5 ஏப்ரல், 2010

மரணங்களின் ஊடாக ஒரு பயணம் 2


மரணம் என்னும் தவிர்க்க முடியாத நிகழ்வின் தாக்கம் நமக்குள் வாழ்வு பற்றிய ஒரு பற்றின்மையை ஏற்படுத்தும் என்பதால், மரணம் பற்றிச் சிந்தித்தல் ஆன்மிகப் பாதையில் ஒரு பரிந்துரையாகவே வைக்கப்படுகிறது. புத்தர், விவேகானந்தர் முதல் பல ஞானிகளும், ஆன்மிகவாதிகளும் எந்நேரமும் மரணம் பற்றிச் சிந்தித்திருப்பதால் வாழ்வு ஒரு புதிய பரிமாணத்தில் மலரும் என்று சொல்லியிருக்கிறார்கள். பலபேர் சுடுகாடுகளில் இரவுகளைக் கழித்த்திருக்கிறார்கள். சடலங்கள் எரியும் வெளிச்சத்தில் தனிமையில் இருந்திருக்கிறார்கள். ஒரு யோக மையத்தில் நான் யோகா கற்றுக்கொள்ள சென்ற போது மரணதியானம் என்று ஒன்று செய்தோம். படுத்துக்கொண்டு கண்ணை மூடி நாம் இறந்ததாகக் கற்பனை செய்துகொள்ளவேண்டும். நம்மைச் சுற்றிக் கட்டைகள் அடுக்குவது, தீ வளர்ந்து நம் கால்களைச் சுடுவது, நம் உடல் எரிந்து சாம்பலாவது எல்லாவற்றையும் கற்பனையில் அனுபவிக்கவேண்டும். தியானம் முடிந்தவுடன் எழுந்து உடன் தியானம் செய்தவர்கள் அனைவரும் எனக்கு உண்மையில் எரிந்தது போலவே இருந்தது, அனுபவம் அப்படியே நிஜமாகவே இருந்தது, இப்போது புதிதாய்ப் பிறந்த மாதிரி இருக்கிறது என்றெல்லாம் சொன்னர்கள். எனக்கு தியானத்தின் போது வயிற்றைக் கலக்கிக் கொண்டு எப்போது தியானம் முடியும் கழிப்பறைக்குச் செல்லலாம் என்றுதான் இருந்தது.

ஆனால் நம்மைச் சுற்றியுள்ளவர் யாரேனும் ஒருவர் மரணத்துக்கு நாம் ஏதோ ஒரு வகையில் காரணம் ஆகிவிடும்போதோ, மரணத்துக்கு முன் அவர்களுடனான நம் தொடர்பு மேம்பட்டதாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் வரும் போதோ நமக்குள் எழும் குற்ற உணர்ச்சி நீண்ட நாட்களுக்கு நம்முடனேயே தங்கி விடுகிறது. நான் சித்ராக்காவின் அம்மாவாக இருந்திருந்தால் என்னென்ன கொடுமைகளை அனுபவித்திருப்பேனோ தெரியவில்லை. ஆனால் ஊட்டிக்கு நான் சென்றபோது நிகழ்ந்த அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் மறையாத வடு.

ஊட்டிக்கு என் பெரியம்மா வளைகாப்புக்காகச் சென்றிருந்தேன். பெரியம்மாவின் அப்பா சரியான முசுடு. ‘அங்கே ஓடாதே, இங்கே ஓடாதே, அதைச் செய்யாதே, இதைச்செய்யாதே’ என்று எப்போதும் ஒரே அதட்டல். ‘இந்த ஆள் செத்துப் போனால் என்ன?’ என்று நினைத்தேன். வளைகாப்பு முடிந்து நாங்கள் கோவை திரும்பி விட்டோம். இரண்டு நாட்களில் அவர் இறந்து மிலிட்டரி வண்டியில் உடல் கொண்டு வரப்பட்ட போது எனக்குத் திக்கென்றிருந்தது. ஒருவேளை எண்ணங்களுக்கு மகத்தான ஆற்றல் உண்டு என்கிறார்களே, நான் ஆழமாக அப்படி நினைத்ததால்தான் இப்படி நடந்ததோ என்று இன்றளவும் எனக்குச் சந்தேகம் உண்டு.
என் அம்மாவின் அப்பா இறந்தபோது நான் திரையரங்கு ஒன்றில் தேவர்மகன் இரவுக்காட்சியில் சிவாஜிகணேசனைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்.
நான் வேறு திரைப்படத்துக்குச் செல்வதாகச் சொல்லியிருந்ததால் தியேட்டர் தியேட்டராக என்னைத் தேடியிருக்கிறார்கள். என் அப்பாவின் அப்பா மகள் வீட்டுக்கு வந்தபோது இறந்துவிட்டார். நடு இரவில் அவரைக் காரில் கொண்டு சென்றோம். அப்போது ஊரில் அம்மன் திருவிழா. தாத்தா இறந்த செய்தி யாருக்கும் தெரியக்கூடாது என்று மாமா சொல்லிவிட்டார். கார் ஓட்டுனரிடம் அவர் மயக்கத்தில் இருப்பதாகச் சொல்லியிருந்தோம்.(அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்) தாத்தா என் தோள்மேல் சாய்ந்து கொண்டேதான் கோயம்புத்தூர் வரை வந்தார். அப்படியும் நான் அந்த நிகழ்வை விட்டு மனதளவில் விலகியே இருந்தேன். என் உடல் மட்டும் அவர் உடலைத் தாங்கிச் சென்றது. என் அத்தை கூட,”என்னடா!, தாத்தா செத்துட்டாரு, நீ அழுவவே இல்லை” என்றாள். எனக்கு அழுகை வரவில்லை. ஆனால் அவரைக் குளிப்பாட்டி பூஜை செய்யும் போது, குமுறிக் குமுறி அழுதேன். அது என்னவோ அழுகை அதுவே வந்தது. என் முயற்சி அதைக் கட்டுப் படுத்துவதில்தான் இருந்ததே தவிர அழுவதில் அல்ல. ஒருவேளை எல்லோரும் அழுததால் அது என்னையும் தாக்கியிருக்கலாம்.

இப்படி அதிர்ச்சியையும், அவ்வப்போது வாழ்க்கையின் நிலையாமை குறித்த ஞானத்தையும் ஏற்படுத்தும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டால் அது நீளமாக இருக்கும். அந்தப் பட்டியல் இதை எழுதும் கையில் உயிர் இருக்கும்வரை நீண்டு கொண்டேதான் இருக்கும் என்று எண்ணும்போது சலிப்பாகத்தான் இருக்கிறது. தற்போதைய துக்க நிகழ்வுகள் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேள்விப்படும் தகவல்களாக மட்டுமே மாறிவிட்டன. குரலில் ஒப்புக்குக் கூட துக்கத்தைக் காட்டமுடிவதில்லை. போனவாரம் என் நண்பர் அழைத்து அவரது உறவுப்பையன் ரயிலில் இருந்து விழுந்து இறந்துவிட்டான் என்றபோது ‘அது தற்கொலையா, தற்செயலா?’ என்று இயந்திரத்தனமாக விசாரித்தது எனக்கே விநோதமாக இருந்தது. தெரிந்தவர்கள் மறைந்துவிடும்போது அவர்களுக்கு நம் வாழ்வில் கொடுத்து வந்த இடத்தை வன்முறையாகக் காலி செய்துவிட்டு வாழ்வைத்தொடரும் அவசரத்தில் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் என்ன செய்ய? இதை எப்படி அணுகுவது என்றும் தெரியவில்லை. ஒருவேளை பிற உயிர்களின் இருப்புக்கு நாம் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லையோ? எழுந்து தூசிதட்டிக்கொண்டு வேலையைப்பார் என்ற மனநிலையில்தான் இருக்கிறோமா? அல்லது நமக்கு நிகழவிருக்கும் அந்தத் தவிர்க்கவியலாத மரணத்தை இந்நிகழ்வுகள் நினைவுபடுத்துவதால் அவற்றைக் கூடிய விரைவில் நம் மனதில் இருந்து அப்புறப் படுத்தி விடப்பார்க்கிறோமா? அழிக்கும் கடவுளான அந்த சிவன்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் வாசிக்க