அன்புள்ள நிர்மல்,
மத்த யானையின் ஈருரி வாசித்தேன். ஒரு அனுபவமாக கதை மிக நன்றாக வந்திருக்கிறது. சம்பவங்கள் ஒன்றையொன்று தொடர்ந்து கதையின் உச்சத்துக்கு இயல்பாகக் கொண்டு செல்கின்றன. கதையின் மொழி எளிமையாக இருந்தது. லலிதா மற்றும் பரந்தபன் என்ற தம்பதியர் இடையே நடைபெறும் விவாகரத்து உரையாடல், ஒரு சாதாரண குடும்பக் கலகமாக அல்ல; அது இருவரின் வாழ்க்கைத் தத்துவங்களின் மோதலாகவும், காதலின் சிதைவு மற்றும் தனிமையின் வெளிப்பாடாகவும் உருவெடுக்கிறது. சின்னச் சின்ன உடல் மொழிகள், பார்வை மாற்றங்கள், உணவின் சுவை குறித்த உளவியல் விளக்கங்கள்—இவை அனைத்தும் கதையின் உணர்வுப் பரப்பை விரிவாக்குகின்றன. பரந்தபனின் குழப்பம், கோபம், தன்னிலை உணர்வு எல்லாம் மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றது. பாத்திரங்கள் - லலிதா, பரந்தபன், சேமி, மார்க், அனிமேஷ், படேல் என்று அனைவருமே மனதில் நிற்கின்றன.
எனக்கு முடிவு சற்று குழப்பமாக இருந்தது. பரந்தபன் தனக்குத்தான் யானையின் மதம் பிடித்திருக்கிறது என்று உணர்ந்து கொள்கிறானா? சேமியின் டிரக்கை அடமானத்தில் இருந்து எடுத்ததனால் அந்த மாற்றம் அவனுள் வந்ததா? இதை நான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் கதை வாசிக்க நன்றாக இருந்தது.
சில அவதானிப்புகள்:
அலைபேசியா, தொலைபேசியா? அலைபேசி செல்ஃபோனுக்கும், தொலைபேசி டெலிஃபோனுக்கும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. நான் செல்பேசி என்றே எழுதுவேன். செல்லுலரைத் தமிழ்ப்படுத்த வேண்டியதில்லை என்பது என் தரப்பு.
மூவாயிரம் ரூபாய் கூலி. அமெரிக்காவில் ரூபாயில் பணம் வாங்குகிறானா?
எல்லாரையும் அழைக்கும் பரந்தபன், அனிமஷை மட்டும் அழைக்காமல் அவன் வீட்டுக்கே செல்கிறான்? அப்புறம் வெளியில் இருந்தபடியே ஏன் அழைக்கிறான்?
யானை குறித்த விபரங்கள் கதை நெடுக்க வருகிறது. இந்தக் கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது? பரந்தபன் பார்வையில் என்று யூகிக்கிறேன். அப்படி எனில் அவனுக்கு தமிழிலக்கிய ஆர்வம் உண்டா? தன் மனத்தின் கொந்தளிப்புகளை யானை குறித்த உவமைகள் மூலம் அவனாலேயே பார்க்க முடிந்தால் அவன் மனதில் மாற்றம் ஏன் முன்னமே நிகழ்ந்திருக்கக் கூடாது?
இதெல்லாம் ஒரு வாசகனாக எனக்குள் எழுந்த ஐயங்கள். இவற்றை இப்படி அமைத்ததற்கு உங்களுக்கேயான காரணங்கள் இருக்குமென்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் வெறும் புகழ்மொழிகளை மட்டும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்றறிந்ததால் என் கண்ணில் பட்டதையும் சொன்னேன்.
வாழ்த்துக்கள் நிர்மல்.
திருஞானசம்பந்தர் தேவாரத்திலிருந்து தலைப்பு கதைக்கு அழகூட்டுகிறது.
1. மூவாயிரம் ரூபாய் கூலி. அமெரிக்காவில் ரூபாயில் பணம் வாங்குகிறானா?
> இன்றைக்கு வேலை முடிக்க வேண்டும். மூவாயிரம் ரூபாய் வரும்.
இந்த வரி பரந்தபன் சொல்வதாக வருகின்றது. இந்தியர்கள் டாலரை ரூபாய் என சொல்வார்கள். இந்தப் பழக்கத்தினை என்னிடத்திலும், என் நண்பர்களிடத்திலும், அலுவலகத்திலும் கண்டுள்ளேன்,.
2.அலைபேசியா, தொலைபேசியா? அலைபேசி செல்ஃபோனுக்கும், தொலைபேசி டெலிஃபோனுக்கும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. நான் செல்பேசி என்றே எழுதுவேன். செல்லுலரைத் தமிழ்ப்படுத்த வேண்டியதில்லை என்பது என் தரப்பு.
மாற்றிக் கொள்கின்றேன். இனி அலைபேசி பயன்படுத்துகின்றேன்.
3.எல்லாரையும் அழைக்கும் பரந்தபன், அனிமஷை மட்டும் அழைக்காமல் அவன் வீட்டுக்கே செல்கிறான்?
இதற்கான காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ளது.
> *“எங்கே போவது? யாராவது என்னைத் தேடுவார்களா?அம்மா இருந்தால் தேடுவாள். அவளும் இல்லை. லலிதா ஒரு காலத்தில் தேடுவாள். இப்போது….” வாகனம் நகர, அவன் எண்ணங்களும் நகர்ந்தன. கண்கள் கலங்கின.அழ விரும்பவில்லை; கட்டுப்படுத்தினான்.
> “லலிதாவை முதலில் எங்கே பார்த்தேன்? அனிமேஷ் வீட்டில்… அனிமேஷ் என் நண்பன். அவன் என்னை ஏற்றான். எத்தனை வருடப் பழக்கம்! அவன் பழக்கத்தால்தான் லலிதாவை சென்னையில் அவன் வீட்டில்தான் பார்த்தேன். உஷா, லலிதாவின் தூரத்து சொந்தம். ஏதாவது சொல்லுவாளோ?”
> சாலையில் அத்தனை வாகனங்களுக்கு மத்தியில் தனிமையை உணர்ந்தான்.
> “அவள் ஏதாவது சொன்னாலும், அனிமேஷ் என்னுடன் வருவான். வந்தே தீர வேண்டும்; வராமல் இருக்கக் கூடாது. கடவுளே,அவனை வரச் சொல்… வராமல் இருக்கக் கூடாது.”
> மனதில் ஒரு கனம் எழுந்தது. அந்தக் கனம் உடலுக்கேறி, உடல் சோர்ந்தது. வாகனத்தை அனிமேஷ் வீடு நோக்கித் திருப்பினான்*
4.அப்புறம் வெளியில் இருந்தபடியே ஏன் அழைக்கிறான்?
இதற்கான காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ளது.
> “அனிமேஷ் வீட்டில்தான் இருக்கிறான். தொலைபேசியில் அழைத்து விட்டு வந்திருக்க வேண்டும். என்ன நம்பிக்கையில் அழைக்காமல் வந்தேன்? வெளியில் எங்குப் போகலாம்? அவனுக்கு வேலை இல்லாமல் இருக்குமா? பிளம்பிங் வேலைக்கு போகவேண்டுமெனச் சொல்வானோ?”
> முடிவு செய்ததும் அவனை அழைத்தான். அழைத்தவுடன் முதல் ரிங்கிலேயே அனிமேஷ் எடுத்தான்.
5. யானை குறித்த விபரங்கள் கதை நெடுக்க வருகிறது. இந்தக் கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது? பரந்தபன் பார்வையில் என்று யூகிக்கிறேன். அப்படி எனில் அவனுக்கு தமிழிலக்கிய ஆர்வம் உண்டா? தன் மனத்தின் கொந்தளிப்புகளை யானை குறித்த உவமைகள் மூலம் அவனாலேயே பார்க்க முடிந்தால் அவன் மனதில் மாற்றம் ஏன் முன்னமே நிகழ்ந்திருக்கக் கூடாது?
யானை வர்ணனை கதை எழுதுபவரின் குரலாக பரந்தபனின் உளநிலையை விளக்க சொல்லப்படுகின்றது. பரந்தபனின் அகக்குரல் இல்லை.
5.இருப்பினும் வெறும் புகழ்மொழிகளை மட்டும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்றறிந்ததால் என் கண்ணில் பட்டதையும் சொன்னேன்.
அவசியம் சொல்லுங்கள். அது எனக்கு பேரூதவியாக இருக்கின்றது.
6.இந்தக் கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது?
கதை பரந்தபனின் தன்னிலையில் செல்லவில்லை. கதை சொல்லியின் பார்வையில் உள்ளது. பரந்தபனுக்கு அருகே இருந்து சொல்லப்படுகின்றது.
7.பரந்தபன் தனக்குத்தான் யானையின் மதம் பிடித்திருக்கிறது என்று உணர்ந்து கொள்கிறானா?
பரந்தபன் கீழ் கண்டவாறு உணர்கின்றான். அதை கதை ஆசிரியரின் குரலில் “மதம் கொண்ட யானையின் கனத்த தோலென இருந்த இருள் அவனுள் இருந்து உரிந்துகொண்டிருந்தது.” எனக் காட்சிப் படுத்துகின்றது.
> “இப்படி இருப்பது எனக்குப் பிடித்துள்ளது…ஏன் இப்படி இருக்கிறேன்?”