காருக்குள் ஏறி அமர்ந்ததும் சம்யுக்தாவுக்கு முதலில் தோன்றிய விஷயம், அடுத்த பதினோரு மணி நேரத்துக்கு தன்னுடன் பயணிக்கப் போகும் அம்மா என்னவெல்லாம் பேசப்போகிறாள் என்பதுதான். வண்டியைத் துவக்கிவிட்டு, பக்கவாட்டில் திரும்பி அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். அம்மா சம்பங்கி நிறச் சேலையும், நெற்றியில் விபூதியும், கூந்தலில் மல்லிகையும் அணிந்து பாந்தமாக அமர்ந்திருந்தாள். முகத்தில் எப்போதும் தவழும் புன்னகையில் பூரித்த கன்னங்கள் மின்னின. தலை நரையைக் கணக்கில் கொள்ளாவிடில் அக்கா என்று சொன்னால் நம்பிவிடுவார்கள்.
“என் பொண்ணு கார் ஓட்டறாள்ங்கறதை நினைத்தால் எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?” என்றாள் அம்மா.
“தேவையான மருந்தெல்லாம் எடுத்துட்டியா? ஒரு வாரம் ஆசிரமத்துல இருக்கப்போறே. பக்கத்துல மருந்துக்கடையெல்லாம் இருக்கோ என்னமோ.”
“அதெல்லாம் எடுத்துட்டேன். அங்கிருந்து பத்து மைல்ல விண்ட்கேப்புன்னு ஒரு சின்ன ஊர். அங்க எல்லா கடையும் இருக்கு. நெட்ல பார்த்தேன். எதாவது வேணும்னா நீ போய் வாங்கிட்டு வர மாட்டியா என்ன?”
கார் அபார்ட்மெண்ட் வளாகத்தைத் தாண்டி, விட்ச்மென் தெருவுக்குள் நுழைந்து, மாகாணங்களை இணைக்கும் ஐ-95 சாலைக்குள் நுழையும் வரை அம்மா வேறு எதுவும் பேசவில்லை. சம்யுக்தா காரை தானியக்க மோடில் போட்டு விட்டு இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தபோது அம்மா கேட்டாள். “சம்யு, நான் ஒன்னு சொல்லட்டுமா?”
“அம்மா, கல்யாணம் பத்தி தயவு செஞ்சு பேச வேண்டாம்.”
அம்மா சிரித்தாள். “நான் எதுக்குடி உங்கிட்ட அது பத்தி பேசப்போறேன்? உனக்கு என்ன விருப்பமோ அதுமாதிரி பண்ணிக்கோ.”
சம்யுக்தாவுக்கு வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படி அம்மா சொல்லியிருப்பாளா? ஒருவேளை அப்பா இல்லாமல் ரொம்பவும் விடுதலையாக உணர்கிறாளோ? அல்லது எல்லாரையும் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறாளா? தன்னுடைய யூகம் சரிதானா?
வெயிலேறி விண்ட்ஷீல்டின் வழியே நெஞ்சைச் சுட்டது. மூன்று வழிச்சாலையில் கார்களும், டிரக்குகளும் ஒரே திசை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. அவற்றின் இரைச்சல் காதுகளில் ரீங்கரித்தபடியே இருந்தது. அம்மாவின் பூவாசத்தையும் மீறி வெளியிலிருந்து மெலிதான டீசல் வாசம்.
“நீயும் இந்த உபநிஷத் வகுப்பில கலந்துக்கலாமில்லையா?” என்றாள் அம்மா.
“அம்மா, இந்தப் ப்ராஜக்ட் இன்னும் ஒரு மாதத்துல முடியுது. நான் வேலை செய்தே ஆகணும். அங்க வைஃபை கிடைக்கும்னு நீ சொன்னதாலதான் நான் உன் கூடவே தங்க ஒத்துகிட்டேன். ஏன், தனியா கலந்துக்கறதுக்கு கூச்சமா இருக்கா?”
அம்மா சிரித்தாள். “கூச்சமா? எனக்கா? அச்சம், தயக்கம் இவைகளிலிருந்து நான் எப்போதோ விடுதலை அடைந்து விட்டேன்,” என்றாள் ஆங்கிலத்தில். அம்மாவிடமிருந்து இன்னொரு ஆச்சரியம். கோயம்புத்தூரில் இருந்தவரை சம்யுக்தா அவள் ஆங்கிலம் பேசிக் கேட்டதேயில்லை.
அம்மா தொடர்ந்தாள். “நான் அடைந்த விடுதலைக்கான வாய்ப்பு உனக்கும் உண்டு, சம்யுக்தா. அதை நீயும் பற்றிக்கொள்ள வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன்.”
“என்ன சொல்லப் போகிறாய்? உன்னை மாதிரி கீதையும், உபநிஷத்தும் கற்க வேண்டுமென்றா?” என்றாள் அவளும், ஆங்கிலத்தில். சொன்னபிறகு துணுக்குற்றாள். ‘உனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அப்பா இல்லாமல் தனிமையில் வாழ்கிறாய். உனக்கு வேண்டுமானால் இந்த சாஸ்திர படிப்பு சரியாக இருக்கலாம். நான் வாழ்வை துடிப்புடன் வாழ்பவள். எனக்கு எதற்கு இந்த வெற்று வேதாந்தம்?’ என்பதான தொனி அந்தக் கேள்வியில் இருந்ததை உணர்ந்தாள்.
“அதுக்கெல்லாம் நேரம் இல்லைம்மா. இந்த ப்ராஜக்ட் முடிந்ததும் அடுத்த கம்பெனி அமைவதற்காகப் போராட வேண்டும். அடுத்த வருடம் விசா புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. கிரீன்கார்டுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்று இரட்டை மனதாக இருக்கிறது.”
“அசோச்யான் அன்வ சோசஷ்த்வம்,” என்றாள் அம்மா.
“ம்?”
“ஒண்ணுமில்லை. கீதா வாக்யம்.”
* * *
இரண்டு மாதங்களுக்கு முன் அலைபேசியின் மறுமுனையில் வேறு குரல் கேட்டபோதே சம்யுக்தாவுக்கு வியப்பாக இருந்தது. இந்தியாவில் அப்போது காலை ஏழு மணி. இந்த நேரத்தில் அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாள்? “ஓ, சந்தான லட்சுமியா? அவ இப்ப கிளாஸ்ல இருக்காளே. இதோ இப்ப வரச் சொல்றேன்,” என்றது அந்தக் குரல். அம்மா அலைபேசி வைத்துக் கொள்வதில்லை. அப்பா இருந்தபோதிலிருந்து அப்படித்தான். இப்போது முதியோர் இல்லத் தொலைபேசிக்கு அழைத்துதான் அவளிடம் பேச வேண்டும். அப்பா போய் மூன்றே மாதங்களில் முதியோர் இல்லம் ஒன்றில் அவளை இணைத்து விடச் சொல்லி அம்மாவே கேட்டுக் கொண்டாள். அமெரிக்காவில் இருந்து தான் திரும்பி வந்து விடுவதாகச் சொன்னதை அவள் ஏற்கவில்லை. சம்யுக்தா முதலில் தயங்கினாலும் பின்னர் அவளுக்கும் அந்த முடிவே சரியென்று பட்டது. அதற்குப் பிறகுதான் அம்மாவிடம் மாற்றங்களைக் காணத்துவங்கினாள்.
அலைபேசியில் அம்மாவின் உற்சாகமான குரலைக் கேட்டதும் சம்யுக்தாவின் மனதில் அந்த மெல்லிய கவலை மீண்டும் தொற்றிக் கொண்டது. “வாரம் ஒருமுறை கீதை வகுப்பு. சுவாமிஜி சொல்றத அப்படியே குறிப்பெடுக்கறது, அதைச் சரிபார்க்கறதுன்னு பொழுது போறதே தெரியலை. ஸ்ரவண, மனன, நிதித்யாசனத்துல வாழ்க்கை அழகா ஓடுது. என்னைப் பத்தி நீ ஏன் கவலைப்படறே?” என்பாள். சம்யுக்தா அமெரிக்கா போன புதிதில் அம்மா மிகுந்த பதற்றத்தோடேயிருந்தாள். “பார்த்து பத்திரமா இருந்துக்கடி. உங்க அப்பா பிடிவாதத்துனாலதான் உன்னை அங்க அனுப்ப சம்மதிச்சேன். உன்னை அங்க விட்டுட்டு எனக்கு மனசே ஓட மாட்டேங்குது,” என்பாள். ஆனால் இப்போது அவளது கவலைகள் அடியோடு பறந்து விட்டன போலிருந்தது. “ஆறு எங்க போகணுமோ அங்கதானே போயிட்டுருக்கு. நம்ம வேலை ஒழுங்கா படகை ஓட்டுறதுதான்,” என்பாள். ஒவ்வொரு அழைப்பிலும் அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தபடியே இருந்தாள் சம்யுக்தா. பேச்சில் இரண்டு நிமிடத்துக்கொருமுறை, சுவாமிஜியோ, பகவானோ, பகவத்கீதையோ மேற்கோள்களாக வந்து விழும். ஆன்மிகவாதிகளுக்கு அடிமையாகும் கும்பலில் அம்மாவும் ஒருத்தியாகி விட்டாளோ என்று தோன்றியது அவளுக்கு.
ஆரம்பத்தில், ஒருவேளை அப்பாவுடன் வாழ்ந்தபோது இருந்த குடும்ப பாரம் இறங்கி விட்டதால்தான் இவ்வளவு இலகுவாகி விட்டாள் என்று நினைத்திருந்தாள். ஆனால் நாள் செல்லச் செல்ல உரையாடல்களில் அவள் காட்டிய உற்சாகம், அவள் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருந்த துள்ளலும், துடிப்பும் வழக்கத்துக்குச் சற்று அதீதமாக இருந்ததாகப் பட்டது. எதெற்கெடுத்தாலும் பெருத்த சப்தத்தோடு அவள் சிரித்தது வினோதமாக இருந்தது. முதியோர் இல்லக் காப்பாளரிடம் கேட்டபோது, உணவருந்துவதற்கும், கீதை வகுப்புகளில் கலந்து கொள்வதற்கும் தவிர அவள் அறையை விட்டுப் பெரும்பாலும் வெளியே வருவதில்லை என்று சொன்னார். ஒருமுறை முதியோர் இல்லத்தில் இருந்து அம்மாவின் சினேகிதி விஜயராணி அழைத்திருந்தாள். “ என்னடி, உங்கம்மா வேப்பமரத்தடியில் மணிக்கணக்கில உட்கார்ந்திருக்கா! ஒரு வார்த்தைப் பேச்சில்லை. நான் போய் பக்கத்துல உட்கார்ந்ததை கண்டுக்கவேயில்லை. அப்படியே வெற்றுப்பார்வைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கா. முகத்தில புன்னகை மட்டும் மாறாம அப்படியே இருக்கு.”
ஒரு வேளை தன் அம்மாவுக்கு மெல்ல மெல்ல மனநிலை பிறழ்ந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் தோன்றியது சம்யுக்தாவுக்கு. “அம்மா உலகின் மீதான பிடிப்பை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருக்கிறாளோ என்று அச்சமாக இருக்கிறது, நித்யா,” என்றாள் தன் அறைத்தோழியிடம். “நீ ஏன் உன் அம்மாவை இங்கு அழைத்துக் கொண்டு வரக்கூடாது? உனக்கும் அவர்களோடு நேரம் செலவழிக்க முடியும். அவர்களுக்கும் இடமாற்றம் ஆறுதலையும், புத்துணர்ச்சியையும் தரலாம் அல்லவா!” என்று ஆலோசனை சொன்னாள் நித்யா.
அம்மாவைக் கூட்டி வந்து சில மாதங்கள் தன்னுடன் வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தாள் சம்யுக்தா. அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் குடியிருப்பின் வெளியில் திரியும் வீடற்றவர்களான சில ஆஃப்ரோ அமெரிக்கர்களை நினைவு கூர்ந்தாள். ஒரு நாள் வேலையிலிருந்து காரில் திரும்பும்போது குடியிருப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்தாள். அப்போது அவர்களில் ஒருவன் அவள் காரை நோக்கி வேகமாக வந்து சன்னல் கண்ணாடியைத் தட்டி காசு கேட்டான். “கேன் யு ஸ்பேர் எ டாலர் ஃபார் யுவர் ப்ரதர்?” நெஞ்சில் அறையும் உரத்த குரல். அன்று அவள் இதயத்தில் ஏற்பட்ட அதிர்வு அவளுக்கு இன்னமும் நினைவிருக்கிறது.
அவர்களது அபார்ட்மெண்ட் குடியிருப்பின் வெளிக்கதவு இயங்குவது நின்று வெகு நாளாயிற்று. அது இருபத்துநாலு மணி நேரமும் திறந்தே கிடந்தது. ஒருமுறை ஒரு வீடற்ற கருப்பன் குடியிருப்புக்குள் நுழைந்து யாரோ ஒருவருடைய அபார்ட்மெண்ட் கதவைத் தடதடவென்று தட்டி விட்டு ஓடி விட்டான். தன் கதவு எப்போது தட்டப்படுமோ என்று பயந்தபடியே இருந்தாள் சம்யுக்தா. இந்த மாதிரி சூழ்நிலையில் இங்கு வந்து வாழ அம்மா விரும்புவாளா? மேலும் இங்கு அவள் பழகுவதற்காக இந்தியர்களும் யாரும் வசிக்கவில்லை. இந்தியர்களைக் காண வேண்டுமெனில் சார்ல்ஸ்டன் கோயிலுக்குச் சென்றால்தான் உண்டு. அம்மா இப்போதிருக்கும் நிலையில் வேறு வினையே வேண்டாம்.
அந்தக் கோடையில் அவளுக்கு இரு வார விடுமுறை வரும். அப்போது நண்பர்களுடன் மயாமி கடற்கரை செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தாள். அம்மாவையும் அமெரிக்கா வரவழைத்து ஃப்ளோரிடா கூட்டிச் சென்று டிஸ்னிவோர்ல்ட், நாசா போன்ற இடங்களை சுற்றிக் காட்டினால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.
அமெரிக்கா வந்திறங்கிய மறுநாளே அம்மா சொன்னாள். “பென்ஸில்வேனியாவில் அக்ஷரவித்யா குருகுலம் இருக்கிறது. அங்கு ஒரு வார உபநிஷத் வகுப்பு. அதற்கு என்னைக் கூட்டிப் போவாயா?”
“அமெரிக்கா வந்து உண்மையான அமெரிக்க வாழ்க்கையை சுத்திப் பாக்காம, இங்கேயும் அதே வேதாந்த புராணமா?” என்றாள் சம்யுக்தா.
“வெறும் கட்டிடங்களையும், பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் காண்பதில் எனக்கு ஆர்வமில்லை,” என்றாள் அம்மா.
நான் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன், நீ வேண்டுமானால் சுற்றுலா சென்று வா என்றாள் அம்மா. சம்யுக்தா சற்றே எரிச்சலடைந்தாள். ஆனாலும் வேறு வழியின்றி நித்யாவையும், நண்பர்களையும் ஃப்ளோரிடா போகச் சொல்லி விட்டு, அம்மா சொன்ன வகுப்புக்கு முன்பதிவு செய்தாள். எடுத்திருந்த விடுப்பை ரத்து செய்து வீட்டிலிருந்து பணிசெய்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டாள். குருகுலம் பென்ஸில்வேனியாவின் பொகோனோ மலைத்தொடர்களில் அமைந்திருப்பதாக இணையம் சொன்னது. அவள் இதுவரை மலைப்பாதையில் கார் ஓட்டியதில்லை.
“எனக்கு இதிலெல்லாம் கொஞ்சம் கூட விருப்பமேயில்லை. உன் கூட கொஞ்சநாள் இருக்க முடியும்கறதுக்காகத்தான் வர்றேன்,” என்றாள்.
“ஏன் விருப்பமில்லை?”
“இவையெல்லாம் பழைய சாஸ்திரங்கள். மாணவர்களைத் தங்களுடைய ஆதிக்கத்துலயே வைச்சுக்கறதுக்காக ஆன்மிகத் தலைவர்கள் பயன்படுத்தும் கருவிகள்.”
“அப்படி எந்த புத்தகத்துல போட்டிருக்கு?”
“ம்மா! எனக்குன்னு சொந்த புத்தி இருக்கு.”
“அதைப் பயன்படுத்தினால் வீடுபேறு அடைய முடியும்னுதான் உபநிஷத் சொல்லுது.”
அதற்குமேல் அம்மாவிடம் அவள் வாதாட விரும்பவில்லை. வெற்று வாக்கியங்களோடு போராடிக் கொண்டிருப்பதால்தான் அவள் தன் அறைக்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடப்பதாகத் தோன்றியது சம்யுக்தாவுக்கு.
* * *
“என்னடி ரோடு நீளமா ஒரே மாதிரி போயிட்டிருக்கு? காரும், டிரக்குமா ஒரே இரைச்சல். இப்படியேதான் முழுப்பயணமும் இருக்குமா?”
சம்யுக்தா ஆர்வமானாள். “அம்மா, பேக் ரோடில் போலாமா? மலைப்பாதை வழியா இரண்டு பக்கமும் காடும், வயல்வெளிகளுமா இருக்கும்.”
அம்மா உற்சாகமாகத் தலையாட்டினாள். சம்யுக்தா அடுத்த எக்ஸிட்டில் காரை வெளியேற்றி பின்பக்கச் சாலைகளுக்குள் நுழைந்தாள்.
வண்டி ஒரு மலைக்கிராமத்தில் நுழைந்திருந்தது. நெடிதுயர்ந்த மரங்களுடன் கூடிய அடர்வனம் ஒருபுறம். கச்சிதமாக வெட்டப்பட்ட புல்வெளிகளும், சிறு முகடுகளின் சிகரத்தில் பதிக்கப்பட்ட சிறுசிறு மரவீடுகளும் மறுபுறம். வாகன இரைச்சல்கள் தேய்ந்து விட்டன. அதை ஒரு பறவையின் கூச்சல் பதிலீடு செய்திருந்தது. அது கூட ஒரு வினாடி கழித்து மலைக்காற்றில் கரைந்து விட்டது. பச்சைக்கம்பளத்தில் உருளும் கருப்பு ரத்தினங்கள் மாதிரி வயல்வெளியில் ஆங்காங்கே மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பிரம்மாண்ட உருளைகளாய் அறுவடை செய்த வைக்கோற்புற்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. மலைப்பாதையில் ஜூலை மாதத்து சூரியனின் உக்கிரம் சற்று தணிந்திருந்ததாகப் பட்டது. சம்யுக்தா சாளரக் கண்ணாடியைக் கீழிறக்கினாள். சிலுசிலுவென்று மலைக்காற்று உள்ளே புகுந்தது. சம்யுக்தாவின் புறங்கைகளில் மயிர்க்கால்கள் எழுந்து நின்றன. இடதுபுறம் இருந்த பைன் மரச்செறிவிலிருந்து நாசியைத் துளைக்கும் இனிய மணம் எழுந்தது. சம்யுக்தாவின் இதழ்களில் அவளறியாமல் ஒரு புன்னகை பூத்தது.
ஒரு பதினைந்து நிமிட பயணத்துக்குப் பிறகு ஜிபிஎஸ்ஸின் சொல்படி ஒரு குறுகிய சாலையில் வண்டியைத் திருப்பினாள். சட்டென்று வயல்களும், வீடுகளும் மறைந்து இரு புறமும் மரங்கள் அடர்ந்த காட்டுப்பாதை குறுகலாகவும், வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டிருந்தது. வந்த வழியே திரும்பலாமா என்று ஒரு கணம் யோசித்தாள். ஆனால் சுழற்சாலைகளில் காரை வளைத்துத் திருப்பிச் செல்லும் சாகசம் பிடித்திருந்தது. திரும்பி அம்மாவைப் பார்த்தாள். அவள் முகத்தில் எப்போதும் மாறாதிருந்த புன்னகை மேலும் மலர்ந்திருந்தது. காரைப் புதிய உற்சாகத்துடன் செலுத்தினாள்.
சில நிமிடங்கள் கழித்துதான் கவனித்தாள். அவளது அலைபேசியில் ஜிபிஎஸ் உறைந்திருந்தது. சிக்னல் சுத்தமாகக் கிடைக்கவில்லை. சம்யுக்தாவுக்கு சற்றே வயிறு கலங்கி எதுக்களித்துக் கொண்டு வந்தது. இப்போது மலைகளினூடே செல்லும் மண்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருபுறமும் அலையலையாக, மடிந்து கிடந்தன மலைகள். திறந்திருந்த சன்னலினூடாக ஒற்றைப் பறவையின் கேவலொன்று அவர்களை வந்தடைந்தது. அம்மாவின் முகத்தில் சின்ன இருள் படர்ந்திருப்பதைப் பார்த்தாள்.
“வாந்தி வர்ற மாதிரி இருக்குடி.”
காரை மலைப்பாதையின் ஓரமாக நிறுத்தினாள். அம்மா இறங்கி சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் போனாள். அந்தப்புறம் புல்வெளி ஒரு மெல்லிய சரிவாகக் கீழறங்கியது. அங்கிருந்து இறங்கி நடந்து காட்டுக்குள் போய் விட முடியும் என்பது போல. அம்மா முந்தானையை இடுப்பில் இறுக்கிக் கொண்டு புல்வெளியில் அமர்ந்தாள். சம்யுக்தா காரைப் பூட்டி விட்டு அவளை நோக்கிச் சென்றாள். அலைபேசியை உயர்த்தி, உயர்த்திப் பிடித்து அலைவரிசை கிடைக்கிறதா என்று பார்த்தபடியே நடந்தாள். அம்மாவின் அருகில் அமர்ந்தாள். அங்கே இருந்த மனித ஜீவன்கள் அவர்கள் இரண்டு பேர்தான். அவர்களைத் தவிர அங்கிருந்த உயிர்கள் மரங்களும், காட்டுச்செடிகளும், கொடிகளும்தான் என்று அவளுக்குத் தோன்றியது.
அம்மா மூச்சை இழுத்து மலைக்காற்றால் நுரையீரலை நிரப்பினாள். “இப்ப பரவாயில்லடி,” என்றாள்.
சம்யுக்தாவுக்கும் நெஞ்சு எதுக்களித்தது சற்றே சமநிலைக்கு வந்த மாதிரி இருந்தது.
“அங்கே பார். சட்டென்று பார்த்தால் இந்த மலைகள், இந்த வானம், மரம் செடி கொடிகள், என் இந்த உடல் எல்லாமே என்னால் நிறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இதைத்தானே ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என்று உபநிஷத் சொல்கிறது!”
“சரியான பாதையில்தான் போய்ட்டிருக்கமான்னு சந்தேகமா இருக்கும்மா,” என்றாள் சம்யுக்தா, அலைபேசியிலிருந்து கண்களை எடுக்காமலேயே.
சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்கள். பக்கவாட்டில் திரும்பி அம்மாவின் தலைக்குப் பின்னால் மடிந்து கிடந்த மலைத்தொடர்களைப் பார்த்தாள். ஒவ்வொரு சுருளும், சலனமற்ற பச்சை அலைபோல, நிலத்தின் மீது மெதுவாக உருளும் பாம்பைப் போல தோன்றியது. இருபுறமும் உயர்ந்து, பின்னால் மறைந்து, மீண்டும் தோன்றும் அந்த மடிப்புகள், இயற்கையின் ஒரு மௌன இசைக்கோவையைப் போல இருந்தன. அம்மா அந்த இசையில் கரைந்தவளைப் போல அமர்ந்திருந்தாள். மலைக்காற்று அவர்களைத் தழுவிக் கொண்டிருந்தது. ஈரமண்ணும், மட்கும் இலைகளும் கலந்த மெல்லிய வாசனை. வெயில் சற்றும் உறைக்கவில்லை. பக்கத்திலிருந்த மேப்பிள் மரத்தின் கிளைகளினூடே சூரிய ஒளி ஊடுருவி அதன் இலைகளைப் பொன்னிறத்தில் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. தொலைதூரத்தில் ஏதோ ஒரு மலையிலிருந்து பறவையின் கூக்குரல் எழுந்து எதிரொலித்தது.
அம்மா அப்படியே இயற்கைக்குள் மூழ்கி விட்டது போலிருந்தது.
சம்யுக்தாவுக்கு வழி தவறி வந்திருக்கிறோமோ என்ற பதற்றம் அடங்கவேயில்லை. அப்போது பின்னாலிருந்து ஏதோ அசையும் சப்தம் கேட்டது.
சம்யுக்தாவுக்கு நெஞ்சில் ஏதோ நிரடியது. மெல்லத் தலையைத் திருப்பினாள். பக்கவாட்டுப் பார்வையில் அவளுக்கு நான்கடி தள்ளி ஒரு கரிய உருவம் நின்றிருப்பது தெரிந்தது. அது ஒரு கரடி.
மெல்லக் கையை நீட்டி அம்மாவின் தொடையைத் தொட்டு கவனத்தை ஈர்த்தாள். அம்மா திரும்பிப் பார்த்த பார்வையில் எந்த அதிர்ச்சியும் தென்படவில்லை. ஒருவேளை அது கரடி இல்லையோ? இப்போது சம்யுக்தா நன்றாகத் திரும்பினாள். அது கரடியேதான். இரண்டடி உயரத்தில், மினுமினுக்கும் கருப்பு உடலுடன் நான்கு கால்களில் நின்று கொண்டிருந்தது. முகத்தில் வெள்ளைத் தீற்று. அதன் நாசியிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது. கரடிக்கு நேர் எதிர்ப்புறத்தில் அவளது கார் நின்று கொண்டிருந்தது.
தயங்கித் தயங்கி எழுந்தாள். அம்மாவின் கையை இறுகப்பிடித்தாள். அம்மா உறைந்து போனதைப் போல அமர்ந்திருந்தாள். கையை இழுத்து அவளை எழச் செய்தாள்.
முணுமுணுப்பாகச் சொன்னாள். “அம்மா, நட.”
மெல்லத் திரும்பி பள்ளம் நோக்கி எதிர்த்திசையில் நடந்தார்கள். அம்மா விருப்பமில்லாது அவளோடு நடந்ததைப் போலிருந்தது. கரடி கொஞ்ச நேரம் அங்கேயே நின்று பார்த்து விட்டு வந்த திசையே சென்று விடும் என்று நம்பினாள் சம்யுக்தா. அதன் பின் அவர்கள் திரும்பிச் சென்று காரில் ஏறிக்கொள்ள முடியும். நடந்தபடியே மெல்லத் தலை திருப்பிப் பார்த்தபோது கரடியும் இவர்களை நோக்கி அசைந்து, அசைந்து வந்து கொண்டிருந்தது. சம்யுக்தாவுக்கு வயிற்றில் மெல்லிய நடுக்கம் உண்டாயிற்று. “அது நம்ம பக்கமா வருதும்மா,” என்றாள்.
அம்மாவின் முகத்தில் அவளால் எந்த உணர்ச்சியையும் படிக்க முடியவில்லை. அவளுடன் அப்போது பேச முடியும் என்று சம்யுக்தாவுக்குத் தோன்றவில்லை. அவளது நடையில் சிறு தள்ளாட்டம் புலப்பட்டது. கண்களில் அயர்ச்சி. மூச்சு மெல்லிய ‘விர்’ ஒலியுடன் வந்து கொண்டிருந்தது. விரைவில் அவளுக்கு எதையாவது உண்ணக் கொடுக்க வேண்டும். இந்தக் காட்டுக்குள் எதாவது பழமரங்கள் தென்படுமா? அத்தனைக் களைப்பிலும் அவள் முகத்தில் எப்போதிருக்கும் அந்தத் தெளிவு மாறவே இல்லை. எங்கே செல்லப்போகிறோம் என்று அறிந்தவளைப் போல உறுதியான அடிகள் வைத்து நடந்தபடியே இருந்தாள். அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கரடியின் கால்தடங்களின் உணர்வு பின் கழுத்தில் குறுகுறுவென்று ஓடியபடியே இருந்தது. அம்மாவுக்கும் அந்தக் குறுகுறுப்பு இருக்குமா என்று ஐயமாக இருந்தது சம்யுக்தாவுக்கு.
புல்வெளி முடிந்து காட்டுப்பாதை துவங்கியிருந்தது. நீண்டு வளர்ந்திருந்த செடிகொடிகளைக் கைகளால் விலக்கியபடி, விழுந்து கிடந்த மரக்கிளைகளைத் தாண்டியபடி நடந்தார்கள். கரடிக்கும் அவர்களுக்குமிடையேயான தொலைவு குறைந்ததை அறிந்து வேகத்தை அதிகரித்தாள். மீண்டும் திரும்பிய போது, கரடியும் வேகத்தை அதிகரித்திருந்தது தெரிந்தது. எந்த நேரமும் கரடி அவர்கள் மீது பாய்ந்து விடக்கூடும் என்று எண்ணியபோது சம்யுக்தாவுக்குக் கால்கள் உதற ஆரம்பித்தன. “இப்ப என்னம்மா பண்றது?”
அம்மா தலைதிருப்பி அவளைப் பார்த்து களைப்பாகப் புன்னகைத்தாள். “அப்படியே கொஞ்ச நேரம் நிப்போம். அது என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்,” என்றாள்.
“இல்லை, எனக்குப் பயமா இருக்கு.”
“சரி, அப்ப நடப்போம்.” நடந்தபடியே இருந்தார்கள். அம்மா முகத்தில் வியர்வை பூத்திருப்பதைக் கவனித்தாள். அவள் முகத்தில் அச்சம் இல்லை, ஆனால் பிடித்திருந்த கையில் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தாள். அவள் மருந்து உட்கொள்ளும் நேரம் தாண்டியிருந்தது. திடீரென்று அம்மா மயங்கி விழுந்து விடுவாளோ என்று பயந்தாள்.
அவள் பயந்தமாதிரியே அம்மாவின் நடை தளர்ந்து கொண்டே வந்தது. ஆனால் உறுதியோடு மகளோடு நடந்து கொண்டிருந்தாள்.
காட்டுப்பாதை ஒரு சிறிய தடாகத்தருகில் கொண்டு விட்டது. அருகில் மரங்கள் அற்ற வெற்று நிலம். தடாகத்தருகில் சிறுபாறை ஒன்றின் மீது ஆறடி உயரத்தில், கருத்த உடலும், விழுதுகள் போன்று தொங்கும் சடைமுடியுமாக ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். பழுப்பு நிறத்தில் முரட்டுத் துணியாலான சட்டையும் கால்சராயும், மலையேறும் பூட்ஸூகளும் அணிந்திருந்தார். அவருக்கு அருகில் ஓர் இரட்டைக் குழல் துப்பாக்கி பாறை மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. இருவரும் அவரை நோக்கி விரைந்து போனார்கள். அவர் இவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த கரடியைக் கண்டு விட்டார். ஓர் ஓரமாகத் தள்ளி நிற்குமாறு இவர்களிடம் சைகை செய்தார்.
“தயவு செய்து சுட்டு விடாதீர்கள்,” என்றாள் அம்மா.
அவர் துப்பாக்கியில் கைவைக்கவேயில்லை. மெல்ல எழுந்து தன் கால்சராயிலிருந்து ஓர் உலோகக் குப்பியை எடுத்து தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த கரடியின் மீது பீய்ச்சினார்.
மூன்றடி தூரத்திலிருந்தாலும் அவர் பீய்ச்சிய மருந்து கரடியில் முகத்தில் சரியாகத் தெளித்தது. உடனே கரடி அந்த இடத்திலேயே நின்று உடலைச் சிலிர்த்துக் கொண்டது. பெரும் ஒலியுடன் மூன்று முறை தும்மியது. மீண்டும் ஒரு முறை உடலைக் குலுக்கியபின் திரும்பி எதிர்த்திசையில் ஓடியது.
“ஹலோ, என் பெயர் கிரிகோரி ராபின்சன்,” என்றபடி இவர்களை நோக்கிக் கையை நீட்டினார். சம்யுக்தா அச்சத்துடன் மெல்லப் பின்வாங்கினாள். அம்மா பலவீனமாகப் புன்னகைத்தபடி கை நீட்டினாள். “சந்தான லட்சுமி. இது என் மகள் சம்யுக்தா,” என்றாள்.
“வழி தவறி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் எங்கிருந்து வருகிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் அழைத்துச் செல்கிறேன்,” என்றார்.
அம்மா தளர்ந்து பாறை மேல் கையூன்றி அமர்ந்தாள். “இல்லை. நாங்களே திரும்பிப் போய்க் கொள்கிறோம்,” என்றாள் சம்யுக்தா.
“உங்களிடம் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? மிகக் களைப்பாக இருக்கிறது,” என்றாள் அம்மா. சம்யுக்தா அம்மாவை முறைத்தாள்.
“என் வீடு இங்குதான் இருக்கிறது. வாருங்கள், நான் சமைத்த உணவை உங்களுக்கு அளிக்கிறேன்,” என்றார்.
அங்கிருந்து நூறடி நடந்தவுடனேயே மரச்செறிவின் நடுவில் அவர் வீடு இருந்தது. அது ஒரு டிரைலர் வீடு. ஒரு படுக்கையறை, ஒரு குளியலறை, ஒரு வரவேற்பறை என்று மிகக் குறுகலான இடமாக இருந்தது. அம்மா உள்ளே சென்றவுடன் உரிமையோடு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். சம்யுக்தா தயங்கியபடி சுவரோரம் நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்து உடனே கிளம்பி விட வேண்டும் என்று ஓர் எச்சரிக்கைக் குரல் தீனமாக அவளுக்குள் ஒலித்தபடியிருந்தது.
கிரிகோரி இருவருக்கும் அவர் சமைத்த இறைச்சி கலந்த சோற்றை தட்டுக்களில் பரிமாறி அளித்தார். சம்யுக்தா வேண்டாமென்று மறுத்து விட்டாள். அம்மா இறைச்சி உண்பதில்லை. அவள் மறுப்பதற்காகக் காத்திருந்தாள். அவளோ ஆர்வத்துடன் தட்டை வாங்கி, இறைச்சித் துண்டங்களை நகர்த்தி வைத்துவிட்டு சோற்றை ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்து விட்டாள்.
“கரடியைக் கண்டு பயந்து விட்டீர்களா?” என்றார் கிரிகோரி.
“அம்மா அப்படியே உறைந்து நின்று விட்டாள். நான்தான் சுதாரித்துக் கொண்டு அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றேன்,” என்றாள் சம்யுக்தா.
“சொல்லப்போனால் உங்கள் தாய் செய்ததுதான் சரி. காட்டில் கரடியைக் கண்டால் பதறாமல் சில நிமிடங்கள் அங்கேயே நின்றாலே போதும். கரடி தானாகவே விலகிப் போய்விட வாய்ப்பிருக்கிறது.”
“அப்படி விலகவில்லையென்றால்…”
கிரிகோரி சிரித்தார். “உண்மைதான். நீங்கள் அதனிடமிருந்து மெதுவாக விலகுவதும் ஒரு உத்திதான். ஆனால் பதற்றப்பட்டு ஓடினால் ஒருவேளை அது உங்கள் மீது பாய்ந்து விடக்கூடும்.”
“கிரிகோரி, உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள். இங்கே எப்படி வாழ்கிறீர்கள்? உங்கள் குடும்பம் எங்கே?” என்றாள் அம்மா.
“நான் இங்கு வந்து பத்து ஆண்டுகளாகிறது. என் மனைவியின் இறப்புக்குப் பிறகு,” என்றார் கிரிகோரி.
“வாழ்க்கை எப்படிச் செல்லுகிறது?”
“ம், எனக்கென்ன குறை? என் வீட்டின் பின்னால் உருளைக்கிழங்கும், முட்டைக்கோஸும் பயிரிடுகிறேன். இறைச்சி தேவையாயிருக்கும்போது காட்டுக்குள் சென்று மானையோ, பறவைகளையோ சுட்டு எடுத்து வருவேன். கண்ணை மூடினால் உறக்கம். கண்ணைத் திறந்தால் கானகம். என் மனதுக்கு நெருக்கமான உலகம். இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. எதுவும் என் கையில் இல்லை. எதையும் நான் செய்வதில்லை. அதனால் எந்தக் கவலையும் இல்லை,” என்றார் கிரிகோரி.
“நீர் ஒரு ஸ்திதப்ரஞன்,” என்றாள் அம்மா.
“அப்படியென்றால்?”
“புத்தியில் நிலைபெற்றவன். தத்துவம் அறிந்த யோகி நடந்தாலும், உண்டாலும், உறங்கினாலும், விழித்திருந்தாலும் தான் எதுவும் செய்வதில்லை, பொறிகள்தான் புலன்களில் போகின்றன என்றறிந்து வாழ்வைக் கடத்துவான் என்று கீதை சொல்கிறது.”
கிரிகோரி வாய்விட்டுச் சிரித்தார். “நான் யோகியா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது கேட்க நன்றாக இருக்கிறது.”
அம்மா உடனே வேதாந்த ஆசிரியையாக மாறி விளக்க ஆரம்பித்து விட்டாள். “கீதை என்பது ஒரு வேதாந்த நூல். மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் தன்னை அறிதலே என்று வேதாந்தம் சொல்கிறது. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தன்னை அறிந்தவனுக்கு கவலைகள் ஏதுமில்லை. அதற்கான பாதையைத்தான் கீதை காட்டுகிறது. செய்யும் செயல்களை பற்றற்றுச் செய்தல் கர்மயோகம் எனப்படுகிறது. கர்மயோகம் செய்தவனுக்கு மனத்தூய்மை வாய்க்கிறது. மனத்தூய்மை அடைந்தவன் தன்னை அறியும் தகுதி பெறுகிறான். தன்னை அறிந்தவனுக்கு அதற்கப்புறம் செய்வதற்கு வேறேதும் இல்லை. ஆனந்தமாக மீதமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான், உங்களைப்போல,” என்றாள்.
“இல்லையில்லை, உங்களைப் போல,” என்று அம்மாவை நோக்கிக் கைகாட்டிச் சிரித்தார் கிரிகோரி.
அம்மாவும் கை தட்டிச் சிரித்தாள். “ஞானியும் இப்படித்தான் காரணமில்லாமல் சிரித்துக் கொண்டே இருப்பான். அவனுக்கும் பைத்தியக்காரனுக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் வேறுபாடு புரியாது,” என்றாள் அம்மா.
அம்மா ஆர்வத்துடன் பொழிந்து கொண்டேயிருந்தாள். கிரிகோரி பரவசத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தார்.
சம்யுக்தா அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். தலைக்கு மேல் மெல்லிய மஞ்சள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த சாண்டலியரின் வெளிச்சத்தில் தேவதையைப் போல் இருந்தாள் அம்மா.
“வாருங்கள், இருட்டுவதற்குள் உங்களைக் கொண்டு போய் விட்டு விடுகிறேன்,” என்றார் கிரிகோரி.
கிரிகோரி தன்னுடைய ஜீப்பில் அவர்களை கார் நிற்குமிடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அம்மா அவரிடம் கைகூப்பி விடைபெற்று காருக்குள் ஏறிக்கொண்டாள். கிரிகோரி சம்யுக்தாவிடம் மலைப்பாதையின் வரைபடம் ஒன்றை அளித்தார். சம்யுக்தா கண்களில் நன்றியோடு அவரைப் பார்த்தாள்.
“உன் தாய் சொன்ன நிறைய விஷயங்கள் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. யுவர் மதர் இஸ் எ செயிண்ட்,” என்றார்.
அவர் சென்றதும் காருக்குள் ஏறி அம்மாவைப் பார்த்து புன்னகைத்தபடி சம்யுக்தா சொன்னாள். “அவர் வீட்டில வைஃபை கிடைச்சது. திரும்பவும் லீவு போட்டுட்டேன். நானும் உன்னோட வகுப்பில கலந்துக்கப் போறேன்.”
“பார்றா! அது இருக்கட்டும். நான் அமெரிக்க வாழ்க்கையைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டியே, இப்ப பார்த்தாச்சா?” என்று கேட்டாள் அம்மா.
முடிந்தது.
நன்றி: தினமணி தீபாவளி மலர் 2025
