மரணம் எனும் நிகழ்வு எனக்கு இதுவரை பிரிவாற்றாமையையும், சோகத்தையும் கொடுத்ததாக நினைவில்லை. மாறாக அது பயத்தையும் அருவெருப்பையுமே ஏற்படுத்தியிருக்கிறது. நம் கண் முன் நடமாடி, நம்மோடு தொடர்பு கொண்டு, நம்மில் சில பதிவுகளை ஏற்படுத்தும் ஒரு மனிதர் திடீரென்று காணாமல் போய் விட முடியும் என்கிற சாத்யம் நாம் விரும்பத்தகாத ஒன்றுதான். பிறர் மரணம் நம் வாழ்வில் கொண்டு வரும் தற்காலிக வெறுமை மிகுந்த வெறுப்புக்குரியதாக இருந்தது.
எனக்கு நினைவு தெரிந்து முதல் மரணம் நாங்கள் குடியிருந்த வீட்டுக்காரத் தாத்தாவுடையது. அவர் பற்றின ஞாபகங்கள் தேசலாகத்தான் இருக்கின்றன. பெரியார் மாதிரி நீள்வெண்தாடி. தொண்ணூறு வயதிருக்கலாம். அவர் நடந்து நான் பார்த்ததில்லை. ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு போகிற வருகிறவர்களை பெருங்குரலெடுத்து அழைத்துக் கொண்டிருப்பார். அவர் பேத்தி எனக்கு மிக நல்ல தோழி. அவள் முதுகில் ஏறி குதிரை சவாரி செய்திருக்கிறேன்.(அப்போது எனக்கு வயது ஆறு). ஒருமுறை இருவருக்கும் கொஞ்சம் திராட்சைப் பழங்கள் கொடுத்தார்.
அதுதான் எனக்கு அவர் பற்றி இறுதி ஞாபகம். அதன்பிறகு அவரது இரண்டாவது மகன் ஒரு நடுநிசியில் “ அம்மா! அப்பா செத்துட்டாரும்மா” என்று தலையிலடித்துக் கொண்டு திடுதிடுவென்று ஓடி வந்தது ஞாபகமிருக்கிறது. மறுநாள் காலை தாத்தாவை அவர் ஜாதி வழக்கப்படி அமர வைத்து மாலை போட்டிருந்தார்கள். தாடையை இழுத்துக் கட்டி பின் மண்டையில் முடிச்சுப் போட்டிருந்தார்கள். அங்கு கொளுத்தி வைத்திருந்த ஊதுபத்திப் புகை பிணநாற்றமடித்தது. அவர் காலடியில் அமர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். நானும் ஒரு நாள் இப்படித்தான் சாகப்போகிறேன் என்று நினைக்க விரக்தியாக இருந்தது.
அதற்கப்புறம் என் உறவுக்காரப் பையனும், பள்ளித்தோழனுமான மணிகண்டன் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்ட செய்தி கேட்ட போதுதான் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. வயதாகி, நரை விழுந்து, பல்கொட்டி, பொக்கை வாயோடு சாவது மரணத்தை ஒத்திப் போட முடிகிற சலுகையைக் கொடுப்பதால், விருப்பமில்லவிட்டாலும் ஒத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் திடீரென்று எந்த விநாடியும் செத்துப் போய் விட முடியும் என்று தெரிந்த போது ஏற்றுக் கொள்ளவே
முடியவில்லை.
முதல் முதலாக ஒரு இறந்த உடலை தொட்டுத் தூக்கியது என் பதினைந்தாவது
வயதில்தான். அதுவரையில் நிகழ்ந்த மரணங்களுக்கு பத்து, பதினைந்து நிமிடங்கள்தான் ஒதுக்கியிருக்கிறேன். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையில் அதற்கு மேல் இருக்காமல் டேக்கா கொடுத்து விடுவேன். மரணச் சடங்குகள் முடியும் வரையில் என் உறவினர் வீடுகள் ஏதாவதொன்றிற்குச் சென்று விடுவேன்.
ஆனால் இந்த முறை அப்படித் தப்பிக்க முடியவில்லை.
எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை என் தாத்தா, பாட்டியோடுதான் இருந்தேன். அப்பாவுக்கு அரியலூரில் வேலை கிடைத்து என்னை அங்கு அழைத்துச் சென்று விட்டார். எங்கள் பக்கத்து வீட்டில் சித்ரா என்றொரு அக்கா பத்தாம் வகுப்பு முடித்து
வீட்டிலிருந்தது. எனக்கு நல்ல ஸ்நேகம். அப்போதெல்லாம் தெருவுக்கு ஒன்றிரண்டு வீடுகளில்தான் தொலைக்காட்சி இருக்கும். சித்ராக்கா காலையில் தெரிந்த ஏதோ ஒரு வீட்டிற்குப் போய் தொலைக்காட்சி பார்த்து விட்டு மதியம்போலத்தான் வந்தது.
அவர்கள் அம்மா, ” வீட்டு வேலையை விட்டுட்டு எங்கடி போய்த்தொலைஞ்சே? “என்று ஆரம்பித்து விடாமல் திட்டித் தீர்த்திருக்கிறாள். மகளை உள்ளே அனுமதிக்காமல் வாசலுக்கு வெளியேவே நிற்க வைத்து விட்டாள். சித்ராக்கா கொஞ்ச நேரம் வெளியே அமர்ந்து விட்டு பிறகு எழுந்து எங்கேயோ போய் விட்டது.
மதியம் இரண்டரை மணி போல சித்ராக்காவைத் தேட ஆரம்பித்தோம். சித்ராக்காவின் அம்மா, அக்கா, நான் மூவர் மட்டும்தான். சிறிது நேரத் தேடுதலிலேயே கண்டுபிடித்து விட்டோம். ஒரு சுள்ளிக்காட்டில் அரளி விதையை அரைத்து விழுங்கிவிட்டு விழுந்து கிடந்தது. பார்த்த உடனேயே உயிர் போய் விட்டது தெரிந்து விட்டது. என்னைத் தலைமாட்டில் இருந்து தூக்கச் சொன்னார்கள்.
ஸ்வாசத்தைச் சற்று நேரம் நிறுத்திக் கொண்டு, பயமும், அருவெருப்பும் வயிற்றில் குழைந்து கலக்க, சித்ராக்காவைத் தூக்கினேன். வீடுவரை கொண்டு சேர்ப்பதற்கு எந்த
கடவுள் உதவியதென்று தெரியவில்லை. நீண்ட நேரத்துக்கு உள்ளே அடிக்கடி அதிர்ந்து என்னை பலவீனமாக்கிக் கொண்டே இருந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு நான் வாரந்தோறும் செல்லும் பால்முருகேசன் பிரதரின் ஜெபவீட்டுக்குச் சென்று விட்டேன்.