சு. வெங்கட்டின் நீல வியாபகம் சிறுகதை குறித்து
அன்புள்ள வெங்கட்,
நீலவியாபகம் கதை அகிலாண்டம் பிளாட்பாரத்தில் உருண்டு நிற்கும் ஒரு கொய்யாப்பழத்த்தை எடுத்து உண்ணலாமா என்று யோசிப்பதில் துவங்குகிறது. உணவு கதை நெடுக அவரைத் தொடர்ந்தபடியே இருக்கிறது. பாரதியும், நாஞ்சில் நாடனும், ஜெயமோகனும் தங்கள் கலையில் நிகழ்த்திக்காட்டிய ஒரு அறச்சீற்றம்: உணவுண்ணல் என்பது ஒவ்வொரு உயிரின் அடிப்படை உரிமை. அதை எவரும் மறுக்கலாகாது. அதை நீங்களும் உங்கள் கதையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள். மற்ற படைப்பாளிகளைப் போலன்று, மிக மவுனமான சொல்லல் மூலம், மிக நேர்த்தியான சித்திரங்களைத் தீட்டுவதன் மூலம் வாசகனிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். உணவு நிமித்தம் ஓர் உயிரை இழிவு செய்தல் தகுமா? இதைத்தான் நான் இந்தக் கதையிலிருந்து புரிந்து கொண்டேன். இந்தப் புரிதல் தவறாகக் கூட இருக்கலாம்.
மிகச் சிறந்த கதைகளை மட்டுமே எழுதுவேன் என்று கங்கணம் கட்டியிருக்கிறீர்கள் போல. உங்கள் வசீகரமான மொழி கதையின் ஓட்டத்தின் மீது ஒரு கனத்த போர்வையை போல வியாபித்து அதன் நடையை மென்மையாக்கி விடுகிறது. பெரும்பாலும் விவரணைகளாலும், சொல்லிச் செல்லுதலாலும் நகரும் கதை. பாத்திரங்கள் ஒன்றிரண்டு வரிகளே உரையாடிக் கொள்கின்றன. அதிலும் சில இந்திச் சொற்கள். கதை சொல்ல வரும் விஷயத்துக்கு இந்த மாதிரியான கூறுமுறை மிகப்பொருத்தம்.
அகிலாண்டத்தோடு அவனது வாழ்க்கையின் முன்னும், நிகழ்காலத்துக்கும் மாறிமாறிப் பயணிக்கிறோம். சராசரி வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வராதவர் அவர். அதே நேரம் இந்த உலகம் போஷித்துக் காக்க வேண்டிய மேதையும் அல்லர். சுருக்கமாகச் சொன்னால் சோம்பித் திரியும் சோம்பேறி. சோறு உண்டு விட்டு மனம் போனபோக்கில் திரிபவர். குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். அதனாலேயே மனைவி, மகனிடம் ஏச்சும் பேச்சும் வாங்குபவர். இவர் மாதிரியான மனிதரை உங்களது இலக்கியம் மையக் கதாபாத்திரமாக்கியிருக்கிறது. சொல்லப்போனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்களின் கடைசிப்புகலிடம்தானே இலக்கியம்?
சில சொற்றொடர்கள் சட்டென்று வாசிப்பை நிறுத்தி யோசிக்க வைத்தன; மெல்லிய புன்னகையை வரவழைத்தன.
புதர்களுக்குப் பின்னால் முக்காடிட்டு வாய்மூடி நின்ற பெண்கள் வெறுப்பாய் ரயிலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
என்பது ஒரு உதாரணம். இந்த வாக்கியத்தின் வலி கொஞ்சம் நிறுத்தி யோசித்தால்தான் உறைக்கும். ஒரு கலைஞனால் மட்டுமே எழுதக்கூடிய வரி.
எங்கிருந்தோ வந்து ரயிலுடன் சேர்ந்துகொண்ட சாலையில் பேருந்து ஒன்று சிறு துள்ளலுடன் சென்றுகொண்டிருந்தது. இரண்டிலும் பயணிப்பவர்களில் சிலர் இனி எப்பொழுதும் நிகழாத சந்திப்பை ஒருவருக்கொருவர் நிகழ்த்திக்கொண்டனர்.
என்று இன்னொரு கவித்துவமான இடம். திருச்செந்தாழையை நினைவுபடுத்தும் எழுத்து. அவரை வாழும் தமிழ் விழாவில் சந்தித்தேன். ஒரு அரைநாள் அவரோடு நியூயார்க் தெருக்களில் உரையாடிபடியே சுற்றினோம். எழுத்தாளனாக அறிந்திருந்த அவர் நண்பராகப் பரிச்சயமாகி பிரிகையில் ஒரு சகோதரனைப் போலாகி விட்டார். இத்தனைக்கும் நாங்கள் அவர் எழுதிய கதையைப் பற்றிக்கூடப் பேசவில்லை.
இவர்களை இனி தன்னால் கரை சேர்க்க முடியாதென்றெண்ணி அங்கம்மா பகடைகளைத் தூரப்போட்டாள்.
என்று இன்னொரு இடத்தில் எழுதுகிறீர்கள்
எழுத்தாளன் என்பவன் ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக எழுதுபவனல்ல. அவன் ஒரு குறிப்பிட்ட பிரச்னையைச் சரியான சூழ்நிலையில் வைத்து சித்தரித்து அதன் மகத்துவத்தை உணரச் செய்வதுதான் அவன் வேலை என்று பொருள்படும்படி இந்த வாழும் தமிழ் விழாவில் பேசிக்கொண்டிருக்கும்போது விவேக் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தைக் கூறினார். இந்தக் கதையின் பெரும்பாலான பகுதிகளில் நீங்கள் அந்தச் சித்திரத்தை துல்லியமாக வரைந்து காட்டியபடியே செல்கிறீர்கள். என் சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரைக்கு “புனைவெனும் அறாக்கனவு” என்று தலைப்பிட்டிருந்தேன். புனைவு என்பது ஒரு துல்லியமான, அறாத கனவுதான். அது துல்லியமாகவும், அறாத்தன்மையோடும் இருப்பதற்காக மெனக்கெட வேண்டியதுதான் கதைசொல்லியின் வேலை. அந்த வேலையை மிகத்திறம்படச் செய்திருக்கிறீர்கள்.
தான் கட்டியிருந்த வேட்டியின் நுனியில் அவர் பதித்துச் சென்ற செருப்பின் அடையாளத்தைத் தட்டிக் கொண்டே எழுந்து வெளியே எட்டிப் பார்த்தார்.
நிலவில் ஒளிரும் தார்ச் சாலையெனத் தூரத்திலிருந்த தொழுவத்தில் மினுக்கும் கரிய உடலுடன் எருமைகள் வரிசையாக அமர்ந்திருந்தன. எருமைகளின் எண்ணிக்கையை அகிலாண்டம் அவ்விருட்டில் மனதுக்குள் கணிக்க முயன்றார். ஓரிடத்தில் திரள்வதும் சட்டெனக் கலைவதுமாய் இருள் அவரை குழப்பியதில் எண்ணிக்கை ஒன்றுபோல இல்லை.
குடிசைக்குள் மண் சுவர்கள் சிவந்து அனலில் நகர்வது போல இருந்தது.
எளிமையாகச் சொன்னால் உங்கள் கேமரா மிக ஷார்ப்பாக வேலை செய்திருக்கிறது.
இந்த அகிலாண்டத்தை எப்படிப் புரிந்து கொள்வது? அவர் ஏன் இப்படி இருக்கிறார்?
“அங்க தான் அந்தோ கிழக்கு பக்கம் ரெண்டு நட்சத்திரம் பக்கத்து பக்கத்துல இருக்கு பாருங்க அது எங்கிருந்தோ வந்திருந்தது. அப்புறம் எங்க போனாலும் ஜோடியா தான் வருதுங்க”
“அப்படி இருக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு டா. எதுக்கும் கவலைப்படாம, யோசிக்காம அப்படியே போய்கிட்டே இருக்கிறது. எனக்கும் அப்படியெல்லாம் எல்லாரையும் ஒருநாள் பார்க்கணும்னு ஆசை இருக்குடா”, என்று சொல்லிப் பெரு மூச்சு விட்டுக்கொண்டே கீழே அமர்ந்திருந்த அந்தக் கைதியைப் பார்த்தார்.
அவர் ஓர் எளிய உயிர். ஒரு சிறுமியுடன் இணைந்து சட்டென்று குழந்தையாக மாறி, மரத்தின் கிளைகளில் பறவைகள் கட்டிய கூடுகளை ஆராய முடியும். அவர் வெறுமனே “இரு”க்கிறார். இது ஒரு ஞானியின் நிலை. ஆனால் அகிலாண்டத்துக்கு உதவாக்கரை பட்டம் மட்டும்தான்.
அப்புறம் கதையில் கொஞ்சம் டிடாக்டிக் தன்மை எட்டிப்பார்க்கிறது. இது குறையென்று இல்லை. இது இதுதான் என்ற போதம் இருந்தால் அதையும் கையாளலாம்; நான் அப்பகுதியையும் ரசித்தேன்.
ஒவ்வொரு வீட்டிலும் சிறிதும் பெரிதுமாகத் துருப்பிடித்த ஏதோ ஒன்று இருக்கிறது. ஒரு காரணத்திற்காகச் செய்யப்பட்டு உலகத்திற்கு வரும் அது, ஒளி இழந்து வேறொன்றாக மாறிவிடுகிறது. புதியதாக இருக்கும்போது அதற்குத் தான் எத்தனை மதிப்பு. மிகக் கவனமாக எடுப்பதும், கையாள்வதும் என அதன் மீது எத்தனை அக்கறை. ஏதோ ஒரு கட்டத்தில் உதாசீனப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் ஒரு மூலையில் நிறுத்திவிட, மெல்ல அதற்குள் வேறு ஒன்று குடிகொண்டு அரித்துவிடுகிறது. ஒரு சிலவற்றைத் துரு நீக்கிச் சரி செய்துவிடலாம். சிலவற்றை தீயிலிட்டே வேறொன்றாக்க முடியும். அது ஒரு சுழற்சி போல. அழிவே இல்லாமல் ஒன்று மற்றொன்றாக மாறிக்கொண்டேயிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.
திருப்புறம்பியம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் என்று ஊர்பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு மெல்லிய காலமயக்கத்தை அளிக்கின்றன. ஏதோ காலத்தின் பின்சென்று புராதன கிராமங்களின் பெயர்களைக் கேட்பதைப் போல. ஆனால் இவை இன்றும் இருக்கும், இயங்கும் ஊர்கள். அகிலாண்டத்தைப் போலவே அவையும் ஒரு எழுத்தாளன் கைபட்டுத்தான் தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டியுள்ளது.
கதையின் இறுதிப்பகுதியை சற்றே வேகமாகச் சொல்லிச் சென்றதுபோலிருந்தது. துருப்பிடித்த சிறகு துருவேறிய இரும்பில் விழுந்து பறவையின் சிறகொடிந்த ஒலியை எழுப்புவது அபாரமான கற்பனை, படிமம்.
வாழ்த்துக்கள் வெங்கட்.