நாங்கள் அமர்ந்திருந்த கருத்தரங்கில் உள்ள அனைவரின் (சுமார் 200 பேர் இருந்தோம்) பிம்பத் தகவல்களையும் சேமிப்பதற்கு குறைந்தது ஒரு ஜிகா பைட்(Gb) செலவாகும் என்றார். அதையே இப்போதிருக்கிற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 30 கிலோ பைட்டுக்குள் (Kb) அடக்கி விட முடியும் என்றார். இந்த பிம்பத் தகவல் சேமிப்பு என்பது கணினித் துறை சார்ந்தவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. சேர்ந்து கொண்டே இருக்கிற தகவல்களை என்ன செய்வது? ஒரு மனிதனின் வாழ்நாள் முழுதும் சேகரிக்கப்படும் தகவல்கள் கிட்டத்தட்ட இருபது டெர்ரா பைட்டுகள் (Tb) அளவுக்கு வருமாம். இது ஒரு பெரிய சுமை.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உகைலும் அவரது குழுவும் ஒரு புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ளனர். அவர் சொன்ன சம பரப்பு கொண்ட உலோகங்களுக்கிடையே வெப்பங்கடத்தப்படுதல், பார்ஷியல் டிஃப்ரென்ஷியல் ஈகுவேஷன் என்பதெல்லாம் சுத்தமாகப் புரியவில்லையென்றாலும், சொல்ல வந்த கருத்தை சுமாராகப் புரிந்து கொண்டேனென்றே நினைக்கிறேன். ஒரு பொருளின், உயிரினத்தின் பிம்பத் தகவலைக்கொண்டுதான் அவற்றின் கணினிப் பிம்பங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்தத் தகவல் சுமை தாங்கமுடியவில்லை. அதற்கு பதிலாக பிம்பத் தகவல்களை சமன்பாடுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். இந்த வகையில் ஒரு எளிய சமன்பாட்டை வைத்துக்கொண்டு அதில் சிறு சிறு திருத்தங்களைச் செய்து நூற்றுக்கணக்கான கணினிப் பிம்பங்களை உருவாக்கமுடிவது மட்டுமல்லாமல், அச்சு அசல் அப்படியே அசலை நகலெடுக்கலாம்.
5. வர்ச்சுவல் சிங்கப்பூர் என்றொரு ப்ராஜெக்ட் அவர் வசம் இருக்கிறதாம். முழு சிங்கப்பூருமே வர்ச்சுவலாக. நாம் அதனுள் நுழைந்து எல்லா இடங்களையும் பார்க்கமுடியும். கடைகளுக்குச் சென்று வாசனைத்திரவியம் வாங்க முடியும். ஏன் அதை வாசனை கூடப் பார்க்க முடியும். இன்னும் பத்து வருடங்களில் அந்த ப்ராஜெக்ட் முடிந்து விடுமென்றார். எனக்கு மேட்ரிக்ஸ் படம் நினைவுக்கு வந்தது.
பொய் டிடெக்டர் பற்றி அவர் சொன்னபோது பார்வையாளர் மத்தியில் நிறைய சந்தேகங்கள் எழுந்தன. யு.கேயில் அதன் முக்கியத்துவம் பற்றிச் சொன்னார். அந்நாட்டில் வாழும் அனைவருக்கும் இலவச உணவும், இருப்பிடமும் தரப்படுகிறது. இந்தச் சுகவாழ்வுக்கு ஆசைப்பட்டு பலர் சட்டத்துக்குப் புறம்பாக யு.கேயில் நுழைகிறார்கள். ஃப்ரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் எல்லைகளை இணைக்கும் கெலி என்ற இடத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒன்பது லட்சம் கண்டெய்னர் லாரிகள் கடக்கின்றன. இவற்றுக்குள் யாருமறியாமல் மறைந்து கொண்டு பலர் இங்கிலாந்தில் நுழைந்து விடுகின்றனர். ஒவ்வொரு கண்டெய்னெரையும் சோதிப்பதென்பது இயலாத காரியம். இதற்காகப் பல உத்திகளைக் கையாண்டு வருகின்றனர் அதிகாரிகள். உள்ளே இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு அளவை சோதிக்கும் கருவியைப் பயன்படுத்துதல், இதயத்துடிப்பு அறியும் கருவியைப் பயன்படுத்துதல், பாம்பு வடிவம் கொண்ட ரோபோ ஒன்றை கண்டெய்னருக்குள் விட்டு உள்ளே ஆள் இருக்கிறதா என்று கண்டறிதல், ஏன் மோப்ப நாய்களைக் கூடப் பயன்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் இப்போது பொய் டிடெக்டரும் சேர்ந்து கொள்கிறது. பெரும்பாலும் இந்த மாதிரிக் குற்றங்கள் ஓட்டுனர் அறிந்தே செய்யப்படுகின்றன. அவர் பொய் சொல்கிறாரா என்று கண்டறிவதன் மூலம் கண்டெய்னருக்குள் திருட்டுத்தனம் நடக்கிறதா என்று ஊகித்து விட முடியும்.
ஒருவர் பொய் சொல்லும் போது அவர் கண்களின் கீழே இரைப்பையில் 0.15 டிகிரி வெப்பமாற்றம் ஏற்படுகிறது. அதை வைத்து அவர் பொய் சொல்கிறார் என்பதைச் சொல்லிவிட முடியும். தான் பரிசோதிக்கப்படுகிறோம் என்று தெரிந்த உடனேயே ஏற்படும் பதட்டம் கூட அந்த வெப்பமாற்றத்துக்குக் காரணமாக இருந்துவிட முடியும் என்று பங்கேற்பாளர்களிடையே எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் ஒத்துக்கொண்டார். ஆனால் விமான நிலையம் போன்ற இடங்களில் சுமுகமான சூழ்நிலை நிலவுகையில் இந்தக் கருவியை உபயோகிப்பது எளிது என்றார்.
எல்லாம் சொல்லிவிட்டு எளிய விஷயங்களைக் கூடக் கண்டறிய முடியாமல் எவ்வாறு கணினி திணறுகிறது என்று விளக்கினார். ஒரு புகைப்படத்தில் உள்ள நாற்காலிகளை எண்ணச் சொன்னால் நாற்காலியின் நிழல்களையும் நாற்காலியாக எண்ணி எண்ணுகிறது. இன்னொரு புகைப்படத்தில் உள்ள யானைக்கு எத்தனைக் கால்கள் என்றால் இல்யூஷன் காரணமாக பதினாறு கால்கள் என்று பதிலிறுக்கிறது. நம்மிடம் இருக்கும் பல தேடு யந்திரங்கள் இன்னும் நிறைய பரிணாமம் அடைய வேண்டியிருக்கிறது. (எனக்குக் கூட ஒரு சந்தேகம் இருக்கிறது. இப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த இடம் எது? என்று கூகுளில் அடித்தால் அது தன்னுள் தேடி ஏன் உடனே அதற்கான பதிலைத் தரக்கூடாது? ஏன் அடுத்தாத்து ஆல்பர்ட்டின் தளமும், ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் பற்றியும், பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும் தளத்தையும் எனக்குத் தேடிக்கொடுக்கிறது?) மனிதன் முன்னிலையில் இப்போதிருக்கும் சவால் தன்னைப் போலவே கணினி சிந்திக்கச் சொல்லிக்கொடுப்பதுதான்.
கருத்தரங்கின் இறுதியில் கேள்விநேரம் வந்தபோது ஒரே மாணவனே தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் பேசியதில் புளூ ரே திரைப்படம், முப்பரிமாண தொலைக்காட்சி என்று பலவிஷயங்கள் புரியவில்லை. இப்போதெல்லாம் தலைமுறை இடைவெளி என்பது பத்து வருடங்களுக்குள்ளேயே இருக்கும் போலிருக்கிறது. ‘3டி டிவி வாங்காதீர்கள். சுத்த குப்பை’ என்று உகைலுக்கு அறிவுரை சொன்னான். நானும் ஏதாவது கேட்க வேண்டுமென்பதற்காக ஒரு மனிதன் உண்மை என்றே நம்பும்படியான பிம்பங்களையும், சூழ்நிலைகளையும் உருவாக்குவதன் மூலம் ஒரு சாதாரண மனிதன் இவைகளால் எளிதில் ஏமாற்றப்பட்டு விட முடியும். எனவே ஹ்யூமன் ஜீனோம் பிராஜெக்ட் போல உங்கள் ஆய்வுகளுக்கும் ஏதேனும் தடைகள் உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் எங்கள் வேலை புதிய சாத்தியங்களை உருவாக்கித் தருவது. அது செயல்படுத்தப்படும் நிலை வரும்போது வரும் எதிர்வினைகளைப் பொருத்தே அவை அமல்படுத்தப்படும் என்றார். ஒரு மாணவன் வர்ச்சுவல் உலகில் விபத்து ஏற்பட்டால் உண்மையாகவும் ஏற்படுமா என்றான். ஏற்படாது. வர்ச்சுவல் உலகின் வசதியே அதுதான் என்றார்.
உலகம் இப்போதிருக்கிற நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வதில் ஒரு சிறுபணியையே நாங்கள் செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார். நீங்களும் சராசரிகளாக இல்லாமல் உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று அவர் உணர்ச்சி பூர்வமாகக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மாணவர்கள் பின்னால் சொந்தக் கதை பேசிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், சில ஆசிரியர்களும் அரட்டையில் ஈடுபட்டிருந்தனர். வெளியே மாணவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த வேன்கள் விடாது ஹார்ன் அடித்துத் தங்கள் நாகரிகத்தை நிலை நாட்டின. என் அருகில் ஆசிரியர் ஒருவர் ‘சீக்கிரம் முடிங்கப்பா, வீட்டுக்குப் போய் பொண்டாட்டிக்கு ஃபோன் பண்ணனும்’ என்றார். ஒரு மாணவி கடைசியாக எழுந்து உங்கள் சம்பளம் எவ்வளவு என்று கேட்டதற்கு, இங்கிலாந்தில் ஒரு வீடு உண்டு. நல்ல கார். எனக்கொரு நல்ல வாழ்க்கை அங்கு உள்ளது. அதுவரை தெரிந்தால் போதும் என்றார். உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாரும் கேட்கவேயில்லை.
ரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 1
ரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 1