27 ஆகஸ்ட், 2010

நல்ல சிவம் -(2) சிறுகதை


நல்ல சிவம் -(2) சிறுகதை
நல்ல சிவத்தின் பரந்த உடம்பையும், கரகரத்த குரலையும், புறங்கையில் தேன் நிறத்தில் படர்ந்திருக்கிற பூனை ரோமத்தையும் முதலில் காண்பவர்கள் அவன் அருகாமையில் இருப்பதற்குச் சற்று யோசிப்பார்கள். அப்படியும் மீறி அவனோடு பழக முயற்சித்தவர்களில் பலபேருக்கு கசப்பான அனுபவமே ஏற்பட்டிருக்கிறது. இரண்டு, மூன்று நாள் ஒன்றாக சுற்றித் திரிவார்கள். அப்புறம் திடீரென்று மதியச் சாப்பாட்டு இடைவேளையில் பள்ளி மைதானத்தில் அவனோடு கட்டிப் புரண்டு உருண்டு கொண்டிருப்பார்கள். நல்ல சிவம், மாதேஸ், நான் மூவரும்தான் ஆறாவதிலிருந்தே நண்பர்கள். அதற்காக கட்டிப் புரண்டு சண்டை போட்டதில்லை என்று பொருளல்ல.
என்னதான் முரடனென்றாலும் நல்ல சிவம் மனசு அவன் வீட்டிலிருந்து கொண்டு வருகிற எருமைத் தயிர் மாதிரி அத்தனை வெள்ளை.  எங்கள் பள்ளிக்கூடத்தின் பின் சுவரில் ஒரு ஆள் குனிந்து நுழையுமளவுக்கு ஒரு ஓட்டை உண்டு. ஆசிரியர்கள் விடுமுறையிலிருக்கும் நாட்களில் வகுப்பிலிருந்து நழுவி அந்த ஓட்டை வழியே நல்லசிவம் எங்களை வழி நடத்திச் செல்வான். அந்த ஓட்டை ஏற்படுத்தியதில் நல்லசிவத்துக்குப் பெரும்பங்கு உண்டு என்று பள்ளியில் ஒரு பேச்சு உண்டு.
மூன்று பேரும் வயல், தோட்டம் என்று ஆட்களில்லாத இடமாய்ப் பார்த்துத் திரிவோம். புளிய மரம், கொடுக்காப் புளி மரம், பனை மரம் எதுவாக இருந்தாலும், அரணாக் கயிற்றில் ட்ரவுசரை சுருட்டிவிட்டுக் கொண்டு விருவிருவென்று மேலேறி விடுவான். எங்கள் இருவருக்கும் நல்ல வேட்டைதான். வீட்டிலிருந்தும் பொரிமாவு உருண்டை, இலந்தை வடை, தூக்கிப்போசியில் இறுக மூடின கம்மங்கூழ் என்று வரிசையாக பைக்குள்ளிருந்து எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருப்பான். ஒருமுறை பைக்குள் எத்தனை நோட்டு வைத்திருக்கிறான் என்று பார்த்ததில் இரண்டுதான் இருந்தது. ஆனாலும் வாத்தியார்களிடமிருந்து எப்படியும் தப்பி விடுவான். அவன் பைக்குள்ளிருந்து அவர்களுக்கும் ஏதாவது கொடுக்கிறானா என்று எனக்குச் சந்தேகம் இருந்தது. எங்களுக்கு ஏதாவது கொடுத்துவிட்டு அவன் முகத்தில் தெரிகிற வெளிச்சத்தைப் பார்க்கவேண்டுமென்பதற்காகவே அவனிடமிருந்து ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்கலாமென்று இருக்கும். எங்களது டவுன் கூச்சத்தையும், தயக்கத்தையும் ஒப்பிடும் போது அவனது கிராமத்துச் சுறுசுறுப்பும், எதையும் அநாயசமாக எதிர் கொள்ளும் துணிச்சலும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஒருமுறை வீட்டுப்பாடம் முடிக்காததற்காக தமிழய்யா என்னைப் பின்னி எடுத்துவிட்டார். நல்லசிவம் அவர் டிவிஎஸ் புகைக்குழாயில் மண்ணைப் போட்டுவிட்டான். நட்புதான் முதல் அவனுக்கு. படிப்பு இத்யாதி எல்லாம் அப்புறம்தான்.
நீண்ட நேரம் ஆலோசனைக்குப் பின் நாங்கள் இருவரும் சேர்ந்து நல்லசிவத்தை சென்னைக்கு அனுப்பி அவன் அண்ணனிடமிருந்து அவனது உயிரைக் காப்பாற்றுவது என்று முடிவு செய்தோம். அவனைச் சென்னைக்கு அனுப்ப ரயில் டிக்கெட்டுக்கு, ஏதாவது வேலை கிடைக்கும் வரை அங்கு செலவுக்கு என்று எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணக்குப் போட்டோம். போன உடனே ஏதாவது டீக்கடையிலாவது சேர்ந்து விடுவேன் என்றான்.
‘எங்கடா தங்குவே?’ என்றேன்.
‘பிளாட்பாரத்துல படுத்துக்க வேண்டியதுதான். இங்க மட்டும் என்ன, தினம் காட்டுக்குள்ளதான் படுத்துக்கறேன்.
குறைஞ்சது அடி இல்லாமயாவது வாழ்க்கை ஓடுமில்ல’
போட்டிருக்கிற துணி தவிர மாற்றுத்துணி ஏதும் கிடையாது. நானும், மாதேஸும் எப்படியாவது எங்கள் பழைய துணிகளில் ஒன்றிரண்டை எடுத்து ஒரு மஞ்சள் பையில் போட்டுத் தந்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அடுத்த நாள் மதியம் மூன்று மணிக்கு ரயில் ஏறும் வரை அவனை என் வீட்டில் தங்க வைப்பதற்கு முடிவாயிற்று. அதுவரை நல்லசிவத்தின் அண்ணன் தேடாமல் இருப்பானா?
‘அவன் பம்பு வாங்க கோயம்புத்தூர் போயிருக்கான். விவரம் தெரிஞ்சு வரதுகுள்ள நான் கிளம்பிடறேன்’
திட்டம் ஒரு வடிவத்துக்கு வந்து செயல்படுத்துவதென்று முடிவாவதற்கு பத்தே முக்காலாகி விட்டது. எது நடந்தாலும் இந்த விஷயம் பற்றி வாய் திறப்பதில்லை என்று மூன்று பேரும் கை மேல் கையடித்துச் சத்தியம் செய்து கொண்டோம். மனசுக்குள் நட்புக்காகச் செய்யப்போகும் சாகசம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ‘நாளைக்குப் பரீட்சைக்குப் படிக்காம இவ்வளவு நேரம் என்னடா பேச்சு?’ என்றாள் அம்மா. அவளிடம் நல்லசிவம் கதையையும் எங்கள் திட்டத்தையும் அப்படியே சொன்னேன். ‘ஏதாவது வினையாயிடப் போயிடறதுடா’ என்றாள். ‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.  நீ மட்டும் ஏதும் வாய் திறக்காதே’ என்றேன். அம்மா நான் சொன்னால் கேட்பாள். நான் காரணமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்க மாட்டேன் என்று அவளுக்குத் தெரியும். அப்பாவுக்கு நைட் ஷிஃப்ட். காலையில் வந்தாரென்றால் மதியம் சாப்பிடக்கூட எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டிருப்பார்.
நல்ல சிவம் எங்கள் வீட்டில் படுத்துக்கொண்டான். மறுநாள் காலையும், மதியமும் எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டான். என் அம்மா சமையலையே ஒருவனால் இப்படி ருசித்துச் சாப்பிட முடியும் என்று அப்போதுதான் கண்டேன். இரண்டு மணிக்கெல்லாம் மாதேஸ் வந்து விட்டான். அவன் வீட்டில் இருந்து சுருட்டிக்கொண்டு வந்தது, வரலாறு புவியியல் கைடு வாங்குவதற்காக நான் வைத்திருந்த பணம் எல்லாம் சேர்த்து நூற்றியிருபது ரூபாய் வந்தது. மஞ்சள் பையோடு ரயில் நிலையத்தில் நல்லசிவம் நின்றிருந்தபோது அவன் கண்ணில் தேங்கி நின்றது ஆனந்தக் கண்ணீரா, பிரிவுத் துயரில் பொங்கிய கண்ணீரா என்று தெரியவில்லை.
‘கொஞ்ச நாளைக்கு இவுங்க அண்ணன் கண்ணில படாம இருக்கணும்’ என்றான் மாதேஸ்.
‘நான் ஒழிஞ்சேன்னு நிம்மதியா இருப்பான் அவன். என்னையெல்லாம் தேடி வர மாட்டான். கவலைப்படாதீங்கடா’
நல்லசிவம் போய் மூன்று நாள் கழித்து அவன் அண்ணன் அவனைத் தேடி வந்தே விட்டான். கடைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிற வழியில் என்ஃபீல்டு மோட்டார் பைக்கில் தாட்டியாக ஒருத்தன் வந்தான். கிட்ட வந்து நின்று அவன் மூக்கைப் பார்த்ததும் இது நல்லசிவம் அண்ணன் என்று தெரிந்து விட்டது.
‘தம்பி, நீ நல்லா சினேகிதன்தானே, நல்லா இங்கே வந்தானா?’
‘இல்லீங்களே, நான் அவனப் பார்த்தே பதினைஞ்சு நாளைக்கு மேல் இருக்குமே. ஸ்கூலுக்குக் கூட அவன் வரதில்ல’
‘ஒரு வாரமா ஆளக்காணம். நாலு நாள் முன்னாடி இங்க வந்தான்னு உரக்கடைக்காரர் சொல்றார். அதான் இங்க வந்தேன். நீ அவன்லாம் ஒன்னாத்தானே சுத்திட்டு இருப்பீங்க. அவன் இங்க வரவே இல்லியா?
‘இல்லீங்க. நான் பரீட்சைக்குப் படிச்சுகிட்டு இருந்தேன். எனக்கு ஒன்னும் தெரியாது’ என்றேன். அவன் முறுக்கின மீசையும், சுருட்டி விடப்பட்ட சட்டைக்குப் பின்னால் புடைத்துத் தெரிந்த புஜங்களும் பார்த்தபோது கால்கள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தன.
‘உங்க குரூப்புல இன்னொருத்தன் இருப்பானே, அவன் வீடு எங்க சொல்லு’
சொல்லலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் தான் சொன்னேன். மாதேஸ் எப்படியும் சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கை இருந்தது.
ஒரு வாரம் கழித்து ராஜ் மாஸ்டர் வகுப்பில் இருக்கும் போது பியூன் சண்முகம் வந்து தலைமையாசிரியர் என்னை அழைத்து வரச் சொன்னதாகச் சொன்னான். ராஜ் மாஸ்டர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாதவர்கள் வரிசையில் நானும் நின்று கொண்டிருந்தேன். ராஜ் மாஸ்டருக்கு ஏரோப்ளேன் மாஸ்டர் என்றொரு பெயர் உண்டு. பதில் தெரியாதவர்களை டேபிள் மேல் குப்புறப்படுக்க வைத்து ட்ரவுசரை முழங்கால் வரை இழுத்துவிட்டு விடுவார். எங்கள் பள்ளியில் எல்லாரும் பசங்கள் என்பதால் அது பற்றிக் கவலையில்லை. ஆனால் அவர் கொடுக்கிற அடிகளுக்கு பிருஷ்ட பாகம் சிவந்து பழுத்து கன்னிப் போய்விடும். மூன்று நாட்களுக்கு கால்களை அகட்டி, அகட்டிதான் நடக்க வேண்டும். அதிலிருந்து என்னைக் காப்பாற்றிய சண்முகத்தைப் பார்த்து நட்பாய்ப் புன்னகைத்தேன். சென்ற மாதம் லால்குடி தமிழ்சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இன்னும் கைக்கு வரவில்லை. அதைக் கொடுக்கத்தான் இப்போது ஹெட்மாஸ்டர் கூப்பிடுகிறாரோ? பிரேயரில் வைத்துக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ராஜ் மாஸ்டர் என்னைப் பார்த்து விரோதமாய்ப் புன்னகைத்து, ‘போய்ட்டு வாங்க மாப்பிள்ளை, உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் காத்திட்டு இருக்கு’ என்றார்.
தலைமையாசிரியர் அறை ரொம்பச் சின்னது. வெளியிலிருந்து பார்த்தபோது அவருக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவனைப் பார்த்துத் திடுக்கிட்டேன். மாதேஸ். நான் எதற்கு அழைக்கப்பட்டேன் என்று புரிந்துவிட்டது. அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் முன்னேறாமல் அப்படியே நின்று விட்டேன். ஓரத்தில் உட்கார்ந்திருந்தது நல்லசிவத்தின் அண்ணன். அவனுக்குப் பக்கத்தில் அழுக்குப் படிந்து போய், பரட்டைத் தலையுடன் நின்று கொண்டிருந்தது நல்லசிவம்.
‘ஆக ரெண்டு பெரிய மனுஷங்களும் ஒத்தாசை பண்ணி சாரை மெட்ராஸ் அனுப்பிச்சி வச்சிட்டீங்க. எதுக்கு? ஐயா பெரிய சினிமா நடிகன் ஆகணும்னு சொன்னாரா?’
‘சார், சத்தியமா நாங்க எதும் பண்ணல சார். நாங்க அவனப் பாத்தே ரொம்ப நாளாச்சு சார். இல்ல மாதேஸ்?’ என்றேன்.
‘நீங்க ஒண்ணும் விளக்கம் சொல்ல வேண்டாம். எல்லாம் நல்லசிவம் சொல்லிட்டான். பரதேசிப்பசங்களா, ரெண்டுபேருக்கும் டீசி கிழிக்கறேன் இரு’ என்றார் தலைமையாசிரியர். நல்ல சிவம் பக்கம் திரும்பி, ‘சொல்லுடா, இவனுங்கதான உனக்கு ஓடிப்போற ஐடியா கொடுத்து அனுப்பிச்சு வச்சது?’
நல்ல சிவம் தலையாட்டியதைப் பார்த்தபோது ஆமாம் என்கிற அர்த்தம் கொடுக்கிற மாதிரிதான் இருந்தது.
‘சார், சார், சார், வேணாம் சார், ஒன்னும் பண்ணிடாதீங்க சார்’ என்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் குமுறிக்கொண்டு அழ ஆரம்பித்தோம்.
        ‘உங்களைப் போலீசுல புடிச்சுக் குடுக்காம உட்டேனேன்னு சந்தோஷப்படுங்க, ஏங்க முத்து, நீங்க உங்க தம்பியக் கூட்டிட்டுப் போய் புத்தி சொல்லுங்க. நான் இவனுங்களப் பாத்துக்கறேன்’ என்றார்.
        நல்லசிவத்தின் அண்ணன் எங்களைப் பார்த்து, ‘ஃப்ரண்ட்ஸுன்னா நல்லவிஷயங்கள்ல கூடிக்கணும். அவன் வாழ்க்கையையே கெடுக்கப்பார்த்தீங்களேடா.’ என்று விட்டு ‘மெட்ராசுல சட்டையில்லாம ஓட்டை டவுசரோட ஓட்டல்ல டேபிள் துடச்சிட்டிருக்கிறான் சார் என் தம்பி’ என்றான் அவர் பக்கம் திரும்பி. ‘இனி இவனுங்களோட உன்னைப் பார்த்தேன் வெட்டிப் புதைச்சுடுவேன்’ என்றான் தம்பியைப் பார்த்து.
        நல்லசிவம் எங்களைப் பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த உணர்ச்சியை என்னவென்று கணிக்க முடியவில்லை. அவன் அண்ணன் நல்லசிவத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு விறுவிறுவென்று வெளியேறி விட்டான்.
டீசி கொடுக்கவில்லை. ஆனால் இரண்டு பேர் வீட்டிலும் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரித்தார்கள். ஏரோப்ளேன் மாஸ்டரிடம் ரெண்டுபேரையும் கொண்டு விட்டார்கள். மூன்று மாதம் கழித்து நல்லசிவம் மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்து விட்டான். நானும் மாதேஸும் அவனை விரோதமாய்ப் பார்த்துக் கொண்டு விலகி இருந்தோம். மதிய உணவு இடைவேளைகளில் மைதானத்தில் பார்க்கும்போது நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் எங்களைப் பார்த்துப் புன்னகைப்பான். கடைசி வரை அவனை மன்னிக்கவே முடியவில்லை என்னால். பத்தாவது முடித்ததும் மேல்நிலைப் படிப்புக்கு ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்விட்டோம். நல்லசிவம் பத்தாவதுக்கு மேல் படித்தானா என்று தெரியவில்லை. இப்போது அவனை நினைத்துப் பார்க்கும்போது உயிரோடு இருக்கிறானா என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.
நன்றி உயிரோசை இணைய வார இதழ்

மேலும் வாசிக்க