26 நவம்பர், 2025

வானப்ரஸ்தம் குறித்து பாலாஜிராஜூ


 

வானப்ரஸ்தம்

வணக்கம் ஜெகதீஷ்,

சம்யுக்தா, அவளுடைய அம்மா என இரண்டு பாத்திரங்கள், ஒரு சாலைப் பயணம், சில நிகழ்வுகள் என கதை வாசிப்பதற்கு படு சுவாரசியமாக வந்திருக்கிறது. இருவரும் வாழ்வின் இருவேறு நிலைகளில் இருக்கிறார்கள். அம்மா, தனக்குரிய பாதையை அடைந்து, அல்லது அதை நோக்கிய பயணத்தில், தனக்குரிய தெளிவுடன் இருக்கிறாள்.

சம்யுக்தா, இன்றைய தலைமுறையினரின் பிம்பமாக இருக்கிறாள். சம்யுக்தாவை நான் ஒரு அமெரிக்க இந்தியப் பாத்திரமாக மட்டும் பார்க்கவில்லை, அவள் இந்தியாவின் இன்றைய நிலையையும் பிரதிபலிக்கிறாள் என்றே எண்ணுகிறேன். ஒரு வகையில் வளர்ந்துவரும் நாடுகளின் மத்திய வயதினர் எல்லோருக்குமான பிம்பமாகவும் சம்யுக்தாவைக் கருதலாம். எல்லாமிருக்கிறது, ஆனாலும் ஒரு நிலையின்மை. அவளுடைய பாத்திரம் கதைசொல்லியாக இருக்கிறது, பெரும்பாலும் அவளுடைய அம்மாவை நோக்கியே கதைக் கோணம் அமைந்திருக்கிறது. ஆனாலும், அவளுடைய நிலை கதை முழுக்க வாசகர்களுக்கு தெளிவாகவே விரிகிறது. ஜெ யின் சொற்களையே இங்கு குறிப்பிடுகிறேன், அவளுக்கு இருப்பது ‘ஒரு தத்துவ வெறுமை’. எல்லாமிருக்கிறது, விடுபட்டிருப்பதாக எண்ணுகிறாள், ஆனாலும் ஒரு அலைக்கழிப்பு.

சம்யுக்தாவின் அம்மா பாத்திரம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அவளுடைய தெளிந்த மனம், மனதுக்கு நெருக்கமானதாக கதையினூடாக மாறுகிறது. அவள் கரடியைக் கண்டு அஞ்சுவதில்லை, அச்சம் சம்யுக்தாவுக்கே. அது கரடி எனும் அறியாமை மீதான அச்சம்தானே! அவள் சம்யுக்தாவைப் பற்றி அதிகம் கவலைப்படுவதுமில்லை, மகளுடைய நிலையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறாள். இது லட்சியப் பாத்திரம் என்றே எண்ணுகிறேன். ஆன்மீகத்தில், எல்லாவற்றையும் அதனியல்பில் ஏற்றுக்கொள்வதின் வாயிலாக மீட்சியை நோக்கிச் செல்லும் ஒரு பெண். சகோதரி அனுவின் அம்மாவை ஒற்றிய பாத்திரம் என்றும் ஊகிக்கிறேன்.

கதையில் சாலைப் பயணம் என்பதையும் ஒரு குறியீடாகவே வாசிக்கலாம், அதற்கும் இடமிருக்கிறது. கிரிகோரி ராபின்சன் கதையில் நன்றாகப் பொருந்துகிறார். அவர் தனக்குரிய பாதையில் இருப்பவர், ஒரு வகையில் அவருக்கே உரிய ஆன்மீகப் பாதை.

மிக நேர்த்தியான கதை ஜெகதீஷ். கதையில் வயல் வெளி மற்று மலைகள் குறித்த வர்ணனைகள் அபாரமான எழுச்சியைத் தந்தது. ஒரு இந்திய வாசகனுக்கு அது அளிக்கும் அனுபவம் இன்னும் ஆழமாக இருக்கும். ஜெ நாவல் நிகழ்வில் எவன் ஒருவன் சூழல் வர்ணனையை நன்றாக எழுதுகிறானோ, அவனை நல்ல எழுத்தாளனாகக் கருதலாம் என்றே சொன்னார். நீங்கள் உங்களுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய அடுத்த தொகுப்பில் சேர்க்க இன்னொரு அழகிய கதை வந்திருக்கிறது, வாழ்த்துக்கள்.

அன்புடன் 

பாலாஜி ராஜூ


வணக்கம் பாலாஜி, தினமணிக்குக் கதை கேட்டபோது அமெரிக்காவில் நடப்பது போலக் கதை வேண்டும் என்று கேட்டார்கள். மூன்று நாட்களில் எழுத வேண்டும். தினமணி வாசகர்களுக்கேற்றார்ப்போல எழுத வேண்டும். அவர்கள் கொஞ்சம் சீரியஸ் வாசகர்கள்தானென்றாலும் பெரிய பத்திகள் எழுத வாய்ப்பு குறைவுதான். இத்தனைப் பாராமீட்டர்களையும் வைத்துக் கொண்டுதான் எழுதினேன். நான் மனதில் வைத்திருந்தது இதை ஒரு சுவாரசியமான கதையாகச் சொல்ல வேண்டுமென்பது. அப்படியே வந்திருக்கிறது என்று நீங்களும், அனுவும், வெங்கட்டும் சொன்னதும் திருப்தியாக இருந்தது. தத்துவத்தை இதில் பேச வேண்டுமென்று முடிவெடுத்தபோது சற்று தயக்கமாக இருந்தது. பிரச்சாரத்தொனி அடித்து விடுமோ என்று. இன்னும் கொஞ்சம் அவகாசம் இருந்திருந்தால் தத்துவத்தைச் செம்மையாக எழுதியிருப்பேன் என்றே தோன்றுகிறது. ஆனால் வேதாந்தத்தின் அடிப்படை அறிந்த ஒருவருக்கு நான் கோடிட்டு காட்டியுள்ள இடங்கள் நன்கு பிடிபடும் என்றே நினைக்கிறேன். ஞானியும், பைத்தியக்காரனும் பார்க்க ஒன்று போலவேதான் இருப்பார்கள் என்று சொல்வார்கள். அம்மாவுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது என்று சம்யுக்தா நினைக்கிறாள். தன்னுடனேயே ஒரு முழுதுணர்ந்த ஞானியை வைத்துக்கொண்டு, அந்த நிலையை அடையும் உபாயத்தையும் வைத்துக் கொண்டு அலைக்கழிதலில் இருக்கிறாள். சாலைப்பயணத்தில் நிகழும் அனுபவங்கள் அவளுக்கு அம்மாவை ஒரு புதிய ஒளியில் பார்க்கும் வாய்ப்பை அளிக்கின்றன. கிரிகோரியும் ஒரு ஞானிதான். தத்துவத்தை முறையாகக் கற்காமலேயே ஞான நிலையில் இருக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் அவர். ஆஃப்டர் ஆல், அடையவேண்டியது எதுவோ அது நாமாகவே இருக்கும்பொழுது, அதை அடைய புறக்கருவிகளின் உதவிகள் ஒரு நிமித்தமே என்பதைத்தான் அவரது இருப்பு காட்டுகிறது. பொதுவாக கதையை விளக்க நானோ, நீங்களோ விரும்பமாட்டோம். ஆனால் இதில் உள்ள சில வேதாந்தக் கருத்துக்களை உங்களுக்குச் சொல்லலாம் என்று ஆசைப்படுகிறேன். நீங்கள் எனக்கு தத்துவ ஜூனியர். சொந்த நாயனத்தை ஊதுவதற்கு எனக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம். அம்மா, “அசோச்யான் அன்வ சோசஷ்த்வம்” என்று கூறுகிறாள். இது கீதையில் கண்ணன் அர்ஜூனனுக்கு கூறுவது. இந்த ஸ்லோகத்தில்தான் உபதேசம் உண்மையில் துவங்குகிறது. இதற்கு உபக்ரம ஸ்லோகம் என்று பெயர். உபதேசத்தின் துவக்கம் என்று பொருள். இரண்டாவது அத்தியாயம், 11 வது ஸ்லோகம். சங்கரர் இந்த ஸ்லோகத்திலிருந்துதான் தன் உரையைத் துவங்குகிறார். முன்னுள்ள ஸ்லோகங்களை அவர் கண்டு கொள்வதேயில்லை. இதன் பொருள் ‘கவலைப்படத் தகாதவை குறித்து நீ கவலையுறுகிறாய்’ என்பதாகும். முழு ஸ்லோகத்தையும் தமிழில் சொன்னால் ‘கவலைப்படத் தகாதவை குறித்து நீ கவலையுறுகிறாய். ஆனால் ஞானியை போன்று பேசுகிறாய். இருப்பார்க்கோ, இல்லார்க்கோ துயருறார் ஞானியர்’ என்பதாகும். இந்த ஸ்லோகத்தை ஒரு சமன்பாடாகவே நம் ஆசிரியர் மரபு கொள்கிறது. இதன் முடிவுகள்: ஞானியர் துயருறுவதில்லை. ஏன்? அவர்களுக்கு ஞானம் உள்ள காரணத்தால். எனில் துயர் எதனால் வருகிறது? அஞ்ஞானத்தினால், அறியாமையினால். எனவே அறியாமையைப் போக்கினால் துயரம் நீங்கும். எதைப் பற்றிய அறியாமை? என்னுடைய உண்மையான தன்மை, இந்த உலகத்தின் (உற்றார், உறவினர் எல்லாம் சேர்த்து) உண்மையான தன்மை, மற்றும் இவ்வுலகைப் படைத்த இறைவனின் (அப்படி ஒருவன் இருந்தால்) தன்மை இவற்றைக் குறித்த அறியாமை. இவை நீங்கினால் ஒருவனுக்கு துயரம் என்பது அறவே நீங்கும் என்று ஆரம்பிக்கிறது கீதை. இது ஆரம்பம்தான். ஸ்ரவண, மனன, நிதித்யாசனங்களில் திளைத்திருக்கிறேன் என்கிறாள் அம்மா. இது வேதாந்தக் கல்வி அடிப்படை. ஒரு மாணவன் முதலில் கற்றறிந்த ஆசிரியரிடம் பாடம் கேட்க வேண்டும் - இது ஸ்ரவணம். பின் கற்றது குறித்த சந்தேகம் தெளிய வேண்டும் - மனனம். பின்னர் நிற்க அதற்குத் தக - நிதித்யாசனம். இதைத்தான் அம்மா குறிப்பிடுகிறாள். ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் - இங்கிருப்பதெல்லாம் இறையே. இது ஈஸாவாஸ்யோபனிஷத்தின் முதல் மந்திரம் (உபனிஷதங்கள் மற்றும் வேதங்கள் கேட்கப்பட்டதால் ஸ்ருதி எனப்படும். இவை அனைத்தும் மந்திரங்களாலானவை. கீதை மற்றும் பிற படைப்புகள் மனித எண்ணங்களில் உருவானதால் ஸ்ம்ருதி (நினைக்கப்பட்டது) எனப்படும். இவை ஸ்லோகங்களால் ஆனவை. ஈஸாவாஸ்யம் என்பதை இங்கிருப்பதனைத்தையும் இறைவனின் எண்ணத்தால் மூடப்பட வேண்டும் என்றும் புரிந்து கொள்ளலாம். முன்னர் சொன்னது பரம உண்மை. பின்னர் சொன்னது சாதகன் பின்பற்ற வேண்டிய பயிற்சி. ஸ்திதப்ரஞன் என்ற சொல்லுக்கு புத்தியில் நிலை பெற்றவன் என்று பொருள். ஞானிக்கு இன்னொரு பெயர். இரண்டாவது அத்தியாயத்தில் உபதேசம் முடிவடைகிறது. பின் அர்ஜூனன் கண்ணனிடம் ‘ஒரு ஸ்திதப்ரஞன் எவ்வாறு நடப்பான், பேசுவான், அமருவான்’ என்றெல்லாம் வினவுகிறான். நமக்கும் ஒரு ஞானி எப்படி இருப்பான் என்றறிந்து கொள்ள ஆவல் இருக்கும்தானே! அதற்குப் பதிலாக கண்ணன், ‘ஒரு ஸ்திதப்ரஞன் உண்டாலும், உறங்கினாலும், விழித்திருந்தாலும், எது செய்தாலும் புலன்கள் பொறிகளில் போகின்றன என்றறிந்து வாளாவிருப்பான் என்று சொல்கிறார். அப்படித்தான் கிரிகோரி இருக்கிறார். அம்மாவும். நீங்கள் தத்துவத்துக்கு எடுத்த குறிப்புகளில் கொஞ்சம் நானும் கொடுத்திருக்கிறேன் போல. எழுத ஆரம்பித்து நிறுத்த முடியாமல் எழுதி விட்டேன். பொறுத்தருள்க. இயற்கை குறித்த வர்ணனை எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம், சொற்கட்டுப்பாடு இல்லையெனில். இக்கதையில் தத்துவம் கொஞ்சம் துரித கதியில் சொல்லப்பட்டு, ஒரு கட்டுரைத் தன்மையை உருவாக்கி விட்டதோ என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. சவுந்தர் அண்ணா அதையே சொன்னார். இது உங்கள் எண்ணத்தை அறிய விழைகிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு முழுக்க முழுக்க தத்துவத்தையே புனைவில் எழுதினாலும் எழுதுவேன் என்று தோன்றுகிறது. அப்போது நிறைய பேருக்கு அது உவப்பை அளிக்காது போகலாம். விரிவாக வாசிப்பனுவத்தைத் தந்ததற்கு நன்றி, பாலாஜி. என் படைப்புச் செயல்பாட்டுக்கு உங்கள் கூர்மையான பார்வை எப்போதும் மிக அணுக்கமாகவே இருந்து வந்துள்ளது. அன்புடன் ஜெகதீஷ் குமார்

இதில் பிரசாரத் தொனி இருக்கிறதா? தத்துவம் குறித்த வர்ணனைகள் கட்டுரைத்தன்மையுடன் உள்ளனவா? இதில் நிச்சயம் பிரச்சாரத் தொனி இல்லை. கதை நிகழும் சூழல், பயணம், இயற்கை, கிரிகோரியின் இயல்பு என இதிலுள்ள வேதாந்த கருத்துக்களை இயல்பாக மூடி வைக்கும் அம்சங்கள் நிறையவே உள்ளன. விருப்பமிருப்பவர்கள் அந்த சொற்களுக்கான அர்த்தங்களைத் தேடிக் கண்டடைவார்கள், நான் அதைச் செய்தேன். அது இல்லையெனினும், கதை அதிலுள்ள எளிய கூறல் வழியாக ஸ்திரமாக நிற்கிறது. இதில் கட்டுரைத்தன்மை உள்ளதா? எனக்கு அப்படித் தோன்றவில்லை, அன்னை அவளுடைய இயல்பு காரணமாக தன் பெண்ணின் நிலையைப் புரிந்துகொள்ள வேதாந்தம் குறித்த சில வார்த்தைகளை உதிர்க்கிறாள். இப்படி வைத்துக்கொள்ளலாம், நீங்கள் கூறிய பிறகுதான் இந்த அம்சங்களை எண்ணிப் பார்த்தேன், அதற்கு முன் எனக்கு அந்தக் கேள்விகளே எழவில்லை, அது நிச்சயம் நான் கூறுவதையே உணர்த்துகிறது அல்லவா? உங்களுடைய விரிவான விளக்கங்களை வாசித்தேன், இப்போதைக்கு இவற்றை மனதுக்குள் சேகரித்து வைத்துக்கொள்கிறேன். நான் தொடர்ச்சியாக கற்றலில் இருந்தால், இவை என்னுள் இன்னும் விரிவாக வளரும், அதற்கு நன்றி. அன்புடன் பாலாஜிராஜூ

மீண்டும் நன்றி பாலாஜி. ஆம், முதலில் வாசிக்கையில் உங்களுக்குத் தோன்றவில்லையெனில் அப்படி இல்லை என்றுதான் அர்த்தம். இருந்தாலும் நான் உங்களிடம் என் ஐயத்தை வெளிப்படுத்தி அறிந்து கொள்ள விரும்பினேன். நானும் கதையின் சூழலுக்குள்தான் தத்துவத்தைப் பொதித்து வைத்திருப்பதாக திடமாக நம்பினேன். என் கதைத் தொழில் நுட்பத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் மனதோரம் ஒரு சிறு அரிப்பு. அது இப்போது தீர்ந்தது. இனி நான் நிம்மதியாக இருப்பேன்.

அன்புடன்
ஜெகதீஷ் குமார்


மேலும் வாசிக்க