24 ஜூன், 2011

ஆன்மிகத்தின் நுழைவாயில்


வேதாந்த நூல்களில் மூன்று நூல்கள் பிரஸ்தான த்ரயம் என்றழைக்கப்படுகின்றன. அவை உபநிஷத், பிரம்ம சூத்திரம், மற்றும் பகவத் கீதை ஆகியனவாகும். இவற்றில் உபநிஷத் ஸ்ருதிப் பிரஸ்தானம் ஆகவும், பிரம்ம சூத்திரம் சூத்திரப் பிரஸ்தானம் ஆகவும், பகவத் கீதை ஸ்ம்ருதிப் பிரஸ்தானம் ஆகவும் செயல்படுகின்றன. ஆதி ஷங்கரர் இந்த மூன்றுக்கும் பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். இதனால் அவருக்கு பாஷ்யக்காரர் என்ற பெயர் உண்டு.
          பாஷ்யம் மட்டுமன்றி ஷங்கரர் சுயமாகவும் பல நூல்களை இயற்றியுள்ளார். ஆத்ம போதம், உபதேச சாகஸ்ரீ, அபரோக்ஷ அனுபூதி போன்றவை அவற்றில் அடங்கும். இவற்றில் நாம் அபரோக்ஷ அனுபூதி என்ற நூலின் கருத்துக்களைப் பார்க்கவிருக்கிறோம்.
          பிரஸ்தான த்ரயத்தின் அடிப்படையில் சுயமாக இயற்றப்படும் நூல்களுக்கு பிரகரண கிரந்தங்கள் என்று பெயர். இவை வேதாந்தத்தின் துவக்க நிலையில் இருப்பவர்களுக்காக இயற்றப்படுபவை. மூன்று வகையான பிரகரண கிரந்தங்கள் உள்ளன. அவை,
1.    முழு வேதாந்தத்தின் சாரத்தையும் தருவது. எ.கா. தத்துவ போதம்.
2.    ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்குவது. எ.கா. பஞ்சதசி. இந்நூலின் ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விளக்கும்.
3.    முதலில் முழு வேதாந்தத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பிறகு ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாகப் பேசுவது. நாம் பார்க்கவிருக்கும் அபரோக்ஷ அனுபூதி இந்த வகை நூல்களுக்கு உதாரணம்.
அப்படி அபரோக்ஷ அனுபூதியில் விரிவாக விளக்கப்படும் தலைப்பு நிதித்யாசனம் அல்லது தியானம். அதாவது ஒரு நிதித்யாசகன் எவ்வாறு இந்த உலகம் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. வித்யாரண்யர் என்பவர் அபரோக்ஷ அனுபூதிக்கு வித்யாரண்ய தீபிகா என்ற பெயரில் விளக்கம் எழுதியுள்ளார்.
          அனுபூதி என்ற சொல்லுக்கு ஞானம், உணர்தல் அல்லது அனுபவித்தல் என்று பொருள். நமது ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கு அறிவு ஏற்படுகிறது. ஆனால் நாம் பெறும் அறிவு உடனே அனுபவத்தை தர வேண்டும் என்ற அவசியமில்லை. ஆத்மா பற்றிய உபதேசத்தைக் கேட்டு அந்த அறிவு நம் மயமாகும் போது நாம் பெற்ற அறிவு அனுபூதியாக மாறுகிறது. இந்நூலில் நாம் பெற்ற ஞானத்தை அனுபூதியாக்கும் உபாயம் கூறப்பட்டுள்ளது. பெற்ற ஞானம் ஞான நிஷ்டையடையும் போதுதான் ஞானத்தின் பலனான மோக்ஷம் கிட்டுகிறது. ஆத்மா பற்றி நாம் அடையும் ஞானத்துக்குப் பகைவன் நமது சம்ஸ்காரங்களும், வாசனைகள் எனப்படுகின்ற பதிவுகளும் தான். அத்தடையை நீக்க நாமே முயல வேண்டும். இதன் பின் ஞான நிஷ்டை எளிதில் சித்திக்கும். அனுபூதி என்பதற்குத் தடையில்லாத ஞானம் என்று பொருள்.
          அபரோக்ஷம் என்ற சொல்லுக்கான விளக்கத்தைப் பார்ப்போம். அக்ஷம் என்ற சொல்லுக்குப் புலன்கள் என்று பொருள். பரோக்ஷம் என்பதற்குப் புலன்கள் தாண்டி இருப்பது என்றும், ப்ரத்யக்ஷம் என்பதற்குப் புலன்களின் எல்லைக்குள் இருப்பது என்றும் பொருள். ஆனால் அபரோக்ஷம் என்னும் சொல்லுக்கு புலன்களுக்குத் தொலைவிலும் இல்லாத, புலன்களின் எல்லைகளுக்குள்ளும் இல்லாத சுயமாக விளங்கும் ஒரு பொருளைக் குறிக்கிறது. பார்க்கப்படுவதும் அல்லாத, பார்க்க இயலாததும் அல்லாத பிரம்மத்தையே அபரோக்ஷம் என்ற சொல் குறிக்கிறது. அதுவே பிரம்மம் என்பது அத்வைதம் என்றும் குறிக்கப்படுகிறது. பிருஹதாரண்யக உபநிஷத்தில் அபரோக்ஷம் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்லப்படுகிறது.
          அபரோக்ஷ அனுபூதி நூற்றி நாற்பத்து நான்கு ஸ்லோகங்கள் கொண்டது. பதினோரு ஸ்லோகங்கள் வேதாந்த அறிமுகத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பிறகு த்வம் பத விசாரமும், இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதும், ராஜயோகம் என்ற தலைப்பில் தியானமும் விளக்கப்படுகின்றன. ஆத்ம ஞானத்தினுடைய தன்மையும், ஞானி இந்த உலகத்தை எவ்வாறும் பார்ப்பான் என்பதும் விளக்கப்படுகின்றன.
          நூல் ஒரு பிரார்த்தனை ஸ்லோகத்துடன் துவங்குகிறது. நூலாசிரியர் தான் துவங்கிய இந்த நூல் நல்லமுறையில் இயற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதே பிரார்த்தனையுடைய தலையாய நோக்கம் ஆகும். இதற்கு கிரந்த சமாப்தி என்று பெயர். பிரார்த்தனை ஒரு கர்மம் ஆதலால் நூல் இயற்றுவதில் ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை அது நீக்கும். அதே நேரம் இந்த நூலைப் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் வாழ்வில் எதைச் செய்தாலும் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனையின் மூன்றாவது பலன் படன சமாப்தி. அதாவது இதை பயிலும் மாணவர்கள் இந்நூலை நன்முறையில் பயின்று முடிக்க வேண்டும் என்பதாகும்.
          பிரார்த்தனை மூன்று பேரை நோக்கிச் செய்யப்படுகிறது. முதலில் சகுனப் பிரம்மமாகவுள்ள தனது இஷ்ட தேவதையை நோக்கியும், இரண்டாவது இந்த உலகின் முழுமையான காரணமாக சமஷ்டி தத்துவமாக உள்ள ஈஸ்வரனை நோக்கியும், இறுதியில் நமக்கு ஆத்ம தத்துவத்தை போதிக்கும் உருவை நோக்கியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
          பிரார்த்தனை ஸ்லோகம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.
          ஸ்ரீஹரிம் பரமானந்தம் உபதேஷ்டார மீஸ்வரம்
          வ்யாபகம் சர்வ லோகானாம் காரணம் தம் நமாம்யகம்
பொருள்: என் இஷ்ட தேவதையாகவும், குருவாகவும், எங்கும் நிறைந்தவராகவும் உள்ளவரை வணங்குகிறேன்.
ஸ்ரீ என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள். இங்கு மோக்ஷத்தை அடைய விரும்புபவர்களுக்கு செல்வம் ஆத்ம வித்யை ஆகும். ஹரி என்றால் நீக்குபவர் என்று பொருள். பிரம்ம வித்யயா அஞ்ஞானம் ஹரதி இதி ஸ்ரீ ஹரி – அஞ்ஞானத்தை அழித்து பிரம்மஞானம் என்னும் செல்வத்தை வழங்குபவரே ஸ்ரீஹரி ஆவார். பரமானந்தம் என்றால் ஸ்ரீஹரியின் சொரூபமே மேலான ஆனந்தம் என்பது பொருள்.  உபதேஷ்டாரம் என்பது ஈஸ்வரனாகவே இருக்கும் குருவைக் குறிக்கிறது. குரு உபதேசிக்கும் வார்த்தைகளில் ஸ்ரத்தை வருவதற்காகவே குருவிடம் அளவற்ற மதிப்பு காட்டப்படுகிறது. ஈஸ்வரம் என்ற சொல்லின் மூலம் இந்த உலகின் நிமித்த காரணமாக (intelligent cause) இருப்பவர் என்றும், வ்யாபகம் சர்வலோகானாம் என்ற சொற்றொடரின் மூலம், உலகின் உபாதான காரணமாக (material cause) இருப்பவர் என்றும் ஈஸ்வரன் குறிப்பிடப்படுகிறார்.
          

2 ஜூன், 2011

இல்லறம்




ஸ்வாமி குருபரானந்தர் இல்லறம் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையைக் கேட்டேன். உரை கேட்கும்போது எடுத்து வைத்துக்கொண்ட குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
        அப்பைய தீக்ஷிதர் தான் எழுதிய நூலின் முன்னுரையில் சிவபெருமானையும், பார்வதியையும் வணங்கித் துதிக்கும்போது, அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது அவரவரது தவத்தின் பயனாகவே என்று கூறுகிறார். நம் வாழ்வில் நாம் யாருடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அது நாமும் அவர்களும் செய்த தவத்தின் பயனாகவே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
        மனித இனம் தனித்து வாழும் குணம் கொண்ட இனம் அல்ல. அதெற்கென்று இருக்கிற சமுதாய அமைப்பில் இணைந்து வாழ்வதற்குரிய வகையில்தான் அவர்களது இயல்பு படைக்கப்பட்டிருக்கிறது. நமது தேவைகளுக்காக பிறமனிதர்களுடன் நாம் இணைந்து வாழ்வது நமக்கு அவசியமாகிறது. தனிமையில் மகிழ்ச்சி அடைவதென்பது ஆதியில் ஹிரண்யகர்பனாலும் கூட முடியாத காரியமாக இருந்தது, எனவேதான் இருமை படைக்கப்பட்டது என்று ஓர் உபநிஷத் கூறுகிறது. மேலும் ஒரு மனிதன் பிறருடன் பழகும்போதுதான் அவன் மனம் வளர்ச்சி அடைகிறது. இரண்டு பேர் நெருங்கிப் பழகும்போது ஒருவரிடமிருந்து மற்றவர் அன்பையும், தியாகத்தையும் பெற்றுப் பிறருக்கு வழங்குகிறார். எனவே ஒருவரது மனம் எப்படிப் பட்டதென்பது அவர் யாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் என்பதைப் பொறுத்து உள்ளது.
        நமது கலாசாரத்தில் ஒரு மனிதனது வாழ்வை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர் நமது முன்னோர். அதில் முதல் நிலை பிரம்மசரிய ஆஸ்ரமம் எனப்படும். ஆஸ்ரமம் என்பதற்கு வாழ்க்கை நிலை என்று பொருள். இந்த ஆஸ்ரமத்தில் ஒருவனது உறவு தாயிடமும், பிறகு தந்தையிடமும் ஆரம்பிக்கிறது. பிறகு ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் பிற உறவினர்களிடமும் உறவு தொடர்கிறது.
        அடுத்து கிருஹஸ்த ஆஸ்ரமம். இதில் ஒரு மனிதனுக்குப் பெரும்பாலான தொடர்பு மனைவியிடம் இருக்கிறது (ஒரு பெண்ணுக்கு கணவனிடம்.). பிறகு வரும் வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தில் அவன் அதிக காலத்தை இறைபக்தியிலேயே செலவிடுவதால் அவனது பெரும்பான்மையான தொடர்பு அவனது இஷ்ட தெய்வத்திடமே இருக்கிறது. கடைசி ஆஸ்ரமமான சன்யாச ஆஸ்ரமத்தில் அவன் குருவிடம் தொடர்பு கொண்டு மனதைப் பக்குவப்படுத்தி ஞானத்தை அடைந்து அசங்கமான நிலையை, அதாவது தன் இருப்புக்கும், மனநிறைவுக்கும் பிறரைச் சார்ந்திராத நிலையை அடைகிறான். நம்மிடமே நாம் மகிழ்ந்திருக்கும் இந்நிலையே நம் வாழ்வின் லட்சியம். அதுவரை நமக்கு உறவுகள் தேவையாக இருக்கிறது. ஆனால் அதே உறவுகளை எவ்வாறு கையாள்வது என்று அறியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
        உறவுகளைக் கையாள்வது எங்ஙனம்? உறவுகளை நாம் சாதனையாக மாற்றிக்கொள்ள வேண்டும். உறவுகள் பணத்தின் அடிப்படையிலோ, அதிகாரத்தின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது. உறவுகளுக்கு ஆதாரமாக அன்பும், தியாகமுமே இருக்க வேண்டும்.
        பொதுவாக ஒருவருடன் நெருங்கிப் பழகும்போது அவரது பலவீனங்கள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் அவற்றைப் பிறர் முன் சுட்டிக் காட்டக் கூடாது. அவற்றைத் தனிமையில்தான் சுட்டிக்காட்ட வேண்டும். அதையும் உடனே சுட்டிக்காட்டாது, பிறகுதான் சுட்டிக்காட்ட வேண்டும். நமது வாக்கை நாம் சொல்லிக் கொடுக்கத்தான் பயன்படுத்தவேண்டுமே அல்லாது திட்டுவதற்குப் பயன்படுத்தக் கூடாது. அதே போல் ஒருவர் கோபமாக இருக்கும்போது அந்தக் கோபத்தைத் தூண்டும் வகையில்  செயல்புரியக் கூடாது.  நம் விருப்பு வெறுப்புகளைப் பிறர் மீது திணிக்கக் கூடாது.
        அதேபோல் கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும். நம் ஒரு மனதிலேயே இவ்வளவு போராட்டங்கள் வரும்போது, இரு மனங்களில் எவ்வளவு போராட்டங்கள் வரும்? எனவே இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் வரும்போது அமர்ந்து பேச வேண்டும். அல்லது நடுநிலையில் உள்ளவர்களை நாட வேண்டும்.
        இல்லறவாதிகளுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் மூன்று முக்கியக் கடமைகளைத் தருகிறார். அவை, யக்ஞம், தானம், மற்றும் தவம் ஆகியன. யக்ஞம் என்பது இறைவழிபாட்டையும், வீட்டை ஒரு கோயில் போல வைத்துக் கொள்வதையும், விருந்தோம்பலையும் குறிக்கிறது.
தானம் நாம் ஈட்டிய செல்வத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைக் குறிக்கிறது. பொருள் ஈட்டுவது தவறென்று நம் வேதம் சொல்லவில்லை. பூத்யைன ப்ரமதி பவ்யம், உன் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள் என்றுதான் சொல்கிறது. நாம் ஈட்டிய பொருளைக் கொண்டு நம் உறவினர்களுக்கும், நம்மைச் சார்ந்த ஏழைகளைக்கும் உதவி செய்யவேண்டும்.
 தவம் என்பது கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தையும் குறிக்கிறது. இல்லறத்தில் இருப்பவர்கள் எல்லா போகங்களையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று வேதம் சொல்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்திரியங்கள் சக்தி இழக்கும். அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். கோயில்களுக்கு யாத்திரை செல்வது போன்றவையும் தவம் என்ற சாதனையின் கீழ் அடங்கும்.
இந்தச் சாதனைகளைப் பின்பற்றி நாம் அடையும் மனமுதிர்ச்சியின் உதவியால், இந்த உலகம் நமக்கு ரிடையர்மென்ட் கொடுப்பதற்கு முன்பு நாமே ரிடையர்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளையும் விட்டு நட்புடனும், மகிழ்ச்சியுடனும் விலக வேண்டும்.

29 ஏப்ரல், 2011

தர்மத்தின் மதிப்பு


ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களது தர்மத்தின் மதிப்புதான் என்ன? என்ற சிறிய நூல் தர்மம் என்று நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தினுடய மதிப்பையும் பூரணமாக அறிந்து கொள்ள உதவுகிறது. தர்மம் என்ற சொல்லுக்குப் பெரும்பாலோர் தானம் செய்வது என்ற பொருளையே மனதில் கொள்கின்றனர். ஆனால் தர்மம் என்ற சொல்லுக்கு வாழ்க்கை நெறி என்பதே பொருளாகும். நமது வேதங்கள் சமுதாயத்தில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று பல்வேறு நெறிகளை வகுத்துக் கொடுத்துள்ளன. அவ்வாறு தர்மத்தைப் பின்பற்றி வாழும் மனிதனின் மனம் சரியான திசையில் வளர்ச்சி அடைகின்றது. இதன் மூலம் வாழ்வின் சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவதற்கான பாதையில் பயணிப்பதற்கான முழு தகுதியை அவன் அடைகிறான். எனவே இந்த உலக வாழ்க்கையில் நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் வாழ விரும்புபவர்களும், வாழ்வு கொடுக்கும் இன்பம், துன்பம் என்ற இரட்டைகளிலிருந்து விடுபட் விரும்புபவர்களும் தர்மம் என்றால் என்ன, அதை எவ்வாறு பின்பற்றுவது என்று தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும். இதை தெளிவாகச் சொல்வது மட்டுமல்ல, தர்மத்தைப் பின்பற்றுவதற்குத் தேவையான பண்புகளை விளக்கி, அப்பண்புகளை நம் மயமாகவே ஆக்கிக் கொள்வதற்கான யுக்திகளையும் அளிக்கிறது இந்த நூல்.
தர்ம நெறிப்படி வாழ்வதன் முக்கிய நோக்கம் ஒருவனை உள்ளத்தூய்மை பெறச் செய்வதே. இதனால் அவன் மனம் ஆத்ம ஞானம் பெறுவதற்கு ஏற்ற பாத்திரமாகிறது. ஆத்ம ஞானத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றி அவர் விளக்கியுள்ள மற்றொரு நூல் சாதனமும், சாத்யமும். இந்நூல் ஒரு மனிதனின் இறுதி லட்சியம் என்ன என்பது பற்றியும், அதை அடைவதற்கான பாதையைப் பற்றியும் பேசுகிறது.

விலங்குகள் தங்கள் இயல்புப்படியே வாழ்கின்றன. அதுபோலன்றி மனிதனுக்கு எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவன் செயல்பாடுகளுக்கான அளவுகோல்கள் கொடுக்கப்படாவிட்டால் அவன் செயல்கள் அழிவுக்கு வழிவகுத்து விடும். அந்த அளவுகோல்களே தர்மம் எனப்படும்
பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வ சம்பத் என்ற தலைப்பில் இருபது பண்புகளைப் பட்டியலிடுகிறார். அப்பண்புகள் அனைத்தும் இந்நூலில் விளக்கப்பட்டு, அவற்றின் உட்கூறுகள் பற்றிய விசாரமும் நடத்தப்படுகின்றது. கீதையில் கிருஷ்ணர் கூறும் அப்பண்புகளாவன; தற்பெருமையின்மை, டம்பமின்மை, அஹிம்சை, பொறூமை, நேர்மை, குருவுக்குப் பணிவிடை, தூய்மை, விடாமுயற்சி, தன்னடக்கம், இந்திரிய விஷயங்களில் ஆசையின்மை, அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி இவற்றிலுள்ள தோஷத்தைக் கண்டறிதல், தீமைகளைச் சிந்தித்தல், பற்றின்மை, இது எனக்கு சொந்தம் என்ற புத்தியின்மை, மக்கள், மனைவி, வீடு இவற்றில் அபிமானமின்மை, இஷ்டமானவை, இஷ்டமில்லாதவை இவற்றில் சமமான சித்தத்தைப் பெற்றிருத்தல், என்னிடத்தில் மாறாததும், என்னைத் தன்னைவிட வேறாகக் கருதாததுமான பக்தி, தனித்த இடத்தை நாடல், ஜனங்களின் கூட்டத்தில் நாட்டமின்மை, ஆத்ம விஷ்யமான ஞானத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருத்தல் தத்துவ ஞானத்தின் பலனான மோக்ஷத்தை எப்பொழுதும் மனதில் நிறுத்தல் ஆகியனவாகும். இவற்றை ஞானம் என்றே கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். பொய் சொல்லக்கூடாது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏன் பொய் சொல்லக்கூடாது என்று யாராலும் நாம் மனமார ஏற்றுக்கொள்ளும்படி விளக்க முடிவதில்லை. பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தி விடும், பிறருக்கு அதனால் பாதிப்பு என்று விளக்கங்கள் வருகின்றனவே தவிர, உலகத்தில் பொய் சொல்லி நன்றாக வாழ்கிறவர்களையும் நாம் பார்க்க நேர்வதால் நம்மால் பொய் சொல்லக்கூடாது என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆனால் இந்நூலில் ஸ்வாமிஜி ஒவ்வொரு பண்பையும் நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கு அற்புதமான விவாதங்களை முன் வைத்து, நம்மைத் தெளிவு பெறச் செய்கிறார்.

18 ஏப்ரல், 2011

கைவல்ய நவநீதம் 2


நூன்முகம்

இங்கு நூலாசிரியர் இஷ்டதெய்வநமஸ்காரரூபமங்கலத்தைஅங்கீகரிக்கிறார்.

பொன்னில மாதராசை பொருந்தினர் பொருந்தார் உள்ளம்
தன்னிலம் தரத்தில் ஜீவ சாட்சி மாத்திரமாய் நிற்கும்
எந்நிலங்களினும் மிக்க எழுநிலம் அவற்றின் மேலாம்
நன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி
மண்குடம்,பொற்குடம்ஆகிய குடங்களில்விழும்பொருட்களுக்குவேறுபாடின்றி இடம் அளிக்கும் ஆகாசத்தைப் போல,பொன்னாசை, பெண்ணாசை,மண்ணாசை உடைய அஞ்ஞானிகள், இவை அற்ற ஞானிகள் இருவரது உள்ளங்களிலும் சாட்சியாக மட்டுமே நின்று கொண்டிருக்கும் ஏக நாயகனுடைய பதங்களை வணங்குகிறேன்.

மனித மனதில் எத்தனைக் குறைகள் இருப்பினும் அவை அனைத்தும் இம்மூன்றுக்குள்அடங்கிவிடும்என்பதலாயேஇம்மூன்று ஆசைகளைக் குறிப்பிட்டார்.

ஆன்றோர்களால் கூறப்படுகின்ற ஞான பூமிகளில் சிறந்ததவை ஏழு நிலங்கள். அவை சுபேச்சை, விசாரணை, தநுமானசி, சத்துவாபத்தி, அசம்சத்திபதார்த்தா பாவனை, துரியம் ஆகியன. துரியத்துக்கு மேல் வேறு ஒரு நிலை கிடையாது. விதேக முக்தி ஒன்றுதான் உண்டு. எனவேதான் எழுநிலத்திலும் மேலான நன்னிலம் என்று கூறப்பட்டது.

விழிப்பு நிலை(ஜாக்ரத்), கனவு நிலை(ஸ்வப்னம்) , உறக்க நிலை(சுஷுப்தி) ஆகிய மூன்று  நிலைகளிலும் கொள்ளும் அபிமானமே பந்தம் எனப்படுகிறது.
இம்மூன்று அவஸ்தைகளும் கோரம்சாந்தம்மூடம் என்ற மனோ விருத்திகளாதலால்
விசாரத்தால் அல்லது தியான ரூபமாகிய பிரம்மா அனுசந்தானத்தின் வலிமையால் அவைகள் நாசமடையும்பிரம்மம் மட்டும் தன மயமாகவே விளங்கி நிற்கும்.அஞ்ஞானமும்அதன் காரியங்களான அனர்த்தங்களும் நீங்கி பிரம்மம் மட்டுமே விளங்கும் இந்நிலை துரியம் எனப்படுகிறது.

கைவல்ய நவநீதம் 1

கைவல்ய நவநீதம்
கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல். அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை என் கையில் கிடைத்தது. தொள்ளாயிரத்து இருபதுகளில் எழுதப்பட்ட மணிப்பிரவாள நடையிலான தமிழ். குரு ஒருவர் விளக்க நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடியும். கோவிலூர் மரபைப் பின்பற்றும் மடங்களில் கைவல்ய நவநீதம் மிகப் பிரசித்தம். ஸ்வாமி ஓம்காரானந்தாவின் கைவல்ய நவநீத வகுப்பு கொஞ்சம் கேட்டிருக்கிறேன். இது பொன்னம்பல ஸ்வாமிகள் உரையைப் படித்து எனக்குப் புரிந்ததைக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.
இவ்வுலகில் எல்லா  மனிதர்களும்  தங்கள்துக்கத்தை நீக்கிக்  கொள்ள வேண்டுமென்றும் , ஆனந்தத்தை அடைய வேண்டுமென்றே விரும்புகிறார்கள்இவையிரண்டும் முழுமையாக அடையப்பட்ட நிலை முக்தி, மோக்ஷம் அல்லது ஆன்ம விடுதலை  என்றழைக்கப்படுகிறது.
இந்த நிலையை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி பிரம்ம ஞானத்தை  அடைவதே.
இதன் பொருட்டே பரம கருணாநிதியாகிய பரமேஸ்வரன் நான்கு வேதங்களின் வாயிலாகவும் அந்த வீடு பேற்றை அடைய விரும்புகிற சாதகர்களுடைய தகுதிக்கேற்ப கர்மம்பக்தியோகம் மற்றும் ஞானம் ஆகிய நான்கு வழிகளையும் கூறியுள்ளார்.
இவற்றுள்கர்மம்,பக்தி,யோகம்ஆகிய மூன்றும் மனத்தூய்மைஅடைவதற்காக மேற்கொள்ளப்படும் சாதனைகள்.ஞானம் என்கிற சாதனை ஒன்றே முக்தியை அடைவதற்கு நேரடி சாதனையாக இருக்கிறது.இதை உணர்ந்த நம் பண்டைக்காலத்துமகரிஷிகள் ஞானத்தையே உபதேசிக்கும் உபநிஷத்,பகவத்கீதைபிரம்மசூத்திரம்ஆகியநூல்களைப் பின்பற்றி வழி நூல்களையும்சார்பு நூல்களையும் இயற்றினர்யோக வாசிஷ்டம் , பஞ்சதசி,   
  விவேக சூடாமணி ஆகியவை அவற்றுள் ஒருசில.
அவற்றின் பொருளை எல்லாம்   நன்கறிந்து தமிழ் மொழியில் எளிதில் உணருமாறு கைவல்ய நவநீதம் என்னும் நூலை செய்யுள் வடிவில் இயற்றியுள்ளார் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள். அந்நூலுக்கு ஸ்ரீமத் பொன்னம்பல தேசிக சுவாமிகள் தத்துவார்த்த தீபம் என்னும் பெயரில் உரை எழுதியுள்ளார்.
கைவல்ய நவநீதம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி தத்துவ விளக்கப் படலம் என்றும், இரண்டாவது பகுதி சந்தேகம் தெளிதல்  படலம் என்றும் அழைக்கப்படுகின்றன.
நூன்முகம்
இந்நூல் மங்கல ஸ்லோகத்தோடு துவங்குகிறது. மூல நூல்கள் இருக்க, வழி நூல்களுக்கு மங்கலம் அவசியமா என்று பார்த்தால், தான் துவங்கிய நூலை நன்முறையில் எழுதி முடிக்க வேண்டுமென்பதற்காகவும்அதற்குத் தடையாகவுள்ளவை அனைத்தும் இம்மங்கலத்தால் நாசமடையும் என்ற எண்ணத்தாலுமே இயற்றப்பட்டது. தடைகள் பாவத்தின் மூலமே விளையும். பாவத்தினால் நற்காரியங்களை நிறைவேற்ற இயலாது. பாவங்களைப் போக்குவதற்கு மங்கலம் அவசியம். இயற்றுபவர் பாவமில்லாதவராக இருப்பினும் மங்கலம் செய்யவேண்டியது அவசியமே. இல்லையெனில் நூலைக் கற்க விரும்புபவர்க்கு நூலாசிரியரிடத்து நாஸ்திகப் பிராந்தியுண்டாகும். நூலை ஆர்வத்துடன் அணுக மாட்டார்
மங்கலம் மூன்று வகைப்படும்.
வஸ்து நிர்தேச ரூப மங்கலம்;
நமஸ்கார ரூப மங்கலம்
ஆசிர்வாத ரூப மங்கலம்.
சகுனமும்நிர்குணமாகவும் உள்ள  ஒரே மெய்ப்பொருள் பரமாத்மா. அந்தப் பரமாத்மாவின் புகழ் பாடுவது வஸ்து நிர்தேச ரூப மங்கலம் எனப்படும்.
அவ்வாறன்றி அந்த மெய்ப்பொருளுக்கு வணக்கம் கூறுவது நமஸ்கார ரூப மங்கலம் ஆகும்.
தனக்கோ அல்லது மாணவருக்கோ பிடித்தமான வஸ்துவைப் பிரார்த்திப்பதுஆசிர்வாத ரூப மங்கலம் எனப்படும்

மேலும் வாசிக்க