சிறுகதை
காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தபடி இருந்தது.
பெண்கள் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும்
நடந்தனர். டம்ளர் நிறைய சூடான காஃபியுடன் பொறுமையின்றி அமர்ந்திருந்தேன். ஓடியாடி
விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளில் ஒன்றின் பாதையில் காஃபியை வைத்து விடலாமா
என்று யோசித்தேன். தண்ணீர் போன்ற இந்தக் காஃபியைக் குடித்து முடிக்கிற வலி அகலும்.
விருந்தினர் வீட்டில் தரப்படுகிற காஃபியை முடிக்காமல் வைத்து விடக்கூடாது;
குறிப்பாக அந்த விருந்தினர் உங்கள் மாமனாராக இருக்கும்போது. அது மரியாதையில்லை.
விருந்தினர் தரும் எதையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவே மரபு வலியுறுத்துகிறது.
குப்பைத் தொட்டிக்குள் குப்பையை வீசுகிற மாதிரி உங்கள் திசையில் வருகிற
எல்லாவற்றையும் தொண்டைக்குள் வீசி விட வேண்டியதுதான்.
இந்த
ஒரு மணி நேரத்தில் நான்காவது முறையாக பாண்ட் பாக்கெட்டில் என் அலைபேசி அதிர்ந்தது.
ஒரே விழுங்கில் காஃபி குடிப்பதற்குண்டான சூடு உள்ளதென்பதை உறுதி செய்துகொண்டு
தொண்டையில் சரித்துக் கொண்டு அவசரமாக அலைபேசியை எடுத்தேன். என் முன்னாள் மேலாளர்
ராமகிருஷ்ணன் அழைத்துக் கொண்டிருந்தார்.
அலைபேசியின்
அதிர்வைக் கொன்றுவிட்டு, நான் இப்போது வேலையாக இருப்பதாகவும், இன்னும் இருபது
நிமிடங்களில் அவரைச் சந்திப்பதாகவும் குறுஞ்செய்தி அனுப்பினேன். அலைபேசியை உள்ளே
வைத்துவிட்டு காயத்ரி எங்கிருக்கிறாள் என்று தேடினேன். ஒரு குண்டுப் பெண்மணியுடன்
தீவிரமான உரையாடலில் ஈடுபட்டிருந்தாள். திடீரென்று உள்ளுணர்வால் தூண்டப்பட்டதைப்
போல என் பக்கம் திரும்பி அவளது முத்திரைப்
புன்னகையொன்றை வீசினாள். அவள் எனக்கு வேண்டும் என்பதைக் கண்களின் வாயிலாகத்
தெரிவித்தேன். செய்தி சென்று சேர்ந்திருக்க வேண்டும். குண்டுபெண்மணியுடனான
உரையாடலை உடனே முடித்துக் கொண்டு என் பக்கம் நொக்கி நடந்தாள். பட்டுபுடவையில், சில
ஆண்டுகளுக்கு முன் நான் காதலில் விழுந்த போதிருந்த அதே பள்ளிச் சிறுமியைப்
போலிருந்தாள்.
‘காஃபி
குடிச்சிட்டீங்களா, இல்லை நான் கொண்டு வரவா?’ என்றாள் இடுப்பில்
கைகளை வைத்து என் முன் நின்றபடி.
‘
இப்பதான் குடிச்சேன். காயூ, நான் மேனேஜர் ராமகிருஷ்ணனை இப்பவே பாக்கப் போகணும்’ என்றேன்.
‘மஹேஷ்,
இது கொஞ்சம் கூட நல்லால்ல. சடங்கு இன்னும் முடியல. விருந்தாளிங்க எல்லாம் இங்கதான்
இருக்காங்க. நீங்க இப்படி திடீர்னு வெளிய போனா மரியாதையா இருக்காது. உங்க கூட
யாராவது பேசணும்னு நினைச்சா என்ன பண்றது?’
‘
புரிஞ்சுக்கோ காயூ, அவர் இன்னிக்கி மட்டும்தான் ஊர்ல இருப்பாரு. ராத்திரி அவங்க
ஊருக்கு போறாரு. நான் அவரைப் பார்த்துப் பல வருஷமாச்சு. என்னோட வளர்ச்சிக்கு
முக்கியமான காரணம் அவர்னு உனக்குத் தெரியும். என்ன சொல்லி அவரை நான் தவிர்க்கறது?’
‘உண்மையச்
சொல்லுங்க. வீட்டில முக்கியமான ஃபங்க்ஷன் நடந்துட்டிருக்கு, விருந்தாளிங்கல்லாம்
இருக்காங்க; இப்ப வீட்டை விட்டு வந்தா அவங்களுக்கு மரியாதையா இருக்காதுன்னு
சொல்லுங்க. அவரும் ஒரு குடும்பஸ்தர்தானே. புரிஞ்சுக்குவார்.வருத்தப்பட மாட்டார்.’
‘ வருத்தம் இருந்தாலும் அவர்
காமிச்சுக்க மாட்டார். பாயிண்ட் என்னன்னா நான்தான் அவரைப் பாக்கணும்னு
நெனைக்கறேன். அவர் எனக்குச் செஞ்சதுக்கு நன்றிக்கடனாவாவது’
காயத்ரி என்னைக் கோபபார்வை
பார்த்தாள். உடனே அந்தப் பார்வை மாறி இவன் ஒரு திருத்தமுடியாத முட்டாள் என்று
சொல்வதைப் போலிருந்தது. ‘ சரி, போயிட்டு வாங்க.’ என்றாள் வேறு திசையில் பார்த்துக்
கொண்டு.’
‘வண்டி எடுத்துட்டுப்
போகட்டுமா? பஸ்ல போனா ரொம்ப நேரமாகும்.’
‘உங்களைத் திருத்த முடியாது.
பெரியவங்க பஸ் ஸ்டாண்ட் போகணும்னா கொண்டு போய் விடறதுக்கு வண்டி வேண்டாமா?
வண்டியெல்லாம் ஒண்ணும் கெடையாது. கெளம்புங்க’
அதுவே இறுதித் தீர்ப்பு என்பதை அறிந்தேன்.
வீட்டை விட்டு மெதுவாக நழுவி வெளியே வந்தேன். வாயிலில் சில முகங்கள் என்னைப்
பார்த்துச் சில முகங்கள் நட்பாகப் புன்முறுவல் புரிந்தன. அவர்கள் யாரென்று
எனக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. இருப்பினும் நானும் புன்னகை புரிந்து வைத்தேன்.
யாராவது முன் வந்து நான் வெளியே போவதைத் தடுத்திருந்தால் கூட ஆச்சரியப்பட்டிருக்க
மாட்டேன். அது போன்ற எதுவும் நிகழ்ந்து விட வாய்ப்பளித்து விடா வண்ணம் அங்கிருந்து
உடனே நடக்க ஆரம்பித்தேன்.
# # # #
பேருந்து பிடித்துச்
செல்லலாமா என்று தோன்றிய யோசனையை உடனே கைவிட்டேன். பேருந்து நிறுத்தத்தை அடைய
பத்து நிமிடங்களாக நடக்க வேண்டும்; பேருந்துக்காகக் காத்திருப்பது வேறு கணிசமான
நேரத்தை எடுத்துக் கொள்ளும்; பவானி பேருந்து நிலையத்திலிருந்து ராமகிருஷ்ணன்
தங்கியிருக்கும் இடத்துக்கு செல்லுதலும் அவ்வளவு எளிய விஷயம் அல்ல. வேகமாக
நடந்தால் முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்களுக்குள் அவரை அடைந்து விட முடியும்
என்று தீர்மானித்தேன்.
பவானிக்கும்,
கொமாரபாளையத்துக்கும் இடையில் காவேரி ஆறு ஓடியது. இந்த இடத்தில் அதற்குக்
குறிப்பாக பவானி ஆறு என்றே பெயர். மூன்று பெரிய பாலங்கள் வெவ்வேறு இடங்களில்
இரண்டு குறு நகரங்களையும் இணைத்தன. பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த மூன்றாவது
பாலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. இன்னும் முறைப்படி திறப்பு
விழா நடைபெறாததால், நான்கு சக்கர கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தில்
அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இரு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
கொமாரபாளையத்தின் ஜவுளி நெசவாலை மற்றும் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பவானிக்காரர்கள்
இந்தப் பாலத்தைப் போக வர உபயோகிப்பதன் மூலம், தங்கள் பயணச் செலவைக் குறைத்துக்
கொண்டார்கள். மேலும் ஈரோட்டில் இருந்து வரும் பேருந்துகள் கொமாரபாளையத்தை அடைவதை
விட வேகமாக பவானியை அடைந்தன. எனவே பெரும்பாலான கொமாரபாளையம் மக்கள் ஈரோட்டில்
இருந்து பவானி பேருந்து பிடித்து, பவானி வந்து புதுப்பாலம் வழியாக தங்கள்
ஊருக்குச் சென்று விடுவார்கள்.
மாலை
ஆறுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரிய ஒளி இன்னும் இருக்கும் போதே தெரு
விளக்குகளும் எரிய ஆரம்பித்து விட்டதால் பாலத்தைச் சுற்றிலும் ஒரு கிறக்கமான
சூழ்நிலை நிலவியது. நான் பாலத்தின் நடைபாதையில் நடந்தபடி, போகப்போக என் வேகத்தை
அதிகரித்தபடியிருந்தேன். மாலை நேரத்துக் குளிர் காற்று என் முகத்தைச் செல்லமாக
வருடியது. ஆற்றின் பரப்பில் பயணம் செய்தபடி இருப்பதால் காற்றுக்கு ஒரு விநோதமான
மிருதுத்தன்மை இருந்தது. தூய காற்றை ஆழமாகச் சுவாசிக்க விரும்பினேன். என்
நுரையீரல்களுக்குள் ஒரு டன் காற்றைச் செலுத்தினேன்; புத்துணர்ச்சியுடையவனாகவும்,
ஓய்வான மனநிலை கொண்டவனாகவும் ஆனேன். மெல்ல என் சுற்றுப்புறத்தை நோட்டம் விடலாமென்ற
எண்ணத்தில் வேகத்தைக் குறைத்தேன். ஆற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். ஆற்றுக்குள்
நீர் பார்க்கமுடிகிற அதிர்ஷ்டகரமான மாதங்களில் ஒன்று அது. நிறைய பாறைகளை நீர்
விழுங்கியிருந்தது. அவற்றின் சிகரங்கள் மட்டும் நீரின் பரப்பில் தெரிந்தன.
மறுகரையில் சில பெண்கள் பாறைகளில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள்; கொஞ்ச
தூரத்திலேயே சில ஆண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். என் பார்வையை விலக்கி
பாலத்தைக் கடக்க இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறதென்று கணிக்க முற்பட்டேன்.
இன்னும் சில நிமிடங்கள் எடுக்கும். மக்கள் பணி முடிந்து வீடு திரும்பிக்
கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த சந்தையிலிருந்து பெண்கள் தலையில் பெரிய கூடைகளைச்
சுமந்தபடி ஒரு தீவிர தாள லயத்தோடு நடந்து கொண்டிருந்தார்கள். தனியார் பள்ளிகளிலிருந்து
மாணவர்களும், மாணவிகளும் (அரசு பள்ளிகள் முன்னதாக முடிந்து விடும்) தங்கள்
மிதிவண்டிகளை உல்லாசமாக மிதித்துக் கொண்டிருந்தார்கள். பையன்கள் கிரிக்கெட்டையும்,
திரைப்படத்தையும் உரையாடினார்கள்; பெண்கள் படிப்பையும், திரைப்பட்த்தையும் பற்றி
உரையாடினார்கள். பையன்கள் கேட்கும் தொலைவிற்கு அப்பால சென்று விடும் போது, பெண்கள்
பையன்களைப் பற்றிப் பேசினார்கள்; பெண்கள் கேட்கும் தொலைவிற்குள் வரும் போது
பையன்கள் பெண்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்களிடத்தில் இளமையின் ததும்பலைக்
கண்டு என் உதடுகள் புன்முறுவல் பூத்தன. பாலம் முழுவதும் ஒரே இரைச்சலாக இருந்தது.
இரு சக்கர வாகனங்கள் தேவையே இல்லாமல் ஹாரன் ஒலி எழுப்பின; மக்கள் அவசியமின்றிப்
பேசிக் கொண்டும், கத்திக் கொண்டும், சபித்துக் கொண்டும், துப்பிக்
கொண்டுமிருந்தார்கள். தெருவோர உணவகங்கள் தமிழ்த் திரைப்படப் பாடல்களை சத்தமாக
ஒலிபரப்பி, தங்கள் தொழில் துவங்கி விட்டதை அறிவித்தன. பாலத்தின் மறுமுனையை அடைந்த
போது, இரண்டு காவலர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி அவற்றின் ஓட்டுனர்களிடம்
முறையான உரிமம் இருக்கிறதா என்று பரிசோதித்தபடியிருந்தனர். மாதக்கடைசியாகையால் இது
எதிர்பார்த்த ஒரு நிகழ்வுதான். ஒரு மாதத்திற்குக் குறைந்தது ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
பேருந்து
நிலையம் பாலத்தின் முடிவிலேயே இருந்தது. நிலையத்தை அடைந்த உடனேயே அங்கு ஈரோடு
செல்லும் பேருந்து ஒன்று நிற்பதைக் கண்டு மகிழ்ந்தேன். இப்போது நான் பேருந்தைப்
பிடித்தால், கூடுதுறைக்கு அருகிலிருக்கிற ராமகிருஷ்ணனின் வீட்டை விரைவில் அடைய
இயலும். ஓடிச்சென்று பேருந்தில் ஏறினேன். கூடுதுறையை இன்னும் பத்து நிமிடங்களுக்குள்
அடைந்து விடலாம். நான் உற்சாகமானேன்.
# # # #
கூடுதுறை
பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, நாங்கள் சந்தித்துக் கொள்வதாக முடிவு
செய்திருந்த தேநீர் கடையில் ராமகிருஷ்ணனைக் காணவில்லை. கடையின் உள்ளேயும் அவர்
இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. கடைக்கு வெளியே நின்றபடி அலைபேசியில் அவரை
அழைத்தேன்.
போக்குவரத்து
ஏற்படுத்திய இரைச்சல் காரணமாக அவரது குரலைப் புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது. ஒரு சாயப் பட்டறையில்
மாட்டிக் கொண்டதாகவும், இன்னும் இருபது நிமிடங்களில் என்னைச் சந்திப்பதாகவும்,
அதுவரை தேநீர் கடையிலேயே காத்திருக்கும்படியும் சொன்னார். சொன்னார். கிளம்புவதற்கு
முன்னமே அவரைத் தொடர்பு கொள்ளாததற்கு என்னயே சபித்துக் கொண்டேன்.
என் அதிர்ஷ்டத்தை நொந்தபடி கடையின் வெளியில் காத்துக்
கொண்டிருக்கையில் (கடையின் உள்ளே ஓர் இருக்கை கூடக் காலியாக இல்லை.) என்னிடத்தில்
ஒரு விருந்தினர் வந்தார். அந்த மனிதன் முதலில் தேநீர் கடையின் முதலாளியிடமும்,
உள்ளே இருந்தவர்களிடமும் தன் அதிர்ஷ்ட்த்தைப் பரிசோதித்திருக்க வேண்டும்; அவன்
நின்ற கோலமே, நான் அவனுக்கு என் பாக்கெட்டிலிருந்து ஏதேனும் எடுத்துத் தரவேண்டும்
என்று சொல்வதைப் போலிருந்தது. சில நிமிடங்கள் அங்கு அமைதியாக நின்றபடி என்னையே
உற்று நோக்கிக் கொண்டிருந்தான். என் உள்ளார்ந்த பண்புகளை எடை போடுவதைப்
போலிருந்தது அவன் பார்வை. அவனது இடது உள்ளங்கை என்னை நோக்கி நீட்டப்பட்டிருந்தது.
ஒரு பிச்சைக்காரனாகத் தோன்றினாலும், அவனது தோற்றம் எனக்குள் ஒரு
விரும்பத்தகாத தந்தியை மீட்டி விட்டிருந்த்து. தந்தியின் அதிர்வுகள் அவன் என்னை
விட்டுச் சென்றபின்னும் சில நிமிடங்கள் தங்கியிருந்தன. கிழிந்து, அழுக்குப் படிந்த
உடையை அணிந்திருந்தான். அவனது தலை தேனிக் கூட்டைப் போலிருந்தது. ஏதோ கருந்திரவம்
அவன் உடல் முழுவதும் பூசப்பட்டதைப் போலிருந்தது. வலது காலில் உறையின்றி ஒரு ஷூவை
அணிந்திருந்தான். ஷூவின் முன்புறம் ஒரு பெரிய ஓட்டை இருந்தது. எலும்பாக
இருந்தாலும் உறுதியான சட்டகம் கொண்டவனாக இருந்தான். அவன் என் முன் என்னிடம் ஒரு
ரூபாய் நாணயத்தை எதிர்பார்த்து நிற்பதாகத் தோன்றினாலும், அவனது பார்வை வேறு ஏதோ
கதை சொல்வதாகத் தோன்றியது. அவனது கண்கள் நெருப்புப் பந்துகளைப் போல் ஒளி வீசிக்
கொண்டிருந்தன; எந்நேரமும் அக்கண்கள் நெருப்பை உமிழ்ந்து விடுவன போலிருந்தன. அவனை
அளக்க, அளக்க நான் பதற்றமடைந்தேன். சக மனிதனின் மேலுள்ள கருணையினால் அல்ல, அவனை
அவ்விடத்திலிருந்து நீக்கி விட வேண்டுமென்ற குறையாத ஆவலினால் அவனுக்கு எதையாவது
கொடுத்து விடுவது என்று முடிவு செய்தேன். சட்டைப்பைக்குள் உலோகம் ஏதேனும்
தட்டுப்படுகிறதா என்று துழாவிய போது ஒன்று கிடைத்தது. ஆனால் வெளியில் எடுத்து ஓர்
ஐந்து ரூபாய் நாணயத்தைக் கண்டபோது மனம் தளர்ந்தேன். இலக்கற்றுத் தெருவில் திரிகிற
ஒரு பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாயைத் தானமளிக்கும் எண்ணம் ஏது எனக்கில்லை. அந்தப்
பணத்துக்கு ஒரு டீ குடிக்கலாம்; திரும்பி வீட்டுக்குப் பேருந்தில் செல்ல்லாம்.
ஐந்து ரூபாய் என்பது மிக்க மதிப்புடையது.
ஆனால் என் சூழலில் இருந்து இவனைத் துடைத்தெறிந்தாக வேண்டும்.
மன்னிக்கவியலாத குற்றம் செய்தவனைப் போல இவன் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது
என்னால் அமைதியாக நிற்கக்கூட முடியாத அளவுக்குக் கொடுமையாக இருக்கிறது. அரை மனதோடு
அவனது உள்ளங்கையில் நாணயத்தைப் போட்டேன். அவன் எனக்கு நன்றி சொல்லவில்லை; நான் அதை
எதிர்பார்க்கவுமில்லை. அதே துளைக்கும் பார்வையோடு அங்கேயே நின்றிருந்தான். அந்த
வெளிப்பாடு மாற வேண்டும் என்று நான் எதிர்பார்க்காமல் இருந்ததற்கு என்ன
காரணமென்றும் என்னால் விளக்க முடியவில்லை. எதனாலோ அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி
செய்யக்கூடிய நிலையிலேயே இருந்தேன். என்னை விட்டு விலகவே மாட்டானோ என்று
அஞ்சினேன். ஒருவேளை என்னை அவனுடன் அழைத்துச் செல்ல அவன் பிரியப்படலாம். எனக்கு
ரஜினிகாந்த் நடித்த ஒரு தமிழ்த் திரைப்படம் நினைவுக்கு வந்தது. நாயகனை ஒரு
பிச்சைக்காரன் ரகசிய வழிகளினூடாக இமாலயத்துக்கு அழைத்துச் செல்வான். அங்கு நாயகன்
ஞானிகளையும், ரிஷிகளையும் சந்திப்பான். அவனுக்குப் பல வரங்கள் அளிக்கப்படும். இதை
நினைக்கையில் எழுந்த புன்னகையை என்னால் அடக்க முடியவில்லை. என் புன்னகையைக்
கண்டதும் அவனது பார்வை தீவிரமடைந்தது. நானே அவனைக் கூவி விரட்டிவிடலாமா என்று
எழுந்த எண்ணத்தைக் கைவிட்டு, அவனுக்கு எதிர்த்திசையில் நோக்கினேன். கூடுதுறைக்
கோயில் கோபுரம் பார்வையில் பட்டது. கோபுரத்தின் ‘சிவ சிவ’ எழுத்துக்கள் பிரதானமாகத் தெரிந்தன. இன்னமும் அவன்
என்னைத்தான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த
இடத்தை விட்டு விலகி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
# # # #
‘என்னப்பா, எப்படி
இருக்குற?’ ராமகிருஷ்ணனின்
தவிர்க்கமுடியாத குரல் பின்னாலிருந்து எதிரொலித்தது. சட்டென்று திரும்பிப்
பார்த்தபோது ராமகிருஷ்ணன் என்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார். அவர் என்
அருகில் வந்ததும், பிச்சைக்காரன் என்னை விட்டு உடனே விலகினான். நான் என் அலைபேசியை
வெளியே எடுத்து அணைத்தேன். எங்கள் உரையாடலுக்குக் குறுக்கே யாரும் வருவதை நான்
விரும்பவில்லை.
‘சார், வணக்கம். நல்லா இருக்கீங்களா?’ ஒரு புன்னகையுடன் அவரை வரவேற்றேன்.
‘ம்ம். . . நல்லா இருக்கேன். நீதான் எங்கள
எல்லாம் மறந்துட்ட போல இருக்கு. எங்களையும் கொஞ்சம் நெனச்சுப் பாருப்பா. பழச
மறந்துறாத.’
நான் தயக்கமாய்ப் புன்னகைத்தேன்.
‘அப்படியில்ல சார். எங்க மாமனார் வீட்டில ஒரு விஷேசம். கொஞ்சம் பிஸியா
இருந்துட்டேன்.’
‘எதாவது
சாப்பிட்டியா? வா, டீ சாப்பிடலாம்.’ என்றார். என் இடது
தோளில் கை போட்டபடி, டீக்கடையின் உள்ளே இழுத்துச் சென்றார். டீ மாஸ்டரிடம் உரத்த
குரலில் தன் தேவையச் சொன்னார்; இரண்டு கோப்பை பால் கலந்த தேநீர், அதில் ஒன்று சர்க்கரை குறைவாக, மற்றும்
இரண்டு பருப்பு வடைகள். உள்ளே இருந்த கொஞ்ச இட்த்தில் நெருக்கி நின்றபடி
தேநீருக்காகக் காத்திருந்தோம்.
தேநீரின் மேற்பரப்பில்
குறைந்தது கால் இன்ச் அளவுக்கு நுரை நின்றது. ஊதி ஊதித்தான் தேநீரைக் கண்டுபிடிக்க
வேண்டியிருந்தது. ராமகிருஷ்ணனும் அதையேதான் செய்து கொண்டிருந்தார். தமிழ்நாட்டில்
பெரும்பாலானோர் அதைத்தான் செய்ய வேண்டும். நுரையில்லாத தேநீர் வேண்டுமென்றால்
முன்னமே சொல்லியிருக்க வேண்டும். சில புத்திசாலிகள் அப்படிச் செய்வதுண்டு. வடை
காலையில் சுட்டதாக இருக்க வேண்டும். சில்லென்றும், தோல் போல முரடாகவும் இருந்தது.
தேநீர் கடையில் இடம்
இல்லாததாலும், அறையில் நண்பர் ஒருவர் இருப்பார் என்பதாலும், கூடுதுறை கோயிலுக்குள்
சென்று விட்டால் உரையாடலுக்கு வசதியாக இருக்கும் என்று ராமகிருஷ்ணன் கருதினார்.
எட்டு மணி கடைசிப் பூஜைக்குப் பிறகு கோயிலை மூடி விடுவார்கள். இருந்தாலும் கோயில்
வராந்தாவில் உட்கார்ந்து உரையாட முடியும் என்றார்.
கூடுதுறைக் கோயிலுக்குள் சென்ற
உடனேயே ஞாபகங்கள் அலையலையாக என்னை வந்தடைந்தன. இதே கோயிலில்தான் காயத்ரியிடம் என்
காதலைச் சொல்லி, மதுரை மீனாட்சி அம்மனால் மட்டுமே ஈடு செய்ய முடிகிற ஒரு
புன்னகையைப் பதிலாகப் பெற்றேன். சுமார் ஒண்ணரை ஆண்டுகளுக்கு இந்தக் கோயில்தான்
நாங்கள் வருகை புரியும் இடமாக இருந்தது. என் வருகைக்குக் காரணம் அவளைச் சந்திப்பதும்,
அவளோடு மகிழ்வாக உரையாடுவதுமேயாகும். அவளுக்கோ அழிவின் இறைவன் சிவனின் சன்னதியே
முதல் விருப்பம். கோயிலுக்குள் ஸ்தாபிக்கப்பட்டிருந்த எண்ணற்ற லிங்கங்களுக்குள்,
வில்வ மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய லிங்கமே அவளது முழு கவனத்துக்கும்,
திருநீறும், வில்வ இலைகளின் அர்ச்சனையுடனும் கூடிய கால்மணி நேர அமைதியான
வழிபாட்டிற்கும் உரித்தானதாக இருந்தது; அதற்கும் முன் பிரதான தெய்வமான
சங்கமேஸ்வரரை தரிசிப்பது கட்டாயம். இந்தத் தருணங்களிலெல்லாம் நான் அவளைப் பின்
தொடர்ந்தபடியே, அவளது விருப்பமான சடங்குகளுக்குப் பின் என்னுடன் நிகழ்த்தப் போகிற
இனிமையான உரையாடல்களுக்காகக் காத்திருப்பேன்.
# # # #
அன்று மாலையும் ராமகிருஷ்ணன் பேசத் துவங்குவதற்காக குறுகுறுப்புடன்
காத்திருந்தேன்; சரியாகச் சொல்வதானால் அவர் என்னை விட்டு எப்போது விலகுவார் என்று
காத்திருந்தேன். என்னவோ எனக்கு இந்தச் சந்திப்பு குறித்து ஒரு விருப்பற்ற உணர்வு
ஏற்பட்டது. மேலும் என்னால் அந்தப் பிச்சைக்காரனை மனதிலிருந்து விலக்க முடியவில்லை.
கோயில் கடையிலிருந்து பிரசாதம் வாங்கி வருவதற்காக ராமகிருஷ்ணன்
சென்றிருந்தார். திரும்பி வந்தபோது அவர் முகம் பிரகாசமாக இருந்தது. ‘ இங்க விக்கற
புளிசாதம்தான் ஊர்லயே பெஸ்டு’ என்றபடி என்னருகில்
அமர்ந்து ஒரு புளிசாதப் பொட்டலத்தை என்னிடத்தில் நீட்டினார்.
புளிசாதப்
பொட்டலத்தைத் திறந்தபடியே அவர் முகத்தில் நிலவிய குழந்தைமையைக் கண்டு வியந்தேன். எனக்க்குள்
குற்றவுணர்வின் இழை ஒன்று நெளிவதை உணர்ந்தேன்.
‘ சார், அந்த
டினோபால் மேட்டரை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா?’ என்றேன் தயக்கத்தோடு.
‘ஓ, யெஸ்.
கிட்டத்தட்ட லைஃபையே மாத்தின அந்த விஷயத்தை எப்படி மறக்க முடியும்?’
‘ ரொம்ப சாரி சார்.’ என்றேன் குற்றவுணர்வு பொங்கியபடி இருந்தது. ‘ எல்லாம் என்
தப்புதான்.’
‘ சே, சே.
அப்படியெல்லாம் சொல்லாத. உன்னால முடிஞ்சத நீ செஞ்ச. அந்த லாட்ல தப்பா டினோபாலைச்
சேர்த்தவுடனேயே நீ என்னக் கூப்பிட்டுச் சொல்லிட்ட. நீ பண்ண தப்ப மறைக்கவோ,
இன்னொருத்தர் மேல சுமத்தவோ நீ நெனக்கல. அது ரொம்ப உயர்ந்த குணம்பா. நீ பண்ண ஒரே
தப்பு என்னோட இன்ஸ்ட்ரக்ஷனை மறந்ததுதான். அது வொயிட் லாட் இல்ல, அதுல டினொபால்
சேர்க்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லிருப்பேன். சரி, உனக்கு அப்ப அனுபவம் பத்தல.
ஒரு வாரம் முன்னாடிதான் லேப்ல இருந்து ப்ளீச்சிங்க் டிபார்ட்மெண்டுக்கு
மாத்திருந்தாங்க. கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துருக்கலாம். சரி அத விடு. எல்லாம்
நடந்து முடிஞ்ச கதை.’ என்றார். அவரது
கவனம் பேச்சை விட புளிசாதத்தின் மேல்தான் இருந்தது மாதிரி பட்டது.
# # #
நான் என்னை முழுமையாக
வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினேன், அது முடியாது என்று நன்கு அறிந்திருந்தும்
கூட. ‘சார், அன்னிக்கு நைட் ஷிஃப்ட். வொர்க்கர்கிட்ட கெமிக்கல் இண்டென்ட் கொடுத்தவுடனேயே
நான் தூங்கிட்டேன். மறதியா இண்டென்ட்ல இரண்டு கிலோ டினோபாலை எழுதிட்டேன்.
வொர்க்கரும் நான் எழுதிக் கொடுத்ததையே செஞ்சுட்டான். நான் பாட்டுக்கு சுகமா
தூங்கிட்டிருந்தேன். நான் மட்டும் தூங்காம முழிச்சிகிட்டு இருந்திருந்தா, அந்த
அசம்பாவிதத்தை தடுத்திருக்க முடியும். பர்கண்டி கலர் போட வைச்சிருந்த லாட்டுக்கு
வைட்டனிங்க் ஏஜன்டை சேர்த்து அதை மேலும் டை பண்ண முடியாதபடி பண்ணிட்டேன்.
பத்தாயிரம் மீட்டர் துணி சார். பையருக்கும், கம்பெனிக்கும் பெரிய நஷ்டத்தை
ஏற்படுத்திட்டேன். ஆனா குத்தத்தை நீங்க உங்கமேல ஏத்துகிட்டீங்க. என்னை வார்ன்
பண்ணதோட விட்டுட்டாங்க. ஆனா நிறைய பட்டது நீங்கதான். உங்க வேலை போச்சு;
பிராவிடண்ட் ஃபண்ட் இல்லன்னுட்டாங்க. நீங்க சொன்ன மாதிரி அந்த சம்பவம் உங்க
வாழ்க்கையையே மாத்திருச்சு. எல்லாம் என்னால. உங்களையும், கம்பெனியையும் பத்தி
நினைக்கும் போது எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு. இதுக்கு முன்னாடி நீங்க என்ன
பார்க்கணும்னு விரும்பிய போதெல்லாம் உங்கள நான் அவாய்ட் பண்ணினதுக்குக் காரணம்
இதுதான்.’
‘மஹேஷ். நீ அப்ப
ரெசிக்னேஷன் கொடுத்துருந்த. நீ குத்தத்த ஒப்புத்துக்கிட்டிருந்தீன்னா, எம்.டி உன்ன
சும்மா விட்டுருக்க மாட்டார். உனக்கு அந்த மாச சம்பளமும் கெடைச்சிருக்காது. அந்த
வருஷ போனசும் கெடைச்சிருக்காது. பொங்கல் நெருங்கிட்டிருந்தது, நினைவிருக்கா? அந்த
நேரத்துல் உன் குடும்பம் இருந்த நெலைமைக்கு, போனஸ் பணம் வரலைன்னா நீ திண்டாடிப்
போயிருப்ப. நீ புதுசா சேர இருந்த கம்பெனி நம்ம எம்.டிக்கு ரொம்ப பழக்கமானது. நீ
வாழ்க்கையில மேல வர்றதுக்கான எல்லா வாய்ப்புகளையும் அவர் பாழாக்கிருப்பார்.’
‘ஆனா, இதுல கடுமையா
பாதிக்கப்பட்டது நீங்கதான்.’
‘அப்படியா நினைக்கற?
சே, சே. சொல்லப்போனா அது எனக்கு ப்லெஸ்ஸிங்க் இன் டிஸ்கைஸ். இந்த கெரகம் புடிச்ச
வேலையை விடணும்னு நானும் ரொமப நாளா முயற்சி பண்ணிட்டிருந்தேன். ஆனா அதுக்கு
தைரியம் இல்லாம இருந்தது. அது இயற்கையாவே நடந்தப்ப, ,முதல்ல அதிர்ச்சியா
இருந்தாலும் அப்புறம் விடுதலையா இருந்தது. என் வாழ்க்கையை நிதானமா திரும்பிப்
பார்க்கறதுக்கான ஒரு வாய்ப்பு. வாழ்க்கையில சில முக்கியமான முடிவுகளை எடுக்கறது
அந்த நிலைமையில எளிதா இருந்தது. ஒரு வகையில இந்த மாதிரி நடந்தது எனக்கு
மகிழ்ச்சிதான்.’
‘நீங்க இப்ப
உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கீங்களா சார்.’
‘அப்படிச் சொல்லலாம்.
வாழ்க்கையில எந்தத் தருணத்திலயும் ஒருத்தர் தன் வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியா
இருக்கறான்னு சொல்லிட முடியாது. ஆனா நிறைய பாரங்கள் என்னை விட்டு நீங்கிட்டதுன்னு
மட்டும் சொல்ல முடியும். என் பாக்கெட் காலியா இருக்கு; என் பாதை தெளிவா இருக்கு;
அல்லக்கைகள் யாரும் இல்லை; எஜமானர்களும் யாரும் இல்லை’ என்றார் சத்தமாகச் சிரித்தபடி.
# # #
‘நான் ஒரு நிமிடம்
அவரையே ஆழ்ந்து நோக்கியபடி இருந்தேன். அவர் என்னிடம் அப்போது சொன்னவற்றைப் பற்றிச்
சிந்தித்தபடியிருந்தேன். அவர் குரல் நாடோடியைப் போல் ஒலித்தாலும், அதிலிருந்த
மெல்லிய நடுக்கம் அவரது பணி வாழ்க்கையின் மாலைப் பொழுதின் எதிர்பாராது நிகழ்ந்து
விட்ட திருப்பங்களால் அவர் பட்டிருந்த காயங்களைப் பறை சாற்றுவதாக இருந்தது.
அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்த கொழுத்த சம்பளத்தோடு மட்டுமின்றி, நல்ல தரத்தோடு
குறித்த நேரத்தில் துணியை உற்பத்தி செய்து தருவதற்காக வாடிக்கையாளர்களிடம்
பெற்றுக் கொண்டிருந்த கமிஷனையும் நிர்வாக இயக்குனரிடம் நிகழ்த்திய சில நிமிட
உரையாடலிலேயே இழந்து விட்டார். இப்போது தன் அவலத்தை நியாயப்படுத்திக்
கொண்டிருப்பதாகத்தான் பட்டது. வாழ்க்கையில் அவருக்கென்று தேர்வுகள் இல்லையென்பது
எனக்குத் தெரியும். அரிசி மண்டியில் மொத்த வியாபாரம் செய்யும் விற்பனையாளர்
ஒருவரிடம் வாங்கிய 86 ஆம் வருடத்திய பஜாஜ் ஸ்கூட்டரைத்தான் இன்னும் ஓட்டிக்
கொண்டிருந்தார். அவர் அணிகிற ஆடைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கியவை.
ஒரு எளிய உணவில் அவரால் திருப்தி அடைந்து விட முடியும். ஆனால் அவர்
குடும்பத்துக்குச் செய்கிற எல்லாவற்றையும் குறை செய்கிற ஒரு கல்வியறிவற்ற
மனைவியும், அவர் பணத்தை அழகு சாதனங்களில் ஊதாரித்தனமாகச் செலவழிக்கிற இரு
பதின்பருவ மகள்களும் இருந்தனர். ஆடை பதனிடும் தொழிற்சாலையில் உள்ள என் நண்பர்கள்
மூலமாக அவர் கையில் ஒன்றும் அவ்வளவு பெரிய இருப்பு இல்லை என்றும் தெரிந்து
கொண்டேன். சிறிய ஆலைகளிலிருந்து சில ஆர்டர்களை எடுத்திருந்தார். அவற்றைப் பல்வேறு
பதனிடும் நிலைகளினூடாகத் தொடர்வதன் மூலம் வரும் வருமானம் அவரது அன்றாடச் சொந்தச்
செலவுகளுக்கே போதாது. இதில் குடும்பச் செலவுகளுக்கு எங்கே காணும்?
நான் சிந்தனையில்
ஆழ்ந்திருப்பதைப் பார்த்து, ‘ எனக்குப் பொருளாதார ரீதியா கொஞ்சம் சிரமம்தான். நான்
உன்னைத் தொடர்பு கொள்ளனும்னு நினைச்சேன்; உனக்கு மெயில் அனுப்பினேன்; உன்
நம்பருக்குப் ப்ல தடவை கூப்பிட்டுப் பார்த்தேன். நீ அசையல. உன் காரீயர்ல நீ கவனம்
செலுத்திட்டு இருந்திருப்பேன்னு நினைக்கிறேன்.’
நான் வேலை
மும்முரத்தில்தான் இருந்தேன். ஒரு தரக்கட்டுப்பாட்டு அலுவனாக இருந்ததில் இருந்து
பங்களூருவில் உள்ள புகழ் பெற்ற ஒரு கல்வி நிலையத்தின் விரிவுரையாளனாக என் தொழிலை
மாற்றிக் கொண்டேன். அந்த வேலை போதுமானது என்று சொல்வதற்கும் மேலான பணம் கொடுத்தது.
ஐந்து வருடத்தில் நான் முற்றிலும் மாறிய மனிதனாகி விட்டேன். என் சொந்த ஊரில் வீடு
கட்டிவிட்டேன். என்னிடம் செவர்லே காரும், வங்கியின் நிரந்தர சேமிப்புத்
திட்டத்தில் கொழுத்த பணமும் இருந்தன. ராமகிருஷ்ணன் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றது
என்னிடம் பொருளாதார உதவி எதிர்பார்த்துதான் என்று எனக்குத் தெரியும்; அந்தக்
காரணம் பற்றியே நான் அவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க முயற்சித்தேன். துணி
ஆலையிலிருந்து ஒரு நண்பர் என்னைத் தொடர்பு கொண்டு, ராமகிருஷ்ணன் தனியாக ஒரு
சந்தைப்படுத்தும் நிறுவனம் துவங்க எண்ணம் கொண்டுள்ளதாகவும், அதற்கென தேவைப்படும்
பெரிய தொகையை என்னிடம் கேட்க வாய்ப்புண்டு என்றும் தகவல் கொடுத்தார். வீடு கட்டும்
சுமை மட்டும் இல்லாதிருந்திருந்தால் நான் அவருக்கு உதவியிருக்க முடியும். ஆனால்
நம் நிலையை நாம் எப்போதுமே நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது, குறிப்பாக ராமகிருஷ்ணனிடம்.
‘உங்க கை கொஞ்சம்
நடுங்கற மாதிரி இருக்கு!’ என்றேன், அவர் உடல்
முழுக்க அவஸ்தையான பலவீனத்தில் இருப்பதை உணர்ந்தபடி.
‘ஓ, யெஸ்.’ என்றார் தன் உள்ளங்கைகளைப் பார்த்தபடி. ‘ என் கனவுக்
கடலில் குதிக்கறதுக்கான நேரம் வந்துடுச்சு.
‘எனக்குப் புரியல’
‘இப்பல்லாம் நான்
அடைக்கலம் தேடிக்கறது மதுவிடம்தான். அது எனக்கு நல்லா உதவி பண்ணுது. இந்த வீணாப்
போன உலகத்தை மறக்கடிச்சு இன்னொரு பரிமாணத்துக்கு என்னை அழைச்சுட்டுப் போயிடுது. நீ
குடிப்பியா மஹேஷ்?’
‘ எப்பயாவது.
யாருக்காவது ஃபேர்வெல் பார்ட்டி வந்ததுன்னா ஒண்ணோ, ரெண்டோ பெக் அடிப்பேன்.’
‘நான் குடிக்க
ஆரம்பிச்சி நாலு வருஷமாச்சு மஹேஷ். ஒண்ணு தெரியுமா? குடிக்கறதுல நான் ரொம்ப
ஒழுக்கமானவன். ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர். அவ்வளவுதான்.’
நான் குலுங்கி
விட்டேன். ராமகிருஷ்ணன் அவரது சுத்தமான நடத்தைக்குப் பெயர் போனவர். அவர் எந்த
வேண்டாத பழக்கங்களும் இருந்ததில்லை. வெற்றிலை, பாக்கு போடுதல் கூட. மிகவும்
மரியாதையானவர் என்று எல்லோராலும் மதிக்கப்பட்டவர் அவர்.
‘இத்தனை வருஷமா என்ன
பண்ணிட்டிருந்தீங்க சார்.’ என்றேன்.
‘முதல்ல என் ஆஃபிஸ்
திறக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். இன்னும் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கேன்.
இப்ப அதுல வித்தியாசம் என்னன்னா நான் என் கஷ்டங்களைக் கண்டுக்கறதில்லை. ஒரு ஏழு
லட்ச ரூபய் இந்தத் தொழில்ல தொலைச்சிருப்பேன். இத்தன வருஷத்தில சம்பாதிச்சத கணக்கு
பண்ணினா பன்னிரண்டு லட்ச ரூபாய் வரும். அத விடு! இடம் பார்த்து அடிச்சேன்னா இந்த
வருஷம் பத்து லட்சத்துக்குக் குறையாம பார்த்துடுவேன். ஒரு ஆஃப்ரிக்கன் பையரோடு
தொடர்பு வச்சிட்டுருக்கேன். பேரம் ஆரம்பமாயிடுச்சு. ஒரு கண்டெய்னர் பிரிண்டிங்க்
ஆர்டர் தரேன்னு சொல்லியிருக்கான். ரெண்டு பர்செண்ட் கமிஷன் கிடைக்கலாம். எனக்கு
நம்பிக்கையிருக்கு.’
அவரது நம்பிக்கை
முரட்டுத்தனமானதென்று நான் அறிந்திருந்தேன். ஆனால் இம்முறை அவரது நிறைவேற்ற
முடியாதது மட்டுமல்ல, கற்பனையானது என்பதையும் அறிந்தே இருந்தேன். தென்
ஆஃப்ரிக்காவின் கண்டெய்னர் ஆர்டர்கள் சீனாவுக்குச் சென்று விட்டன என்பது எனக்கு
உறுதியாகத் தெரியும். சீனத்தொழிலாளர்களின் குறைந்த ஊதியம் காரணமாக சீனர்கள் அந்த
ஆர்டர்களைக் குறைந்த மதிப்புக்கு எடுக்க முடிந்தது. இந்தியப் பதனீட்டாளர்களுடன்
இந்தப் பரிமாற்றம் எப்போதும் பிரச்சனையாகவே இருந்து வந்திருக்கிறது. உச்சபட்ச
தரமும் நேரத்துக்கு ஆர்டரை முடித்துக் கொடுத்தலும் ஒரு வாடிக்கையாளரை திருப்திப்
படுத்த இன்றியமையாதவை. இந்தப் பரப்புகளில் இந்தியர்கள் சொதப்புவது வாடிக்கையாளர்
மத்தியில் பிரசித்தம். குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கமர்த்துதல்,
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தர நிர்ணயங்களை நிறைவேற்றத் தவறுதல், மத்திய
சுங்க இலாகாவை ஏமாற்ற முயற்சித்தல் ஆகியன வாடிக்கையாளரை சீற்றம் கொள்ளச் செய்யும்
இதர காரணிகள். இவ்வெல்லாக் காரணிகளும் நீண்ட காலமாகக் குவிந்து இந்திய
மண்ணிலிருந்து கண்டெய்னர் பிரிண்டிங்க் ஆர்டர்களை நிரந்தரமாக அழித்து விட்டன.
‘நீ அமைதியாக
இருக்கறதப் பார்த்தா என்னைப் பார்த்துப் பரிதாபப்படற மாதிரி இருக்கு.’ என்றார் ராமகிருஷ்ணன், என்னைப் பார்க்காமலேயே. ‘ அதுக்கு
அவசியமில்லை. . .’ திடீரென்று அவரது
பேச்சு நின்றது. லட்சுமி நரசிம்மன் பிரகாரத்துக்கு எதிரில் இருந்த சாப்பாட்டு
மண்டபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதைப்பார்க்கிறார் என்று நானும்
திரும்பிப் பார்த்தேன். கருப்பு வேட்டி அணிந்த சபரிமலை பக்தர்கள் குழு ஒன்று
எங்களைக் கடந்து போயிற்று. சரணம் ஐயப்பா என்ற கோஷம் எழுந்து காதைப் பிளந்தது. அந்த
நாளின் இறுதிப் பூஜை துவங்குவதன் காரணமாக
காட்சிகள் பரபரப்பாக இருந்தன. எனக்குக் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டதெனத்
தோன்றியது. அலைபேசியை வெளியில் எடுத்து உயிர் கொடுத்தேன் ராமகிருஷ்ணனைத்
திரும்பிப் பார்த்தேன். அவர் கூட்டத்தின் பரபரப்பைப் பார்த்துக்
கொண்டிருக்கவில்லை. சாப்பாட்டுக் கூடத்தின் ஓரத்தில் இருந்த குடிநீர்க்குழாயின்
மீதுதான் அவரது பார்வை விழுந்திருந்தது. அங்கே நின்றிருந்தது என்
சித்திரவதைக்காரன். குழாயிலிருந்து தண்ணீர் குடித்தபடி, சுற்றி நிகழ்வனவற்றோடு தொடர்பற்று
நின்றிருந்தான். இதற்கு முன்பு உணர்ந்த அதே சங்கடத்தை மீண்டும் உணர்ந்தேன்.
என் அலைபேசி
அதிர்ந்தது. காயத்ரி; அலட்சியம் செய்தேன். இன்னொரு பதினைந்து நிமிடங்கள் அவள்
காத்திருப்பதில் தவறில்லை.
‘அந்தப்
பிச்சைக்காரனைப் பர்ர்த்தியா?’ என்றார் ராமகிருஷ்ணன்.
நான் ஆமென்று பதிலிறுத்தேன். அவன் ஆந்திராவிலிருந்து வந்திருப்பதாக ராமகிருஷ்ணன்
சொன்னார். மூன்று வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறான். அவனது மாநிலத்தில்
நகைத்தொழில் செய்து வந்திருக்கிறான். சந்தேகமின்றி ஒரு கோடீஸ்வரன்தான் அவன். ‘தொழில்ல
கொஞ்சம் அகலக்கால் வைச்சுட்டான். வர்த்தகச் சிக்கல்களினால எல்லாச் சொத்தையும்
இழந்தான்; அவன் பொண்டாட்டி தற்கொலை பண்ணிக்கிட்டா; அவனுக்குப் பித்து பிடிச்சுட்டுது.
இங்க வந்து சேர்ந்த நாள்ல இருந்து தான் இழந்த சொத்தை அடுத்தவங்க பாக்கெட்டில
தேடிட்டு இருக்கான்.’ ராமகிருஷ்ணன்
சிரித்தார்.
கோயில் வாயிற்காவலன் ஒரு
குச்சியை வைத்துக் கொண்டு பிச்சைக்காரனை வெளியே தள்ள முயன்று கொண்டிருந்தான். அது அவ்வளவு
சுலபமான காரியமாக இருக்கவில்லை. அவர் பிச்சைக்காரனை மறந்து விட்ட மாதிரித் தோன்றியது.
அவரது திட்டங்கள் குறித்து விறுவிறுப்பாகப் பேசிக்கொண்டு போனார். ஐக்கிய அமெரிக்க
நாடுகளில் பணிபுரியும் ஒரு மென்பொருள் பொறியியலாளருக்கு அவரது முதல் மகளைத்
திருமணம் செய்து தருவாராம். அடுத்த ஆண்டு இந்நேரம் அவரது சொந்த ஊரான திருச்சியில்
சொந்த வீடு கட்டி முடிக்கப்பட்டிருக்கும். அவரது தற்போதைய தேவையைச் சமாளிக்க ஒரு
முப்பதாயிரம் தேவைப்படுகிறது. அவர் அந்தப் பணத்தை என்னிடம் கேட்கவில்லை. எப்படியோ
அவரே அதை ஏற்பாடு பண்ணி விடுவார். என் வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறியதற்கு தன்
மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அவரது உரையைக்
கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, அவர் இந்த நிலைக்கு வந்ததில் என் பங்கு எவ்வளவு
இருக்கிறது என்பதை வியப்போடு யோசித்துக் கொண்டிருந்தேன். பேச்சின்போது காயத்ரியை
இருமுறை அலட்சியம் செய்தேன்.
ஆனால் காயத்ரி
நான்காவது முறையாக அழைத்தபோது, அவரது அனுமதி கேட்டு பேச்சை நிறுத்த
வேண்டியதாயிற்று.
‘ஏன் செல்ஃபோனை ஆஃப்
பண்ணி வச்சிருந்தீங்க? என்றாள் எடுத்தவுடன். அவள் குரலில் எரிச்சலை இனங்கண்டு
கொள்ள முடிந்தது.
‘அவரோட நிம்மதியா
பேசனும்னு நினைச்சேன், அதனாலதான். என்ன ஆச்சு? இதுக்கு முன்னாலயும் என்னைக்
கூப்பிட்டயா?’
‘விடாமக்
கூப்பிட்டுகிட்டு இருக்கேன். வண்டி சாவி எங்க? உங்ககிட்டயா இருக்கு? நான் இங்க
சல்லடை போட்டுத் தேடிட்டேன்.’
நான் கால்சராய்
பாக்கெட்டுகளில் துழாவி வலது பாக்கெட்டில் மோட்டார் சைக்கிள் சாவியைக்
கண்டுபிடித்தேன்.