14 ஜூலை, 2011

சிறுகதைக்குள் நுழைதல்


சமீப காலமாகவே உலக இலக்கியம் மற்றும் அழியாசுடர்களுக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள கதைகளைப் படித்து வருகிறேன். அங்கு படித்த கதைகள் தந்த அனுபவம் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளலாமென்ற எண்ணம். நிறைய வாசித்திருந்தாலும் செவ்வியல் இலக்கியங்கள் படிக்கும் முறையான பயிற்சி ஏதும் எனக்கில்லை. எனவே இங்கு பகிரப்படுபவைகளை விமர்சனமாகக் கொள்ளலாகாது. நான் கதைகளை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டேன் என்பதையே அவை காட்டும். மேலும் நல்ல சிறுகதைகள்  படிக்க விழையும் ஒருவருக்கு இந்தப் பதிவுகள் தூண்டு கோலாக அமைந்தால் அது எனக்கு மகிழ்ச்சி தரும்.
பெரும்பாலும் உலக இலக்கியம் தளத்திலுள்ள கதைகளையே வாசித்து வருகிறேன். நேரடித் தமிழ்க் கதைகளைப் படிப்பதைவிட மொழிபெயர்ப்புக் கதைகளில் நமக்குத் தட்டுப்படும் உலகம் பிரத்யேகமானது. தொடர்ந்த நிதானமான வாசிப்பில் கதைகள் கொண்டிருக்கும் பல்வேறு தளங்கள் நமக்குப் புலப்படுமெனினும், இணையத்தில் நீண்ட நேரம் வாசிக்கையில் கண் வலிக்கிறது. அதனாலயே ஒரு முறை வாசிப்பில் இக்கதைகள் பற்றி எழுத வேண்டியிருக்கிறது.
முதல் கதை நான் காலச்சுவடு தளத்தில் படித்தது. பா. வெங்கடேசன் எழுதிய வெறும் கேள்விகள் என்ற சிறுகதை. முதுமையின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதன் தான் சந்திக்கும் நபர்களிடம் தனக்கு அறிமுகமானவர்களைப் பற்றி அவர்கள் உயிரோடிருக்கிறார்களா என்று அறிந்து கொள்ளாமலேயே விசாரிக்கும் கேள்விகள் அவனை சங்கடத்துக்குள்ளாக்குகின்றன. தன கேள்விகளால் உருவாகும்  பிரச்னைகளைச் சமாளிக்க விரும்பும் அவன் தன் கேள்விகளின் போக்கை மாற்றுகிறான். பார்ப்பவர்களிடம் தனக்கு அறிமுகமானவர்களை இறந்தவர்களாக முடிவு செய்து கொண்டு கேள்விகள் கேட்கிறான். விதியோடு தான் ஆடும் விளையாட்டில் வென்று விட்டதாகவே நினைக்கிறான். ஒரு முறை கோபத்தில் வீடு விட்டு வெளியேறி அலைந்து, தன் பால்ய கால சிநேகிதியைக்  கண்டு அளவளாவுகிறான். வீடு திரும்பியவுடன்தான் அவள் ஏற்கனவே இறந்து விட்டாள் என்றும், அது அவனுக்கும் முன்பே தெரியும் என்று அவனது வீட்டார் மூலம் தெரிய வருகிறது. விதி இவனை எதிர்த்துக் காய் நகர்த்தியிருக்கிறது என்று புரிந்து கொள்கிறான். இருப்பினும் அவன் மனம் தான் கொண்டிருக்கும் புரிதல்களையே ஏற்றுக்கொண்டு திருப்தியடைகிறது.
ஒரு முதியவனின் உலகில் புகுந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது இக்கதையில். அவனது பார்வையில் அவனது வீட்டார் அனைவரும் அடையாளமிழந்து விடுகிறார்கள். மகளைப் போலிருந்த பெண், மனைவியைப் போல் தோற்றமளித்த பெண் என்றுதான் அவன்  தன் வீட்டுப் பெண்களைப் பார்த்துப் புரிந்து கொள்கிறான்.
நீளம் நீளமான வாக்கியங்கள் குழப்பினாலும் தன் அடையாளங்களை மெல்ல மெல்ல இழக்கும் ஒரு முதியவனைப் பற்றிய, நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிற கதை.
கதையை வாசிக்க    வெறும் கேள்விகள்
செல்மா லாகர் லேவ் என்ற, ஆயிரத்து எண்ணூறுகளில் வாழ்ந்த ஒரு ஸ்காண்டிநேவிய பெண் எழுத்தாளரின் தேவமலர் என்கிற சிறுகதை (மொழிபெயர்ப்பு க.நா.சு.) யதார்த்த வாதம் கொடிகட்டிப் பறந்த காலந்தில் எழுதப்பட்ட அற்புதமான மாயக்கதை. நான் இந்தக் கதையை வாசித்து விட்டு என் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொன்னபோது அவர்கள் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். காலம் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும் நல்ல இலக்கியத்தின்வலிமை எனக்கு அப்போது புரிந்தது.
ஊரை விட்டு ஒதுக்கி காட்டில் குடும்பத்தோடு வாழப் பணிக்கப்படுகிறான் ஒரு திருடன். அவன் மனைவி ஒரு நாள் பிச்சை எடுப்பதற்காக ஊருக்குள் வருகிறாள். அப்போது மதகுரு ஒருவரின் தோட்டத்தைக் கண்டு பார்வையிட, அங்கிருப்பவர்கள் அவளை விரட்ட முனைகிறார்கள். அவள் மறுக்கிறாள். மதகுரு வந்ததும் இதைவிட அற்புதமான தோட்டத்தை கடவுள் காட்டில் எங்களுக்காக சிருஷ்டிக்கிறார்  என்கிறாள். அதைக் காட்டினால் கணவனுக்கு விடுதலை என்கிற நிபந்தனையோடு அவளோடு செல்கிறார் மதகுரு. காட்டில் அவர் காணும் அற்புதத் தோட்டம் கடவுளின் வருகைக்கான வரவேற்புக் கம்பளம் என்று புரிந்து கொள்கிறார். ஆனால் அவருடன் வந்த  சந்தேக மனம் படைத்த சிஷ்யனின் செயலால் தோட்டம் நாசமடைகிறது. கள்ளங்கபடற்ற உள்ளத்தில் மட்டுமே கடவுள் குடியிருப்பார் என்பதை விளக்கும் கதை. கதை தரும் அனுபவம் சுகம்.
புதுமைப்பித்தனை  கல்லூரியில் படித்தது மறக்கமுடியாதது. அவரது பால் வண்ணம் பிள்ளை தந்த அதிர்வுகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன. கட்டிலை விட்டிறங்காக் கதை என்ற அவரது சிறுகதை  குழந்தைப் பேறற்ற ஒரு அரசனின் கட்டிலில் குடியிருக்கும் மூட்டைப் பூச்சி ஒன்றின் குடும்பம் பற்றியது. புதுமைப் பித்தனின் கையில் தமிழ் ஒரு வாளைப் போல சுழன்று கொண்டே இருக்கிறது. அவரது உரைநடை வீச்சின் வேகம் நமது மனதின் வேகத்தை விட அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. புதுமைப்பித்தனை முழுமையாகப் படித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
லெனினை வாங்குதல் என்ற கதை ஒரு ரஷ்ய எழுத்தாளருடையது. பெயர் நினைவுக்கு வரவில்லை.  புகைப்படத்தில் மிக இளமையாகத் தெரிகிறார். ரஷ்யாவில் கம்யூனிசம் அழிந்த பின்னரும் அந்த சித்தாந்தத்தில் நம்பிக்கையோடு இருக்கும் அவரது தாத்தாவைப் பற்றிய கதை. இணையத்தில் பொருட்களை விற்கு இ பேஇலிருந்து லெனினின் சடலத்தை தன் பேரனின் உதவியோடு  மலிவான (பத்து டாலர்!)விலைக்கு வாங்குகிறார் தாத்தா. கம்யூனிச காலத்தின் நினைவுச் சின்னங்களைச் சேகரிக்கையில் தான் முன்பு செய்த மிகப்பெரும் தவறு அவருக்குத் தெரிய வருகிறது. பெரிய கதை. பொறுமையாகப் படித்தால் பலனுண்டு.
தொடர்ந்து கதைகள் படித்தபடி அவை உருவாக்கும் சலனங்களை இங்கு பகிர்ந்திட எண்ணம். குறைந்த பட்சம் எனக்காவது அது உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கொஞ்ச நாட்கள் கழித்துக் கதைகளை மீண்டும் வாசிக்க வாய்ப்பு ஏற்படுபோது நான் அவற்றை எவ்வளவு மோசமாகப் புரிந்து கொண்டேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவாவது இவை பயன்படட்டுமே. மேலும் ஒத்த கருத்துள்ள நண்பர் எவரேனும் இப்பதிவுகளைப் படித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது அது என் புரிதல் மேம்பட உதவும் என்று நம்புகிறேன்.

மேலும் வாசிக்க