16 மே, 2021

முதற்கனல் - வாசிப்பு

முதற்கனல் - வாசிப்பு ஜெ தளத்தில்

அன்புள்ள ஜெ,

நீண்ட ஆண்டுகளுக்குப் பின் கடிதம். பீமனின் குறுக்காக விழுந்த வாலைப்போல் வெண்முரசு விழுந்து கிடந்தது. தினமும் உங்கள் தளத்தில் மேய்ந்தாலும் கட்டுரைகளை மட்டுமே (இலக்கிய, ஆன்மிக) வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.வெண்முரசை வாசிக்காமல் உங்களுக்கு கடிதம் எழுத எனக்குத் தகுதியில்லை என்று எண்ணியிருந்தேன். அதை வாசிக்காததனாலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா பற்றி தங்கள் தளத்தில் கடிதம் கண்டும் சேரலாமா என்ற தயக்கம் இருந்தது. தயக்கத்தை மீறி சௌந்தர் அண்ணாவுக்கு மின்னஞ்சல் அனுப்பி வட்டத்தில் இணைந்தவுடன் புரிந்தது. இதில் சேர்வதன் மூலமே வெண்முரசை என்னால் வாசித்து முடிக்கக் கூடிய ஊக்கத்தைப் பெற இயலும் என்று.வசந்த காலத்தைத் தாண்டும் துடிப்பே அதை வசந்தமாக்கி விடும் என்று நீங்கள் சொல்வதைப் போல. சேர்ந்து விட்டேன்.

இம்மாதம் 20ம் தேதி முதற்கனல் கலந்துரையாடல் இருந்தது. ஐந்து நாட்களில் முதற்கனலை இரண்டாம் முறையாக வாசித்து (ஏற்கனவே நீலம் வரை வாசித்து விட்டிருந்தேன்.) அதற்கு அத்தியாயக் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன். இக்குறிப்புகள் வாசித்தபின் என் மனைவி அனுவிற்குக் கதையாகச் சொல்ல உதவின.இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் பகிர்ந்தேன். அவர்களும் குறிப்புகள் வாசித்ததைத் தொகுத்துக் கொள்ள உதவியதாகச் சொன்னார்கள்.

முதற்கனல் அத்தியாயக் குறிப்புகள்.

சந்திப்புக்கு ஐந்து நாட்கள் முன்புதான் விஷ்ணுபுரத்தில் இணைந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே நண்பர்கள் அதன் ஓர் அங்கமாக என்னை உணரச்செய்து விட்டனர். குழுவில் நிறைய ராஜன்கள் இருப்பதால் வரும் குழப்பத்தைப் பற்றி கொஞ்ச நேரம் கலாட்டா ஓடியது. சிலர் அவர்களுக்கு ராஜாதி ராஜ ராஜகுல திலக…. என்று குலோத்துங்குவை மட்டும் விட்டு விட்டு பராக் பாட ஆரம்பித்து விட்டனர். நான் மன்னர்கள் நிறைய இருப்பதால் இந்த சூதர்களுக்குச் சில பொற்காசுகளை வீசுவார்களா என்றேன். அது சூதர் பாடும் பாடலைப் பொறுத்தது என்றார் ஒருவர். மண்டபத்தில் நமக்கு யாராவது எழுதித்தர மாட்டாங்களா என்றேன் நான். மதுரைத்தமிழ் கலந்து அம்பைகுறித்து ஓர் உணர்ச்சிகரமான உரையாற்றிய ஜமீலா அவர்கள் கூட தன் அற்புதமான உரையை முடித்து விட்டு இது யாரும் மண்டபத்தில் எழுதிக் கொடுத்து எடுத்து வரவில்லை என்றார்.

 

பழனி அவர்களின் என்ன தவம் செய்தனையுடன் இனிதே துவங்கியது நிகழ்வு. ஜமீலா அவர்கள் அம்பை குறித்தும், கிஷோர் முதற்கனலில் இச்சையின் இடம் குறித்தும், ஷங்கர் சிக்கி முக்கிக் கற்கள் என்ற தலைப்பில் முதற்கனலில் ஆண்பெண் உறவு குறித்தும் உரையாடினர். ஒவ்வோர் உரைக்குப் பின்னரும் அவையோர் தங்கள் கருத்துகளைப் பரிமாற வாய்ப்பு வழங்கப்பட்டது. நண்பர்கள் அனைவருமே நாவலை ஆழ்ந்து வாசித்திருந்தனர். நான் அம்பை ரசிகன், நான் விசித்திர வீரியனின் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். நான் வாசிக்காத பல கோணங்கள்  திறந்து கொண்டு நாவல் என்னுள் விரிந்து கொண்டே சென்றது. நீண்ட காலமாகவே வாசிப்பு, எழுத்து என்று இருந்தாலும் ஒரு இலக்கிய வட்டத்தில் நான் இணைவது இதுவே முதல் முறை. இது என் வாசிப்பையும், எழுத்தையும் முறைப்படுத்தும் என்று திண்ணமாக நம்புகிறேன்.

இரண்டாவது முறை வாசிக்கும்போது முதல் முறை எத்தனை விஷயங்களைத் தவற விட்டிருக்கிறேன் என்று தெரிந்தது. முதல் முறை அம்பையும், பீஷ்மரும், விசித்திரவீரியனும், சிகண்டியும், சத்யவதியும் பேருருவம் கொண்டு எழுந்திருந்தனர். இரண்டாம் முறை ஜெ என்னும் ஆசிரியரின் பேருருவத்தைத் தரிசிக்க வாய்த்தது. 

சொல்லித்தீராத உவமைகள் :நீந்தும் யானை போல தன் கரிய பெருங்கால்களை ஓசையின்றித் துழாவி நடக்கும் காலம், இறந்தவளின் தலையிலிருந்து பேன்கள் இறங்கிசெல்வதுபோலத் தாயின் உடலை விட்டுச் செல்லும் குழந்தை, அறுபடாத சில்வண்டு ஒலியில் கோர்க்கப்பட்டிருந்த பிற ஒலிகள்(ஸூத்ரே மணி கனா இவ!), வியர்த்த பளிங்கு மேல் விரலால் இழுத்தது போல் உருவாகி வரும் அமைதியாலான வழி, படைக்குதிரையின் குளம்படிச்சத்தம் ஒலிக்கும் விசித்திர வீரியனின் நாடி, கிழிந்த பறைபோலக் கிடந்த நகரம்…, 

ஒவ்வொரு கணத்திலும் முளை விட்டெழும், கிளை விட்டெழும் கேள்விகள்: க்ஷத்ரிய அறமா? பெண்களின் கண்ணீரா என்று பீஷ்மர் திகைத்து நிற்கும் தருணம், தன்னறமா? பொது அறமா என்று நம் மண்ணில் காலகாலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்வி ஒலிக்கிறது. இந்தக் கேள்வி நாவல் முழுதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. என்னுள்ளும் சில கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. வியாசன் வனத்திற்குள் சென்று சுகனைக் காண்கையில் எல்லாக்கிளிகளும் வேதம் பாடுகின்றன. பாடித்திரியும் ஆயிரம் கிளிகளில் ஊழ்கத்தில் அமர்ந்தது ஒரு கிளிதானே! என்று நினைத்துக் கொண்டேன். சாந்தோக்கிய உபநிஷத்தில் உத்தாலகர் ஸ்வேதகேதுவுக்குச் சொன்ன சொற்றொடரை அக்னிவேசர் சிகண்டிக்குச் சொல்கிறார். வேத வேதாங்கங்கள் கற்றுத் திரும்பிய ஸ்வேதகேதுவுக்கு ஒரு சொல் போதும். குரோதத்தால் கொதித்துக் கொண்டிருக்கும் சிகண்டிக்கு அச்சொல்லே போதுமா? பீஷ்மரின் ஆடியில் ஏன் புரு தெரியவில்லை? 


நாவல் முழுக்க நிறைந்துள்ள நுண்தகவல்கள்:  நிலக்காட்சி வர்ணனைகள், மானுடர் புரியும் தொழில்கள், மென்மழை விடாது தூறும் வேளிர்கிராமம், அதன் குழந்தைகளும், பெண்களும், ஆண்களும், முதியோரும், கூரைகளுக்கு மேலாக எழுந்தபடி இருக்கும் இனிய சமையற்புகையும், இருளேயாகி நிறைந்திருக்கும் எருமைகளும், வருவிருந்து கொடுத்தனுப்பும் அவர்தம் தன்மையும்… பீஷ்மர் தனக்கு மட்டும் வாய்ப்பிருந்தால் அந்தக்கிராமத்திலேயே வாழ்நாள் முழுக்கத் தங்கி விடுவேன் என்று சொன்னதை என் அவாவாகவே உணர முடிந்தது. கள்ளுண்ட சூதன் பீஷ்மரையும், க்ஷத்ரியர்களையும் கலாய்த்துப் பாடும் அத்தியாயம், எளிய மக்கள் பார்வையில் அரசுகள் எப்படிப் பொருட்படுகின்றன என்று காட்டியது. சிவையும், அவள் தோழியும் பேசிக்கொள்ளும் அத்தியாயமும் (அதென்ன க்ஷத்ரியர்களுக்கு தவமிருந்தால்தான் குழந்தை பிறக்கிறது. சூதப்பெண்களுக்கு முனிவன் கல்லெறிந்தாலே பிறந்து விடுகிறது.). அவர்கள் இருவரும் குழந்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தது, பின் சிவையை வியாசனிடம் கருக்கொள்ளத் தேர்ந்தெடுப்பதற்கான அடித்தளமிட்டதைபோல இருந்தது.

இடையனின் குழலோசையில் வனவேங்கை மலர்களை உதிர்ப்பது கண்டு தான் இயற்றிய சம்ஹிதை அதற்கு ஈடாகாது என்று அதை எரியிடத் துணிந்த பராசரரின் கவிமனம், நிலவெழுந்த யமுனையைக் கண்டு கண்ணீர் பெருகும் பராசரரின் மனவெழுச்சி, அம்பையைக் கவர பத்தடி முன்னகர்ந்து பின் சீடர்களை ஆணையிட்டு அதைச் செய்யச்சொன்னதில் அவர் காதலை அறிந்த அம்பையின் அறிவுக்கூர்மை, கங்கைக்கரையில் படகில் நீங்குகையில் தன்னிலை இழந்து பீஷ்மர் என்ற மகாவீரரிடம் காதலில் விழும் அம்பையின் அதிரும் பெண்மை என்று நீங்கள் தொட்டு மட்டும் காட்டிய நான் நெகிழ்ந்த கணங்கள் எண்ணற்றவை. கவர்ந்த கணங்களைப் பட்டியலிட்டால் முழுமுதற்கனலையும் இட வேண்டியிருக்கும். முதற்கனலை மேற்கோள்களின் தொகுப்பாக மாற்றிவிடாமலிருக்க இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.


முதற்கனல் என் உள்ளத்தில் விழுந்து விட்டது. இதை எழுதும் கணம் மழைப்பாடலில் இருக்கிறேன். வெண்முரசை முழுதும் வாசிக்க எனக்கும் முனைப்பையும், ஆற்றலையும் அருளுமாறு  நவீன வியாசரிடம் வேண்டுகிறேன். என் போன்ற பலருக்கும் இலக்கியம், ஆன்மிகம், கலை, வரலாறு எனப் பல்துறைகளின் ஞானாசிரியனாக விளங்கி வரும் உங்கள் முன் அகம் பணிகிறேன். எழுத்திலும், வாசிப்பிலும், ஆன்மிகத்திலும் தடையின்றி முன்னேறத் தங்கள் ஆசி வேண்டுகிறேன். 


ஜெகதீஷ் குமார்


ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் மோட்சம் சிறுகதை குறித்து

மோட்சம் - கடிதம் ஜெ தளத்தில் 

அன்புள்ள ஜெ,

தாங்கள் பகிர்ந்த ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் மோட்சம் சிறுகதையை வல்லினத்தில் வாசித்தேன். மிகவும் காத்திரமான, வாசிப்பில் வலியின்பம் தரும் கதை. பொதிகைமலை விளிம்புகளில் குடிகள் அமைந்த நிலமென்பதே நானறியாத வெளி. அதன் சேரிகள், மனிதர்கள், தெய்வங்கள் (சொற்கேளா வீரன், குருந்துடையார் அய்யனார், சூட்சமுடையார் சாஸ்தா) அனைத்துமே ஒரு கனவுத்தன்மையைக் கூட்டின. உயிர் காக்கும் மருத்துவரையும் காறி உமிழ்ந்து கடந்து செல்லும் மனிதர்கள் நம் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பன போன்ற சாதிய அடக்குமுறை சார்ந்த கொடுமைகளின் ஆலாபனையுடன் கதைக்குள் நுழைந்தேன். இது கழுவேற்றம் பற்றிய கதை என்று ஆசிரியர் இரண்டாவது வரியிலேயே உறுதி அளித்து விடுகிறார்கழுவேற்றத்துக்கான அத்தனைத் தயாரிப்புகளையும் , கழுவேற்ற நிகழ்வையும் கூடத் துல்லியமாகவும், பீபத்ஸ சுவையுடனும் விவரித்து கிலி ஏற்படுத்துகிறார். கதைகளின் வழியே மட்டும் கேட்டிருந்த கழு நிஜத்தில் நிகழ்கையில் அது அங்கிருந்தவர்களிடம் ஒரு கொண்டாட்ட மனநிலையையே உருவாக்குகிறதென்பதைக் காண்கிறோம். ஒவ்வொருவரும் அதன் தயாரிப்பு குறித்து எழுச்சியுற்ற மனநிலையில் விவரிக்கிறார்கள்

கதைசொல்லியின் நண்பனான கழுவேற்றப்படும் மாரனுக்கு ஏன் அந்தப் பெயர் என்று ஒருவர் பின்னூட்டத்தில் விளக்கியதை வாசித்து வியந்தேன். பின்னர் வருகிறது கணியான் கூத்து கர்ணமோட்சம். இதுவும் நானறியாத கதையே. என் கருத்தில், ஒரு நல்ல படைப்பில், அதில் வரும் நிகழ்வுகள், எந்தப் புற விளக்கமுமின்றியே வாசகனிடத்துத் தம்மை நிறுவிக்கொள்ளும் ஆற்றல் மிக்கவை. இக்கதையிலும் அவ்வண்ணமே நிகழ்ந்திருக்கிறது. கர்ணமோட்சத்து துரியன்பொன்னுருவிகர்ணன் கதையை எந்தப் பின்புல உதவியுமின்றியே அனுபவித்து மகிழ்ந்தேன். பொன்னுருவி என்ற பெயரே உணர்வுகளைக் கிளறுகிறது. கணியாங்குளம் முத்தம்பெருமாளின் பாடல்கள் மட்டுமின்றி, கர்ணன், பொன்னுருவி, துரியன் உரையாடலையும் ஆசிரியர் எழுதியிருந்த விதம் அவர் எழுத்துத் திறனின் தேர்ச்சிக்கான சான்று. அந்நிகழ்வுகளை வாசிக்கையில் ஒரு கணம் அவை உரைநடை என்ற அடையாளத்தை இழந்து ஒரு கிராமத்துக் கிழவியின் சொற்களின் இசை இழைந்து கேட்கும் கதை போல மாறி விடுகிறது.   

நீ தொட்டால் நான் தீட்டாவேன். உன் கைபட்டால் நான் தீயிற்கே இரையாவேன். உன்னோடு ஒரு சொல்லும் இனி எனக்கில்லை. என் பெயரைச் சொல்லும் அருகதைக்கூட குலமிலியே உனக்கில்லை.”

மாரனின் மாறாப்புன்னகை நம்மையும், கதைசொல்லியையும் என்னவோ செய்கிறதுஇரு இணைகோடுகளாகப் பயனித்த கர்ணமோட்சத்துக் கதையும், மாரனின் கதையும் பின் மெல்ல மெல்ல இடைவெளி குறைந்து உச்சம் அடைந்து இணைகின்றன.

கதையை நான் மிகவும் வியந்தேன். இதுவே நான் வாசிக்கும் நவீனின் முதல் கதை. தனித்த நடை. அணிகளற்ற, அதே நேரம் நம்பிக்கை மிகுந்த கதை சொல்லல். சிறுகதையின் நுட்பங்களை லாவகமாகக் கையாளும் திறன். உரையாடல் எங்கு அமைக்க வேண்டும் என்ற தெளிவு. முடிவின் திருப்பத்தை திடீரென்று இல்லாமல், மெல்ல, மெல்ல அவிழ்த்து கண்முன் உருள விடும் வல்லமை. எல்லாம் இணைந்து இவரை கவனிக்கத்தகுந்த எழுத்தாளராக்குகிறது. நிறைய எழுதியிருக்கிறார். இவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வல்லினத்தில் இவர் படைப்புகளைத் தேடியபோது, அவர் உங்கள் நூறு சிறுகதைகளைப் பற்றி எழுதிய நீண்ட கட்டுரையையும் வாசித்தேன். உங்கள் நூறுகதைகளுக்குள் நுழையும் வாயிலாக அவை இருக்கும்.

ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்

எதற்கு இவ்வளவு நீளமான இனிஷியல் என்பதைத் தவிர நவீனிடம் குறைபட்டுக்கொள்ள ஒன்றுமில்லை

 

அன்புடன்

ஜெகதீஷ் குமார்.


5 மார்ச், 2021

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி ஐந்து முதல் மழை

 பகுதி ஐந்து முதல் மழை 

  1. காந்தார அரண்மனையின் மங்கல் அறையில் வசுமதி காத்திருந்தாள். ஏழு நாட்கள் மணச்சடங்குகள் முடிந்திருந்தன. லாஷ்கர முறையிலும், வைதிக முறையிலும் மணம் நிகழ்ந்திருந்தது. மூன்று சூதப்பெண்கள் வந்து மங்கல நாளுக்கான தேவனை எழுப்ப வந்திருப்பதாக சொன்னனர். பனிரெண்டாவது ஆதித்யனான பகனின் கதையைச் சொன்னார்கள். விண்ணோர் கடைந்த அமுதை பகன் முதலில் உண்டான். தேவர்கள் முறையிட ருத்ரன் அவன் கண்களை எரித்தான். விழியிழந்த பகன் தன் மனைவி ஸித்தி துணையோடு விண்ணெங்கும் அலைந்தான்.அவள் காதலின் ஒளியாலேயே கண்ணொளி பெற்றான். அவள் காதலின் வல்லமை கண்டு அகம் மகிழ்ந்த ருத்ரன் அவன் விழிகளைத் திருப்பி அளித்தான் என்றனர். அவர்கள் சென்றதும் திருதராஷ்டிரன் உள்ளே வந்தான். அவளிடம் வராமல் தயங்கி நின்றான். கண்தெரியாமையால் அவன் உடலில் ஏற்படும் குறிகள் அவளுக்குள் மெல்ல விருப்பமூடுபவையாக மாறுவதைக் கண்டாள். மெல்ல அவனை நெருங்க, அவன் இவளை வருட, பின் அணைத்துக் கொள்கிறார்கள். அவன் அவள் வாசனையை அறிந்ததைப் பற்றிச் சொல்கிறான். பின் இசை பற்றிப் பேசுகிறான். அவள் அவன் இசையைத் தன்னாலும் கேட்க முடியும் என்றாள். பின் அணைத்த போது அவன் நெஞ்சில் கேட்ட இசையைச் சொன்னாள். மீண்டும் அணைத்த போது அந்த இசையைக் கேட்க முடியவில்லை. அன்னைக்கும் விதுரனுக்கு அடுத்து அவளுக்குத் தன் நெஞ்சில் எப்போதும் இருக்கும் என்று சொன்னது அவனை அணைத்த போதுதான் அவள் அந்த இசையைக் கேட்டாள். பின் அவள் நினைவுகள் எங்கெங்கோ செல்ல, சக்ஷுஷ் தேவதையிடம் உரையாடுகிறாள். அவனுடன் அவன் உலகில் வாழ ஒரே வழி அவனைபோல விழியின்றி வாழ்வதுதான் என்றபடி தன் கண்களைக் கட்டிக் கொள்கிறாள்.

  2. அரசியர் அஸ்தினாபுரி செல்கிறார்கள். பாலை நிலப்பயணம். சகுனி சில நாட்களிலேயே அஸ்தினாபுரி வருவதாகச் சொல்லியிருந்தான். சோதரிகள் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் செல்கின்றனர். மதியம் ஓய்வெடுத்துப் பின் பயணம் தொடர்ந்தனர். சூதப்பெண்கள் கதைசொல்ல வண்டிக்குள் நுழைந்தனர். அத்ரி அனசூயை கதை. இந்திரன் பூமி மீது சினம் கொண்டு மழைமுகில்கலை ஒளித்து வைத்தான். தானென்றறிந்த புழு பொறாமையை வென்றது. என் குலம் தழைக்க வேண்டுமென்று அனசூயையை வேண்டியது. அவள் கருணையால் மழைபொழிந்து, விண்ணகத்தில் இருள் பரவ இந்திரன் வெளியே வந்தான். மழைமுகில்களை விடுவித்தான். நாரதர் இதை சிவனுக்குச் சொல்லி அவள் அன்னையின் கருணையை விதந்தோதினார். அவள் கருணையை சோதிக்க மும்மூர்த்தியர் வேதியர் வேடம் கொண்டு சென்றனர். ஆடையின்றி நீ எமக்கு அமுது படைக்க வேண்டுமென்றனர். அவள் தன் தவ வலிமையால் அவர்களைக் குழந்தையாக்கினாள். ஆடையின்றி வந்து முலையமுதூட்டினாள். மும்மூர்த்தியர் அன்னையின் அன்பை அறிந்தனர். அவளுக்குத் தத்தாத்ரேயன் என்ற ஒரே குழந்தையாகப் பிறந்தனர். பிரம்மதேவனிடம் வேதம் கற்கச் சென்ற அவரை நாலு வேதங்களும் அவர் அன்னையின் முலைப்பால் வாசனியறிந்து நாய்களாய் மாறிப் பின் தொடர்ந்தன. எல்லாரும் உறங்கிவிட அவள் தன் கனவில், பாலையில் ஒரு பீலிப்பனையைப் பார்த்தாள். அங்கிருந்த ஒருத்தி அதன் பூ ஒரு நுண்வடிவக்காடு என்றாள். காட்டைக் கருவிலேந்திய மரம் தனித்துதானே நிற்க முடியும் என்றாள்.

  3. ருத்ராணிருத்ரம் கதை- சனத் குமாரர்களைப் படைத்த பிரம்மன் அவர்கள் பல்கிப்பெருக மறுத்தபடியால் சினமடைந்தான். புருவ நடுவில் சினம் குழந்தையாகப் பிறந்தது. அவற்றை இரண்டாகப் பிரித்து இருதிசையில் போட்டான். ஒன்று பதினோரு ருத்ரர்களாகவும், மற்றொன்று பதினோரு ருத்ரைகளாகவும் மாறி ஆகாயத்தை நிரப்பிக் கிடந்தன. பாலையில் தவத்திலமரிந்த பிரகஸ்பதி தன்னுள் எழுப்பிய ஆகாயத்தில் அனைவரையும் பார்த்தார். ஆனால் அந்தத் தனலில் உடல் வெந்தார். அவரது சாம்பற்துளிகள் ருத்ராக்ஷ மரங்களாயின. சமநிலத்தில் காணும் அம்மரங்கள் கொண்ட இடம் ருத்ராணிருத்ரம் எனப்பட்டது. அங்கு தவம் செய்த அஷ்டவக்ர மகாமுனிவர் இட்ட சிவக்குறி அனைவராலும் வணங்கப்படுகிறது. அங்கு மணக்குழுவினர் பூசனைக்கு நின்றனர். மழையே இல்லா இவ்விடத்தில் இச்சுனைக்கு நீர் எங்கனம் வந்தது என்றான் விதுரன். இமயமலைப்பாறைகளில் உள்ள வெடிப்புகள் மூலம் இங்கு நீர் கசியலாம். மண்ணுக்குள்ளே கண்காணா நதிகள் ஓடுகின்றன.அவை இங்கு கசியலாம். ஆனால் அங்கு 8 ஆண்டுகளாக மழை இல்லை. பின் பூசனை நடக்கையில் குருதிப்பூசனை செய்யவேண்டாம் என்றனர். ஆனால் பீஷ்மர் வேல் பட்டு வீரனின் தோள் கிழிந்து குருதித் துளிகள் மண்ணில் சொட்டுகின்றன. அவற்றை எடுத்து படைக்கிறார் சூதர். மெல்ல மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கின்றன. அவை குருதி மழையாகக் கொட்டுகின்றனர். ருத்ரர்கள் அஸ்தினாபுரி நோக்கிச் செல்கிறார்கள். அங்கும் குருதி மழை கொட்டுகிறது. வீரர்கள் இது என்னவென்றறியாது குழம்புகிறார்கள்.

  4.  சத்யவதி அரண்மனையில் விழித்தபோது மழை துவங்கியிருந்தது. மணப்பெண் மழையோடு வருகிறாள் என்று பேசுகின்றனர். அமைச்சர்களுடன் பேச்சு. சூதர்கள் முதலில் காந்தாரியைப் பாடவில்லை என்றும், அவள் கண்களைக் கட்டிக்கொண்டதும், இப்போது குலதெய்வமாகவே ஆகிவிட்டாள் என்றும் பேசினர். மணநிறைவுச் செய்தியை முடிசூட்டு விழாச் செய்தியாக அனைத்து மன்னர்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று சொன்னாள் சத்யவதி. மீண்டும் மழை வர்ணனை. அம்பாலிகை உடல் நலம் குன்றியிருப்பதாகக் கேள்விப்படுகிறாள். மதியம் ஓய்வெடுத்து பின் தயாராகிறாள். மழை ஓய்ந்திருக்கிறது. கோட்டை வாயிலில் சத்யவதியும் மக்களும் காத்திருக்கிறார்கள். மணப்பெண்கள் வரும்போது மழை வலுக்கிறது. சத்யவதி நின்றிருக்கும் பந்தல் பறக்கிறது. மழை பேயாட்டம் போட உள் நுழைகிறாள் வசுமதி தன் சோதரிகளோடு.

2 மார்ச், 2021

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி நான்கு: பீலித்தாளம்

 பகுதி நான்கு பீலித்தாளம்

  1. அமைச்சர் சத்ய்விரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் ஸ்வேதசிலை என்ற லாஷ்கர கிராமத்துக்குச் சென்றனர். அவர் அளித்த பரிசுகளைப் பெற்ற குலமூத்தோர் கான்டாரியை வாழ்த்தினர். பூத்த பீலிப்பனையின் ஓலையில் அரசிக்குத் தாலி சுருட்ட வேண்டும் என்பது விதி. லாஷ்கரப் பெண்கள் எல்லாத் திசைகளிலும் பல நாட்கள் பயணம் செய்து ஒருத்தி அதைக் கண்டுபிடித்தாள். தாலி சுருட்டும் நிகழ்வு மிகுந்த விமரிசையாக நடக்கிறது. அதை உப்பரியிகையிலிருந்து தன் பத்து சகோதரியருடன் பார்க்கிறாள் வசுமதி. அவள் சிறுதங்கை விளையாடிக் கொண்டிருக்கிறாள். வசுமதி தான் இந்த மண், இதன் உறவுகள் இவற்றை இழக்கப் போவதைப் பற்றிப் பேசுகிறாள். ஒரு சூதப்பெண் அவள் குருடனை மணக்கவிருப்பது பற்றி பகடியாகச் சொன்னது பற்றிக் கூறுகிறாள்.

  2. அஸ்தினாபுரியிலிருந்து திருதராஷ்டிரனும், மணமகன் வீட்டாரும் காந்தாரனகரி நோக்கிக் கிளம்புகின்றனர். தார்த்தன் மிகுந்த பதட்டத்துடன் இருக்கிறான். தன் நகைகள், ஆடைகள் குறித்து ஆர்வமுடன் இருக்கிறான். விதுரனை தன்னிடமே இருக்கச் சொல்கிறான். இசை பற்றிப் பேசுகிறான். விதுரன் தான் காவியத்தில் பலமுறை வாழ்வது பற்றிக் கூறுகிறான். தான் பேரழகியைத் திருமணம் செய்வதும், போகமும், அரசபதவியும் வேண்டுமென்பதும், அள்ளி அள்ளி உண்பதும் தன்னைப் படைத்த தெய்வங்களுக்குத் தான் அளிக்கும் பதில் என்றான் திருதராஷ்டிரன். நீங்கள் சொன்னது ஷாத்ரம் என்பதன் சரியான இலக்கணம். நீரே சரியான க்ஷத்ரியன் என்றான் விதுரன்.

  3. சகுனியும், விருஷகனும் வரவேற்கிறார்கள் - திருதராஷ்டிரன் நகர் வலம் - மக்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை - கோட்டைக்குள் நுழைகையில் லாஷ்கர மூதாதையர் அவன் குருடன் என்று அறிந்து அவனுக்குப் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். சகுனியும் காந்தார தேசமே லாஷ்கரர்களுக்குச் சொந்தமானது. அவர்களை மீற முடியாது என்றான். - லாஷ்கரர் மூன்று கூடு வண்டிகளில் அரசியரைத் தூக்கிச் செல்கின்றனர்.- திருதராஷ்டிரன் மதகரியென சினங்கொண்டு அவர்களை வீழ்த்தி, காந்தாரியைத் தன் தோளில் சுமந்து வருகிறான் - குல்மூத்தோர் மகிழ்ந்து குரல் எழுப்புகின்றனர்.

  4. காந்தாரியை திருதராஷ்டிரன் வெளியே விட்டதும், சேடியர் அவளை ஒரு திரைக்குப் பின் நிறுத்தினர். அங்கிருந்து அவள் மருத்துவம் பெறும் தார்த்தனை நோக்கினாள். கரிய உடல்! அவள் கனவு கண்டிருந்த இளைஞன் அவனல்ல. பின் அவன் விரல்கள் அசைவதைக் கவனித்தாள். அவன் இசையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனைச் சென்று அவன் கரம் பற்றி அவன் இசையைக் கேட்டுவிட முடியுமா என்று நினைத்தாள். கதவைப் பிளந்து தன்னைத் தூக்கிய தருணம் நினைவில் வந்தது. அவன் கரிய உடல், திண்மையான தசைகள் இவற்றைப் பார்த்தாள்.அவன் மனையாகி விட்டதை உணர்ந்தாள். குலமூத்தோர் நன்மணம் புரிந்து வைக்க, சுபலர் பத்து பெண்களையும் சேர்த்து அவனுக்குக் கொடுத்தார். பின் ஆரியகௌசிகை ஆற்றங்கரை சென்று குலதெய்வக் கோயிலை வழிபட்டனர். அப்போது மணற்புயல் வந்தது. அது மந்திரஸ்தாயியில் ஒலிப்பதாக திருதராஷ்டிரன் சொன்னான். அது குறித்த சாமவேதப் பாடலை விதுரனைப் பாடுமாறு பணித்தான். புயல் 101 கற்களை கோயில் முற்றத்தில் போட்டது. அரசியர் 101 பிள்ளைகள் பெறுவர் என்றனர் அவர்கள். பின் அனைவரும் சோலைக்குச் சென்றனர்.

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி மூன்று: புயலின் தொட்டில்

 பகுதி மூன்று: புயலின் தொட்டில்

  1. பீஷ்மரும், பலபத்ரரும் தனியாகவே காந்தாரம் நோக்கி சென்றனர். நிலங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. வழியில் ஓரிடத்தில் இளைப்பாறும் போது, வித்யுதத்தன் என்ற பிராமணனை வழிகாட்டியாகக் கூட்டிக்கொள்கிறான். வழியில் கைவிடப்பட்ட ஒரு நகரத்தைப் பார்க்கிறார். அது இறந்தவர்களின் நகரம், சென்றவர் திரும்பமாட்டார்கள் என்றான் வித்யு. அங்கே செல்கிறார்கள். செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இடிந்த் வீடுகளையும் கோட்டையையும் கொண்ட நகரம். குழிகளில் மண் குடுவைகளில் எலும்புகள் கிடைக்கிறது. இது சத்யயுகத்தில் மக்கள் வாழ்ந்த நகரம். மக்களுக்கு அப்போது இறப்பே இல்லை. வயதாகிச் சுருங்கியபின், அவர்களை மண்தாழிக்குள் வைத்து புதைத்துவிடுவார்கள். இவர்கள் கங்கையிலும், சிந்துவிலும் உள்ள மக்களின் மூதாதையராகத்தான் இருப்பர் என்றார் பீஷ்மர். இந்த நிலத்தின் வரலாற்றை ஒருவர் முழுமையாக எழுதி விட முடியுமா? பின் காந்தாரத்தின் எல்லையில் வித்யுவை விட்டுத் தனியாகப் பயணமாகிறார்கள்

  2. யயாதிக்குத் தன் இளமையைத் தரமறுத்த துர்வசுவை அவர் துரத்தி விடுகிறார். தன் தோழன் ரனசிம்மனுடனும், தன்னுடன் சேர்ந்த ஆயிரம் வீரர்களுடனும் துர்வசு மேற்கு நோக்கிப் பயணமாகிறான். பல நாடுகளைக் கடந்த பின் பாலை நிலமொன்றை அடைகின்றார். நிமித்திகர் அதன் வரலாற்றைச் சொல்கிறார். அத்ரி யாகத்தை விளையாடிக் குலைத்த அக்னியின் மூன்று மைந்தர்கள் பாவகன், பவமானன், சூசி மற்றும் வாயுவின் மைந்தர்களான பலன், அதிபலன், சண்டன் ஆகியோரை அத்ரி ஆயிரம் கல்பம் ஆடியே திரியுங்கள் என்று தீச்சொல்லிட்டார். அவர்கள் விளையாடத் தேர்ந்த இடம் இது. துர்வசு இந்நிலத்தில் குடியேறுவேன் என்று உள்நுழைந்தான். அறுவரும் இருவர் இருவராகப் புயலென வீசி அவன் உறுதியைச் சோதித்தனர். அவர்கள் அசையவில்லை. அவர்கள் அங்கேயே வாழப்பணித்தனர். அவன் வழி வந்ததுதான் காந்தாரம் என்று பாடிய சூதர்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர் பீஷ்மரும், பலபத்ரரும். சூதர் இல்லையேல் இந்தப் பாலைவனத்தில் என் செய்வது என்று சிந்தித்தார். அவர்கள் காந்தாரத்து நுழைவாயிலிலேயே பீதவணிகருடன் சேர்ந்து கொண்டனர். சூதர்கள் அவர்களுடன் இருந்தனர். அவர்கள்தான் பாலையில் வழிகாட்டினர். பாலை நிலம் பற்றி அனைத்தும் அறிந்திருந்தனர். பாலையில் புயல் வருகிறது. தணிகிறது. தாரநாகம் என்ற நதியைப் பார்க்கிறார்கள். பின் புதிதாகக் கட்டப்படும் காந்தாரக்கோட்டையைப் பார்க்கிறார்கள். பாலையில் பெரிய கோட்டை தேவையே இல்லை. இது இளவரசன் சகுனியின் பேராசையால்தான் என்றார்கள்.

  3. சகுனி பீதாசலம் என்னும் மலையில் நாகசூதனைச் சந்தித்துத் தன் எதிர்காலம் பற்றிக் கேட்கிறான். அவன் ஒரு கதை ரக்தாக்ஷம் என்ற குழிக்குள் விழுந்த மன்னன் மற்றும் பத்து பேரின் கதை. இதற்கு என்ன அர்த்தம் என்றால், நாகசூதர் கதைக்கு அர்த்தம் இல்லை என்றான். பதினெட்டு நாட்களுக்கு முன்னால் தன் ஆட்சிக்குட்ட கிராமத்தில் தனக்கெதிராகச் சதிசெய்த பிரமோதனை பொருத அழைத்துக் கொன்றிருந்தான். ஒற்று சொன்ன அமைச்சனுக்கு பொருள் கொடுத்து, ஆனால் அவனையும் ஆளனுப்பிக் கொன்றான். தான் மன்னனாக முயல்வது க்ஷத்ரிய தர்மம், எனவே அவனைத் தண்டிக்காது சமரில் கொன்றேன். அமைச்சன் போல் ஒற்று சொல்ல ஆள் தேவை அதனால் பொன்னளித்தேன். ஆனால் அவன் நமக்கும் துரோகம் இழைக்கக் கூடும். எனவே அவனையும் கொன்றேன் என்றான். பின் சோதரரிடம் கதையைச் சொல்லி நீ அந்த மன்னனாக இருந்தால் வெளிவந்ததும் என்ன செய்திருப்பாய் என்றான். மூத்த அசலன் குலதெய்வத்தைப் படையலிட்டுக் கும்பிடுவோம் என்றான். இளைய விருஷகன் அனைவரையும் கொன்றுவிடுவேன். அரசுகள் நிகழும் ரகசியம் அறிந்தவர் உயிர் தரிக்கலாகாது என்றான். இருவரும் இனைந்து இந்நாட்டை வழி நடத்துவீர் என்றான் சகுனி. பின் காந்தாரி வசுமதியும், சகுனியும் குதிரையில் செல்கிறார்கள். நீ என்ன செய்திருப்பாய் என்றாள். மனித ஊனைச் சுவைத்த மனத்தை ஆராய அவர்களைச் சிறிது நாள் உயிரோடு வைத்திருப்பேன். பின் கொல்வேன் என்றான். அவன் கனவுகளால் வாழ்பவன். அவன் எண்ணம் சிலகாலமாகவே மகதத்தை வெல்வதிலிருந்தது. அங்கு செழித்த வணிகம் காரணமாக. வசுமதிக்கு மகத இளவரசனைத் திருமணம் பேச பொன்னும் பொருளும் கொடுத்து தூதனுப்பினான். மகத அரசர் அதை விரும்பவில்லை. அவனுக்குக் குதிரைச் சவுக்கைப் பரிசாகக் கொடுத்தனுப்பினார்.

  4. புருஷபுரத்தில் இருந்த சகுனிக்கு காந்தார நகரியிலிருந்து தூதுப்புறா வருகிறது. பீஷ்மர் பெண்கேட்டு வந்த செய்தி அதில். உடனே புறப்படுகிறான். மகதத்திலிருந்து குதிரைச் சவுக்கு வந்த செய்தி அவனுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் எரித்து விட்டனர். ஆனால் குதிரைச்சவுக்கு பற்றி சகுனி தெரிந்து கொண்டான். அவனுடன் தொடர்ந்த சுஜலன் அவன் நிலையழிந்திருப்பதைக் கண்டான். பாலைப்பொழிலில் ஓய்வெடுக்கையில் மரத்தில் கண்ட கழுகை அம்பெய்தி வீழ்த்தினான். பின் முகம் புன்னகைத்தது. காந்தாரநகரி சென்றதும் பீஷ்மர் வரவு குறித்த செய்தியைப் புறக்கணித்து அந்த சவுக்கு எங்கே என்றான். அது எரிக்கப்பட்ட இடம் சென்று அதை எடுக்கிறான். அது எரியவில்லை. அப்படியே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு, பின் மன்னரையும் சோதரரையும் சந்திக்கிறான். மன்னரும், அசலனும் அஸ்தினாபுரிக்குப் பெண் கொடுக்க எதிர்க்கிறார்கள். விருஷகன் ஆதரிக்கிறான். சகுனி பீஷ்மரைப் பார்த்தபின் தான் சொல்ல முடியும் என்றான். வழியில் விருஷகன் பீஷ்மர் அனைவரையும் தன்னைத் தந்தையாகவே உணர வைக்கிறார் என்றான். அதனால்தான் தன்னையும் அறியாமல் அவரை ஆதரித்தேன் என்றான். பின் பீஷ்மரை அனைவரும் சந்திக்கின்றனர். அவர் கங்கர்களின் எளிமையுடன் ஆனால்  அழகான சொற்சேர்க்கைகளில் அவர்களின் மனதைக் கவர்கிறார். விருஷகன் காந்தாரியை ஓவியம் வரைகையில் சந்தித்ததாகவும், அவளுக்கும் இதில் விருப்பமே என்றான். அவள் என்ன வரைந்தாள் என்றான் சகுனி. மலைகளை. முடித்தாளா? இல்லை. சகுனி எழுந்து பீஷ்மரை வணங்கி தன் தங்கைக்கு விருப்பமில்லாத திருமணம் நடக்காது என்று தெரிவித்து உடனே வெளியேறினான்.

  5. பீஷ்மரை சந்தித்து வந்த பிறகு சகுனி துயிலின்றி உப்பரிகையில் நின்றான். தூரத்தில் ஓர் ஓநாயைப் பார்த்தான். எண்ணம் காந்தார ஓநாய்க்கும், மகத ஓநாய்க்கும் ஓடியது. பின் வேட்டை நாயையும், துணைவனையும் அழைத்துக் கொண்டு ஓநாயை நள்ளிரவில் பின்தொடர்ந்தான். ஓநாயைப் பின்தொடரும் படலம். விடிகாலையில் சுஜலன் வந்து பீஷ்மர் அன்று மாலை செல்லவிருப்பதாகச் சொன்னான். சகுனி துணைவனிடம் ஓநாயைப் பின்தொடருமாறு சொல்லிவிட்டுப் புறப்பட்டான். விருஷதன் வரவேற்று, பீஷ்மர் என்ன பேசினார் என்று சொன்னான். பின் அனைவரும் ஆலயம் சென்றனர். பீஷ்மர் வந்தார். பட்டத்தரசியர் வந்தனர். கழுதை, குதிரை, ஒட்டக உடல் கொண்ட தெய்வங்களும், அவர்தம் மனைவியர் பற்றிய கதை. குருதிபூசனை செய்யப்படுகிறது. அரசி சுகர்ணை பீஷ்மரிடம் வசுமதிக்கு ஆசிதரச் சொல்கிறாள். உன் மனதுக்குகந்த கணவன் கிடைப்பான். நீ பாரதவர்ஷத்தை ஆள்வாய் என்று வாழ்த்தினார்.


  1. அரண்மனை மந்திரச்சாலைக்குள் சகுனி அமைச்சர் சுகதர் அவரை வரவேற்றார். மன்னர் சகுனியை பீஷ்மரை வழியனுப்பாமல் ஏன் வேட்டைக்குப் போனாய் என்றனர். பின் ஏன் நேரடியாக மணம் முடிக்க இயலாது என்று தெரிவித்தாய் என்றனர். சுகதர் சகுனி பீஷ்மரை அஞ்சுவதாகவும், அதன் பாதிப்பாலேயே மணம் மறுத்தான் எனவும் சொன்னார். பின் அவனது மனம் பற்றிய ஆய்வு. விருஷகன் வந்து பீஷ்மர் ஆசியளித்தபின் என்ன சொன்னார் என்று சொன்னான். ஒரு பேரழகியைத் தன் குலம் இழக்கிறது என்று முதுதந்தையைப் போல் துயரில் வருந்தினார் என்றான். பின் வசுமதிக்குப் பெண்கேட்டு வந்த எட்டு ஓலைகள் பிரிக்கப்படுகின்றன. யாரும் தகுதியற்ற அரசர்கள். அது பற்றி பேச்சு ஓடுகிறது. மகத இளவரசர் பிருகத்ரதனுக்கு, காசி மன்னர் பீமதேவர் வங்கப்பெண்ணை மணந்து பெற்ற அணிகை, அன்னதை ஆகிய இளவரசியரைத் திருமணம் பேசியிருக்கிறது. மணஓலையோடு மகதத்திலிருந்து ஒரு சூதன் வருவதை அறிந்ததும் அனைவரும் கொதிக்கின்றனர். படையெடுப்போம் என்றனர். சகுனி அப்போது பிறந்த குதிரைக்குட்டி ஒன்றை அனுப்புவோம். அது வளர்ந்து பெரிதாவற்குள் படையெடுத்து மகதத்தை வெல்வோம் என்று அவனுக்குச் செய்தி சொல்வோம் என்றான். வெளியிருந்த வசுமதி, என்னை நிராகரித்த காரணத்துக்காக அவன் மீது படையெடுப்பது என்னைச் சிறுமை செய்ததாகும். அவனுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்புங்கள் என்றாள். சகுனி எழுந்து, நீ என் தமக்கை மட்டுமல்ல, பேரரசி. அஸ்தினாபுரியை ஆளவேண்டியவள். நான் உன்னோடு வாளேந்தித் துணையிருப்பேன். பாரதவர்ஷத்தை வென்று உன் காலடியில் போடுவேன் என்றான். விருஷகன் ஆர்வத்துடன் பெண்கொடுக்க சம்மதம் என்று பீஷ்மரிடம் தெரிவித்து விடவா என்றான் ஆர்வத்துடன். ஆம் என்றாள் வசுமதி.

  2. பிருஹத்ரதன் இளமையில் கண்டறிந்த கழுகுக்குஞ்சுகள் சுகோணனும், சுபட்சனும் மகதத்தின் ஒற்றுப் பறவைகளாக விளங்கின. முன்பு அஸ்தினபுரியில் சத்யவதியும், பீஷ்மரும் பேசியதும், பீஷ்மர் வியாசரைச் சந்தித்ததும், அவர் இளவரசியரைக் கவர்ந்து வந்ததும், அம்பை நகர் நீங்கியதும் எல்லாம் ஒற்றுச் செய்திகளாக இரு கழுகுகள் மூலம் மகதம் அறிந்தது. ஒரு முறைசுகோணன் அஸ்தினபுரியில் இருந்து திரும்புகையில் கங்கைப் படித்துறையில் இறந்த வெண்பசுவின் சடலத்தைக் கண்டது. அதை மெல்ல உண்ட சிங்கம் அங்கேயே இருந்தது. சுகோணன் மாட்டின் குடலைக் கவ்வி எடுக்கையில் சிங்கம் அதை அறைய வந்தது. சுகோணன் சிங்கத்தின் கண்ணைக் கிழித்துப் பறந்து சென்றது. மகதத்திலிருந்து அப்போதுதான் குதிரைச் சவுக்கு சென்றிருந்தது. இது பிருஹத்ரதனுக்குத் தெரியாது. அவன் கங்கை வழியே வங்கம் சென்று அங்கிருந்து கடல் வழியே கலிங்கம் செல்லவும் அங்கிருந்து சோழநாடு செல்லவும் கலம் காத்துக் கிடந்தான். அவனுக்கு வந்த தூதுப்புறா மூலம் செய்தி அறிந்தான். அவன் வந்து சேர்ந்த தாம்ரலிப்தி துறைமுகம் அவனது ராஜகிருகத்தை விட இரு மடங்கு பெரிது. கடல்தான் இனி பொன் விளையும் பூமி என்றான் அவன் தோழன். இந்தத் துறைமுகம் எனக்கு வேண்டும் என்றான் பிருஹத்ரதன். நாம் சகுனியுடன் இணைந்தால் பாரதவர்ஷத்தை வெல்ல முடியும்.அவர்கள் செல்வத்தில் நூறு நாவாய்கள் வாங்க முடியும் என்றான் தோழன். அவர்களுக்கு சுகோணன் மூலம் செய்தி அனுப்பினார்கள். அதைத்தான் சகுனி அம்பெய்தி வீழ்த்தினான். அதைத்தான் சகுனி தேடி வந்த ஓநாய் தின்றது. அதனுடன் அது கொண்டு வந்த செய்தியையும். சகுனியின் மனம் நிலையழிந்திருந்தது.

மேலும் வாசிக்க