நேற்றிரவு (அல்லது இன்று
அதிகாலை) உறங்கச் செல்லும்போது மணி இரண்டரைக்கும் மேல். இந்திய – மேற்கிந்திய –
இலங்கை முத்தரப்பு ஒருநாள் போட்டிகளின் இறுதியாட்டம், இந்தியா, இலங்கைக்கு இடையே.
இலங்கை 202 ரன்களில் ஆட்டமிழ்ந்திருந்தாலும், அந்த இலக்கை அடைவது இந்தியாவுக்கு
அவ்வளவு எளிதாக இருக்காது என்று தோன்றியது. ஆடுகளம் ஸ்விங்க் பந்து வீச்சுக்குச்
சாதகமாக இருந்ததும், அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் பந்து நன்றாகச் சுழன்றதும் இந்த
ஆட்டம் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிற ஒன்றாக இருக்கப் போகிறதென்று
ஊகித்திருந்தேன். மிகுந்த சிரமப்பட்டே இந்தியா இவ்விலக்கை தொட இயலும் என்றும்
கணித்திருந்தேன். ஆட்டம் மிகுந்த ஸ்வாரஸ்யமாக இருக்கப் போகிறது என்ற
எதிர்பார்ப்பில் முழு ஆட்டத்தையும் பார்த்துவிடத் துணிந்தேன்.
பந்து வீச்சாளர்கள்
ஆதிக்கம் செலுத்தப்போகிற ஆட்டம் இது என்ற என் ஊகத்தை வழக்கம் போலவே பொய்யாக்கி
விட்டார் தோனி. நூற்றி நாற்பது ரன்களுக்கு மேல் விக்கெட்டுகள் சடசடவென சரிய,
புவனேஷ் குமார், ப்ரவீன் குமார் மற்றும் இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்டத்தின்
கடைசி ஓவரில் தன் அற்புதமான அடிகளால் இலக்கைத் தாண்டினார். நான் முப்பத்தி ஏழாவது
ஓவரிலிருந்தே இந்தியா தோற்று விடும் என்ற கணிப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.
கடைசி ஓவரில் கூட அவர் பதினைந்து ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தைத்
தவறவிட்ட அவர் இரண்டாவதில் ஒரு சிக்சர், மூன்றாவதில் ஒரு பவுண்டரி, நான்காவதில்
இன்னும் ஒரு சிக்சர் என்று அநாயாசமாக விளாசித் தள்ளி இலங்கையின் கனவைத்
தகர்த்தார். அதற்கு முந்தைய பத்து ஓவர்களின் சிங்கிள் கூட எடுப்பது சிரமமாக இருந்தது
என்பதை கவனத்தில் கொண்டால் தோனி கடைசி ஓவரில் செய்தது கனவிலும் நடக்க இயலாத ஒரு
விஷயம் என்பது புரியும். ஹெரத் பட் பட்டென்று ஒரே ஓவரில் ஜடேஜாவையும், அஸ்வினையும்
பெவிலியனுக்குத் திருப்பி விட்டார். அதற்குச் சற்று முன்புதான் இந்தியாவை வெற்றிப்
பாதைக்கு அற்புதமாகச் செலுத்திக் கொண்டிருந்த ராய்னாவும் அவுட்டாகியிருந்தார். ஏழு
விக்கெட்டுகள் இழந்த நிலையில் மலிங்காவின் நான்கு ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை
இந்தியாவுக்கு இருந்தது.
முன்னதாக ரோஹித் சர்மா ஒரு
நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தார். இந்த்த் தொடர் முழுவதுமே அவரது ஆட்டத்தை
மிகுந்த உவப்புடன் ரசித்து வந்தேன். அதுவும் இறுதியாட்டத்தில் அவரது ஆட்டம் ஒரு
தேர்ந்த கலைஞன் நிதானமாகத் தன் படைப்பை உருவாக்குவதை ஒத்திருந்தது. ஸ்விங்க
பந்துக்கு ஏற்றபடி தன் ஆட்டமுறையை அழகாக மாற்றிக் கொண்டு ஆடிய அவரது ஒவ்வொரு
ஷாட்களையும் நான் அனுபவித்துப் பார்த்தபடி இருந்தேன். சாம்பியன்ஸ் ட்ராஃபியிலும்,
இந்தத் தொடரிலும் அவரது ஆட்டம் அவருக்கு அணியில் நிரந்தர இட்த்தைப் பெற்றுத் தரும்
என்று நம்பலாம். நான் எதிர்பார்த்து ஒழுங்காக ஆடாமல் போன வீரர் தினேஷ் கார்த்திக்.
அவர் நன்றாக ஆட வேண்டுமென்று ரகசியமாக என்னுள் ஓர் ஆசை இருந்தது.
தோனி எல்லாவற்றையும்
சாதித்து விட்டார். வாங்க வேண்டிய எல்லாக் கோப்பைகளையும் வாங்கிக் குவித்து
விட்டார். ஆனாலும் அவர் மீது பல விமர்சனங்கள் உண்டு. நல்ல வீரர்கள் உள்ள அணியில்
நல்ல நேரத்தில் கேப்டனாக இருப்பது; தனக்குப் பிடித்தமான வீரர்களுக்கே அணியில் இடம்
தருவது; தேவையற்ற பிடிவாதத்துடன் அதிர்ச்சி தரும் முடிவுகளை எடுப்பது போன்றவை.
அந்த விமர்சனக் கூட்டத்தில் நானும் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. கங்குலிதான் சிறந்த
கேப்டன் என்று சொல்கிற கூட்ட்த்தில் இருந்தவன் நான். தோனியின் ஆட்டத்தையும், அவர்
அணியை உச்சிக்கு அழைத்துச் சென்ற விதத்தையும் நான் ரசித்திருந்தாலும் அவருக்கு நான்
பரம ரசிகனாக இதுவரை இருந்ததில்லை. நேற்றுகூட அடிபட்ட நிலையில் எதற்காக அணிக்குள்
வந்தார் என்ற சந்தேகக் கேள்வியோடே ஆட்ட்த்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
தோனியின் நேற்றைய ஆட்டத்தைப்
பார்த்தவர்களுக்குத் தெரியும். அதை ச் சொல்லி விளக்கி விட முடியாது.
வர்ணனையாளர்கள் கூட தோனி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த போது Unbelievable! என்றார்கள். அந்த ஒரு வார்த்தைதான் அவர் நேற்று ஆடிய ஆட்டத்துக்கு
பொருந்தும். நடக்க முடியாத ஒரு காரியத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தோனி.
நேற்றிலிருந்து அவரது தீவிர ரசிகனாகி விட்டேன் நான்.
இந்த ஆண்டில் நான் பார்த்த ஒரு
நாள் போட்டிகளிலேயே மிகச் சிறந்த போட்டி இது.