18 ஜூன், 2022

ஜெயகாந்தனின் சுயதரிசனம் வாசிப்பனுபவம்

நன்றி: ஹிந்து தமிழ், ஓவியர் ஜீவா

 

சிவராமனின் தந்தை கணபதி சாஸ்திரிகள் வீட்டை விட்டுச் சென்று விடுகிறார். சதா நேரமும் சிடுசிடுவென்று இருக்கும் அவன் மனைவி ராஜமும், செருப்புக்கடையில் வேலை பார்க்கும் அவன் தம்பியும், ஏன் அவனுமே கூட இது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. கணபதி சாஸ்திரிகள் புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டவர். கறுப்பாகவும், குள்ளமாகவும் உள்ளவர். பிராமணனுக்கு உரிய தோற்றத்தில் இருப்பவர். ஒன்றரை மாதம் கழித்து அவரிடம் இருந்து சிவராமனுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதோடு ஒரு கத்தை எழுதப்பட்ட நோட்டுத்தாள்களும். அதைத் தன் சுயதரிசனமாக எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.நேரமிருக்கும் போது படிக்கச் சொல்கிறார்.

தன் தந்தையின் பால்ய சினேகிதரான வெங்கிட்டுவையர் அவனிடம் சொல்கிறார். ஒரு நாள் நடுத்தெருவில் வைத்து அவன் தந்தையை அவரது குரு சுந்தர கனபாடிகள் அசிங்கமாகத் திட்டியதாகவும், அதற்கு இப்படிப் பேசுகிறீர்களே நீர் பிராமணரா என்று அவர் கேட்டதாகவும், அதற்கு குரு அவரிடம் காயத்ரி மந்திரத்துக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா, தெரியாமலேயே அதைச் சொல்லி, புரோகிதம் செய்து பிழைக்கிறாயே என்று சொல்லி, அர்த்தம் சொல்லவில்லையென்றால் நீ பூணூலைக் கழற்ற வேண்டும் என்று சினத்துடன் கூறுகிறார். திடீரென்று எல்லார் முன்னிலையிலும் தான் பிராமணன் இல்லையென்று கூறி, தன் பூணூலை அறுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதன் பின் தான் அவர் திரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

வீட்டுக்கு வந்து தந்தையின் எழுத்துக்களை வாசிக்கிறான் சிவராமன். அதில் அவர் தன்னுடைய அவதானிப்புகளைப் பட்டியலிடுகிறார். இருநூறு வருடங்களுக்கு முன் இருந்த எவரும் இப்போது இல்லை. இப்போதுள்ள எவரும் இன்னும் இருநூறு வருடம் கழித்து துளிக்கூட மிச்சமிருக்கப் போவதில்லை. இதில் எவர் உயர்ந்தவர், எவர் தாழந்தவர். எந்த வகையிலான வாழ்க்கை மேன்மை வாய்ந்தது? எது தாழ்ந்தது என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறார்.

 என் பிள்ளைகள் என்னைப் போல குடுமி வச்சுண்டு, உடம்பிலே சட்டையும், கால்லே செருப்பும் போட உரிமை இல்லாம – இந்தக் காலம் பார்த்துப் பரிகசிக்கிற ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமா வாழணும்னு நான் ஆசைப்படலே. அதனாலேதான் அவாளை இங்கிலீஷ் படிக்க வச்சேன். கிராப்பு வச்சுக்கச் சொன்னேன். இதுக்கு அர்த்தம் என்ன? நான் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டு என்னாலே இருக முடியலையோ அப்படி யெல்லாம் அவாளை ஆக்கித் திருப்தி பட்டுண்டேனா? ஆமாம்; ‘ஒதுங்கிப்போ ஒதுங்கிப்போ’ன்னு சொல்லிச் சொல்லி நானேதான் ஒதுங்கிப் போயிட்டேனே!… ஒரு ஜாதி தாழ்ந்தது எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்ததும். இது எப்போ தெரியறதுன்னா தாழ்த்தி ஒதுக்கப்பட்ட ஜாதியைப் போலவே உயர்ந்து ஒதுங்கிப்போன ஜாதியும் படற கஷ்டத்திலே எனக்குத் தெரியறது.

என்று எழுதுகிறார். 

ஒரு வக்கீல் வீட்டுக்குப் புரோகிதம் செய்யப்போகும் போது அவர் மகன் தட்சிணை குறைவாகக் கொடுக்கிறார். மந்திரமும் குறைந்திருந்ததே என்று சொல்கிறார். அர்த்தம் தெரியாமல் மந்திரம் சொல்லலாமா என்று கேட்கிறார்.

அறுபது வருடங்கள் பொய்யாக வாழ்ந்து விட்டதாக நினைக்கிறார். இப்போது தன் தோற்றத்திலும் மாறி, தன் மனசாட்சிக்கு துரோகம் செய்யாத நேர்மையான மனுஷனாக இப்போது இருப்பதாகச் சொல்கிறார்.

அவரது எழுத்துக்களைப் படிக்கப் படிக்க, அவரது மகன்களும், மருமகளும் அவற்றில் அவரை மட்டுமா பார்த்தார்கள் என்று கேட்டு முடிக்கிறார் ஜெயகாந்தன். 



மேலும் வாசிக்க