12 ஏப்ரல், 2010

தேங்காய்ச் சில்லு




சிறுகதை

மணி எனக்கு குரு மாதிரி. அவனிடமிருந்து முறையாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும்அவனைப் பார்த்து எப்பவும் எனக்கொரு குட்டி பிரமிப்பு உண்டு. பள்ளி முடிந்தவுடன் நான் அவனுடன் ஊர் சுற்றக் கிளம்பி விடுவேன். தாத்தாவுக்கு நான் அவனுடன் பழகுவது பிடிக்காது. “பொறுக்கிப் பசங்களோட என்ன ஊர் சுத்தறது? அவனோட உன்னப் பார்த்தேன், தொலைச்சுப்புடுவேன் படுவா” என்பார். ஆனாலும் தாத்தா இல்லாத சமயம் பார்த்து, தப்பித்து எப்படியும் அவனோடு இணைந்து விடுவேன். இருவரும் சேர்ந்து ஆற்றங்கரைக்குப் போய் நாவல் பழங்கள் பொறுக்கித் தின்போம். மணி ஆற்றில் குதித்து கறுத்த வாளை மீன் மாதிரி நீந்துவான். நான் கரையில் அமர்ந்து அவனை வேடிக்கை பார்ப்பேன். கடம்பர் கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தேரில் சிற்பங்களை ஆராய்வோம். கோவிலின் பின்பக்கச் சுவரில் கரிக்கோடு கிழித்து மற்ற சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவோம். பிறகு சீஸனுக்குத் தகுந்த மாதிரி கில்லி, பம்பரம், கோலிகுண்டு, ஏன், நாங்கள் குடியிருந்த வீட்டுக்காரப் பெண்களோடு சேர்ந்து சில்லு கூட விளையாடுவோம்.

வீட்டுக்காரப் பெண்கள் எல்லாருக்குமே நான் என்றால் பிரியம். பேபி அக்கா, ரமணி அக்கா, அப்புறம் என் வயதுள்ள பிரியா. இதில் ரமணி அக்கவுடன்தான் நாங்கள் சில்லு விளையாடுவோம். அவர்களோடு எங்கள் பழக்கம் வீட்டுக்கு வெளியில்தான். அவர்கள் வீட்டுக்குள் மணி மட்டுமல்ல, நானும் சென்றதில்லை. நாங்கள் அவர்கள் வீட்டு மாடியில் குடியிருந்தோம். மொட்டை மாடியிலிருந்து உடைந்த வென்டிலேட்டர் வழியாக அவர்கள் வீட்டைப் பார்த்திருக்கிறேன். நாங்கள் என்றாவது ரகசியமாக மீன் எடுத்து வறுக்கும்போது வாசம் பிடித்து, “என்ன பிரகாசம்மா? இன்னிக்கு நான்வெஜ்ஜா?” வென்டிலேட்டர் வழியாக முகச்சுழிப்போடு கேட்பாள் வீட்டுக்கார பங்கஜம்மாமி.

நான் குறிப்பாக அந்த வீட்டுக்குள் நுழையாமல் இருந்ததற்கு பங்கஜம்மாமியும் ஒரு காரணம். பங்கஜம் மாமிக்குத் திடீர் திடீரென்று பைத்தியம் பிடித்து விடும். ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடனும் பைத்தியம் பிடித்து மூன்று மாதம் கழித்துதான் தெளியும் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். பங்கஜம் மாமிக்கு மூன்று பெண்கள், நாலு பையன்கள். குடும்ப உறுப்பினர்களை அதிகப்படுத்துவதற்கான முயற்சி தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

அவளுக்குப் பைத்தியம் பிடித்த நாட்களில் தெருவே ரகளையாக இருக்கும். திடீரென்று வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து தெரு நடுவில் நின்று, “மகமாயி மணிக்குருக்கள், மனசு வச்சா மரிக்கொழுந்து” என்று கும்மியடித்து வலம் வந்து பாடுவாள். மணிக்குருக்கள் அவளது கணவன். இந்தப் பைத்தியக்கார நாட்களில் அவருக்குத்தான் வேலை அதிகம். பங்கஜம்மாமியைப் பாய்ந்து முடியைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வந்து உள்ளே பழைய சாமான் அறையில் தள்ளிப் பூட்டிவிடுவார். அப்போதுதான் நாங்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சு விடுவோம். அதுவரையில் எனக்கு நடுக்கம் நிற்காது. ஒருமுறை என்னைப் பார்த்து, ”என்னடா கிருஷ்ணா, இங்க வாடா, உன் கழுத்தை நெறிச்சுக் கொல்லனும்” என்றாள். நான் திடுதிடுவென்று ஓடிவிட்டேன். இன்னொருமுறை மொட்டை மாடியில் படுத்திருந்த சித்தப்பாவின் தலையில் தேங்காயைப் போட்டு உடைக்கப் பார்த்தாள். தேங்காய் உடையவில்லை. ஆனால் அதற்கப்புறம் மொட்டை மாடியில் யாரும் படுப்பதில்லை.


இந்த நாட்களில் மணி எங்கள் வீட்டுப்பக்கமே வர மாட்டான். நான்தான் அவனைத் தேடிக்கொண்டு போவேன். ஆனால் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் காய்கிற தேங்காய்ச் சில்லுகள் தின்பதற்காக மணி எப்படியும் என்னுடன் வந்து விடுவான். இருவரும் வெளிப்புறப் படிகளில் பூனைகள் போல் ஏறி யாருக்கும் தெரியாமல் தேங்காய்ச் சில்லுகளை கால்சட்டைப் பைகளில் நிரப்பிக் கொள்வோம். மொட்டை மாடியில் இருக்கும் அறைக்கு பங்கஜம்மாமி வீட்டுக்குள்ளிருந்து ஒரு மாடிப்படி உண்டு. அதன் வழியே பங்கஜம்மாமி ஏறிவந்து பார்த்துவிட்டால் அவ்வளவுதான். பைத்தியம் இல்லாவிட்டாலும் உதைப்பாள். இருந்தும் எங்கள் தேங்காய்ச் சில்லு திருட்டு பெரும்பாலான நாட்கள் தொடரும்.

ஆனால் சில நாட்கள் மட்டும் திருடத்தேவையில்லை. அந்த நாட்களில் பேபி அக்கா மொட்டை மாடியில் உட்கார்ந்திருக்கும். (மூன்று நாட்கள் என்று ஞாபகம்). நானும் மணியும் அங்கு என்றால் வேண்டும் வரை தேங்காய்ச் சில்லு எடுத்துக்கொள்ள அனுமதிக்கும். முறுக்கு, பணியாரம் மாதிரி நிறையப் பலகாரங்கள் எல்லாம் தரும். மணியை அறைக்குள் அழைத்துப்போய் வேறு என்னவோ கொடுக்கும். என்ன என்று கேட்டால்,”இந்தா” என்று இன்னொரு முறுக்கை எடுத்து நீட்டுவான். போனவாரம் நாங்கள் தேங்காய்ச்சில்லு பொறுக்கப் போனபோது பேபி அக்கா இருந்தது. நாங்கள் பலகாரங்களை வாங்கிக்கொண்டவுடன் மணியை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டது. நான் அதிரசத்தைக் கடித்துக்கொண்டு மாடித்திட்டில் உட்கார்ந்திருந்தேன். திடீரென்று பங்கஜம் மாமி வந்து விட்டாள். எனக்கு அதிரசம் வாயிலிருந்து விழுந்துவிட்டது. அப்போது அவளுக்குக் குழந்தைகள் எதுவும் பிறந்திருக்கவில்லை. அதுதான் அபாயமே. விடுவிடுவென்று நேரே பேபி அக்கா இருந்த அறைக்குப் போய் விட்டாள். அங்கு நிலவிய சற்றுநேர அமைதிக்கு எனக்கு மாடியில் இருந்து குதித்து விடலாமா என்றிருந்தது. பொத்து பொத்தென்று அடி விழும் சத்தம் கேட்டது. பேபி அக்கா அப்பா அப்பா என்று கத்திக்கொண்டே பங்கஜம் மாமி தலைமுடியைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சத்தம் கேட்டு மணிக்குருக்கள் மேலே ஓடிவந்து விட்டார். “ பீடை, முண்டை, அடிச்சு இழுத்துட்டு போங்கோப்பா இந்தச் சனியனை, திரும்பவும் மண்டை கலங்கிருச்சு” என்றாள் பேபி அக்கா.
மணிக்குருக்கள் ஒரு நிமிடம் நின்று எல்லாரையும் உற்றுப் பார்த்துவிட்டு, பெருங்குரலெடுத்து உளறிக்கொண்டிருந்த பங்கஜம் மாமியைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்வழியாகக் கீழே இறங்கிவிட்டார். மணி என் தோளில் அவசரமாய் இடித்து, “ வா, போலாம்” என்று இன்னொரு அதிரசம் கொடுத்தான்.

மேலும் வாசிக்க