26 நவம்பர், 2024

நிமித்தம் - சிறுகதை

 

நிமித்தம்

சிறுகதை 

ஜெகதீஷ் குமார்



நன்றி: அகழ்




“இங்க இறங்கிக்கிங்க,” என்றான் ஆட்டோக்காரன்.

“இங்க இல்லிங்க, நான் போவேண்டியது டிஎன்டிஈயுவுக்கு.”

“சார், முன்னாடி நாலு பஸ் நிக்கிது. அதெல்லாம் எடுத்து நாம கெளம்பறதுக்குள்ள நேரமாயிரும். நீங்கதான சீக்கிரம் போன்னு சொன்னீங்க?”

ஆட்டோக்காரன் விவேகானந்தர் இல்லத்துக்கு முன்பாகவே இறக்கி விட்டு விட்டான். அங்கிருந்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு இன்னமும் இருநூறு அடிகளாவது நடக்க வேண்டியிருக்கும். நாலு நாள் முன்பு விமானமேறுவதற்கு முன் துபாய் சர்வதேச விமானநிலையத்தில் வாங்கிய லெதர் ஷூ பாதங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தது. வலியைப் பொறுத்துக் கொண்டு தேய்த்துத் தேய்த்து வாகனங்களுடேயும், ஜன நெரிசலினூடேயும் நடந்து பூசனம் பூத்த சுவர்கள் கொண்ட அந்த பல்கலைக் கழக வளாகத்தை அடைந்தான். அலுவலகத்தின் வாயிலை அடையும் முன் தோள்பையைத் திறந்து, கொண்டு வந்த ஆவணங்கள் உள்ளே இருக்கின்றனவா என்று சரி பார்த்துக் கொண்டான்.

வெளியே மரபெஞ்சில் ஐந்துபேர் அமர்ந்திருந்தார்கள். எல்லாரும் மத்திய வயது தாண்டிய ஆண்கள். முகங்களில் ஏதோ சுமக்க முடியாத பாரத்தைச் சுமக்கும் வலி தெரிந்தது. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான். இன்னும் முன்னாலேயே வந்திருக்க வேண்டுமோ? 

அவன் தயங்கி நின்றதைப் பார்த்து எல்லாரும் நெருக்கிக் கொண்டு இடம் கொடுத்தார்கள். பெஞ்சின் நுனியில் அமர்ந்து தோள்பையை மடியில் வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான். உள்ளே பெரிய மின்விசிறிகள் சோம்பலாகச் சுழன்றபடி கொஞ்சம் வாயிலுக்கும் காற்றைக் கொண்டு வந்தன. ஏதோ ஓர் மூலையில் யாரோ தட்டச்சியந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தாகத் தட்டிக் கொண்டிருந்த ஒலி இவன் மண்டையில் இடித்தது. வடையோ, பஜ்ஜியோ, வாசனை பசியைக் கிளப்பியது. காலை எதுவும் சாப்பிடாமல்தான் கிளம்பியிருந்தான். அத்தை கொடுத்த காபியைக் குடித்திருந்ததோடு சரி.

“அப்ளிகேஷன் கொடுத்திட்டீங்களா?” என்றார் பக்கத்திலிருந்தவர். அவர் கண்ணில் புரை விழுந்திருந்ததைக் கவனித்தான். இவர்கள் எல்லாமா ஆசிரியராகப் போகிறார்கள்?

“ஈமெயில் அனுப்பியிருந்தேன். இங்கயும் கொடுக்கணுமா?”

“அவங்களே கேப்பாங்க,” என்றார்.

இவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சுக்குப் பக்கவாட்டில் இருந்து ஒரு கதவு திறந்தது. கழிப்பறையாக இருக்க வேண்டும். உள்ளிருந்து காக்கிச் சட்டை அணிந்த ஒருவர் வெளியே வந்தார். வந்ததும் ஏறிட்டு இவர்கள் திசையில் பார்த்தார். இவனுக்கு அவர் தன்னைத்தான் பார்ப்பது மாதிரி இருந்தது. வாயிலில் நின்றபடி உள்ளே பார்த்து, “சிவராமன் சார், இன்னொரு ஆள் வந்திருக்கு,” என்றார்.

சிவராமன் என்று அழைக்கப்பட்டவர் உள்ளேயிருந்து மெலிந்த உடலோடு, பழுப்படைந்த வெள்ளைச் சட்டை அணிந்தபடி வந்து வாயிலில் நின்றார். கையிலிருந்த தாளைப் பார்த்து, “ரகு நாதன்?” என்றார்.

இவன் எழுந்து அவர் முன்னால் சென்று நின்றான். 

“நீங்கதானா?”

“ஆமாம், சார். என் பேரு ரகு நந்தன்.”

“ஏங்க, இப்ப அதுதான் பிரச்னையா? வந்தவுடனே உங்க ஃபார்ம்ஸை சப்மிட் பண்ண மாட்டிங்களா? நாங்க வந்து கேட்கணுமா?”

“சார், வந்து, அதுதான் பிரச்னையே. என் சர்டிஃபிகேட்ல பேரு ரகு நாதன்னு தப்பா போட்டிருக்கு. அத மாத்தணும்.”

“அப்ளிகேஷன் கொடுங்க. ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, டிகிரி சர்டிஃபிகேட் எல்லாத்துக்கும் ஜெராக்ஸ் வேணும். ஒரிஜினல்ஸை காட்டிட்டு திரும்ப வாங்கிக்கலாம்.”

“சார், புது சர்டிஃபிகேட் எப்பக் கிடைக்கும்?”

அலுவலர் புன்னகைத்தார். “உட்காருங்க. உங்க முறை வரும்போது கூப்பிடுறேன்”, என்றார். “சேகர், ரெஜிஸ்டிரார் நாளையிலிருந்து ஒரு மாசம் லீவு. இந்த அப்ளிகேஷன்லாம் வெரிஃபை பண்ணி கொடுத்தர்றேன். அவர் டேபிள்ல வைச்சிடுங்க. அவர் எத்தனை அப்ரூவ் பண்றாருங்கறத வச்சித்தான் இன்னிக்கு வொர்க்லோடு,” என்றார் காக்கிச் சட்டையைப் பார்த்து. பின் இவனை ஏறிட்டும் பாராமல் திரும்பி உள்ளே சென்று விட்டார். 

இவன் மீண்டும் சென்று பெஞ்சில் அமர்ந்தான். ஏறிட்டுப் பார்த்தபோது தெரு நாய் ஒன்று மைதானத்துக்குள் மந்தமாக நடந்து கொண்டிருந்தது. மைதானத்துக்கு அந்தப்புறம் புதுக்கட்டிடம் ஒன்று வெளிர் மஞ்சள் நிற டிஸ்டம்பரில் பதிவாளர் அலுவலகம் என்ற பெரிய எழுத்துப் பலகையுடன் நின்றிருந்தது. வாயிலில் ஒரு டவாலி உட்கார்ந்திருந்தான். வெளியில்அம்பாஸிடர் கார் உறைபோட்டு மூடப்பட்டு நின்றிருந்தது. இவனது ஒளிமிக்க எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்கு, இவனுடைய கோப்பு இங்கிருந்து அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து தாமதமின்றி வெளிவர வேண்டும்.

முதல் நாளிரவுதான் ஈரோட்டில் கோவை எக்ஸ்பிரஸ் பிடித்து காலை ஐந்து மணிக்கு சென்னை வந்து சேர்ந்தான். இவனது பெர்த்தில் ஜன்னல் சரியாக மூட முடியவில்லை. கடும் குளிர்காற்று விடாது உள்ளே வந்து, உலுக்கி, உலுக்கி உறங்கவிடாமல் செய்து விட்டது. அத்தை வீட்டுக்குப் போய் உடனே படுத்து எட்டரை மணிக்குத்தான் எழுந்தான். குளித்துத் தயாராகி இங்கு வர பத்தரை மணியாகி விட்டது. வந்திருந்தவர்கள் ஏழு மணியிலிருந்தே காத்திருப்பார்கள் போல. தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள்.

அசைந்து அமர்ந்ததில் கண்புரைக்காரரின் தோளில் உரசினான். அவர் வெடுக்கென்று திரும்பி இவனைப் பார்த்தார். “எப்ப முடிச்சீங்க?” என்றார்.

“போன வருஷம். போன மாசம்தான் டிகிரீ சர்டிஃபிகேட், கன்சாலிடேடட் மார்க்லிஸ்ட் எல்லாம் வந்தது. எல்லாத்திலயும் தப்பாப் பேர் போட்டிருக்கு.”

“குடுத்துட்டுப் போங்க. எப்படியும் மாசத்துக்கு ஒருக்கா நாமதான் அவங்களுக்கு கூப்பிட்டு ஞாபகப்படுத்தனும். என்னுது ரிக்வெஸ்ட் போட்டு ஆறுமாசமாச்சு. ஃபோன் போட்டா எடுக்க மாட்டேன்றாங்க. அதான் நேர்லயே வந்துட்டேன்.”

மாதக்கணக்கில் ஆகுமா? காலி வயிற்றில் சட்டென்று ஒரு சுழல் கிளம்பியது. சற்று தயங்கியபடி, “எனக்குப் பதினைந்து நாளுக்குள்ள வேணும். விசா இண்டர்வியூக்கு போறதுக்கு முன்னாடி,” என்றான்.

“ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாமா?” என்றார் கண்புரைக்காரர். “எப்படியும் இது அவங்களுக்கு டீ டைம். நம்மளக் கூப்பிடறதுக்கு இன்னும் ஒரு மணி நேரமாவுது ஆவும்.”


* * *

“எங்க போறீங்க?” என்றார் டீயை ஊதி நுரையை விலக்கியபடி. இருவரும் பல்கலைக் கழகத்துக்கு வெளியிலிருந்த ஒரு டீக்கடையின் வாயிலில் நின்றிருந்தார்கள்.

“கனடா,” என்றான்.

“கனடாவா? அங்க டீச்சர்ஸ்லாம் எடுக்கறாங்களா?”

“நான் இப்ப நட் அல் ஷெபா ஐபி ஸ்கூல்ல சைன்ஸ் டீச்சரா இருக்கேன். அது மூலமா இந்த வாய்ப்பு வந்தது.”

“சார், உங்களுக்கு சர்டிஃபிகேட் திருத்தி வேணும்னா, அப்ளை பண்ணா மட்டும் பத்தாது,” என்றார். குரலை சற்று தாழ்த்தி,  “கவனிக்க வேண்டியவங்களை கவனிக்க வேண்டிய இடத்தில் கவனிக்கனும். அப்ப சீக்கிரமா கிடைக்க வாய்ப்பிருக்கு.”

“அதெப்படிங்க? தப்பு அவங்க பண்ணினது. அத சரி பண்றதுக்கு நாம எப்படி பணம் கொடுக்கறது. லஞ்சம் கொடுக்கறது தப்பில்லையா?”

“எந்த ஊர்ல இருக்கீங்க நீங்க? நம்ம ஊர்ல எல்லாமே இப்படித்தான்.”

“துபாயில. அங்கெல்லாம் இப்படிக் கிடையாது சார். எந்த வேலைன்னாலும் நேர்மையா நடக்கும். சீக்கிரமாவும் நடக்கும். இந்த வேலைக்காக கிரிமினல் சர்டிஃபிகேட் அப்ளை பண்ணினேன். ரெண்டே நாள். ஈ மெயில் அனுப்பி வந்து வாங்கிட்டுப் போன்னு சொல்லீட்டாங்க. பத்து பைசா செலவில்ல. பத்து வருஷமா அங்கதான் இருக்கேன். இங்க எதாவது மாறியிருக்கும்னு நெனச்சேன். நீங்க என்னடான்னா பணம் குடுத்தாத்தான் ஆகும்கறீங்க.”

“இங்க எப்பவுமே அப்படித்தான். நாம எங்க இருக்கமோ அதுக்கு ஏத்தமாதிரிதான் நடந்துக்கனும். பேசாம எதையாவது குடுத்து வேலையை முடிச்சிக்கோங்க. நமக்கு வேலதானே முக்கியம்?”

“அப்படியில்லிங்க. நான் இங்க இருந்தப்பவே இந்த மாதிரி குறுக்கு வழியில எதுவும் சாதிச்சதில்ல. இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்.”

“உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு,” என்றார் கண்புரைக்காரர். “இந்த நேர்மையோடவே உங்களது காரியத்தை சாதித்துக் கொள்ள என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.”

* * *

திரும்பிச் சென்று பெஞ்சில் அமர்ந்து காத்திருப்பைத் தொடர்ந்தார்கள். தேனீர் நேரம் முடிந்து மதிய உணவின் நேரம் வந்து விட்டது. வெளியில் அமர்ந்திருந்த யாருமே அழைக்கப்படவில்லை. கண்புரைக்காரருடன் கிளம்பி மீண்டும் வெளியே வந்தான். சாலையைத் தாண்டி இருந்த சரவணபவனுக்குள் நுழைந்தார்கள். உள்ளே ஒரு பத்துப் பதினைந்து பேர் இருந்தார்கள். அலுவலகத்தில் இவன் பார்த்த காக்கிச் சட்டைக்கார சேகரும் இருந்தார். ஒரு மேஜையில் அவர் மட்டும் தக்காளி சாதத்தைக் கிளறியபடி இருந்தார். கண்புரைக்காரர் இவனிடம் கண்காட்டி அங்கே போகலாம் என்றார். இருவரும் அந்த மேஜையைச் சுற்றி அமர்ந்தார்கள். காக்கிச் சட்டை நிமிர்ந்து பார்த்தது. இருவரும் பொத்தான் அழுத்தியதைப் போலப் புன்னகைத்தார்கள்.

இருவருக்கும் தக்காளி சாதமே சொன்னார்கள்.

“என்னங்க, சேகர், எங்க வேலை இன்னிக்கு முடிஞ்சிருமா?” என்றது கண்புரை.

காக்கிச் சட்டை மையமாகத் தலையாட்டியது. உணவு நிறைந்திருந்த வாய் புன்னகைத்தது. 

“சாருக்கு சர்டிஃபிகேட் திருத்தி அவசரமா வேணுமாம். கனடா போறார். எதாம் வழி இருக்கா?”

“ஏங்க, கவர்மெண்டுக்குன்னு ஒரு வேகம் இருக்கில்ல. அத மீறி எதும் நடந்துற முடியுமா?”

“பாஸ்போர்ட் அப்ளை பண்ண ரெண்டு நாள்ல வீடு தேடி வருது,” என்றான்.

“அது மத்திய அரசுங்க. இது மாநிலம்.”

கண்புரை முன்னோக்கிக் குனிந்து காக்கிச்சட்டையிடம், “யார்கிட்ட குடுத்தா நடக்கும்? ஒருவேளை நீங்கதான் அந்த ஆளா?” என்றது.

“அட நீங்க வேற. இப்படி வெளியில வந்து பேசிக்கிட்டிருக்கிறது தெரிஞ்சா நான் முடிஞ்சேன். அது பத்தில்லாம் எனக்குத் தெரியாது. ரிஜிஸ்டரார் அறைக்குள்ள கொண்டுபோறவரைக்கும்தான் எங்க பொறுப்பு. அவர் எத்தனை ஃபைல்ல கையெழுத்து போடறாரோ அது அவருக்குத்தான் வெளிச்சம். மீதி ஃபைல்ல அவர் லீவு முடிஞ்சு வந்துதான் போடுவார்.”

தக்காளி சாதம் வந்து விட்டது. கண்புரை எழுந்து சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றது. காக்கிச்சட்டை இவனை நிமிர்ந்து பார்த்தது. “இவர் பேச்சக் கேட்டுக்கிட்டு பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் பணம் குடுத்தா வேல நடக்குமான்னு கேட்டுகிட்டு இருக்காதிங்க. முன்ன மாதிரி இல்ல இப்பல்லாம். எல்லாம் கமுக்கமா நடக்குது. இப்ப இருக்கற ரிஜிஸ்டரார் புதுசு. இது வரைக்கும் பார்த்ததுல கண்டிப்பானவர் மாதிரிதான் தெரியிறார். நாம பாட்டுக்கு எதோ கேக்கப்போயி, எதாவது எடக்கு மடக்கா நடந்துறப்போவுது.” அவர் ஏதோ தன்னிடமே பேசிக் கொண்டமாதிரிதான் பட்டது.

“வேற வழியே இல்லிங்களா?” என்றான். விமான நிலையத்தில் டாலர் கொடுத்து மாற்றிய பணம் எட்டாயிரம் அவனது பைக்குள்  இருந்தது. காக்கிச் சட்டை போடும் பீடிகையைப் பார்த்தால் இவனிடம் பணம் கொடுத்தால் நடக்கும் போலத்தான் தெரிகிறது. தன் கைவிரல்கள் மெலிதாக நடுங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். கணநேரத்தில் தன் மனம் தடுமாறியதற்காகத் தன்னையே கடிந்து கொண்டான். அவனறிந்து இதுவரைக்கும் எதையும் யாருக்கும் கொடுத்து சாதித்ததில்லை. இனிமேலும் அப்படித்தான் இருக்க வேண்டும்.

“நீங்க ஒண்ணு பண்ணுங்க. நான் சாப்பிட்டுட்டுப் போய் இன்னிக்கு வந்திருக்கற ஃபைல் எல்லாம் சார் ரூம்ல கொண்டு வைச்சிடுவேன். நீங்க நேர அவரையே பார்த்து உங்க நிலைமையைச் சொல்லிப் பாருங்க. ஒருவேளை அவர் எதுனா எங்களுக்கு சிக்னல் குடுத்தா உங்களுக்கு சர்டிஃபிகேட் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு.”

“சிக்னல்னா?”

“உங்க ஃபைல்ல குறிப்பு எழுதுவார். டாப் பிரையாரிட்டின்னு.”

“அப்படிப் பண்ணுவாரா?”

“ரெண்டு மூணு கேசுக்குப் பண்ணிருக்கார். கஷ்டப்பட்ட குடும்பம். உடனே சர்டிஃபிகேட் இருந்தாத்தான் வேலைக்கே அப்ளை பண்ண முடியும்கற மாதிரி நெலமை.”

பத்து வருடங்களுக்கு முன்னால் இவனும் கஷ்டப்பட்ட குடும்பத்தில்தான் இருந்தான். இப்போது வெளிநாட்டு வேலையில் கடனெல்லாம் கழிந்து, சொந்த வீடு கட்டி, உடல் பூரித்து வளமாகத்தான் இருக்கிறான். பொய் சொல்லமுடியாது.

“போய்ச் சொல்லுங்க. என்ன நடக்குதுன்னு பாப்போம். அப்புறம் நீங்க யாரைப் பாக்கணும்னு நான் சொல்றேன்.”

“எதுக்கு?”

“என்ன சார், புரியாமப் பேசறீங்க! சீக்கிரம் அனுப்புன்னு அவர் சொன்னாப் போதுமா? கீழ இருக்கறவங்க வேலை செய்ய வேண்டாமா?”

*

பதிவாளர் அலுவலகத்துக்கு வெளியே இருந்த மகிழமரம் தன் நிழல் மீது பூக்களை உதிர்த்திருந்தது. முன்னர் பார்த்த கார் நின்றிருக்கவில்லை. வாயிலை ஒட்டி சுவரோரம் மூன்று கையில்லாத நாற்காலிகள். அவற்றிலொன்றில் பதிவாளருடைய உதவியாளர் அமர்ந்து விரோதப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இங்க யார் உன்னை அனுப்பியது என்பது போல. தயங்கியபடி சென்று ஓர் இருக்கை தள்ளி அமர்ந்தான். 

பதினைந்து நிமிடம் கழித்து வெளியே பதிவாளரின் கார் வந்து நின்றது. இவன் இருப்பதைப் பொருட்படுத்திய மாதிரியே தெரியவில்லை. கட்டம் போட்ட சட்டையை இறுக்கமாக அணிந்து தொந்தியருகில் பட்டன்கள் பிதுங்கித் தெரிந்தது. காரிலிருந்து வெளியே வந்தவுடன் படியேறி சரக்கென்று உள்ளே சென்று விட்டார். அவர் விட்டுச் சென்ற ஜவ்வாது வாசனை மட்டும் சற்று நேரம் அங்கு மிதந்தபடி இருந்தது. அவரைப் பார்க்க வேண்டும் என்று உதவியாளரிடம் கேட்டான். இப்பதான் வந்திருக்கார், இப்போதைக்கு முடியாது. சாப்பாட்டுக்கு அப்புறம் அவர் யாரையும் பார்ப்பதில்லை என்று தாழ்ந்த குரலில் சொன்னான். இவன் தன் அவசரத்தையும், காக்கிச்சட்டைதான் அவரைச் சந்திப்பதற்கான ஆலோசனையை அளித்ததாகவும் சொன்னான். இவர்கள் பேச்சுக்குரல் கேட்டு பதிவாளர் என்ன என்று உள்ளிருந்து விசாரித்தார். உதவியாளன் உள்ளே சென்று விளக்கியவுடன் இவனுக்கு அழைப்பு வந்தது. 

பதிவாளர் மேஜைக்குப் பின்னால் அமர்ந்து கோப்புகளை நோக்கிக் குனிந்திருந்தார்.  அழுந்த வாரப்பட்டிருந்த உப்பு-மிளகு தலைமுடிக்குப் பின்னால் வழுக்கை மண்டை தெரிந்தது. மதிய உணவின் தாக்கமோ என்னவோ மூச்சு பெரிதாக வந்து கொண்டிருந்தது. இவன் சென்று முன்னால் நின்றதும் சில கணங்கள் கழித்துதான் தலை நிமிர்ந்தார்.

“சொல்லுங்க.”

சொன்னான். சரியாகச் சொன்னானா தெரியவில்லை. ஆனால் தகவல் எதுவும் விடுபடவில்லை: அவனுக்குக் கனடாவில் வேலை கிடைத்தது; இன்னும் பதினைந்து நாட்களில் நடக்கவிருக்கும் விசாவுக்கான நேர்முகத்தேர்வு; ஆகஸ்டு முதல் வாரத்துக்குள் வேலையில் சேரவில்லையென்றால் பணி பறிபோகும் அபாயம்.

பதிவாளரின் முகம் மாறவில்லை. ஆனால் கனடா என்றதும் கண்களில் சிறு வெளிச்சம். எழுந்து நின்று பேண்டை மேலேற்றிச் சரி செய்தார்.

“ஃபைல் பாத்துட்டு முடிவு பண்றேன். நீங்க கெளம்பலாம்,” என்றார்.

ரகுநந்தன் தயங்கினான். வெறுமையாகப் புன்னகைத்தான். பதிவாளர் கண்ணாடியைக் கழற்றி மேஜை மீது வைத்தார். 

“சார், நார்மலா கனடாவுக்கு சாஃப்ட்வேர், மெடிசின்னுதான் மக்கள் போவாங்க. டீச்சர் வேலைக்குப் போறதுங்கறது ரொம்ப ரேர். எனக்கு அந்த வாய்ப்பு வந்திருக்கு. எல்லாம் நல்லா அமையறதுக்கு உங்க ப்லெஸ்ஸிங் வேணும் சார்,” என்றான். சட்டென்று குனிந்து அவர் பாதங்களைத் தொட்டான்.

“அட, இருக்கட்டும், இருக்கட்டும். எல்லாம் நல்லா நடக்கும் உங்களுக்கு,” என்றார். 

“தேங்க்யூ சார்,” என்று சொல்லி புன்னகைத்தபடி திரும்பி நடந்தான். அவர் இவனை அழைத்தார். ஒரு நிமிஷம் நில்லுங்க என்றார். அவர் பார்வை இவன் மீதே சில கணங்கள் இருந்தன. ஆனால் அவரது சிந்தனை எங்கோ இருந்ததாகப் பட்டது. தலையைக் குனிந்து மேஜையைப் பார்த்தார். ஏதோ செய்வதற்குத் தயங்குவதைப் போல ஒரு கணம் நின்றார். பின் நிமிர்ந்து இவனைப் பார்த்தார். பேரை மீண்டும் சொல்லும்படிச் சொன்னார். கோப்புகளைப் புரட்டி அவனுடையதைத் தேடினார். அவன் பெயர் பொறித்த கோப்பை உருவி எடுத்து, பிரித்து, சிறிது நேரம் படித்தார். பச்சை மசி பேனாவில் அதன் மேல் எழுதினார். 

“உங்களுடையதை டாப் பிரையாரிட்டில போட்டிருக்கேன்,” என்றார். மேஜையிலிருந்த தொலைபேசியில் எண்களை அழுத்தி, “சிவராமன், அந்த நேம்சேஞ்ச் பெடிஷனை இன்னிக்கே ஃபார்வர்ட் பண்ணிருங்க. டிலே பண்ண வேண்டாம். நான் கையெழுத்துப் போட்டுட்டேன். அவர் சொன்னமாதிரி நம்ம ப்ரொஃபஷன்ல அப்ராட் போறதுங்கறது ரேர். நாமதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்,” என்றார். இவனிடம் திரும்பி, “நீங்க கெளம்பலாம். இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு சர்டிஃபிகேட் வந்துரும்,” என்றார்.


* * *


மேலும் வாசிக்க