அழகிரிசாமியின் சுயரூபம்
என்ற சிறுகதையைச் சமீபத்தில் வாசித்தேன். வேப்பங்குளம் என்ற பெருமை மிக்க
கிராமத்தைச் சேர்ந்த வீரப்பத் தேவரின் பேரனும், கந்தசாமித் தேவரின் ஒரே மகனுமான
வீ.க. மாடசாமித் தேவரின் ஒரு நாளைச் சொல்கிறது கதை. வேப்பங்குளம் பெருமை கொண்ட
கிராமம். அதைப் பற்றிச் சொல்லுகையில் கு. அ,
வேப்பங்குளம்
கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு
வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக
ஏறிக்கொண்டுவிடவே, அந்தக்
கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப்
பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.
என்கிறார்.
கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் முத்தையாத் தேவரிடம் வீராப்பாய்ப் பேசுகிறார்.
மத்தியானம் காசு வந்து சேரும் என்கிறார். கிணற்றடியில் குளித்து விட்டு, பேருந்து
நிறுத்தத்துக்கருகில் உள்ள முருகேசம் பிள்ளையின் பலகாரக் கடைக்குச் செல்கிறார்.
கையில் காசு இல்லை. முருகேசம் பிள்ளையுடன் நட்பாகப் பேசி ஏதாவது நாலு இட்டிலி
ஓசியில் கிடைக்குமா என்று பார்க்கிறார். கடை மூடும் வரை பிடி கொடுக்கவே கொடுக்காத
முருகேசம்பிள்ளை, இரவு கடையை மூடி விட்டுச் செல்லுகையில் கடையில் மீந்த
பலகாரங்களையும் எடுத்துச் செல்லுகிறார். அதையாவது தனக்குத் தரக் கூடாதா என்று
ஏக்கத்துடன் கேட்கிறார் மாடத்தேவர். முருகேசம் பிள்ளை முடியாதென்று மறுக்க, பேச்சு
முற்றி கைகலப்பில் முடிகிறது. இறுதியில் இந்த அற்பப் பயல் யாசகமாகக்
கொடுத்த இட்டிலியை வாங்கி நாய்த் தீனி தின்னாமல் இருந்தோமே, இந்தக் கடும்பசியிலும் - அது போதும்; மற்றக் கேவலம் எது வந்தாலும் வரட்டும்’ என்று தமக்குத்தாமே ஆறுதல் கூறிக் கொள்கிறார்.
பசி வந்தால் பத்தும் பறந்து
போம் என்ற முதுமொழி சொல்லும் கருத்துதான் இக்கதையிலும். ஆனாலும் பசியில் அவதியுறும்
மாட்த்தேவர், சாப்பாட்டுக்காக முருகேசம் பிள்ளையிடம் மேற்கொள்ளும் நைச்சியங்களை
அழகாகக் காட்டியுள்ளார் அழகிரிசாமி. வறுமை பற்றி, பசியைப் போக்க மனிதர்கள்
எதிர்கொள்ளும் அவமானங்கள் குறித்து இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் அதிகம்
எழுதியுள்ளனர். சமீபத்தில் நாஞ்சில் நாடனின் கல்யாணக் கதைகளை வாசித்தேன். முதல்
பந்தி முடிந்ததும் சாம்பாரில் தண்ணீர் கலந்து விடுவார்கள் என்பதாலேயே முதல்
பந்திக்கு அவசரப்படுகிறார்கள் அவரது கதை நாயகர்கள். புதுமைப்பித்தனும் வறுமை
எழுதும் துயரக்கோலங்கள் பற்றித் தன் கதைகளில் விவரித்திருக்கிறார். அந்தத் தலைமுறை
எழுத்தாளர்களை வறுமை ஒரு பிசாசு போல அவர்கள் தோள்களில் உட்கார்ந்து
கொண்டிருந்திருக்கிறது. சேர்ந்தே இருப்பது வறுமையும், புலமையும் என்பது உண்மைதான்.
கு. அழகிரிசாமியின் சுயரூபம்
கு. அழகிரிசாமியின் சுயரூபம்