கவிஞர் வாலியின் மரணச்
செய்தி தற்போதுதான் தொலைக்காட்சி வாயிலாக வந்து சேர்ந்தது. எஸ்.பி பாலசுப்ரமண்யம்
பேசும்போது வாலி சிறுவயதிலேயே தவறிவிட்டார் என்றார். அது உண்மைதான் என்று பட்டது.
நாலுதலைமுறை நடிகர்களுக்கு எழுதியவர். கடைசியாக மரணப்படுக்கையில் இருந்த போது கூட மரியான்
படத்திற்குப் பாடல் எழுதியதாக ரஹ்மான் ஒரு சந்திப்பில் குறிப்பிட்டார். சில
திரைப்படங்களில் அவர் நடித்ததைப் பார்த்து அவரது ஆளுமையை வியந்திருக்கிறேன். அவரது
நகைச்சுவையுணர்வும் அற்புதமான பேச்சாற்றலும் நான் ரசித்து மகிழ்ந்தவை. வாலிக்கு
நடந்த ஒரு பாராட்டு விழாவில் அவர் படிக்கும் போது செய்த குறும்புகளைப் பற்றி
நாகேஷ் தனக்கே உரிய பாணியில் விவரித்ததும், வாடா, போடா என்று தன் பால்யகால நண்பனை
உரிமையோடு அழைத்ததும், அவருக்கு வாலி கொடுத்த பதிலடியும் நினைவுக்கு வருகின்றன.
பொதிகைத் தொலைக்காட்சியில் வாலிப வாலி என்ற ஒரு தொடரில் தன் திரையுலக அனுபவங்கள்
பற்றி பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் அவரது அபாரமான நினைவாற்றல் வெளிப்பட்டது.
நிகழ்வுகளை துல்லியமாக விவரிக்கும் அவரது திறனையும் ஆச்சரியத்துடன்
பார்த்திருக்கிறேன்.
நான் திரைப்பாடல்களை ரசிக்க
ஆரம்பித்த காலகட்டத்தில் கவிஞர் வைரமுத்து கோலோச்சிக் கொண்டிருந்தார். வாலி
குத்துப் பாடல்களும், ஆங்கிலக் கலப்பும் கொண்டுதான் எழுதுவார் என்று நான் எண்ணிய காலம்.
அவர் அதற்கு முந்தைய காலகட்டத்தில் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களையெல்லாம்
கண்ணதாசன்தான் எழுதியிருக்கிறார் என்று அநியாயமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
தமிழ் ரசிகன் பாடல் மீது
கொண்ட மோகம் தீரும் வரை வாலியின் புகழ் இருக்கும். அந்த மோகம் இந்த
நூற்றாண்டிற்குள் தீருமென்று தோன்றவில்லை.
கவிஞர் வாலி என்ற
எண்பத்தியிரண்டு வயது இளைஞருக்கு என் அஞ்சலி.