புகைப்படம்: அனுஷா ஜெகதீஷ்குமார்.
அன்புள்ள ஜெ,
பேசாதவர்கள் வாசித்தேன். சுயராஜ்யம் கிடைத்தபின், இருட்டறைகளுக்குள் சென்றுவிட்ட திருவிதாங்கூரின் ஆயிரமாண்டுகால வரலாற்றை அவற்றில் புதைந்து கிடக்கும் புராதனப் பொருட்களிலிருந்து கோத்து எடுத்துக் கொண்டு, அவற்றைக் கலையாக்குவதன் மூலம் மெல்ல மெல்ல ஒரு இணை வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல விழைகிறேன். உப பாண்டவத்தின் முன்னுரையில் எஸ்.ரா குறிப்பிட்டிருப்பார். அஸ்தினாபுரத்துக் குழிகளில் கிடைத்த குதிரைகளின் எலும்புகளிலிருந்து, அதன் வரலாற்றை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று. இந்த வல்லமை கலைஞனுக்கு மட்டுமே சாத்தியம். உங்களது இன்னொரு சிறுகதையான கணக்கு -ல் வரும் மரப்பலாக்காயையும், பணப்பலகையையும் நினைத்துக் கொள்கிறேன். இக்கதையில் தூக்குப் பூட்டு. ஒரு சின்ன பொருள். அது தூண்டும் நினைவுகள். அவற்றிலிருந்து விரியும் கலை. காணும் ஒவ்வொரு பொருளும் இப்படித்தான் எழுத்தாளனைக் கலைக்குத் தூண்டிக் கொண்டே இருக்குமா?
ஜெயிலின் ஸ்டோர் அறைக்குள் சென்று மீளும்போது கனவுக்குள் சென்று திரும்பி வந்ததைப் போலிருக்கும் என்கிறார் தாத்தா. நீங்களும் அந்த ஸ்டோர் அறைக்குள் அடிக்கடி சென்று வாருங்கள். எங்களுக்கெல்லாம் நல்ல கதைகள் கிட்டும். பலவகைப்பட்ட சித்திரவதைக் கருவிகளைப் பார்த்து தாத்தா திகைத்து நிற்கும் போது, இவை ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒரு கதை இருக்குமே, இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்களும் திகைத்து நின்ற மாதிரியே கற்பனை செய்து கொண்டேன். ஒவ்வொரு கருவியைக் கொண்டும் எப்படியெல்லாம் சித்திரவதை செய்ய முடியும் என்று தாத்தா அடுக்குவதை வாசிக்கும்போது, சற்றே ஒவ்வாமை ஏற்பட்டது. வதைபடும்போது உடல் அதன் மேல் போர்த்தியுள்ள பாவனைகளையும், பாசாங்குகளையும் இழந்து வெறுமனே உடலாக மட்டுமே நிற்கிறது. காமத்திலும் அதுதானே நிகழ்கிறது. காமத்துக்கும், வன்முறைக்கும் ஏன் இவ்வளவு ஒற்றுமை? வன்முறையை நேர்கொண்டு பார்க்கமுடியாத தாத்தா, மீண்டும் மீண்டும் அச்சித்திரவதைக் கருவிகளைப் பார்த்தது அவருக்குள் இருந்த வன்முறை வெறியால் தானா என்று கேட்டுக் கொள்கிறார்.
இந்தக் கதைக்குப் பேசாதவர்கள் என்று பன்மையில் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் வெகுநாள் பேசாத தாத்தா பேச ஆரம்பித்து பேசிக் கொண்டேயிருக்கிறார். நற்றுணை கதை இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது. முதியவர் ஒருவரின் நினைவுகூரல் வழியாகவே விரியும் கதை. அந்த நினைவுகூரலில் விரியும் வரலாற்றின் கவனிக்க மறந்த பக்கங்கள். தூக்குக்கயிற்றின் வலிமையைப் பரிசோதிக்க உபயோகப்படுத்தப்படும் டம்மியும் பேசுவதில்லைதான். ஐநூறு ஆண்டுகளாகத் தூக்கில் தொங்கும் அது வாயிருந்தால் என்ன சொல்லும். திரும்பத் திரும்பத் தூக்கிலிடப்படும் துக்கத்தையா என்று வர்கீஸ் மாப்பிள்ளை கேட்கிறார். ஆனால் உடலால் பேச முடியாதா என்று தாத்தா கேட்டுக் கொள்கிறார். அந்த டம்மியோடு சேர்ந்து வேறு யார் பேசாதவர்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
சாமிநாதன் ஆசாரியைத் தூக்கிலிடுமுன்னும், டம்மி தூக்கிலிடப்படுகிறது. மருத்துவர் அதன் நாடி பிடித்துப் பார்த்தபோது அதில் துடிப்பு எஞ்சியிருந்தது என்கிறார். தாத்தாவுக்கும் டம்மியில் உடலில் ஒரு அதிர்வு தெரிகிறது. எத்தனை முறை கொல்லப்பட்டாலும் சாகாதது ஒன்று அதன் உடலில் இருக்கிறது என்று குறிப்பிடும்போது, இது பேய்க்கதை என்று அதுவரை கொண்டிருந்த ஐயத்தை இழந்தேன்.
அய்யன்காளியின் புலையர் மஹாஜன சபையின் உறுப்பினர் பண்டிட் கறம்பன் கதையில் வந்தபோது, கரைநாயர்கள் குறித்தும், புலையர் மஹாஜனசபை குறித்தும் நீங்கள் எத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள் என்று வியந்து கொண்டேன். பின் தொடரும் நிழலின் குரலில் வரும் மெல்லிய நூல் முதற்கொண்டு. அதற்குமுன்பிருந்தே கூட நீங்கள் எழுதியிருக்கக் கூடும். எனக்கு மெல்லிய நூல் சட்டென்று நினைவுக்கு வந்தது. கடைசியில் கறம்பனின் மனைவி மலையத்தி நீலி அந்த டம்மியோடு உரையாடுகிறாள்; அதற்குத் தீ வைக்கிறாள். இக்கதையின் கதை சொல்லியைப் போலவே நானும் இக்கதையில் இருந்த மர்மங்களை ஒவ்வொன்றாகத் தொட்டு, புரிந்து கொள்ள முடியாமல் விலகிக் கொண்டிருந்தேன்.தொன்மத்தையும், நிகழ்கால அரசியலையும் இணைக்கும் கதை. நன்றாக ரசித்து வாசித்தேன்.
இதையெல்லாம் எழுதிவிட்டு, எல்லாவற்றையும் கன்ட்ரோல் ஆல் டெலிட் செய்து விடலாமா என்று யோசித்தேன். கதை வாசித்தேன். நன்றாக இருந்தது என்று எளிமையாகச் சொல்வதை விட்டு ஏன் ஏதேதோ எழுதுகிறேன் என்று தோன்றியது. இருப்பினும் ஒரு படைப்பு பற்றி நமக்குப் புரிந்ததைச் சரிபார்க்க இப்படித் தோணுவதையெல்லாம் எழுதுவதும் சரி என்றும் பட்டது.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்
பிகு : இன்று நவீனிடம் இந்தக் கதை குறித்துப் பேசினேன். பேசாதவர்கள் யார் என்று அவருடன் உரையாடிய பிறகே என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது.
எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். பேசாதவர்களைப் பற்றி, பேசாமலேயே நீங்கள் குறிப்பிட்டிருப்பதை எப்படியோ தவறவிட்டு விட்டேன்.