2 ஜூலை, 2011

சொல்லப்படாத கதை


குறுங்கதை
நெடுநாட்களாகச் சொல்லப்படாத கதையொன்று நினைவின் புதர்களுக்குள் சிக்கிக்கிடந்தது. கதைசொல்லி பதவிக்கு ஆசைப்பட்ட ஒருவன் அப்புதர்களுக்குள் கைகள் விட்டுத் துழாவியபடி அக்கதையைத் தேடிக்கொண்டேயிருந்தான். கைகளில் நினைவுப்புதரின் இழைகள் சிக்கிக் கொண்டனவேயன்றி சொல்லப்படாத கதையின் நுனி அகப்படவேயில்லை. ஆனமட்டும் முயன்று பார்த்தபின், நினைவின் இழைளை அறுத்து அதற்குள் சிக்கிக்கிடந்த கதையைப் பந்தாகச் சுருட்டிக்கொண்டு கிளம்பினான். எண்ணற்றவர் பயணம் போன பாதை இவன் செல்லும் போது மட்டும் ஆளரவமின்றி இருந்தது. துணைக்கு யாருமில்லாதிருப்பினும், வழிகாட்ட எவரும் கூட வராதிருப்பினும் கூட, அந்தப் பயணம் அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சொல்லப்படாத கதையைச் சுற்றிப் பின்னிக்கிடக்கும் நினைவுச்சிக்கல்களை பிரித்தெடுத்து, கதையை விடுவிக்க உதவும் ஒருவரேனும் தன் போக்கிலோ எதிரிலோ தட்டுப்பட மாட்டார்களா என்ற நப்பாசையுடனேயே அவன் நடந்தான்.
எங்கோ வெகுதொலைவில் இதுவரையிலும் சொல்லப்படாத கதையை எங்கனமாவது கேட்டு விடவேண்டும் என்ற துடிப்போடு நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டான் மற்றொருவன். ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த கதைகள் அவனுள் ஊறிக்கிடந்தாலும், சொல்லப்பட்ட கதைகளில் சொல்லப்படாது விடுபட்ட விஷயங்கள் அதிகமிருப்பதால் அவை முழுமையடையாதிருப்பதாக அவன் கருதினான். விடுபட்ட இடங்களின் இடைவெளிகளை தன்னாலேயே நிரப்பி விட முடியும்போது சொல்லப்பட்ட எந்தக் கதைக்கும் தனித்துவமிருப்பதாக அவன் கருதுவதில்லை. இருப்பினும் தன் யூகங்களுக்கு அப்பாற்பட்டு கதையொன்று நிலவுவதற்கான  சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அவன் திடமாக நம்பினான். அந்த நம்பிக்கையே அவனை அந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தூண்டிற்று.
கதை சொல்லியாக ஆசைப்பட்டவனும், கதை கேட்கக் கிளம்பியவனும் ஒரே பாதையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்து நலம் விசாரித்துக் கொண்டபின், தங்கள் பயணத்துக்கான காரணத்தை அவர்கள் ஒருவருக்கொருவர் விளக்கிக் கொண்டபோது இருவருக்கும் ஆச்சரியம் தாளவில்லை. கதை கேட்கப் புறப்பட்டவன் தேடி வந்த கதை தன்னிடம் இருக்கக் கூடும் என்று கதை சொல்ல வந்தவன் கூறினான். அதை நினைவின் இழைகளினின்றும் சிக்கவிழ்த்து வெளியேற உதவி செய்தால் அக்கதையைத் தன்னால் அவனுக்குக் கூறமுடியும் என்று கூறினான். கதை கேட்க வந்தவனும் அந்தக் கூற்றை ஏற்றுக் கொண்டான். இருவரும் சேர்ந்து சிக்கலைப் பிரிக்க ஆரம்பித்தார்கள். வெகுநேரம் கழித்தும் சிக்கல் மீண்டும் மீண்டும் சிக்கலானதே தவிர, கதை விடுதலையாகிற வழியே தெரியவில்லை. கதை கேட்க வந்தவன் பொறுமையிழந்து, கதை சொல்ல வந்தவனின் சிக்கல் நிரம்பிய நினைவுகளைப் பழிக்க ஆரம்பித்தான். உன் நினைவுகளை ஒழுங்குபடுத்தவே இன்னொருவர் தேவைப்படுகிறதே, நீ எப்படி பிறருக்குக் கதை சொல்லிப் புகழெய்த முடியும்? என்றெல்லாம் கேட்டு அவனைப் பரிகாசம் செய்தான். அதற்குக் கதை சொல்ல வந்தவன் கதை சொல்லும் திறன் ஒரு சிலருக்கு மட்டுமே சித்திக்கும் என்றும், அந்த வரம் தனக்கு வாய்த்திருப்பதால்தான் யாருக்குமே சொல்லப்படாத கதை தனக்குக் கிடைத்திருப்பதாகவும் இறுமாப்புடன் சொல்லி கதை கேட்க வந்தவனைப் பழி தீர்த்துக் கொண்டான். கதை கேட்க வந்தவன் இந்தக் கதை விடுதலையாவதில் தன் பங்கும் தானே இருக்கிறது. கதை சொல்ல வந்தவனை அழித்து அந்தக் கதையை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் கதை சொல்லி பட்டம் தனக்குக் கிடைத்து விடுமே என்று மனத்திற்குள் திட்டம் போட்டான். கதை சொல்ல வந்தவனிடமிருந்து வெடுக்கென்று கதையைப் பிடுங்கினான். அவன் இவன் மேல் பாய்ந்து தாக்கினான். இருவரும் கட்டிபிடித்து உருண்டு ஒர் உக்கிரமான யுத்தத்தை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். கதை இருவர் பிடியிலிருந்தும் விடுபட்டு தரையில் உருண்டு ஓடியது. இருவருமே கதையைப் பொருட்படுத்தாமல் சண்டையில் மும்முரமாகி விட்டிருந்தனர். சண்டை ஓயாது நடந்து கொண்டே இருந்தது. நீண்ட பொருதுதலுக்குப் பிறகு, ஒரு நாள், ஒரு கணம் செயலிழந்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்குமே தன்னை மற்றவரில் பார்ப்பது மாதியான பிரமை ஏற்பட்டது. ஒருசேர இருவருமே அந்தப் பிரமையை ஒத்தி வைத்து விட்டு, சண்டையைத் தொடர்ந்தனர். யாராலும் சொல்லப்படாத கதை கேட்பாரற்றுத் தரையிலேயே கிடந்தது.

மேலும் வாசிக்க