2 செப்டம்பர், 2010

நான்கு அறைகளில் உயரமாய் மீசை வச்சுக்காமல் ஒரு மகான்


இந்த வலைத்தளத்தில் நான் அவ்வப்போது பார்த்து வரும் திரைப்படங்கள் பற்றி எழுதுவதாக உத்தேசம். எவ்வளவோ திரைப்படங்கள் பார்த்தாலும் நான் முக்கியமானவை என்று நினைக்கிற அல்லது வேறு யாராவதாலோ நல்ல திரைப்படம் என்று பரிந்துரை செய்யப்பட்டவற்றைப் பற்றி மட்டும் எழுதலாமென்றிருக்கிறேன். நான் ஒரு தேர்ந்த திரைப்பட விமர்சகன் இல்லை. புனைவிலக்கியம் எழுத முயல்பவன். திரைப்படங்களிலிருந்து என் புனைவிற்கான தொழில்நுட்பம் ஏதேனும் சிக்குமா என்பதற்காகவே அவற்றைப் பார்க்கிறேன். எனவே என் விமர்சனத்தில், சரியாகச் சொன்னால் நலம் பாராட்டலில் நுண்ணிய தகவல்களை எதிர்பார்க்க வேண்டாம். என் மனதில் அவை உடனடியாக என்ன விதமான எண்ணங்களைத் தோற்றுவிகின்றனவோ அவற்றை அப்படியே பதிகிறேன்.
குவென்டின் டொரென்டினொ இன்னும் மூன்று இயக்குனர்களுடன் சேர்ந்து இயக்கியுள்ள படம் நான்கு அறைகள். டொரெண்டினோ பற்றித் தன் அயல் சினிமாவில் எஸ்.ரா விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.  படம் வினோதமான குணம் கொண்ட  மனிதர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டு அவதியுறும் ஒரு சராசரியைப் பற்றியது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கும் ஓர் இரவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பணிபுரியும் சிப்பந்தி அந்த ஓட்டலின் நான்கு அறைகளில் விதவிதமான மனிதர்களைச் சந்திக்கிறான். முதலில் தேனிலவு சூட்டில் தங்கியுள்ள பெண்கள். அவர்கள் எல்லாரும் சூனியக்காரிகள் போலத் தெரிகிறது. பல வருடங்களுக்கு முன்னால் சபிக்கப்பட்டு மறைந்து போன தங்கள் தலைவியை மீண்டும் உயிர்ப்பிக்க ஒருவிதமான மாந்த்ரீக பூஜை நடத்துகிறார்கள். (அதில் சிலர் மேல் சட்டையில்லாமல்) ஒரு பெண் தனக்குப் பணிக்கப்பட்டிருந்த பொருளைக் கொண்டு வர மறந்து விடுகிறாள். ஒரு மணி நேரத்துக்குள் அந்தப் பொருள் வேண்டும். காசு கொடுத்து அந்த ஊழியனிடமிருந்தே அந்தப் பொருளை எடுத்துக் கொள்கிறார்கள். அது என்ன பொருளென்பதைச் சொல்ல மாட்டேன்.
        இன்னொரு அறையில் ஒரு டொமினிகன் கணவனும், அவனது ஜப்பானிய மனைவியும் தங்கள் இரு குழந்தைகளை அறையிலேயே விட்டு விட்டு ஒரு புத்தாண்டு விருந்துக்குச் செல்ல ஆசைப்படுகின்றனர். தன் குழந்தைகள் ஜப்பானிய ஜாடையிலிருப்பது கணவனுக்குப் பிடிப்பதில்லை. அவர்களை இரவு முழுக்க கவனித்துக் கொண்டால் ஐம்பது டாலர் தருகிறேன் என்று ஊழியனிடம் சொல்கிறான். அவன் ஒப்புக்கொண்டபின் இரு குழந்தைகளும் இரவில் அந்த அறையை எரித்து விடுமளவுக்குக் கூத்தடிக்கின்றனர். அறை நடுவில் ஒரு பிணம் வேறு கண்டுபிடிக்கப்படுகிறது.

        மூன்றாவது அறையில் மனைவி மீது சந்தேகப்பட்டு அவளைக் கட்டி வைத்துக் கொடுமைப்படுத்தும் சைக்கோ ஒருவனிடம் மாட்டிக்கொள்கிறான். அவன் ஊழியன்தான் மனைவியின் கள்ளக்காதலன் என்று நினைக்கிறான். எப்படியோ தப்பித்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்து விடுகிறான்.
        நான்காவது அறையில் நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடுவதற்குத் தங்கியிருக்கும் ஒரு ஹாலிவுட் நடிகனைச் சந்திக்கிறான். சைக்கோவின் மனைவியும் அவர்களில் ஒருத்தி. சைக்கோ என்ன ஆனானென்று தெரிவதில்லை. அவளோடு சேர்ந்து இன்னும் இரண்டு ஆண்கள். எல்லாரும் சகட்டு மேனிக்கு, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் புனித வார்த்தையான அந்த நான்கெழுத்து வார்த்தையை உபயோகிக்கிறார்கள். நடிகனுக்கும் அவன் நண்பனுக்கும் ஒரு போட்டி. நண்பன் பத்து முறை சிகரெட் லைட்டைரைப் பற்ற வைத்து விட்டால் தன் காரைக் கொடுக்கிறேன் என்கிறான் நடிகன். தோற்றால் நண்பனின் சுண்டுவிரல். (இதே மாதிரி ஒரு சவாலை பல வருடங்களுக்கு முன் பாலசந்தர் ரஜினிகாந்திடம் வைத்ததாக ஞாபகம்) நண்பன் ஜெயித்தால் காரை எடுத்துக் கொள்வதில் அவனுக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இருக்கப் போவதில்லை. ஆனால் தோற்றால் நண்பனின் சுண்டு விரலை எப்படி வெட்டுவது? அதற்குத்தான் ஊழியனின் உதவி தேவைப்படுகிறது. ஆயிரம் டாலர்கள் சன்மானம். போட்டியில் முதல் தடவையிலேயே லைட்டர் பொய்த்து விடுகிறது. சற்றும் யோசிக்காமல் சுண்டுவிரலை வெட்டி விட்டு ஆயிரம் டாலர்களை எடுத்துக் கொண்டு நடையைக்கட்டுகிறான் ஊழியன். படத்தின் இந்த நான்காவது பகுதியை டொரென்டினோ இயக்கியுள்ளதாகத் தெரிகிறது. படத்தில் வருபவர்களைப் போலவே நமக்கும் கொஞ்சம் ஸ்க்ரூ கழண்டிருந்தால் மட்டுமே படத்தைப் புரிந்து ரசிக்க முடியும் போல.
       
நல்ல சிறுகதைகளைத் தேடித் தேடிப் படித்தாலும் அபூர்வமாகச் சில சிறுகதைகள்தான் மனதில் தங்கி கொஞ்ச நாட்களுக்கு நெளிந்து கொண்டிருக்கின்றன. ஆதவனின் சிவப்பா, உயரமாய் மீசை வச்சுக்காமல் என்ற நீண்ட சிறுகதை (மூன்று அத்தியாயங்கள்) அந்த வகை. தன் அழகில் பெருமிதம் கொண்ட, தனது ராஜ குமாரனுக்காகக் காத்திருக்கும் ஒரு பெண் தன் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஆண்களையும் வெறுக்கிறாள். அவர்கள் ஒன்று அவள் அழகை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள், அல்லது வழிகிறார்கள். அதில் ஒரு இளைஞன் மீது அதீத வெறுப்பு. அவனது இளமையை, பேச்சிலர் வாழ்க்கையை அவன் அனுபவிக்கும் விதத்தை பிற ஆண்கள் ஆராதிக்கிறார்கள். தங்களால் நிறைவேற்ற முடியாத ஆசைகளை அவன் அனாயசமாக நிறைவேற்றுவது குறித்து அவர்கள் அவனைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். அவனோ இவளைக் கவனிப்பதில்லை. அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்தாலும் பயனில்லை. போனால் போகட்டும் தன் அழகைப் பார்த்து அனுபவிக்கட்டுமே என்று விட்டால் என்ன திமிர் என்று கொதிக்கிறாள். அவனும் இதுபோலத்தான் தன்னைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடு கொண்டு அவள்தான் தன்னைக் கவனிக்கவேண்டுமென்று நினைக்கிறான். ஒருமுறை திரையரங்கில் அவளைப் பார்த்து காஃபி குடிக்க அழைக்கிறான். அவள் முறைத்துவிட்டு நகர்ந்து விடுகிறாள். மறுநாளிலிருந்து அவன் மிகுந்த சோகமாகி அவளைத் தவிர்க்க ஆரம்பிக்கிறான். தங்களைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் கொண்டிருந்த இருவர் மெல்ல மெல்லத் தங்கள் கர்வம் அழிந்து இறுதியில் ஒருவருக்கொருவர் தோற்றுக்கொள்கிறார்கள். இரு வேறுபட்ட ஆளுமைகளின் மனத்தில் நிகழும் போராட்டங்களையும், உளவியல் சிக்கல்களையும் அழகாக விவரித்த கதை.
நண்பர் சென்ஷி தன் தளத்தில் இந்தக் கதையை அளித்துள்ளார்.
கதையைப் படிக்க...

விஜய் டிவியில் மகான் என்றொரு தொடர். அட, கொஞ்சம் உருப்படியான விஷயங்களும் தொலைக்காட்சியில் வருகின்றனவே என்று உட்கார்ந்தால், ராகவேந்திரர் வரலாற்றை மெகாத் தொடர் மாதிரி இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையிலேயே ராகவேந்திரர் கதைதானா என்று சந்தேகம் வந்து விட்டது. மெகா சீரியல் இயக்குனர் ஒருவர் ரூம் போட்டு சிந்தித்த கற்பனைக் கதை போல இருக்கிறது. சிறுவயதிலேயே ஞான வித்தாக வளர்ந்த ராகவேந்திரர் வளர்ந்து திருமணமாகி குழந்தை பிறந்தும் உப்பு புளி பருப்புக்கே கவலைப்படுகிறார். அவரது குரு கூப்பிட்டு பீடாதிபதி பதவியை ஏற்கச் சொல்லியும் அவர் குடும்ப வறுமையை நினைத்தே உருகுகிறார். ஆனால் அதை மாற்ற எதுவும் செய்த மாதிரித் தெரியவில்லை. சரஸ்வதியே நேரில் தோன்றி அவரது பிறப்பு ரகசியம், எப்படி அவர் பிறர் வணங்கப் பிறந்தவர் என்றெல்லாம் கூறியும் கூட அவர் சன்யாசம் எடுக்க பலமாக யோசிக்கிறார். இறுதியில் அரைகுறை மனதாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சன்யாசம் எடுத்துக் கொள்கிறார். அசத்தப் போவது யாரு சான்ட்ரா அவரது மனைவியாக வந்து அழுது கொண்டே அவர் சன்யாசம் போகக்கூடாது என்று தடுக்கிறார். கால்ஷீட் முடியும் வரை அழுவார் போல. மகான் என்றால் அவர் ஞானமும், அவரது அரிய கருத்துக்களும் பிரதிபலிக்குமாறு எடுத்தால் மக்களுக்குப் புரியாது என்று நினைத்தார்களோ அல்லது டிஆர்பி ரேட்டிங்குக்கு இதெல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்து விட்டார்களோ தெரியவில்லை. ராகவேந்திரர் மன்னிப்பாராக. (என்னையும் சேர்த்துதான்). சரி, வேறு நிகழ்ச்சி பார்க்கலாம் என்று கலைஞருக்கு மாறினால் அதில் ஆர்யாவின் திரைப்பட இசை வெளியீடு பற்றி ஒரு விளம்பரம். நடிகர் பார்த்திபன் ஆர்யா இந்த அளவில் மட்டுமல்ல. ஏழுயா, எட்டுயா, ஒம்பதுயா என்றெல்லாம் போவார் என்றார். அடப் போங்கய்யா…

மேலும் வாசிக்க