ஜெயமோகன் ஐந்தாவது மருந்து
எய்ட்ஸூக்கு தமிழ் நாட்டில் சித்த மருத்துவத்தின் மூலம் தளவாய் என்பவன் மருந்து கண்டு பிடிக்கிறான்.சித்தமும், அலோபதியும் அடிப்படையில் வேறு எனினும் இப்போதைய சித்த மருத்துவம் அலோபதியின் கூறுகளை உள்ளிழுத்துக் கொண்டது. நமக்குக் கிடைக்கும் சித்த நூல்கள், ஏற்கனவே அழிந்த நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு உருவானவையே.சித்தத்தின் படி, மனித உடல் சம நிலையை இழப்பதே நோய். நோய்க்கு எதிராக உடலைத் தயாரிப்பதே மருத்துவம்.
எய்ட்ஸ் என்பது உருமாறி வரும் வைரஸால் ஏற்படுகிறது. எனவே சித்தத்தின் ஜீவம், அஜீவம் மற்றும் ரசாயன மருந்துகள் இதற்குப் பயன்படாது. 500 ஆண்டுகளுக்கு முன் தென்காசி ராஜ குடும்பம் ஒரு விநோதநோயால் இறக்கிறார்கள். நோயின் குறிகள் அனைத்தும் அது எய்ட்ஸ் என்று சுட்டுகின்றன. வைத்தியர் எழுதி வைத்த குறிப்புகள் தனது தாத்தாவின் அண்ணன் மூலம் தளவாய்க்கு ஓலைச் சுவடியாக வந்து சேருகிறது. மாம்பழச் சித்தர் ஊருக்குள் வந்து நோயாளிகளை ஆராய்ச்சி செய்கிறார். மூலாதார அக்னி வலுவிழப்பதுதான் நோய்க்குக் காரணம் என்று கண்டறிகிறார். ஆயிரம் ஆண்டுகள் முன் போகர் கருங்குரங்கு ரத்தம், சிறு நீர் கொண்டு மருந்து தயாரிக்கிறார். இது அந்த நோய்க்குத் தயாரிக்கப்பட்ட முதல் மருந்து, ஜீவ மருந்து. பின் மாம்பழச் சித்தர் பஞ்ச பாஷாணம் செய்து நோயைக் குணப்படுத்துகிறார்.
ஆஃபிரிக்க குரங்குகளில் இந்த வைரஸ் இருக்கிறது. ஆஃபிரிக்காவில்தான் மனிதன் முதலில் தோன்றினான். மனிதனுக்குள்ளும் இது உண்டு. ஆனால் அவனை மட்டும் ஏன் இந்த நோய் தாக்குகிறது? அவன் குரங்காக இல்லாமல் ஆன போது அவனை இந்த வைரஸ் தாக்கத்துவங்கியதா? ஜீவம், அஜீவம் மற்றும் ரசாயனம் போன்றவை முதல் மூன்று மருந்துகள். நான்காவது மருந்து நுண்கதிர்கள். முதல் மூன்று மருந்துகளிலும் நான்காவது மருந்தைச் செலுத்தி ஐந்தாவது மருந்தைக் கண்டுபிடிக்கிறான் தளவாய். பல வருடம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓமனக்குட்டியும் தாமஸூம் இம்மருந்தால் குணமடைகிறார்கள். இந்த மருந்தை வெளியிடச் சொல்லி நண்பர்கள் கோரும்போது தளவாய் மறுத்து விடுகிறான். அதற்கான காரணத்தையும் சொல்கிறான்.ஒரு தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும்தோறும், அந்த நோயை உருவாக்கும் வைரஸ் தன்னை உருமாற்றியபடியே இருக்கிறது. எனில் இப்போது மருந்து கண்டுபிடித்து அந்த வைரஸை அழித்தாலும் இன்னும் நூறு வருடங்களில் அது உருமாறி மனித குலத்தை வேறு வடிவில் தாக்கி அழிக்கும். அப்போது ஏற்படும் உயிர்ச்சேதம் இப்போதுள்ளதை விடப் பன்மடங்கு இருக்கும். எனவே எதிர்காலத்தில் வரப்போகும் மிகப்பெரிய அழிவொன்றைத் தவிர்க்க, தற்போது ஏற்படும் அழிவை ஏற்றுக்கொள்வதும், எய்ட்ஸோடு வாழப் பழகுவதுமே வழிகள் என்கிறான். மனித குலம் அழியக் காரணமாக இருக்கும் இம்மருந்தை வெளியிட மாட்டேன் என்று தளவாய் சொல்லி விடுகிறான்.