அன்புள்ள வெங்கட்,
இந்த ஆண்டு நான் வாசித்த கதைகளிலேயே மிகச்சிறந்த கதையாக “தழலின் தீண்டலை”த்தான் சொல்வேன். இப்படி ஒரு அற்புதமான கதையை நான் வாசிக்கக் கொடுத்ததற்காகவே நன்றி. எனக்கு உடனே என்ன சொல்வதென்று தெரியவில்லை. மாமா, கிரி, கதைசொல்லி, தாத்தா, பரஞ்சோதி, ஜப்பான் என்ற பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம், தேடல். அவை கதை முழுக்கப் பின்னிப்பிணைந்து அந்தக் “கருப்பனை”ப் போலவே கதையெங்கும் நெளிந்து கொண்டிருக்கின்றன. கதையை நிறுத்தி நிதானமாக, ஆழமாகக் கொண்டு சென்றிருக்கிறீர்கள். உங்கள் மொழி கதை நிகழ்வுகளை அப்படியே காட்சிப் படம் போலக் காட்டிக் கொண்டே செல்கிறது. உங்கள் மொழி வாசிக்க வாசிக்கச் சுகமாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும், நிகழ்விலும், அவை குறித்த உங்களது விஸ்தாரமான விவரணை கதையின் அடர்த்தியைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. இப்படித்தான் கதை எழுதப்பட வேண்டும் என் விருப்பமும். நான் சற்றே வேகமாக எழுதிக்கொண்டிருக்கிறேனோ என்று என்னை எண்ண வைத்து விட்டது உங்கள் கதை. கதையின் ஒவ்வொரு தருணமும் புனைவுப்பரப்பில் உயிர் கொண்டு எழுகிறது. கிட்டத்தட்ட உங்கள் புனைவுலகத்தில் உள்ள பொருட்களையெல்லாம் தொட்டு விட முடியும் என்பது போல, அந்த மனிதர்கள் வாசனையைக் கூட அறிந்து விட முடியும் என்பது போல.
உங்களது பல கதைகளில் கதை சொல்லல் என்ற தன்மை மிக நேர்த்தியாகவும், லாவகமாகப் பின்னப்பட்டும் அமைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அவை இப்போது நினைவில்லாத காரணத்தால், தழலில் தீண்டல்தான் உங்கள் கதை சொல்லும் திறனின் உச்சம் என்று சொல்லத் தோன்றுகிறது. உரையாடல்கள் மூலமாக கதையை நகர்த்திச் செல்வதையும், பாத்திரங்கள் குணாம்சங்களை வெளிக்கொணர்வதையும் நீங்கள் மிகத் திறமையாகச் செய்திருப்பதைக் கண்டபோது எனக்குள் உவகை பொங்கியது. அப்படி உரையாடல்களைக் கையாளுவதாலேயே, விவரணைகளை விரிவாகக் கையாளுவதற்குக் கதையில் நிறைய இடம் இருந்திருக்கிறது. அவ்விடங்களை நீங்கள் மிக அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள்.
இந்தக் கதை எனக்கு ஏன் இவ்வளவு பிடித்திருக்கிறது என்பதைத்தான் எதையெதையோ சொல்லி விளக்கிக் கொண்டிருக்கிறேன். மொத்தத்தில் கதை ஒரு உயிருள்ள ஜீவனாகத் துடித்துக் கொண்டிருக்கிறது. நுண்ணுணர்வுள்ள யாரும், நேரத்தையும், இதயத்தையும் கொடுத்து வாசித்தால் இந்தக் கதையின் அருமையை உணர்ந்து கொள்வார்கள்.
முதுமையின், பழமையின் புறக்கணிப்பு, அல்லது அது அகற்றப்பட வேண்டியது என்ற பொதுவான கண்ணோட்டம் கதைக்குள் வெளிப்படுகிறது. நூறு வருடம் பழைய மரத்தை மறுமுறை எண்ணாமல் அகற்றி விடுகிறார்கள். எண்பது வயதான கிழவியும், தாத்தாவும் ஓர் மூலையில் இருப்பு தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். கேசவனுக்குள் எல்லாரையும்போல நீடித்து உயிர்வாழும் ஆசை இருக்கிறது. மரணத்தைக் கண்டு அச்சம். தோப்புத் தேங்காய்கள் தலை மீது விழும் அச்சம், கோயில் நாகம் தீண்டும் அச்சம். மரணபயம், அதே நேரம் உடல் மூப்பு கொண்டு நெடுநாள் வாழ நேரிட்டால் அந்த உளுத்துப்போன உடலுடன் எங்கனம் வாழ்வது என்ற அவனது குழப்பம் கலந்த அச்சம் எல்லாமே அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. கருப்பன் என்ற பாம்பை அவனது அச்சங்களின் குறியீடாகவே காண்கிறேன்.
கதையை வாசித்து விட்டு, அது தந்த அனுபவம் அழுத்த அமர்ந்திருந்தேன். நான் இன்னும் அடைய வேண்டிய தூரத்தை இக்கதை எனக்குக் காட்டியிருக்கிறது. மிகையாகச் சொல்லவில்லை - தமிழிலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று இது. என் பொறுப்பை எனக்கு உணர்த்திய கதை. கதை பல்வேறு வியாக்கியானங்களுக்கு இடமளிக்கிறது. அதே நேரம் ஓர் அனுபவமாக வாசகனுக்குள் ஊடுருவிச் செல்கிறது. இதற்காகத்தானே இலக்கியம் படைக்கப்படுகிறது?
உங்கள் கதையளவுக்கே அதை விதந்தோத நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கு கதை விமர்சனம் அவ்வளவாக வருவதில்லை. ‘அனுபவிக்கனும், ஆராயக்கூடாது’ வகையைச் சேர்ந்தவன் நான்.
வாழ்த்துக்கள் வெங்கட். மேலும், நன்றி!