சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எந்திரன் இசை வெளியீட்டில் படத்திலிருந்து சில காட்சிகளைக் காட்டினார்கள். அதில் ஐஸ்வர்யா ரோபோ ரஜினிக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சி. மனிதனால் உருவாக்கப்படும் ரோபோக்களை மனிதனே காதலிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று காட்டியதைப் போலிருந்தது. அதுபோலவே ஒரு ரோபோவும் மனுஷியைக் காதலிக்கும் சாத்தியம் உண்டென்றும் காட்டியது.
இதெல்லாம் உண்மையில் சாத்தியமா என்ற கேள்விகள் இன்றி வெறும் பொழுதுபோக்குக்காகவே இந்த சயன்ஸ் ஃபிக்ஷன் படங்களை நாம் பார்த்துக் கொண்டிருந்தாலும், இவற்றை சாத்தியமாக்கிக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் ஒரு கூட்டம் வேலை செய்து கொண்டிருக்கிறது என்று சமீபத்தில் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.
நான் வேலை பார்க்கும் இஸ்லாமியா பள்ளிக்கு அருகிலேயே முஹிபுத்தீன் என்றொரு மிகப்பெரிய பள்ளி உண்டு. மாலத்தீவுகளின் குறிப்பிடத்தகுந்த புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று. என் மனைவி அங்குதான் கணித ஆசிரியையாகப் பணிபுரிகிறார். அங்கிருந்து சென்ற வாரம் எங்கள் பள்ளிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. மாலத்தீவுகளில் இருந்து யு.கே சென்று பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஊடகக் கணிணி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. ஹசன் உகைல் ஒரு கருத்தரங்கு நடத்தப் போவதாகவும், கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டும் கலந்து கொள்ளும்படியும் அழைப்பு வந்திருந்தது. அன்று மாலையே முஹிபுத்தீன் சென்றோம்.
ஹசன் உகைல் பார்க்க மிகவும் எளியவராகத் தெரிந்தார். பேச்சில், உடல் மொழியில் இங்கிலாந்து வாசம் வீசியது. லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அங்கேயே சில ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பின் பிராட்ஃபோர்ட் பல்கலையில் கடந்த ஏழு வருடங்களாகப் பணிபுரிகிறார். அறிவுப் பறிமாற்றம் என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வுக்கு விருது கிடைத்திருக்கிறது.
அங்கு என்ன வேலை என்று கேட்டால், சும்மா உட்கார்ந்து கொண்டு ஐடியாக்களை உருவாக்கிக் கொடுப்பதுதான் என்கிறார். I get paid for my ideas. பொய் கண்டறியும் கருவி பற்றிய அவர்களது ஐடியாவைச் செயலாக்குவதற்கு ஒரு நிதி நிறுவனம் ஒரு மில்லியன் பவுண்டுகள் நிதியளித்திருக்கிறது. அவர் பணிபுரியும் துறையான ஊடகக் கணிணித்துறையில் (என் தமிழ் தவறென்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் விஷூவல் கம்ப்யூட்டிங்) அவர்கள் முயற்சிகள் அனைத்தும் அசலுக்கும், நகலுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை குறைத்துக் கொண்டே வருவது பற்றியது. கருத்தரங்கின் துவக்கத்தில் இரண்டு விடியோக்களைக் காட்டி இதில் எது உண்மையான நபர், எது கணிணி பிம்பம் என்று கேட்டார். நாங்கள் பார்த்ததில் ஒரு பிம்பம் கணிணியுடையது என்று தெளிவாகத் தெரிந்ததால் நாங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டதாக நினைத்தோம். ஆனால் இரண்டுமே கணிணிப் பிம்பங்கள்தாம். நாங்கள் அசல் என்று நினைத்தது அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
1. அப்புறம் புதிர்ப் பள்ளத்தாக்கு (the uncanny valley) என்று ஒன்று சொன்னார். ரோபோக்கள் ஏன் மனித ரூபத்திலேயே தயாரிக்கப்பட வேண்டுமென்பதற்குப் பின்னாலுள்ள உளவியல் உண்மையை இந்த புதிர்ப் பள்ளத்தாக்கு கருதுகோள் வெளிப்படுத்துகிறது. முதன் முதலில் ரோபோக்கள் மனித உருவம் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டபோது அது மக்களின் விருப்பத்துக்குரியதாக இருந்திருக்கிறது. அது எந்திரமாகவே இருந்தாலும் பார்க்க ஏறத்தாழ மனிதன் போல இருக்க வேண்டும். பூனை போலவோ, நாய் போலவோ இருப்பதைக் காட்டிலும் மனிதன் போல இருப்பதே நமக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் ரோபோக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மனிதத் தன்மையைக் கூட்டிக்கொண்டே சென்றால் அவற்றில் மேலுள்ள விருப்பம் குறைந்து வெறுப்பு வளர ஆரம்பிக்கிறது. தன்னைப் போலவே ஆனால் தன்னிலும் சக்தி மிகுந்தவனாகக் காட்டிக் கொள்ளும் உருவத்திலிருக்கிற ரோபோவின் இருப்பு நமக்குப் பிடிப்பதில்லை. அதன் மீது வெறுப்பை உமிழ்கிறோம். பிறகு மனிதனின் உருவத்தை நூறு சதவீதம் ஒத்த ரோபோ உருவாக்கப்படும்போது மீண்டும் அதன் மீதான விருப்பம் நமக்குக் கூடுகிறது. இரும்பிலே ஓர் இருதயம் முளைத்ததே என்று பாட ஆரம்பித்து விடுகிறோம். மிகு விருப்பத்திலிருந்து சட்டென்று விருப்பம் குறைந்து கீழிறங்கி மீண்டும் விருப்பம் மேலேறும் இந்த நிகழ்வினைத்தான் புதிர்ப்பள்ளத்தாக்கு என்கிறார் உகைல். இந்தத் தலைப்பின் கீழ்தான் கடந்த ஐந்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன் என்று சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. இப்போது உருவாக்கப்படும் ரோபோக்களின் உருவங்களும், கணிணி விளையாட்டுகளில் உருவாக்கப்படும் பிம்பங்களும் இந்தப் புதிர்ப் பள்ளத்தாக்கை அடைப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஒரு பிம்பம் உருவாக்கப்படும்போது அது புதிர்ப் பள்ளத்தாக்கின் சரிவுப்பகுதியிலோ, ஆழத்திலோ இல்லாதவறு பார்த்துக்கொள்ளப் படுகிறது. அப்போது அது நுகர்வோர்களால் விரும்பப்பட ஏதுவாகிறது. கணிணி விளையாட்டு என்ற ஒரு துறையில் மட்டும் எட்டு பில்லியன் டாலர்கள்கள் புழக்கத்திலிருக்கிறதாம்.
அசல் எது? நகல் எது?
2. அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் ஒரு கணிணி விளையாட்டை எந்த விதப் பின்புலத்திலும், தளத்திலும் விளையாட வைக்க முடியுமா என்பது பற்றியது. அதாவது ஒரே விளையாட்டை இணைய அலைபேசி, மடிக்கணிணி அல்லது தொலைக்காட்சி என்று எதில் வேண்டுமானாலும் விளையாட வைக்க முடியுமா என்பது பற்றியது.
3. நிழற்படங்களின் தரத்தை மேம்படுத்துதல். 1975 ல் 0.01 மெகா பிக்ஸல் புகைப்படக்கருவியை சாதனையாகக் கருதியிருக்கிறார்கள். 2008ல் 80 மெகா பிக்ஸல் கேமரா வந்தது. இப்போது 900 மெகாபிக்ஸலில் ஒரு கேமரா வரவிருக்கிறதாம்.