23 ஜூலை, 2013

சந்திரபாபுவின் வாழ்வு


கண்ணீரும் புன்னகையும் – சந்திரபாபுவின் வாழ்வு
கிழக்கு பதிப்பகம் வெளியீடு
ஆசிரியர் முகில்
சந்திரபாபு என்கிற மகா ஆளுமையின் தாக்கம் முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதென்பது இன்றியமையாததொரு நிகழ்வாகும். என் பதின்பருவத்தில் சந்திரபாபுவின் தத்துவப் பாடல்களை எனக்கு முந்தைய தலைமுறையினர் கொண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தையும் தாண்டி ஒரு தலைமுறைத் தமிழர்களின் பிரியத்துக்குரியவராகவும், பலரின் ஆற்றாமைகளையும், சோகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவராகவும் இருந்திருக்கிறார் பாபு.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கண்ணீரும் புன்னகையும்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதற்காகவும், யாருக்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வில் அவனைத் தொடர்ந்த சோதனைகளும், துயரங்களும் எளிமையான மொழியில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நேர்மையான கலைஞனை எப்படித் தேவை தீர்ந்ததும் வீசி எரியப்பட்டுவிடுகிற எச்சில் இலையைப் போல, திரையுலகம் அவரை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரிந்துவிட்டது என்பதற்குச் சான்றான நிகழ்வுகள் அதன் பக்கங்களில் விரிகின்றன. கோடிக்கணக்கான ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கும், அவர்களது வாழ்வின் போக்கை நிர்ணயம் செய்யும் வல்லமை கொண்ட கதாநாயகர்களின் முகப்பூச்சுக்குப் பின்னே மறைந்திருக்கும் கோரமுகங்கள், அவர்கள் கடைவாயில் வழியும் ரத்தம் காணப்படுமாறு உரித்துக் காட்டப்பட்டுள்ளன. காமிரா முன் தவிர வேறெங்கும் நடிக்கத் தெரியாத, பிறருக்குத் தொந்தரவில்லாமல் தன் இச்சைப்படி வாழ நினைக்கும் ஒரு நேர்மையான மனிதனைச் சமூகம் எவ்வாறு புறந்தள்ளி விடுகிறது என்பதற்கு பாபுவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
மிகுந்த வறுமையில்தான் துவங்கியிருக்கிறது அவரது வாழ்க்கை. கொலைப் பட்டினியிலும் தன் தனித்துவத்தை இழக்காத மனிதர் அவர். தான் நடித்த காலத்தில் கதாநாயகனுக்கு ஈடாக ஊதியம் பெற்ற ஒரே நகைச்சுவை நடிகர் அவர். செல்லுமிடமெங்கும் ரசிகர் கூட்டம் அவர் பாடல்களைக் கேட்டு ஆரவாரித்திருக்கிறது. முதன்முதலாக ஒரு நகைச்சுவை நடிகரின் பாடல்கள் தொகுப்பாக வெளியிடப்பட்டது சந்திரபாபுவுக்குத்தான். திரைத்துறையில் குறுகிய காலத்தில் புகழின் உச்சியை அடைந்த போதிலும் அவரது சொந்த வாழ்க்கையில் துரோகங்களும், ஏமாற்றங்களும், சோகங்களுமே சூழ்ந்துகொண்டிருந்தன. கட்டிய மனைவி ஏற்கனவே ஒருவனைக் காதலித்திருந்தது தெரியவந்ததும் அவளை அவனிடமே அனுப்பி வைக்கிற ஆண்மை மிகுந்தவராக இருந்திருக்கிறார். பாபுவின் வாழ்வின் நிகழ்ந்த இந்த சோகத்தைத்தான் பின்னாளில் பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார். மனைவியைப் பிரிந்தபிறகே அவரது குடிப்பழக்கம் அதிகமாகி, அதற்கு அவர் அடிமையாகி அவரது முடிவுக்கே வழிவகுக்கிறது.
ஒரு திரைப்படத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சந்திரபாபுவின் முகத்தில் எலிகள் ஏறிவிளையாடும்போது அவர் படும் பாட்டை கண்டு விழுந்து விழுந்து சிரித்ததும், இப்படியும் நடிக்க முடியுமா என்று பிரமித்துப் போய் நின்றதும் இன்னும் நினைவிருக்கிறது. Slapstic வகைக் காமெடிக்கு முதலும் கடைசியுமான ஒரே தமிழ் நடிகர் சந்திரபாபு என்றே சொல்லலாம். அடுத்ததாக நாகேஷ் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறார். பாபுவின் உரையாடல் வெளிப்பாடு ரசிக்கத்தக்கது. அவரது எல்லாப் படங்களையும் நான் பார்த்ததில்லையென்றாலும் அவரது ஆளுமையின் தாக்கத்திற்குள்ளாவதற்கு அவர் வந்துபோகும் சில காட்சிகளும், மெய்யாலுமே காலத்தால் அழியாத அவரது பாடல்களுமே போதும்.
சந்திரபாபு மது அருந்துகிற அழகை இந்தப் புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்தாலே நமக்கும் ஆசை வந்துவிடும். சுத்தமாகக் குளித்து முடித்துவிட்டு, தூய்மையான பூப்போட்ட லுங்கி அணிந்துகொண்டு, வெள்ளை முழுக்கை சட்டையை அணிந்து பட்டன்களைத் திறந்துவிட்டபடி கைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டு, ஒரு கையில் சிகரெட்டும், இன்னொரு கையில் மதுகோப்பையையும் வைத்துக் கொண்டு, சோஃபாவில் சம்மணமிட்டு அமர்ந்தபடி நிதானமாக அனுபவித்து மது அருந்துவாராம். பின்னாளில் போதைக்கு அடிமையாகிவிட்ட நடிகை சாவித்திரியும், எழுத்தாளர் ஜெயகாந்தனும் இவருக்கு ‘தண்ணி பார்ட்னர்’களாக இருந்திருக்கிறார்கள். (சந்திரபாபுவுடனான தனது நட்பு பற்றி ஓர் இலக்கியவாதியின் சினிமா அனுபவங்களில் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்). எல்லாரையும் மிஸ்டர் போட்டு அழைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது சந்திரபாபுவுக்கு. மிஸ்டர் எம்.ஜி.ஆர், மிஸ்டர் சிவாஜி என்றுதான் கூப்பிடுவாராம். மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதோ, செய்துவிடுவதோ சந்திரபாபுவின் பண்புகளில் ஒன்று. ஒருமுறை அவரது கலைநிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்நாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் ரசிக்கும் திறமையைக் கண்டு, துள்ளிக் குதித்து அவர் மடியிலமர்ந்து அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்சி ‘ரசிகன்டா நீ!’ என்று பாராட்டினாராம்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி ஆகிய மூன்று திரை ஆளுமைகளையும் தனது பேட்டி ஒன்றின் வழியாக பகைத்துக் கொண்டதன் மூலம் திரையுலகில் அவர்களால் ஒதுக்கப்படுகிறார். எம்ஜிஆர் மருத்துவமனை கட்டுவது பற்றிய கேள்விக்கு அவர் பேசாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குக் கம்பவுண்டராகப் போகலாம் என்கிறார். அந்தப் பேட்டி கீழே,
என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க?
அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி!

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான்.

எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.

மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.

மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.'
சொந்தமாகத் திரைப்படம் தயாரிக்கும் உந்துதலேற்பட்டு அதற்கு எம்ஜிஆரின் கால்ஷீட்டும் வாங்கியபின் தன்னை மதிக்காத சந்திரபாபுவைப் பழிவாங்குவதற்காக எம்ஜிஆர் படப்பிடிப்புக்கு வராமல் தவிர்த்து, படமே நின்று போகிறது. பொருளாதார ரீதியில் மரணஅடி விழுந்து அதற்கப்புறம் எழுந்திருக்கவே முடிவதில்லை சந்திரபாவுக்கு.
அவரது குரலுக்கும், ஆளுமைக்கும் மயங்கியவர்களும், என்போன்று அவர் பற்றிய கேள்வி ஞானத்தால் அவர் மீது பிரமை கொண்டவர்களும், இப்படி ஒரு நபர் உண்மையில் வாழ்ந்து மறைந்திருக்கிறாரா என்று அறிய நினைக்கிறவர்களும் கண்டிப்பாக வாங்கி வாசிக்க வேண்டிய புத்தகம் இது.


18 ஜூலை, 2013

வாலி மரணம்


கவிஞர் வாலியின் மரணச் செய்தி தற்போதுதான் தொலைக்காட்சி வாயிலாக வந்து சேர்ந்தது. எஸ்.பி பாலசுப்ரமண்யம் பேசும்போது வாலி சிறுவயதிலேயே தவறிவிட்டார் என்றார். அது உண்மைதான் என்று பட்டது. நாலுதலைமுறை நடிகர்களுக்கு எழுதியவர். கடைசியாக மரணப்படுக்கையில் இருந்த போது கூட மரியான் படத்திற்குப் பாடல் எழுதியதாக ரஹ்மான் ஒரு சந்திப்பில் குறிப்பிட்டார். சில திரைப்படங்களில் அவர் நடித்ததைப் பார்த்து அவரது ஆளுமையை வியந்திருக்கிறேன். அவரது நகைச்சுவையுணர்வும் அற்புதமான பேச்சாற்றலும் நான் ரசித்து மகிழ்ந்தவை. வாலிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் அவர் படிக்கும் போது செய்த குறும்புகளைப் பற்றி நாகேஷ் தனக்கே உரிய பாணியில் விவரித்ததும், வாடா, போடா என்று தன் பால்யகால நண்பனை உரிமையோடு அழைத்ததும், அவருக்கு வாலி கொடுத்த பதிலடியும் நினைவுக்கு வருகின்றன. பொதிகைத் தொலைக்காட்சியில் வாலிப வாலி என்ற ஒரு தொடரில் தன் திரையுலக அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் அவரது அபாரமான நினைவாற்றல் வெளிப்பட்டது. நிகழ்வுகளை துல்லியமாக விவரிக்கும் அவரது திறனையும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன்.
நான் திரைப்பாடல்களை ரசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் கவிஞர் வைரமுத்து கோலோச்சிக் கொண்டிருந்தார். வாலி குத்துப் பாடல்களும், ஆங்கிலக் கலப்பும் கொண்டுதான் எழுதுவார் என்று நான் எண்ணிய காலம். அவர் அதற்கு முந்தைய காலகட்டத்தில் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களையெல்லாம் கண்ணதாசன்தான் எழுதியிருக்கிறார் என்று அநியாயமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
தமிழ் ரசிகன் பாடல் மீது கொண்ட மோகம் தீரும் வரை வாலியின் புகழ் இருக்கும். அந்த மோகம் இந்த நூற்றாண்டிற்குள் தீருமென்று தோன்றவில்லை.

கவிஞர் வாலி என்ற எண்பத்தியிரண்டு வயது இளைஞருக்கு என் அஞ்சலி.

16 ஜூலை, 2013

கு. அழகிரிசாமி - வறுமையில் செம்மை.

அழகிரிசாமியின் சுயரூபம் என்ற சிறுகதையைச் சமீபத்தில் வாசித்தேன். வேப்பங்குளம் என்ற பெருமை மிக்க கிராமத்தைச் சேர்ந்த வீரப்பத் தேவரின் பேரனும், கந்தசாமித் தேவரின் ஒரே மகனுமான வீ.க. மாடசாமித் தேவரின் ஒரு நாளைச் சொல்கிறது கதை. வேப்பங்குளம் பெருமை கொண்ட கிராமம். அதைப் பற்றிச் சொல்லுகையில் கு. அ,
வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் உண்டுஎன்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.
என்கிறார். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் முத்தையாத் தேவரிடம் வீராப்பாய்ப் பேசுகிறார். மத்தியானம் காசு வந்து சேரும் என்கிறார். கிணற்றடியில் குளித்து விட்டு, பேருந்து நிறுத்தத்துக்கருகில் உள்ள முருகேசம் பிள்ளையின் பலகாரக் கடைக்குச் செல்கிறார். கையில் காசு இல்லை. முருகேசம் பிள்ளையுடன் நட்பாகப் பேசி ஏதாவது நாலு இட்டிலி ஓசியில் கிடைக்குமா என்று பார்க்கிறார். கடை மூடும் வரை பிடி கொடுக்கவே கொடுக்காத முருகேசம்பிள்ளை, இரவு கடையை மூடி விட்டுச் செல்லுகையில் கடையில் மீந்த பலகாரங்களையும் எடுத்துச் செல்லுகிறார். அதையாவது தனக்குத் தரக் கூடாதா என்று ஏக்கத்துடன் கேட்கிறார் மாடத்தேவர். முருகேசம் பிள்ளை முடியாதென்று மறுக்க, பேச்சு முற்றி கைகலப்பில் முடிகிறது. இறுதியில் இந்த அற்பப் பயல் யாசகமாகக் கொடுத்த இட்டிலியை வாங்கி நாய்த் தீனி தின்னாமல் இருந்தோமே, இந்தக் கடும்பசியிலும் - அது போதும்; மற்றக் கேவலம் எது வந்தாலும் வரட்டும் என்று தமக்குத்தாமே ஆறுதல் கூறிக் கொள்கிறார்.

பசி வந்தால் பத்தும் பறந்து போம் என்ற முதுமொழி சொல்லும் கருத்துதான் இக்கதையிலும். ஆனாலும் பசியில் அவதியுறும் மாட்த்தேவர், சாப்பாட்டுக்காக முருகேசம் பிள்ளையிடம் மேற்கொள்ளும் நைச்சியங்களை அழகாகக் காட்டியுள்ளார் அழகிரிசாமி. வறுமை பற்றி, பசியைப் போக்க மனிதர்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள் குறித்து இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் அதிகம் எழுதியுள்ளனர். சமீபத்தில் நாஞ்சில் நாடனின் கல்யாணக் கதைகளை வாசித்தேன். முதல் பந்தி முடிந்ததும் சாம்பாரில் தண்ணீர் கலந்து விடுவார்கள் என்பதாலேயே முதல் பந்திக்கு அவசரப்படுகிறார்கள் அவரது கதை நாயகர்கள். புதுமைப்பித்தனும் வறுமை எழுதும் துயரக்கோலங்கள் பற்றித் தன் கதைகளில் விவரித்திருக்கிறார். அந்தத் தலைமுறை எழுத்தாளர்களை வறுமை ஒரு பிசாசு போல அவர்கள் தோள்களில் உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறது. சேர்ந்தே இருப்பது வறுமையும், புலமையும் என்பது உண்மைதான்.
கு. அழகிரிசாமியின் சுயரூபம்

14 ஜூலை, 2013

வாசிப்பும், பகிர்தலும்

அன்புள்ள கரிகாலன்,
உங்கள் ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
அந்தக் கதையை மீண்டும் வாசித்துத் திருத்தி எழுதியிருக்கிறேன்.
முடிந்தபோது வாசித்துப் பார்க்கவும்.
வாசகர் அனுபவத்தில் வரிசையாகப் பதிவுகளை வெளியிட்டு வருகிறீர்கள்.
வாடிவாசல், தேவதேவன் பதிவுகளைப் பார்த்தேன்.
தேவதேவன் கதைகள் பதிவை முழுமையாகப் படித்தேன்.
கதைகளின் சாராம்சத்தை அழகாகக் கோடி காட்டியிருக்கிறீர்கள்.
இவ்வருடம் நான் விடாது நாவல்கள் மட்டுமே படித்து வருகிறேன். அவற்றில் மூன்று மட்டுமே தமிழ். ஜெயமோகனின் ரப்பர், பின் தொடரும் நிழலின் குரல், அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு. மற்றவை அனைத்தும் ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை. சில அற்புதமான நாவல்களை அச்சில் படிக்க முடிந்தது மிகுந்த சந்தோஷம். சரமாகோவின் Blindness, Marquez's One hundred years of solitude, Paulo Coehlo's Eleven minutes, அவ்வப்போது ஆசுவாசத்துக்காக ஜான் கிருஷமின் king of torts, the bleachers, Micheal Crichton's Air Frame, போன்றவையும் படித்தேன். தற்போது அமிதவ் கோஷின் glass palace நூறு பக்கம் பாக்கியிருக்கிறது. இந்தியா - ஸ்ரீ லங்கா இறுதிப் போட்டியால் அது தடைபட்டு நிற்கிறது.

அமிதவ் கோஷ் அற்புதமான சித்திரக்காரர். எழுத்தால் ஒரு புது உலகைப் படைக்கிறார். அருமையான நாவல். கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

நான் திருத்தி எழுதிய வடிவம்.

அன்புள்ள ஜெகதீஷ்

அவசியம் உங்களது திருத்திய கதையைப் படிக்க ஆவலுடன் உள்ளேன்.  படித்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன்.

தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவ்வப்போது தொய்வடைந்து, எழுதுவதை விட்டு விடுகிறோம்.  ஆனால், தொடர்ந்து படித்து வருகிறோம்.  நீங்கள் குறிப்பிட்ட நாவல்களை படித்ததில்லை.  படிக்கிறேன்.

இந்த வருடம், நானும் சண்முகமும், பல புத்தகங்களை படித்து, அவ்வப்போது விவாதித்து வருகிறோம்.  அண்மையில் படித்து ரசித்த புத்தகங்கள்:
1) Aztec, Gary Jennings
2) West of Eden, Harry Harrison
3) Journeyor, Gary Jennings
4) What's math got to do with it?, Jo Bohler
5) Lord of the Rings (All three volumes, reread them when The Hobbit movie came out. Guilty pleasure!)
6) Aztec Blood, Gary Jennings
7) Aztec Revenge, Gary Jennings
...
தமிழில், கதைத் தொகுப்புக்களை படித்து வருகிறேன்:

வைசாகன் சிறுகதைகள்
ஆ.மாதவன் சிறுகதைகள்
தேவதேவன் சிறுகதைகள்,
சு.ரா. சிறுகதைகள் என.

பாஸ்கர் பரிந்துரைத்த, இ.பாவின். கிருஷ்ணா கிருஷ்ணா படித்தேன். நன்றாக இருந்தது.  சண்முகம் பரிந்துரைத்த அம்பேத்கார் படித்து வருகிறேன்.  சண்முகம், என்னை, ஆழி சூழ் உலகு படிக்க வற்புறுத்தி வருகிறார்.  படிக்க வேண்டும்.  

அன்புடன்,
ராஜா
அன்புள்ள கரிகாலன்

 Lord of the Rings தவிர பிற நூல்களின் ஆசிரியர் பெயர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். யார் அது கேரி ஜென்னிங்க்ஸ்? அவரது மொத்த புத்தகங்களையும் வாங்கியிருப்பீர்கள் போல. புனைவா? அபுனைவா?

 Lord of the Rings எங்கள் நூலகத்தில் இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் Karamazov Brothers, Anna Karenina, War and Peace முடிக்க எண்ணம் கொண்டுள்ளேன். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கியம் வாசிக்கச் சற்று ஆயாசமாக இருக்கிறது. இருப்பினும் அன்னா கரீனினாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு அற்புதமாக இருக்கிறது (ரிச்சர்ட் பீவரும், லாரிசா வோலகோன்ஸ்கியும்). ஒரு புதிய நாவலைப் படிப்பது போலவே இருக்கிறது.

ஆழிசூழ் உலகு பாதி வாசித்த கையோடு வீட்டிலேயே விட்டு வந்து விட்டேன். படித்தவரை சரளமாக வாசிக்கச் சுகமாக இருக்கிறது. தனுஷ்கோடி ரயில் விபத்து நாவலில் இடம் பெற்றிருக்கிறது.

ம். . . இப்படி வாசிப்பு பற்றி உரையாட நட்பு கிடைப்பதே ஓர் அதிர்ஷ்டம்!

அன்புள்ள ஜெகதீஷ்:
ஆம். கேரி ஜென்னிங்க்ஸ், ஒரு அற்புதமான எழுத்தாளர்.  அவரது, 'Aztec' புத்தகம் ஒரு classic.  அதைப் படித்து முடித்தவுடன் மற்றதையும் வாங்கிப் படித்து  விட்டேன்.  உங்களுக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்கிறேன்  - முகவரி சொல்லுங்கள்.  
பிற புத்தகங்கள், கொஞ்சம் பொழுது போக்கப் படித்தவை.  

எனக்குப் புத்தகம் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றியும், மகிழ்ச்சியும்.

ஆனால் இங்கே மாலத்தீவுகளுக்கு புத்தகம் அனுப்பி வைக்க வேண்டுமெனில் புத்தகவிலையை விட அனுப்பும் செலவு அதிகமாகி விடுமே!

என் முகவரி.

jegadeesh kumar
HOD, Department of Mathematics
Hithadhoo School
Hithadhoo
Addu City
Republic of Maldives
Pin - 960.

சிரமப்பட வேண்டாம். சிரமமில்லையெனில் மட்டும் அனுப்பி வையுங்கள்.




12 ஜூலை, 2013

தோனி வழி


நேற்றிரவு (அல்லது இன்று அதிகாலை) உறங்கச் செல்லும்போது மணி இரண்டரைக்கும் மேல். இந்திய – மேற்கிந்திய – இலங்கை முத்தரப்பு ஒருநாள் போட்டிகளின் இறுதியாட்டம், இந்தியா, இலங்கைக்கு இடையே. இலங்கை 202 ரன்களில் ஆட்டமிழ்ந்திருந்தாலும், அந்த இலக்கை அடைவது இந்தியாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்று தோன்றியது. ஆடுகளம் ஸ்விங்க் பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்ததும், அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் பந்து நன்றாகச் சுழன்றதும் இந்த ஆட்டம் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிற ஒன்றாக இருக்கப் போகிறதென்று ஊகித்திருந்தேன். மிகுந்த சிரமப்பட்டே இந்தியா இவ்விலக்கை தொட இயலும் என்றும் கணித்திருந்தேன். ஆட்டம் மிகுந்த ஸ்வாரஸ்யமாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் முழு ஆட்டத்தையும் பார்த்துவிடத் துணிந்தேன்.
பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தப்போகிற ஆட்டம் இது என்ற என் ஊகத்தை வழக்கம் போலவே பொய்யாக்கி விட்டார் தோனி. நூற்றி நாற்பது ரன்களுக்கு மேல் விக்கெட்டுகள் சடசடவென சரிய, புவனேஷ் குமார், ப்ரவீன் குமார் மற்றும் இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்டத்தின் கடைசி ஓவரில் தன் அற்புதமான அடிகளால் இலக்கைத் தாண்டினார். நான் முப்பத்தி ஏழாவது ஓவரிலிருந்தே இந்தியா தோற்று விடும் என்ற கணிப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசி ஓவரில் கூட அவர் பதினைந்து ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தைத் தவறவிட்ட அவர் இரண்டாவதில் ஒரு சிக்சர், மூன்றாவதில் ஒரு பவுண்டரி, நான்காவதில் இன்னும் ஒரு சிக்சர் என்று அநாயாசமாக விளாசித் தள்ளி இலங்கையின் கனவைத் தகர்த்தார். அதற்கு முந்தைய பத்து ஓவர்களின் சிங்கிள் கூட எடுப்பது சிரமமாக இருந்தது என்பதை கவனத்தில் கொண்டால் தோனி கடைசி ஓவரில் செய்தது கனவிலும் நடக்க இயலாத ஒரு விஷயம் என்பது புரியும். ஹெரத் பட் பட்டென்று ஒரே ஓவரில் ஜடேஜாவையும், அஸ்வினையும் பெவிலியனுக்குத் திருப்பி விட்டார். அதற்குச் சற்று முன்புதான் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அற்புதமாகச் செலுத்திக் கொண்டிருந்த ராய்னாவும் அவுட்டாகியிருந்தார். ஏழு விக்கெட்டுகள் இழந்த நிலையில் மலிங்காவின் நான்கு ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இந்தியாவுக்கு இருந்தது.
முன்னதாக ரோஹித் சர்மா ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தார். இந்த்த் தொடர் முழுவதுமே அவரது ஆட்டத்தை மிகுந்த உவப்புடன் ரசித்து வந்தேன். அதுவும் இறுதியாட்டத்தில் அவரது ஆட்டம் ஒரு தேர்ந்த கலைஞன் நிதானமாகத் தன் படைப்பை உருவாக்குவதை ஒத்திருந்தது. ஸ்விங்க பந்துக்கு ஏற்றபடி தன் ஆட்டமுறையை அழகாக மாற்றிக் கொண்டு ஆடிய அவரது ஒவ்வொரு ஷாட்களையும் நான் அனுபவித்துப் பார்த்தபடி இருந்தேன். சாம்பியன்ஸ் ட்ராஃபியிலும், இந்தத் தொடரிலும் அவரது ஆட்டம் அவருக்கு அணியில் நிரந்தர இட்த்தைப் பெற்றுத் தரும் என்று நம்பலாம். நான் எதிர்பார்த்து ஒழுங்காக ஆடாமல் போன வீரர் தினேஷ் கார்த்திக். அவர் நன்றாக ஆட வேண்டுமென்று ரகசியமாக என்னுள் ஓர் ஆசை இருந்தது.
தோனி எல்லாவற்றையும் சாதித்து விட்டார். வாங்க வேண்டிய எல்லாக் கோப்பைகளையும் வாங்கிக் குவித்து விட்டார். ஆனாலும் அவர் மீது பல விமர்சனங்கள் உண்டு. நல்ல வீரர்கள் உள்ள அணியில் நல்ல நேரத்தில் கேப்டனாக இருப்பது; தனக்குப் பிடித்தமான வீரர்களுக்கே அணியில் இடம் தருவது; தேவையற்ற பிடிவாதத்துடன் அதிர்ச்சி தரும் முடிவுகளை எடுப்பது போன்றவை. அந்த விமர்சனக் கூட்டத்தில் நானும் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சொல்கிற கூட்ட்த்தில் இருந்தவன் நான். தோனியின் ஆட்டத்தையும், அவர் அணியை உச்சிக்கு அழைத்துச் சென்ற விதத்தையும் நான் ரசித்திருந்தாலும் அவருக்கு நான் பரம ரசிகனாக இதுவரை இருந்ததில்லை. நேற்றுகூட அடிபட்ட நிலையில் எதற்காக அணிக்குள் வந்தார் என்ற சந்தேகக் கேள்வியோடே ஆட்ட்த்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
தோனியின் நேற்றைய ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அதை ச் சொல்லி விளக்கி விட முடியாது. வர்ணனையாளர்கள் கூட தோனி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த போது Unbelievable! என்றார்கள். அந்த ஒரு வார்த்தைதான் அவர் நேற்று ஆடிய ஆட்டத்துக்கு பொருந்தும். நடக்க முடியாத ஒரு காரியத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தோனி. நேற்றிலிருந்து அவரது தீவிர ரசிகனாகி விட்டேன் நான்.
இந்த ஆண்டில் நான் பார்த்த ஒரு நாள் போட்டிகளிலேயே மிகச் சிறந்த போட்டி இது.


மேலும் வாசிக்க