9 அக்டோபர், 2024

டெய்ரி மரத்துக் கனிகள் - மதார் கவிதைகள்

நன்றி: கவிதைகள் மின்னிதழ்


சில கவிதைகளைப் பற்றிப் பேசி விட்டாலேயே அவற்றின் தூய்மையைச் சற்றே களங்கப்படுத்தி விடுவோமோ என்ற அச்சம் மனதில் உருவாகி விடுகிறது. ஆனாலும் ஓர் அரிய கவிதை கண்ணில் படும்போது, அதை சஹிருதயர்களிடம் பகிர்ந்து கொள்ளும் இன்பத்துக்காகவே, அந்தக் கவிதைக்குள் நம் வியாக்கியானங்களூடே செல்லும் பயணம் தரும் உவகைக்காகவே அது பற்றிப் பேசலாம் என்றும் தோன்றுகிறது. கீழ்வரும் மதாரின் தலைப்பற்ற கவிதை அதற்கொரு உதாரணம்.

மதாரின் பெரும்பாலான கவிதைகளைப் போலவே இதுவும் மேலோட்டமாக எளிமையாகத் தெரியும், கவிதைக்குள் புதிதாக நுழைபவர்கூட எளிதில் அனுபவிக்க முடிகிற, புரிந்து கொள்ள முடிகிற கவிதைதான். ஆனாலும், கோடையில் என் வீட்டுக் கொல்லைப்புறத்தில் நிமிடங்களுக்கொரு முறை விடாது சிறகடித்தபடி நீரருந்த வரும் தேன்சிட்டு தன் பூஞ்சையான சிறு உடலுக்குள் பொதித்து வைத்துள்ள, நாமறிந்து கொள்ள முடியாத ரகசியங்களைப் போலவே, இக்கவிதையும் தன் எளிமையான வடிவத்தில், உயிரினங்களுக்கிடையில் இன்னதென்று விளக்கிவிட முடியாதபடி நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆழமானதொரு தொடர்பைச் சுட்டுறுத்துகிறது. பெற்றோரைச் சுற்றி வந்து பழம் பெற்றும் கொள்ளும் எளிய நுட்பம்தான் இக்கவிதையில் இன்னொரு வடிவம் எடுத்திருக்கிறது. கவிதைக்குள் எப்பொழுதேனும் அபூர்வமாகச் சந்தம் தென்படும்போதும், கவிதை தன் வடிவத்தை கதை சொல்லுவதற்குப் பயன்படுத்தும் போதும் என்னையறியாமல் ஒரு புன்முறுவல் தோன்றி விடுகிறது. இவ்விரண்டும் இக்கவிதையில் நிகழ்ந்திருக்கிறது.



ஜன்னலில் இருந்து பார்த்தால் 

பச்சை மரங்கள் நிறைந்த

தெரு தெரியும்

நித்தம் அதிலொரு காகம்

வருவதும் போவதுமாய் திரியும்


தெருவில் இருந்து பார்த்தால்

அண்டை வீதிகளை

சென்றடையும் சாலை விரியும்

சத்தம் எப்போதும்

சம்பிரதாயச் சடங்காய் இரையும்


சாலையில் இருந்து பார்த்தால்

மாநகர் முழுதும் பயணப்பட தேவையான சாத்திய வழிகள் நீளும்


தெருவில்

சாலையில்

மாநகரில்

முன்னெப்போதோ

நடந்த விபத்தில்

இழந்த கால்களோடு

ஜன்னலண்டை அமர்ந்திருக்கிறேன்


இக்கணம் நான்

மாநகரைப் பார்க்க பிரயாசைப் படுகிறேன்

எங்ஙனம் பார்க்க?

ஜன்னலில் இருந்து பார்த்தால்

பச்சை மரங்கள் நிறைந்த

தெருதான் தெரிகிறது


நித்தம் வரும் காகம்

இப்போது வருகிறது


மரத்தின் உச்சிக்கொம்பில் 

அமரும் அது

தனது ஒற்றைப் பார்வை

ஒன்றின் வாயிலாகவே

மாநகர் முழுவதையும் 

கூர்மையாகப் பார்க்கிறது


நான் வெறுமனே

காகத்தின் கண்களை

கூர்மையாகப் பார்க்கிறேன்


* * *

இன்னொரு தலைப்பற்ற கவிதை. தொடர் வண்டி நிலையத்தில் படுத்திருக்கும் சோம்பேறி நாய் கேட்கும் சங்கீதம். எதனாலும் எழுப்பப்பட முடியாத அதனால் பூமியின் இதயம் துடிப்பதையும் கேட்டு விட முடிகிறது. முழுக்கவிதையும் அந்த நாய் கேட்கும் இசைத்துணுக்கைப் போலவே நம் மனதில் அதிர்கிறது. ஒலிக்குறிப்புகளுக்கென்று கவிஞர் தேர்ந்தெடுத்துள்ள சொற்கள் வியப்பூட்டுபவை. மறக்க இயலாதவை.


காலை, வாலை மிதிப்பது தவிர

வேறெதெற்கு உசும்பாமல் 

படுத்திருக்கிறதந்த கருப்பு வெள்ளை நாய்

தொடர் வண்டி பிடிக்க ஓடும்

எந்தச் செருப்பும்

எழுப்பவில்லை

ரயில் வருகிறதென

ஒலி எழுப்பும் 

எந்திரக்காரியாலும் முடியவில்லை

ஒரு காதை பூமிக்கும்

இன்னொரு காதை வானுக்கும் கொடுத்து

ஒருக்களித்து துயிலும் இது

பூமியின் இதயம் வேகமாகத் 

துடிப்பதைக் கேட்கிறது

தசக் தசக் தடக் ததக் தபக் தரக்

செப்பல் அணிந்து குழந்தையொன்று

நடந்து வந்தால் கேட்கிறது

தஙக் தஞக் தணக் தநக் தமக் தனக்


* * *

மிகச் சாதாரணமான ஓர் உருவகத்தில் துவங்கி, வாளி வகுப்பறை என்ற அசாதாரணமான மற்றொரு படிமத்துக்குள் இறங்கும் மற்றொரு கவிதை. மிகத்தூய்மையானதும், வாசகர் மனக்கண்ணிலேயே நிகழ்த்தி விட இயலக்கூடியதுமான இது போன்ற சிறிய கவிதைகள் என்றுமே உவப்பானவை.


வாசல் தெளிப்பவள்

மழையாக்குகிறாள்

நீரை

வாளி வகுப்பறைக்குள்

இறுக்கமாக அமர்ந்திருந்தவை

இப்போது தனித்தனியாக

விளையாடச் செல்லுகின்றன.


மேலும் வாசிக்க