4 அக்டோபர், 2025

விஜய் ரங்கராஜனின் “உள்ளச்சம்”

 




அன்புள்ள விஜய்,

உங்கள் உள்ளச்சம் வாசித்தேன். இதற்கு முன் நீங்கள் எழுதிய சில கதைகளை வாசிக்க வாய்க்கவில்லை. உங்கள் மொழி திருத்தமாகவும், அழகாகவும், தெள்ளிய ஓடை போன்றும் இருந்தது. அது உங்கள் பலம். நிறைய உவமைகள், ஒப்பீடுகள்.  கதையில் அர்ஜூன், அஷ்வத் இருவருக்குமான மோதல்களில் கதையின் தீவிரம் கூடிக் கொண்டே செல்கிறது. சிறுபெண் நந்திதாவும், தாய் ரம்யாவும் அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு கதையாக மிக நேர்த்தியாக, எந்தப் புரிதல் குறைகளும் இன்றி சொல்லப்பட்ட கதை. 

எனக்கு ஏனோ அஷ்வத்தும் ஒரு கே-வாக இருக்கக் கூடும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதற்கான குறிப்புகளை கதைக்குள் முதலிலேயே கொடுத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஒரு பால் சேர்க்கையாளர்கள் சமூகத்தால் விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்பதை இக்கதை காட்டுகிறது. ஆனால் ஒழுக்கவாதம் பேசுபவர்கள் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதையும் கதை காட்டுகிறது. இதற்கு முன் பெற்றோரால் நிராகரிக்கப்பட்ட ஒருபால் சேர்க்கையாளன் ஒருவனின் கதையை நீங்கள் எழுதி வாசித்திருக்கிறேன். என் கேள்வி அவர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் புறக்கணிப்பு தாண்டி வேறு பிரச்னைகளை இலக்கியத்தில் அலச முடியுமா என்பதுதான். அமெரிக்காவில் கே-லிட் நிறைய எழுதப்படுகிறது. நான் எதையும் வாசித்ததில்லை. எனக்கு அவர்கள் உறவில் நிகழும் சிக்கல்கள், அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து கொண்டே தங்கள் உலகில் எவ்வாறு தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் இலக்கியத்தில் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படிச் சொல்கிறேன் - ஒருவேளை ஒருபால் சேர்க்கை முழுக்க அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தில் அவர்கள் எப்படி நிகழ்வார்கள்? அப்போது புதிதாக எழுந்து வரும் பிரச்னைகள் என்னவாக இருக்கும்? 

கதையை, உரையாடல்களை தூய தமிழில் அமைத்திருந்தது நன்றாக இருந்தது. ஆனால் சில இடங்களில் உவமைகள் தேய்வழக்குகள் போன்று தோன்றின. இன்னும் கொஞ்சம் தீவிரமான விமர்சனமாக வைக்க வேண்டுமென்றால் கதை பல இடங்களில் சொல்லப்படுகிறது. காட்டப்பட்டிருக்கலாம். உங்கள் மொழியின் மீதிருக்கும் பிரியத்தில், உரிமையில் சொல்கிறேன்.

ஜெகதீஷ் குமார்

விரிவான வாசிப்புக்கு நன்றி ஜெகதீஷ். தன்பால் உறவாளர்கள் ஒதுக்கப்படுவதும், ஒழுக்கவாதத்தின் இரட்டை நிலைப்பாட்டையும் இக்கதை பேசுகிறது தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அதையும் தாண்டி, internalized homophobia தான் இக்கதையின் முக்கியப் புள்ளி. அஷ்வத் தான் கே என்பதை மனதளவில் கூட ஒத்துக்கொள்ளாமல், வெளியே நடித்துக் கொண்டிருக்கிறான். மற்றவர்களை விட தீவிரமாக homophobia வை வெளிப்படுத்துகிறான். 

நீங்கள் சொல்வது சரிதான். சமமாக அங்கீகரிக்கப்பட்ட உலகில் வேறு நுட்பமானத் தளங்களுக்குச் செல்லலாம். ஆனால் ஆண்பெண் உறவு இரண்டாயிரம் ஆண்டுகளாக sublime செய்யப்பட்டு பக்தியாக்கப்பட்டு தான் வேறு நுட்பங்களுக்குச் செல்கிறது. மற்ற உறவுகளுக்கு அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்பது சரிதான். ஆனால் இப்போது தானே தொடங்கியிருக்கிறது. எழுதுவோம். 

கண்டிப்பாக, டெக்னிக்கை பலப்படுத்தவேண்டும். முயன்றுகொண்டே இருக்கிறேன். இன்னுமே கூட தீவிர விமர்சனம் தான் எனக்கு வேண்டும் :)

விஜய் ரங்கராஜன்.



ஸ்பைடர்-கருத்துக்கள்

 



வி.பி

அன்புள்ள ஜெகதீஷ்,

மகன், ஸ்பைடர் - இருவரும் தந்தைக்கு ஒன்றே. முதல் முறை குடியினால் இசையை, தன் மகனுக்கு இசை அறிமுகமும், அதன் வழியாக  கிடைக்கவிருந்த நற்கல்வி வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், அந்த விளைவின் வீரியம் அவரை தொடவில்லை. குடியின் ஈர்ப்பு விசையில் இருந்து அவர் விழவில்லை. அதிகபட்சம், வயலினை அந்த சமயத்தில் தொடாமல் தவிர்த்தார். (சமயங்களில் சில மறுப்புகள், பெரும் இழப்புகளை தவிர்க்கக்கூடும்). 

தந்தை செய்யும் ஒவ்வொன்றையும் தனியாக இருக்கும் போது செய்து பார்க்க முயலும் மகனை, தந்தையான பின் பெரும்பாலான ஆண் அறிவதில்லை. ஆனால் நிழல் என மகன்கள் தந்தையை நகல் எடுப்பார்கள் - வளர்ந்த பின் தன்னை கொஞ்சம் அதில் சேர்த்து அடுத்தவர்களுக்கு கையளித்து செல்வார்கள். ஸ்பைடர், பட்டறை வேலை என தொடர்ந்து அடுத்தது பாட்டில் அல்லது வயலின் - ஒன்றை நோக்கியே இயல்பாக சென்றிருக்க கூடும். 

பிரிந்து இருக்கையில் குடிப்பதை தவிர்த்தவன் (இசையை, பெரியவரை விடும் போதெல்லாம் தோன்றாத ஒன்று), மகனின் வலியில் மீண்டும் குடித்து நினைவிழக்க, மற்றொரு மகனை மொத்தமாய் இழந்ததும் என்றைக்கும் ஆன உறக்கத்தில் (போதையில்) இருந்து எழுந்து விட்டார். விலகி இருத்தல் மிக பெரிய உயரங்களை எட்ட உதவியாக  இருக்கும். தீய பழக்க வழக்கங்கள் மட்டும் அல்ல, அதிகமான அன்பு, எதிர்பார்ப்பு, இவை கொடுக்கும் அச்சங்கள், நடக்காத பலவற்றை மனதில் நிகழ்த்தி நிகழ்த்தி அலைக்கழிதல்  என இன்னும் பல பல 

தான் நெய்த வலையில் இருந்து தானே விலகி நிற்கும் சிலந்தி எப்போதும் உணர்த்துவது -  எல்லாம் உன்னுடையதே, எட்டி நீ நிற்கும் போது.

வெங்கட பிரசாத்

அன்புள்ள விபி,

விரிவான விமர்சனத்துக்கு நன்றி. நான் உங்கள் குறிப்பை இரண்டாவது முறை வாசித்தபோது ஒரு புதுக்கவிதையைப் போலவே ஒலித்தது. நண்பர்கள் நேரம் கொடுத்து வாசிப்பதற்கே நான் நன்றியுடனிருக்கிறேன். அதுவும் இதுபோன்ற ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இன்னும் ஊக்கம் தருகின்றன. 


ஒரு சிறுகதை அது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போதே தரும் இன்பமும், வேதனையும் அலாதியானது. இப்போதெல்லாம் இந்த அனுபவங்கள் அதிகமாயிருக்கின்றன. எழுதிக்கொண்டிருக்கையில் நான் எழுதுவது எனக்கே சுத்தமாகப் பிடிக்காமலிருக்கிறது. எழுதி முடித்து எடிட் செய்வதற்காக வாசிக்கையில் இதை நானா எழுதினேன் என்னும் அளவுக்கு நன்றாக இருக்கிறது. எழுதுவது ஒரு மாதிரி இனிய அவஸ்தை. எனக்கு இருக்கும் நல்லூழ் என் கதைக்கு ஆசிட் டெஸ்ட் வைக்கும் அனுதான். அதனால் குற்றங்குறைகள் முளையிலேயே களையப்படுகின்றன. நானும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்கிறேன்.

வீட்டில் அனைவருக்கும் அன்பு, விபி

ஜெகதீஷ் குமார்

வெங்கட பிரசாத்

அன்புள்ள ஜெகதீஷ்

எழுதும் போது ஏற்படும் உணர்வு நிலைக்காகவே எழுதலாம் என்றே எப்போதும் நான் நினைப்பது உண்டு. 

எழுதுபவர்கள் ஏதோ ஒரு இடத்தில் தன்னுடைய படைப்போடு ஒரு invisible relationship 

இருப்பதால் சிற்சில விஷயங்கள் கண்ணுக்கு படாது. அப்போது வெளியே இருந்து வரும் ஒரு பார்வை தான் நமக்கு உதவி செய்யும். 

அந்த வெளியே இருந்து வரும் பார்வை, வீட்டுக்குள் இருந்து அதுவும் மனதின் உருவமாய் மனையாள் ஆக இருப்பது பெரும் பேறு. மனசாட்சி எல்லாவற்றையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் அணு அளவு பயம் இன்றி சொல்லிவிடும் 

வாழ்த்துகள் ஜெகதீஷ்.

வெங்கட பிரசாத்

Prasad Venkat

Dear Jegadeesh

The story of a father undone by alcohol, trying to piece his life back together, may sound familiar. But in ஸ்பைடர், Jagadeesh turns this ground into a memorable one because he sprinkles tenderness without sentimentality and evokes atmosphere instead of exposition. The arc from collapse to the possibility of recovery is rendered with such intimacy that it is earned. 

We watch the father falter, belittled by his wife, ashamed before his son. Yet his every exchange with the boy is touched by gentleness. When the son visits after their separation, the father remarks, “நீ இல்லைன்னுதான் பொக்குனு போய்ட்டான்னு நெனக்கிறேன்” about the family dog. The line carries more than it says: the dog’s drooping spirit mirrors his own longing for his child. Jagadeesh never lingers on this yearning directly; instead, he lets it surface through quiet, moody images. A sentence like “வெளியே வந்து பின்புறம் ஓடினான். ஸ்பைடர் கரும்பு வயலைப் பார்த்தபடி தியானத்தில் அமர்ந்திருந்தது” is plain on the surface, but within the story it trembles with feeling.

The dog’s accidental death - standing in for both innocence and the father’s fragile hope of being better - is drawn without embellishment. His outburst, “ஸ்பைடர்ன்னா எம்பையனுக்கு உசிரு தெரியுமா?”, hurled at someone likely blameless, reveals more than grief: a man conscious that his neglect could cost him his son next. That recognition gives way to resolve. He chooses sobriety, but also distance, leaving town so the boy can grow in steadier hands.

The father is on the mend, but this healing requires his absence. The father's love endures, not despite, but because he steps away. Many congratulations on another fine story, Jegadeesh Kumar.

Prasad Venkat

Dear Prasad Venkat,

Thank you for this insightful review Prasad Venkat. Coming from you it means a lot. Especially thanks for pointing out the subtler aspects of the story.

Jegadeesh Kumar

Prasad Venkat

And thank you for this beautiful story. Focusing on seemingly ordinary moments to paint intense and complex feelings, all the while being highly readable is no mean feat. I also liked the fact you didn’t dwell on the wife/mom. From her perspective, she’s probably been through hell. I wish more people would read this story and share their thoughts. Congrats again.

Prasad Venkat

JK

Somehow you hit the proverbial nail on the head every time you review a story! not only mine, but everyone's!

Jegadeesh

ஆஸ்டின் சௌந்தர்

வெண்ணையில் உருட்டிய சோற்றுக் கவளை உருண்டை நழுவுவது தெரியாமல் தொண்டையில் இறங்குவதுபோல, கதையை விருவிருவென வாசிக்க முடிந்தது. கதைக்கே உரித்தான சின்னப் பதட்டதைக் கொடுத்தாலும், வயலின் வாசிப்பதற்கு அது சரிதான் என்று ஆசுவாசப்படுத்திவிட்டீர்கள்.

விவரணைகள், வலம் இடம் மாறுவது எல்லாம் கன கச்சிதம். உங்களுக்கு கை கூடிவிட்டது, கதைசொல்லி! ஸ்பைடர்!

மாஸ்டர் பெயரை காப்பாற்றிவிடுவீர்கள் !

ஆஸ்டின் சௌந்தர்


மிக்க நன்றி அண்ணா,

உங்களைப் போல் நுண்ணுணர்வு மிக்க வாசிப்புள்ளவர்களால்தான் நானும் எழுதும்போது மிகுந்த பொறுப்போடு எழுத முடிகிறது. நாம் பேசும்போது குறிப்பிட்ட மாதிரி முதலில் கதை ஓர் அனுபவத்தைத் தர வேண்டும். அந்த அனுபவம் தீர்ந்தபின் கதையின் அடுக்குகள் ஒவ்வொன்றாக வெளித்தெரிய வேண்டும். இக்கதையை வாசித்த நண்பர்கள் சிலர் ஸ்பைடர் என்ற அந்த நாய் தனஞ்சயன் இன்னொசென்ஸூக்கு ஒரு குறியீடாகவும், வயலின் அப்பாவின் எதிர்காலக் கனவுகளுக்கு ஒரு குறியீடாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது. இவை நான் விழிப்புணர்வோடு உருவாக்கியவையல்ல. ஆனால் கதை தரும் அனுபவமே பிரதானம். குறியீடுகள் இயல்பாக எழுந்து வர அனுமதித்தாலேயே போதும் என்று நினைக்கிறேன்.

கதையை வாசித்ததற்கே நன்றி அண்ணா. உங்களைப் போன்ற நல்ல வாசிப்பாளர்களுக்கு கதை பிடித்திருந்தது என்று சொன்னாலே அதை என் வெற்றியாகக் கொள்வேன்.

ஜெகதீஷ் குமார்

நான் குறியீடு அப்படி இப்படியெல்லாம் போகவில்லை. 

நீங்கள் வாழ்வியலை அழகாக எழுதியுள்ளீர்கள். தண்ணியடிக்கும் கணவனை பிடிக்காத மனைவி, தண்ணியடிப்பதன் பின்னணி, பையன் மேல் பாசம், அவரது தொழில் நேர்த்தி ஸ்பைடரின் உடல்மொழியை நீங்கள் சொல்லும் விதம் என உங்களுக்கு விவரனைகள் கைகூடிவிட்டது. 

வாசகன் பிரயத்தனப்படக்கூடாது என்பது போன்ற கதை எழுதினால் போதும். குறியீடெல்லாம் அப்புறம். 

// அப்பா குடித்திருக்கும்போது வயலினைத் தொடுவதில்லை.//

கதாபாத்திரத்தின் அகச் சித்தரிப்பை சொல்கிறீர்கள் அல்லவா? இதுவே இல்லாமல் எழுதுகிறார்கள்.

விரல் கிழிந்தது வயலின் வாசிப்பிற்கு சரி என்ற முடிவை கொண்டுவருவது என வாதிடலாம். But the idea behind it makes the point. கதையின்பத்திற்கு அது வேண்டும்.

உங்கள் கதையை படித்துக்கொண்டிருக்கும்பொழுது, போன் வந்தது. அதை எடுத்தாக வேண்டும். எரிச்சலாக இருந்தது. அதுதான் நல்ல கதையை வாசிக்கிறேன் என்பதற்கு சிறந்த சோதனை.

உங்களுக்கு மனிதர்களையும் வாழ்க்கையையும் தெரிகிறது. அதுதான் முக்கியம். எழுத்தாளனுக்கு சக மனிதனை தெரிந்திருக்க வேண்டும். அது அவன் எழுத்தில் பிரதிபலிக்கவேண்டும். இப்பொழுது அதையெல்லாம் சொல்ல உங்களுக்கு மொழியும் கூடிவிட்டது.

ஆஸ்டின் சௌந்தர்

பாலாஜி ராஜூ

ஜெகதீஷ் நலமா?

கதைகளில் எளிமை என்பதை வலிந்து உருவாக்கமுடியாது என்றே கருதுகிறேன். அது படைப்பாளுமையின் ஆழத்திலிருந்து வெளிவருவது. அதை மொழியாளுமை என்று கருதலாம். மொழி எழுத்தாளனுள் என்னவாகத் திகழ்கிறது என்பதன் வெளிப்பாடு அது. உங்கள் கதையை வாசித்தவுடன் இந்த அடிப்படைகளை எனக்குள் ஓட்டிப் பார்த்தேன். (வேறொன்றுமில்லை சில மோசமான கதைகளை வாசித்துவிட்டு சொல்ல முடியாமல் முழித்துக்கொண்டிருந்தேன், அதை எழுதுபவர்கள் தாங்கி வாதிடுவது மனதிற்கு சோர்வை அளிக்கிறது).

இந்தக் கதை ஏன் வாசித்தவுடன் மனதில் ஒட்டிக்கொண்டது என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன். கதையின் மொழிநடையும் எளிமையும்தான். (உங்கள் எல்லாக் கதைகளிலும் இந்த அம்சம் உண்டு). எல்லாவற்றுக்கும் மேலாக இதில் அழகிய ஒரு கதை இருக்கிறது, இலக்கியம் வாசிப்பது கதைகளில் கொஞ்சம் வாழ்வதற்காகத்தான். இந்தக் கதையில் நான் தனஞ்சயனாக அவனுடைய தந்தையாக வாழ முடிந்தது.

கதையில் தந்தை தனஞ்சயன், தந்தை ஸ்பைடர், தந்தை வயலின், தனஞ்சயன் ஸ்பைடர் என பல இழைகள் இருக்கிறது. அதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் ஜெகதீஷ். விஜய் எழுதிய குறிப்பை வாசித்தேன், கதையை மிக ஆழமாக உள்வாங்கி எழுதியிருந்தார்.

தந்தையின் உடைவுத் தருணம் ஸ்பைடர் இறப்பிலும், தனஞ்செயனுக்கு கையில் ஏற்படும் காயத்திலும் நிகழ்கிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால் ஸ்பைடரின் இறப்பில்தான் கதையில் அந்த நகர்வு நடக்கிறது என்று எண்ணுகிறேன். வாழ்வில் உடைவு என்பது ஆழமான ஒரு நிகழ்வால்தான் அமைகிறது, அந்த உண்மை இந்தக் கதையைத் தாங்குகிறது. கதையில் ராஜாவை நீங்கள் குறைவாகக் கூறி ஆழமாக வாசகனுக்குள் எழுப்புகிறீர்கள், அது நன்றாக இருந்தது.

வேறு வேறு களங்கள் அழகிய கதைகளாக உங்களிடமிருந்து வருகின்றன. ஜெகதீஷ் எனும் எழுத்தாளன் மிளிர்வது இந்த அம்சத்தால்தான். மனம் முழுக்க நிறைவு எனும் எண்ணம் எழுகிறது ஜெகதீஷ், வாழ்த்துக்கள்.

பாலாஜி ராஜூ

நன்றி பாலாஜி,

கதையின் உணர்வு இழைகளைச் சரியாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். எனக்கும் கதைகளை இப்படி அணுகுவதுதான் பிடித்திருக்கிறது. சுவாரசியமான கதை சொல்லல், அதே நேரம் மனித உறவுகளின் ஆழங்களுக்குள் செல்ல முயற்சித்தல் இவற்றைத்தான் முயற்சிக்கிறேன். இந்தப் பண்புகளை உங்கள் கதைகளிலும் காண்கிறேன். மொழியைக் கையாளுதல், குறியீடு உருவகம் இவற்றின் பயன்பாடுகள் என்பன போன்ற தொழில் நுட்பங்கள் அனைத்தும் கதை சொல்வதற்கும், பாத்திரங்களின் ஆழமான வடிவமைப்புக்கும் சேவை செய்வன என்ற போதம் நம்மிருவருக்குமே உள்ளதென்று நினைக்கிறேன். உங்கள் கதைகளில் எனக்கு நினைவிலிருப்பது அவற்றின் பாத்திரங்களும், அவற்றின் அலைக்கழிதல்களுமே. அதுவே நல்ல கலைப்படைப்பின் அடையாளம் என்பது என் நம்பிக்கை.

அசோகமித்திரன் கதைகள் குறித்து ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் நவீனத்துவம் காலாவதியாகி விட்டது என்பது மாதிரியான ஒரு தொனி ஒலிப்பதைக் காண்கிறேன். ஒரு நல்ல படைப்பை அது ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகைமையைச் சேர்ந்தது என்பதற்காக குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது என் எண்ணம். அசோகமித்திரன், ஹெமிங்கே என்ற இரு நவீனத்துவ ஆசிரியர்களின் படைப்புகளையும் இன்றைக்கும் சிலிர்ப்போடே வாசிக்கிறேன். மார்க்வெஸ்ஸின், லோசாவின், ருஷ்டியின் (நள்ளிரவின் குழந்தைகள் மட்டும்) பின் நவீனத்துவமும் பிடித்திருக்கிறது. இப்போது எழுதுகிற பிரிட்டிஷ், அமெரிக்க எழுத்தாளர்களையும் விரும்புகிறேன். வகைமைப்படுத்தி விமர்சனங்களை அடுக்குவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை. எல்லா வகைமைகளிலும் அரைகுறைப் படைப்புகளையும் உருவாக்கி விடமுடியும். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மொழியைக் கையாளுவதையும், பாத்திரப் படைப்பின் ஆழத்தையும், புனைவுலகை உருவாக்குவதையும் படைப்பாளிகளான நாம் பார்த்துக் கொள்ளலாம். அவற்றை விமர்சன வகைமைகளுக்குள் அடக்குவதை விமர்சகர்கள் பார்த்துக் கொள்ளட்டும். ஓர் ஆழ்ந்த வாசகனுக்கு படைப்பு தரமானதா இல்லையா என்பது வாசித்தவுடனே தெரிந்து விடும்.

வேண்டுமென்றே நீளமாகத்தான் எழுதுகிறேன். வெங்கட்டின் கருத்துக்கும் ஒரு நீளமான எதிர் வினையாற்றினேன். படைப்பாளிகளுடன் உரையாடுவது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் செயல். உங்களுக்கும் அப்படியே என்று நம்புகிறேன். உங்களிடமும், வெங்கட்டிடம் மாதம் ஒரு முறையாவது பேசி விட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

எளிமையான மொழி குறித்துச் சொல்லியிருந்தீர்கள்.  அதை மிகுந்த விழிப்புணர்வோடே அமைத்தேன். கதை தனஞ்சயனின் பார்வையில் சொல்லப்படுகிறது. எனவே அதற்குரிய மொழியைக் கதை தேர்ந்தெடுத்துக் கொண்டது. அவனுடைய உலகம் ஒலிகளாலானது. எனவே கதையில் நிறைய ஒலிக்குறிப்புகள். மொழி கைமீறிச் செல்லும் போது கவனத்துடன் நான் அதை திசை திருப்பும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். வேறொரு கதைக்கு அதற்கான மொழி அதுவாகவே அமைந்து விடும் என்று நம்புகிறேன். 

ராஜா கதைக்குள் இயல்பாகவே வந்து விட்டார். எழுதும் போது அவ்வாறு திட்டமிட்டிருக்கவில்லை. புனைவு தானாகவே உருவாக்கிக் கொள்கின்ற உலகங்களுடன், மனிதர்களுடன் புழங்குவது இனிமையான விளையாட்டாக இருக்கின்றது.

ஜெகதீஷ் குமார்

எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். மாதம் ஒருமுறை என்பது நல்ல இடைவெளி. ஆம் கதைகளின் ஓட்டத்திற்கு ஏற்ப அதன் ஆழங்கள் வெளிப்பட்டுக்கொள்ளும், அதன் பின் போவதுதான் எழுத்தாளன் செய்வது, நீங்கள் செய்வது போல கொஞ்சம் நெறியாளுகை மட்டும் செய்யலாம். இந்தக் கதையை நீங்கள் அநிச்சையாக ஒரே அமர்வில் எழுதியிருக்க வாய்ப்பு இருக்கிறது, கதையின் ஓட்டம் அத்தனை அழகு. இந்தக் கதையை வாசித்தவுடன் எனக்கு ஏற்பட்ட நிம்மதி இருக்கிறதே அதை நிச்சயம் சொல்லவேண்டும். இலக்கியம் மொழியாலும் கதைகளாலும் ஆனது என்று ஆழமாக எனக்கு சொன்னது உங்கள் கதை.

யதார்த்தவாதம், இருண்மை என்பதை எல்லாம் எனோ தீட்டு போலப் பார்க்கிறார்களோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. எத்தனை பெரிய ஆளுமை, அவர் காட்டும் உலகில் இலக்கியத்திற்கே உரிய நெகிழ்வும் மயக்கும் இருக்கிறதா என்று பார்த்தால் மட்டும் போதும் என்பதே என்னுடைய எண்ணமும். அது இருண்மையா யதார்த்தவாதமா என்பதெல்லாம் வாசகனுக்கு அவசியமே இல்லாதது.

நீளமாக எழுதத் தயங்கவேண்டாம், எனக்கும் அது பிடித்திருக்கிறது. நான் அதிகம் எழுதவில்லை, இந்த மாதம் சில கவிதைகள் மட்டும் எழுதியிருந்தேன். தொடர்பில் இருப்போம்.

பாலாஜிராஜூ

வெங்கட். சு

வணக்கம் ஜெகதீஷ், நலமா? உங்களின் ஸ்பைடர் கதையைப் படித்தேன். முழுதாக அதன் ஆழத்தை உள்வாங்கிக்கொண்டேனா என்று தெரியவில்லை. இது அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே நிகழும் இடைவெளியைக் காட்டுவது போல உணர்ந்தேன்.

ஆள்காட்டி விரல் குனிந்து கட்டை விரலை முத்தமிடுவது போல, தனஞ்செயன் மீது அவர் அப்பா எப்போதும் அன்பாக இருக்கிறார்.  தனஞ்செயனுக்கு அவன் அப்பாவின் மீது இருக்கும் ஒரு ஈர்ப்பினால், அவனுடைய அப்பாவை போலவே அந்த ஸ்பைடரை பழக்கப்படுத்த முயல்கிறான். ஒரு விதத்தில் அவனுடைய அப்பாவை போலவே அவனும் ஆக முயல்கிறான். எத்துணை முறை ஆள்காட்டி விரலை நீட்டினாலும் ஏனோ ஸ்பைடர் மட்டும் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. ஆள்காட்டி விரல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டை விரலை விட்டு விலகிச் செல்கிறது. அவனுக்கு நடக்கும் அந்த விபத்திற்குப் பிறகு  ஸ்பைடரும் இறந்துபோக அவன் அப்பாவிடமிருந்து இயற்கையான இடைவெளியையும் தாண்டி விலகி விடுவதை இறுதியில் உணர்கிறான். ஆனால் அவன் அப்பா அப்படி விலகி இருப்பது அவனுக்கு நல்லது என்றே நினைக்கிறார்.  

எதனையும் நீக்க முடியாத அளவில் மிகச் சரியான அளவில் கதை இருக்கிறது. இசை போன்ற நுண்ணிய ஒன்றைப் பயின்று வயலின் வசிக்கும் ஒருவன் சட்டெனப் பட்டறையில், உளியையும், சுத்தியையும் பிடித்து வேலை செய்வது அந்த அப்பாவின் நிலை அழகாக வந்துள்ளது. தனஞ்செயனுக்கு அப்பாவைப் பிடித்திருக்கிறது. ஆனால், அந்த வயலின் வசிக்கும் அப்பாவைப் பிடித்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஸ்பைடர் இறந்தபிறகு "ஸ்பைடர்ன்னா எம்பையனுக்கு உசிரு தெரியுமா?" என்று இன்னும் அவ்வளவாக விடியாத,  ஜல்லிக்கற்கள் நிறைந்த அந்த சாலையில், தளும்பி நிற்கும் அப்பாவின் நிலையை எந்த உருவகமும், படிமமும் இல்லாமல் உணரமுடிந்தது.  வாழ்த்துக்கள்.

வெங்கட். சு

வணக்கம் வெங்கட்,

முதலில் சிறுகதை குறித்த ஆழமான, விரிவான பார்வைக்கு நன்றி. ஒரு படைப்பாளியிடம் இருந்து மட்டும்தான் இது மாதிரியான குறிப்புகள் வரக்கூடும். “ஸ்பைடர்ன்னா எம்பையனுக்கு உசிரு தெரியுமா?" என்ற இடத்தில் நீங்கள் அடைந்த உணர்வெழுச்சியை கதையை எழுதுகையில் நானும் அடைந்தேன் என்றால் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு வேறு எதையும் சேர்க்கவும் தெரியவில்லை. அந்தத் தந்தையின் உணர்வுகள் அந்த இடத்தில் அலைகளைப் போல் பொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கதை அந்தச் சிறுபையனின் பார்வையில் சொல்லப்படுவதால், அவன் உள்ளத்தில் என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே பதிவு செய்வதுதான் நியாயமானது என்று எனக்குப் பட்டது. கதை முழுக்க அதைத்தான் கையாள முயன்றிருக்கிறேன். 

தந்தையிடமிருந்து மகன் விலகுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தக் கதையைத் தீர்மானித்து எழுதுமுன் இது என்னை எங்கு கொண்டு செல்லப்போகிறது என்பதைத் தோராயமாகத்தான் அறிந்திருந்தேன். ஆனால் எழுதி முடித்தபின் பல்வேறு வியாக்கியானங்களுக்கு அதில் இடமிருப்பதையும் கண்டு கொண்டேன். அதில் ஒன்று நீங்கள் சொன்னது. தனஞ்சயனுக்கு ஸ்பைடர் எப்படியோ, தந்தைக்கு அவரது மகன். ஸ்பைடரின் இழப்பின் மூலம், மகனையும் தான் நிரந்தரமாக இழந்து விடக் கூடாது என்று உறுதியையும், அவர் உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தையும் காட்டியிருந்ததாக நினைத்திருந்தேன். ஆனால் இந்த மாற்றம் ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்படுவதால் அவன் வயதுக்கே உள்ள குழப்பங்களையும் பதிவு செய்ய வேண்டுமென்று முயன்றேன்.


உங்கள் கருத்துக்கள் ஊக்கமளிக்கின்றன, வெங்கட். உங்களிடமும், பாலாஜியிடமும் மாதம் ஒரு அரைமணி நேரமாவது உரையாடி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருக்கிறேன். நமக்குள் நான் பார்த்த ஒற்றுமை, படைப்பு என்ற கலைச்செயல்பாட்டை மூவரும் (என்னையும் தன்னடக்கத்தோடு சேர்த்துக் கொள்கிறேன்) நேர்மையோடு அணுகுவதுதான். அதனாலேயே எழுதுகையில் பரவசத்தோடு ஒரு பதற்றமும் தொற்றிக் கொள்கிறது. அந்த உணர்வுகளை நாம் பகிர்ந்து கொள்கையில் ஏற்படும் பரஸ்பர நன்மைகள் அதிகம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும்போது பேசலாம். பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள்.

நன்றி மீண்டும்.

ஜெகதீஷ் குமார்



ஸ்பைடர் - கலந்துரையாடல்


என் சிறுகதை “ஸ்பைடர்” குறித்த கலந்துரையாடல் நியூஜெர்சியில் உள்ள கதையாடும் முன்றில் அமைப்பு நடத்தியது. அதில என்னையும் அழைத்திருந்தார்கள். நண்பர்கள் பாஸ்டன் பாலாவும், சுபாவும்  நான் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருமே தேர்ந்த இலக்கிய வாசகர்கள். கதையின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி விரிவாகப் பேசினார்கள். என்னிடம் கேள்விகளும் கேட்டார்கள். கதைத் தொழில் நுட்பத்துக்கான பல குறிப்புகள் இக்கலந்துரையாடலில் எனக்குக் கிடைத்தன. நண்பர்களுக்கு நன்றி.








 

24 ஆகஸ்ட், 2025

கடலின் உக்கிரமான சிறுதுளிகள் - ம. நவீனின் சிறுகதைகள்

 


சில ஆண்டுகள் முன்பே ம. நவீனின் மண்டை ஓடி சிறுகதைத் தொகுப்பையும், சிகண்டி நாவலையும் நான் வாசித்திருக்கிறேன் அவர் எழுத்து மிகவும் வசீகரமானது, துல்லியமானது. இந்த நிகழ்வுக்கு முதலில் பேய்ச்சி நாவலைப் பற்றி பேசலாம் என்று கையிலெடுத்தேன். அது அப்படியே என்னை உள்ளிழுத்துக் கொண்டது.  வலுக்கட்டாயமாக வெளியே வந்துதான் அவரது வேப்டியான் சிறுகதைத் தொகுப்பைக் கையிலெடுத்தேன். எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒரு எழுத்தாளராக ம. நவீன் கொள்ளக்கூடிய தீவிரத்தின் மீதும் அவரது இலக்கியச் செயல்பாடுகள் மீதும் எனக்குப் பெருமதிப்பும் பிரேமையும் உண்டு. நல்ல சிறுகதைகள் வாசிக்க வேண்டுமானால் அவர் நடத்தும் வல்லினம் இதழுக்குச் சென்றால் போதும் என்னும் அளவுக்கு இலக்கியத்தரமான சிறந்த சிறுகதைகளை வெளியிடுவது அவரது வல்லினம் இதழ்.

நல்ல எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஜார்ஜ் ஆர்வெல்லின் புகழ்பெற்ற கருத்து ஒன்று உண்டு. “Good prose is like a windowpane” நல்ல எழுத்து என்பது என்பது தெளிவாகவும், தீர்க்கமாகவும், நேரடியாகவும், துல்லியமானதாகவும், ஒரு கண்ணாடிச் சாளரம் போல ஊடுருவும் தன்மையுடையதாகவும் இருக்கவேண்டும் என்பார். நவீனின் எழுத்தும் அப்படிப் பட்டதுதான். அவருடைய மொழியில் எந்தப் பாசாங்கும் இல்லை.

ஒரு சிறுகதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சில மேற்கோள்களைக் காட்ட விரும்புகிறேன். 

“ஒரு நிலத்தில் உருவாகும் கதை அங்கு புழங்கும் சொற்களால் அடையாளம் பெறுவதல்ல. அந்நிலத்தின் ஆன்மாவை உள்வாங்குவதால் உருவாவது. இக்கதை இங்கு மட்டுமே நடக்க முடியும் என உணர்த்துவது.” ”கலையும் கைவிடுதலும்”: ம.நவீன், லதாவின் சிறுகதைகளை முன்வைத்து. 

“ஒரு கடலின் உக்கிரமான சிறுதுளி மூலம் முழுக்கடலையும் புரிந்து கொள்ள வைப்பதுதான் நவீன சிறுகதை.” - ம. நவீன்.

நவீன சிறுகதைகளைப் பற்றிய ஜெயமோகனுடைய இன்னொரு முக்கியமான அவதானம் என்பது, சிறுகதையின் முடிவிலிருந்து ஒரு புதிய துவக்கம், அல்லது திறப்பு, அல்லது பரிணாமம் நிகழ்ந்து கதை அங்கிருந்து அப்படியே சிறகு விரித்து மேலெழுந்து போகும் சிறப்பு கொண்டிருப்பதுதான்.

இந்த எல்லாச் சிறப்புகளையும் கொண்டிருப்பது ம. நவீனின் எழுத்து. 

நவீன் நேரடியாகவே கதை சொல்கிறார். பிரதானமாக அவரிடம் கதை சொல்லி என்கிற அம்சம்தான் ஓங்கியிருக்கிறது. மலேசியத் தமிழர்கள் வாழ்வு, அந்த நிலத்தின் பண்பாடு, அங்கு வாழ்கிற பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்குள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதெல்லாமே துல்லியமாக அவர் கதைகளில் பதிவானாலும், அடிப்படையாக ஒரு வசீகரமான கதையைச் சொல்வதற்காகத்தான் அவர் எழுதுகிறார் என்று தோன்றுகிறது.

நகம்

வளர்மதியின் தாய் அவளையும், அவள் சிறுவயது தம்பியையும் அப்போய் விட்டுவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய நகங்கள் மீது பிரேமை. அப்பா விபத்தில் இறந்து விடுகிறார். கம்போங்க் லாமாவின் வீடுகள் ஒன்றில் குடியிருக்கிறார்கள். கப்பளாவின் மரஆலை எரிந்த காப்புறுதி பணத்தில் கம்பத்தில் வீடுகள் வாங்கி வாடகைக்கு விடுகிறான். லூனாஸ் வட்டாரத்தில் அவன் பெரிய சண்டியன். 

இந்தக்கதை நிகழும்போது பேய்மாதம் தொடங்குகிறது. மாதத்தின் இறுதியில் நரகவாசல் திறக்கும். மாதம் முழுக்கப் பேய்வழிபாடுகளும், கடைசி ஏழு நாட்கள் சீனகூத்தும் நடைபெறும்.

வளர்மதிக்குத் தன் அம்மாவைப் போலவே அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை. தன் நகங்கள் மீது அதீத பிரேமை. 

பலகை வீட்டில் கால் பகுதி தட்டி வைத்து ஒதுக்கிய தான் குடியிருக்கும் வீட்டுக்கு அவளால் வாடகை ஐம்பது ரிங்கிட் கொடுக்க முடியவில்லை.. “நீயும் உன் அம்மாவைப் போல ஓடிப்போகலாமே” என்கிறான். வாடகை கொடுக்க துணி வெட்டும் வேலை செய்கிறாள். கிலோவுக்கு பத்து சென். ஆனால் அது உணவுக்கே சரியாக இருக்கிறது. தன் வானொலியை விற்கிறாள். அப்போது அவளுக்குத் தன் தோழியைக் கொன்றது போல மனம் துடிக்கிறது.

கப்பளா அவளை கம்பத்தில் உள்ள நான்கு கழிப்பறைகளில் மலம் அள்ளும் வேலையை செய்யச் சொல்கிறான். காய்கறிகள் பயிர் செய்யும் சீனன் ஒருவனுக்கு அது உரமாகப் பயன்படுகிறது. வாளிக்கு இரண்டு ரிங்கிட். 

இதைக் கேட்டதும் வளர்மதிக்குக் குமட்டிக்கொண்டு வருகிறது. ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். “அப்போ அடுத்தவனிடம் படுத்துதான் சம்பாதிக்க வேண்டும்” என்று அவன் கூறுகிறான். வளர்மதி உடைந்து அழுகிறாள். வேறு வழியின்றி ஆறாவது நாள் கூத்தின்போது சம்மதம் சொல்கிறாள்.

ஆறாவது சீனக்கூத்து துவங்குகிறது. முன்வரிசை காலியாக விடப்பட்டிருக்கிறது - சீனர்களின்.மூதாதையர் ஆன்மா வந்து அமர்வதற்காக. 

மலம் அள்ளுவதற்காக அணியும் ரப்பர் உறைகள் அவளது நகங்களால் கிழிந்து விடுகின்றன. அவள் எவ்வளவு கெஞ்சியும் கப்பளா அவள் நகம் வைத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. பேய்மாதத்தில் ஏதேனும் பிறழ்வு நிகழ்ந்தால் மூதாதையரின் ஆன்மாக்களின் சினத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறான்.

தன் வாழ்வில் அருவெருப்பைச் சூடிக்கொள்ளும் ஒருநாளில் தன்னிடம் உள்ள மகத்தான உடமை ஒன்றை இழப்பது கடும் மனவலியைத் தருகிறது. என்று எழுதுகிறார் நவீன். 

கடைசி நாள் கூத்து துவங்குகிறது: சீனாவின் கடைசிப்பேரரசான குயிங்க் முடிவுக்கு வரப்போகிறது. பேரரசர் புயியின் சார்பாக அரசை முடிவுக்குக் கொண்டு வந்தது பேரரசி டொவெஜர் லோங்க்யு. அவள் அறிவிக்கும் நாள். அரசி வருகிறாள். அவள் வளர்மதி கனவில் கண்ட பெண்போலவே இருக்கிறாள். ராணியின் கிரீடம் கழற்றப்படுகிறது. அரசி கதறி அழுகிறாள். பென்ஹூ நரம்புக்கருவி வளர்மதியைக் கிளறுகிறது. மகாராணியின் நகங்களைப் பார்க்கிறாள். 

“நகம் என்பது அதிகாரத்தின் குறியீடு. இந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி ராணியான நான், தங்கத்தால் ஆன நகக்கவசத்தை அணிந்தவள்,” கைதட்டல் ஒலித்தது. “நகம் ராணிகளை வேலை செய்ய விடுவதில்லை. நகங்களைக் காப்பதே ராணிகளின் அதிகாரத்தைக் காப்பதும் ஆகிறது. இனி எனக்கு இந்த நகக்கவசம் தேவையில்லை,” என்கிறாள்.

அங்கு பெரும் அமளி ஏற்படுகிறது. கப்பளா வளர்மதியை நோக்கி வருகின்றான். அவனைக் கண்டதும் வளர்மதி அஞ்சிப் பின்வாங்குகிறான். பேரரசி கழற்றி எறிந்த நகக்கவசத்தை கப்பளா வளர்மதியின் சுண்டுவிரலில் மாட்டி விடுகிறான்.

இந்தக் கதையில் கப்பளா அவள் விரலில் நகக்கவசத்தை மாட்டிவிடாமல் இருந்திருந்தாலும், வளர்மதியில் உள்ளத்தில் தன்னுடைய உலகின் மகாராணிதான் என்று திறப்பு ஏற்பட்டிருப்பதை ஒரு வாசகன் புரிந்து கொண்டிருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. கப்பளா என்ன செய்தாலும், அல்லது கப்பளா பிரதிநிதித்துவப் படுத்தும் என்ன முயன்றாலும் தொடவே முடியாத அக சாம்ராஜ்யத்துக்கு பேரரசியாக ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மூலம் வாசகன் அறிய வருகிறான். அதை வளர்மதி கண்டுகொள்ளும் தருணம் நவீனால் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கப்பளாவை ஒரு கொடுங்கோலனாகத்தான் நாம் கதை முழுக்க அறிகிறோம். இறுதியில், வளர்மதியின் அகத்தில் ஏற்படும் மாற்றத்தைப் போலவே, அவன் உள்ளத்திலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அது அவனது மூதாதையரின் ஆன்மாக்களால் ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம். அந்த மாற்றம் குறித்து கதையில் எதுவும் பேசப்படுவதில்லை என்றாலும் ஒரு தேர்ந்த வாசகன் கப்பளாவின் மாற்றத்தையும் ஊகித்து அறிந்து கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.

வைரம் கதை வர்க்கபேதத்தைப் பேசுகிறது என்று எளிமையாக வரையறுத்து விடலாம். ஆனால் அந்த வரையறை அக்கதைக்குச் செய்கிற நியாயமாகாது. ஒரு வகையில் எல்லாக்கதைகளுமே நீதியைப் பேசும் கதைகள்தாம். ஆனால் ஒரு கலைப்படைப்பு தருகின்ற நீதி என்பது மேலானது. தனித்துவமானது. அது அக்கலைப்படைப்புக்குள் பயணம் செய்பவனை மேலும் சிந்திக்க வைக்கும் திறனுடையது. அவனது அடிப்படையையே  மாற்றும் வல்லமை வாய்ந்தது. அப்படிப்பட்ட ஒரு கதைதான் வைரம். 

லட்சுமணன் ஏழை வீட்டுப் பையன். குமாரசாமி பணக்காரவீட்டுப் பையன். சமூகத்தில் அவர்கள் நிலையை நவீன் இப்படி எழுதுகிறார்.

எங்கள் வீடு மேட்டு லயத்தில் இருந்தது. குமாரசாமியின் வீடு கிராணிமார்கள் இருக்கும் இறக்கமான பகுதியில், சுற்றிலும் வேலிகள் போடப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது.

 இருவரும் பெரராங்க் தோட்டப்பள்ளியில் ஒன்றாகப் பயில்கிறார்கள். குமாரசாமி செல்வந்தன் மட்டுமல்ல, புத்திசாலியும் கூட. அவனைப் பார்த்து காப்பி அடித்துதான் லட்சுமணன் பாஸ் ஆகிறான். தன் அப்பா செய்ததிலேயே உருப்படியான காரியம் தனக்கு லட்சுமணன் என்று பெயர் வைத்ததுதான். அதனால்தான் அகரவரிசைப்படி குமாரசாமி பின்னால் அமர்ந்து தன்னால் அவனைக் காப்பியடிக்க முடிகிறது என்று நினைக்கிறான் லட்சுமணன். பொதுவாக நாற்பது கேள்விகளில் இருபதுக்குச் சரியாகப் பதில்களைக் கருமையாக்கிவிட்டாலே தேர்ச்சி அடைந்துவிட்டதாகப் பொருள்” என்று லட்சுமண்ன் முடிவு செய்கிறான். “மூள இல்லாத எம்புள்ளயே ரெண்டாங் கிராணி மவனால பாஸாயிட்டான்!” என்று அவன் அப்பா சொல்லி ஐம்பது காசு குருதட்சணை கொடுத்து குமாரசாமியிடம் பயில்கிறான் லட்சுமணன். குமாரசாமி தன்னிடம் படிக்க வருபவர்களை கடுமையாக வேலை வாங்குகிறான். மற்றவர் நின்றுவிட, லட்சுமணனுவும், மாடசாமி, காந்தனும் அவனிடம் பயில இணைகிறார்கள். ஒரு நாள் மாடசாமி விளையாடுவதற்குக் கோலி குண்டுகள் கொண்டு வருகிறான். அழகான சிறிய கண்ணாடிக் குண்டினுள் நீலம், சிவப்பு, பச்சை, ஊதா என மூவிதழ் பூ ஒன்று மலர்ந்து கிடப்பதை ஆச்சரியமாகப் பார்த்தோம்.  என்று எழுதுகிறார். அப்புறம்

சிறிய அசைவில் கோலியுடன் கோலி உராய்ந்து எழுப்பும் ‘கிர்க்க்’ என்ற ஒலி, விளையாடும் ஆர்வத்தைத் தூண்டுவதாய் அமைந்தது. என்ற வரி நான் சிறுவயதில் தெருச்சிறுவர்களோடு குண்டு விளையாடிய நினைவுகளைக் கொண்டு வந்தது. சிறுவயதில் நான் என் தாத்தா வீட்டில் சில வருடங்கள் வாழ்ந்தேன். தெருவில் குண்டு விளையாடி ஜெயித்த குண்டுகள் காற்சராய் பைகளில் உராய்ந்து எழுப்பிய ஒலி நினைவுக்கு வந்தது.

எல்லாரும் குண்டு விளையாட, குமாரசாமிக்கு விளையாடத் தெரியவில்லை. தோற்கிறான். ஆட்டத்தை விட்டு அவனை வெளியேறச் சொல்லும்போது “இது என்னோட வீடு… என்னையவே வெளிய போவச் சொல்லுறியா?” என்கிறான்.  குண்டையெல்லாம் பொறுக்கிப் புதரில் வீசுகிறான். இருவரும் அவனிடம் பயில்வதற்கு வருவதை நிறுத்தி விட, லட்சுமணன் மட்டும் தொடர்ந்து குமாரசாமியோடே பயில்கிறான். இப்போது குமாரசாமி கோலி விளையாடும் ஆசையைத் தூண்டுகிறான். அவன் வீட்டிலிருந்து வெள்ளி கோலியைக் காட்டி அதில் விளையாடுவதென்றால் சரி என்கிறான். எங்கும் வெள்ளி கோலி கிடைக்காத லட்சுமணன், பின் தன் வீட்டிலிருந்து அப்பாவின் கறுப்பு பூ குண்டை எடுத்து வருகிறான். அதற்குள் விளக்கடித்து தீச்சுடர் மின்னுவதைக் காண்கிறான். இதை அவன் அப்பா திருடினாரா என்று கேட்கிறான். எனக்குக் கொடு என்கிறான். லட்சு விளையாடி ஜெயித்துக் கொள்ளச் சொல்கிறான். அப்போது குமாரசாமி ஒரு அதிசயத் தகவல் சொல்கிறான். கரி பூமிக்குள்ள ரொம்ப வருஷம் இருந்தா வைரமாயிடும்னு வாத்தியார் சொல்லியிருக்காரு. அந்த ஆசையில் குமாரசாமியின் அப்பா வாங்கிய நிலத்தில் ஒரு அரச மரத்தின் அடியில் லட்சுவே புதைக்கிறான். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் லட்சு மகனுக்குத் திருமணப் பத்திரிகை வைக்க வரும்போது குமாரசாமி அதை நினைவு படுத்துகிறான். குமாரசாமி இப்போது ஓய்வு பெற்ற அரசு வழக்கறிஞர். நல்ல வசதியுடன் இருக்கிறான். ஏளனத்தோடு அந்த வைரத்தைத் தோண்டலாமா என்று கேட்கிறான். லட்சுமணன் வேண்டாம் என்கிறான். அவமானமாக உணர்கிறான். அவன் தோண்டத் தோண்ட, தான் அங்கு வந்ததே அதற்காகத்தானோ என்று எண்ணுகிறான். கோலியைப் புதைக்கத் தூண்டியபோது இருந்த அதே சிரிப்பு குமாரசாமியிடம். ஆனால் லட்சுமணனது தீவிரம் குமாரசாமியைப் பயம் கொள்ள வைக்கிறது. பின் அவனைத் தள்ளி விட்டு குமாரசாமியே எட்டிப்பார்க்கிறான். “வைரம் இருக்கிறதா? என்று கேட்கிறான் லட்சுமணன். “ஏய் ஸ்டுப்பிட்… கண்ணாடிக்கோலி எப்படி வைரமாகும்?” என்று ஆவேசமாக மண்ணை வாரிக் குழியில் கொட்டுகிறான் குமாரசாமி. “நா பாத்தேனே…!” என்கிறான் லட்சுமணன். “மொதல்ல இது என்னோட நெலம்… வெளிய போ ஓல்ட் மேன்!” எனக் கத்துகிறான் குமாரசாமி.

வசதியான வாழ்வு அமைந்தும், அறிவுக்கூர்மை இயல்பிலேயே வாய்த்தும், குமாரசாமிக்கு லட்சுமணிடமும், அவன் போன்றவர்களிடமும் இருக்கும் ஏதோ ஒன்றைத் தான் எப்போதுமே அடைந்து விடமுடியாது என்ற பதட்டத்திலேயே இருக்கிறான். அந்த ஒன்று அவர்கள் விளையாடும் கோலிக்குண்டு போன்று மிக எளிமையான ஒன்றுதான். ஆனால் என்ன பிரயத்தனம் எடுத்தாலும் லட்சுமணன் போன்றவர்களிடம் இருப்பது அவன் வசமாகாது என்றறிவதில் வரும் பதட்டம் அது.  அவை என்னென்ன என்பதை வாசகனே ஊகித்து அறிந்து விடக்கூடும். ஒரு வேளை சமூகத்திலும், பொருளாதாரத்திலும் தானிருக்கும் உயர்ந்த நிலைக்கு லட்சுமணன் போன்றவர்கள் வந்து விட்டால் சமூகத்தில் தனக்கான இடம் பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தினால் வரும் பதட்டமாகக் கூட அது இருக்கலாம். முதலில் வைரத்தைத் தோண்டி எடுத்திடலாமா? என்று ஏளனத்துடன் கேட்கும் அவனே இறுதியில் அது வைரமாக இருந்து விடக்கூடுமோ என்ற பதற்றத்துடன் குழியை மூடி, இது என் நெலம், வெளியே போ, என்று அவனைத் துரத்துவதில் அவனுடைய உண்மையான பதற்றம் எதைக் குறித்து என்ற கேள்வியை வாசகனின் மனத்தில் எழுப்புகிறது. சமூகத்தில் தன்னைவிடக் கீழுள்ளவர்களாகத் தான் கருதுகிறவர்கள் எப்போதுமே அப்படியே இருக்க வேண்டும் என்ற ஆவல் குமாரசாமி போலவே பலரிடமும் இருப்பதைப் பார்க்கலாம். அந்த ஆவல்தான், “உங்க அப்பா இந்த கோலியைத் திருடீட்டு வந்தாரா என்று கேட்கத் தூண்டுகிறது. நவீனின் பிற கதைகள் போலவே இக்கதையிலும் மலேசியத் தமிழர் வாழ்வும், வரலாறும் குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. லட்சுமணன் பெர்ராங்க் தோட்டத்திலிருந்து குடும்பத்தோடு பெயர்வதை நவீன் இப்படி எழுதுகிறார்.

மறுவருடமே தோட்டம் பெருநகரமாகப் புதிய பரிணாமம் எடுக்கத் தொடங்கிய பிறகு நாங்கள் கோலாலம்பூரில் அப்பாவின் அண்ணன் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிக்கு மாற்றலானோம். அது இரவோடு இரவாக நடந்த மாற்றம் என்பதால் என்னால் குண்டைத் தோண்டி எடுக்க முடியவில்லை.

மலேசியத் தமிழரின் வலி மிகுந்த வரலாற்றின் பக்கங்களில் ஒன்று மேற்கண்ட பத்தியின் ஒற்றை வரியில் சொல்லப்பட்டு விடுகிறது. 

சிறுகதைகளில் வெளிப்படும் ம. நவீன் என்ற கதை சொல்லியை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் கதைகளின் அந்தரங்க வாசகனாக நான் என்றும் இருப்பேன்.


 


மேலும் வாசிக்க