வெளிப்புறத்தில் சுண்ணாம்பு பூசப்படாமல் சொரசொரப்பான சுவர்கள் கொண்ட கட்டிடமாயிருந்தது அது. பக்கவாட்டுச் சுவற்றுக்கு அருகில் ஒரு பெரிய வண்டியில்
உடைந்த ரம்பங்களும், துருப்பிடித்த குதிரை லாடங்களும், பழுதாகிப் போன தொலைபேசிப் பெட்டிகளும் குவித்து வைக்கப் பட்டிருந்தன. அந்த வண்டியின் மீது ஏறினால் முதல் ஜன்னலில் கால் வைத்து, இரண்டாவது ஜன்னலைப் பற்றி விட முடியும். கட்டிடத்தின் முன்னும், பின்னும்தான் ஆட்கள் நின்றிருந்தனர். இந்தச் சுவர்ப்பக்கம் தரையில் குடித்து வீசப்பட்ட மது பாட்டில்களும், எச்சில் இலைகளும், வாழைமட்டைகளும் சிதறிக்கிடந்தன. அவை கலவையாகச் சேர்ந்து எழுப்பிய நாற்றம் பாலுவுக்குப் பிடித்திருந்தது. இரும்புச்சாமான் வண்டி மீது ஏறி ஒரே தாவில் முதல் ஜன்னலைப் பிடித்து விட்டான். அங்கிருந்து இரண்டாவது ஜன்னலை எம்பிப் பிடிப்பதுதான் சிரமமாயிருந்தது. கொஞ்சம் தவறினால் உடைந்த ரம்பங்கள் மீதுதான் விழ வேண்டும். பத்து நிமிட முயற்சிக்குப் பின் இரண்டாவது ஜன்னலுக்குப் போய்விட்டான். ஜன்னல் வழியே மாலை வெளிச்சத்தில் காயத்ரி குட்டைக்கை வைத்த பூப்போட்ட சட்டையும், பாவாடையும் அணிந்து, குத்த வைத்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான். வென்டிலேட்டர் வழியே பாய்ந்த ஒளிப்பட்டையில், அறைக்குள் தூசு நிரம்பிக் கிடந்தது தெரிந்தது. செல்லரித்த மர மேஜைகளும், மரச்சட்டகங்களும் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன. தன்னைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்த காயத்ரிக்கு இவனைப் பார்த்ததும் கண்கள் விரிந்தன. பாலுவுக்கு இது கனவா அல்லது மனம் மட்டும் விழிப்புற்று உடல் விழிப்புறாத நிலையில் தானே வரவழைத்துக் கொண்ட கற்பனையா என்று புரியவில்லை. வேறு யாரும் வருவதற்கு முன் தானே வந்து அவளை மீட்க முடிந்ததை நினைத்து ஆனந்தப்பட்டான். ஜன்னல் வழியே உள்ளே குதித்து, அவளருகே சென்று அமர்ந்தான். அவள் அவன் பக்கம் பார்வையைச் செலுத்தாது அமர்ந்திருந்தாள். உடல் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவளைத் தோளோடு சேர்த்து அணைத்து இறுக்கிக் கொண்டான். காயத்ரி அவன் மீது பட்ட இடங்களிலெல்லாம் மிருதுவாக இருந்தாள். அவளுக்கென்றே இருந்த அந்தத் தனிப்பட்ட வாசனையை நுகர்ந்தான். திருடன் போலீஸ் விளையாடும் போதெல்லாம் ரகசியத் திட்டம் போடுவதற்காக அவள் இவன் தோள் மீது கை போட்டுத் தனியே அழைத்துச் செல்லுகையில் நுகர்ந்தது இதே வாசனையைத்தான்.
அணைப்பு இறுக்கமாகவும், கதகதப்பாகவும் இருந்திருக்க வேண்டும். அவளது நடுக்கம் நின்று விட்டது. இருந்தாலும் அவனுக்கு அணைப்பின் பிடியை விட விருப்பமில்லை. இது மாதிரிப் பலமுறை நிகழ்த்திப் பார்த்திருக்கிறான். ஆனால் அதற்கும் மேல் கற்பனை ஓட்டுவதற்கு தைரியம் இருந்ததில்லை. இதற்கு மேல் எல்லை மீறினால் அவளிடம் தான் உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் உடைந்து போய்விடுமோ என்று அஞ்சினான். மேலும், கற்பனையை வளர்த்திக் கொள்ள அவனுக்கு நேரம் இடம் கொடுப்பதேயில்லை. இரவு உறங்கப் போகையில் துவக்கினால் கற்பனையைத் தொடர முடியாதபடித் தூங்கிப்போய் விடுகிறான். அதிகாலையில் விழிப்பு வந்தவுடன் படுக்கையில் கிடந்தபடி யோசித்தால் பாட்டி எழுப்பி விட்டு விடுகிறாள்.
இப்போதும் பாட்டி எழுப்பி விட்டு விட்டதால் காயத்ரியை அணைத்தபடி அமர்ந்திருக்கும் சித்திரம் அப்படியே உறைந்து விட்டது. எழுந்தவுடன் பாட்டி கொடுத்த தூக்கையும், பணத்தையும் கையில் பிடித்தபடி டீக்கடைக்குக் கிளம்பினான். சாலையில் இன்னமும் இருட்டு போர்த்தியிருந்தது. கீரைக்கூடைகளோடும், மார்கெட்காரிகளோடும் இருபத்திநாலாம் நம்பர் கடந்து போனது. ஒன்றிரெண்டு வீடுகளில் வாசல் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்து விட்டனர். அதிகாலக் காற்று சிலுசிலுவென்று உடைகளுக்குள் புகுந்த நேரத்தில் டெக்ஸ்டூலில் இருந்து இரவு ஷிஃப்ட் தொழிலாளர்களுக்குக் காலைத் தேநீர் நேரத்துக்கான சங்கு ஊதியதால் பாலுவுக்கு மயிர் கூச்செறிந்தது.
சோகையாய் எரிந்த மெர்க்குரி விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தின் நனைந்து கொண்டிருந்த டீக்கடை ஒன்றிற்குள் நுழைந்தான். உள்ளே சென்று டீ மாஸ்டர் கவுண்டரில் தூக்கைக் கொடுத்து நாலு ரூபாய்க்கு டீ சொன்னான். பிறகு கல்லாவுக்கு வந்து பாட்டிலிலிருந்து ஒரு நெய் பிஸ்கட் எடுத்துக் கொண்டான். இந்தக் கடையில் டீ வாங்கினால் தாத்தாவுக்குப் பிடிப்பதில்லை. அளவு கொஞ்சமாய்ப் போட்டு விடுகிறான் என்று புலம்புவார். மதீனா ஸ்டோருக்கு எதிரிலுள்ள கடையில் தூக்கின் கழுத்து வரை போட்டுத் தருவான். ஏழுபேர் குடிக்க தாராளமாக இருக்கும். பாலுவுக்கு அந்தக் கடை வரை நடந்து செல்ல சலிப்பாக இருந்தது. தூக்கம் கண்களிலேயே தேங்கியிருக்க இந்தக் கடை வரை நடந்து வருவதற்கே பெரும்பாடாயிருக்கிறது. தவிரவும் அந்தக்கடையில் தேங்காய் பன்தான் வைத்திருப்பான். அதிகாலையில் எழுந்து டீ வாங்கிக் கொண்டு வருவதற்கு உபகாரமாக வீட்டில் கொடுக்கும் ஒரு ரூபாய் முதலீட்டைத் தேங்காய் பன்னில் இழக்க அவன் தயாராயில்லை.
பாலு நெய் பிஸ்கட்டை டீயில் தொட்டுத் தின்று முடிப்பதற்குள் ஆறுமுகம் சித்தப்பா குளித்துத் தயாராகி விட்டார். அவனிடம் தன் கைப்பையைக் கொடுத்து விட்டு, அவன் தோளைப் பிடித்துக் கொண்டார். இருவரும் வெளியில் வந்து நடக்க, சித்தப்பாவின் தள்ளாட்டத்துக்கும், தடுமாற்றத்துக்கும் ஈடு கொடுத்து மெதுவாக நடப்பது பாலுவுக்குக் கடினமான காரியமாக இருந்தது. பத்து நிமிடம் இப்படியே நடந்து பேருந்து நிலையத்தில் நிழற்குடையினருகில் வந்ததும், பெட்டிக்கு மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரனை வசைச்சொற்களால் ஏசியபடி அடித்து எழுப்பினார் சித்தப்பா. சிக்குப்பிடித்த தலையோடு இருந்த அவன் அழுக்கு மண்டி நார்நாராஇ கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த ஆடைகளைச் சுருட்டி கொண்டு எழுந்து தூணோரம் சென்று தரையில் படுத்துக் கொண்டான். பாலு பெட்டியின் பக்கவாட்டுக் கதவைத் திறந்து உள்ளிருந்து ஸ்டூல், ஸ்டாண்டு, கிளிப்புப்பை எல்லாம் வெளியே எடுத்தான். பெட்டியைத் தூணோடு இணைத்துக் கட்டியிருந்த சங்கிலியின் பூட்டைத் திறந்து, சங்கிலியைக் கழற்றி உள்ளே போட்டான்.
பலபலவென்று விடிந்து கொண்டு வந்தது. சாலையின் மறுபுறம் சந்தைக்காரிகள் காய்கறிக்கூடைகளை விரித்து வைத்துக் கொண்டுக் கூவ ஆரம்பித்து விட்டார்கள். டெம்போவில் குவிக்கப்பட்டு வந்திறங்கிய மீன்களின் நாற்றம் காலைக்காற்றில் தவழ்ந்து பாலுவை வந்தடைந்தது. பேருந்து நிலையச் சாலையை இரண்டாகப் பிரிக்குமிடத்தில் அமைந்த பிள்ளையார் கோயிலின் ஒலிபெருக்கியில், ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’ ஆரம்பித்து விட்டது. பாலு ஸ்டாண்டை எடுத்துப் பெட்டிமேல் வைக்க, இவனும், சித்தப்பாவும் சேர்ந்து கிளிப்பு மாட்ட ஆரம்பித்தார்கள். இறுக்கமாக இருந்த சில கிளிப்புகளை மாட்டுவதற்கு பாலி மிகவும் சிரமப்பட்டான். இரண்டுகைகளாலும் சேர்ந்து கிளிப்பை அழுத்த, அது கைகளிலிருந்து பிதுக்கிக்கொண்டு தரையில் விழுந்தது. மீண்டும் எடுத்து மிகுந்த முயற்சிக்கிடையில் கிளிப்பை மாட்டி விட்டுக் கைகளைப் பார்த்தான். இரண்டு கைகளிலும் கட்டை விரலும், ஆள்காட்டி விரலும் ரோஜா நிறத்தில் சிவந்திருந்தன. இனி திரும்ப இந்தக் கிளிப்புகளில் பரிசுச் சீட்டுகளை மாட்டுகையிலும் இதே பிரச்னைதான்.
சித்தப்பா கைப்பையைத் திறந்து லாட்டரிச் சீட்டுக்கட்டை இவனிடம் கொடுத்தார். இன்றைய குலுக்கல் நாகாலாந்தைக் கீழ்வரிசையில் பத்துப் பத்தாக மாட்ட வேண்டும். ஒரு செட் பத்து ரூபாய். தனியாக வாங்கினால் ஒன்று ஒரு ரூபாய் இருபது காசுகள். நடு வரிசையில் நாளைய குலுக்கல் பூட்டான் ஐந்து ஐந்தாக மாட்ட வேண்டும். பூட்டான் டிக்கட்டுகள் எந்தத் தேதி குலுக்கலாயிருந்தாலும் நிறையப் போகும். அம்மாநில பரிசுச்சீட்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் அவற்றுக்கு விழும் பரிசுக்கு சித்தப்பா கமிஷன் எடுத்துக்கொள்ள மாட்டார். மேல்வரிசையில் குபேரும், தமிழ்நாடு அரசும், கேரளா பம்பர் குலுக்கலும் கட்டுக்கட்டாகவே வைத்து விடலாம்.
முதல் வரிசையை மாட்டி முடிப்பதற்குள்ளாகவே நேற்றைய குலுக்கல் முடிவுகள் பார்க்கக் கூட்டம் வந்து விட்டது. சித்தப்பா பாலுவிடம் மூன்று ரூபாயைக் கொடுத்து அதிர்ஷ்டமும், தினமலரும் வாங்கிவரச் சொன்னார். இவன் நிழற்குடை தாண்டி தாஜ்மஹால் ஓட்டல் அருகில் இருந்த பெட்டிக்கடைக்குப் போனான். செய்தித்தாளும், பான்பராகும், வார இதழ்களும் வாங்குவதற்காக ஒரு சிறு கூட்டம் கடை முன் நின்று கொண்டிருந்ததனால் இவன் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வாழைப்பழக் குலைகளுக்குப் பின்னால் முத்து காமிக்ஸ் புத்தங்கள் நீளவாக்கில் தொங்கவிடப்பட்டிருந்தன. இவன் படிக்காத கதையாகத் தெரிந்தது. அன்றைக்குத்தான் வந்திருக்கும் போலிருந்தது. மீனா அக்கா வீட்டில்தான் இரும்புக்கை மாயாவி கதைகளும், குற்றச் சக்ரவர்த்தி ஸ்பைடர் (ஸ்பைடர் முதலில் வில்லனாக இருந்தபோது செய்த சாகசங்கள் அவனுக்கு மிகவும் பிடிக்கும்) கதைகளும், கருமலைத்தீவு, கோமாளியின் கொலைகள், மற்றும் இன்னபிற இந்திரஜாலக் கதைகளும் தவறாமல் வாங்குவார்கள். அவற்றைப் படிப்பதற்காகப் பள்ளி விட்டதும் மீனா அக்கா வீட்டிற்கு நேராகச் சென்று விடுவான். அவன் வந்தவுடனேயே அக்கா அவனுக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்து விடும். தின்பதற்கும் ஏதாவது கொடுக்கும். அவர்கள் வீட்டிலேயே உட்கார்ந்து முழுவதையும் படித்துவிட்டு வீடு திரும்ப மணி ஆறாகி விடும். வீட்டுக்கு எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் போக மீனா அக்கா அனுமதிக்காது. ஆறுமணிக்கு வீடு திரும்பினால் ‘எங்கடா ஊரை சுத்திட்டு வர்றே?’ என்று கேட்பார் தாத்தா. இந்த மாதம் முழுக்கவே அப்படி எதையும் படிக்க முடியாமலாகி விட்டது. மீனா அக்கா கல்யாணமாகி நெய்வேலிக்குப் போய் விட்டது. ஊருக்குப் போகும்போது ஒருமுறை அவனையும் நெய்வேலிக்குக் கூட்டிச் செல்வதாகச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறது.
‘அது எவ்ளங்கண்ணா?’ என்றார் கைகாட்டி. கடைக்காரர் படக்கென்று கிளிப்பிலிருந்து ஒரு புத்தகத்தை உருவி, ‘ இந்தா, மூன்று ரூபாய்’ என்றார். ‘இல்ல. காசு இல்ல. அப்புறம் கொண்டு வந்து வாங்கிக்கிறேன்.’ என்றான். கடைக்காரர் அவனை வைதபடி அவன் கேட்ட செய்தித்தாள்களைக் கொடுத்தார். அவற்றை வாங்கிக் கொண்டு சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தான். அட்டைப்படத்தில் ஷெரீஃப் பழுப்பு நிற முழுக்கை சட்டையும், பாண்டும் அணிந்திருந்தார். சட்டை, பாண்ட் இரண்டிலும் எண்ணற்ற பாக்கெட்டுகள். கௌபாய் தொப்பி அணிந்தபடி இரண்டு தொடைகளிலும் செருகி நிற்கிற துப்பாக்கி ஸ்டாண்டுகளில் ஒன்றிலிருந்து ஒரு துப்பாக்கியை உருவி உயர்த்தியிருந்தார். அவர் அமர்ந்திருந்த குதிரை பிடரி சிலிர்த்தபடி இரண்டு கால்களையும் உயரத்தூக்கி நின்றிருந்தது. பின்னால் ஓர் இளம்பெண்ணும், தலையில் கோழி இறகுகள் செருகின, பரந்த முகம் கொண்ட செவ்விந்தியர் ஒருவரும் வரையப்பட்டிருந்தனர். பின்புலத்தில் பாலைவனமும், வறண்ட மலைகளும் தெரிந்தன. சூரியன் கொளுத்திக் கொண்டிருந்தது. ‘பொற்குகை ரகசியம்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. நின்றபடியே மனக்கண்ணில் கதையை யூகிக்க முயற்சி செய்தான். யூகிக்க யூகிக்க கதையை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டு மூன்று ரூபாய்க்கு என்ன செய்வது என்ற திட்டம் வலுப்பெற ஆரம்பித்தது. ‘அங்க என்னடா பண்ணிட்டிருக்கே? சீக்கிரம் வாடா?’ என்று சித்தப்பாவின் குரல் கேட்டது.
குலுக்கல் முடிவு பார்த்து விட்டுப் பரிசு விழுந்திருந்தால், பாதிபணத்துக்குப் பரிசுச் சீட்டு வாங்கவேண்டும் என்று சித்தப்பா வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவர் கடையில் வாங்கிய சீட்டாக இருந்தால் முழுப்பணமும் கொடுப்பார். சித்தப்பா பரிசுச்சீட்டுகளை மொத்தவிலைக்கடையிலிருந்து டி.சி போட்டுத்தான் வாங்குவதால் அவர்களிடமிருந்து கமிஷன் கிடைத்து விடும். வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எஸ்.எஸ்.மணியன் லாட்டரி சென்டரிலிருந்தோ, சேகர் கடைக்கோ பாலுதான் கடைக்குப் போய் பரிசுச்சீட்டுகளை மொத்த விலைக்கு வாங்கி வருவான். வாங்கிய சீட்டுகளை அன்றிரவே கட்டுகளின் பின்களை உருவி, ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் தேவமைந்தன் லாட்டரி சென்டர் என்கிற சித்தப்பா பெயர் கொண்ட சீல் குத்த வேண்டும். வாரத்தில் இரண்டாயிரம் சீட்டுக்காவது பாலு சீல் குத்துவான். தேவமைந்தனும், அவனது தாயும் சித்தப்பாவுக்கு இரு கண்கள். கால் சரியாக வேண்டும் என்று வருடாவருடம் வேளாங்கண்ணிக்குப் போய் வருவார். வரும்போது ஏசு, மேரி படம் போட்ட மோதிரங்கள், செயின், வேளாங்கண்ணி மாதாவின் உருவச்சிலை போன்றவற்றை வாங்கி வருவார். ஒருமுறை அவர் வாங்கி வந்த மாதா சிலை இருளில் கூட ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சித்தப்பாவின் இந்த ஏசு பக்தியால் பாலுவின் வாழ்க்கையில் விருப்பமற்றதாக ஒன்றும், விருப்பமானதாக ஒன்றுமாக இரு மாற்றங்கள் விளைந்தன. சகல வல்லமைகளும் கொண்ட, சங்கு சக்ரதாரியான மஹாவிஷ்ணுவுக்கும், மாதஜோதிடம் இதழின் பின் அட்டையில் வருகிற புராணப்படக்கதைகளின் மூலம் அவனது சமீபத்திய கதாநாயகனாகி விட்ட வினாயகருக்கும் நடுவில் முள்முடி அணிந்து, நெஞ்சில் கைவைத்து, பரிதாபப் பார்வை பார்க்கிற ஏசுவும் இடம் பிடித்து விட்டார். முதலில் பாலுவால் இதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் வீட்டில் யாரும் இந்த வரவேற்கத்தகாத மாற்றத்தைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அமாவாசையன்று தேங்காய் உடைத்து, கடவுளர்களுக்குக் காட்டுகிற தீபத்தை இப்போது ஏசுவுக்கும் சேர்த்துக் காட்டி விடுகிறார்கள். இரண்டு வருடமாக சுவரெல்லாம் வண்ணக்காகிதம் ஒட்டி, பலூன் ஊதி கிறிஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனாலும் சித்தப்பாவின் புதிய ஏற்பாடும், அவருக்கு எங்கிருந்தெல்லாமோ வந்து சேர்கிற குட்டிக் குட்டி நல்வழிக்கதைகள் புத்தகங்களும், பாலுவின் இந்த ஏமாற்றத்துக்கு ஆறுதல் அளிப்பதைப்போல் அமைந்திருந்தன. ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே. எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று ஏசு சொல்வது இவனுக்காகவே என்று பட்டது. புதிய ஏற்பாடு அறுபது பக்கங்களுக்கொருமுறை ஒரே மாதிரி திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. புதிய ஏற்பாட்டின் சம்பவங்களே குட்டிப் புத்தகங்களில் படம் போட்டு கதையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் பாலுவுக்கு ஸ்வாரசியமாகத்தான் இருந்தது.
இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்கும் கடை முன்பாக ரமேஷ் திடீரென்று பிரசன்னமாயிருந்தான். இவனைப் பார்த்து ‘ஊய்’ என்றான். பாலு உடனே முகம் மலர்ந்து, ‘சித்தப்பா, இன்றைய குலுக்கல் டிக்கெட் குடுங்க. நான் போய் வித்துட்டு வர்றேன்.’ என்றான்.
‘முதல்ல போய் டீ வாங்கிட்டு வாடா’ என்றார் சித்தப்பா. விடுவிடுவென்று கடைக்குப் போய் டீ வாங்கி வந்த பிறகு, அவனது பங்கு ஒரு ரூபாயைக் கையகப்படுத்திக் கொண்டான். சித்தப்பா இவனிடம் ஒரு முப்பது டிக்கெட்டுகளைக் கொடுத்து அனுப்பினார். வாங்கிக் கொண்டு ரமேஷைப் பார்த்து சைகை செய்தான். இருவரும் விடுவிடுவென்று ஓடி, சாலையைக் கடந்தார்கள். மூணாம் நம்பரில் ஏறி, ஜிப்பா அணிந்து, கைத்தடி வைத்திருந்த பெரியரிடம் பரிசுச்சீட்டுகளை நீட்டினான். ‘ போடா, அங்கிட்டு, வந்திட்டானுங்க காலங்கார்த்தால’ என்றார். வேகமாக அங்கிருந்து நகர்ந்து ஜோடியாக அமர்ந்திருந்த ஓர் இளம்பெண்ணையும், இளைஞனையும் பொருட்படுத்தாது நகர்ந்தான். டிரைவரிடம் கேட்கலாமா என்று முன்பக்கம் சென்றபோது பானட் பக்கம் உட்கார்ந்திருந்த குண்டுப் பெண்மணி வாயோரம் வழிந்த வெற்றிலைச் சாற்றை வழித்து வெளியே துப்பிவிட்டு, ‘இன்றைய குலுக்கலா?’ என்று கேட்டாள்.
இருபது டிக்கெட்டுகளையும் அவளே வாங்கிக்கொண்டதால் பாலுவுக்கு இரண்டு ரூபாய் லாபம். மீதி டிக்கெட்டுகளை சித்தப்பாவிடம் கொடுத்துக் கணக்குக் கட்டியதும், பெட்டிக்கடையில் பொற்குகை ரகசியத்தை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும் பாலுவைப் பொறுத்தவரை மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து விட்டன.
ஷெரீஃப் எதற்கும் கவலைப்பட்டவர் மாதிரித் தெரியவில்லை. பொற்குகையின் இருப்பிடம் தெரிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கடத்தப்பட்டிருப்பதாக அவரது பெண் வந்து முறையிட்டிருக்கிறாள். அவருக்கு உதவுவதாக செவ்விந்தியத் தலைவர் சொல்லியிருக்கிறார். மேலும் தொடர்வதற்குள் அடுப்படியிலிருந்து ‘கெளம்பலயாடா?’ என்றாள் பாட்டி.
பாலு பொற்குகை ரகசியத்தை மூடி விட்டு, தமிழ்ப் பாடநூலைக் கையிலெடுத்தான். இம்முறை காயத்ரி குதிரை மேல் முன்பக்கமாகப் பக்கவாட்டில் அமர்ந்திருக்கிறாள். பாலு குதிரையின் லகானைப் பிடித்துக் கொண்டு ஆறுதலாக அவள் தோள் மீது கை வைத்துக் கொண்டிருக்கிறான். அவள் கண்ணில் படலமிட்ட கண்ணீரைக் கண்டு நெஞ்சு கரைந்து விடுகிறது அவனுக்கு. ‘ வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி . . . ‘ படிக்கப் படிக்க செய்யுள் ஏற்கனவே நன்றாகவே நினைவில் இருப்பது புரிந்தது. பக்கங்களைப் புரட்டப் புரட்ட எதையும் படிக்கத் தோணவில்லை. அதற்குள் குளிக்கப் போகச் சொல்லி பாட்டி கூப்பிட ஆரம்பித்து விட்டாள்.
குளித்து உடை மாற்றியபின் அட்டையை எடுத்துக் கொண்டான். ‘ வர்றேன், பாட்டி ‘ என்றான் வாசல் தாண்டியவுடன். அவள் வெளியே வந்து, சாப்பிடலாயாடா? பழைய சோறும், தேங்காய்த் துண்டும் இருக்கு…’ என்றாள். வேண்டாம் என்று தலையை ஆட்டியபடி முன்னேறினான்.
‘ எங்க பாலுவுக்கு ஊசித்தொண்டை. சாப்பாடே இறங்கறதில்லை. ஆனா படிக்காமலேயே ஃபர்ஸ்ட் ரேங்க் வந்துடுவான். படிப்பில படு சுட்டி’ என்று எதிர் வீட்டு மைதிலி அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பாட்டி.