வேதாந்த நூல்களில் மூன்று நூல்கள் பிரஸ்தான த்ரயம் என்றழைக்கப்படுகின்றன. அவை உபநிஷத், பிரம்ம சூத்திரம், மற்றும் பகவத் கீதை ஆகியனவாகும். இவற்றில் உபநிஷத் ஸ்ருதிப் பிரஸ்தானம் ஆகவும், பிரம்ம சூத்திரம் சூத்திரப் பிரஸ்தானம் ஆகவும், பகவத் கீதை ஸ்ம்ருதிப் பிரஸ்தானம் ஆகவும் செயல்படுகின்றன. ஆதி ஷங்கரர் இந்த மூன்றுக்கும் பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். இதனால் அவருக்கு பாஷ்யக்காரர் என்ற பெயர் உண்டு.
பாஷ்யம் மட்டுமன்றி ஷங்கரர் சுயமாகவும் பல நூல்களை இயற்றியுள்ளார். ஆத்ம போதம், உபதேச சாகஸ்ரீ, அபரோக்ஷ அனுபூதி போன்றவை அவற்றில் அடங்கும். இவற்றில் நாம் அபரோக்ஷ அனுபூதி என்ற நூலின் கருத்துக்களைப் பார்க்கவிருக்கிறோம்.
பிரஸ்தான த்ரயத்தின் அடிப்படையில் சுயமாக இயற்றப்படும் நூல்களுக்கு பிரகரண கிரந்தங்கள் என்று பெயர். இவை வேதாந்தத்தின் துவக்க நிலையில் இருப்பவர்களுக்காக இயற்றப்படுபவை. மூன்று வகையான பிரகரண கிரந்தங்கள் உள்ளன. அவை,
1. முழு வேதாந்தத்தின் சாரத்தையும் தருவது. எ.கா. தத்துவ போதம்.
2. ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்குவது. எ.கா. பஞ்சதசி. இந்நூலின் ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விளக்கும்.
3. முதலில் முழு வேதாந்தத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பிறகு ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாகப் பேசுவது. நாம் பார்க்கவிருக்கும் அபரோக்ஷ அனுபூதி இந்த வகை நூல்களுக்கு உதாரணம்.
அப்படி அபரோக்ஷ அனுபூதியில் விரிவாக விளக்கப்படும் தலைப்பு நிதித்யாசனம் அல்லது தியானம். அதாவது ஒரு நிதித்யாசகன் எவ்வாறு இந்த உலகம் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. வித்யாரண்யர் என்பவர் அபரோக்ஷ அனுபூதிக்கு வித்யாரண்ய தீபிகா என்ற பெயரில் விளக்கம் எழுதியுள்ளார்.
அனுபூதி என்ற சொல்லுக்கு ஞானம், உணர்தல் அல்லது அனுபவித்தல் என்று பொருள். நமது ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கு அறிவு ஏற்படுகிறது. ஆனால் நாம் பெறும் அறிவு உடனே அனுபவத்தை தர வேண்டும் என்ற அவசியமில்லை. ஆத்மா பற்றிய உபதேசத்தைக் கேட்டு அந்த அறிவு நம் மயமாகும் போது நாம் பெற்ற அறிவு அனுபூதியாக மாறுகிறது. இந்நூலில் நாம் பெற்ற ஞானத்தை அனுபூதியாக்கும் உபாயம் கூறப்பட்டுள்ளது. பெற்ற ஞானம் ஞான நிஷ்டையடையும் போதுதான் ஞானத்தின் பலனான மோக்ஷம் கிட்டுகிறது. ஆத்மா பற்றி நாம் அடையும் ஞானத்துக்குப் பகைவன் நமது சம்ஸ்காரங்களும், வாசனைகள் எனப்படுகின்ற பதிவுகளும் தான். அத்தடையை நீக்க நாமே முயல வேண்டும். இதன் பின் ஞான நிஷ்டை எளிதில் சித்திக்கும். அனுபூதி என்பதற்குத் தடையில்லாத ஞானம் என்று பொருள்.
அபரோக்ஷம் என்ற சொல்லுக்கான விளக்கத்தைப் பார்ப்போம். அக்ஷம் என்ற சொல்லுக்குப் புலன்கள் என்று பொருள். பரோக்ஷம் என்பதற்குப் புலன்கள் தாண்டி இருப்பது என்றும், ப்ரத்யக்ஷம் என்பதற்குப் புலன்களின் எல்லைக்குள் இருப்பது என்றும் பொருள். ஆனால் அபரோக்ஷம் என்னும் சொல்லுக்கு புலன்களுக்குத் தொலைவிலும் இல்லாத, புலன்களின் எல்லைகளுக்குள்ளும் இல்லாத சுயமாக விளங்கும் ஒரு பொருளைக் குறிக்கிறது. பார்க்கப்படுவதும் அல்லாத, பார்க்க இயலாததும் அல்லாத பிரம்மத்தையே அபரோக்ஷம் என்ற சொல் குறிக்கிறது. அதுவே பிரம்மம் என்பது அத்வைதம் என்றும் குறிக்கப்படுகிறது. பிருஹதாரண்யக உபநிஷத்தில் அபரோக்ஷம் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்லப்படுகிறது.
அபரோக்ஷ அனுபூதி நூற்றி நாற்பத்து நான்கு ஸ்லோகங்கள் கொண்டது. பதினோரு ஸ்லோகங்கள் வேதாந்த அறிமுகத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பிறகு த்வம் பத விசாரமும், இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதும், ராஜயோகம் என்ற தலைப்பில் தியானமும் விளக்கப்படுகின்றன. ஆத்ம ஞானத்தினுடைய தன்மையும், ஞானி இந்த உலகத்தை எவ்வாறும் பார்ப்பான் என்பதும் விளக்கப்படுகின்றன.
நூல் ஒரு பிரார்த்தனை ஸ்லோகத்துடன் துவங்குகிறது. நூலாசிரியர் தான் துவங்கிய இந்த நூல் நல்லமுறையில் இயற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதே பிரார்த்தனையுடைய தலையாய நோக்கம் ஆகும். இதற்கு கிரந்த சமாப்தி என்று பெயர். பிரார்த்தனை ஒரு கர்மம் ஆதலால் நூல் இயற்றுவதில் ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை அது நீக்கும். அதே நேரம் இந்த நூலைப் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் வாழ்வில் எதைச் செய்தாலும் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனையின் மூன்றாவது பலன் படன சமாப்தி. அதாவது இதை பயிலும் மாணவர்கள் இந்நூலை நன்முறையில் பயின்று முடிக்க வேண்டும் என்பதாகும்.
பிரார்த்தனை மூன்று பேரை நோக்கிச் செய்யப்படுகிறது. முதலில் சகுனப் பிரம்மமாகவுள்ள தனது இஷ்ட தேவதையை நோக்கியும், இரண்டாவது இந்த உலகின் முழுமையான காரணமாக சமஷ்டி தத்துவமாக உள்ள ஈஸ்வரனை நோக்கியும், இறுதியில் நமக்கு ஆத்ம தத்துவத்தை போதிக்கும் உருவை நோக்கியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
பிரார்த்தனை ஸ்லோகம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.
ஸ்ரீஹரிம் பரமானந்தம் உபதேஷ்டார மீஸ்வரம்
வ்யாபகம் சர்வ லோகானாம் காரணம் தம் நமாம்யகம்
பொருள்: என் இஷ்ட தேவதையாகவும், குருவாகவும், எங்கும் நிறைந்தவராகவும் உள்ளவரை வணங்குகிறேன்.
ஸ்ரீ என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள். இங்கு மோக்ஷத்தை அடைய விரும்புபவர்களுக்கு செல்வம் ஆத்ம வித்யை ஆகும். ஹரி என்றால் நீக்குபவர் என்று பொருள். பிரம்ம வித்யயா அஞ்ஞானம் ஹரதி இதி ஸ்ரீ ஹரி – அஞ்ஞானத்தை அழித்து பிரம்மஞானம் என்னும் செல்வத்தை வழங்குபவரே ஸ்ரீஹரி ஆவார். பரமானந்தம் என்றால் ஸ்ரீஹரியின் சொரூபமே மேலான ஆனந்தம் என்பது பொருள். உபதேஷ்டாரம் என்பது ஈஸ்வரனாகவே இருக்கும் குருவைக் குறிக்கிறது. குரு உபதேசிக்கும் வார்த்தைகளில் ஸ்ரத்தை வருவதற்காகவே குருவிடம் அளவற்ற மதிப்பு காட்டப்படுகிறது. ஈஸ்வரம் என்ற சொல்லின் மூலம் இந்த உலகின் நிமித்த காரணமாக (intelligent cause) இருப்பவர் என்றும், வ்யாபகம் சர்வலோகானாம் என்ற சொற்றொடரின் மூலம், உலகின் உபாதான காரணமாக (material cause) இருப்பவர் என்றும் ஈஸ்வரன் குறிப்பிடப்படுகிறார்.