14 ஜூலை, 2011

சிறுகதைக்குள் நுழைதல்


சமீப காலமாகவே உலக இலக்கியம் மற்றும் அழியாசுடர்களுக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள கதைகளைப் படித்து வருகிறேன். அங்கு படித்த கதைகள் தந்த அனுபவம் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளலாமென்ற எண்ணம். நிறைய வாசித்திருந்தாலும் செவ்வியல் இலக்கியங்கள் படிக்கும் முறையான பயிற்சி ஏதும் எனக்கில்லை. எனவே இங்கு பகிரப்படுபவைகளை விமர்சனமாகக் கொள்ளலாகாது. நான் கதைகளை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டேன் என்பதையே அவை காட்டும். மேலும் நல்ல சிறுகதைகள்  படிக்க விழையும் ஒருவருக்கு இந்தப் பதிவுகள் தூண்டு கோலாக அமைந்தால் அது எனக்கு மகிழ்ச்சி தரும்.
பெரும்பாலும் உலக இலக்கியம் தளத்திலுள்ள கதைகளையே வாசித்து வருகிறேன். நேரடித் தமிழ்க் கதைகளைப் படிப்பதைவிட மொழிபெயர்ப்புக் கதைகளில் நமக்குத் தட்டுப்படும் உலகம் பிரத்யேகமானது. தொடர்ந்த நிதானமான வாசிப்பில் கதைகள் கொண்டிருக்கும் பல்வேறு தளங்கள் நமக்குப் புலப்படுமெனினும், இணையத்தில் நீண்ட நேரம் வாசிக்கையில் கண் வலிக்கிறது. அதனாலயே ஒரு முறை வாசிப்பில் இக்கதைகள் பற்றி எழுத வேண்டியிருக்கிறது.
முதல் கதை நான் காலச்சுவடு தளத்தில் படித்தது. பா. வெங்கடேசன் எழுதிய வெறும் கேள்விகள் என்ற சிறுகதை. முதுமையின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதன் தான் சந்திக்கும் நபர்களிடம் தனக்கு அறிமுகமானவர்களைப் பற்றி அவர்கள் உயிரோடிருக்கிறார்களா என்று அறிந்து கொள்ளாமலேயே விசாரிக்கும் கேள்விகள் அவனை சங்கடத்துக்குள்ளாக்குகின்றன. தன கேள்விகளால் உருவாகும்  பிரச்னைகளைச் சமாளிக்க விரும்பும் அவன் தன் கேள்விகளின் போக்கை மாற்றுகிறான். பார்ப்பவர்களிடம் தனக்கு அறிமுகமானவர்களை இறந்தவர்களாக முடிவு செய்து கொண்டு கேள்விகள் கேட்கிறான். விதியோடு தான் ஆடும் விளையாட்டில் வென்று விட்டதாகவே நினைக்கிறான். ஒரு முறை கோபத்தில் வீடு விட்டு வெளியேறி அலைந்து, தன் பால்ய கால சிநேகிதியைக்  கண்டு அளவளாவுகிறான். வீடு திரும்பியவுடன்தான் அவள் ஏற்கனவே இறந்து விட்டாள் என்றும், அது அவனுக்கும் முன்பே தெரியும் என்று அவனது வீட்டார் மூலம் தெரிய வருகிறது. விதி இவனை எதிர்த்துக் காய் நகர்த்தியிருக்கிறது என்று புரிந்து கொள்கிறான். இருப்பினும் அவன் மனம் தான் கொண்டிருக்கும் புரிதல்களையே ஏற்றுக்கொண்டு திருப்தியடைகிறது.
ஒரு முதியவனின் உலகில் புகுந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது இக்கதையில். அவனது பார்வையில் அவனது வீட்டார் அனைவரும் அடையாளமிழந்து விடுகிறார்கள். மகளைப் போலிருந்த பெண், மனைவியைப் போல் தோற்றமளித்த பெண் என்றுதான் அவன்  தன் வீட்டுப் பெண்களைப் பார்த்துப் புரிந்து கொள்கிறான்.
நீளம் நீளமான வாக்கியங்கள் குழப்பினாலும் தன் அடையாளங்களை மெல்ல மெல்ல இழக்கும் ஒரு முதியவனைப் பற்றிய, நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிற கதை.
கதையை வாசிக்க    வெறும் கேள்விகள்
செல்மா லாகர் லேவ் என்ற, ஆயிரத்து எண்ணூறுகளில் வாழ்ந்த ஒரு ஸ்காண்டிநேவிய பெண் எழுத்தாளரின் தேவமலர் என்கிற சிறுகதை (மொழிபெயர்ப்பு க.நா.சு.) யதார்த்த வாதம் கொடிகட்டிப் பறந்த காலந்தில் எழுதப்பட்ட அற்புதமான மாயக்கதை. நான் இந்தக் கதையை வாசித்து விட்டு என் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொன்னபோது அவர்கள் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். காலம் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும் நல்ல இலக்கியத்தின்வலிமை எனக்கு அப்போது புரிந்தது.
ஊரை விட்டு ஒதுக்கி காட்டில் குடும்பத்தோடு வாழப் பணிக்கப்படுகிறான் ஒரு திருடன். அவன் மனைவி ஒரு நாள் பிச்சை எடுப்பதற்காக ஊருக்குள் வருகிறாள். அப்போது மதகுரு ஒருவரின் தோட்டத்தைக் கண்டு பார்வையிட, அங்கிருப்பவர்கள் அவளை விரட்ட முனைகிறார்கள். அவள் மறுக்கிறாள். மதகுரு வந்ததும் இதைவிட அற்புதமான தோட்டத்தை கடவுள் காட்டில் எங்களுக்காக சிருஷ்டிக்கிறார்  என்கிறாள். அதைக் காட்டினால் கணவனுக்கு விடுதலை என்கிற நிபந்தனையோடு அவளோடு செல்கிறார் மதகுரு. காட்டில் அவர் காணும் அற்புதத் தோட்டம் கடவுளின் வருகைக்கான வரவேற்புக் கம்பளம் என்று புரிந்து கொள்கிறார். ஆனால் அவருடன் வந்த  சந்தேக மனம் படைத்த சிஷ்யனின் செயலால் தோட்டம் நாசமடைகிறது. கள்ளங்கபடற்ற உள்ளத்தில் மட்டுமே கடவுள் குடியிருப்பார் என்பதை விளக்கும் கதை. கதை தரும் அனுபவம் சுகம்.
புதுமைப்பித்தனை  கல்லூரியில் படித்தது மறக்கமுடியாதது. அவரது பால் வண்ணம் பிள்ளை தந்த அதிர்வுகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன. கட்டிலை விட்டிறங்காக் கதை என்ற அவரது சிறுகதை  குழந்தைப் பேறற்ற ஒரு அரசனின் கட்டிலில் குடியிருக்கும் மூட்டைப் பூச்சி ஒன்றின் குடும்பம் பற்றியது. புதுமைப் பித்தனின் கையில் தமிழ் ஒரு வாளைப் போல சுழன்று கொண்டே இருக்கிறது. அவரது உரைநடை வீச்சின் வேகம் நமது மனதின் வேகத்தை விட அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. புதுமைப்பித்தனை முழுமையாகப் படித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
லெனினை வாங்குதல் என்ற கதை ஒரு ரஷ்ய எழுத்தாளருடையது. பெயர் நினைவுக்கு வரவில்லை.  புகைப்படத்தில் மிக இளமையாகத் தெரிகிறார். ரஷ்யாவில் கம்யூனிசம் அழிந்த பின்னரும் அந்த சித்தாந்தத்தில் நம்பிக்கையோடு இருக்கும் அவரது தாத்தாவைப் பற்றிய கதை. இணையத்தில் பொருட்களை விற்கு இ பேஇலிருந்து லெனினின் சடலத்தை தன் பேரனின் உதவியோடு  மலிவான (பத்து டாலர்!)விலைக்கு வாங்குகிறார் தாத்தா. கம்யூனிச காலத்தின் நினைவுச் சின்னங்களைச் சேகரிக்கையில் தான் முன்பு செய்த மிகப்பெரும் தவறு அவருக்குத் தெரிய வருகிறது. பெரிய கதை. பொறுமையாகப் படித்தால் பலனுண்டு.
தொடர்ந்து கதைகள் படித்தபடி அவை உருவாக்கும் சலனங்களை இங்கு பகிர்ந்திட எண்ணம். குறைந்த பட்சம் எனக்காவது அது உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கொஞ்ச நாட்கள் கழித்துக் கதைகளை மீண்டும் வாசிக்க வாய்ப்பு ஏற்படுபோது நான் அவற்றை எவ்வளவு மோசமாகப் புரிந்து கொண்டேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவாவது இவை பயன்படட்டுமே. மேலும் ஒத்த கருத்துள்ள நண்பர் எவரேனும் இப்பதிவுகளைப் படித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது அது என் புரிதல் மேம்பட உதவும் என்று நம்புகிறேன்.

11 ஜூலை, 2011

ஜி. எச்

சிறுகதை
எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலைக் கொஞ்சம் குழப்பமாகத்தான் சொல்ல முடியும். கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ என்னால் உறுதியாச் சொல்லி விட முடியாது. இதே பதில்தான் காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கும். இளமைப் பருவத்தின் ஆரம்ப நாட்களில் அது இருப்பது போலவும் தோன்றுகிறது. மத்திம மற்றும் இறுதி நாட்களில் அது இருக்கிறது என்று நிரூபிப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது.
ஆனால் ஆவிகள் இருக்கிறதா என்ற கேள்வி வந்தால் அதற்கான பதில் என்னைப் பொறுத்தவரை எளிது. என் காரண அறிவும், நான் கற்றுத் தேர்ந்த கல்வி எனக்குக் கொடுத்திருக்கிற பின்புலமும் ஆவிகள் இல்லை என்று நான் அறுதியிட்டுக் கூற உதவி செய்யும். ஆவிகளில் எனக்கு இதுவரை நம்பிக்கையிருந்ததில்லை. சிறுவயதில் பார்த்த திகில் திரைப்படங்கள் கூட பயமுறுத்தினதில்லை.  ஒரு முறை மதியம் தூங்கி எழுந்திருந்த போது, காயப்போடப்பட்டிருந்த  தாத்தாவின் வேஷ்டியில் ஏற்பட்ட அலைவுகள் ஆவிகள் அசைவது போலவே இருந்தது. நீண்ட நேரம் அதன் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சிந்தனைச் சிற்பி போல பாவித்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேனே தவிர பயமெதுவும் ஏற்படவில்லை. ஆவிகளை விட அறியாமைதான் அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்மை மீறிய கடவுள் என்ற ஒரு சக்தி உண்டா என்ற முடியாத விவாதத்தைப் போல, ஆவிகள் இருக்கின்றனவா இல்லையா என்பதும் ஒரு தீராத சர்ச்சைக்குரிய கேள்விதான்.
ஆவிகள் மீதான நம்பிக்கையின்மை என் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தடையாக நின்றது. முதுகலையில் உளவியல் எடுத்துப் படித்த பின்பு, முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்த போது எனக்கு வழிகாட்டியாகக் கிடைத்த பேராசிரியர் என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன தலைப்பு பாரா நார்மல் பிஹேவியர் மற்றும் பாரா சைக்காலஜி. அதிலும் கடைசியாக நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக் கட்டுரை ஆவிகள் பற்றியதாக இருந்தது. ஆவிகளை நேரில் கண்டதாகச் சொல்கிறவர்கள், ஆவிகளோடு தொடர்பு கொள்வதாகச் சொல்கிறவர்கள் இந்த மாதிரியான நபர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அந்தக் குறிப்பிட்ட அனுபவத்திற்குப் பின் அவர்களது உளவியலில் ஏற்பட்டிருக்கிற பாதிப்பு குறித்துத்தான் ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இணையத்திலும், புத்தகங்களிலும் நான் தேடின ஆவிகள் பற்றிய அனுபவங்கள் காதுகளுக்குள் குரல் கேட்டல், நிழல் மனிதன் ஒருவன் தொடர்ந்து வருவது, படுக்கையில் தினமும் அருகில் உறங்கும் பெண் என விசித்திரமானவையும், வினோதமானவையுமான நிகழ்வுகளாக இருந்தன. என்னதான் இணையத்திலும், நூல்களிலும் இது சம்பந்தமான தகவல்கள் குவிந்து கிடப்பினும், நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்களிடமிருந்து ஆவிகள் சம்பந்தப்பட்ட அனுபவங்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறைந்த பட்சம் எழுபது சதவீதமாவது இருக்க வேண்டும் என்று என் வழிகாட்டிப் பேராசிரியர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.
முப்பது சதவீதத்தை முடித்து விட்டு மீதி எழுபது சதவீதத்துக்குத் திணறிக் கொண்டிருந்தேன். சேந்தமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் ஓர் இளம்பெண்ணுக்கு ஆவி பீடித்திருப்பதாகவும், நாற்பது வருடங்களுக்கு முன் சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதால் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஓர் இளைஞனின் ஆவிதான் அவள் மீது இறங்கியிருக்கிறதென்றும் நாமக்கல்லில் இருக்கிற என் சித்தப்பா தகவல் கொடுத்தார். ஆவி பீடிக்கும் சமயங்களில் ஆண்குரலில் பேசுகிறாளாம். நாற்பது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை அட்சரம் பிசகாமல் ஒப்பிக்கிறாளாம். தன்னைக் கொன்றவர்களின் தலைமுறை தழைக்கக் கூடாது என்பதற்காகவே அந்தப் பெண்ணின் மீது இறங்கியிருப்பதாகவும், அவர்களை வேரறுக்காமல் விடமாட்டேன் என்றும் நடுத்தெருவில் வந்து வெறியாட்டம் போடுகிறாளாம். எல்லை முனியப்பன் கோயில் பூசாரியைக் கொண்டு அவளுக்குப் பேயோட்டும் வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. இப்போது போனால் நிறையத் தகவல்கள் சேகரிக்க முடியும் என்று என் சித்தப்பா சொன்னார்.
சேந்தமங்கலத்திற்குப் போவதற்காக மனதளவில் என்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் போதுதான் நவநி மாமா அலைபேசியில் கூப்பிட்டார்.
‘மாமா எத்தனை வருஷம் ஆச்சு? லோக்கல் நம்பரா இருக்கு. எப்ப இந்தியா வந்தீங்க?’ என்றேன்.
‘நாலு நாளாச்சு. இப்போ ஏற்காட்டில் தங்கியிருக்கேன். உன்னைப் பாக்கணும். வர்றியா?’
மாமாவை வீட்டுக்கு வாங்க என்று சொல்லத் தயக்கமாக இருந்தது. ‘ மாமா, நாளைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. சேந்தமங்கலம் வரைக்கும் போகணும். நாளான்னிக்கு வரட்டுமா?’
‘இல்லை. நான் இன்னும் ரெண்டு நாள்ல கெளம்பறேன். நீ அந்த வேலையை அப்புறம் பண்ணக் கூடாதா? நான் உன்னைப் பாக்கறது கூட அவ்வளவு சிரமமா?’ என்றார். அவரது குரலில் குற்றம் சாட்டும் தொனி இருந்தது.
அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் மிகுந்துதான் இருந்தது. சேந்தமங்கலம், பயணத்தை இன்னொரு நாள் ஒத்திப் போட்டு விடலாம். முதலில் நவநி மாமாவைப் பார்க்கலாம். பத்து வருடங்களிருக்குமா அவரைப் பார்த்து?
ஏற்காட்டில் அவரைப் பார்த்து விட்டு அங்கிருந்து சேந்தமங்கலம் சென்று விடலாம் என்ற திட்டத்துடன் என் ஆய்வுக்குறிப்புகளை ஒரு பையில் எடுத்துப் போட்டுக் கொண்டு, மறுநாள் காலை கிளம்பிப் பேருந்தில் ஏற்காடு பயணமானேன். வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. தெரிந்தால் நிச்சயம் போகவிட மாட்டார்கள்.
என் அத்தை பையன் நவநி மாமா என்கிற நவநீத கிருஷ்ணன் பத்து வருடங்களுக்கு முன் என் வாழ்வின் கதாநாயகன். அவர் உடையணிகிற நேர்த்தியும், நடையின் கம்பீரமும், மென்மையான அதே நேரம் அழுத்தமான பேச்சும், நான் இருக்கிறேன் ஆதரவாய் என்று சொல்லும், உதட்டில் நிரந்தரமாகவே தங்கியிருக்கிற புன்னகையும் எவரையும் பார்த்ததும் வசீகரித்து விடும். நான் அவரைப் பார்த்துப் பார்த்து, பெரியவனானால் இவரைப் போலவே நானும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இப்போது கூட தொண்ணூறு சதவீதம் அவரைப் போலவேதான் என்னைப் பாவித்துக் கொண்டு நடந்து கொள்கிறேன்.
அவரது வசீகரம் என்னைக் கவர்ந்தது போலவே என் அக்காவையும் கவர்ந்தது. நவநி மாமாவுக்கும் அக்காவைப் பிடித்திருந்தது. அக்கா பனிரெண்டாவது முடிக்கும் வரை, நவநி மாமாவும், அவளும் பழகிக் கொள்வதையும், நெருங்கிப் பேசுவதையும் எங்கள் வீட்டில் யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. நவநி மாமாவின் பெற்றோர் அவருடைய சிறு வயதிலேயே ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவரது பாட்டியின் ஆதரவில்தான் படித்து வந்தார். எங்கள் குடும்பம் கொஞ்சம் வசதி கூடின குடும்பமாக இருந்த படியால் நவநி மாமா எங்களோடு நெருங்கி வருவது என் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. கையில் காசு இல்லாவிட்டால் கவர்ச்சி, வசீகரம் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?
குறிப்பாக எங்கே இவன் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போய் விடுவானோ என்று அவருக்கு பயமிருந்தது. அந்த பயத்தாலேயே அக்கா கல்லூரி செல்ல ஆரம்பித்த பிறகு நவநி மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் என் பெற்றோர் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தனர். நவநி மாமாவும் புரிந்து கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.
 அந்த நாட்களில்தான் நான் நவநி மாமாவுக்கு நெருக்கமானேன். அக்காவுக்கும், அவருக்குமிடையே கடிதப் பரிமாற்றத்துக்கும், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் நான்தான் உதவினேன். மாமா கொலுசு, மெட்டி, கைக்கடிகாரம், கைப்பை என்று விதவிதமாக என்னிடம் கொடுத்து அனுப்புவார். அக்காவிடமிருந்து இதுவரை ஒரே ஒரு பரிசுதான் அவருக்குச் சென்றிருக்கிறது.. ஒரு வெள்ளிக் குத்து விளக்கு. இதென்ன எண்பதுகளின் திரைப்படக் காதலர்கள் போல நடந்து கொள்கிறீர்கள் என்று நான் கிண்டலடித்தது ஞாபகம் வருகிறது. அக்காவுக்குக் கல்லூரி முடிந்ததும் இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நேரத்தில் நவநி மாமாவுக்கு துபாயில் மென்பொருள் துறையில் வேலை கிடைத்தது. அவருக்கு ஒரே மகிழ்ச்சி. வெளிநாட்டு வேலை என்றால் என் அப்பா நிச்சயம் மனமுவந்து தன் பெண்ணைக் கொடுப்பார். பிரச்னை ஏதுமின்றி அக்காவைத் திருமணம் செய்து கொள்ளலாம். பூரிப்பாகவும், துள்ளலாகவும் துபாய் புறப்பட்டுப் போனார்.
அவர் போனபின் அப்பாவுக்கு வசதியாகப் போயிற்று. அமெரிக்காவிலிருந்து வந்த வரனை அக்காவுக்கு முடித்து அனுப்பி வைத்து விட்டார். துபாயை விட அமெரிக்கா பெரிய இடமாயிற்றே! தகவல் நிச்சயம் மாமாவுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் அக்கா திருமணத்திலிருந்து அவர் எங்கிருக்கிறார், என்ன ஆனார் என்ற தகவலே இல்லை, இப்போது என்னைக் கூப்பிடும் வரைக்கும்.
மாலையில் ஏற்காடு சென்று சேர்ந்ததும் அவர் அலைபேசியில் வழிகாட்டியபடி அவர் இருக்குமிடம் சென்று சேர்ந்தேன். மான் பூங்காவுக்கு எதிரில் உள்ள ஓர் ஒற்றையடிபாதயில் சென்றால் மரங்கள் சூழ்ந்த ஓர் ஆடம்பரமான வில்லா வீடு. ஏதோ பயணியர் விடுதி போலிருந்தது. வாசலிலேயே மாமா நின்றிருந்தார். என்னை பார்த்து அதே ஆதரவுப் புன்னகையைக் காட்டி, ‘உள்ளே வா’ என்றார்.
இத்தனை வருடங்கள் மாமாவிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தின மாதிரித் தெரியவில்லை. அப்படியேதான் இருந்தார். கன்னங்கள் கொஞ்சம் சதை போட்டிருந்தன; தொந்தி கொஞ்சம் போட்டிருந்தது. ஆனால் முகத்தில் இப்போது நிரந்தரமாக ஒரு சோகக்களை தங்கி விட்டிருந்தது.
‘இத்தனை நாள் எங்கே போனீங்க மாமா?’ என்றேன்.
‘அயர்லாந்திலே இருக்கேன்’, என்றார். ‘உன் அக்காவுக்குக் கல்யாணம் ஆனதும் ரொம்ப நொந்து போயிட்டேன்.  பணம் இல்லாத்தத்துனாலதான் உங்க அக்கா எனக்குக் கிடைக்கலங்கற வெறியில, நிறையப் பணம் சம்பாதிக்கணும்னு தோணிச்சு. அயர்லாந்தில டப்ளினுக்கு ஒரு சாஃப்ட்வேர் டிசைனராப் போனேன். அங்கு நான் தயாரிச்ச வர்ச்சுவல் சிட்டி சாஃப்ட்வேர் இன்னிக்கு யு.கே முழுக்கப் பிரபலம். மாசம் பத்தாயிரம் டாலர் சம்பளம் குடுத்தான். இன்னிக்கு நேஷனல் பாண்டுகள்ல மட்டும் என் பேரில எண்பது லட்சம் ரூபாய் இருக்கு. ஆனால் என்ன பண்றது? இன்னும் தனியாத்தான் இருக்கேன்’ என்றார்.
‘கல்யாணம் பண்ணிக்கலயா, மாமா?’
‘முடியலடா. மறக்க முடியல உங்க அக்காவை. அவளோட எல்லா நினைவுகளையும் தூக்கிப் போட்டுரணும்னுதான் நினைக்கிறேன். ஆனால் முடியல. நான் தயாரிச்ச சாஃப்ட்வேர் பேர் என்ன தெரியுமா? அகல் விசி.’ என்றார்.
நான் புன்னகைத்தேன். அக்கா பெயர் அகல்யா. அவரால் இன்னும் மறக்க முடியவில்லைதான்.
பச்சை நிறத்தில் உருண்டையான ஒரு பாட்டிலை எடுத்து அதிலிருந்த திரவத்தைக் கோப்பையொன்றில் ஊற்றினார். ‘நீ குடிப்பியா? காலேஜெல்லாம் முடிச்சிட்டே’ என்றார்.
‘சேச்சே அந்தப் பழக்கமெல்லாம் இல்லை’ என்றேன்.  நான் நண்பர்களோடு பியர் குடித்ததுண்டு. ஆனால் இது பிராந்தியோ விஸ்கியோ (இந்த இரண்டு பெயர்கள்தாம் எனக்குப் பொதுவாகத் தெரிந்தவை) தெரியவில்லை. அவர் முன்னிலையில் இன்னும் அதே பதினாலு வயதுச் சிறுவனாகத்தான் உணர்ந்தேன். அவர் ஒரு கோப்பை முடித்து விட்டு இன்னொரு கோப்பை என்று தொடர்ந்து கொண்டே இருந்தார்.சரிதான். தமிழ் சூழலில் காதல் தோல்விக்கு அடுத்த கட்டம் எப்படி இருக்க வேண்டுமோ, அந்தப் பாதையில்தான் இது செல்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
‘இது வாடகை வீடா?’ என்றேன். அப்போதுதான் அந்த வீட்டைக் கவனித்திருந்தேன். வீடு தூய்மையாக இருந்தது. தரையும் மரத்தாலானது. அங்கங்கே மலர் ஜாடிகள் வைக்கப்பட்டு, சுவர்களில் நவீன ஓவியங்கள் தொங்கவிடப்பட்டு, உயர்ரக தேக்கு நாற்காலிகளும், மேஜையும் கட்டிலுமாகத் திருத்தமாக இருந்தது.
‘இதுவா, இதை நான் வாங்கி ஏழு வருஷமாச்சு. இந்தியா வரும் போதெல்லாம் இங்கதான் தங்குவேன்’
‘ஏன் மாமா, ஒரு தடவை கூட எங்களை வந்து பாக்கணும்னு தோணல இல்ல?’ என்றேன்.
தான் பலமுறை பார்க்க வேண்டும் என்று விரும்பி அதற்கு முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கான மனவலிமையைத் தான் இதுவரை பெறவில்லை என்றும் கூறினார். அங்கே தான் வந்தால் வீணாகத் தகராறுதான் ஏற்படும் என்பதலாயே, எங்கள் உறவினர்களைப் பொறுத்தவரை தான் இறந்து போய்விட்டவராகவே இருக்க விரும்பியதாகவும் தெரிவித்தார். அதற்குப் பிறகு தான் அயர்லாந்தில் நிலைபெறுவதற்காகப் பட்ட சிரமங்களையும், அங்கு தான் நிகழ்த்திய சாதனைகளையும் விவரித்துக் கொண்டே போனார்.
அதிகாலை மூன்று மணி ஆகி விட்டிருந்தது. இதுவரையிலும் இரண்டு பாட்டில்களை முடித்திருந்தார். என்னால் என்னவென்று புரிந்து கிரகித்துக் கொள்ள முடியாத புலம்பல் ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்ட வண்ணமே இருந்தது. இதற்கு மேல் போனால் அவர் மயங்கி விழுவதற்கோ, வாந்தி எடுத்துவிடுவதற்கோ அபாயம் இருந்த போதிலும், இத்தோடு போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறுவதற்குத் தயக்கமாகத்தானிருந்தது.
‘நான் காலையில சில டெலிகேட்ஸைப் பார்க்க வேண்டியிருக்கு. காலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிப் போய்விட்டுப் பத்துப் பதினோரு மணிக்கெல்லாம் திரும்பி வந்துடுவேன். நீ இங்கேயே தூங்கிட்டிரு. நான் வந்ததும் ரெண்டு பேரும் ஏற்காடு சுத்திப் பார்க்கலாம்.’ என்றார். பிறகு என் அருகில் பார்வையைச் செலுத்தி, ‘அதென்ன பையில?’ என்றார்.
அது என் ஆய்வுக்கான குறிப்புகள் அதில் இருக்கின்றன என்று சொல்லி, என் ஆய்வு பற்றியும், ஆவிகள் பற்றியதான என் தேடுதல் பற்றியும் அவரிடம் விளக்கினேன்.
அவர் சிரித்துக் கொண்டார். ‘சரி. நீ அந்த சோஃபாவில படுத்துக்கோ. கம்பளி இருக்கு. நான் உள்ள கட்டில்ல படுத்துக்கறேன். காலையில எந்திரிச்சிட்டீன்னா குளிச்சு ரெடியாயிரு. கெய்சர்ல சுடுதண்ணி போட்டுக்க. ஃப்ரிட்ஜ்ல இருந்து ஏதாவது சாப்பிடு.’ என்றபடி உள்ளே போனவர் திரும்பி, ‘அந்தப் பையைக் கொடு’ என்று என்னிடமிருந்து வாங்கி மேஜை மேல் வைத்தார்.
படுத்து நெடுநேரமாகியும் மாமாவின் புலம்பல் அறைக்குள்ளிருந்து கேட்டபடியே இருந்தது. சிறிது நேரத்திலேயே ஆழ்ந்து உறங்கி விட்டேன். காலையில் விழிப்பு வந்தபோது மணி ஏழரையாகியிருந்தது. மாமா உள்ளே இல்லை. வெளியே போயிருக்க வேண்டும். அவரது படுக்கைக்கு அருகில் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. நான் குளித்து விட்டுச் சிறிது நேரம் உள்ளேயே இருந்து அந்த வீட்டை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். பிறகு சலிப்பு மேலிட வெளியே கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன்.
ஒரு உணவகத்தில் சிற்றுண்டியை முடித்து விட்டு, சற்று நேரம் ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஆட்டோ பிடித்தேன். அதன் ஓட்டுனர் இருநூறு ரூபாய் கொடுத்தால் ஏற்காடு முழுக்க சுத்திக் காட்டுகிறேனென்றான். லேடீஸ் சீட், பட்டுப் பண்ணை, கரடிக்குகை என்று சுற்றினோம். ஒவ்வொரு இடத்திலும் சார் போலாமா, சார் போலாமா என்று ஓட்டுனர் அவசரப்படுத்தியபடியே இருந்தான். இறுதியில் நான் பொறுமையிழந்து என்னைக் கொண்டு போய் மான் பூங்காவுக்கு அருகில் விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டேன்.
போகும் வழியில் ஓட்டுனர் என்னிடம், ‘ பாஸ், என்ன படிக்கிறீங்களா?’ என்றான்.
‘ஆமாம். பாரா சைக்காலஜி.’
‘நான் கூட யெம்மேங்க பாஸ். சோசியாலஜி. அண்ணாமலைல பண்ணியிருக்கேன். அதென்னங்க பாஸ் பாரா சைக்காலஜி?’
நான் விளக்கினேன்.
‘அட! அப்ப நீங்க ஜி.எச். பத்தித் தெரிஞ்சிகிட்டா உதவியா இருக்குமே!’
‘ஜி. எச்சா? ஏன் அங்க யாராவது ஆவி பார்த்த மன நோயாளிங்க இருக்காங்களா?’ என்றேன்.
‘ அதில்லிங்க பாஸ். இங்க ஏற்காட்டில ஜி.எச்னா கோஸ்ட் ஹவுஸ். பேய் வீடு. உள்ள போக முடியாது. போலீஸ் தடுப்பு போட்டிருக்கு. தூர நின்னு வேணா பார்த்துக்கலாம்.’
‘அதென்னது அது? சொல்லுங்களேன்’ என்றேன்.
‘ அதிருக்கும் பாஸ், ஏழெட்டு வருஷம். இங்கிலாந்தோ, அயர்லாந்தோ ஒரு ஃபாரின் நாட்டில இருந்து. . . நம்ம ஆள்தான். . . பெரிய கைபார்ட்டின்னு நினைக்கிறேன். இங்க வந்து அந்த வீட்டை வாங்கினான். வாங்கி ஒரு மாசத்துக்கு ஆளு வீட்டை விட்டே வெளிய வரல. பெருங்குடிகாரன். வீட்டுக்குள்ள இருந்தே பாட்டில் பாட்டிலா குடிச்சே தீர்த்துருக்கான். அப்புறம் ஒரு நாள் தொண்டையில சுட்டுகிட்டுச் செத்துப் போயிட்டான். அப்ப அது பெரிய ந்யூசு. நான் அப்ப ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன். நம்மூர் ஆளு ஒருத்தன் கையில துப்பாக்கி இருக்கறதே பெரிய ந்யூசு இல்லையா?. . . ‘
அவன் தொடர்வதற்காகக் காத்திருந்தேன்.
‘ அப்புறம் போலீஸ் வந்து கேசெல்லாம் எழுதி. . . அவன் எந்த நாட்டில இருந்து வந்தானோ அங்க விசாரிச்சா இவனப் பத்தி ஒண்ணுமே தெரியல. கொஞ்ச நாள் காத்திருந்து பார்த்துட்டு, அநாதைப் பொணமாத்தான் எரிச்சாங்க. அப்பலேர்ந்து வீடு பூட்டித்தாங்கெடக்கு. . . ’
‘ஆனா கொஞ்ச நாள்ல ஊருக்குள்ள ஒரு வதந்தி பரவ ஆரம்பிச்சுச்சு. தினம் சரியா பனிரெண்டு மணிக்கு பெட்ரூம்ல தானா விளக்கு எரியற மாதிரி. விளக்குன்னா, ஏதோ அகல் விளக்கு, நெய் விளக்கு மாதிரி. ஒவ்வொரு ராத்திரியும் சின்னதா தீபம் எரியறது ஜன்னல் வழியா தெரியறது. கூடவே விடாது அழுகைக் குரல். கேவல் சத்தம். ஒரு ஆம்பளை அழுதுகிட்டே புலம்பற மாதிரி.  ரெண்டு, மூணு பேரு யதேச்சையா இதப் பார்க்கப் போய் ஜூரம் கண்டு படுத்த படுக்கையாயிட்டாங்க. இப்போ புதுசா அந்த ஆளோட ஆவி வெளிய வந்து உலாத்துறதாகவும் பேசிக்கறாங்க.’ என்றான்.
மான் பூங்கா வந்து விட்டது. ‘ அந்த வீடு எங்க இருக்கு?’ என்றேன். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை முற்றிலும் உணர்ந்தவனாக.
‘ இங்கதாங்க. எதுத்தாப்பில ஒத்தயடிப்பாதை போகுதுல்ல. அதுக்கப்புறம் நிறைய மரம், வீடே தெரியாது. கொஞ்சம் உத்துப் பார்த்தாத்தான் தெரியும். உள்ளே போயிராதீங்க. உயிருக்கு நான் கேரண்டி இல்ல. அந்த கேஸ் டீடெய்ல்ஸ் வேணும்னா சொல்லுங்க. எஸ்.ஐ நம்ம ஆளுதான். அறிமுகப்படுத்தி வைக்கிறேன். வரட்டுமா பாஸ்!’ என்றான்.
நான் மான் பூங்காவுக்கு அருகில் இறங்கி எதிரில் தெரிந்த ஒற்றையடிப்பாதையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆட்டோ ஓட்டுனர் முக்கு திரும்பப்போனவன் வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து என்னருகில் நிறுத்தினான். ‘ என்ன பாஸ் பேகை மறந்து ஆட்டோவிலேயே வுட்டுட்டீங்க. இந்தாங்க பாஸ்.’ என்றான். நான் என் பையை வாங்கிக் கொண்டு அவனுக்கு நன்றி சொல்லி வழியனுப்பினேன்.
எனக்கு ஏதோ புரிந்த மாதிரித் தெரிந்தது. சட்டென்று என் பையைத் தூக்கி ஜிப்பைத் திறந்து பார்த்தேன். உள்ளே பளபளவென்று வெள்ளிக் குத்து விளக்கு ஒன்று படுத்துக் கிடந்தது.

6 ஜூலை, 2011

சாதகனின் தகுதிகள்


    அபரோக்ஷ அனுபூதி என்ற நூலின் துவக்கத்தில் ஷங்கரர் தான் நோக்கத்தையும், யாருக்காக இந்த நூல் இயற்றப்படுகிறது என்பது பற்றியும், இந்த நூலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகிறார்.
அபரோக்ஷ அனுபூதி என்ற இந்த நூலைக் கற்பதன் தலையாய நோக்கம் மோக்ஷம் என்ற பலனுக்காகவே. மோக்ஷம் என்பது குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் சாஸ்திரத்தின் அடிப்படையில் மோக்ஷம் என்பதன் உண்மையான பொருள் முழுமையான மனநிறைவு என்பதாகும். இந்த முழு மனநிறைவு எந்தச் செயலாலும் அடையப்படுவதில்லை. தன்னைப் பற்றிய உண்மையான ஞானத்தால் மட்டுமே அடையப்படுகிறது. மோக்ஷம் என்பது ஜீவன் முக்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஜீவன் முக்தி என்றால் இந்த உடலில் வாழும்போது நிறைவுடன் வாழ்தல் என்று பொருள். ஆத்ம ஞானத்தை அடையும் ஒருவன் தனது பிராரப்தம் முடியும் வரை ஜீவன்முக்தனாக வாழ்ந்து இறக்கிறான். அவ்வாறு இறத்தல் அவனது கடைசி மரணம் ஆகும். அதற்குப் பிறகு அவனுக்கு மரணம் இல்லை. அதாவது அவனுக்கு மறுபிறப்பில்லை. ஒரு ஜீவன்முக்தன் இறுதியாக உடலை விடும் நிகழ்வு விதேஹ முக்தி எனப்படுகிறது.
மனதை முழுமையாக நிறைக்கும் ஆவல் கொண்ட, மோக்ஷம் தவிர வேறெதுவும் லட்சியமில்லை என்ற தீர்மானம் கொண்ட, அந்த லட்சியத்தை அடையும் பயணத்தைத் துவக்குவதற்கான தகுதிகளையும் கொண்ட சத்புருஷர்களுக்காகவே இந்நூல் இயற்றப்படுகிறது. முழுமையாகத் தகுதிகளை அடையாதவர்கள் சாஸ்திரத்தைக் கற்க விழையலாமா என்ற ஐயம் எழக்கூடும். தகுதிகள் அற்ற ஒருவர் சாஸ்திரத்தைக் கற்கத் துவங்கும் போது, முதலில் சாஸ்திரம் அவருக்குத் தகுதிகளைக் கொடுத்து, பிறகு தொடர்ந்த சாஸ்திரக் கல்வி அதன் இறுதிப் பலனான ஆத்ம ஞானத்தையும், மோக்ஷத்தையும் கொடுக்கிறது.
இந்நூலைக் கற்கவிருப்பவர்கள், முழுமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், மீண்டும், மீண்டும் நன்கு விசாரம் செய்ய வேண்டும். சாஸ்திரத்தைப் பலமுறை படிக்கும்போதுதான் மனதிலிருக்கும் தோஷம் ஒவ்வொன்றாக நீங்கி ஞானமும், ஞானநிஷ்டையும் வாய்க்கும்.
அடுத்ததாக ஷங்கரர் சாஸ்திரத்தைக் கற்பதற்கான, அதாவது ஞானயோகப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான தகுதிகள் பற்றியும், அவற்றை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் விளக்குகிறார். இதற்கு அதிகாரித்துவ லாப உபாயம் என்று பெயர். ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற கடமைகளை ஒழுங்காகச் செய்தல் என்ற ஸ்வதர்ம அனுஷ்டானத்தை கடைபிடித்து இறைவனைத் திருப்திப்படுத்துவதன் மூலம் வைராக்யம் முதலிய நான்கு பண்புகள் உற்பத்தியாகின்றன. ஸ்வ என்றால் அவரவர்களுக்குரிய என்று பொருள். ஒருவன் எந்த ஆஸ்ரமத்தில் இருக்கிறான் என்பதைப் பொறுத்து அவனது கடமைகள் மாறுபடும். ஆஸ்ரம் என்றழக்கப்படுகிற வாழ்க்கை நிலை, நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆஸ்ரமத்திலும் இருக்கிறவர்களுக்கென்று உரிய கடமைகளைச் செவ்வனே ஆற்றுவதன் மூலம் நம் மனம் செம்மையடைந்து, ஞானயோகப் பயிற்சிக்கான தகுதிகளைப் பெறுகிறது. ஸ்வதர்மத்தை மட்டும் கடைபிடித்து தகுதிகள் அடைவதற்குத் தாமதமாகுமெனில் யாத்திரை, உபவாசம் போன்ற தவங்களைச் செய்வதன் மூலம் தகுதியை அடையலாம்.
இனி தகுதிகளைப் பற்றிப் பார்க்கலாம். ஷங்கரர் இங்கு முதலில் வைராக்யம் என்ற தகுதியைப் பற்றிப் பேசுகிறார். வைராக்யம் என்பது அதிகபட்ச இன்பம் பயக்கக் கூடிய பிரம்மலோகம் தொடங்கி, பூலோகம் வரையிலான அனைத்து உலகங்களிலும், அந்த உலகப் பொருட்களிலும் உள்ள பற்றின்மையேயாகும். த்ருஷ்ட ஸ்ருத விஷயே வைராக்யம். பார்த்த, கேள்விப்பட்ட பொருட்களின் மீதுள்ள பற்றின்மையே வைராக்யம். இரண்டு விதமான வைராக்யங்கள் உள்ளன. ஒன்று, ஜிகாஸா வைராக்யம், அதாவது ஒரு பொருள் மீது கொண்ட வெறுப்பினாலோ, அல்லது பலவீனத்தாலோ வரும் பற்றின்மை அல்லது வெறுப்பு. மற்றொன்று, ஜிக்ஞாஸா வைராக்யம், அதாவது பொருட்கள் நிலையற்றவை என்ற அறிவினால் வரும் பற்றின்மை. உண்மையான வைராக்யம் என்பது பற்றின்மையே தவிர வெறுப்பு அல்ல. It is indifference; not hatred. வைராக்யம் கொண்ட ஒருவர் அன்பு, பாசம் கருணை போன்ற பண்புகளைக் கொண்டிருக்க மாட்டார் என்பது பொருளல்ல. காக்கையின் எச்சத்தைக் கண்டால் நமக்கு என்ன பாவனை ஏற்படுமோ அதே பாவனைதான் மோகத்தைக் கொடுக்கும் உலகப் பொருட்களிடத்தும் ஏற்பட வேண்டும். இப்படிப்பட்ட பாவனை கொண்ட வைராக்யம்தான் முழுமையானது.
வைராக்யம் என்ற இந்தப் பண்பு ஷமம், தமம் முதலிய பண்புகள் உற்பத்தியாகக் காரணமாகிறது. குரு சேவை, தவம், ஸ்ரத்தை முதலிய பண்புகளுக்கும் காரணமாகிறது.
அடுத்ததாகப் பேசப்படும் பண்பு விவேகம். விவேகம் என்ற சொல்லுக்கு விவேசனம், பிரித்தல் என்று பொருள். நிலையான, உண்மையான பொருளும், நிலையற்ற பொருளும் கலந்துள்ளது. அதை அறிவளவில் பிரித்தலே விவேகம் எனப்படுகிறது. அறிவினால் பிரித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, இது நித்யம், இது அனித்யம் என்ற நிஸ்சய அறிவுடன் புத்தி இருந்தால் அந்த அறிவே விவேகம் எனப்படுகிறது. தன் சொந்த அனுபவத்தையும், உலகோர் அனுபவத்தையும் சுயமாக ஆராய்ந்தும், காரணம் காரியத்தைக் காட்டிலும் மேலானது என்ற அனுமானத்தின் அடிப்படையிலும், ஸ்ருதியின் மேலுள்ள ஸ்ரத்தையால் ஏற்பட்ட, நித்யத்தைப் பற்றிய ஆபாச (அரைகுறை) ஞானத்தினாலும் என்னுடைய உண்மையான தன்மை சாஸ்வதமானது; நான் பார்த்து அனுபவிக்கும் இந்த உலகம் என் உண்மையான தன்மையான ஆத்ம ஸ்வரூபத்துக்கு மாறானது என்ற அறிவை ஒருவன் அடைகிறான். இந்த அறிவை அடைவதற்கு சாத்விகமான மனதால் மட்டுமே முடியும். சாத்விகமான மனம் மட்டுமே பிரித்துப் பார்க்கும் ஆற்றலுடையது. கீதையில் பகவான் சாத்விகப் பண்புகள், சாத்விக உணவு போன்றவை பற்றி விரிவாகக் கூறுகிறார்.
விவேகத்தின் பலன் வைராக்யம் ஆகும். விவேகம் விதை என்றால் வைராக்யம் மரம். விவேகமும், வைராக்யமும் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளும் பரஸ்பர உபகாரிகள். எண்ணெய் தொன்னையையும், தொன்னை எண்ணெயையும் தாங்கிப் பிடிப்பதைப் போல.
மூன்றாவது பண்பு ஷமம் எனப்படும் மன அடக்கம் அல்லது மன அமைதி ஆகும். முதலில் சாஸ்திரத்தில் சிந்திக்காதே என்று சொல்லப்பட்ட விஷயங்களின் எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.நிஷித்த சிந்தா திரஸ்கார: இவ்விதமான எண்ணங்கள் ரகசியமானவையாதலால் நாம்தான் முயற்சி செய்து செயல் வடிவம் எடுக்கும் முன் இவற்றை நிறுத்த வேண்டும். இரண்டாவது அனர்த்த சிந்தா திரஸ்கார: பயனற்ற விஷயங்களைச் சிந்திப்பதை நிறுத்துதல். இதனால் நமக்கு ஏற்படும் பெரும் இழப்பு காலம் ஆகும். நமக்கு உள்ளேயிருக்கும் சம்ஸ்காரங்களிலிருந்து தோன்றும் பதிவுகள் விடாது தியாகம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே ஷமம் ஆகும்.
ஷமம் என்ற பண்பை அடைவதற்கான உபாயங்கள்: வைராக்யம் ஷமத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. அடுத்து நற்பண்புகளை வளர்த்திக் கொள்ளுதல். கீதையில் பகவான் தெய்வாசுர சம்பத் என்ற தலைப்பில் சொன்ன தெய்வீகப் பண்புகளை பயிலுதல்; பிறகு தியானம்; இது மனதுக்குக் கொடுக்கும் பயிற்சி ஆகும். ரமண மகரிஷி உன் எண்ணங்களைக் கவனித்துக் கொண்டேயிருந்தால் மனம் தானாகவே அடங்கி விடும் என்று கூறியிருக்கிறார். எந்தவித எண்ணங்கள் எழுந்தாலும் அவை பாதிக்காமல் மனதைப் பாதுகாத்தலே ஷமம் எனப்படும்.
நான்காவது பண்பு தமம் ஆகும். இது இந்திரியக் கட்டுப்பாடு அல்லது புலன் அடக்கம் ஆகும். இதுவும் இருவகையில் மேற்கொள்ளப் படுகிறது. சாஸ்திரத்தில் தடை செய்யப்பட்ட செயல்களை நிறுத்துதல். நிஷித்தப் பிரவிருத்தி திரஸ்கார: பயனற்ற செயல்களை நிறுத்துதல். அனர்த்தப் பிரவிருத்தி திரஸ்கார: புலன்களைத் தண்டித்தலே தமம் (தண்டனம் தம:) என்றும், வெளிப்புலன்களை ஒழுங்கு படுத்துதலே தமம் என்றும் ( நிக்ரஹ பாஹ்ய வ்ருத்தினாம் தம: இதி அபிதீயதே) கூறப்படுகிறது.
இனி தமத்துக்கான உபாயங்களைப் பார்க்கலாம். புலன்களை மயக்கும் சூழ்நிலையிலிருந்து விலகிவிடுதல் தமத்துக்குப் பேருதவியாக இருக்கும். தனிமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு பலஹீனம் உள்ள விஷயத்தில் விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். விரதம் எடுத்துக் கொள்ளுதல் நமக்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொடுக்கும். 

4 ஜூலை, 2011

பேசும் மலர்


குறுங்கதை
பாழடைந்த கட்டிடமொன்றின் சுவர்களோரம் வளர்ந்து நிற்கிற செடிகளினூடே பேசும் மலரொன்றைச் சந்தித்தேன். மற்ற செடிகளைவிட உயர்ந்து வளர்ந்திருந்த செடி ஒன்றின் காம்பின் நுனியில் சிறு குழந்தையின் மூடின கையளவில், மென் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்த மலர். முதலில் அதன் பொலிவால் கவரப்பட்டுத்தான் அதனருகில் சென்றேன். திடீரென்று அது பேச ஆரம்பித்ததும் அதிர்ச்சியில் பின்வாங்கி விட்டேன். மலரோ என் அதிர்ச்சியைக் கவனியாததைப் போல தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் இதழ்கள் குவித்துப் பேசிக்கொண்டேயிருந்தது. ஆரம்பத்தில் திட்டம் செய்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு கணிப்பொறியைப் போலத்தான் அது தனக்குள் பதிவு செய்யப்பட்டிருந்தவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. அந்த மலர் என்னை விளித்துத்தான் பேசிக் கொண்டிருந்ததென்றும், அது முதலில் ஆரம்பித்து ஆற்றிய அர்த்தமற்ற சொற்பொழிவு என்னை வரவேற்கத்தான் என்பதும் எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது.
அது முதலில் பேசிய பேச்சின் தொனியும், ஒலியும் எனக்குப் புரியாததால் அதன் பேச்சைப் பொருள் கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அதன் பேச்சு பாணி எனக்குப் புரிய ஆரம்பித்து விட்டது. அதன் தலைமுறைகளில் அது சந்திக்கிற முதல் பேசும் மிருகம் நான்தான் என்று தன் முன்னோர்கள் சொன்னதை வைத்துப் புரிந்து கொண்டதாக அது சொன்னது. தான் அன்று காலையில்தான் மலர்ந்ததாகவும், அந்தக் கட்டிடத்தின் சுவர்களோரம் வளர்ந்து நிற்கிற செடிகளில் ஏதாவது ஒன்றில் ஒரு நாளைக்கு ஒரே பூதான் பூக்குமென்றும், பூக்கிற ஒற்றைப் பூவுக்கும் ஒருநாள்தான் ஆயுள் என்றும் சொன்னது. அந்த ஒருநாள் வாழ்வில் பேசும் மிருகமான மனிதர்களைச் சந்தித்துவிட வேண்டும் என்பதே அதன் தலைமுறைகளின் லட்சியமாக இருந்தது. அதன் காரணம் என்ன என்று கேட்டேன். ஏதோ ஒரு மனிதனைத் தன் வாழ்நாளில் ஒருமுறை சந்தித்து, அவனுக்குத் தங்கள் உலகத்தைக் காட்டித் தரவேண்டுமென்பதே தங்களுக்கு இடப்பட்டிருக்கிற பணி என்று சொன்னது அந்த மலர். எதற்கு மனிதன் அவர்கள் உலகத்தைக் காண வேண்டும் என்ற கேள்வியைவிட, எனக்கு அவர்கள் உலகத்துக்குள் நுழைந்து பார்த்து விட வேண்டுமென்ற ஆவல் அதிகமாகி விட்டது. என்னை உடனே கூட்டிச் செல், நான் உன்னோடு வருகிறேன். உன்னை பறித்து என் கைகளில் வைத்துக் கொள்ளட்டுமா? நீ எனக்கு வழிகாட்ட ஏதுவாக இருக்கும் என்றேன். மலர் சொன்னது: என்னைப் பறித்தால், பேசும் சக்தியை இழந்து விடுவேன். செடியோடு பிணைந்திருக்கையில்தான் எனக்குப் பேசும் சக்தி உண்டு. அப்படியெனில் உன்னை வேரோடு பறித்து ஒரு தொட்டிக்குள் பதித்து, எடுத்துக் கொள்கிறேன் என்றேன். சீக்கிரம் செய், மாலைக்குள் நான் வாடி விடுவேன். அதற்குள் உனக்கு எங்கள் உலகைக் காட்ட வேண்டும் என்றது மலர். நீ வாடி விட்டால் நான் எவ்வாறு என்னுலகுக்குத் திரும்புவது என்றேன் நான். அது பற்றி நீ கவலை கொள்ளத் தேவையில்லை. இங்கு நான் ஒருத்திதான் பேசும் சக்தி கொண்டவள். என்னுலகில் என் சகோதரிகள் அனைவரும் பேசும் சக்தியும், சிந்திக்கும் திறனும் பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் இந்த உலகுக்கு நீ வந்து சேர வழி காட்டுவார்கள் என்றது மலர்.
அவசரமாக ஒரு தொட்டியைக் கண்டு பிடித்து, அந்த மலர்ச்செடியைப் பறித்து அதற்குள் பதித்தேன். அந்தக் கதவைத் திற என்றது. கதவைத் தொட்டதும் திறந்து கொண்டது. அட இவ்வளவு சுலபத்தில் திறந்து கொண்டதே என்று வியந்தேன். மலரோ திறந்தது உன் தொடுகையல்ல. என் இருப்பே. எங்கள் அனுமதியின்றி எங்கள் உலகத்தில் யாரும் பிரவேசித்து விட முடியாது என்றது. கதவுக்கு அப்பால் மிக நீண்ட ஒற்றையடிப்பாதை தெரிந்தது. அதன் வழியே என்னை நடக்க உத்தரவிட்டது மலர். மலர்ச்செடியைக் கையில் பற்றியபடி ஒற்றையடிப் பாதைவழி நடந்தேன். வெகுதொலைவு நடந்தபின்னும் வினோதமாக எதுவும் தட்டுப்படவில்லை. கால்கள் வலிக்க ஆரம்பித்தன. இன்னும் சிறிது தூரம்தான் என்றது மலர். இன்னொரு பதினைந்து நிமிட நடைக்குப் பின்னர், ஒரு சிறிய ஓடையை வந்தடைந்தோம். பிறந்த குழந்தைகள் பலநூறு மெல்லிய குரலில் சிரிப்பதைப் போல சப்தம் விடாது கேட்டுக் கொண்டிருந்தது. என் முகத்தில் தொங்கிய கேள்விக்குறியைப் பார்த்து விட்டு மலர், அந்த ஒலி ஓடையிலிருந்துதான் வருகிறது. பளிங்குக்கற்களில் நடைபயிலும் ஓடை கிச்சுகிச்சு மூட்டப்படுவதால் அவ்வாறு சிரித்துக் கொண்டே நகர்கிறது என்று விளக்கியது.
சற்று நேரத்தில் நீண்ட கோரைப்புற்களால் பின்னப்பட்ட ஒரு தெப்பம் மிதந்தபடி வந்தது. அதில் ஏறிக்கொள், நம் உலகத்துக்கு இந்தத் தெப்பம் இட்டுச் செல்லும். துடுப்புப் போடத் தேவையில்லை. அதுவே நாம் சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்த்து விடும் என்றது மலர். இருவரும் அதில் ஏறினோம். தெப்பம் ஓடையின் நீரோட்டத்தோடே மென்மையாக நகர்ந்தது. பயணம் எவ்வளவு நேரம் தொடர்ந்தது என்று எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் ஓடையில் இருகரைகளிலும் எங்கும் நான் மனித முகம் பார்க்கவில்லை. புல்வெளியும் மலர்ச்செடிகளுமே நிறைந்திருந்தன. வேறெந்த விலங்குகளையும் கூட என்னால் பார்க்க இயலவில்லை. பயணத்தின் போது மலர் என்னிடம் பேசவேயில்லை. அதன் பொலிவு மங்கிக்கொண்டே வந்திருந்தது.
தெப்பம் நின்ற போது மரங்கள் அடர்ந்த ஒரு கரையில் இருந்தோம். தெப்பத்தினின்றும் இறங்கி நடந்தோம். மரங்கள் வழக்கத்துக்கும் மாறான உயரத்தில் இருந்தன. மேலிருந்து சலசலப்பொலி கேட்டுக் கொண்டிருந்தது. நமது வருகையைப் பற்றித்தான் அவை பேசிக் கொண்டிருக்கக் கூடும் என்றது மலர். அதன் குரல் மிகவும் பலவீனமடைந்திருந்தது. இதழ்கள் அவற்றின் நிறத்தை இழக்க ஆரம்பித்திருந்தன. மரங்களினூடே நுழைந்து வெளி வந்தபோது, ஒரு பிரம்மாண்டமான புல்வெளி தென்பட்டது. ஒரு லட்சம் வயலின்கள் காதுக்கு இதமாக மென்மையாக மீட்டிக் கொண்டிருந்ததை போன்ற இசை கேட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கிறங்கடிக்கும் இசை எங்கிருந்து வருகின்றது என்று கேட்டேன். அது புல்வெளியிலிருந்துதான். அத்தனைப் புற்களும் சேர்ந்து தங்கள் இருப்பை இசையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தங்கள் உலகுக்கு வந்திருக்கிற விருந்தினரின் வரவேற்பு சங்கீதமாகவும் இதைக் கொள்ளலாம் என்றது மலர். நான் அந்த இசையில் லயித்துக் கிடந்த கணத்தில் காலம் நின்று விட்டது.
‘சரி புல்வெளி தாண்டிப் போகலாம். அங்கு என்னைப் போன்ற பல பேசும் மலர்கள் இருக்கின்றன. அவற்றிடமெல்லாம் நீ நெடுநேரம் பேசலாம். நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் இறந்து விடுவேன். உனக்குப் பயன்பட மாட்டேன்’, என்றது. ‘நீ செத்துப்போவது பற்றி உனக்கு வருத்தமாயில்லையா? என்னால் சோகம் தாங்க முடியவில்லை’, என்றேன். ‘வருத்தமும், சோகமும் மனிதர்களுக்குத்தான். எங்கள் வாழ்வின் நியதி எங்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. மீற முடியாத ஒன்றை வெல்ல எதற்காக முயலவேண்டும். மேலும் இந்த ஒரு நாள் வாழ்வின் நோக்கமே எனக்கு என்னவென்று தெரியவில்லை. இந்த உலகிற்குள் எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டமுமில்லை. வெறும் ஒரு மலராக இருப்பதே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. இதற்கு எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாததால், மரணம் பற்றிய கவலையுமில்லை’, என்றது.
‘மரணம் தீராத வலியில்லையா?’, என்றேன்.
‘அப்படியா? இதற்கு முன்னால் இறந்திருக்கிறாயா?’, என்றது மலர். ‘என் ஞாபகத்தில் அந்த அனுபவம் இல்லை. பலவேளைகளில் வாழ்வு தரும் அனுபவம்தான் வலி மிகுந்ததாக இருந்திருக்கிறது’, என்றது.
‘வலியிலிருந்து விடபட வேண்டும் என்ற எண்ணம் உனக்கு ஏற்பட்டதேயில்லையா?’, என்றேன்.
‘வலியும் ஒரு அனுபவம்தானே’, என்றது மலர். ‘அதை சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வலி விலகி விடுகிறது. அடுத்த அனுபவம் வந்து சேர்கிறது. நாம் அதற்கு சாட்சியாகிறோம். அடுக்குகளாய் நகர்ந்து கொண்டிருக்கும் அனுபவக் காட்சிகளை அமைதியாய் நின்றபடி கூர்ந்து நோக்கும் இடையறாத இருப்பே எங்கள் வாழ்வென்று நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.’
‘இந்த அனுபவங்கள் தொடர வேண்டும். நமக்குரியதாக வேண்டும், அல்லது இந்த அனுபவங்கள் விலக வேண்டும். நாம் அதை விட்டு விடுதலையாக வேண்டும் என்ற ஆவல் உனக்குள் எழுவதில்லையா?’, என்றேன். பூவின் உலகம் பார்க்க வேண்டும் என்ற என் ஆவல் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சில நிமிடங்களே என்னோடு இருக்கப் போகும் மலருடன் பேசித் தீர்த்து விட வேண்டும் என்ற உந்துதலே மேலெழுந்திருந்தது.
‘அனுபவங்கள் என் தேர்வல்ல. அவை என் முன்னிலையில் நிகழ்கின்றன. என் தேர்வு அல்லாத ஒன்றை எப்படி நான் எனக்குரியதாக ஆக்கிக் கொள்ளவோ, என்னிலிருந்து விலக்கிவிடவோ இயலும்? என் இருப்பு பற்றிய பிரக்ஞையை நான் எதனோடும் பிணைத்துக் கொள்வதில்லை. இருத்தல் என் விருப்பம் அல்ல. நான் இருக்கிறேன்; அதனாலேயே நான் இருக்கிறேன்.’ என்றது மலர். அதற்குள் புதைந்திருந்த மீதமிருந்த ஒளியும் இப்போது வெளிப்பட்டிருந்தது. ஏறிட்டுப் பார்த்த போது அதற்கான காரணம் புரிந்தது. புல்வெளி தாண்டி மிகப் பெரும் பூந்தோட்டம் ஒன்று மலர்ந்திருந்தது கண்ணுக்குப் பட்டது. எண்ணற்ற மலர்ச்செடிகள்; ஒவ்வொரு செடியிலும் ஒற்றை மலர். ஒவ்வொரு மலரும் பேசும் என்று யூகித்தபோது என்னுள் கிளர்ச்சி ஏற்பட்டது.
‘நண்பனே! நான் உனக்கு நன்றி கூற வேண்டும். என் சகோதரர்கள் மத்தியில் நான் மடியும் வண்ணம் என்னை இங்கு கொண்டு சேர்த்தது நீதான். வா, அங்கு போகலாம்’, என்றது.
எனக்குப் புற்களின் மீது நடக்க விருப்பமின்றி இருந்தது. மலரோ, ‘ கவலையுறாதே. மென்மையாக நடந்தாயென்றால் அவற்றுக்கு உன்னைத் தாங்கும் சக்தி உண்டு. ஆயிரக்கணக்கான புற்கள் சேர்ந்துதான் உன் ஒரு பாதத்தைத் தாங்கிப் பிடிக்கும். அவற்றுக்கு உன்னைத் தாங்குவதில் மகிழ்ச்சியே’, என்றது.
புல்வெளி மீது நடந்து, மலர்களினருகில் சென்றோம். மலர்களனைத்தும் கூடி இனிய குரலில் பாடி எங்களை வரவேற்றன. அவற்றின் இசை காதுகளுக்குப் பூக்களால் ஒத்தடம் தருவதைப் போலிருந்தது. பிறகு என்னோடு வந்த மலருடன் உற்சாகமாக உரையாட ஆரம்பித்து விட்டன. என்னைப் பற்றி நிறைய விசாரித்தன. பிறகு என் பக்கம் திரும்பி மென்மையாய் இசைத்தன. அவை என்னை நோக்கிப் புன்னகைப்பதாய்ப் புரிந்து கொண்டேன். பிறகு அவைகளை நோக்கி, அவர்கள் உலகிற்குள் என்னை அனுமதித்ததற்கு என் நன்றியையும், அவர்கள் உலகில் நுழைந்ததற்கு என் மகிழ்ச்சியையும் தெரிவித்தேன். யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதால் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டேன். இந்த நாள் என் வாழ்நாளில் ஓர் மறக்க முடியாத நாளென்றும், என்னோடு நட்பான மலரைப் பிரிவதில் உள்ள என் துக்கம் ஈடு செய்யமுடியாததென்றும் கூறினேன்.
அங்கிருந்த மலர்களிலேயே பெரியதும், ஒளி மிகுந்ததுமான ஒரு மலர் என்னைப் பார்த்துக் கூறிற்று: ‘நீ எங்கள் உலகில் இப்போதுதான் நுழைந்திருப்பதாக எண்ணுகிறாயா? எப்போதுமே நீ எங்கள் உலகில்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாய். மலர்களாகிய நாங்கள் மட்டுமல்ல. உன்னைச் சுற்றியுள்ள அனைத்துமே உன்னுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டபடிதான் இருக்கின்றன. தேவை அதற்குத் தயாரான காதுகளும், மனமுமே. இன்று அவை உனக்கு வாய்த்திருக்கின்றன. அதனால் எங்கள் உலகில் பிரவேசிக்க முடிந்தது’ என்றது.
எனக்கு ஏற்பட்டிருந்த அதிச்சியை அந்த மலர்கள் கவனியாமல், பாட ஆரம்பித்து விட்டன. நான் என் கையிலிருந்த மலரைக் கவனித்தேன். அது தன் கடைசி கணத்தில் இருந்தது. ஒரு மலரின் மரணத்தை அருகிருந்து கவனிப்பது எனக்கு இதுவே முதல் முறை. பிற மலர்கள் பாடிய பாடல், என் நட்பு மலரை வழியனுப்புவதற்காகவே என்று எனக்குப் புரிந்தது. மலர் இறுதியாக காம்பிலிருந்து கவிழ்ந்த போது என் நெஞ்சில் நிரந்தரமாகப் பூத்து விட்டதைப் போலிருந்தது. 

2 ஜூலை, 2011

சொல்லப்படாத கதை


குறுங்கதை
நெடுநாட்களாகச் சொல்லப்படாத கதையொன்று நினைவின் புதர்களுக்குள் சிக்கிக்கிடந்தது. கதைசொல்லி பதவிக்கு ஆசைப்பட்ட ஒருவன் அப்புதர்களுக்குள் கைகள் விட்டுத் துழாவியபடி அக்கதையைத் தேடிக்கொண்டேயிருந்தான். கைகளில் நினைவுப்புதரின் இழைகள் சிக்கிக் கொண்டனவேயன்றி சொல்லப்படாத கதையின் நுனி அகப்படவேயில்லை. ஆனமட்டும் முயன்று பார்த்தபின், நினைவின் இழைளை அறுத்து அதற்குள் சிக்கிக்கிடந்த கதையைப் பந்தாகச் சுருட்டிக்கொண்டு கிளம்பினான். எண்ணற்றவர் பயணம் போன பாதை இவன் செல்லும் போது மட்டும் ஆளரவமின்றி இருந்தது. துணைக்கு யாருமில்லாதிருப்பினும், வழிகாட்ட எவரும் கூட வராதிருப்பினும் கூட, அந்தப் பயணம் அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சொல்லப்படாத கதையைச் சுற்றிப் பின்னிக்கிடக்கும் நினைவுச்சிக்கல்களை பிரித்தெடுத்து, கதையை விடுவிக்க உதவும் ஒருவரேனும் தன் போக்கிலோ எதிரிலோ தட்டுப்பட மாட்டார்களா என்ற நப்பாசையுடனேயே அவன் நடந்தான்.
எங்கோ வெகுதொலைவில் இதுவரையிலும் சொல்லப்படாத கதையை எங்கனமாவது கேட்டு விடவேண்டும் என்ற துடிப்போடு நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டான் மற்றொருவன். ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த கதைகள் அவனுள் ஊறிக்கிடந்தாலும், சொல்லப்பட்ட கதைகளில் சொல்லப்படாது விடுபட்ட விஷயங்கள் அதிகமிருப்பதால் அவை முழுமையடையாதிருப்பதாக அவன் கருதினான். விடுபட்ட இடங்களின் இடைவெளிகளை தன்னாலேயே நிரப்பி விட முடியும்போது சொல்லப்பட்ட எந்தக் கதைக்கும் தனித்துவமிருப்பதாக அவன் கருதுவதில்லை. இருப்பினும் தன் யூகங்களுக்கு அப்பாற்பட்டு கதையொன்று நிலவுவதற்கான  சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அவன் திடமாக நம்பினான். அந்த நம்பிக்கையே அவனை அந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தூண்டிற்று.
கதை சொல்லியாக ஆசைப்பட்டவனும், கதை கேட்கக் கிளம்பியவனும் ஒரே பாதையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்து நலம் விசாரித்துக் கொண்டபின், தங்கள் பயணத்துக்கான காரணத்தை அவர்கள் ஒருவருக்கொருவர் விளக்கிக் கொண்டபோது இருவருக்கும் ஆச்சரியம் தாளவில்லை. கதை கேட்கப் புறப்பட்டவன் தேடி வந்த கதை தன்னிடம் இருக்கக் கூடும் என்று கதை சொல்ல வந்தவன் கூறினான். அதை நினைவின் இழைகளினின்றும் சிக்கவிழ்த்து வெளியேற உதவி செய்தால் அக்கதையைத் தன்னால் அவனுக்குக் கூறமுடியும் என்று கூறினான். கதை கேட்க வந்தவனும் அந்தக் கூற்றை ஏற்றுக் கொண்டான். இருவரும் சேர்ந்து சிக்கலைப் பிரிக்க ஆரம்பித்தார்கள். வெகுநேரம் கழித்தும் சிக்கல் மீண்டும் மீண்டும் சிக்கலானதே தவிர, கதை விடுதலையாகிற வழியே தெரியவில்லை. கதை கேட்க வந்தவன் பொறுமையிழந்து, கதை சொல்ல வந்தவனின் சிக்கல் நிரம்பிய நினைவுகளைப் பழிக்க ஆரம்பித்தான். உன் நினைவுகளை ஒழுங்குபடுத்தவே இன்னொருவர் தேவைப்படுகிறதே, நீ எப்படி பிறருக்குக் கதை சொல்லிப் புகழெய்த முடியும்? என்றெல்லாம் கேட்டு அவனைப் பரிகாசம் செய்தான். அதற்குக் கதை சொல்ல வந்தவன் கதை சொல்லும் திறன் ஒரு சிலருக்கு மட்டுமே சித்திக்கும் என்றும், அந்த வரம் தனக்கு வாய்த்திருப்பதால்தான் யாருக்குமே சொல்லப்படாத கதை தனக்குக் கிடைத்திருப்பதாகவும் இறுமாப்புடன் சொல்லி கதை கேட்க வந்தவனைப் பழி தீர்த்துக் கொண்டான். கதை கேட்க வந்தவன் இந்தக் கதை விடுதலையாவதில் தன் பங்கும் தானே இருக்கிறது. கதை சொல்ல வந்தவனை அழித்து அந்தக் கதையை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் கதை சொல்லி பட்டம் தனக்குக் கிடைத்து விடுமே என்று மனத்திற்குள் திட்டம் போட்டான். கதை சொல்ல வந்தவனிடமிருந்து வெடுக்கென்று கதையைப் பிடுங்கினான். அவன் இவன் மேல் பாய்ந்து தாக்கினான். இருவரும் கட்டிபிடித்து உருண்டு ஒர் உக்கிரமான யுத்தத்தை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். கதை இருவர் பிடியிலிருந்தும் விடுபட்டு தரையில் உருண்டு ஓடியது. இருவருமே கதையைப் பொருட்படுத்தாமல் சண்டையில் மும்முரமாகி விட்டிருந்தனர். சண்டை ஓயாது நடந்து கொண்டே இருந்தது. நீண்ட பொருதுதலுக்குப் பிறகு, ஒரு நாள், ஒரு கணம் செயலிழந்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்குமே தன்னை மற்றவரில் பார்ப்பது மாதியான பிரமை ஏற்பட்டது. ஒருசேர இருவருமே அந்தப் பிரமையை ஒத்தி வைத்து விட்டு, சண்டையைத் தொடர்ந்தனர். யாராலும் சொல்லப்படாத கதை கேட்பாரற்றுத் தரையிலேயே கிடந்தது.

மேலும் வாசிக்க