9 அக்டோபர், 2024

காம்யுவின் துப்பாக்கி - தேவேந்திர பூபதி கவிதைகள்

நன்றி: கவிதைகள் இணைய இதழ் 




கவிதை என்பது ஓர் அனுபவம். பொதுவாக எந்த ஒரு இலக்கியப் படைப்பையுமே அதன் நுகர்வோராகிய வாசகர் அணுகி அனுபவிக்க இயலும்போதே அப்படைப்பின் நோக்கம் நிறைவேறுகிறது. மாறாக, படைப்பைக் கூறுபோட்டு அறுவைச் சிகிச்சை செய்து அதன் உள்ளுறுப்புகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து, கண்டுபிடித்து விட்டேன் பார் என்று எக்காளமிடுவது ஒருவகையில் குரூரமான ஆனந்தமே. எளிய மனத்துடன் படைப்பை அணுகும் வாசகருக்கு அப்படைப்பு அளிக்கும் அனுபவம் அலாதியானது. சமயங்களில் அதைத்தான் ஒவ்வொரு படைப்புமே கோருகிறது. படைப்பு என்பது படைப்பாளி நமக்காகச் சமைத்துத் தரும் ஓர் அறாக்கனவு. அவன்/ள் உலாவிய அந்தக் கனவை வாசகராக நாமும் சுவீகரித்து கனவுக்குள் சஞ்சரிக்க இயலும் ஓர் புள்ளியில் படைப்பாளியும் வாசகரும் ஒன்றாகி விடுகிறார்கள். அப்போது வாசகன் ஒரு சகபடைப்பாளனாகவே மாறி விடுகிறான்.


விழிதிறந்த அறாக்கனவெனும் அனுபத்தை அளிக்க, கவிதை என்ற இலக்கிய வடிவம் படிமங்கள், குறியீடுகள் போன்ற கருவிகளைக் கையாளுகின்றது. விமர்சகர் அந்தப் படிமங்களையும், குறியீடுகளையும் ஆராய்ந்து தரும் விளக்கங்கள் வாசகருக்கு ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. எனினும் நம் கனவுகளில் வரும் காட்சிகள் சில சமயங்களில் அர்த்தமற்ற படிமங்களாகவே நின்று விடுவதைக் காண்கிறோம். ஆழ்ந்த பொருள் எதுவும் இல்லாது போனதினாலேயே அக்கனவுகளின் காட்சிகள் நம்முள் நிரந்தரமாகத் தங்கி விடுவதையும் காண்கிறோம். ஓர் முழு மதிய முன்னிரவில், காவிரியின் பரப்பில் பிரதிபலித்த நிலவொளியில் ஊறியபடி மக்கள் தண்மணலில் அமர்ந்து கட்டுச்சோறு அவிழ்த்து உண்டபடியிருக்க, கரைதாண்டித் தொலைவில் இருந்த ஒரு நாவல் மரத்திலிருந்து உதிர்ந்த பழங்களை நண்பர்களுடன் மணலூதிச் சேகரிப்பதாய் ஒரு கனவு பல ஆண்டுகளுக்கு முன் வந்தது. அந்தக் காட்சி அப்படியே படிமமாக மனதில் உறைந்து விட்டது. எந்த அர்த்தமும் இல்லாத அந்தக் காட்சி எண்ணுந்தோறும் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஒருவேளை எந்த அர்த்தமும் இல்லாததினால்தான் அப்படிமம் ஒவ்வொரு முறை நினைவில் எழும்போதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறதோ?


கடற்கரையில் அமர்ந்து கடலை நோக்கும் காட்சி அலாதியானது. சென்னையில் இருப்பவர்களுக்கு மக்கள் கூட்டத்தோடு மட்டுமே கடலை தரிசிக்க வாய்த்திருக்கிறது. ஆனால் நான் மாலத்தீவுகளில் வசித்தவனென்பதால் மாலைவேளைகளில் நான் மட்டுமே தனியனாய்க் கடற்கரையில் அமர்ந்து கடலைக் காணும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அங்கே கடலும், வானமும், நானும் மட்டுமே இருப்பதாக ஒரு மாயம் நிகழும். இக்கவிதையும் கரைமணலை எண்ணுபவனையும், கடல் நடுவே தோன்றும் காட்சிகளையும் மட்டுமே பதிவு செய்திருக்கின்றது. இந்தப் பிரம்மாண்டத்தின் முன்னிலையில் நான் எவ்வளவு சிறியவன் என்ற தத்துவ அலசல்களுக்குள் இறங்கி விடாமல், கடலெனும் மாபெரும் உயிர் வெளியில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை வெறுமனே சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் அந்தக் கடல் கோளத்தில் இழுக்கப்பட்டு விடுவதை துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறது இக்கவிதை. காட்சிகளை வெறுமே வரைந்து காட்டுவதன் மூலமே கவிதை சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறது. திமிங்கிலத்தின் பெருமூச்சில் எழும் நீரூற்று நிலவை எட்டுவதற்கு முன் நம் மீதும் சில துளிகளைத் தெறித்து விட்டுச் செல்கிறது.


ராட்சச பாழ்வெளி


நீலத் திமிங்கிலங்கள் வாழும் கடலில்

அதன் பெரும் மூச்சு

எழும்பும் மஞ்சள் நிலவின் மீது

நீரூற்றினைப் பாய்ச்சுகிறது

மணல் எண்ணி முடிக்க அமர்ந்தவன்

நட்சத்திரங்களைக் கைவிட்டு

கண்மூடுகிறான்

ராட்சசம் பொங்க

சாய்ந்தாடும் மேகங்கள்

தொடு விளிம்பில் வளைந்து பந்தாகிச் சுழல

அந்தக் கடல் கோளத்தினுள் இழுக்கப்பட்டவன்

வானம் கண்டு மிதக்கிறான்

சிறு சப்தத்துடன் அந்தரத்தின் பாழ்வெளியில்

கொட்டுகிறது

எண்ணிய மணல்துகள்களும்

மதி வடித்த நீர்த்துளிகளும்


* * *


எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். அன்றாடம் அனுபவிக்கும் விஷயம்தான். ஆனால் அது கவிஞனின் கண்களுக்கு மட்டுமே பொருட்படுத்தத் தக்க பொருளாகத் தெரிகிறது. கவிதையின் வாயிலாக ஒரு அன்றாட நிகழ்வின் காட்சி பரிமாறப்படும் போது அது நமக்களிக்கும் வியப்பே அது தரும் அனுபவம். முடி திருத்தகத்தின் எதிரெதிர்க் கண்ணாடிகளில் ஒன்றினுள், ஒன்றினுள் ஒன்று என்று பிம்பங்கள் தொடர்ச் சங்கிலியாய்த் தோன்றி விளையாடுவதை எத்தனை முறை கண்டிருப்போம். நம் பாலிய பருவத்தின் ஆதி நினைவுகளில் இந்தக் காட்சியும் ஒன்றல்லவா?


எதிரெதிர் நிஜம்


எதிரெதிரே கண்ணாடிகளில்

என்னுருவம் பல்கிப்பெருகுவதால்

கடைசிப் பிம்பத்தில் முடிதிருத்தும் 

சலூனில் இருந்து வெளியேறுகிறேன்

திருத்துனர் எதிர் கண்ணாடியின் 

முதல் பிம்பத்தில் பணம்  பெற்றுக் கொண்டிருந்தார்.


* * *


வாழ்வின் அத்தனைத் துயரங்களினின்றும், அச்சங்களிலிருந்தும், தளைகளிலிருந்தும் பரிபூரணமாக விடுதலையடைவதற்கு வழி ஒன்றே. நான் யார், எத்தன்மையுடையவன், எனக்கும், இவ்வுலகுக்கும் உள்ள உறவு எத்தகையது என்று அறிந்து, அந்த அறிவின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வதே. எல்லாக் கேள்விகளிலும் அடிப்படையானதும், ஆகச் சிறந்ததும் நான் யார் என்ற கேள்வி ஒன்றே. அக்கேள்விக்கான விடையை அடையும் தருணத்தில் வாழ்வு குறித்த பிற கேள்விகளனைத்தும் பொருளிழந்து விடுகின்றன. 

ஆனால் அக்கேள்விக்கான விடையை எங்கிருந்து அடைவது? நான் இதுதான் என்று அறுதியிட்ட வரையறைக்கான நிரூபணங்கள் எவரிடம் உள்ளன? அப்பதில் எம்மிடம் உண்டு. அதற்கு எம் தெய்வங்களை வழிபட்டால் போதும் என்று மதங்கள் உரைக்கின்றன. தத்துவவாதிகளோ நாங்கள் அதைக் கண்டுபிடித்துத் தருகிறோம். எம்மோடு சேர்ந்து தேடலாம் வா என்றழைக்கின்றன. நண்பரும், தாயும், மனைவியும் நம்மைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கள் கூட இக்கேள்விக்கான பதிலை அடையும் பயணத்தில் நமக்கு உதவுவதில்லை. ஏதோ ஒரு மீச்சிறு கணத்தில்தான் பதிலென்னும் அந்தப் பூனையின் கண்களைச் சந்திக்க நேரிடுகிறது. அப்போது பிற கேள்விகள் பொருளிழந்து விடுகின்றன. ஆகச் சிறந்த கேள்விகூட நம்மிடமிருந்து விடைபெற்று விடுகிறது.


ஆல்பெர் காமு எழுதிய விருந்தாளி என்ற கதையில் தரு என்ற பள்ளி ஆசிரியரிடம் அவனது நண்பன் பல்டுக்கி ஒரு அரபுக்கைதியைக் கொண்டு வந்து சேர்த்து, அக்கைதியை காவல் துறை உயர் அலுவலகத்தில் சேர்த்து விடுமாறு பணிக்கிறான். அவனது பாதுகாப்புக்கு ஒரு துப்பாக்கியையும் தந்து செல்கிறான். முதலில் துப்பாக்கியைத் தன் வசம் வைத்திருக்கும் தரு, பின் மெல்ல துப்பாக்கியின் மூலம் எதையும் சாதிக்க இயலாது என்றுணர்ந்து அதை விலக்கி விடுகிறான். அவனுக்கு உணவும், உடையும் கொடுத்து உறங்க வைத்து, மறுநாள் காவல்துறை அலுவலகம் திசையில் நடப்பதா, அல்லது அதற்க் எதிர்த்திசையில் நடந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதா என்ற முடிவை எடுக்கும்படி கைதியிடமே விட்டு விடுகிறான் என்பதாகக் கதை முடிகிறது. மனிதன் சதா தன்னைக் குறித்து உணரும் பாதுகாப்பின்மையையும், வன்முறையின் மீது அவனுக்கு இயல்பாக உள்ள பற்றினையும், வாழ்வின் மீது அவனுக்குள்ள அவநம்பிக்கையையும் துப்பாக்கி என்னும் குறியீடு குறிப்பதாகக் கொள்ளலாம். தருவின் இந்தத் துப்பாக்கிப் பற்றித் தெரிந்து கொள்வது இந்தக் கவிதையை சிலாகிக்க உதவும் என்று எண்ணுகிறேன்.


தப்பிக்கும் கேள்விகள்


மிகச்சிறந்த கேள்விகளிலொன்று

என் மூன்றாம் தலைமுறை தாண்டியும் தொடர்கிறது

நான் யார் எனச் சொல்ல


நிரூபணங்கள் அதிகம் கைவசம் உள்ளன

தெய்வத்தின் பெயரால் எதையும் பின்தொடரலாம்

தத்துவத்தின் நடுவில் வேறு ஒருவர் அதைக் கண்டுபிடிக்கலாம்

இரகசியமாய் குசுகுசுக்கலாம்

எல்லாம் தெரிந்த நண்பனும் உண்டு

இப்படித்தான் இவர் எனப் பெண்டிர் முடிவு

தப்பிப்பது எக்காலம் 

கடந்தமுறை வந்த பூனை

என்னை உற்றுப் பார்க்கிறது

அதே பூனைதானா என நானும்

அவனேதானா எனப் பூனையும்

மீச்சிறு கணத்திலிருந்தோம்

காம்யுவின் துப்பாக்கியைத் தேடினேன்

மிகச்சிறந்த கேள்வி சன்னல் வழி

பதற்றத்துடன் தப்பி ஓடிவிட்டது


* * *

நடுக்கடல் மௌனம் - தேவேந்திர பூபதி

கவிதைத் தொகுப்பு

காலச்சுவடு வெளியீடு




மேலும் வாசிக்க