12 ஏப்ரல், 2010

தேங்காய்ச் சில்லு




சிறுகதை

மணி எனக்கு குரு மாதிரி. அவனிடமிருந்து முறையாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும்அவனைப் பார்த்து எப்பவும் எனக்கொரு குட்டி பிரமிப்பு உண்டு. பள்ளி முடிந்தவுடன் நான் அவனுடன் ஊர் சுற்றக் கிளம்பி விடுவேன். தாத்தாவுக்கு நான் அவனுடன் பழகுவது பிடிக்காது. “பொறுக்கிப் பசங்களோட என்ன ஊர் சுத்தறது? அவனோட உன்னப் பார்த்தேன், தொலைச்சுப்புடுவேன் படுவா” என்பார். ஆனாலும் தாத்தா இல்லாத சமயம் பார்த்து, தப்பித்து எப்படியும் அவனோடு இணைந்து விடுவேன். இருவரும் சேர்ந்து ஆற்றங்கரைக்குப் போய் நாவல் பழங்கள் பொறுக்கித் தின்போம். மணி ஆற்றில் குதித்து கறுத்த வாளை மீன் மாதிரி நீந்துவான். நான் கரையில் அமர்ந்து அவனை வேடிக்கை பார்ப்பேன். கடம்பர் கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தேரில் சிற்பங்களை ஆராய்வோம். கோவிலின் பின்பக்கச் சுவரில் கரிக்கோடு கிழித்து மற்ற சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவோம். பிறகு சீஸனுக்குத் தகுந்த மாதிரி கில்லி, பம்பரம், கோலிகுண்டு, ஏன், நாங்கள் குடியிருந்த வீட்டுக்காரப் பெண்களோடு சேர்ந்து சில்லு கூட விளையாடுவோம்.

வீட்டுக்காரப் பெண்கள் எல்லாருக்குமே நான் என்றால் பிரியம். பேபி அக்கா, ரமணி அக்கா, அப்புறம் என் வயதுள்ள பிரியா. இதில் ரமணி அக்கவுடன்தான் நாங்கள் சில்லு விளையாடுவோம். அவர்களோடு எங்கள் பழக்கம் வீட்டுக்கு வெளியில்தான். அவர்கள் வீட்டுக்குள் மணி மட்டுமல்ல, நானும் சென்றதில்லை. நாங்கள் அவர்கள் வீட்டு மாடியில் குடியிருந்தோம். மொட்டை மாடியிலிருந்து உடைந்த வென்டிலேட்டர் வழியாக அவர்கள் வீட்டைப் பார்த்திருக்கிறேன். நாங்கள் என்றாவது ரகசியமாக மீன் எடுத்து வறுக்கும்போது வாசம் பிடித்து, “என்ன பிரகாசம்மா? இன்னிக்கு நான்வெஜ்ஜா?” வென்டிலேட்டர் வழியாக முகச்சுழிப்போடு கேட்பாள் வீட்டுக்கார பங்கஜம்மாமி.

நான் குறிப்பாக அந்த வீட்டுக்குள் நுழையாமல் இருந்ததற்கு பங்கஜம்மாமியும் ஒரு காரணம். பங்கஜம் மாமிக்குத் திடீர் திடீரென்று பைத்தியம் பிடித்து விடும். ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடனும் பைத்தியம் பிடித்து மூன்று மாதம் கழித்துதான் தெளியும் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். பங்கஜம் மாமிக்கு மூன்று பெண்கள், நாலு பையன்கள். குடும்ப உறுப்பினர்களை அதிகப்படுத்துவதற்கான முயற்சி தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

அவளுக்குப் பைத்தியம் பிடித்த நாட்களில் தெருவே ரகளையாக இருக்கும். திடீரென்று வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து தெரு நடுவில் நின்று, “மகமாயி மணிக்குருக்கள், மனசு வச்சா மரிக்கொழுந்து” என்று கும்மியடித்து வலம் வந்து பாடுவாள். மணிக்குருக்கள் அவளது கணவன். இந்தப் பைத்தியக்கார நாட்களில் அவருக்குத்தான் வேலை அதிகம். பங்கஜம்மாமியைப் பாய்ந்து முடியைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வந்து உள்ளே பழைய சாமான் அறையில் தள்ளிப் பூட்டிவிடுவார். அப்போதுதான் நாங்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சு விடுவோம். அதுவரையில் எனக்கு நடுக்கம் நிற்காது. ஒருமுறை என்னைப் பார்த்து, ”என்னடா கிருஷ்ணா, இங்க வாடா, உன் கழுத்தை நெறிச்சுக் கொல்லனும்” என்றாள். நான் திடுதிடுவென்று ஓடிவிட்டேன். இன்னொருமுறை மொட்டை மாடியில் படுத்திருந்த சித்தப்பாவின் தலையில் தேங்காயைப் போட்டு உடைக்கப் பார்த்தாள். தேங்காய் உடையவில்லை. ஆனால் அதற்கப்புறம் மொட்டை மாடியில் யாரும் படுப்பதில்லை.


இந்த நாட்களில் மணி எங்கள் வீட்டுப்பக்கமே வர மாட்டான். நான்தான் அவனைத் தேடிக்கொண்டு போவேன். ஆனால் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் காய்கிற தேங்காய்ச் சில்லுகள் தின்பதற்காக மணி எப்படியும் என்னுடன் வந்து விடுவான். இருவரும் வெளிப்புறப் படிகளில் பூனைகள் போல் ஏறி யாருக்கும் தெரியாமல் தேங்காய்ச் சில்லுகளை கால்சட்டைப் பைகளில் நிரப்பிக் கொள்வோம். மொட்டை மாடியில் இருக்கும் அறைக்கு பங்கஜம்மாமி வீட்டுக்குள்ளிருந்து ஒரு மாடிப்படி உண்டு. அதன் வழியே பங்கஜம்மாமி ஏறிவந்து பார்த்துவிட்டால் அவ்வளவுதான். பைத்தியம் இல்லாவிட்டாலும் உதைப்பாள். இருந்தும் எங்கள் தேங்காய்ச் சில்லு திருட்டு பெரும்பாலான நாட்கள் தொடரும்.

ஆனால் சில நாட்கள் மட்டும் திருடத்தேவையில்லை. அந்த நாட்களில் பேபி அக்கா மொட்டை மாடியில் உட்கார்ந்திருக்கும். (மூன்று நாட்கள் என்று ஞாபகம்). நானும் மணியும் அங்கு என்றால் வேண்டும் வரை தேங்காய்ச் சில்லு எடுத்துக்கொள்ள அனுமதிக்கும். முறுக்கு, பணியாரம் மாதிரி நிறையப் பலகாரங்கள் எல்லாம் தரும். மணியை அறைக்குள் அழைத்துப்போய் வேறு என்னவோ கொடுக்கும். என்ன என்று கேட்டால்,”இந்தா” என்று இன்னொரு முறுக்கை எடுத்து நீட்டுவான். போனவாரம் நாங்கள் தேங்காய்ச்சில்லு பொறுக்கப் போனபோது பேபி அக்கா இருந்தது. நாங்கள் பலகாரங்களை வாங்கிக்கொண்டவுடன் மணியை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டது. நான் அதிரசத்தைக் கடித்துக்கொண்டு மாடித்திட்டில் உட்கார்ந்திருந்தேன். திடீரென்று பங்கஜம் மாமி வந்து விட்டாள். எனக்கு அதிரசம் வாயிலிருந்து விழுந்துவிட்டது. அப்போது அவளுக்குக் குழந்தைகள் எதுவும் பிறந்திருக்கவில்லை. அதுதான் அபாயமே. விடுவிடுவென்று நேரே பேபி அக்கா இருந்த அறைக்குப் போய் விட்டாள். அங்கு நிலவிய சற்றுநேர அமைதிக்கு எனக்கு மாடியில் இருந்து குதித்து விடலாமா என்றிருந்தது. பொத்து பொத்தென்று அடி விழும் சத்தம் கேட்டது. பேபி அக்கா அப்பா அப்பா என்று கத்திக்கொண்டே பங்கஜம் மாமி தலைமுடியைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சத்தம் கேட்டு மணிக்குருக்கள் மேலே ஓடிவந்து விட்டார். “ பீடை, முண்டை, அடிச்சு இழுத்துட்டு போங்கோப்பா இந்தச் சனியனை, திரும்பவும் மண்டை கலங்கிருச்சு” என்றாள் பேபி அக்கா.
மணிக்குருக்கள் ஒரு நிமிடம் நின்று எல்லாரையும் உற்றுப் பார்த்துவிட்டு, பெருங்குரலெடுத்து உளறிக்கொண்டிருந்த பங்கஜம் மாமியைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்வழியாகக் கீழே இறங்கிவிட்டார். மணி என் தோளில் அவசரமாய் இடித்து, “ வா, போலாம்” என்று இன்னொரு அதிரசம் கொடுத்தான்.

5 ஏப்ரல், 2010

மரணங்களின் ஊடாக ஒரு பயணம் 2


மரணம் என்னும் தவிர்க்க முடியாத நிகழ்வின் தாக்கம் நமக்குள் வாழ்வு பற்றிய ஒரு பற்றின்மையை ஏற்படுத்தும் என்பதால், மரணம் பற்றிச் சிந்தித்தல் ஆன்மிகப் பாதையில் ஒரு பரிந்துரையாகவே வைக்கப்படுகிறது. புத்தர், விவேகானந்தர் முதல் பல ஞானிகளும், ஆன்மிகவாதிகளும் எந்நேரமும் மரணம் பற்றிச் சிந்தித்திருப்பதால் வாழ்வு ஒரு புதிய பரிமாணத்தில் மலரும் என்று சொல்லியிருக்கிறார்கள். பலபேர் சுடுகாடுகளில் இரவுகளைக் கழித்த்திருக்கிறார்கள். சடலங்கள் எரியும் வெளிச்சத்தில் தனிமையில் இருந்திருக்கிறார்கள். ஒரு யோக மையத்தில் நான் யோகா கற்றுக்கொள்ள சென்ற போது மரணதியானம் என்று ஒன்று செய்தோம். படுத்துக்கொண்டு கண்ணை மூடி நாம் இறந்ததாகக் கற்பனை செய்துகொள்ளவேண்டும். நம்மைச் சுற்றிக் கட்டைகள் அடுக்குவது, தீ வளர்ந்து நம் கால்களைச் சுடுவது, நம் உடல் எரிந்து சாம்பலாவது எல்லாவற்றையும் கற்பனையில் அனுபவிக்கவேண்டும். தியானம் முடிந்தவுடன் எழுந்து உடன் தியானம் செய்தவர்கள் அனைவரும் எனக்கு உண்மையில் எரிந்தது போலவே இருந்தது, அனுபவம் அப்படியே நிஜமாகவே இருந்தது, இப்போது புதிதாய்ப் பிறந்த மாதிரி இருக்கிறது என்றெல்லாம் சொன்னர்கள். எனக்கு தியானத்தின் போது வயிற்றைக் கலக்கிக் கொண்டு எப்போது தியானம் முடியும் கழிப்பறைக்குச் செல்லலாம் என்றுதான் இருந்தது.

ஆனால் நம்மைச் சுற்றியுள்ளவர் யாரேனும் ஒருவர் மரணத்துக்கு நாம் ஏதோ ஒரு வகையில் காரணம் ஆகிவிடும்போதோ, மரணத்துக்கு முன் அவர்களுடனான நம் தொடர்பு மேம்பட்டதாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் வரும் போதோ நமக்குள் எழும் குற்ற உணர்ச்சி நீண்ட நாட்களுக்கு நம்முடனேயே தங்கி விடுகிறது. நான் சித்ராக்காவின் அம்மாவாக இருந்திருந்தால் என்னென்ன கொடுமைகளை அனுபவித்திருப்பேனோ தெரியவில்லை. ஆனால் ஊட்டிக்கு நான் சென்றபோது நிகழ்ந்த அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் மறையாத வடு.

ஊட்டிக்கு என் பெரியம்மா வளைகாப்புக்காகச் சென்றிருந்தேன். பெரியம்மாவின் அப்பா சரியான முசுடு. ‘அங்கே ஓடாதே, இங்கே ஓடாதே, அதைச் செய்யாதே, இதைச்செய்யாதே’ என்று எப்போதும் ஒரே அதட்டல். ‘இந்த ஆள் செத்துப் போனால் என்ன?’ என்று நினைத்தேன். வளைகாப்பு முடிந்து நாங்கள் கோவை திரும்பி விட்டோம். இரண்டு நாட்களில் அவர் இறந்து மிலிட்டரி வண்டியில் உடல் கொண்டு வரப்பட்ட போது எனக்குத் திக்கென்றிருந்தது. ஒருவேளை எண்ணங்களுக்கு மகத்தான ஆற்றல் உண்டு என்கிறார்களே, நான் ஆழமாக அப்படி நினைத்ததால்தான் இப்படி நடந்ததோ என்று இன்றளவும் எனக்குச் சந்தேகம் உண்டு.
என் அம்மாவின் அப்பா இறந்தபோது நான் திரையரங்கு ஒன்றில் தேவர்மகன் இரவுக்காட்சியில் சிவாஜிகணேசனைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்.
நான் வேறு திரைப்படத்துக்குச் செல்வதாகச் சொல்லியிருந்ததால் தியேட்டர் தியேட்டராக என்னைத் தேடியிருக்கிறார்கள். என் அப்பாவின் அப்பா மகள் வீட்டுக்கு வந்தபோது இறந்துவிட்டார். நடு இரவில் அவரைக் காரில் கொண்டு சென்றோம். அப்போது ஊரில் அம்மன் திருவிழா. தாத்தா இறந்த செய்தி யாருக்கும் தெரியக்கூடாது என்று மாமா சொல்லிவிட்டார். கார் ஓட்டுனரிடம் அவர் மயக்கத்தில் இருப்பதாகச் சொல்லியிருந்தோம்.(அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்) தாத்தா என் தோள்மேல் சாய்ந்து கொண்டேதான் கோயம்புத்தூர் வரை வந்தார். அப்படியும் நான் அந்த நிகழ்வை விட்டு மனதளவில் விலகியே இருந்தேன். என் உடல் மட்டும் அவர் உடலைத் தாங்கிச் சென்றது. என் அத்தை கூட,”என்னடா!, தாத்தா செத்துட்டாரு, நீ அழுவவே இல்லை” என்றாள். எனக்கு அழுகை வரவில்லை. ஆனால் அவரைக் குளிப்பாட்டி பூஜை செய்யும் போது, குமுறிக் குமுறி அழுதேன். அது என்னவோ அழுகை அதுவே வந்தது. என் முயற்சி அதைக் கட்டுப் படுத்துவதில்தான் இருந்ததே தவிர அழுவதில் அல்ல. ஒருவேளை எல்லோரும் அழுததால் அது என்னையும் தாக்கியிருக்கலாம்.

இப்படி அதிர்ச்சியையும், அவ்வப்போது வாழ்க்கையின் நிலையாமை குறித்த ஞானத்தையும் ஏற்படுத்தும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டால் அது நீளமாக இருக்கும். அந்தப் பட்டியல் இதை எழுதும் கையில் உயிர் இருக்கும்வரை நீண்டு கொண்டேதான் இருக்கும் என்று எண்ணும்போது சலிப்பாகத்தான் இருக்கிறது. தற்போதைய துக்க நிகழ்வுகள் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேள்விப்படும் தகவல்களாக மட்டுமே மாறிவிட்டன. குரலில் ஒப்புக்குக் கூட துக்கத்தைக் காட்டமுடிவதில்லை. போனவாரம் என் நண்பர் அழைத்து அவரது உறவுப்பையன் ரயிலில் இருந்து விழுந்து இறந்துவிட்டான் என்றபோது ‘அது தற்கொலையா, தற்செயலா?’ என்று இயந்திரத்தனமாக விசாரித்தது எனக்கே விநோதமாக இருந்தது. தெரிந்தவர்கள் மறைந்துவிடும்போது அவர்களுக்கு நம் வாழ்வில் கொடுத்து வந்த இடத்தை வன்முறையாகக் காலி செய்துவிட்டு வாழ்வைத்தொடரும் அவசரத்தில் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் என்ன செய்ய? இதை எப்படி அணுகுவது என்றும் தெரியவில்லை. ஒருவேளை பிற உயிர்களின் இருப்புக்கு நாம் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லையோ? எழுந்து தூசிதட்டிக்கொண்டு வேலையைப்பார் என்ற மனநிலையில்தான் இருக்கிறோமா? அல்லது நமக்கு நிகழவிருக்கும் அந்தத் தவிர்க்கவியலாத மரணத்தை இந்நிகழ்வுகள் நினைவுபடுத்துவதால் அவற்றைக் கூடிய விரைவில் நம் மனதில் இருந்து அப்புறப் படுத்தி விடப்பார்க்கிறோமா? அழிக்கும் கடவுளான அந்த சிவன்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

4 ஏப்ரல், 2010

மரணங்களின் ஊடாக ஒரு பயணம்



மரணம் எனும் நிகழ்வு எனக்கு இதுவரை பிரிவாற்றாமையையும், சோகத்தையும் கொடுத்ததாக நினைவில்லை. மாறாக அது பயத்தையும் அருவெருப்பையுமே ஏற்படுத்தியிருக்கிறது. நம் கண் முன் நடமாடி, நம்மோடு தொடர்பு கொண்டு, நம்மில் சில பதிவுகளை ஏற்படுத்தும் ஒரு மனிதர் திடீரென்று காணாமல் போய் விட முடியும் என்கிற சாத்யம் நாம் விரும்பத்தகாத ஒன்றுதான். பிறர் மரணம் நம் வாழ்வில் கொண்டு வரும் தற்காலிக வெறுமை மிகுந்த வெறுப்புக்குரியதாக இருந்தது.

எனக்கு நினைவு தெரிந்து முதல் மரணம் நாங்கள் குடியிருந்த வீட்டுக்காரத் தாத்தாவுடையது. அவர் பற்றின ஞாபகங்கள் தேசலாகத்தான் இருக்கின்றன. பெரியார் மாதிரி நீள்வெண்தாடி. தொண்ணூறு வயதிருக்கலாம். அவர் நடந்து நான் பார்த்ததில்லை. ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு போகிற வருகிறவர்களை பெருங்குரலெடுத்து அழைத்துக் கொண்டிருப்பார். அவர் பேத்தி எனக்கு மிக நல்ல தோழி. அவள் முதுகில் ஏறி குதிரை சவாரி செய்திருக்கிறேன்.(அப்போது எனக்கு வயது ஆறு). ஒருமுறை இருவருக்கும் கொஞ்சம் திராட்சைப் பழங்கள் கொடுத்தார்.
அதுதான் எனக்கு அவர் பற்றி இறுதி ஞாபகம். அதன்பிறகு அவரது இரண்டாவது மகன் ஒரு நடுநிசியில் “ அம்மா! அப்பா செத்துட்டாரும்மா” என்று தலையிலடித்துக் கொண்டு திடுதிடுவென்று ஓடி வந்தது ஞாபகமிருக்கிறது. மறுநாள் காலை தாத்தாவை அவர் ஜாதி வழக்கப்படி அமர வைத்து மாலை போட்டிருந்தார்கள். தாடையை இழுத்துக் கட்டி பின் மண்டையில் முடிச்சுப் போட்டிருந்தார்கள். அங்கு கொளுத்தி வைத்திருந்த ஊதுபத்திப் புகை பிணநாற்றமடித்தது. அவர் காலடியில் அமர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். நானும் ஒரு நாள் இப்படித்தான் சாகப்போகிறேன் என்று நினைக்க விரக்தியாக இருந்தது.

அதற்கப்புறம் என் உறவுக்காரப் பையனும், பள்ளித்தோழனுமான மணிகண்டன் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்ட செய்தி கேட்ட போதுதான் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. வயதாகி, நரை விழுந்து, பல்கொட்டி, பொக்கை வாயோடு சாவது மரணத்தை ஒத்திப் போட முடிகிற சலுகையைக் கொடுப்பதால், விருப்பமில்லவிட்டாலும் ஒத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் திடீரென்று எந்த விநாடியும் செத்துப் போய் விட முடியும் என்று தெரிந்த போது ஏற்றுக் கொள்ளவே
முடியவில்லை.

முதல் முதலாக ஒரு இறந்த உடலை தொட்டுத் தூக்கியது என் பதினைந்தாவது
வயதில்தான். அதுவரையில் நிகழ்ந்த மரணங்களுக்கு பத்து, பதினைந்து நிமிடங்கள்தான் ஒதுக்கியிருக்கிறேன். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையில் அதற்கு மேல் இருக்காமல் டேக்கா கொடுத்து விடுவேன். மரணச் சடங்குகள் முடியும் வரையில் என் உறவினர் வீடுகள் ஏதாவதொன்றிற்குச் சென்று விடுவேன்.
ஆனால் இந்த முறை அப்படித் தப்பிக்க முடியவில்லை.

எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை என் தாத்தா, பாட்டியோடுதான் இருந்தேன். அப்பாவுக்கு அரியலூரில் வேலை கிடைத்து என்னை அங்கு அழைத்துச் சென்று விட்டார். எங்கள் பக்கத்து வீட்டில் சித்ரா என்றொரு அக்கா பத்தாம் வகுப்பு முடித்து
வீட்டிலிருந்தது. எனக்கு நல்ல ஸ்நேகம். அப்போதெல்லாம் தெருவுக்கு ஒன்றிரண்டு வீடுகளில்தான் தொலைக்காட்சி இருக்கும். சித்ராக்கா காலையில் தெரிந்த ஏதோ ஒரு வீட்டிற்குப் போய் தொலைக்காட்சி பார்த்து விட்டு மதியம்போலத்தான் வந்தது.
அவர்கள் அம்மா, ” வீட்டு வேலையை விட்டுட்டு எங்கடி போய்த்தொலைஞ்சே? “என்று ஆரம்பித்து விடாமல் திட்டித் தீர்த்திருக்கிறாள். மகளை உள்ளே அனுமதிக்காமல் வாசலுக்கு வெளியேவே நிற்க வைத்து விட்டாள். சித்ராக்கா கொஞ்ச நேரம் வெளியே அமர்ந்து விட்டு பிறகு எழுந்து எங்கேயோ போய் விட்டது.

மதியம் இரண்டரை மணி போல சித்ராக்காவைத் தேட ஆரம்பித்தோம். சித்ராக்காவின் அம்மா, அக்கா, நான் மூவர் மட்டும்தான். சிறிது நேரத் தேடுதலிலேயே கண்டுபிடித்து விட்டோம். ஒரு சுள்ளிக்காட்டில் அரளி விதையை அரைத்து விழுங்கிவிட்டு விழுந்து கிடந்தது. பார்த்த உடனேயே உயிர் போய் விட்டது தெரிந்து விட்டது. என்னைத் தலைமாட்டில் இருந்து தூக்கச் சொன்னார்கள்.
ஸ்வாசத்தைச் சற்று நேரம் நிறுத்திக் கொண்டு, பயமும், அருவெருப்பும் வயிற்றில் குழைந்து கலக்க, சித்ராக்காவைத் தூக்கினேன். வீடுவரை கொண்டு சேர்ப்பதற்கு எந்த
கடவுள் உதவியதென்று தெரியவில்லை. நீண்ட நேரத்துக்கு உள்ளே அடிக்கடி அதிர்ந்து என்னை பலவீனமாக்கிக் கொண்டே இருந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு நான் வாரந்தோறும் செல்லும் பால்முருகேசன் பிரதரின் ஜெபவீட்டுக்குச் சென்று விட்டேன்.

26 மார்ச், 2010

அத்வைதம்


ஒன்றுமற்றதிலிருந்து
ஓர் புள்ளியாய்த் தோன்றி
வெடித்தேன் சிதறுண்டேன்
பிரபஞ்ச வெளியாய் பால் வீதியாய்ப் பரவினேன்
என் பிரம்மாண்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காய்
உடலுக்குள் குடிபுகுந்தேன்
தனிமை வாட்ட துணை வேண்டி என்
விலா எலும்பைப் பறிகொடுத்தேன்
கூடி முயங்கினேன் நுரைத்துக்
குமிழ்களாய் பெருகினேன்
குமிழ்கள் என்னைச் சூழ்ந்து கொள்ள
மூச்சுத் திணறிற்று
உடல் என்னும் உடை சிறையாகிப் போயிற்று
ஒன்றுமற்றதிலிருந்து எல்லாம் ஆனேன்
எல்லாம் ஆனபின் என்னைத் தேடினேன்
தேடித் தீர்ந்தபின் உண்மை உணர்ந்தேன்
இரண்டற்றதாய் நானே இருந்தேன்

கடவுள் அறிதல்


தேர்வில் மதிப்பெண் வர
பிள்ளையார் முன்
தேங்காய் உடைத்ததுண்டு.
படக்கதைகள் படித்து
சக்தி மிக்கவர்
விஷ்ணுவா விநாயகரா ஒப்பிட்டதுண்டு.
கல்விக்கண் திறந்ததால்
கடவுளர் பலரல்ல ஒன்றெண்டு தேர்ந்ததுண்டு.
கர்த்தர் முன் மண்டியிட்டு
கண் மூடிக்கதறியதுண்டு.
கால் முட்டி தேய்ந்ததுண்டு.
நீயே கடவுள் உன்னை உணர்
ஆன்மாவை அனுபவி அத்தனையும் தெளிவாகும்
குண்டலினி துளைத்தால் மண்டைக்குள் ஏதோ மலரும்.
யாராரோ சொல்லியதை எனதென்று ஏற்றதுண்டு.
கடவுள் உலகம் எல்லாம் கற்பனை
இருப்பது சூன்யம் ஒன்று மட்டுமே
என்றான் புத்தன் திகைத்தேன்
சூன்யம் பார்க்கிற ஆள் யாரப்பா?
சூன்யம் மறைந்தால் அவனும் மறைவானோ?

மேலும் வாசிக்க