19 அக்டோபர், 2024

உடைந்து எழும் நறுமணம் - இசை கவிதைகள்






நன்றி: கவிதைகள் மின்னிதழ்


கவிஞர் இசையின் உடைந்து எழும் நறுமணம் தொகுதியில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் அவற்றை அணுகும் வாசகருக்குத் தன்னளவிலேயே தெளிவாகத் துலங்குகின்றன. அவற்றைக் கவிநயம் பாராட்டி, விளக்கி எழுதுவதென்பது ரத்தினக்கற்களை பட்டுத்துணி கொண்டு மூடுவது போல ஆகிவிடுமோ என்று சற்று தயக்கமாகக் கூட இருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகளில் கவிஞர் இசை எழுப்பியுள்ள அதிர்வுகளோடு என்னால் ஒத்ததிர முடிந்தது. தொகுப்பிற்கான தன்னுரையில் கவிஞரே குறிப்பிடுவது போல் அவரது கவிதைகளின் பிரதான அடையாளமான பகடியின் துணையின்றி கவிதைகளின் ஆதாரமான ‘புதிதை’ச் சமைக்கப் பிரயத்தனப்பட்டிருக்கிறார். 


உடைந்து எழும் நறுமணம், நாச ஊளை மற்றும் வெந்துயர் முறுவல் என்று மூன்று பகுதிகளாக இத்தொகுப்பு பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் தொல்காப்பியம் சுட்டும் நிலமும், பொழுதும் பயின்று வருகின்றன. கவிஞர் அந்திக்கு மயங்கி  மனமழிந்து வரும் வழியில் உறைந்து நின்று விடுகிறார். கொக்குகளும், மயில்களும், புறாக்களும் பறந்து கொண்டே இருக்கின்றன. தீக்கொன்றையில் ஓடோடி உச்சிக்கிளையேகும்அணில்கள் நிறைந்த முற்றத்தில் அன்னை பிள்ளைகளுக்குச் சோறூட்டுகிறாள். இரண்டாம் பகுதி ஊரடங்கு காலத்தையும், மூன்றாவது காதலையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. எல்லாக் கவிதைகளிலுமே கவித்துவம் செறிந்து மிளிர்கிறது. 


***


உழைத்தல் என்பது வாழ்வைக் கொண்டு செலுத்துவதற்காக ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் அன்றாடச் செயல். செயலின் தன்மை எத்தன்மையுடையதாயினும், அது அன்றாடம் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனாலேயே அதில் சலிப்பும், துயரும், அழுத்தமும், சுமையும் உணரப்படுவெதென்பது தவிர்க்க இயலாதது. தவிர்க்க ஒரே வழி அச்செயலைக் கொண்டாட்டமாக மாற்றிக் கொள்வதுதான். இன்னொரு கவிதையில் நடனமாடும் ஒருத்தி தன் ஒத்திகையையே நிகழ்ச்சியாக மாற்றி, மேடையின் கீழே அமர்ந்து தன்னைத் துன்புறுத்தும் பூதத்தை விழுங்கி விடுகிறாள். செயல் கொண்டாட்டமாக மாறியபின் வாழ்வில் இனிமை ஊறத்துவங்குகிறது. செயல் புரிபவனை மட்டுமல்ல, துணை நிற்பவர்களையும் அவ்வினிமை நிறைக்கிறது. உழைப்பின் மகத்துவம் பற்றிப் பலநூறு கவிதைகள் எழுதப்பட்டிருப்பினும் இக்கவிதை எளிய சொற்களில், எளிய சித்திரத்தில், கவியின் குழந்தை மனம் கண்டு வியந்த வகையில் உழைக்கும் மக்களிடையேயான கொண்டாட்ட மனநிலையை வரைந்து காட்டுகிறது. எந்த மாயக்கணத்தில் இந்த அற்புதம் நிகழ்கிறது? இந்த ரசவாதத்திற்கு எது வினையூக்கி? அந்த மாயக்கணம் கவிஞர் அவதானிப்பில் துல்லியமாக இக்கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு கவிதை மெல்லமெல்ல பரிணமிப்பதை, ஒரு பூவைப்போல இதழ் விரித்து மலர்வதைக் காணும் வாய்ப்பு இக்கவிதையில் அமைகின்றது.




 சிரிப்பு லாரி


ஐவர் கைமாற்றிக் கைமாற்றி

சுமையேற்றிக் கொண்டிருந்தனர்.

பெருமூச்சுகளும், முனகல்களும்

வரிசை கட்டி லாரியில் ஏற்றப்படுகின்றன.

முகங்கள் கல்லென இறுகி

உடல்கள் வியர்த்து அழுதன.


இடையில்

ஒருவன் தடுமாறி விழப்போனான்.

நண்பர்கள் அவனைக் கேலி பேசிச் சிரித்தனர்.


விழப்போனவனும் சேர்ந்து சிரிக்க

இப்போது

அங்கே தோன்றி விட்டது ஒரு விளையாட்டு.


பிறகு 

அவர்கள்

கைமாற்றிக் கைமாற்றி விளையாடத் துவங்கி விட்டார்கள்.


அந்த லாரியில் 

பாதிக்கு மேல் சிரிப்புப் பெட்டிகள்.


***

சிறிய, எளிய உண்மைதான். ஆனால் நாம் காணத்தவறிக்கொண்டே இருக்கிறோம். உலகை வண்ணங்களாலும், சரிகைகளாலும் ஆன பட்டுத்துணியொன்று போர்த்தியிருக்கிறது. அதன் மின்னலிலும், வண்ணத்திலும் கிறங்கி, ஆங்காங்குள்ள ஓட்டைகளில், அவ்வப்போது தலைகாட்டி இளித்து நம்மைத் துயருக்குள்ளாக்கும் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். மாறாக, அந்தப் பட்டுத்துணியைத் தூக்கிப்பார்த்தால் தெரியும் சேதி! அந்தத் துணிவு ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அவர்களே இவ்வுலகின் சாரத்தை அறிந்தவர்கள். சாதாரண மனிதர் பட்டுத்துணியின் வண்ணங்களில் சிக்கிக் கொண்டவர்கள். துணிக்கு அடியில் மறைந்து கிடப்பதைப் பார்க்காமல் தவிர்த்து விடவே அவர்களுக்குப் பரிந்துரைக்கிறார் கவிஞர்.


பட்டு


திடீர் ஆய்வுகளின் போது 

ஒரு அரசு அலுவலகத்தைப் பார்த்திருக்கிறாயா?


எல்லாக் குப்பைகளின் மீதும்

எல்லா அழுக்குகளின் மீதும்

பளபளக்கும் விரிப்புகள் பல

அவசரவசரமாகப் போர்த்தப்படும்.


உலகைப் போர்த்தியிருக்கும் 

அந்தப் பளபளக்கும் பட்டை

தூக்கிப் பாராதே தம்பி!


***


ஒவ்வொரு பெண்ணுமே அன்னைதான். தத்தி நடக்கும் பேதையாயினும், துள்ளித் திரியும் பெதும்பையாயினும், கருப்பை கொண்ட ஒவ்வொரு பெண்ணும், பிரபஞ்சத்தையே தன்னில் சுமக்கும் திறனும், உள்ளமும் வாய்ந்த பேரன்னைதான். இவ்வுலகைச் சுமப்பதற்காகவே அவள் மீண்டும், மீண்டும் பிறக்கிறாள். தாயாகி அனைத்தையும் தாங்குகிறாள். அவள் முன் நின்று கையேந்தினால் உங்களுக்கும் ஒரு வாய் உருண்டைச் சோறு கிடைக்கும். 


அமுது 


அவளுக்கு மொத்தம் மூன்று வாய்கள்.


அணிலோடித் திரியும் முற்றத்தில்

நின்று கொண்டு

வேடிக்கை காட்டியபடியே

பிள்ளைகளுக்கு உணவூட்டுவாள்.


சேலைத்தலைப் பிடித்தபடி

கால்களைச் சுற்றிச்சுற்றிக் குழையும் ஒன்று.


இன்னொன்று 

இடுப்பில் அமர்ந்திருக்கும்.


இருவருக்கும் மாறிமாறி ஊட்டுவாள்.

யாரோ ஒருவர் 

முரண்டு பிடித்துச் சிணுங்குகையில்

“அணிலுக்கு ஊட்டி விடுவேன்”

என்று மிரட்டுவாள்.


நாளடைவில்

ஓட்டங்களிலிருந்து ஆசுவாசத்துக்குத் திரும்பியது அணில்.


மெல்லமெல்ல

அச்சத்திலிருந்தும் சந்தேகங்களிலிருந்தும் கீழிறங்கி வந்தது அது.


மெல்லமெல்ல 

மேலெழும்பி வந்தாள் அன்னை.


இன்று

கொஞ்சம் அமுதெடுத்து அணிலுக்கு ஊட்டினாள்

பேரன்னை.


அப்போது அவளுக்கு அளவிறந்த வாய்கள்.


***

நீ உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் இறைவன் உன் பெயரை எழுதியிருக்கிறான் என்று சொல்வார்கள். இது நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற எல்லா அனுபவங்களுக்குமே பொருந்தும். அந்த விழிப்புணர்வுடன் வாழ்வை நடத்துகிறவனுக்கு துக்கம் இல்லை. இக்கவிதையில், ‘இரண்டு துண்டுகளிடையே அதன் நெஞ்சம்’ தவித்தபோது என்னுள்ளமும் கிடந்து தவித்தது. வாசகனின் உள் உறையும் குற்ற உணர்ச்சிகளை வலியோடு நிமிண்டி எடுக்கும் முள்ளாக இக்கவிதை இருக்கிறது. கவிதையின் துவக்கப் பத்தியில் ‘எப்போதும்’, ‘என் நாய்க்கு’ என்ற சொற்கள், இந்த நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது என்பதையும், அது நமக்கு அணுக்கமானவருக்கே நிகழ்கிறது என்பதையும் குறிக்கிறது. அனுதினமும் நடந்தாலும் மனதை அச்செயலின் குரூரம் தீண்டாமலேயே சென்று விடுகின்றது. அதைச் சுட்டிக்காட்ட ஒரு கவிதை வர வேண்டியிருக்கிறது.


பிஸ்கட்


எப்போதும் 

ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு

என் நாய்க்கு எறிவேன்.


அரை பிஸ்கட்டிற்கு

முழு உடலால் நன்றி செலுத்தும்

பிராணி அது.


இரண்டு முறைகள்

அந்த நன்றியைக் கண்டுகளிப்பேன்.


இருமுறையும் 

அது என்னைப் போற்றிப் பாடும்.


ஒவ்வொரு முறையும்

என் முகத்தை

அவ்வளவு ஏக்கத்தோடு 

பார்த்துக் குழையும்.


இரண்டாம் துண்டு என் இஷ்டம்.


இரண்டு துண்டுகளிடையே

அதன் நெஞ்சம்

அப்படிக் கிடந்து தவிக்கும்.


உச்சியில் இருக்கும் எதுவோ

இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.


அதுதான் 

என் பிஸ்கட்டை

ஆயிரம் துண்டுகள் ஆக்கிவைத்தது.


***






மேலும் வாசிக்க