கு அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்பது சரிதான். ஆனால் இப்போது தானே தொடங்கியிருக்கிறது. எழுதுவோம். 

கண்டிப்பாக, டெக்னிக்கை பலப்படுத்தவேண்டும். முயன்றுகொண்டே இருக்கிறேன். இன்னுமே கூட தீவிர விமர்சனம் தான் எனக்கு வேண்டும் :)

விஜய் ரங்கராஜன்.



மேலும் வாசிக்க